Advertisement

காதல் – 9

பல்லவி ஊருக்குக் கிளம்பிச் சென்றும் இருபது நாட்களுக்கு மேலாகியிருந்தது.. அங்கே அவளுக்கு ஒருமாதிரி நிலையென்றால் இங்கே ஷ்யாம்தேவுக்கு ஒருமாதிரி நிலையாய் இருந்தது..

அவன் நினைத்தது போல் வேலை ஒன்றும் அத்தனை சீக்கிரம் கிடைக்கவில்லை.. திறமை இருக்கிறது.. வயது இருக்கிறது.. நல்ல ரெக்கார்ட் இருக்கிறது என்பதற்காக மட்டும் யாரும் யாரையும் வேலைக்கு அமர்த்திடுவது இல்லை என்றுதான் நினைக்கத் தோன்றியது..

கண்ணில் படும் இன்டர்வியூக்களுக்கு எல்லாம் முயற்சி செய்தான்.. ஏனோ ஒருவித எரிச்சலாய் கூட இருந்தது.. அவனது பழைய ஆபீஸில் அவனுக்கென்று எக்கச்சக்க சலுகைகள் இருந்தன.. அந்த கம்பனியின் பாஸ் கூட அத்தனை மிடுக்காய் அங்கே இருந்திருப்பாரா என்று யாருக்கும் தெரியாது..

இவனுக்கு அங்கே ஒரு மாரியாதை இருந்தது.. அவனது உழைப்பு அங்கே பேசியது..

ஆனால் புதிதாய் வேலைக்கு என்று சேர்க்கையில் இவனும் கடைநிலை ஊழியனே.. எடுத்ததுமே யாரும் லீட் போஸ்ட் தருவார்களா என்பது சந்தேகமே.. இருந்தாலும் முயற்சித்துக்கொண்டு தான் இருந்தான்.. அதே நேரம் கிடைக்கும் சிறு சிறு வேலைகளை கூட செய்துகொண்டு இருந்தான்.

அவனின் சம்பளத்தில் தான் குடும்பம் ஓடவேண்டும் என்று அவசியமில்லை.. அனால் சோம்பி சும்மா இருக்க மனமில்லை..

அனைத்தும் சரி என்று இன்டர்வியூ போனால், எல்லா கேள்விகளும் முடிந்து கடைசியாய் ‘ஏன் நல்ல சம்பளத்தில் இருந்த வேலையை விட்டீர்கள்??’ என்ற கேள்விக்கு அவனால் பதில் சொல்லிட முடியவில்லை..

‘பெர்சனல் பிராப்ளம்..’ என்றோ ‘ஆபீஸில் பிராப்ளம்…’ என்றோ எதுவுமே சொல்ல முடியவில்லை..

இதெல்லாம் விட பல்லவி இங்கில்லை.. தான் வேண்டாம் என்று சொல்லியும் கிளம்பிப் போனாளே என்ற கோபம் அவள்மீது இருந்தாலும், அவள் இங்கில்லையே என்ற ஏக்கமும் வருத்தமும் நிறைய நிறைய இருந்தது..

எதையும் யாரிடம் வெளிக்காட்டுவது என்று தெரியவில்லை. அனைத்தையும் தனக்குள்ளே போட்டு போட்டு நொடி நொடிக்கு நொந்துகொண்டு இருந்தான் ஷ்யாம்..

அனைத்தையும் மஞ்சுளாவும், சிவபாலனும் கவனித்துக்கொண்டு தான் இருந்தனர்..  பல்லவி ஊருக்குச் சென்றுவிட்டது அவர்களுக்குத் தெரியாது… ஆனால் சில நேரங்களில் ஷ்யாம் எங்கும் செல்லாமல் வீட்டில் இருப்பது அவர்களுக்கே எனன்வோபோல் இருந்தது..

உடையில்… உணவில்.. உருவத்தில் என்று எதிலும் கவனமில்லாது சுற்றிக்கொண்டு இருந்தவனிடம் மஞ்சுளாவே ஒருநாள் பொறுக்க முடியாது கேட்டுவிட்டார்..

“ஏன் டா இப்படியிருக்க…” என்று..

“எப்படி???” என்றான் கண்களைக் கூட திறக்காது..

“உன்னைப் பார்த்தாலே தெரியுது.. ஏன் உனக்குத் தெரியலையா?? இல்ல யாரும் சொல்லலையா???” என்றார் பல்லவி என்று சொல்லாமல் சொல்லி..

“நீதான் சொல்லணும்.. சொல்லிட்ட.. அவ்வளோதான்…” என்றவன் இன்னமும் சோர்வாய் அமர்ந்திருக்க,

சிவபாலன் அம்மா மகன் பேசுவதை பார்வையாளராய் பார்த்துகொண்டு இருந்தார். அவருக்குமே மகனின் மாற்றம் மனதை உறுத்திக்கொண்டு தான் இருந்தது. ஆனால் என்ன பிரச்சனை என்று தெரியாமல் என்னவென்று கேட்பது என்று தெரியாமல் இருக்க,

சில நேரங்களில் அப்பாக்கள் கேட்கத் தயங்கும் விசயங்களை அம்மாக்கள் போகிற போக்கில் கேட்டுவிடுவர் என்பது மஞ்சுளா நிரூபித்துவிட்டார்..

“ஏன் ஏன்.. வேற யாரும் சொல்லலை…” என்று மஞ்சுளா வேகமாய் கேட்க,

“சொல்ல இங்க யாருமில்லை..” என்றவன் மெதுவாய் கண்களைத் திறந்துப் பார்த்தான்..

அவனைப் பெற்றவர்களோ ‘என்ன சொல்ற நீ??’ என்று அவனைப் பார்த்தவர்கள், பின் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, அவர்களுக்குப் புரியவில்லை..  யாருமில்லை என்றால் என்ன அர்த்தம். அவன் வாழ்வில் அப்படி யாரும் இனி இல்லையா.. இல்லை இருந்தவள் இல்லாது போனாளா?? குழப்பமாய் இருந்தது இருவருக்கும்..

“என்ன ஷ்யாம் சொல்ற நீ??” என்று சிவபாலன் கேட்க,

“என்ன சொல்ல… சொல்றமாதிரி எதுமில்லப்பா.. பல்லவி எப்பவோ அவ ஊருக்கு போயிட்டா….” என,

“ஏன் ஏன் ஏன் போனா?? ஓ சாருக்கு வேலை இல்லைன்னு போயிட்டாளோ…” என்று மஞ்சுளா கொஞ்சம் அவனை இடித்தே கேட்க, ஒருநொடி அவரைப் பார்த்தவன், என்ன நினைத்தானோ லேசாய் சிரித்தான்..

பல நாட்களுக்குப் பிறகு அவனால் சிரிக்க முடிந்தது அன்று.. காரணம் தெரியவில்லை.. அதேபோல் பல நாட்களுக்குப் பிறகு பல்லவியைப் பற்றி பேசினான்.. அவளைப் பற்றிய நினைவு ஓடிக்கொண்டே தான் இருக்கும்.. ஆனால் அவளிடமே பேசாது இருக்கையில் அவளைப் பற்றி யாரிடம் பேசுவதென்பது தெரியவில்லை..

இன்று அதுவாய் அமைந்துவிட்டது..

“ம்மா.. எனக்கு வேலையில்லைன்னு போகலை.. அவ வேலையை விட்டுட்டுப் போயிட்டா..” என,

“ஓ.. ரெண்டும் ஒண்ணுதான்.. உனக்கு வேலையில்லைன்னு கிளம்பிட்டா..” என்றார் மஞ்சுளா மீண்டும்..

“ஹா ஹா ஹா அம்மா…” என்று சத்தமாய் சிரித்தவன்,

“அது அப்படியில்ல.. நான் இல்லாத ஆபிஸ்ல அவளால வேலை பார்க்க முடியலைன்னு வேலையை விட்டுட்டா… வேலை இல்லாம இங்க சும்மா இருக்க முடியுமா அதான் கிளம்பிட்டா.. அவங்க வீட்ல வர சொல்லிட்டாங்க..” என்றவனுக்கு,

உள்ளேயோ ‘நான் சொல்ல சொல்ல போயிட்டா…’ என்று ஒரு பெருங்குரல் கேட்டது..

அவள் மீது கோபமிருந்தாலும் அதனை வெளியே காட்ட முயலவில்லை அவன்.. அது அவனுக்கும் பிடிக்கவில்லை..

“ஓ…” என்று அப்பா அம்மா இருவரும் சொன்னவர்களுக்கு மேற்கொண்டு என்ன சொல்லவென்று தெரியவில்லை..  ஆனால் ஷ்யாமே பேசினான்..

“ப்ரோமோசன் லெவல்ல தான் இங்க வந்தா.. நல்ல சேலரி.. நான்கூட திட்டினேன் ஏன் விட்டன்னு… எல்லாமே சரியாக நாளாகும்.. அதுவரைக்கும் நம்ம தள்ளி இருக்கிறது பெட்டர்னு சொல்லிட்டுப் போயிட்டா..” என்றுசொல்ல,

“ம்ம்..  வேலைதானே அடுத்து கிடைச்சிடும்.. நீ சாப்பிட வா…” என்று வெகு நாளைக்கு பிறகு மஞ்சுளா மகனிடம் கொஞ்சம் இயல்பாய் பேசிட, அவனுக்கும் அது தெரிந்தே தான் இருந்தது..

ஒருவேளை பல்லவி இங்கேயில்லை என்பதனால் வந்த இயல்போ என்னவோ..

எழுந்து போகாமல் ஷ்யாம் அப்படியே அமர்ந்திருக்க, சிவபாலன் “ஷ்யாம் கொஞ்சம் கண்ணாடி பாருடா.. பழைய மாதிரி இருக்க பார்..” என்று சொல்ல,

“முன்னாடி இருந்த எதுவுமே இப்போ என்கிட்ட இல்லப்பா..” என்றவன், சோர்வாய் எழுந்து செல்ல, வெகுநேரம் சிவபாலன் யோசனையில் அமர்ந்திருந்தார்.

இங்கே இப்படியென்றால் அங்கே பல்லவிக்கோ வேறுவிதமாய் இருந்தது நாட்கள் எல்லாம்..

ஊருக்கு சென்றதுமே யாரும் எதுவும் அவளிடம் கேட்கவில்லை.. தாங்கள் சொன்னதை கேட்டு மகள் வந்துவிட்டாள் என்று சோபனா ரவிச்சந்திரன் இருவருக்கும் மகிழ்ச்சியே… அவளிடம் வேறு எதுபற்றியும் கேட்காமல் சாதாரணமாகத் தான் இருந்தனர்..

அப்படி அவர்கள் இருந்ததே பல்லவிக்கு மனதளவில் பெரும் பாதிப்பை உண்டுசெய்தது.. அதிலும் மேலாய் ஷ்யாம் அவளது அழைப்பை எடுக்கவேயில்லை.. அனுப்பிய அத்தனை மெசேஜ்களையும் பார்த்திருக்கிறான் என்று தெரிகிறது ஆனால் பதில் இல்லை..

கிட்டத்தட்ட ஒருவாரம் கடந்திருக்க, பல்லவி சோபனாவோடு வெளிய சென்றுவந்தாலும், எப்போதும் பிசியாய் இருந்தவளுக்கு வீட்டில் இருப்பதே ஒருவித சோர்வு என்றால், அவளைக் காணும் அக்கம் பக்கதினரோ,

“என்ன பல்லவி வீட்ல இருக்க??” என்று ஆரம்பித்து “எதுவும் நல்ல சேதியா..??” என்று விசாரிக்கையில், அவளுக்கோ ஊணுறக்கம் பறந்தது..

ரவிச்சந்திரன் மெதுவாய் தான் பேச்சைத் தொடங்கினார் “என்ன பண்ணலாம்னு இருக்க..??” என்று..

“என்ன பண்ணலாம்னா?? என்னப்பா புரியலை??” என்று பல்லவி முழிக்க,

“புரியாது இதெல்லாம் உனக்கு புரியாது…” என்று சோபனா கடிந்தவர்,

“இங்க பாரு பல்லவி உனக்கு இருபத்தியாறு ஆச்சு.. எல்லாம் கேட்கிறாங்க இன்னும் கல்யாணம் பண்ணலையான்னு.. நல்ல நல்ல வரன் எல்லாம் வருது..” என,

“ம்மா… எல்லாம் தெரிஞ்சும் ஏன் இப்படி பேசற???” என்று கோபமாகவே கேட்டுவிட்டாள்..

“நீ கோபப்படுறதுல எந்த அர்த்தமும் இல்லை பல்லவி.. யாருக்குத் தான் பிரச்சனை இல்லை.. லைப்ல செட்டில் ஆகணும்னா ஒருசில விஷயங்கள் நம்ம பொறுத்துத்தான் போகணும்.. இந்த நேரம் பார்த்து ஷ்யாம் வேலையை விட்டிருக்கான்.. இதுபோல நாளைக்கு உன்னை கல்யாணம் பண்ணி கொடுத்தப்புறம் நடக்காதுன்னு என்ன நிச்சயம்..” என்று சோபனா கேட்க,

“ம்மா ப்ளீஸ்.. நான்தான் சொன்னேனே நடந்தது என்னன்னு.. அப்படியிருக்கப்போ இப்படி பேசினா எப்படி…” என்றவள் “ப்பா சொல்லுங்கப்பா…” என,

“என்ன சொல்ல சொல்ற பல்லவி.. அந்த பையன் சொன்னதெல்லாம் சரிதான்.. இப்போ நீ ஊருக்கு வந்தும் ஒன் வீக் மேல ஆச்சு.. இப்போ வரைக்கும் ஒரு ஃபோன்  கூட இல்லை.. நாங்களும் பார்த்துட்டு தான் பல்லவி இருக்கோம்..” என்றவரின் பேச்சுக்கு அவளால் எந்த பதிலும் சொல்லிட முடியவில்லை..

“ப்பா அதில்லப்பா.. அவனுக்கு..” என்று ஆரம்பிக்கையில்,

“ஆயிரம் பிரச்சனை இருக்கட்டும் பல்லவி உன்கிட்ட பேசணுமா இல்லையா?? அப்போ அதுவே இல்லைங்கிறப்போ நாங்க என்ன நினைக்க முடியும்…” என,

“இல்லப்பா அது…” என்றவள் “எனக்கு ஒரு ஒன் வீக் டைம் கொடுங்கப்பா நான் தேவ் கிட்ட பேசிட்டு சொல்றேன்…” என,

“என்ன பேச போற?? இல்லை என்ன இருக்கு பேச… இனி நாங்கதான் பேசி முடிவு பண்ணனும்..” என்று சோபனா சொல்ல,

“ம்மா ப்ளீஸ்ம்மா… இதுக்குதான் என்னை இங்க வா வா சொன்னீங்களா.. கண்டிப்பா தேவ் எல்லாம் சால்வ் பண்ணிட்டு வருவான்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..” என்றவள் அதற்குமேல் பேச விரும்பாமல் எழுந்து உள்ளே சென்றிட,

அடுத்து வந்த வாரமெல்லாம் பல்லவி ஒருவித அமைதியோடும் அழுத்தத்தொடும் தான் வீட்டினில் அல்லாடினாள். என்ன முயன்றும் ஷ்யாம் அவளின் அழைப்பை எடுக்கவேயில்லை.. என்ன செய்கிறான் எப்படியிருக்கிறான் எதுவுமே அவளுக்குத் தெரியவில்லை. நாட்கள் செல்ல செல்ல ஒருவித பயமும் அவளுள்  குடிகொள்ள அவளால் பெற்றவர்களின் பார்வைக்கு பதில் சொல்ல முடியவில்லை..

அங்கிருந்து வந்தது பெரும் தவறோ என்று நினைக்கத் தோன்றியது.. யாரை பிடித்து ஷ்யாமைப் பற்றி விசாரிக்க என்று தெரியவில்லை..

தினேஷிற்கு அழைத்துக் கேட்கலாம்தான் ஆனால் சங்கடமாய் இருந்தது.. ஷ்யாமே அவனோடு பேசுகிறானோ என்னவோ அது தெரியாமல் அவனுக்கு அழைத்துக் கேட்க எப்படியோ இருக்க, ஆனால் வேறு வழியும் இல்லாது போக கடைசியில் தினேஷிற்கு தான் அழைத்தாள்..

பொதுவாய் விசயங்களை சொன்னவள் “சாரி டிஸ்டர்ப் பண்றேன்னு நினைக்கவேண்டாம்.. ஒன் டைம் தேவ் கிட்ட சொல்லி கால் பண்ண சொல்ல முடியுமா??” என்று கேட்கும்போதே அவளுக்கு அத்தனை சங்கடமாய் போனது..

இவன் பேசியிருந்தால் எனக்கு இதெல்லாம் தேவையா?? பிரச்சனைகள் ஒருப்பக்கம் இருந்தால் இருக்கட்டும் என்னிடம் பேச என்ன வந்தது என்று ஷ்யாம் மீது கோபம் கூட வந்தது..

“ஹே இதுல என்ன இருக்கு.. நானே இன்னிக்கு அவனைப் போய் பார்க்கலாம்னு தான் இருந்தேன்..” என்றவன் “ஓகே சொல்றேன்…” என்று வைத்துவிட்டான்..

அன்றைய தினம் மாலை எல்லாம் பல்லவி அவளின் ஃபோன் அருகிலேயே தான் அமர்ந்திருந்தாள்.

ஷ்யாம் அழைப்பான் அழைப்பான் என்று.. ஆனால் அழைக்கவேயில்லை.. இரவு வரைக்கும் பொறுத்தவள், அதற்குமேல் பொறுக்கமாட்டாமல் அவனுக்கு அழைத்திட, அப்போதும் அழைப்பை எடுத்தானில்லை.. அழுகை கோவம் பயம் பதற்றம் என்று எல்லாம் வந்தது…

அதன் பின் வந்த இரண்டு நாட்கள் அவளால் எதுவுமே செய்ய முடியவில்லை.. என்னவோபோல் இருக்க, சோபனா, “என்னங்க இது ஆகுற காரியமில்லை.. நீங்களே ஃபோன் போடுங்க..” என்றிட,

“என்னம்மா…” என்று மகளைப் பார்த்தார் ரவிச்சந்திரன்..

அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் கண்கள் கலங்கி முழிக்க, “அவளை ஏன் பாக்குறீங்க.. ஃபோன்  போடுங்க….” என்று சோபனா சொல்ல,

ரவிச்சந்திரன் ஷ்யாமிற்கு அழைத்தார்..

பல்லவியின் நிலையை கேட்கவும் வேண்டுமா என்ன???

உலகத்தில் உள்ள அத்தனை கடவுளுக்கும் வேண்டுதல் வைத்துக்கொண்டு இருந்தாள்.. முதல் அழைப்பில் எடுக்காது போனவன் அடுத்து அவனே அழைத்துவிட்டான் ரவிச்சந்திரனுக்கு..

என்ன பேசினான் என்று பல்லவிக்குத் தெரியவில்லை.. ரவிச்சந்திரன் அவன் பேசுவதை மட்டும் தான் கேட்டுக்கொண்டு இருந்தார்..

“ஓகே ப்பா.. சரி…” என்றவர், பேசி முடித்து,

“நெக்ஸ்ட் வீக் வர்றாங்களாம்… ஷ்யாம், அப்பா அம்மா எல்லாம்..” என,

“நி.. நிஜமா…” என்று பல்லவி கேட்டவளுக்கு இன்னமும் நம்பவே முடியவில்லை..

“ஆமா பல்லவி.. அவங்க வீட்லயும் ஓகே சொல்லிட்டாங்க போல..” என்று ரவிச்சந்திரன் சொல்ல,

பல்லவிக்கோ இதழில் விரிந்த புன்னகையோடு கண்ணீரும் சேர்ந்தே இறங்க, ஷ்யாம் மீது இருந்த கோபமெல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் காணமல் போக, எழுந்து வேகமாய் அறைக்கு வந்தவள் அவனுக்கு அழைக்க, அவனோ எடுத்தவன்

“நெக்ஸ்ட் வீக் பாக்கலாம்…” என்றுமட்டும் சொல்லி வைத்துவிட்டான்..

‘இடியட்… பேசுறானா பாரேன் ..’ என்று சுனங்கியவளுக்கு வேறு எதுவும் எண்ணும் எண்ணமில்லை..

வெளியே சோபனா “அப்போ வேலை கிடைசிச்டுச்சாமா??” என்று ரவிச்சந்திரனிடம் கேட்பது இவளுக்கு கேட்க,

‘அட ஆமால்ல..’ என்று பல்லவி வெளியே வர, “ம்ம் பழைய ஆபிஸ்லயே ஜாயின் பண்ணியாச்சாம்..” என்று ரவி சொல்லிக்கொண்டு இருக்க, பல்லவிக்கு இதென்ன என்று இருந்தது..

‘பழைய ஆபிஸ்லயா?? இதென்ன?? எப்படி போனான்… இருக்காதே..’ என்று யோசித்தவளுக்கு ஷ்யாமிடம் பேசவும் கேட்கவும் நிறைய நிறைய நிறைய இருக்க, அவனோ பயங்கர பிகுவில் இருந்தான்..

ஆம்  ஷ்யாம் பழைய ஆபிஸில் தான் சேர்ந்திருந்தான்..

அவனாக தேடிப் போகவில்லை.. அவனைத் தேடி வந்தது வேலை.. ஷ்யாமைத் தேடி அவனது பழைய ஹெட்டும், தினேஷும் வந்திருந்தனர்.. அன்று பல்லவியிடம் தினேஷ் சொன்னது கூட இதைவைத்து தான்..

தினேஷ் அழைத்து தான் ஷ்யாமிடம் பேசினான்.. “ஷ்யாம் ஹெட் உன்னை பார்க்கணும் சொல்றார்..” என்று..

“எதுக்கு??” என்றவனுக்கு அவரைப் பார்க்கும் எண்ணமில்லை..

“தெரியலை பட் கண்டிப்பா இந்த மீட் நடக்கனும்னு சொல்றார்.. நீ ஃப்ரீயா…” என,

“ஏன் அவருக்கு என் நம்பர் தெரியாதாமா??” என்றான் ஷ்யாம் தேவ்..

“கால் பண்ணா நீ எடுப்பியோ என்னவோன்னு தான்..”

“ஹ்ம்ம் பேச சொல்லு…” என்றவனிடம் “அப்புறம் ஷ்யாம் பல்லவி..” என்று தினேஷ் சொல்லும்போதே,

“நேர்ல பாக்கலாம் தினேஷ்..” என்று வைத்துவிட்டான்..

அடுத்து கொஞ்சநேரத்தில் அவனின் ஹெட் அழைத்திட, இரண்டு நொடி பேசியவன் மாலை சந்திப்போமே என்று சொல்லிவிட்டான்.. அவனுக்குமே  தெரியவில்லை ஏன் எதுக்கென்று ஒரு மரியாதையின் பேரில் சரியென்றான்..

மாலை சந்திக்கும் போதோ வேலை இல்லை.. தேடுகிறேன் என்று எதையும் காட்டாது அதே மிடுக்கோடு தான் அவரிடம் பேசினான்..

“ஷ்யாம் உன்னால எனக்கு ஒரு ஹெல்ப் ஆகணும்….” என்றவரிடம் “என்னால?? பாஸ்கர் என்ன சார் ஆனான்..” என்று நக்கலாய் கேட்க,

“ஷ்யாம் உன்னோட கோபம் புரியுது.. பட் நீ என்னோட நிலைமையும் புரிஞ்சுக்கணும்.. எனக்கு எப்பவுமே உன்னை வேலைல இருந்து தூக்குற எண்ணமில்லை..” என்றவர்,

“நீ கண்டிப்பா.. கண்டிப்பா வந்து அகெயின் ஜாயின் பண்ணனும் ஷ்யாம்..” என்றிட,

‘என்னடா இது…’ என்று தான் தினேஷ் மற்றும் அவரைப் பார்த்தான்..

“எஸ் ஷ்யாம்.. கண்டிப்பா நீ வரணும்.. நோ சொல்லக்கூடாது…” என,

“பட் வொய்னு கேட்கலாம் இல்லையா???” என்றான் பின்னே சாய்ந்து..

தினேஷிற்கு அப்போதும் ஷ்யாமைப் பார்த்து ஆச்சர்யமாய் இருந்தது.. எந்த நேரத்திலும் அவனது நிலையில் இருந்து அவன் இறங்குவதே இல்லை.. எல்லோராலும் இப்படியான மிடுக்கை கடைபிடிக்க முடியுமா தெரியாது ஆனால் இதே விஷயம் தான் ஷ்யாமிற்கு பலமாகவும் இருக்கிறதோ என்று..

“தாராளமா கேட்கலாம்.. அந்த பாஸ்கர் நிறைய நிறைய குளறுபடி பண்ணிருக்கான்…. எல்லாமே இப்போதான் தெரிய வந்தது.. அக்கவுண்ட்ஸ் எல்லாமே கொலாப்ஸ்ட்.. MD வந்தவர் அத்தனை பேச்சு.. என்னால ஓரளவுக்கு மேல சமாளிக்க முடியலை..” என,

“அதுக்கு நான் என்ன சார் செய்ய முடியும்.. நான்தான் ரிசைன் பண்ணிட்டனே..” என்றான் ஷ்யாம்..

“நோ நோ உன்னோடத லாஸ் ஆப் பே லீவா எடுத்துக்கலாம்.. நான் பார்த்துக்கிறேன் அதெல்லாம்.. நீ அங்க வந்தா போதும்..” என்றார்..

ஷ்யாமிற்கு உடனே சரி என்று சொல்லும் எண்ணமெல்லாம் இல்லை.. இவர் கேட்கிறார் என்று போய் மீண்டும் ஒரு பிரச்சனை என்றால் எப்படி என்று யோசிக்க, மௌனமாய் அமர்ந்திருந்தான்..

“நீ என்ன யோசிக்கிற தெரியுது ஷ்யாம்.. பாஸ்கர் அங்கில்ல…” என,

‘அங்கயில்லன்னா???!!!’ என்று புரியாமல் பார்த்தான்..

“இன்னும் சஸ்பென்ட் டைம்ல தான் இருக்கான்… கண்டிப்பா அடுத்து அவன் உள்ள வர முடியாது நான் பார்த்துக்கிறேன் ஷ்யாம்.. நீ அகெயின் ஜாயின் மட்டும் பண்ணு…” என,

“ஹ்ம்ம் ஓகே சார்.. நான் யோசிச்சு சொல்றேன்..” என்றுமட்டும் சொல்லிவிட்டான்.

“கண்டிப்பா நான் உன்னை எதிர்ப்பார்கிறேன் ஷ்யாம்..” என்றவர் கிளம்பிட, தினேஷோ, “ஏன்டா  இவ்வளோ கெஞ்ச விடுற.. மனுஷன் இத்தனை நாளா ரொம்ப டென்சன்ல ஆடிட்டார்..” என,

மெதுவாய் சிரித்தவன் “அது அவர் பிரச்சனைடா.. இப்போ அவருக்கு பிரச்சனைன்னு தானே என்னை தேடி வந்திருக்கார்.. இல்லைன்னா???!!” என்று தோள்களைத் தூக்க,

“இது உனக்கும் ஒரு வாய்ப்புன்னு நினைச்சுக்கோ ஷ்யாம்..” என்றவனை சலனமில்லாது பார்த்தவன்,

“யோசிச்சுதான் முடிவு பண்ணனும்..” என்றுவிட,

“மத்ததெல்லாம் இருக்கட்டும் பல்லவி பாவமில்லையா டா…” என்றான் தினேஷ்..

“டேய் டேய்.. இதெல்லாம் முடியட்டும்..” என்று ஷ்யாம் கிளம்பிட, வீட்டிற்கு வந்தவன் நடந்த விசயங்களை சிவபாலனிடம் சொல்ல,

“நீ என்ன நினைக்கிற ஷ்யாம்..” என்றார் அவர்..

“ஜாயின் பண்றது பத்தி பிராப்ளம் இல்லைப்பா.. பட் யோசிச்சு சொல்றேன்னு தான் சொல்லிருக்கேன்.. இது நானே தேடி போகலையே..” என்றான்.

“ம்ம்.. அதுவும் சரி..” என்றவர், மகனிடம் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தார்.. மஞ்சுளாவும் உடனிருந்தார் தான். அவர்கள் சொன்னதை கேட்டவன்

“சரிப்பா…” என்று மட்டும் சொல்லிக்கொண்டான்..

அவனின் ஹெட் கேட்டதற்கு என்னவோ ஒன்று உடனே சரியென்று சொல்ல மனமில்லை அவனுக்கு.. காத்திருக்கட்டும் என்று இரண்டு நாட்கள் எந்த பதிலும் சொல்லாது இருந்தான். பின் மீண்டும் தினேஷ் அழைத்துக் கேட்க,

“நாளைக்கு வர்றேன்.. சொல்லு..” என்றவன் அவனது பணியில் மறுநாள் மீண்டும் சென்று அமர, ராஜ மரியாதை தான் அங்கே..

சரியாய் அப்போது தான்  ரவிச்சந்திரனும் அவனுக்கு அழைத்துப் பேசினார்..                          

Advertisement