Advertisement

காதல் – 7

நேற்றைய  பிரச்சனைக்கு பிறகு, பல்லவி முதல் வேலையாக அவளின் வீட்டிற்கு அழைத்து,

“தேவ் கிட்டதான் பேசிட்டீங்கல்லப்பா.. அவன் வீட்ல கொஞ்சம் பிரச்சனை எல்லாம் ஓரளவு சரியாகட்டும் ப்பா.. ப்ளீஸ்  நம்மளும் அவனுக்கு டென்சன் கொடுக்க வேண்டாம்.. நான்.. நானே லீவ் கிடைக்கவும் ஊருக்கு வர்றேன்ப்பா.. அம்மாக்கிட்ட சொல்லிடுங்க.. நீங்க இப்போ வரவேண்டாம் ப்ளீஸ்…” என்று சொல்ல,

ரவிச்சந்திரன் சரியென்று சொல்லிட, சோபனாவோ “நாங்க சும்மாவாது வர்றோம்..” என்று சொல்ல,

“ம்மா ப்ளீஸ்.. புரிஞ்சுக்கோ..” என,

“இங்க பார் பல்லவி நானும் அப்பாவும் இன்னும் முடிவு பண்ணல.. எதுன்னாலும்  நேர்ல வந்து பார்த்து தான் முடிவு செய்வோம். போன்ல பேசினதுக்காக எல்லாம் நாங்க சரின்னு சொல்லிட்டோம்னு நினைக்காத..” என்று மேலும் ஒரு இடியை இறக்கினார் சோபனா..

“ம்மா என்ன சொல்ற நீ??” என்று பல்லவி அதிர்ந்து கேட்கையில்,

“உண்மைதான்.. நீ வந்து லவ் பண்றேன்னு சொல்லிட்டு போயிட்ட.. நாங்க உடனே சரின்னு சொல்ல முடியுமா?? உன் அப்பா இதெல்லாம் சொல்ல தயங்கிட்டுத்தான் சொல்லாம இருக்கார்.. மிஞ்சி போனா ஒருவாரம் பொறுப்போம்… அதுக்குமேல நேர்ல பார்த்துக்கலாம்..” என்றவர் பேசி முடித்துவிட, இவளுக்கு எங்காவது சென்று முட்டலாம் போல் இருந்தது..

நடப்பதில் யார் மீதும் தவறில்லை.. ஆனால் அனைத்துமே தவறாய் தானே நடக்கிறது. யாருக்கு ஏற்று யாரிடம் பேசுவது.. அவளுக்கு எதுவும் புரியாமல் தான் வேலைக்குக் கிளம்பிச் செல்ல, ஷ்யாமும் அன்று அலுவலகம் வந்திருந்தான்.                          

வந்தவன் நேராய் பல்லவியைக் காண வர அப்போது தான் பல்லவி அவளின் பணியைத் தொடர்ந்திருக்க, உள்ளே வந்தவனுக்கு சரியாய் தூங்காமல் சோர்ந்து போய் அமர்ந்திருந்தவளின் முகமே கண்ணில் பட்டது.

எதுவும் சொல்லாமல் எதிரே அமர, பல்லவியும் அவனைப் பார்த்தவள், ஒன்றும் பேசாமல் இருக்க,   திடீரென்று ஒரு மௌனம் வந்து இருவருக்கும் இடையில் சிம்மாசனம் போட்டுக்கொண்டது. அவனுக்குமே என்ன பேச என்று தெரியவில்லை.

வீட்டிலும் அப்படித்தான் ஷ்யாமிற்கு மௌனமே பதிலாய் இருந்தது அனைத்திற்கும். மஞ்சுளா மகனின் முகத்தைக் கூட பார்க்கவில்லை.. சிவபாலனோ ஷ்யாம் கேட்பதற்கு ஒரு பதில் அவ்வளவே.. இந்த ஒரு நாளிலேயே அவனுக்கு வாழ்வு வெறுத்துவிடும் போல் இருந்தது. யாராவது ஏதாவது பேசினால் தானே எதுவும் சரியாகும்..

ஆனால் யாருமே பேசுவதற்கு தயாராய் இல்லை என்கையில் அவன் எங்கே போவான். ஒன்று பைத்தியம் போல் அவனாக பேசவேண்டும், இல்லையா யாரிடமும் பேசாது அவனும் மௌனியாகிட வேண்டும். இரண்டுமே அவனால செய்ய முடியாது..   ஏனெனில் பிரச்சனையில் இருப்பது அவர்களின் வாழ்வல்லவா??  

பல்லவியின் முகத்தினை கண்டவனுக்கு மனதில் ஒரு வலி, இருந்தாலும் வெளிக்காட்டாது,   “ஏன் இப்படியிருக்க பல்லவி…” என்றவனை, பார்த்தவள் “வீட்ல அங்கிள் ஆன்ட்டி எப்படியிருக்காங்க??” என,

“ம்ம்ச் இருக்காங்க.. பேசவேயில்லை என்கிட்ட.. பட் நான் கேட்டதுக்கு இது பதில் இல்லை..” என்றவனிடம்,

“நீ போய் முதல்ல உன் ஹெட்ட பாரு..” என்றாள்..

“அது எனக்குத் தெரியாதா.. ஏன் பல்லவி இப்படி பீகேவ் பண்ற நீ.. நேத்தும் அப்படித்தான் வீட்ல இருந்து கிளம்பிப் போயிட்ட. என்ன நினைச்சிட்டு இருக்க நீ??” என்று ஷ்யாம் சற்று சத்தமாகவே பேசிட,

அவளின் அறையை கடந்து போனவர் ஒருவர் நின்று பார்த்துவிட்டு போக,  அவளுக்கோ நேற்றைய இரவில் நடந்த நிகழ்வும் இப்போது இதுவும் சேர்ந்து மேலும் எரிச்சலை கொடுக்க,

“தேவ் ப்ளீஸ்.. நீ போ.. இங்கயும் எதுவும் சீன் ஆக வேண்டாம்..” என்று அமைதியாய் தான் சொன்னாள், ஆனால் அவனோ,

“என்னது?? சீன்னா?? வாட் யூ மீன்..” என்று கோபமாய் எழுந்து நிற்க, அமர்ந்த நிலையிலேயே பல்லவி அவனைப் பார்த்து அவளின் தலைக்கு மேலே தன் கரங்களை பட்டென்று கூப்பியவள்,  

“தயவு செஞ்சு கிளம்பு தேவ்.. முதல்ல போய் உன் ஹெட்ட பாரு.. போ..” என்று கெஞ்சுதலாய், ஒருவித சலிப்பில் சொல்ல, ஒருநொடி நின்று அவளைப் பார்த்தவன் அடுத்து ஒன்றுமே சொல்லாமல், அவளின் அறை கதவை அடித்து சாத்திவிட்டு சென்றுவிட்டான்.

பல்லவிக்கும் அவனிடம் இப்படி பேசியது கஷ்டமாய் தான் போனது.. ஆனால் இப்போது ஷ்யாம் அவளிடம் வந்து பேசுவதற்கு முன் அவனின் மேலதிகாரியை அல்லவா பார்த்திருக்க வேண்டும். வீட்டில் தான் பிரச்சனை என்றால் அவனின் வேலையிலும் பிரச்சனையாகிட கூடாது அல்லவா.. அவளும் அவனும் பேசுவதற்கு எத்தனையோ நேரமிருக்கிறது என்பதால் தான் பல்லவி இப்படி பேசியது..

ஆனால் ஷ்யாம் இப்பொழுது என்னமாதிரி மனநிலையில் இருக்கிறான் என்பது யாருக்கும் தெரியவில்லை.. அது யாரின் பரிதாபமோ..  வீட்டில் கிளம்புகையிலேயே ஒருவித எரிச்சலில் தான் ஷ்யாம் கிளம்பியிருக்க, இப்போது பல்லவியும் இப்படி பேசிட, மனதில் ஒருவித வலி..

தான் என்ன தவறு செய்தோம் என்று.. சில நேரங்களில் வரும் கோபங்களையும் வேகங்களையும் கட்டுப்படுத்த முடிவதில்லை. அதற்காக அனைவருமே முகம் திருப்பினால் என்ன செய்வது என்று அமர்ந்திருக்க,

“சார் வந்துட்டீங்களா?? ரெண்டுநாள் எங்க போனீங்க..” என்றபடி பியூன் வந்து அவனின் டேபிள் மீது நான்கைந்து ஃபைல்களை வைத்துவிட்டு,

“இதெல்லாம் இன்னிக்கே முடிக்கணுமாம்…. மெயில் வேற அனுப்பிருக்கராம்.. அதையும் பார்த்திட சொன்னாங்க..” என,

“யார் சொன்னா??” என்றான் மனதில் இருக்கும் அதே கடுமையுடன்..

“பாஸ்கர் சார்தான்..” என்ற பியூன் நகர, ஷ்யாமிற்கு கேட்கவும் வேண்டுமா அனைவரையும் உண்டு இல்லை என்று செய்யும் நிலை..

அந்த பாஸ்கர் இவனுக்கு அடுத்து வேலைக்குச் சேர்ந்தவன், இப்போது வரைக்கும் வேலையை சரியாய் செய்திடமாட்டான். அதுவும் பணியில் இவனின் அடுத்த நிலையில் இருப்பவன்.. அவன் இவனுக்கு அதை செய் இதை செய் என்று ஆர்டர் போடுவதா என்று தோன்றியதும் நேராய் எழுந்து போனவன் அந்த பாஸ்கரை முறைத்துக்கொண்டே அவனின் மேலதிகாரியின் அறைக்குத்தான் சென்றான்..

“குட் மார்னிங் சார்…” என்றவன் அவரின் முன்னே அமர,

“ஹே ஷ்யாம்.. குட் மார்னிங்…” என்று சத்தமாய் சிரித்தவர், முதல் நாள் அவனுக்கு மெமோ கொடுப்பேன் என்றதெல்லாம் மறந்து பேச,

மற்றதை எல்லாம் விடுத்தது “பாஸ்கர் ஏன் எனக்கு ஆர்டர் போடுறான்.” என்றவனை புரியாமல் பார்ப்பது போல் பார்த்தவர்,

“என்னாச்சு?? எதுவும் பிரச்சனையா??” என்றார் தெரியாதவர் போல..

“சார்.. நான் இங்க ஜாயின் பண்ணி பைவ் இயர்ஸ் மேல ஆச்சு.. ஐ க்னோ அபௌட் யூ..” என்றவனின் குரலிலும் முகத்திலும் உடல்மொழியிலும் கொஞ்சம் கூட தன் மேலதிகாரியின் முன் பேசுகிறோம் என்ற பவ்யம் இல்லை..

அதைவிட என் வேலையில் நான் சரியாய் இருக்கிறேன் யார் என்னை என்ன சொல்வது என்ற மிதப்பும் திமிருமே தெரிய, அவனை ஒருநொடிப் பார்த்தவர்,

“என்ன பண்ண சொல்ற ஷ்யாம்.. நீயும் நானும் மட்டுமில்ல இந்த கம்பனில.. அவன் ரெக்கமண்டேசன்ல வந்தவன் சம்டைம்ஸ் என்கிட்டவே அப்படித்தான் பீகேவ் பண்றான்.. வாட் ஐ டூ…” என,

“மெமோ கொடுங்க… எனக்கு சொன்னீங்க.. ரெண்டு நாள் லீவ் போட்டதுக்கு…” என்று ஷ்யாம் எகிற,

“சில நேரங்கள்ல எடுத்ததுமே அப்படி செய்ய முடியாது ஷ்யாம்…” என்றார் இயலாமையில்..

“எனக்குத் தெரியாது சார்.. நீங்கதான் அது டீல் பண்ணிக்கணும்.. என்கிட்ட இப்படி பீகேவ் பண்ணா எனக்கு என்ன தெரியுமோ அதை நான் செய்வேன்….” என்று கோபமாய் சொல்ல,

“ஹே ஷ்யாம் ஷ்யாம்.. இதெல்லாம் வேண்டாம்.. அடுத்து ட்ரான்ஸ்பர் சான்ஸ் வந்தா அவனை மாத்திடலாம்.. தென் லீவ் வேணும்னா முன்னாடியே சொல்லிடு.. இப்படி திடீர்னு லீவ் போட்டு நான் பதில் சொல்றதுபோல வச்சிடாத.. இன்னும் ரெண்டு நாள்ல MD வர்றார்.. அக்கவுண்ட்ஸ் டீடெயில்ஸ் எல்லாம் பக்காவா இருக்கணும்..” என்றவர், தன்மையாக பேசினாலும் காரியத்தில் கண்ணாய் இருப்பது அவனுக்குத் தெரிந்தே தான் இருந்தது..

பின்னே அவருக்கு வேலையாக வேண்டுமே.. அது ஷ்யாமிற்கும் நன்றாய் தெரியும்.. ஆனாலும் அந்த பாஸ்கரை தட்ட வேண்டிய இடத்தில் தட்டவேண்டும் அல்லவா..

“ஹ்ம்ம் ஓகே சார்.. கொஞ்சம் அவன்கிட்ட சொல்லி வைங்க..” என்று எழுந்தவன்,  “மெமோ ரெடியா இருக்கா??” என்று கேட்டு லேசாய் சிரிக்க,

“ஷ்யாம்.. போ போ.. போய் நான் ஒரு மெயில் அனுப்பிருப்பேன்.. போய் பாரு..” என்று அவர் மழுப்பலாய் சிரித்து அனுப்ப,

“அப்போ அவன் அனுப்பினது??” என்று பார்த்தவனிடம் “அதை அவனுக்கே திருப்பி அனுப்பு..” என்றவரைப் பார்த்து  ‘ஹா அது…’ என்று ஒரு லுக்கு விட்டுத்தான் சென்றான் ஷ்யாம்தேவ்…,

அடுத்து பல்லவியை தேடி ஷ்யாம் செல்லவேயில்லை.. வேலை வேலை வேலை மட்டுமே.. இரண்டு நாட்கள் அவன் முடிக்கவேண்டிய வேலைகள் எல்லாம் அப்படியே இருக்க, வந்த வேகத்தில் அனைத்தையும் பார்த்து முடித்தான்..

மதியம் இரண்டு மணிக்கு மேல் தான் சாப்பிடவே கேண்டீன் போனவன், அங்கே பல்லவி அமர்ந்து தனியே உணவருந்திக்கொண்டு இருப்பது கண்டு அவனுமே அங்கே செல்ல, அவளோ உண்கிறேன் என்ற பெயரில் கொறித்துக்கொண்டு இருந்தாள்.

“இப்படி சாப்பிட்டா என் பேத்தி பேரன் வந்த அப்புறமும் நீ சாப்பிட்டிட்டுத்தான் இருக்கணும்…” என்ற அவனின் குரல் கேட்டு நிமிர்ந்தவள், எதிரே லேசாய் சிரித்தபடி அமர்ந்திருந்தவனை கண்டு, ‘கோவமா போனான்.. இப்போ சிரிக்கிறான்..’ என்றுதான் பார்த்தாள்..

“என்ன கோவமா போனானேன்னு பாக்குறியா??” என்றவன் “என்ன கொண்டு வந்திருக்க…” என்று அவளின் டிபன் பாக்ஸை பார்க்க,

“ம்ம்ச் சமைக்க இஷ்டமில்லை.. மார்னிங் பண்ண நூடுல்ஸ் அப்பிடியே எடுத்திட்டு வந்திட்டேன்…” என்றவளை இப்போது முறைத்தான்.

“நூடுல்ஸ் சாப்பிடவே கூடாதாம்.. இதுல மார்னிங் பண்ணது வேற.. போதும் போதும்..” என்று அவளின் கையில் இருந்த ஃபோர்க்கை பிடுங்கியவன், டிபன் பாக்ஸை மூடிவிட்டு, “வெய்ட்…” என்று எழுந்து சென்றான்.

அவளுக்குத் தெரியும் நூடுல்ஸ் என்றதும் இவன் இப்படிதான் செய்வான் என்று.. அவளுக்கும் சேர்த்து சாப்பிட வாங்கி வருவான் என்றும் தெரியும்..

இதுதான் ஷ்யாம்..

ஆயிரம் கோபங்கள் சண்டைகள் எல்லாம் இருந்தாலும் அக்கறை காட்டிடும் என்றதில் அதனை சரியாய் காட்டிடுவான்.. எப்போதுமே இப்படித்தான்.. அவனின் இந்த குணத்தால் தான் ஷ்யாம் மீது பல்லவிக்கு காதல் வந்ததுவோ என்னவோ.. இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் தாண்டி பல்லவிக்கு இப்போது ஒரு புன்னகை வந்து ஒட்டிக்கொள்ள, இரண்டு கைகளில் தட்டை தூக்கிக்கொண்டு வந்தான் ஷ்யாம்தேவ்…

“பார்த்துட்டே இருக்க.. வாங்கினா என்ன??” என்றவன் அவள் முன்னே ஒன்றை வைத்து தானும் அமர,

“நீதானே வாங்க போன..” என்று தோளைக் குழுக்கியவள்,

“டொமேட்டோ ரைசா?? நான் கேட்டப்போ எல்லாம் காலின்னு சொன்னாங்க…” என்றபடி சாப்பிட,

“கேட்கிற விதத்துல கேட்கணும்..” என்றவனும் சிரித்தபடி அமர,

“ஹ்ம்ம் என்ன இவ்வளோ நேரம் எப்பவும் லஞ்ச் டைம் சரியா வந்திடுவ??” என்று கேட்டபடி பல்லவி சாப்பிட ஆரம்பிக்க,

“சோ வெய்ட் பண்ணியா???” என்றவனோ சாப்பிடாமல் அவளைப் பார்க்க,

“சாப்பிடு…” என்று அவன் வலக்கரத்தை தட்டை நோக்கித் தள்ளிவிட்டு தானும் உண்பதில் கவனமாய் இருக்க, என்னவோ காலையில் இருந்த ஒரு டென்சன் இப்போது இருவருக்கும் இல்லாது போக, மனதில் கூட ஒருவித இதம் பரவியது..

சாப்பாட்டின் ஊடே, “ஆன்ட்டி எதுவும் பேசினாங்களா??” என்று பல்லவி கேட்க,

“நிம்மதியா சாப்பிட விடு பல்லவி..” என்றவன் நிமிரவேயில்லை..

அவளும் புரிந்து உணவருந்துகையில், “எங்க பார்த்தாலும் இவங்க லவ்ஸ் தான் ப்பா.. காவிய காதல் போல…” என்ற குரல் கேட்டு இருவருமே பட்டென்று நிமிர்ந்துப் பார்க்க,  

அந்த பாஸ்கர் தான்.. யாரோடோ ஃபோனில் பேசுவதுபோல் இவர்களைப் பார்த்து நக்கலாய் சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தான்.

“தேவ் ப்ளீஸ்.. நீ சாப்பிடு..” என்று பல்லவி சொல்லவும், அவனும் சரி வம்பு வேண்டாம் என்று அமைதியாய் உண்ணத் தொடங்க,

“அட அட இதுதானே லவ்வு.. என்னா லவ்வு என்னா லவ்வு.. அவங்க சொல்றத இவர் அப்படியே கேட்பாராம்..” என்று பாஸ்கர் மீண்டும் ஆரம்பிக்க,  

இத்தனை நேரமிருந்த இதமும், ஒருவித அமைதியும் சடுதியில் மறைந்து, ஷ்யாமிற்கு மனதினில் மீண்டும் கோபால் எழ, பாஸ்கரை நோக்கி கிளம்ப எழுந்தவனை,

“தேவ் தேவ் ப்ளீஸ்..” என்று பல்லவி அவனின் கரங்களைப் பிடித்து இழுக்க,

“நீ சும்மா இரு பல்லவி..” என, 

“தேவ் ப்ளீஸ்.. வேணாம்…” என்று பல்லவி தடுக்க தடுக்க, ஷ்யாம் அந்த பாஸ்கரிடம் சென்றுவிட,

அவனோ “யப்பா ஆளு முன்னாடி இருந்தா வீர தீரம் எல்லாம் அருவியா கொட்டும் போல.. மத்த நேரத்துல மட்டும் சின்ன பையன் போல ஹெட் கிட்ட கம்ப்ளைன்ட் பண்றது…” என்று இப்போது நேருக்கு நேராகவே ஷ்யாமை பார்த்து அவன் கிண்டலடிக்க,

அவனோ கிண்டல் தான் அடித்தான் ஷ்யாமோ அவனையே அடித்துவிட்டான்..

அடுத்தது என்ன.. கைகலப்பு தான்.. ஒருவன் மாற்றி ஒருவன் அடிக்க, பல்லவிக்கு யாரை இழுப்பது யாரை தடுப்பது என்று நொடியில் குழம்பித்தான் போனாள்..

“தேவ் தேவ் வேணாம் ப்ளீஸ்.. ப்ளீஸ் விடு தேவ்…” என்று பல்லவி ஷ்யாமை பிடித்து இழுக்க முயல,

“என்னடா உன் ஆளு முன்னாடி ஹீரோயிசம் காட்டுறியா???” என்று பாஸ்கர் கேட்ட கேள்வியில்,

“நீ விடு பல்லவி இன்னிக்கு இவனை ஒருவழி பண்றேன்…” என்று ஷ்யாம் அவனைப் போட்டு தாக்க, சரியாய் அதே நேரம் தகவல் அறிந்து அவர்களின் மேலதிகாரியும் வந்திட,

அவரோடு தினேஷும் வேகமாய் வந்தவன் ‘அச்சோ…’ என்று பதறி வேகமாய் இருவரையும் வந்து பிரிக்க, கொஞ்ச நேரத்தில் மொத்த அலுவலகமும் அங்கே தான் இருந்தது.

நடந்த சம்பவங்கள் என்னவோ பாஸ்கர் விட்ட வார்த்தைகளினால் தான்.. ஆனால் உருவத்தில் ஷ்யாம்தேவ் அவனைவிட வாட்ட சாட்டமாய் இருக்க, அதுவும் இப்போதும் அடித்துக் கொன்று விடும் வேகத்தில் நிற்க, பார்பவர்களுக்கு ஷ்யாம் தான் எதுவோ செய்துவிட்டான் என்பதுபோலவே தெரிந்தது..

பாஸ்கரோ ஒன்றுமே தெரியாதது போல் முகத்தை வைத்து நிற்க, ஷ்யாம் அவனை முறைத்து நிற்க,    

“வாட் இஸ் திஸ்…??? டோன்ட் யூ ஹேவ் எனி சென்ஸ்…”  என்று இருவரையும் பார்த்து திட்டியவர்,

“கம் டூ மை கேபின்…” என்றுவிட்டு செல்ல, ஷ்யாம் அப்போதும் அந்த பாஸ்கரைப் பார்த்து முறைத்துக்கொண்டே நடக்க,

“என்னடா ஆச்சு.. நான் இப்போதான் வந்தேன்..” என்றபடி தினேஷ் அவனோடு செல்ல, பாஸ்கரும் அவனின் சட்டையை சரி செய்தபடி நடக்க, இதெல்லாம் பார்த்து நடுங்கிப் போனது பல்லவிதான்…

‘இங்கயும் பிரச்சனையா??’ என்று நொந்தபடி என்னாகுமோ என்று அவளும் செல்ல, அங்கே அந்த மேலதிகாரியின் அறைக்குள் ஷ்யாம்மும் பாஸ்கரும் மட்டுமே அனுமதிக்கப் பட்டனர்..

பல்லவி அவளது கேபினில் டென்சனாய் அமர்ந்திருக்க, தினேஷ் வந்து அவளிடம் விபரம் கேட்டவன்,

“அந்த பாஸ்கர் எப்போ எப்போன்னு இருக்கான்.. இவனுக்கும் அது தெரியும்.. தெரிஞ்சும் ஏன் இப்படி பண்ணனும். கொஞ்சம் பொறுமையா போனா என்ன…” என்று வருந்திவிட்டு போக, அதேதான் பல்லவியும் நினைத்தாள்.. கொஞ்சம் பொறுத்துப் போனால் தான் இவனுக்கு என்ன என்று..

ஆனது அரைமணி நேரம்.. ஷ்யாம் தான் முதலில் வெளியே வந்தான்.. அவனது முகமே என்னவோ நடந்திருக்கிறது என்று காட்டிக்கொடுக்க,

தினேஷ் “என்னாச்சு டா..” என்று அவனிடம் போக, “ம்ம்ச் நான் ஜாப் ரிசைன் பண்ணப் போறேன்..” என்றவன் நேராய் பல்லவியின் அறைக்கு வந்து,

“நான் ஜாப் ரிசைன் பண்ண போறேன்..” என,

“என்னது?? என்ன சொல்ற தேவ்.. ஏன்.. என்னாச்சு…” என்றவள் அவனின் அருகே வர,

“எனக்கு மரியாதை இல்லாத இடத்துல நான் இருக்க விரும்பல பல்லவி.. சொல்லிட்டேன் ரிசைன் பண்றேன்னு.. இனி பேச்சு மாறினா எனக்குத் தான் அசிங்கம்..” என்றவன் அதற்குமேல் அங்கே நிற்க பிடிக்காமல்

“ஈவ்னிங் வந்து உன்ன வீட்ல பாக்குறேன்.. இல்ல வேணாம்.. நீ கிளம்புறப்போ சொல்லு வந்து பிக்கப் பண்ணிட்டு போறேன்..” என்றவன் நிற்காமல் கிளம்பிட,

“ஐயோ.. இவன் என்ன சொல்லிட்டு போயிட்டு இருக்கான்…” என்று பல்லவி அவன் சொன்னதை உணருமுன்னே தினேஷ் வந்து,

“இவன் ஏன் இப்படி பண்றான்….” என, “எனக்கும் எதுவும் புரியலை..” என்று மலங்க மலங்க விழித்தவள், “நான்.. நான் உங்க ஹெட் கிட்ட பேசணுமே..” என,

“ஹ்ம்ம் வாங்க…” என்றவன் பல்லவியை அவரின் அறைக்கு அழைத்துச் செல்ல, அவளும் நடந்தவைகளை விவரிக்க,

“நான் என்ன பண்ணட்டும் மிஸ். பல்லவி.. பாஸ்கர் கொஞ்சம் பிரச்சனையான ஆளுதான்.. அது ஷ்யாமுக்கும் தெரியும்.. இருந்தும் இப்படி பண்ணா நான் என்ன செய்ய.. எனக்கு அல்ரடி மேல இருந்து ப்ரெஷர் பாஸ்கருக்கு ப்ரோமோசன் கொடுக்கச் சொல்லி.. இந்த டைம் பார்த்து இப்படியொரு பிராப்ளம்.. எல்லா பிளேஸ்லயும் சிசிடிவி இருக்கு.. ஒரு ப்ராப்ளம்னா இம்மிடியட்டா நோட்டீஸ் பண்ணிடுவாங்க..” என,

“சார் திரும்பவும் சொல்றேன்.. ஷ்யாம் மேல எந்த தப்புமும் இல்லை.. அப்கோர்ஸ் இப்படி சண்டை போட்டது தப்புதான்.. ஆனா பாஸ்கர் தான் வம்பிழுத்தான்..” என,

“இங்க பாருங்க பல்லவி…” என்று அவரின் முன்னே இருந்த கணினியை அவள் பக்கம் காட்ட, அதில் சற்று முன் நடந்த கலவரம் தான் ஓடிக்கொண்டு இருந்தது..

விடியோவில், பாஸ்கர் அவன் பாட்டில் போன் பேசுவது போலவும் ஷ்யாம் தான் அவனைப் போய் தாக்கியது போலவும் இருக்க, பல்லவி இன்னமும் நொறுங்கித்தான் போனாள்..

“ஒன் வீக் ரெண்டுபேருக்கும் நான் சஸ்பென்ட் பண்ணனும். அது சொன்னேன்.. அவன் வேலையே வேண்டாம்னு போறான்..” என்றவர் இதற்குமேல் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று கைகளை விரித்துவிட, பல்லவி நொறுங்கியது மட்டுமில்லை கலங்கிப் போய் தான் வெளியே வந்தாள்..                         

            

                   

    

   

 

 

 

Advertisement