Advertisement

காதல் – 6

“பெரியவங்க நீங்க இப்படியெல்லாம் பேசக்கூடாதுங்கம்மா..” என்ற பல்லவியின் பார்வையும் சரி அவள் கைகளை பிடித்திருந்த விதமும் சரி அத்தனை அழுத்தமாய் இருந்தது..

ஷ்யாமைப் பார்த்து பரிமளா அப்படியொரு வார்த்தைகளை சொல்லவும் அவளால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.. என்னமாதிரி பேச்சு இது என்று தான் தோன்ற, யோசிக்காமல் கேட்டேவிட்டாள்.

பரிமளா மட்டுமல்ல, வேறு யாருமே இதனை, அத்தனை ஏன் ஷ்யாம் கூட பல்லவி செயலை எதிர்பார்க்கவில்லை.. பரிமளா கூறிய வார்த்தைகளில் பல்லவி மட்டுமல்ல,  மஞ்சுளாவும் வெகுவாய் கலங்கிப்போய் இருக்க, பல்லவி பேசியது கண்டு ‘என்னடா இது…’ என்று பார்க்க, சிவபாலனும் அப்படியேத்தான் பார்த்தார்.

ஷ்யாம் கூட “பல்லவி விடு.. அவங்க பேசிட்டு போகட்டும்..” என, அதனை சிறிதும் சட்டை செய்யாதவள்,  பரிமளாவை பார்த்து

“ஷ்யாம் என் மேல இருக்க அன்புனால இப்படி நடந்துக்கிட்டான்.. ப்ளீஸ் மனசுல எதுவும் வச்சுக்காம போங்க.. இப்படி சாபம் கொடுக்கிற போல பேசவேணாம் ப்ளீஸ்..” எனும்போதே பல்லவிக்கு உள்ளம் நடுங்கியது.

அவளைப் பொறுத்தவரைக்கும் தெரிந்தோ தெரியாமலோ கூட யாரையும் பார்த்து இப்படியெல்லாம் பேசிடக்கூடாது. பிறருக்கு நல்லது நினைக்காது போனாலும் பரவாயில்லை கெட்டது நினைக்காமல் இருப்பது நல்லதல்லவா. ஒருவித உணர்ச்சிப் பெருக்கில் வார்த்தைகளை விட்டு பின் ஏதாவது ஒன்றென்றால் அனைவருக்குமே மனக்கஷ்டம் அல்லவா..

பல்லவி பேசுகையிலேயே மஞ்சுளாவும், சிவபாலனும் அவளருகே வந்துவிட்டனர்..

பரிமளா, பல்லவியை முறைத்தவர், பின் சிவபாலனிடம் “என்னண்ணா.. முதல்ல உங்க மகன் பேசினான்.. இப்போ அவன் கூட்டிட்டு வந்த பொண்ணு பேசுறா.. நீங்க ரெண்டு பேரும் வாய் மூடி நிக்கிறீங்க…” என,

அதற்கு சிவபாலன் பதில் சொல்வதற்குள் சுமதி “ம்மா.. மேல மேல பிரச்சனை வேணாம்.. சொல்லப்போனா என் லைப் தப்பிச்சிருக்கு.. உங்க எல்லார் பேச்சையும் கேட்டு ஷ்யாம் மாமா இந்த கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிருந்தா எங்க மூணு பேர் வாழ்க்கை தான் நரகமா போயிருக்கும்..” என்றவள்,

“அம்மா பேசினதுக்கு நான் சாரி கேட்டுக்கிறேன்..” என்று பல்லவியையும் ஷ்யாமையும் பார்த்து சொன்னவள், பரிமளாவை கிளப்ப முயல,

ஏற்கனவே கடுப்பில் இருந்த சுமதியின் அப்பா, இப்போது பல்லவி பேசியதை கண்டு இன்னும் கடுப்பின் உச்சத்திற்கே போனவர், “அட அட.. என்ன ஒரு குடும்பம்.. அப்பா அம்மா சொல்றதை கேட்கிறது போல பையன் நடப்பான்.. அப்புறம் காதலிக்கிறேன் சொல்வான்.. அடுத்து பொண்ண கூட்டிட்டு வருவான்.. இப்போ அந்த பொண்ணு பேசுறப்போ குடும்பமே நின்னு வேடிக்கை பார்க்கும்…” என்று வாசல் தாண்டி போனவர் திரும்ப உள்ளே வர,

‘போன பிரச்சனையை இந்த பெண் மீண்டும் இழுத்து விடுகிறாளே…’ என்று ஷ்யாமை பார்த்தவர்கள் வேறு யாராய் இருக்க முடியும்.. அவனை பெற்றவர்களே..

சுமதியின் அப்பாவோ நேராய் பல்லவியின் முன்வந்து “யாரு நீ..?? ஆ.. என் பொண்டாட்டிக்கு கிளாஸ் எடுக்கிற இப்படி பேசக்கூடாது அப்படி பேசக்கூடாதுன்னு…” என,

ஷ்யாம்தேவோ பல்லவியின் தோள்களை பற்றி சற்று தள்ளி நிறுத்தியவன் அவரின் முன்னே வந்து “அத்தையை பேசினா உங்களுக்கு கோபம் வர்றது போலதான் மாமா.. என்னை பேசினா பல்லவிக்கு கோபம் வரும்.. இப்போ புரியுதா யார் அவன்னு…” என்று சொல்ல,

“ஏய்.. என்ன குடும்பமே சேர்ந்து நாடகம் நடத்துறீங்களா…” என்று அவர் குரலை உயர்த்த, அந்த தாத்தாவும் வந்து “இதெல்லாம் சரியேயில்ல சிவபாலா வீட்டுக்கு வந்தவங்க மனசை நோகடிச்சு அனுப்புறது..” என்று சொல்ல,

சிவபாலனோ  “சித்தப்பா.. இங்க நடந்த எல்லாத்துக்கும் நான் மன்னிப்பு கேட்கிறேன்.. தப்பு எல்லாம் எங்க பேர்ல தான்.. என்ன இருந்தாலும் ஷ்யாம் அப்படி பேசிருக்க கூடாது.. அதுக்காக பரிமளாவும் அந்த வார்த்தையை சொல்லிருக்க கூடாது.. ” என்றவர், அனைவரையும் பார்த்து கரம் குவித்து,

“எங்களை முடிஞ்சா மன்னிக்கப் பாருங்க.. அதுக்காக சாபம் கொடுத்துட்டு போறதுபோல பேசவேணாம்..” என்று சொல்ல,

மஞ்சுளாவும் வந்தவர் “ஆமா அண்ணி.. என்ன இருந்தாலும் நீங்க இந்தவீட்டு பொண்ணு.. முடிஞ்சா மன்னிக்கப்பாருங்க அதுக்காக அனுப்பவிப்பீங்கன்னு  அப்படி இப்படின்னு சாபம் எல்லாம் கொடுக்கதீங்க…” என்று சொல்ல,

“ம்மா.. ப்பா.. இப்போ நீங்க ஏன் மன்னிப்பு கேட்கணும்.. அவங்க சாபம் எல்லாம் நம்மளை எதுவும் செய்யாது..” என்று ஷ்யாம் சொல்ல,

‘இவன் திமிர் குறையவே குறையாதா…’ என்றுதான் பல்லவி பார்த்தாள்.

உள்ளே அவளுக்கு அத்தனை வலித்தது.. ஷ்யாமை எண்ணி இல்லை இப்போது அவனின் பெற்றோர்களை எண்ணி. பரிமளா ஷ்யாமை பார்த்து அப்படியொரு வார்த்தை கூறும்போது எத்தனை வலித்ததோ, இப்போது அதனை விட அதிகமாய் அவனின் பெற்றோர் கரம் கூப்பி நிற்கையில் மிக மிக தர்மசங்கடமாய் உணர்ந்தாள்.

அவர்களுக்கு இப்போது மனதில் எப்படியிருக்கும்.. அந்நியப்பெண் இவள், எதிரே இருப்பவர்களோ அவர்களின் உற்றார் உறவினர்.. அனைவரின் முன்னும் இப்படி மன்னிப்பு கேட்கும் நிலையில் அவர்களின் மனம் எத்தனை துடிக்கும் என்று தோன்ற,   ஷ்யாம் மீது ஒருவித கோபம் கூட வந்தது அவளுக்கு.

பல்லவியின் மனதில் இப்படியான எண்ணங்கள் போகையிலேயே,  பரிமளாவோ அவரின் வயதிற்கு ஏற்றார் போல் நடக்காமல்,

“ரொம்ப சந்தோசம்.. நான் இப்பவும் சொல்றேன்.. எத்தனை நாளைக்கு இப்படின்னு நாங்களும் பார்க்கத் தான் போறோம்.. அண்ணா அண்ணி.. இத்தனை வருசமா உறவா இருந்த நம்மளை வந்த ஒரு நாள்ல எதுவுமில்லாம பண்ணிட்டா. இனி மருமகளா வந்துட்டா அவ்வளோதான். நீங்களே இங்க இருப்பீங்களோ என்னவோ…” என்று சொல்லிவிட்டு, கிளம்பிட, சிவபாலனும், மஞ்சுளாவும் மேலும் மேலும் ஆடித்தான் போயினர்..

ஷ்யாமிற்கு வந்த கோபத்திற்கு இவர்களை உண்டு இல்லை என்று செய்துவிடும் துவேசம் கிளம்ப, அவர்களை நோக்கி ஒரு எட்டு எடுத்து வைத்தவனை பல்லவி இழுத்து பிடித்து நிறுத்த பெரும்பாடாய் போக, ஒருவழியாய் அனைவரும் கிளம்பியதும் மீண்டும்  வீட்டினில் ஒருவித அமைதி..

மஞ்சுளாவோ பல்லவியின் முகத்தைக் கூட பார்க்கவில்லை, சிவபாலனோ பேசாமல் கடந்து போய் அமர்ந்திட, வீட்டின் நடுக்கூடத்தில் ஷ்யாமும் பல்லவியும் நிற்க, அவர்களை ஏன் என்று கேட்கக் கூட மற்றவர்கள் தயாராய் இல்லை..

பல்லவிக்கோ ஒருவேளை இங்கே வந்து இவற்றை எல்லாம் பார்க்காது போயிருந்தால் கூட அவளுக்கு ஷ்யாம் சொல்லும், செய்யும் எல்லாமே சரியாய் தெரிந்திருக்குமோ என்னவோ. ஆனால் கண் முன்னே இப்படி அதுவும் அவளின் பெற்றோர் வயதில் இருப்பவர்கள் இப்படி நொந்து போய் அமர்ந்திருப்பதை பார்த்து, ஷ்யாம் மீது தான் கோபம் கோபமாக வந்தது.

என்னவென்று அவளுக்கு சரியாய் உணரவும் முடியவில்லை.. கண் முன்னே மஞ்சுளா ஒரு ஓரமாய் அமர்ந்திருக்க, சிவபாலன் ஒருப்பக்கம் முகத்தை தொங்கப் போட்டிருக்க, ஷ்யாமின் தோற்றத்திலோ, முகபாவனையிலோ நான் செய்தது சரிதான் என்ற பிரதிபலிப்பே இருக்க,  பல்லவிக்கு என்ன செய்வது என்றுகூட தெரியவில்லை..

கிளம்புவதா?? இருப்பதா??

இருந்து என்ன செய்ய… இவர்களிடம் என்ன பேசிட வேண்டும் என்றுகூட அவளுக்கு அந்நேரம் தோன்றாமல் போக,   இந்த பிரச்சனையை  இன்னும் கொஞ்சம் பொறுமையாய் கையாண்டிருக்கலாமோ என்று பல்லவியின் மனம் அடித்துக்கொண்டது.

இத்தனை அவசரமாய் எதுவும் நடந்திட வேண்டியதில்லை.. ஆனால் நடந்தது..

ஷ்யாமிற்குமே, இப்போது மனதில் ஒருவித சங்கடம் தான்.. ஒருவேகத்தில் அனைவரும் சொல்கிறார்கள் என்று பல்லவியை அழைத்து வந்துவிட்டான்.. ஆனால் இப்படியெல்லாம் நடக்கும் என்று அவனுமே எதிர்பார்க்கவில்லை தானே.. அவனின் அப்பாவும் அம்மாவும் அனைவரின் முன்னும் கரம் கூப்பி நின்றது மனதில் அவனுக்கும் ஒரு வலி கொடுத்திருந்தது..

அடுத்து என்னசெய்வது என்று ஷ்யாம் யோசிக்கும் போதே,  பல்லவி மஞ்சுளாவின் முன் கீழே அமர்ந்தவள் “சாரி ஆன்ட்டி.. உங்களுக்கு இப்போ எவ்வளோ கஷ்டமா இருக்கும்னு தெரியும்.. எனக்கு என்ன சொல்றதுன்னு கூட தெரியலை..” என்று சொல்ல, அவருக்கு அவள் பேசியது எல்லாம் காதில் விழுந்ததோ என்னவோ,

ஆனால் பார்வை மட்டும் ஒருமுறை அவள் முகத்தை தொட்டு மீள,    சிவபாலநிடமும் “சாரி அங்கிள்.. ஐம் ரியலி சாரி…” என்று சொல்லிவிட்டு,  

எழுந்து ஷ்யாமிடம் வந்தவள் “என்ன பண்ணி வச்சிருக்க நீ??? இதுதான் நீ எதிர்பார்த்ததா..” என்று அவர்களை நோக்கி கை காட்டியவள், “கொஞ்சம் கூட உன்கிட்ட இதை எதிர்பார்க்கல தேவ்..” என்று சொல்லி கிளம்பிவிட்டாள்,

ஷ்யாமிற்கு கொஞ்சம் கூட புரியவில்லை பல்லவி என்ன சொல்லி போகிறாள் என்று.. இத்தனை நேரம் தனக்கு ஆதரவாய் பேசிக்கொண்டு இருந்தவள் இப்போது திடீரென்று இப்படி பேசி கிளம்பிச் செல்லவும் அவனுக்குப் புரியவேயில்லை..

‘என்ன சொல்லிட்டுப் போறா…’ என்று அவன் திரும்பிப் பார்க்க, அதற்குள் பல்லவி வெளியே சென்றிருந்தாள்..

“பல்லவி.. பல்லவி நில்லு..” என்று அவன் பின்னேயே போவதற்குள் அவள் ஆட்டோவில் ஏற,

“என்ன பண்ணிட்டு இருக்கா இவ..” என்று தானாக புலம்பியவன் வேகமாய் ஆட்டோவை நிறுத்தும்படி சொல்லிக்கொண்டு போக, அதற்குள் ஆட்டோ கிளம்பியிருந்தது..

“ஓ… காட்…” என்று வாசலில் நிறுத்தியிருந்த அவனின் பைக்கை எட்டி உதைத்தவன், உள்ளே வர, அவன் பெற்றோர்கள் அமர்ந்திருந்த இடத்தில் எவ்வித மாற்றமும் இல்லை..

அவர்களின் நிலை அவனுக்கு நன்றாகவே உணர முடிந்தது.. ஆனாலும் அவனுமே எதிர்பார்க்காத விஷயங்கள் நடக்கையில் அவன்தான் என்ன செய்வான்.. இதற்குமே ஷ்யாம் இத்தனை களேபரம் நடக்கும்போது கூட,

நிச்சயத்திற்கு முன்னமே என் அப்பா அம்மாவிடம் வேறு பெண்ணை காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன் என்று சொல்லவேயில்லை.. அப்படிமட்டும் சொல்லியிருந்தால், இன்று ஷ்யாமிற்கு மட்டும் சாபம் கொடுத்து சென்றவர்கள் குடும்பம் மொத்தத்திற்கும் கொடுத்து சென்றிருப்பார்கள்..

வார்த்தைகள் எதுவும் தடித்துவிடக்கூடாது என்பதனாலேயே ஷ்யாம் அனைத்தையும் தன் மீது போட்டுக்கொண்டான்.. ஆனால் இப்போது அனைவரின் பார்வையிலும் குற்றவாளியாய் இருப்பதும் அவன் தான்..

ஷ்யாமும் வந்து ஒருப்பக்கம் அமர்ந்திட, யாரும் யாரையும் பார்க்கவும் இல்லை.. யாரும் யாரிடமும் பேசும் நிலையிலும் இல்லை.. வெகு நேரம்… அவரவர் சிந்தனையில் அமர்ந்திருக்க, எத்தனை நேரம் இப்படியே இருந்தனரோ தெரியாது..

அனைவரின் சிந்தனையும் கலைந்தது ஷ்யாமின் அலைபேசி சத்தத்தால் மட்டுமே.. அவனுக்கோ யாரோடும் இப்போது பேசும் மனநிலையில் இல்லை.. எரிச்சலாய் எடுத்துப் பார்த்தவன்,

அழைப்பது பல்லவியின் அப்பா என்றதும் வேறுவழியில்லாமல் தான் பேசினான்..

“ஹலோ அங்கிள்…” என,

“ஷ்யாம்.. பல்லவி எங்க??” என்று அவர் கேட்ட கேள்வியில் ஷ்யாமிற்கு உள்ளம் திடுக்கென்றது..

கண் முன்னே தானே கொஞ்ச நேரத்தில் ஆட்டோவில் ஏறி போனாள்.. இப்போது இவர் அழைத்து அவள் எங்கே என்று கேட்கிறார் என்று தோன்ற,

“பல்லவி.. பல்லவி அவ வீட்ல இருப்பா அங்கிள்..” என, மகனின் பேச்சும், அவன் முகத்தில் தெரியும் பாவனைகளும் அவனைப் பெற்றவர்கள் பார்த்துக்கொண்டு தான் இருந்தனர்..

வெளியே நன்றாக இருட்டியிருந்தது. அவனோடு வந்தவள், தனியாய் கிளம்பிப் போய்விட்டாள்.. அவளைப் பெற்றவரோ எங்கே என் மகள் என்று கேட்டால் யாருக்குத்தான் உள்ளம் திடுக்கிடாது..

“ஈவ்னிங் பேசினது.. சரி பல்லவி அவ வீட்டுக்கு வந்திருப்பான்னு நினைச்சு கால் பண்ண எடுக்கவேயில்லை.. போன் சுவிட்ச் ஆப்னு வருது…” என்று ரவிச்சந்திரன் சொல்ல

வேகமாய் ஷ்யாம்தேவின் கண்கள் கடிகாரத்தைத்தான் பார்த்தது.. நேரம் இரவு பத்து என்று காட்ட,

‘என்னாச்சு இவளுக்கு.. ஏன் இப்படி பண்றா…’ என்று அவனுள்ளம் பதற,

“நான்.. நான் என்னன்னு போய் பார்த்துட்டு உங்களுக்கு கூப்பிடுறேன் அங்கிள்…” என்றவன் பேசிக்கொண்டே எழுந்துவிட,

“ஹ்ம்ம்.. வேற எதுவும் பெருசா பிரச்சனை இல்லையே…” என்று ஒரு தந்தையாய் அவர் வினவ,

“அதெல்லாம் இல்ல அங்கிள்.. நான் பார்த்துக்கிறேன்…” என்றவன், பேசி முடித்து பல்லவியைக் காண கிளம்ப,

சிவபாலன் “என்னாச்சு??” என்று வினவினார்..

ஓரளவு ஷ்யாம் பேசியதை வைத்தே என்னவென்று யூகித்தவர் முழு விபரமும் அறிய மகனைப் பார்த்துக் கேட்க,

“தெரியலைப்பா.. பல்லவி ஃபோன் எடுக்கவேயில்லை போல.. அவங்கப்பா பேசினார்.. ஆட்டோல போனா.. என்னாச்சு தெரியலை…” என,

“ஓ.. எங்களுக்கு தெரியாம சம்பந்தம் கூட பேசி முடிச்சிட்டியா???” என்றார் மஞ்சுளா..

எப்போதுமே மஞ்சுளா இப்படி பேசிட மாட்டார்.. ஆனால் இன்று நடந்த அனைத்தும் அவருக்கு மனதினில் ஒருவித மாற்றம் கொடுத்திருந்தது..

“ம்மா.. என்ன சொல்ற…” என்று ஷ்யாம் அவரின் அருகே வர,

“போதும் ஷ்யாம்.. யாரோ ஒரு பொண்ணு அவக்கூட சாரி கேட்டிட்டு போறா. ஆனா நீ.. இப்போ அவளுக்கு ஒண்ணுன்னதும் எழுந்து ஓடப் பாக்குற.. போ போ.. போய் பாரு..” என்று அலட்சியமாய் சொல்ல,

“மஞ்சுளா என்ன இது…” என்று சிவபாலன் கேட்க,

“நான் எதுவும் சொல்லலை.. அவன் இஷ்டம் என்னவோ பண்ணட்டும்.. நல்ல பேர் வாங்கிக்கொடுத்துட்டான்.. மனசு நிறைஞ்சு போச்சு…” என்று சொல்லிவிட்டு மஞ்சுளா எழுந்து உள்ளே சென்றுவிட, ஷ்யாமிற்கோ அனைவரும் ஒன்றாய் நின்று அவனை தாக்குவது போல் இருந்தது..

கிளம்பிப் போய் பல்லவியைப் பார்ப்பதா இல்லை மஞ்சுளாவிடம் பேசி அவரை சமாதானம் செய்வதா என்று அவன் தவித்து நிற்க,

சிவபாலன் “ஷ்யாம் போய் முதல்ல அந்த பொண்ண பாரு..” என, “ப்பா…” என்றான் திகைப்பாய்..

“மத்ததெல்லாம் இருக்கட்டும்.. முதல்ல அந்த பொண்ணுக்கு என்னாச்சுனு பார்த்துட்டு வா..” என, ஷ்யாம் அடுத்து வேகமாய் தான் கிளம்பினான் பல்லவியின் வீடு நோக்கி..

இந்த நேரத்தில் ஒரு பெண் மட்டுமே தனித்து இருக்கும் வீட்டிற்கு செல்லலாமா என்றெல்லாம் அவன் யோசிக்கவில்லை.. என்னவோ அவளுக்கு என்ன ஆனதோ என்றே மனம் அடித்துக்கொள்ள, பல்லவியின் வீட்டின் முன்னே பைக்கை நிறுத்தியவன், வீட்டின் கதவு அடைத்திருக்க, வெளியே நின்று விடாது காலிங் பெல் அடித்துக்கொண்டு இருந்தான்..

பல்லவி இருப்பது அப்பார்ட்மெண்ட் ஏரியாவில் இல்லை. அவளுக்கு தமிழ் ஆட்கள் இருக்கும் ஏரியாவில் வீடு கிடைத்தால் போதும் என்று தோன்ற, லைன் வீடுகள் போல் கீழே நாலு மேலே நாலு என்று இருந்த வரிசை வீடுகள் ஒன்றில் தான் வாடகைக்கு இருந்தாள்.

ஆக ஷ்யாம் வந்து இப்படி வெளியே நிற்பது ஓரளவு அக்கபக்கது வீட்டினர் கண்ணிலும் பட, ஓரிருவர் வெளிய வந்து எட்டிக்கூட பார்க்க, அவளோ கதவு திறக்கவில்லை..

வீடு உள்ளேதான் பூட்டியிருப்பது தெரிந்தது.. 

“பல்லவி… பல்லவி.. ஓப்பன் தி டோர்…” என்று ஷ்யாம் கதவைத் தட்ட, மாறி மாறி காலிங் பெல் அடிக்க, ஓரிருவர் எட்டிப் பார்த்தவர்களோ அடுத்து ஐந்து பத்தாய் மாறி அங்கேயே நின்று வேடிக்கைப் பார்க்க,

வந்திருப்பது ஷ்யாம் தான் என்று தெரிந்து பல்லவி முதலில் கதவு திறக்காமல் இருந்தவள், ஜன்னல் வழியாய்ப் பார்க்க, அங்கேயே அவன் பின்னே ஒரு கூட்டமே நிற்பது கண்டு, வேகமாய் கதவு திறந்தாள்.. கதவு திறந்தவளோ, எதிரே நிற்பவனைக் காணாமல் அவன் பின்னே நிற்பவர்களை பார்க்க, 

‘யாரப் பாக்குறா…’ என்று அவனும் பின்னே திரும்ப அப்போது தான் தெரிந்தது ஷ்யாமிற்கு அனைவரும் அவனையும் அவளையும் கேள்வியாக பார்த்து நிற்பது..

“பல்லவி யாரு இது… எதுவும் பிரச்சனையா??” என்று பக்கத்து வீட்டு பெண்மணி கேட்க,

“பிரச்னை எல்லாம் இல்லக்கா…” என்று சொல்லும்போதே,

“நானும் பல்லவியும் கல்யாணம் பண்ணிக்க போறோம்.. இப்போ நான் யாருன்னு உங்களுக்கே தெரியும்…” என்று ஷ்யாம் சொல்லியிருக்க,

‘டேய்…..’ என்று பல்லவிக்கு கத்த வேண்டும் போல் தான் இருந்தது.. இவனுக்குப் பொறுமையாகவே போகத்தெரியாதா என்று இருக்கும் கோபம் இன்னும் கூட, ஷ்யாமை முறைத்தவள், அடுத்து பேசத் தொடங்கும் போதே, மற்றொருவர்,

“கல்யாணம் பண்ணிக்கப் போறவங்க ஏன் இந்நேரம் வந்து கதவு தட்டனும்…” என்று மேல்வீடு பெண் ஒருத்தி சொல்ல, பல்லவிக்கு திக்கென்றனது..

“ஹலோ… என்ன விட்டா பேசிட்டே போறீங்க..” என்று ஷ்யாம் எகிறிக்கொண்டு போக,

“ஐயோ தேவ் ப்ளீஸ்…” என்று பல்லவி அவனைத் தடுத்து நிறுத்தியவள்,

“பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சு பேசமாட்டீங்களா?? மூணு வருசமா இதே வீட்ல தான் நான் இருக்கேன்.. இப்படி பேச உங்களுக்கே அசிங்கமாயில்ல…” என்று பேசியவரைப் பார்த்து திட்டியவள்,

“நீ எதுக்கு இங்க வந்த??? இப்படி என்னை பேச்சு கேட்க வைக்கவா??” என்று ஷ்யாமையும் விட்டு வைக்கவில்லை..

ஷ்யாமிற்கு இன்னளவு என்றில்லை, விட்டால் எதிரே இருக்கும் அந்த பெண்ணை ஒருவழி செய்திருப்பான்.. வாய் இருக்கிறது என்பதற்காக எதுவும் பேசலாமா என்று அப்படி ஒரு கோபம். ஆனால் பல்லவியோ என்னவோ இவன் வந்ததுனால் தான் அனைவரும் இப்படி பார்க்கின்றனர் பேசுகின்றனர் என்பதுபோல் கேள்வி கேட்கவும்,

“ஆமா எனக்கு ஆசைப் பாரு.. உங்கப்பா ஃபோன் பண்ணார்.. உனக்கு ஃபோன் பண்ணி எடுக்கலைன்னதும் எனக்குக் கேட்டார்.. அதான் என்னன்னு பார்க்க வந்தேன்…” என்று கடிய,

“ஓ.. சரி நான் பேசிக்கிறேன் நீ கிளம்பு…” என்றவள் உள்ளே போகப் பார்க்க,

“இங்கவே பேசு…” என்றான் அனைவரையும் பார்த்து.

“தேவ்.. நீ போ நான் பேசிக்கிறேன்…” என்று பல்லவி அவனை அனுப்ப முயல, அவனோ அவன் ஃபோனை நீட்டி “இப்போ பேசு.. இங்கயே..” என, ஓரளவு சுற்றியிருந்தவர்கள் சரி இது அவர்களின் பிரச்சனை என்று கிளம்பிட, ஒருசிலர் மட்டும் சுவாரஸ்யமாய் பார்த்துக்கொண்டு நிற்க,

பல்லவிக்கு அப்படியே எங்காவது ஓடிவிடலாமா என்றுதான் நினைக்கத் தோன்றிது..

வேகமாய் அவனின் ஃபோனை வாங்கி அவள் வீட்டிற்கு அழைத்தவள் “ஹலோ அப்பா.. என் ஃபோன்ல சார்ஜ் இல்லை.. சுவிட்ச் ஆப் ஆகிடுச்சு.. நான் காலைல பேசுறேன்..” என்றவள் ஃபோனை ஷ்யாமின் கரங்களில் திணித்துவிட்டு உள்ளே சென்று கதவையும் தாளிட்டுக் கொண்டாள்..

“இப்போ நிம்மதியா எல்லாருக்கும்.. நல்லா செய்றீங்கடா எல்லாம்..” என்று இருந்த ஒருசிலரைப் பார்த்து நக்கலாய் சொன்னவன் பைக்கை கிளப்பிக்கொண்டு பறந்தான்..                  

      

                                                                        

       

                    

    

    

Advertisement