Advertisement

காதல் – 5

‘நான் காதலிக்கிறேன்…’ என்று சொன்னதும் அதிர்ச்சியடைந்தவர்கள், எப்படியாவது இந்த நிச்சயதார்த்தம் நடந்துவிட வேண்டும், பின் ஷ்யாமை பேசி சரி செய்துவிடலாம் என்று நினைக்க, அவனோ வீட்டிற்கே வராது போக, மஞ்சுளாவிற்கும் சிவபாலனுக்கும் அங்கிருப்பவர்களை சமாளிப்பது ஒருபக்கம் என்றால், இவன் என்ன செய்வானோ என்பது வேறு ஒருபக்கமாய் இருந்தது.

மகனது காதல் ஒருபுறம் அதிர்ச்சி என்றால், அவன் அதை தெரிவித்த நேரம் இன்னொரு புறம் அதிர்ச்சியாய் இருந்தது. வீட்டில் இருக்கும் ஆட்களின் முன்னால் எதுவும் பேசிக்கொள்ளவும் முடியவில்லை..

‘ஷ்யாம் எங்க ??’ ‘என்ன பேசினீங்க??’ ‘எப்போ வருவான்..??’

இதுபோன்ற கேள்விகளுக்கு அவர்களால் பதிலே சொல்ல முடியாமல் போக, அந்த டென்சன் எல்லாம் மொத்தமாய் சேர்த்து சிவபாலனுக்கு எப்படியாவது இந்த திருமணத்தை நடத்தி முடித்திட வேண்டும் என்று உறுதி பிறக்க, மஞ்சுளாவோ மகனின் இயல்பு குணம் எண்ணி அஞ்சினார்.

ஷ்யாம் மறுநாள் வீடு வந்து சேர, நல்லவேளை அவன் வந்த நேரம் அனைவரும் உறக்கத்தில் இருக்க, மஞ்சுளா,  “டேய் ஏன்டா இப்படி பண்ற?? எங்க போன?? கேட்கிறவங்களுக்கு பதில் சொல்ல முடியலைடா…” என்று பேச,

“நீதானம்மா சொன்னா மோதிரம் மட்டும் போடு, அடுத்து பேசிக்கலாம்னு.. பேசிருக்க வேண்டியதுதான…” என்றான் காந்தலாய்.

“ஷ்யாம்…” என்று சற்றே குரலை உயர்த்திய சிவபாலன்,  சுற்றும் முற்றும் பார்த்தவர், “ரூம்ல போய் பேசலாம்..” என்று சொல்ல, ஷ்யாமும் எதுவும் சொல்லாமல் உள்ளே சென்றான்.

“இங்க பாரு ஷ்யாம் எல்லாமே முடிவு பண்ணியாச்சு.. நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லித்தான் ஆகணும்..”

“அப்போ நான் அவ்வளோ சொல்லியும் நீங்க அதை பெருசா எடுக்கலைலப்பா??” என்றவன்,

“நான் தெரியாமத்தான் கேட்கிறேன் இவ்வளோ அவசரமா ஏன் இந்த கல்யாணம்.. ஊர் சுத்திப்பார்க்க தானே வந்தாங்க.. அதை பண்ணிட்டு போகாம இப்படி ஏன் கல்யாணம் பேசணும்…” என்று கேட்டவனுக்கு என்ன முயன்றும் குரலை தணிக்க முடியவில்லை..

“டேய் கத்தாதடா.. யார் காதுலயாவது விழப் போகுது..” என்ற மஞ்சுளா, “சொல்றத கேளு ஷ்யாம்.. ரெண்டு மாசத்துல கல்யாணம் நடக்கலைன்னா அடுத்து கல்யாணம் நடக்குறது கஷ்டம்னு தாத்தா சொன்னார்டா…” என, அவனுக்கோ அப்படியே பக்கத்தில் இருக்கும் சுவரில் முட்டிகொள்வோமா என்றிருந்தது..

“நாங்க முடிவு பண்ணியாச்சு ஷ்யாம்.. நீ இதுக்கு சம்மதிச்சுத்தான் ஆகணும்…” என்ற சிவபாலனைப் பார்த்தவன்,

“இதுதான் உங்க முடிவா??” என,

அவரோ மஞ்சுளாவைப் பார்த்தவர் “ஆமா இதுதான் எங்களோட முடிவு.. நீ எங்களை மதிக்கிறதுன்னா இதுக்கு சம்மதம் சொல்லித்தான் ஆகணும்..” என்றதும்,

“அப்போ நீங்களும் கேட்டுக்கோங்க.. ரெண்டு மாசமில்ல ரெண்டு வருசமானாலும் சரி எனக்கு பல்லவியோட தான் கல்யாணம் நடக்கணும்.. இல்லைன்னா கல்யாணம்கிற ஒண்ணு எனக்கு இல்லவே இல்லை.. இதுதான் என் முடிவுப்பா..” என்றவன் தன் அறைக்குச் சென்றுவிட,

மஞ்சுளாவோ “என்னங்க இது இப்படி சொல்லிட்டு போறான்..” என்று பதற,

“இப்போ எதுவும் பேசாத மஞ்சுளா.. முதல்ல வந்திருக்கவங்க எல்லாம் கிளம்பி போகட்டும் அடுத்து பேசிப்போம்..” என்று சிவபாலன் சொல்ல, மறுநாள் முதல் வேலையாக ஷ்யாம்  சுமதியின் அப்பா அம்மாவை அழைத்து உண்மைகள் அனைத்தையும் சொல்லிட,

“என்ன கூப்பிட்டு வச்சு விளையாடுறீங்களா??? நிச்சயம் முடிஞ்சதுன்னு ஊர்ல இருக்க எல்லார்கிட்டவும் சொல்லியாச்சு.. இப்போ வந்திட்டு இப்படி சொன்னா என்ன நினைச்சிட்டு இருக்கீங்க…??” என்று சுமதியின் அப்பா சத்தம் போட,

“என் பொண்ணுக்கு என்ன குறைச்சல்னு வேணாம் சொல்ற ஷ்யாம்…” என்று பரிமளா ஒருபக்கம் குரலை உயர்த்த, ‘என்ன சத்தம்..’ என்று வீட்டிலிருந்த மற்றவர்கள் எல்லாம் அங்கே வர, சிவபாலன் வெளிய கிளம்பிக்கொண்டு இருந்தவரும் அங்கே வர,

“அண்ணா ஷ்யாம் என்னண்ணா இப்படி சொல்றான்… அவன்கிட்ட கேட்டுதானே முடிவு பண்ணீங்க…” என்று பரிமளா அவரைப் பார்த்துக் கேட்க,

“என்.. என்ன சொன்னான்??” என்று அதிர்ந்தவர், “என்ன ஷ்யாம்??” என்று மகனைப் பார்த்துக் கேட்க,

“இந்த கல்யாணம் நடக்காதுன்னு சொன்னேன் ப்பா.. உண்மையும் அதானே…” என்றவனோ திடமாய் நிற்க,  அதனை கேட்ட மற்றவர்கள் தான் ஆடிப்போயினர்..

“டேய் ஷ்யாம்.. ஏன்டா இப்படி எங்களை அசிங்கப்படுத்துற.. ” என்று மஞ்சுளா அழத் தொடங்க,

“ம்மா போதும்.. இப்படி அழுது அழுது தான் எல்லா காரியமும் நடக்க வைக்கிறீங்க.. பட் இது கண்டிப்பா நடக்காது…” என,

“போதும் ஷ்யாம்.. இதென்ன நிச்சயம் அன்னிக்கு எல்லாம் விட்டுட்டு இப்போ வந்து இப்படி பேசுற இதை நாங்க நம்பனுமா??” என்று அந்த தாத்தா கேட்க, ஷ்யாமோ சிவபாலனைப் பார்க்க, அவரோ மேற்கொண்டு பேசாதே என்பதுபோல் பார்த்தார்.

மஞ்சுளாவோ “மாமா நீங்க தப்பா நினைக்கவேணாம்.. ஷ்யாம் எதோ டென்சன்ல இப்படி சொல்றான்..” என்று பேச்சை மாற்ற முயல, ஷ்யாமால் அந்த நேரத்தில் அவனது பெற்றோர்களையும் விட்டுக்கொடுத்து பேச முடியவில்லை..

“தாத்தா.. எனக்கு டெண்சனுமில்ல எதுவுமில்ல.. அப்பா அம்மாக்கும் இந்த விஷயம் தெரியாது.. நான் ஒரு பொண்ண லவ் பண்றேன்.. மூணு வருசமா.. அப்படியிருக்கப்போ இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணா அது மூணு பேரோட வாழ்க்கையைதான் பாதிக்கும்.” என்று அவருக்குப் புரியவைக்க முயல,

“நீ சொல்ற இந்த கதை எல்லாம் இருக்கட்டும்.. இதை நிச்சயம் பேசும்போதே சொல்லிருக்க வேண்டியதுதானே….” என்று சுமதியின் அப்பா பேச,

“மாமா…” என்று எதுவோ வேகமாய் சொல்லவந்தன், சூழல் புரிந்து கொஞ்சம் நிதானித்து,

“இது கதை இல்ல.. தப்பு என்பேர்ல தான்.. அப்பா சொன்னதை நான் சரியா கேட்டுக்கலை.. தாத்தா வழக்கம் போல ஜாதகம் பார்த்து எதுவோ பரிகாரம் சொல்லிருக்கார்னு தான் நினைச்சேன்.. ஆனா இப்படியொரு விஷயம் நடக்கும்னு நான் கொஞ்சம் கூட நினைக்கவேயில்லை.. புரிஞ்சுக்கோங்க… இதுல உங்க பொண்ணு வாழ்க்கையும் தான் அடங்கியிருக்கு..” என,

“அண்ணா.. அண்ணி.. என்ன இதெல்லாம் ஷ்யாம் பேசிட்டே போறான்.. நீங்க வேடிக்கை பார்த்து நிக்கிறீங்க.. அப்போ என் பொண்ணு மனசு என்ன பாடுபடும்..” என்று சற்று தள்ளி நின்று நடப்பது அனைத்தையும் ஒருவித பதற்றத்தோடு வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்த சுமதியை அழைத்து பரிமளா நடுவில் நிறுத்த,

மஞ்சுளாவும், சிவபாலனும் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்க, ஷ்யாம்தேவ் கொஞ்ச நேரம் அந்த சுமதியைத் தான் பார்த்தான்.

தன் வாழ்வை பற்றிய பிரச்சனையும் இதில் அடங்கியிருக்கிறது என்ற கவலை அவள் முகத்தில் தெரியவில்லை. மற்றபடி கண்ணுக்கு நேரே அதுவும் வந்த இடத்தில் இப்படியொரு நிகழ்வு என்ற ஒருவித பதற்றம் அவ்வளவே அவள் முகத்தில் தெரிவதாய் இருக்க, ஷ்யாம் மனதில் ஒரு சிறு நிம்மதி.. ஆக இந்த நிச்சயம் நிற்பதில் இந்த பெண்ணுக்கு அத்தனை பெரிய ஏமாற்றமோ இல்லை வலியோ இல்லை என்று..  

“பரிமளா கொஞ்சம் பொறுமையா இரு.. நா.. நான் அவன்கிட்ட பேசுறேன்..” என்று மஞ்சுளா சொல்கையிலேயே,

“ம்மா… இனி என்கிட்ட பேச எதுவுமில்ல…” என்றவன், நேராய் சுமதியின் முன் சென்று நிற்க, அவளோ அதிர்ந்து பயந்துப் பார்க்க,

“என்ன பண்ற ஷ்யாம்..” என்று சிவபாலன் அருகே வந்தவரைப் பார்த்தவன், “இதுல நீங்க எல்லாம் சொல்ற முடிவை விட இந்த பொண்ணு சொல்றது தான் முக்கியம்..” என்றவன்,

“சுமதி.. நடந்ததை பார்த்து உனக்கே புரிஞ்சிருக்கும்.. தப்பு என்பேர்ல தான் அதுக்கு நான் உன்கிட்ட தான் மன்னிப்பு கேட்கணும்.. சாரி..” என,

அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சுமதி திகைக்க, “என்ன ஷ்யாம்.. பெரியவங்க நாங்க பேசுறப்போ அவக்கிட்ட என்ன பேச்சு.. அவ சின்ன பொண்ணு அவளுக்கு என்னத் தெரியும்.. ” என்று தாத்தா சத்தம் போட,

“பின்ன ஏன் இந்த சின்ன பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிவைக்க கிளம்பினீங்க..??” என்றான் வேகமாய் அவரைப் பார்த்து.

“டேய் ஷ்யாம்…” என்று மஞ்சுளாவும், சிவபாலனும் அதட்ட,

வந்திருந்த மற்ற சொந்தங்களில் “மாமா.. அதான் ஷ்யாமும் இவ்வளோ சொல்றானில்ல இந்த காலத்துல காதல் கல்யாணம் எல்லாம் சகஜம்தான். இப்போ என்ன நமக்குள்ள தான் இந்த விஷயம்.. நாளைக்கு வம்படியா கல்யாணம் பண்ணி வச்சு நம்ம பசங்க ஆளுக்கு ஒருபக்கம் பார்த்துட்டு நிக்க இது எவ்வளவோ பரவாயில்லை…” என்று ஒருவர் சொல்ல,

“அதுதான.. இதென்ன இப்போ ஊரு உலகத்துல நடக்காத விசயமா…” என்று மற்றொருவரும் நிதர்சனம் புரிந்த பேச,

“என்ன?? என்ன பேசுறீங்க நீங்க.. ஊர்ல எல்லாருக்கும் இங்க நிச்சயம் பண்ணிட்டோம்னு சொல்லியாச்சு.. அதுவிட்டு இப்போ இப்படி பேசினா எப்படி…??” என்று சுமதியின் அப்பா சத்தம் போட,

பேச்சு வளர்ந்துகொண்டே தான் போனதே தவிர இதற்கு ஒரு முடிவு கிடைப்பதாய் இல்லை.. ஷ்யாமோ பேசி பேசி கலைத்துப் போனான்.

இதுதான் விஷயம் என்றாலாவது இவர்கள் கிளம்பியாவது செல்வர் பின் அப்பா அம்மாவிடம் கொஞ்சம் புரியவைக்கலாம் என்றுபார்த்தால் அதுவும் முடியவில்லை.. சரி சுமதியிடம் பேசி புரியவைக்கலாம் என்றால் எதற்குமே அங்கே வாய்ப்பில்லாமல் போக, அடுத்து வந்த நாளும் இப்படி ஆளுக்கு ஒன்றாய் பேசுவதில் கழிய, மறுநாள் மதியம்போல் பரிமளா மஞ்சுளாவிடம்,

“ஏன் அண்ணி.. நகை பணம் எதுவும் நிறைய எதிர்பார்க்கிறீங்களா?? அதை கேட்க தயங்கித்தான் ஷ்யாமை இப்படி பேச வைக்கிறீங்களா???” என்று கேட்க,

‘ஐயோ…’ என்ன பேச்சு இது என்று மஞ்சுளா திகைக்க,

சிவபாலன் “பரிமளா என்ன பேச்சு இது.. சித்தப்பா ரெண்டு மாசத்துல கல்யாணம் நடக்கனும்னு சொன்னார் அதுனால தான் நாங்க சம்மதம் சொன்னோம்.. சரி சொந்தத்துல பொண்ணு எடுத்தா நல்லதா இருக்கும் அப்படின்னுதான் நாங்க நினைச்சோம்.. அதைவிட்டு பணம் நகைன்னு இதென்ன பேச்சு..” என்று கடிய,

“இல்ல மாமா.. இப்படியும் நடக்குதுதான.. நேரடியா வரதட்சணை கேட்கத் தயங்கிட்டு இப்படி பிரச்சனை பண்ற ஆளுங்க எல்லாம் இருக்காங்க..” என்று பரிமளாவின் கணவர் சொல்ல, சிவபாலனும், மஞ்சுளாவும் அப்படியெல்லாம் இல்லை என்று மறுக்க,

“பின்ன இதெல்லாம் நம்புற மாதிரியா மாமா இருக்கு.. எங்க முன்னாடிதான் ஷ்யாம் கிட்ட போன்ல நீங்க சம்மதம் கேட்டீங்க.. அவனும் நிச்சயம் நடக்குற கொஞ்ச நேரம் முன்னாடிவர நல்லாத்தான் இருந்தான்.. ஆனா கொஞ்ச நேரத்துக்கு முன்ன உங்களை கூட்டிட்டு போய் பேசினான்.. வந்து மோதிரம் போட்டிட்டு அப்படியே கிளம்பிட்டான்.. அடுத்த நாள் வந்து இப்படியொரு கதை.

அப்படி நிஜமாவே ஒரு பொண்ண அதுவும் மூணு வருசமா லவ் பண்றவன் அன்னிக்கே எல்லார் முன்னாடியும் சொல்லிருந்தா இந்த பிரச்சனையே இருந்திருக்காதே.. நாங்களும் கிளம்பிப் போயிருப்போமே.. எங்களுக்கு என்னவோ சந்தேகமா இருக்கு…” என்று அவர் மேலும் பேச,

“என்ன சிவபாலா பையன் நல்ல வேலைல இருக்கான்.. நிறைய சம்பாரிக்கிறான்னு வேற எதுவும் எதிர்பார்க்கிறீங்களா??” என்று தாத்தாவும் கேட்க,

“எல்லாரும் கொஞ்சம் நிறுத்துறீங்களா…” என்று ஷ்யாம் கத்தியேவிட்டான்.

அவனும் இந்த இரண்டு நாட்களாய் பொறுமையை இழுத்துப் பிடிக்க மிகவும் முயன்றான்தான்..  என் அப்பா அம்மாவிடம் நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் என்று சொன்னால், இதைவிட இவர்கள் எல்லாம் சிவபாலனையும் மஞ்சுளாவையும் பேசுவர் என்று ஷ்யாமிற்கு நன்றாகவே புரிந்துபோனது..

ஆக, அனைத்தையும் தன் தலையில் போட்டுக்கொள்ள தயாராய் இருந்தான்.. ஆனால் இப்போது இவர்கள் இல்லாத ஒன்றை எடுத்துப் பேசவும் அவனுக்கு பொறுமை போய்விட்டது..

“என்ன பேசிட்டே போறீங்க.. நான் சொல்றது உங்களுக்கு கதையா தெரியும். ஆனா நீங்களா இப்படி எதையாவது நினைச்சுப் பேசுறது சரியா இருக்குமா?? என்ன எண்ணம் இது.. நான்தான் சொல்லிட்டேனே தப்பு என்பேர்ல தான்..” என்று சொல்ல,

“ஷ்யாம் நாங்க பேசிக்கிறோம்…” என்று சிவபாலன் சொல்ல,

“ப்பா ப்ளீஸ்.. நான் பேசிக்கிறேன்.. ப்ளீஸ்…” என்று அவரை நோக்கி வேகமாய் கரம் குவித்தவனின் பார்வையில் அவருக்கு என்ன தோன்றியதோ அமைதியாய் நிற்க,

“ஓ.. சரி.. அப்போ பணம் நகைக்கு ஆசைப்படலைன்னா.. நீ லவ் பண்றேன்னு சொல்றியே அந்த பொண்ணு. அவளைக் கூட்டிட்டு வா…” என்று சுமதியின் அப்பா சொல்ல, இது ஷ்யாமே எதிர்பார்க்காத விஷயமென்றதால் ‘என்னது’ என்று அதிர்ச்சியாய்ப் பார்த்தான்..

“ஆமா.. அவர் சொல்றது சரிதான்.. நீ சொல்றியே ஒரு பொண்ணு.. அவளைக் கூட்டிட்டு வந்து எங்க கண்ணுல காட்டு.. நாங்க நம்புறோம்..” என்று பரிமளா சொல்ல,

‘ச்சே என்ன மாதிரி மனிதர்கள் இவர்கள்..’ என்று தோன்றியது ஷ்யாமிற்கு..

வந்திருந்தவர்களில் ஒருசிலர் ஷ்யாமிற்கு ஆதரவாய் பேச, ஒருசிலர் அதென்ன இப்படி இதென்ன அப்படி என்று பேச, சிவபாலனுக்கு கூட ஒருவித சலிப்பு மனதினில், ஆனால் மஞ்சுளாவோ இப்படி அனைவர்க்கும் பதில் சொல்லும் நிலை வந்துவிட்டதே என்று வருந்தி நின்றிருந்தார்..

“ஷ்யாம் என்ன அப்படியே நிக்கிற?? அப்போ நீ சொன்னது கதை தான் இல்லையா??” என்று தாத்தா கேட்க, அவரை மட்டுமில்லை அனைவரையும் ஒருமுறை பார்த்தவன், வெளிய கிளம்பிவிட்டான்.

எங்கே போகிறான் என்ன செய்யப் போகிறான் என்பது யாருக்கும் தெரியாது.. கோபத்தில் கிளம்பியதாகவே அனைவரும் நினைக்க,

‘கொஞ்ச நேரத்துல வருவான் வேற கதை சொல்லிட்டு….’ என்று சுமதியின் அப்பா முணுமுணுக்க, அவர் சொன்னதுபோலவே ஷ்யாம் வந்தான் கொஞ்ச நேரத்தில்.. கதை சொல்லி அல்ல அவனின் காதலியை அழைத்துக்கொண்டு..

“ஷி இஸ் பல்லவி.. நேட்டிவ் மதுரை.. த்ரீ இயர்ஸா இங்க வொர்க் பண்றா.. நாங்க லவ் பண்ண ஆரம்பிச்சும் த்ரீ இயர்ஸ் ஆச்சு.. இந்த வருஷம் வீட்ல பேசி பெரியாவங்க சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சோம்..” என்று அனைவர்க்கும் பொதுவாய் பல்லவியை அறிமுகம் செய்துவைக்க, அவளோ என்ன செய்வது என்று தெரியாமல் மௌனமாய் நின்றிருந்தாள்..

அனைவருமே ஒருவித திடுக்கிடலோடு, அமைதியாய் அவர்களைப் பார்க்க, “என்ன பாக்குறீங்க… நீங்க சொன்னதுக்காக நான் பல்லவியை இங்க கூட்டிட்டு வரலை.. என்னோட ஒரு வார்த்தைக்கு, என்னை மூணு வருஷம் மட்டுமே தெரிஞ்ச ஒரு பொண்ணு எத்தனை மதிப்பும் என்மேல எவ்வளோ நம்பிக்கையும் வச்சிருக்கான்னு காட்டத் தான் கூட்டிட்டு வந்தேன்.. அதுவும் அவங்க அப்பாக்கிட்ட கேட்டிட்டு… ” என,

இப்போது அதிர்ந்து பார்ப்பது பல்லவியும் தான்..

‘அப்பாக்கிட்ட என்ன கேட்டான்?? அவர் எப்படி இதுக்கு சரின்னு சொன்னார்…’ என்று திகைத்துப் பல்லவி பார்க்க, அவளைப் பார்த்து லேசாய் சிரித்தவன்,

“என்ன உனக்கும் ஷாக்கா இருக்க.. ஒருசில விஷயம் தவறலாம்.. ஆனா ஒவ்வொன்னுமே தவறுதலா நடக்கக் கூடாது இல்லையா…” என,

“இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை மாமா.. இப்படி ஒரு பொண்ண வீட்டுக்கே கூட்டிட்டு வந்து நிக்கிறான்.. நீங்க பேசாம இருக்கீங்க.. இதுதான் நீங்க எங்களுக்கு கொடுக்கிற மரியாதையா…” என்று சுமதியின் அப்பா இப்போது வேறு விதமாய் பிரச்சனையை கிளப்ப,

“என்னங்க.. விடுங்க.. இதுக்கு மேல இவங்கக்கிட்ட பேசி என்ன பிரயோஜனம்.. அதான் கூப்பிட்டு வச்சு நல்லா மரியாதை கொடுத்துட்டாங்க..” என்ற பரிமளா, “அண்ணா இதுக்கெல்லாம் சேர்த்து பின்னால நல்லா அனுபவிப்பீங்க.. உங்க பையன் உங்களை மறந்துட்டு தான் போகப் போறான்..” என்றும் சொல்ல,

“பரிமளா அப்படியெல்லாம் சொல்லாத ப்ளீஸ்..” என்று மஞ்சுளா பதற,

“அண்ணி போதும்.. எங்களுக்கு எங்க பொண்ணு வாழ்க்கையும் முக்கியம் தான்..” என்றவர், “என்னங்க கிளம்பலாம்…” என்றுவிட்டு, தன் மகளை நோக்கி,  “சுமதி கிளம்பு போகலாம்…” என,

அந்த தாத்தாவும் “ரொம்ப நல்ல மரியாதை பண்ணிட்ட சிவபாலா..” என, அத்தனை நேரம் வாய் மூடியிருந்த சுமதி

“ஐயோ போதும் எல்லாரும் மாத்தி மாத்தி பேசினது எல்லாம்…” என்று அப்போது தான் வாய் திறந்தாள்..

“சுமதி பேசாம கிளம்பு..” என்று பரிமளா அதட்ட, “இல்லம்மா நான் பேசணும்..” என்றவள்

“ஷ்யாம் மாமா ரொம்ப தேங்க்ஸ்.. உண்மைய நீங்க மறைக்காம சொன்னதுக்கு.. எனக்கு பர்ஸ்ட் இந்த ட்ரிப் வரவே பிடிக்கல..  இங்க வந்து ஜாதகம் அது இதுன்னு பார்த்து உடனே முடிவும் பண்ணிட்டாங்க..

இதெல்லாம் யாரும் எதுவும் ப்ளான் பண்ணல தான் ஆனா எல்லாமே நடந்தது. எங்கம்மா கல்யாணத்துக்கு என்கிட்டே சம்மதம் கேட்கிறப்போ அப்பாவும் சொன்னேன் ஷ்யாம் மாமாக்கிட்ட நேர்ல வச்சு பேசி கேளுங்கன்னு.. எங்களுக்குத் தெரியும்னு ஒரே வார்த்தையா சொல்லிட்டாங்க..

இப்போ என்னாச்சு.. அவங்க நினைச்சது எதுவும் நடக்கலைன்னு எல்லாரையும் பேசிட்டு இருக்காங்க.. மாமா அத்தை உங்களுக்கும் சொல்றேன் மனசுல எதையும் வச்சுக்காதீங்க ப்ளீஸ்.. ஷ்யாம் மாமா நீங்க என்கிட்ட சாரி கேட்டீங்க ஆனா நான் உங்களுக்கு தேங்க்ஸ் தான் சொல்லணும்..” என்றவள்

பல்லவியை நோக்கி “ஆல் தி பெஸ்ட்..” என்று சொல்லி,  “ம்மா கிளம்பலாம்..” என்று சொல்ல, யாருக்கும் எதுவும் பேசும்  நிலை அங்கேயில்லை..

அவரவர் ஒவ்வொரு விதமாய் முனங்கிக்கொண்டே கிளம்ப, ஷ்யாம் எதுவுமே பேசவில்லை. அமைதியாய் அனைத்தையும் நின்று வேடிக்கைப் பார்த்துகொண்டு இருந்தான். மஞ்சுளா ஒருப்பக்கம் அமர்ந்து கண்ணை கசக்கிக் கொண்டு இருந்தார்..சிவபாலன் அந்த தாத்தாவிடம் எதுவோ சமாதானமாய் பேச முயற்சித்துக்கொண்டு இருந்தார்..

பல்லவிக்கோ இயல்பாய் மூச்சு விடுவது கூட கஷ்டமாய் இருப்பதுபோல் ஓர் உணர்வு. ஷ்யாம் மட்டுமே அவள் அருகில் நின்றிருந்தான்.. அவன் மட்டுமே போதும்தான்.. ஆனால் முதன்முதலாய் இங்கே வருவது இப்படியான ஒரு சூழலிலா வரவேண்டும் என்று நொந்துபோனாள்.

அனைவரும் கிளம்பிட, போகும்நேரம் பரிமளா என்ன நினைத்தாரோ ஷ்யாமைப் பார்த்தவர் “பேசியே காரியம் ஜெயிச்சிட்ட ஷ்யாம்.. ஆனா எப்பவும் நேரம் ஒரேமாதிரி இருக்காது.. இதுக்கெல்லாம் சேர்த்து நீ அனுபவிப்ப…” என்று சொல்லி செல்ல,

“அச்சோ..” என்று பதறியது மஞ்சுளாவும், பல்லவியும்..

ஷ்யாம் அப்போதும் ஒரு மாற்றமும் காட்டினானில்லை.. அவனைப் பொருத்தவரைக்கும் இதில் சுமதி எவ்வித காயமும் படவில்லை அதுவே போதுமாய் இருந்தது.

ஆனால் பரிமளா அப்படி பேசியதும் மஞ்சுளா உள்ளுக்குள்ளே நடுங்கியே போக, பல்லவி என்ன நினைத்தாளோ, இரண்டு எட்டு எடுத்துவைத்திருந்த பரிமளாவின் கரங்களை பிடித்திருந்தாள்.     


Advertisement