Advertisement

காதல் – 4

இரண்டு நாட்கள்.. முழுதாய் நாற்பத்தி எட்டு மணி நேரம் முடிந்திருக்க, ஷ்யாம்தேவிடம் இருந்து எவ்வித தகவலும் இல்லை.. பல்லவிக்கோ நெருப்பில் நடக்கும் தருணமாகவே இருந்தது ஒவ்வொரு நொடியும்.. ஒருப்பக்கம் அவளது வீட்டினர் அவனின் நம்பர் கொடு பேசுகிறோம் என, அவனோ ஃபோனை ஆன் செய்தானில்லை..

அதுதான் அப்படியென்றால் வேலைக்காவது வருவான் என்றால் அதுவுமில்லை.. அவன் அங்கே வருவானோ என்ற ஒரு எண்ணத்திலே தான் பல்லவி இந்த இரு தினமும் வேலைக்கு செல்வதே.. இல்லையென்றால் அவளுக்கு இப்போது அலுவலகம் செல்லும் மனநிலை எல்லாம் இல்லை..

அங்கே சென்றாலோ அனைவரும் சொல்லி வைத்தது  போல் ஷ்யாமை பற்றி இவளிடம் தான் விசாரித்தனர். ஓரளவு அனைவர்க்கும் இவர்களின் காதல் தெரியும். ஆக அனைவருமே இவளிடம் வந்து “என்னாச்சு?? ஷ்யாம் எங்கே…” என்று கேட்கையில், அவளால் பதில் சொல்ல முடியாமல் திணறித்தான் போனாள்.

இதைவிட அவனின் மேலதிகாரி..

“ஆபிசியலா இப்படி கேட்க கூடாது தான்.. ஷ்யாம் இஸ் எ சின்சியர் எம்ப்ளாயி.. பட் எந்தவித இன்டிமேசனும் இல்லாம டூ டேஸ் ஆபிஸ் வரல ஃபோன் ஆப்ல இருக்கு.. வாட் ஹாப்பன் டூ ஹிம்..??” என்று கேட்க,

பல்லவிக்கு என்னசொல்வது என்று தெரியவில்லை. நிஜமாய் இந்த இரண்டு நாட்களில் அவனுக்கு எப்படி சூழலோ ஆனால் இவளுக்கு நரகமாய் போனது..

‘கொஞ்சம் பெர்சனல் ப்ராப்ளம்..’ என்று சொல்லி அவரை ஓரளவு சமாதானம் செய்து அவளின் கேபினுக்கு வந்தால், ஷ்யாமின் அலுவலக நண்பன் தினேஷ் அவளைத் தேடி வந்தான்..

“என்னாச்சு பல்லவி.. எல்லாரும் ஒவ்வொரு விதமா பேசுறாங்க.. ஷ்யாம் எங்கே..” என்று வந்தவன் கேட்க,   அவளுக்கோ தர்மசங்கடமாய் போனது..

ஆனால் பதில் சொல்லவேண்டுமே.. “தெ.. தெரியலை தினேஷ்…” என்றவளை விசித்திரமாய் பார்த்தவன், பின் என்ன நினைத்தானோ “எனி ப்ராப்ளம்??” என்று விசாரிக்க,

இவனிடம் சொல்வோமா வேண்டாமா அடுத்த குழப்பத்திற்கு போனாள். ஆனால் ஆபத்திற்கு பாவமில்லை என்று எண்ணியவள், நடந்தவைகளை சுருக்கமாய் சொல்ல,

“ஓ…” என்றவன், “ஓகே.. நான் ஷ்யாம் வீட்டுக்குப் போய் பார்க்கவா??” என்றான்.

பல்லவியால் இப்போது எதையும் உறுதியாய் சொல்ல முடியவில்லை. போ என்றும் சொல்லிட முடியவில்லை போகவேண்டாம் என்றும சொல்லிட முடியவில்லை.. ஆனால் ஷ்யாமின் நிலை தெரிய அவளின் மனம் தவித்தது. அவன் வீட்டில் என்ன சூழல் என்று தெரியாமல் தினேஷை போ என்றும் சொல்ல முடியாமல் தவிக்க,

அவளின் முகம் பார்த்த தினேஷிற்கு அவளின் எண்ணங்கள் புரிந்ததுவோ என்னவோ,

“யூ டோன்ட் வொரி.. நான் டூ ஆர் த்ரீ டைம்ஸ் அவன் வீட்டுக்கு போயிருக்கேன்.. சோ கேசுவலா போனமாதிரி பார்த்துட்டு வர்றேன்….” என, பல்லவியின் தலை மெதுவாய் சரியென்று ஆடியது.

ஆனால் அவளின் மனமோ வேகமாய் ஆடியது. அடுத்தது என்னவென்று. யோசனையோடே கிளம்பி  வீட்டிற்கு வர, அவளுக்கோ வீட்டினுள்ளே நுழைய மனமேயில்லை.. அப்படியொரு வெறுமை அங்கே. வெறுமை அவள் மனதில் இருக்க பார்க்கும் இடத்திலும் அதுவே அவளுக்குத் தெரிந்ததுவோ என்னவோ.

வீட்டிற்கு வந்தவள் எதுவும் செய்ய பிடிக்காமல் அப்படியே அமர்ந்திருக்க, பல்லவியின் அலைபேசி சிணுங்க ஒருவித சலிப்பாய் எடுத்துப் பார்த்தாள். அழைப்பது அவளின் அப்பாதான்..

எடுத்துப் பேசினால் என்ன கேட்பார் என்று மிக நன்றாகவே அவளுக்குத் தெரியும். ஆனால் எடுக்காமலும் இருக்க முடியாதே.. என்ன பதில் சொல்வது  என்று யோசித்து அமர்ந்திருக்க, வந்த அழைப்பு நின்றுபோய் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியது..   

இம்முறை போனை எடுத்தவள், “ஹலோ அப்பா…” என, “என்னம்மா இப்போதான் வந்தியா??” என்றார் ரவிச்சந்திரன்.

“ஆமாப்பா…” என்றவளுக்கு அடுத்து என்ன கேட்பாரோ என்றிருக்க,

“அது பல்லவி.. நீ சொன்னதை பத்தி  நானும் அம்மாவும் பேசினோம்…” என்றவர் அடுத்து பேச்சை நிறுத்த, அவளுக்கோ இதயம் துடிப்பது நின்றது போல் தான் இருந்தது..

“அப்பா….” என்றவள் குரலே சுரமில்லாமல் இருக்க, “நானும் அம்மாவும் அங்க வரலாம்னு இருக்கோம்..” என,

“என்னப்பா…?? எதுக்குப்பா??” என்று பதறிவிட்டாள் பல்லவி..

“அட ஏன் இவ்வளோ டென்சன் ஆகுற. ஒண்ணுமில்ல நேர்ல வந்து அந்த பையன் அப்புறம் அவங்க வீட்ல எல்லாம் பேசலாம்னு தான்..  அவ பாட்டுக்கு வந்து லவ் பண்றேன்னு அது இதுன்னு சொல்லிட்டு போயிட்டா.. நம்பர் கேட்டாலும் கொடுக்க மாட்டேங்கிறான்னு  உன் அம்மா சொல்லிட்டே இருக்கா….” என்று ரவிச்சந்திரன் சொல்லவும்,

‘ஐயோ…’ என்று அவள் நெஞ்சில் கை வைத்துக்கொண்டாள்.. பதிலே எதுவும் சொல்லவில்லை..

“பல்லவி.. லைன்ல இருக்கியா??”

“ஆ.. அப்பா.. சொல்லுங்க..”

“என்னமா அங்க வரலாம் தான…” என்றவரின் பின்னே சோபனாவின் குரல், “அவளை என்ன கேட்டிட்டு இருக்கீங்க.. வரலாமா வேணாமான்னு.. நாளைக்கு நைட் ட்ரைன்.. கிளம்பிப் போறோம் அவ்வளோதான்..” என்று ஒலிக்க, பல்லவியால் எதுவுமே சொல்ல முடியவில்லை..

“ம்ம் சரி வாங்கப்பா…” என்று மட்டும் சொன்னவள் போனை வைத்துவிட்டு, “கடவுளே…” என்று தொய்ந்து போய் அமர, திரும்பவும் அவளின் அலைபேசி ஒலிக்க,

‘இப்போது யாரோ…’ என்று பார்த்தவளுக்கு புதிய எண்ணாக இருக்கவும்  யாராய் இருக்கும் என்ற யோசனையோடு எடுக்க, அழைத்தது தினேஷ்..

“பல்லவி நான் தினேஷ்…” என,

“ஹா.. தினேஷ்… என்னாச்சு…” என்றாள் வேகமாய். பேசும்போதே பல்லவியின் கண்கள் அலைபாய்ந்தது. மனம் ஒருநிலையில் இல்லை.

“யா இப்போதான் ஷ்யாம் வெளிய போனான் சொன்னாங்க.. லாட்ஸ் ஆப் கெஸ்ட்ஸ் தேர்.. சோ என்னாலையும் ரொம்ப நேரம் வெய்ட் பண்ண முடியலை.. சாரி..” என,

“நோ நோ.. நோ சாரி… தேங்க்ஸ்.. ரொம்ப தேங்க்ஸ்..” என்றவள், “ஷ்யாம் வேற எங்க போயிருப்பான்னு தெரியுமா.. ஐ மீன் அவனோட மத்த பிரண்ட்ஸ்…” என்று இழுக்க,

“ஒருசிலர் தெரியும்..பட் ரொம்ப டீடெயில்ஸ்  தெரியாதே..” என,

“ஓகே தினேஷ்.. தேங்க்ஸ் அகைன்… வெய்ட் பண்ணி பாப்போம்..” என்றவள் பேசி வைத்துவிட, பல்லவி மனதில் ஒரு சிறு நிம்மதி ஷ்யாம் வீட்டில் தான் இருந்திருக்கிறான் என்று..

ஆனால் அந்த நிம்மதி கொஞ்ச நேரம் கூட நிலைக்காது, அவளின் வீட்டு அழைப்பு மணி ஒலிக்க, யாரென்று சாதாரணமாய் தான் கதவு திறந்தாள். ஆனால் திறந்தவள் அப்படியே நின்றிட,

‘தேவ்…’ என்று இதழ்கள் முணுமுணுக்க, என்னவோ வெகுநாளைய பிரிவிற்கு பின் ஷ்யாம்தேவைப் பார்ப்பது போல் பார்த்தவள், அடுத்த நொடி சுதாரித்து, கோவமாய் உள்ளே சென்றுவிட்டாள்.

அவனுக்குத் தெரியும் பல்லவியின் ரியாக்சன் இப்படித்தான் இருக்குமென்று, கோவம்கொள்வாள், அழுவாள் என்று எல்லாமே தெரியும்.. ஆக ஒன்றும் சொல்லாமல் அவனும் உள்ளே செல்ல, அவளோ முகத்தை மூடி கீழே அமர்ந்து  அழுதுகொண்டு இருந்தாள்.

“பல்லவி… பல்லவி… ப்ளீஸ் டோன்ட் க்ரை…” என்று அவளை எழுப்ப முயன்றவன், அவள் எழாமல் போகவும், அவனும் அவளின் அருகே அமர,

“போடா… இப்போ மட்டும் ஏன் வந்த..??” என்று அவனை பிடித்து பல்லவி தள்ள,

“ஹேய்.. இங்க பாரு.. பர்ஸ்ட் என்ன பாரு பல்லவி…” என்று அவள் முகத்தை திருப்பியவன், “நான் ஒண்ணு சொல்வேன் மறுக்காம கேட்கணும்…” என,

‘என்ன சொல்ல போகிறாய் நீ??’ என்பதுபோல் கலக்கமாய் பார்க்க, “நோ இப்படி பார்க்காத.. இட்ஸ் கில்லிங் மீ..” என்றவன், “என்னை நம்புற தானே…” என்றான் அவளின் பார்வையில் தன் பார்வையை புதைத்து..

‘என்ன கேள்வி இது??’ என்று எண்ணியவளின் கண்களில் அவள் எண்ணம் தெரிந்ததுவோ என்னவோ,

ஷ்யாம்தேவ் “அப்போ கிளம்பி என்கூட வா…” என, அவளுக்கு சுத்தமாய் எதுவுமே புரியாத நிலை..

தன் முகத்தைப் பற்றியிருந்தவனின் கரங்களை விலக்கியவள், “என்ன சொல்ற தேவ்??” என,

“எஸ்.. கிளம்பி என்கூட வா..” என்றான் அழுத்தம் திருத்தமாய்..

“எங்க???”

“எங்க வீட்டுக்கு… இப்போ.. இப்படியே கிளம்பி வா.. என்கூட..” என,

“என்ன தேவ்?? விளையாடுறியா??” என்றவளின் இத்தனை நாள் பதற்றம் கோவமாகவும், அழுகையாகவும் மீண்டும் வெளிப்பட,

“ஆர் யூ திங்கிங் லைக் தட்..???” என்று அவளின் தோள்களை பிடித்து உலுக்கியவன்,

“விளையாடுற நேரமா இது??? ம்ம்ச்… இங்க பார்.. இப்போ நீ கிளம்பி என்கூட வா..” என்று பிடிவாதமாய் அழைக்க, அவளுக்கு எப்படி இருக்கும் என்பது அவள் மட்டுமே தான் உணர முடியும்..

பல்லவியின் முகத்தில் தெரிந்த கலவையான உணர்வுகள் ஷ்யாம்தேவை என்ன செய்ததுவோ, “பல்லவி.. ப்ளீஸ்.. கிவ் மீ எ சான்ஸ்.. நான் எல்லாத்தையும் சரி பண்றேன்..” என்றவன்,

ஒருவித இயலாமையில், “என் கூட வா பல்லவி.. இதுமட்டும் தான் இப்போ இருக்க வழி.. என்னால முடிஞ்ச அளவு நான் வீட்ல பேசி பார்த்துட்டேன்.. வந்திருக்கவங்களோ கிளம்புறது போலவே தெரியலை.. அவ்வளோ சண்டை.. பேச்சு எல்லாம். என்னவோ இந்த கல்யாணம் பிடிக்காம நான் லவ் பண்றேன்னு பொய் சொல்றது போல நினைக்கிறாங்க எல்லாம்.. நீ வந்தா மட்டும் தான் எல்லாமே உண்மைன்னு அவங்களுக்கு புரியும்.. நம்ம லவ் உண்மைன்னு புரியும்..” என,

பல்லவி அவனை மலைத்துப் போய் தான் பார்த்தாள்.. கிளம்பி சென்றிடலாம் ஆனால் அதன் பின்னே??  அதற்கு பிறகு என்ன நடக்கும் என்பது யாருக்குமே தெரியாதே…

“தேவ்.. தேவ்.. ப்ளீஸ்.. கூல் டவுன்.. இங்க பாரு.. நான் உன்னை நம்பமாட்டேன்னு நீ எப்படி நினைக்கலாம்.. அப்கோர்ஸ்.. இது கொஞ்சம் டெலிகேட்டான விஷயம் தான்.. எல்லாமே உடனே நடக்காது.. நான் உன்னை எதுவும் சொல்ல மாட்டேன்.. ஆனா இப்.. இப்படி அவரசமா எதுவும் செஞ்சு.. நான் சொல்றது உனக்குப் புரியுதா தேவ்…” என்று பல்லவி அவனுக்கு நிதர்சனம் புரிய வைக்க முயல,

ஷ்யாம் தேவோ வந்த எரிச்சலில், தன்னை பற்றியிருந்த அவளின் கரங்களை பிடித்து பிரித்தவன்,

“எஸ்…. நான் தான் முட்டாள் இல்ல.. அவங்களும் புரிஞ்சுக்க மாட்டாங்க.. நீயும் புரிஞ்சுக்கமாட்ட.. நான் தான் சொல்றேன்ல.. நான் பார்த்துக்கிறேன் பல்லவின்னு. என்கூட வர உனக்கு என்ன பயம்??” என்று எகிற, அவளுக்கோ உள்ளே ஒருமுறை பயம் மின்னலாய் வெட்டி மறைந்தது..

“நான் உன்னை புரிஞ்சுக்கலையா?? ஏன்டா இப்படி பேசுற?? இப்போ கிளம்பி வர்றது இல்லை பிரச்னை.. நான் யோசிக்கிறது அதுக்கப்புறம் என்னாகும்னு..” என்றவள்,

“அப்பா அம்மா இந்த ரெண்டுநாளா உன்கூட பேசணும்னு அவ்வளோ ஃபோன் கால்ஸ்.. நீயோ என்ன பண்ற எங்க இருக்கன்னே தெரியலை.. இதுல நாளைக்கழிச்சு இங்க வர்றாங்களாம்.. இப்போ நீ வந்து கிளம்புன்னு சொல்ற.. நான் என்னதான் செய்யட்டும்..” என்றவளுக்கும் கோபமாய் தான் இருந்தது..

“ஓ….” என்று சிறிது நிதானித்தவன், “சரி உன் அப்பாக்கு ஃபோன் பண்ணு.. நான் பேசுறேன்…” என்று நிதானமாய் சொல்ல,

“என்ன?? என்ன சொல்ற நீ?? பேசினா அவங்க அடுத்து உன் வீட்ல பேசுறேன் சொல்வாங்க?? இங்க இருக்க பிரச்னை எல்லாம் தெரிஞ்சா அவ்வளோதான்..” என்று பல்லவி பதற,

“பல்லவி…” என்று அவளின் கரங்களைப் பற்றியவன், ஒருமுறை இதமாய் பிடித்து, “நீ ஃபோன் மட்டும் போடு.. நான் பேசிக்கிறேன்..”என,

“இல்ல தேவ்.. இங்க எல்லாம் முதல்ல சரியாகட்டும்..” என்று மறுத்தாள் பல்லவி.

“சரியாகனும்னா முதல்ல நீ கிளம்பி என்கூட வரணும்.. அது அடுத்து இருக்கட்டும்.. உன் அப்பா அம்மா என்கிட்ட பேசணும் சொல்லி டூ டேஸ் ஆச்சுல.. இனியும் பேசலைன்னா மரியாதையா இருக்காது.. சோ ஃபோன் போட்டுக்குடு…” என்றவன்,

“இல்ல வேணாம்.. நம்பர் சொல்லு.. நானே பேசுறது தான் முறை..” என்றவன் இரண்டு நாட்கள் கழித்து அன்றுதான் தான் அலைபேசியை ஆன் செய்தான்…

பல்லவியோ திக் திக் என்ற இதயத்துடிப்போடு அவளின் அப்பாவின் எண்ணை சொல்ல, “இரு பேசிட்டு வர்றேன்…” என்றவன் அங்கிருந்த அறைக்குள் நுழைந்துகொண்டான்..

‘ரொம்ப பண்றானே…’ என்று பல்லவி அவன் பின்னேயே போக, ஷ்யாமோ வராதே என்று சைகை செய்தவன், என்ன பேசினானோ தெரியாது.. பல்லவி அறைக்கு வெளியே தான் நின்றிருந்தாள்.. கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள்.. பேசி முடித்து வருகையில் ஷ்யாம் சிரித்தபடி தான் வந்தான்..

“என்.. என்ன தேவ்.. என்ன சொன்னாங்க.. நீ என்ன சொன்ன?? ஆமா ஏன் சிரிக்கிற…” என்று பல்லவி அடுக்கடுக்காய் கேள்விகளை கேட்க,

“அட ஒவ்வொரு கேள்வியா கேளும்மா..” என்றவன் ரிலாக்ஸ்டாக ஒரு இருக்கையில் அமர்ந்தவன் ஹாயா காலை ஆட்டி அமர்ந்திருக்க, வந்ததில் இருந்து அவன் படுத்திய பாடு என்ன இப்போது இளித்துக்கொண்டு அமர்ந்திருப்பது என்ன என்று தோன்றவும்,

“டேய் இதெல்லாம் உனக்கே ஓவரா இல்லையா.. ஏன் இப்படி படுத்துற..??”  என்று பல்லவி பொறிய,

“யார்.. நானா?? ஹா ஹா…” என்று சிரித்தவன், “சரி கிளம்பு போவோம்…” என்றான் திரும்பவும்..

“என்னது?? என்ன நினைச்சிட்டு இருக்க?? இரண்டு நாளா ஆளே காணோம்.. ஆபிஸ்ல எல்லாம் என்னை கேட்கிறாங்க.. இப்போ வந்து கிளம்பு சொல்ற.. அப்பாக்கிட்ட என்ன பேசின நீ??” என்று மீண்டும் கேள்விகளை பல்லவி தொடுக்க,

“ஷ்ஷ்ஷ்….” என்று சலிப்பாய் ஒரு சத்தம் எழுப்பியவன்,

“ஆபிஸ்ல நான் பேசிக்கிறேன் பல்லவி… ஜஸ்ட் இப்போ நீ கிளம்பி என்கூட வா.. நைட் நானே கொண்டுவந்து உன்னை ட்ராப் பண்றேன்.. உன்னை ஜஸ்ட் இன்ட்ரோ கொடுக்கத் தான் கூப்பிடுறேன்…” என,

“ஓ… இன்ட்ரோ கொடுக்கவா….??!!!” என்று இழுத்தவள், மற்றொரு இருக்கையில் அமர,

“ஏன்?? நீ என்ன நினைச்ச??” என்றான் அவளைப் பார்த்து..

“இல்.. இல்ல.. நான் எதுவும் நினைக்கல..”

“இல்ல.. நீ என்னவோ நினைச்சிருக்க?? சும்மா சொல்லு பல்லவி…” என்றவன் அவள் என்ன நினைத்திருப்பாள் என்று யூகித்தவனாய் சிரிக்க,

“சிரிக்காதடா…” என்று அவனை முறைத்தவள், “அப்பா என்ன சொன்னார்?? நீ என்ன சொன்ன?? இங்க நடந்ததை எல்லாம் சொல்லிட்டியா??” என,

“கடவுளே….” என்று நொந்தவன் “வீட்ல கொஞ்சம் ப்ராப்ளம்னு மட்டும் சொன்னேன் போதுமா..” என,

“ஓ.. அதுக்கு அப்பா என்ன சொன்னார்..??” என்று அடுத்து பல்லவி கேட்க, இம்முறை அவளை முறைத்தவன், “அதை அவர்கிட்டவே கேளு.. இப்போ கிளம்புறியா ப்ளீஸ்..” என்று பல்லை கடிக்க,

“ஹ்ம்ம் ஓகே முதல்ல ஆபிஸ்ல பேசு..” என,

“நீ போ ரெடியாகு.. நான் பேசிக்கிறேன்…” என்றதும் பல்லவி தயாராக செல்ல, ஷ்யாம் அவனின் மேலதிகாரிக்கு அழைத்தான்.

பல்லவியிடம் தன்மையாய் பேசியவர் ஷ்யாமிடம் எகிற, “சார் யாரும் சும்மா எல்லாம் இப்படி லீவ் எடுக்கமாட்டாங்க..” என்று பதிலுக்கு இவனும் கடிய,

“இப்படி பேசினா நான் மெமோதான் கொடுக்கணும்…” என்று அவரும் சொல்ல,

“மெமோ என்ன டிஸ்மிஸ் கூட பண்ணிக்கோங்க… எனக்கு என் லைப் முக்கியம்.. வேலை எல்லாம் அடுத்து தான்.. இதைவிட பெரிய வேலை தேடிக்கிற திறமை எனக்கிருக்கு..” என்றவன் பேச்சை கேட்டு அவருக்கே கூட கொஞ்சம் திடுக்கிடல் தான்..

ஷ்யாம்தேவ் வேலையில் எத்தனை சின்சியர் என்று அவருக்கு மிக நன்றாகத் தெரியும்.. சொல்லபோனால் அவரைவிட அவனுக்கு பயந்து வேலையை முடிப்பவர்கள் தான் அவர்கள் துறையில்.. அப்படியிருக்க அவரின் பொறுப்பை முன்னிட்டு தான் நடக்க நினைத்தாரே தவிர ஷ்யாமை வேலையில் இருந்து தூக்கும் எண்ணமெல்லாம் இல்லை..

“ஷ்யாம் ஷ்யாம்.. ஏன் இவ்வளோ டென்சன்.. லீவ் தானே எடுத்துக்கோ யார் வேணாம் சொன்னா.. ஆனா ப்ராபரா இன்பார்ம் பண்ணிட்டு லீவ் எடு அதைதான் சொல்றேன்..” என,

‘ஆ.. அது…’ என்று சொல்லிக்கொண்டவன், “நாளைக்கு ஆபிஸ் வர்றேன் பேசிக்கலாம்…” என்று பேசிமுடிக்கவும், பல்லவி கிளம்பி வரவும் சரியாய் இருந்தது..

“போலாமா…” என்று ஷ்யாம் எழ, அவளுக்கோ உள்ளே பயமாய் இருந்தது..

சாதரணமாய் ஷ்யாம் அழைத்திருந்தால் சந்தோசமாய் கிளம்பி சென்றிருப்பாள். ஆனால் இப்போது இருக்கும் நிலையே வேறல்லவா.. அங்கே என்ன நடக்குமோ என்று அவளுக்கு பதற்றமாய் இருக்க, அவளின் கண்கள் அதை பிரதிபலிக்க, கிளம்பலாம் என்று எழுந்து நின்றவன் பல்லவியின் அருகே வந்து அவளை இறுக அணைத்திருந்தான்.

“நான் இருக்கேன்.. பார்த்துக்கிறேன் பல்லவி.. யூ டோன்ட் வொரி.. ஒன் திங்.. அங்க என்ன நடந்தாலும் நீ கவலை மட்டும் படக்கூடாது அவ்வளோதான். மத்தது எல்லாம் நான் பார்த்துக்கிறேன்…”  என்றவன் அவள் காதோரம் கூற,

அவன் சொன்னது கேட்டு, பல்லவியும் அவனை அணைத்து சம்மதமாய் அவனின் முதுகில் தட்டி “சரி தேவ்…” என்றாள்..                   

Advertisement