Advertisement

காதல் – 3

இருவருக்கும் சுத்தமாய் உறக்கமில்லை… எப்படி உறங்க முடியும்???. மூன்று வருடக்காதல்.. ஒரேநாளில் இப்படித் தலைகீழாய் மாறும் என்று பல்லவியும் சரி, ஷ்யாம்தேவும் சரி எதிர்பார்க்கவில்லை.. இதனை மனதில் ஏற்றுக்கொள்ளவே சில நாள் பிடிக்கும் என்று இருக்க,

ஷ்யாம்தேவோ பிடிவாதமாய் இங்கே வந்து அமர்ந்திருந்தான்.. பல்லவிக்கு அவனை நினைக்கையில் கஷ்டமாய் இருந்தது.. அவனும் தான் என்ன செய்வான்?? அனால் இங்கே வந்து இப்படி அவளிடம் பிடிவாதம் செய்வதினால் என்னாகப்போகிறது?? ஒன்றுமில்லை..

அவளுமே கூட தன் வீட்டில் ஓரளவு விஷயத்தை சொல்லிவிட்டே தான் வந்திருந்தாள்.. பல்லவியின் அம்மாவிற்கு கேட்டதும் கொஞ்சம் அதிர்ச்சிதான் இருந்தாலும் பெரிதாய் மறுப்பாகவும் ஒன்றும் சொல்லவில்லை. அவளின் அப்பாவோ பதிலே சொல்லவில்லை.

சரி யோசிக்கட்டும் என்று வந்துவிட்டாள். வந்தால் இங்கே இப்படியொரு அதிர்ச்சி காத்திருக்க, மனதளவில் ஆடித்தான் போனாள்..

அழுகை முட்டிக்கொண்டு வந்தது பல்லவிக்கு.. ஷ்யாமிடம் கோவமாக பேசினாலும் அவளுக்கு மனதில் மிதமிஞ்சிய வருத்தமே.. தான் காதலிக்கும் ஒருவனுக்கு வேறொரு பெண்ணோடு நிச்சயம் நடந்தது என்பதனை எப்பெண்ணுமே மகிழ்வாய் ஏற்றுகொள்ள முடியாதே..

வெகு நேரம் அழுதுகொண்டே படுத்திருந்தாள். உறக்கம் வருவதாய் இல்லை.. வெளிய ஹாலில் தான் ஷ்யாம்தேவ் இருந்தான்.. என்ன செய்கிறான் தெரியாது.. சத்தமேயில்லை.. வாசல் கதவு அப்படியேதான் திறந்துக்  கிடந்தது.. அறையினுள்ளே படுத்திருந்தவள், மெல்ல வெளிவந்து பார்க்க, அவனும் உறங்காமல் இருப்பது தெரிந்தது..

அவனிடம் ஒன்றும் பேசாமல் வாசல் கேட்டை மட்டும் இழுத்துவிட்டு உள்ளே வர, அவனோ கிட்சனில் எதையோ உருட்டுவது தெரிந்தது..

‘இவன் திண்ணக்கம் இருக்கே…’ என்று நினைத்தவள், அங்கே சென்று பார்க்க, அவனோ அடுக்கி வைத்திருந்த டப்பாக்களை எல்லாம் திறந்து திறந்து பார்த்துகொண்டு இருந்தான்.. பின்னே வந்து அவள் நிற்பது தெரியவும்,

“சாப்பிட ஒண்ணுமேயில்லையா.. ரொம்ப பசி…” என,  ‘எப்படிடா உன்னால இப்படியெல்லாம் இருக்க முடியுது…’ என்று பார்த்தாள்..

“என்ன பாக்குற.. நேத்து மதியம் சாப்பிட்டது..இப்படி ஒண்ணுமேயில்லாம ஒரு கிட்சன் வச்சிருக்க..??” என்றவனைப் பார்த்தவள்,

“நான் ஊருக்கு போயிட்டு இப்போதானே வந்தேன்.. இனிமேதான் திங்க்ஸ் வாங்கணும்…” என்றவள் பிரிட்ஜை திறந்து இரண்டு முட்டைகளை எடுத்தாள்..

“ஆம்லட் போடப்போறியா…” என்றவன் சமையலறை மேடையிலேயே ஏறி அமர, அவனைப் பார்த்தவளுக்கு அவளையும் அறியாது இதழில் ஒரு புன்முறுவல்.

இதுபோலான காட்சிகளை எல்லாம் எத்தனை முறை எத்தனை விதத்தில் இத்தனை ஆண்டுகளில் கற்பனை செய்துபார்த்திருப்பாள்.. இதுமட்டும் தானா?? வார்த்தைகளில் சொல்ல முடியாதவை எத்தனையோ..

அவள் செய்வதைப் பார்த்தவன் “உனக்கும் போட்டுக்கோ.. நைட் நீயும் சாப்பிடல தான…” என,

“எனக்கு பசியில்ல..” என்றவள் வேலையில் கவனமாய் இருக்க,

“ம்ம்ச் நீயும் சாப்பிடு இல்லை எனக்கு வேணாம்..” என்றான் பிடிவாதமாய்..

“எல்லாத்திலையும் பிடிவாதம் பிடிக்காத தேவ்.. எரிச்சலா இருக்கு.. பசிக்குது சொன்னல சாப்பிடு..” என்று ஒரு தட்டில் ஆம்லட் வைத்து அவனிடம் நீட்ட, அவனோ அதை கையில் வாங்காமல் அப்படியே அமர்ந்திருந்தான்.

“ரொம்ப பண்ணாத.. ஒழுங்கா சாப்பிடு..”

“நீயும் சப்பிடுறதுன்னா நான் சாப்பிடுறேன்..”

“இதென்ன தேவ்…” என்று சலித்தவள், “நீ சாப்பிட்டா சாப்பிடு இல்லையா போ..” என்று கையில் வைத்திருந்த தட்டை வைத்துவிட்டு சென்றுவிட்டாள்..

அவளால் கடுமையாக நடந்துகொள்ளவும் முடியவில்லை.. ஆனால் அவன் செய்வதை எல்லாம் பார்க்கையில் சாதரணமாகவும் இருக்க முடியவில்லை.. இனி பொழுது விடிந்ததும் என்னென்ன நடக்குமோ என்று அதுவேறு ஒருப்பக்கம் பயமாய் இருந்தது..

கிட்சனில் இருந்து வந்தவன் அவளருகே அமர, பல்லவியோ அவன்பக்கம்  திரும்பவேயில்லை. கொஞ்சம் மட்டுப்பட்ட அழுகை மீண்டும் பீறிடும் போல் இருந்தது. இதழ்களை அழுந்த கடித்து அமர்ந்திருந்தாள்.

“உனக்கு வேணாம்னா இரு.. பட் எனக்கு என் பல்லவி போட்டுக்கொடுத்த ஆம்லட் வேஸ்ட் பண்ண முடியாது..” என்றவன், உண்ணத் தொடங்க,

‘டேய்….’ என்று அவனை அப்படியே கழுத்தை நெரிக்க வேண்டும் போல்தான் இருந்தது..

தட்டில் இருந்ததை காலி செய்து, ஒரு பாட்டில் தண்ணீரையும் குடித்து முடித்தவன்,  “யப்பா.. இப்போ கொஞ்சம் பரவாயில்லை…” என,

“உன் போன் எங்க தேவ்??” என்றாள்..

“எதுக்கு???” என்று கேட்டவனுக்கு அவள் ஏன் கேட்கிறாள் என்பது புரியாமல் இல்லை.

“எடு.. எடுத்து முதல்ல உன் வீட்டுக்கு பேசு..”  

“அவசியமில்லை…”

“ம்ம்ச் தேவ்.. நீ அப்படியே கிளம்பி வந்திட்ட. எல்லாரும் என்ன நினைக்கமாட்டாங்க?? எடுத்து ஆன் பண்ணி பேசு..” என்றாள் கொஞ்சம் இறைஞ்சலாய்.

“எனக்கு பேசணும்னு எந்த அவசியமும் இல்லை பல்லவி.. என்னை புரிஞ்சுக்காதவங்கக்கிட்ட பேசி என்ன செய்ய??”

“இது உடனே சரியாகுற விசயமில்லை தேவ்.. அது ஏன் உனக்குப் புரியலை…??” என்றவள், அவனை வீட்டிற்கு பேசு பேசு என்று சொல்ல,

அவனோ அசட்டையாய் இருக்க, “உன் போன் எங்க?? ஆப் பண்ணி வச்சிருக்கியா?? முதல்ல ஆன் பண்ணு…” என்று பல்லவியும் அதட்ட,

“எனக்கு பிடிக்கல.. உனக்கு வேணும்னா நீ ஆன் பண்ணி பேசிக்கோ…” என்று கைகளை விரித்து எழுந்து நிற்க,

“என்ன?” என்று அவனைப் பார்த்தவளிடம் “கம்மான் நீயே எடுத்துக்கோ..” என்று நின்றிந்தான்.

என்ன சொல்கிறான் இவன் என்று முறைத்தவளுக்கு, போன் அவனின் ஜீன்ஸ்  பக்கெட்டில் இருப்பது தெரிய, “இடியட்…” என்று பல்லைக் கடித்தவள்,

“ரொம்ப படுத்துற..” என்றவளுக்கு மீண்டும் கண்களில் நீர் படலம்..      

“பல்லவி..” என்று அவளருகே அமர்ந்தவன் “நான் ஒத்துக்கிறேன் என் தப்பும் இருக்கு.. அப்பா பேசினதை நான் கொஞ்சம் பொறுமையா தெளிவா கேட்டிருக்கணும்.. அது என் தப்புதான்.. ஆனா என்ன நடக்கப்போகுதுன்னு தெரியவும் அடுத்த செக்கன்ட் நான் சொன்னேன்தானே.. அப்போக்கூட புரிஞ்சுக்கலைன்னா எப்படி..

அம்மா வந்து நீ மோதிரம் போடு அப்புறம் பேசிக்கலாம்னு சொல்றாங்க.. என்ன அர்த்தம் இது..?? எது நடந்தாலும் சரி நான் ஒரு முடிவோட தான் இருக்கேன்.. இதுக்கு முன்ன என்ன நடந்திருந்தாலும் சரி பல்லவி ஆனா கல்யாணம் நம்ம ரெண்டுபேருக்குத் தான்..” என்றான் உறுதியாய்..

இத்தனை காதலாய் தன்மீது இருப்பவனிடம் பல்லவியால் எத்தனை நேரத்திற்கு தான் கோபம்கொள்ள முடியும்.. அவன் சொன்னதை கேட்டு தலையை மட்டும் திருப்பி அவனைப் பார்த்தவள், என்ன நினைத்தாளோ அவன் தோள்களில் சாய்ந்துகொள்ள,

“ஹப்பா… உன்னை சமாதானம் செய்ய இத்தனை நேரம்…” என்றபடி சாய்ந்தவளின் தோள்களை சுற்றி தன் கரத்தை ஷ்யாம் போட,

“டோன்ட் டச் மீ..” என்று வேகமாய் அவன் கரங்களை விலக்கியவள், தன் சாய்மானத்தை மட்டும் விலக்கவில்லை..

“இதென்ன??” என்று ஷ்யாம் கேட்க,

“இந்த கை தானே அந்த பொண்ணுக்கு என்கேஜ்மென்ட் ரிங் போட்டது.???” என்றாள் கோவமாய்..

அவளை ஒருமுறை பார்த்தவன் “அந்த பொண்ணு கையை பிடிச்சு, அவ கண்ணோட கண் பார்த்து, மெதுவா ரிங் போட்டு அப்படியே கிஸ் பண்ணேன்.. போ டி…” என்று அவளைத் தள்ள,

“இந்த பேச்சுதான்டா உன்கிட்ட..” என்று எழுந்து நின்றவள்,

“இதுக்கு ஒரு வழிப் பண்ணிட்டு நீ வா..” என,

“பண்ணமாட்டேன்னு நினைக்கிறியா??” என்றான் வேகமாய்..

“நான் அப்படி சொல்லலை தேவ்…” என்று பல்லவி சொல்லும்போதே, “பின்ன எப்படி…” என்று எழுந்தவன்,

“அந்த என்கேஜ்மென்ட் ப்ரேக் பண்ணிட்டு வந்து உன்னைப் பாக்குறேன். பை…” என்று சொல்லி கிளம்பிவிட்டான்..

“தேவ்.. தேவ்.. ப்ளீஸ் நில்லேன்…” என்று அவன் பின்னேயே பல்லவி வர, ஒருநொடி நின்று திரும்பியவன்,

“சொல்லிட்டல்ல, ஒரு வழிப் பண்ணிட்டு வான்னு…. எல்லாத்தையும் முடிச்சிட்டே வர்றேன்…” என்றவன் கிளம்பிவிட்டான்..

பின்னேயே சென்று அவனை தடுக்க மனம் நினைத்தாலும், அந்த நேரமும் அதற்கு கைகொடுக்க முடியவில்லை.. நள்ளிரவு நேரத்தில், இப்படி அவனின் பின்னால் நில் நில் என்று சொல்லிக்கொண்டு சென்றால் அக்கப்பக்கத்தினர் என்ன நினைப்பர். வெகு நேரம் வாசலிலேயே சாய்ந்து நின்றிருந்தாள்..

ஆனால் எத்தனை நேரம் அப்படி நிற்க முடியும்??

ஊருக்கு வந்துவிட்டேன் என்றுகூட பல்லவி அவள் வீட்டில் சொல்லவில்லை.. அவள் வீடு நுழையும்போதே ஷ்யாமும் வந்துவிட அதன்பின் அவளுக்கு அவனோடு போராடவே நேரம் சரியாய் இருந்தது.. நேரத்தைப் பார்த்தாள், பன்னிரண்டு மணியைக் கடந்திருந்தது.. இதற்குமேல் அழைத்தால் அதுவும் சரியிருக்காது என்று நினைத்தவள், கேட்டை பூட்டி கதவை தாளிட்டு உள்ளே வர, வீட்டின் வெற்று அமைதியோ அவள் மனதை இன்னும் அழுத்தியது..

ஷ்யாம் அலைபேசியை எடுக்கமாட்டான் என்று தெரியும் ஒருமுறை அழைத்துப் பார்த்தாள் “சுவிட்ச் ஆப்..” என்றுவர,

“ம்ம்ச் அப்படி என்னதான் பிடிவாதமோ…” என்றவளுக்கு அவனது நிலையும் புரியாமல் இல்லை.. பாவம் அவனும்தான் என்ன செய்வான்??

அமர்ந்த நிலையிலேயே  எப்படி உறங்கினாலோ மறுநாள் காலையில் வழக்கமாய் விழிப்பு வரும் நேரத்திற்கு உறக்கம் களைந்திட, அவளால் வேகமாய் கூட எழ முடியவில்லை… அவளின் அலைபேசி வேறு எங்கோ நான் இருக்கிறேன் என்று காட்டி விடாமல் ஒலித்துகொண்டே இருக்க,

‘தேவ் கால் பண்றானோ…’ என்றெண்ணியவள் வேகமாய் போனை எடுக்கச் செல்ல, அழைத்தது அவளின் அம்மா..

மனதினுள் ஒரு சிறு ஏமாற்றம் பரவ “ஹலோ ம்மா..” என,

“என்ன ஹலோ ம்மா.. ஊருக்கு போனவ ஒரு போன் பண்ண என்னடி வந்தது…” என்று கடிந்தார், சோபனா..

“ம்மா..” என்று வேகமாய் காரணம் சொல்லவந்தவள், என்னசொல்வது என்று தெரியாமல் முழிக்க,

“என்ன?? நீ பாட்டுக்கு எதையோ சொல்லிட்டுப் போயிட்ட..” என்றவர்,

“அந்த பையன் போன் நம்பர் கொடு.. அப்பா பேசணும் சொல்றார்…” என,  மற்ற நேரமென்றால் இது பல்லவிக்கு எத்தனை சந்தோசங்களை வாரி வழங்கியிருக்கும் ஆனால் அந்த சந்தோசம் துளி அளவு கூட அனுப்பவிக்க முடியாது, அவள் இதயத்தில் வெடி வெடிக்கும் ஓசை தான் கேட்டது..

“ஹலோ பல்லவி லைன்ல இருக்கியா??”

“ஆ.. அம்மா சொல்லு…”

“என்னடி.. அந்த பையன் நம்பர் கொடு..??”

“அது.. அது வந்தும்மா…” என்று பல்லவி இழுக்க,

“பல்லவி என்ன பிரச்னை?? உன் குரலே சரியில்லையே.. உடம்பு எதுவும் முடியலையா???” என்று ஒரு அம்மாவாய்  சோபனா கேட்க,

அதை அப்படியே பிடித்துகொண்டவள் “ஆமாம்மா.. ஒரே தலைவலி.. வந்து டேப்லட் போட்டு தூங்கிட்டேன்..” என,

“ஹ்ம்ம் இப்போ எப்படி இருக்கு??” என்றவருக்கு அவளையும் அறியாது “யா நல்லாருக்கு..” என்று வேகமாய் பதிலை சொல்லிவிட்டாள்.

“பின்ன ஏன் எப்படியோ பேசுற??” என்று சோபனா மீண்டும் கேள்வி எழுப்ப,

“ம்ம்ச் ம்மா.. இப்போதான் எழுந்தேன்.. ஆபிஸ் கிளம்பனும்.. திங்க்ஸ் கொஞ்சம் வாங்கணும்…” என்று பல்லவி பேச்சை மாற்ற,

“அதெல்லாம் இருக்கட்டும் அந்த பையன் பேரு என்ன சொன்ன?? ஷ்யாம் தானே அவன் நம்பர் கொடு.. பேசனும்..” என்றார் பிடிவாதமாய்..

‘என்ன சொல்றது.. என்ன சொல்றது…’ என்று யோசித்தவள் “ம்மா.. ஆபிஸ்க்கு.. போய் நானே கால் பண்ணித் தர்றேன்..”  என,

“ஏன் நம்பர் கொடுத்தா நீ குறைச்சு போயிடுவியா??” என்றவருக்கு “ஆமா அப்படிதான்.. நீ போன் வைம்மா லேட் ஆச்சு…. நான் ஆபிஸ் போய் பேசுறேன்..” என்றவள் வேகமாய் வைத்தும் விட்டாள்..

பேசி முடித்தபிறகே தான் அவளுக்கு மூச்சு விடக்கூட முடியும் போலிருந்தது… ஏற்கனவே அவளுள் ஒரு டென்சன் இப்போது அது இன்னமும் கூடிக்கொள்ள, திரும்ப ஷ்யாமிற்கு அழைத்துப் பார்த்தாள்..

அதே ‘ஸ்விட்ச் ஆப்’ குரல் தான் ஒலித்தது..

“கடவுளே.. ஏன்தான் இப்படி பண்றானோ…” என்றவள், வேறுவழியே இல்லாது அலுவலகம் கிளம்பிச் செல்ல, ஒருவேளை ஷ்யாம் அங்கிருப்பனோ என்றும் அவள் மனதில் ஒருசின்ன நிம்மதி இருக்க, அலுவலகம் சென்றபின்னே அதுவும் இல்லாது போனது..

ஆபிஸ் சென்றதும் நேராய் ஷ்யாமின் செக்சன் சென்று அவன் இருக்கிறானா என்று பார்க்க, அவனில்லை என்றதும், ஒருவேளை வீட்டிற்கு தான் போயிருப்பான் என்று நினைத்து,

“ஷ்யாம் வந்ததும் எனக்கு கால் பண்ண சொல்லுங்க..” என்று அங்கிருந்தவரிடம் சொல்ல, அவரோ சரியென்றும் சொல்லாது இல்லையென்றும் சொல்லாது பல்லவியைப் பார்த்தவர்,

“ஆபிஸ்ல கூட போன் பேச என்ன இருக்கு..” என,

“நீங்க சொல்லவே வேண்டாம்..” என்றவள் நேராய் அவளின் கேபினுக்கு வந்துவிட்டாள்.

டென்சனாய் இருந்தது.. எதை சமாளிக்க. யாரை சமாளிக்க என்று எதுவும் தெரியவில்லை.. ஷ்யாம் அவன் வீட்டிற்கு போனானா இல்லை எங்கே போனான் என்றும் தெரியவில்லை.. போனும் ஆஃபில் இருக்க, போதாத குறைக்கு அவளின் அம்மா வேறு அவனின் நம்பர் கேட்க அய்யோடா என்று தலைதான் சுத்தியது..

அப்படியே கிளம்பி வந்துவிட்டாள்.. எதுவும் உண்ணவில்லை.. உண்ணும் எண்ணமில்லை.. ஷ்யாமை கண்ணில் காணும் வரைக்கும் அவளால் எதுவும் முடியாது என்பதுபோல் இருக்க, வேலையும் எதுவும் ஓடவில்லை..

ஷ்யாம் வருவானா?? அழைப்பானா ?? என்று நொடிக்கு நொடி காத்திருந்தது தான் மிச்சம் அன்றைய நாள் முழுவதுமே அவன் அலுவலகம் வரவும் இல்லை.. பல்லவிக்கு அழைக்கவும் இல்லை..

டென்சன் கூடிக்கொண்டே தான் போனது..

என்னானதோ ஏதானதோ என்று.. பல்லவியின் வேலை முடியும் நேரம் பார்த்து சோபனா திரும்பவும் அழைத்தார்..

“என்ன பல்லவி காலைல இருந்து உன் போன் வரும் வரும்னு நானும் அப்பாவும் வெய்ட் பண்றோம்.. நீ பண்ணவேயில்லை..” என்று சொல்ல,

அவளுக்கு நிஜமாய் தெரியவில்லை என்ன சொல்லவென்று.. இதுதான் பிரச்னை என்று சொல்ல முடியுமா?? சொன்னால் அவ்வளவு தான்.. காதலாவது கத்திரிக்காயாவது.. கிளம்பி வா என்று விடுவர்..

இருபக்கமும் சமாளிக்கும் நிலையில் அவளிருக்க, என்ன செய்வது?? வேறு என்னதான் செய்ய முடியும்.. பொய் தான் அந்த நேரத்தில் சொல்ல முடியும்..

“அதும்மா.. ஷ்யாம்கு இன்ஸ்பெக்சன் போட்டாங்க சோ அவன் ஆபிஸ்ல இல்லை.. சப் ஆபிஸ் போயிருக்கான் போலே.. என் போனும் அட்டன்ட் பண்ணல..” என,

“ஓ.. அதுனால என்ன டி.. நம்பர் கொடுத்தா நாங்களே இன்னார்னு சொல்லி பேசிக்கிறோம்..” என்றார் திரும்பவும்..

“ம்ம்ச் ம்மா.. புரியாம பேசாத..” என்றவள் “ப்ளீஸ் புரிஞ்சுக்கோ.. அவன் ஆடிட்டிங்  இன்ஸ்பெக்ஷன் போயிருக்கான்.. போன் எல்லாம் எடுக்கமாட்டான்.. நானே அவன் வரவும் பேச சொல்றேன்..” என,

“என்னவோ பண்ணு போ.. நீயாதானே சொன்ன லவ் பண்றேன்னு.. இப்போ பேசுறதுக்கு இப்படி சொல்லிட்டு இருக்க.. உன் தலையில எதையும் இழுத்துப் போட்டுக்காம இருந்தா சரி..” என்றவர் இன்னும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு வைக்க, அப்படியே தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டாள் பல்லவி..               

              

             

 

Advertisement