Advertisement

காதல் – 2

ஷ்யாமிற்கு இவ்வளவு பிடிவாதம் இருக்குமென்பது பல்லவிக்கு இப்போது தான் தெரிய வந்தது.. இத்தனை நாளில் ஏதாவது சண்டை என்றால் உடனே விட்டுக்கொடுத்துப் போவது அவனாகத் தான் இருப்பான்.. அவனது தோரனைக்கும், பேசும் விதத்திற்கும் மொத்தமாய் மாறுபட்டு இருக்கும் அவனது செயல்கள். 

“தேவ் சண்டை போடலாம் பார்த்தா.. இப்படி விட்டுக்குடுத்துட்ட..” என்று பல்லவியே பல முறை கேட்டிருக்கிறாள்..

“நீ விட்டுக்கொடுக்கணும்னு நினைக்கிறதுக்கு பதில் நானே அப்படி இருந்திடறது பெட்டர்…” என்று ஷ்யாம் தோள்களை தூக்கிச் சொல்கையில், அவளுக்கு அவனை அணைத்து முத்தமிட வேண்டும் என்று தான் தோன்றும்.. சில பல நேரம் அப்படி செய்தும் இருக்கிறாள்…

“வாவ்…” என்று அவன் இன்னும் இறுக்கமாய் பல்லவியை அணைப்பான்.

இப்போதும் அவனது அணைப்பில் தான் இருந்தாள். ஆனால் அதில் பிடிவாதம் மட்டுமே தெரிந்தது. அவனோடு ஓரளவிற்கு மேலாய் சண்டையும் இட முடியவில்லை.. அவனிடம் கடினாமாக நடந்துகொள்ளவும் அவளது காதல் இடம் கொடுக்கவில்லை..

என்ன இருந்தாலும்.. என்ன நடந்திருந்தாலும்.. ஷ்யாம்தேவ் அவள் நேசிக்கும் ஒருவன். அவனுமே எனக்கு நீதான் வேண்டும்.. வேறெதுவும் வேண்டாம் என்று வந்திருக்கிறான். அதையும் அவளால் ஒரேதாய் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் எதுவுமே இதோடு முடியப்போவதில்லை.

“தேவ் ப்ளீஸ்…” என்று கெஞ்சலாய் அவனைப் பார்க்க, அவனது பார்வையோ அதைவிட கெஞ்சியது.

“தேவ்.. இங்க வந்துட்டா எல்லாம் சரியாகி போயிடுமா??”

“நான் போயிட்டா சரியாகிடுமா சொல்லு பல்லவி…” என்றவன், “லுக்.. எது நடந்தாலும் சரி நான் பார்த்துக்கிறேன்.. நீ எதையும் மைண்ட்ல ஏத்திக்காத.. என்னை தவிர… என்னை லவ் பண்றத மட்டும் பண்ணு போதும்…” என்று அப்போதும் தோரணையாகவே சொல்ல,

“நீ என்ன சொன்னாலும் புரிஞ்சுக்கமாட்டியா….” என்றபடி அவனது கரங்களை விடாப்பிடியாய் பல்லவி பிரித்தெடுத்து தனியே அமர,

“எனக்கு வேற எதுவும் புரியவே வேணாம்…” என்றவன் முகத்தில் அத்தனை வலி தெரிந்தது அவளுக்கு. அதையும் தாண்டி ஒரு கோபமும்.

பல்லவி விடுமுறைக்கு என்று மதுரை சென்றிருந்தாள். அவளின் வீட்டுக்கு. கிளம்புகையிலேயே ஷ்யாம் ஏர் போர்ட் வந்திருந்தான்.. வழக்கமாய் அவள் ஊருக்கு கிளம்புகையில் எல்லாம் ஷ்யாம் எவ்வித வருத்தமும் காட்டியதில்லை..

“பார்த்து போ..” என்பான் அவ்வளவே..

ஆனால் இந்தமுறை அவளது கரங்களை விடாது பற்றியிருந்தான்.. பல்லவிக்கு என்னவோ வித்தியாசமாய் பட,

“என்ன தேவ்..” என்று ஆச்சர்யமாய் பார்த்தவளிடம்,

“லீவ் கேன்சல் பண்ணிடேன்…” என,

“ஆர் யூ ஜோக்கிங்.. த்ரீ மன்த்ஸ் நான் வீட்டுக்கே போகல…” என்று விழிகள் விரித்து சிரிக்க, கொஞ்சம் தோள் பற்றி அவனருகே ஒட்டி நிறுத்தியவன்,

“நானும் வர்றேன்..” என்றான் அவளது கண்களைப் பார்த்து.. இதுபோல் எல்லாம் எப்போதுமே நடந்துகொள்ள மாட்டான்..

“நம்ம லவ்வர்ஸ்னு நமக்குத் தெரிஞ்சா போதும்.. ஊருக்கே தெரியனும்னு இல்லை..” என்பவனிடம்,   சமயத்தில் “உனக்கெல்லாம் எப்படிடா லவ் வந்தது..” என்று பல்லவி கூட கிண்டல் செய்வாள்..

ஆனால் என்னவோ அவள் அன்று கிளம்புகையில் அவனுக்கு என்ன தோன்றியதோ அப்படி கேட்டுவிட, பல்லவி மௌனமாய் அவனைப் பார்த்து நிற்க,

“டோன்ட் க்னோ பல்லவி.. என்னவோ திஸ் டைம் நீ இங்க இருக்கணும் போல இருக்கு.. இல்ல நான் உன்னோட வர்றேன்…” என, “என்னாச்சு தேவ் உனக்கு???” என்றாள்,

“தெரியலை.. சுத்தமா தெரியலை.. உள் மனசு சொல்லுது சம் திங் கோயிங் டு ஹேப்பன்னு..” என்றவன் அவளது கரங்களை இறுக பிடித்து, அவனது இதழில் ஒற்றிக்கொள்ள, நொடியில் அவளுக்குமே இப்படியே திரும்பிடலாமா என்றுகூட தோன்றிவிட்டது..

சரியாய் அதேநேரம் விமான நிலைய அறிவிப்பு வர, “தேவ்…” என்று அவனைப் பார்த்தபடி பல்லவி நிற்க,

“ஹ்ம்ம்.. ஓகே.. சீக்கிரம் வந்திடு..” என்றவன், அவள் முதுகில் தட்டி, தன்னையும் கொஞ்சம் சரி செய்துகொள்ள, அடுத்து பல்லவி மதுரை நோக்கிப் பறந்தாள்.

ஷ்யாமின் குடும்பம் தமிழ் தான்.. ஆனால் முன்பே ஹைதராபாத்தில் செட்டில் ஆகிவிட்டனர். ஏர்போர்ட்டிலிருந்து வந்தவனை அவனது அப்பா சிவபாலன் எதிர்கொள்ள வழக்கமாய் ஒரு சிரிப்பாவது புரிந்து செல்பவன் இப்போது வெறுமனே கடந்து செல்ல,

“ஷ்யாம்..” என்றழைத்தவர், “நாளைக்கு ஃப்ரீயா…” என்றார்.

“இல்லப்பா. ஏன்??” என்றபடி அவனது அம்மாவைப் பார்த்தான்.

“இல்லடா.. நாளைக்கு சின்ன தாத்தா ஃபேமிலி வர்றாங்க.. போய் ரிசீவ் பண்ணனும்..” என்று மஞ்சுளா சொல்ல,

“வேற வேலையில்லை.. இயர்லி ஒன்ஸ் யாராவது இப்படி குடும்பத்தோட கிளம்பி வர்றது. ஒரு டூரிஸ்ட் ஸ்பாட் விடாம சுத்துறது.. நம்ம கைடு வேலைப் பார்க்கணும்.” என்று பொரிந்தவன்,

“எனக்கு சுத்தமா டைமில்லம்மா.. என்னை எதிர்ப்பார்காதீங்கப்பா..” என்று இருவருக்கும் பொதுவாய் சொல்லி சென்றுவிட்டான்..

பெற்றவர்களுக்குத் தெரியும், அவன் அப்படித்தான் சொல்வான், பின் நாளையே பொறுப்பாய் கிளம்பி நிற்பான் என்று. ஆனால் மறுநாள் சொன்னது போலவே அவன் வேலையாய் கிளம்பிட,

“ஷ்யாம் என்னடா கிளம்பிட்ட…” என்று மஞ்சுளா கேட்க,

“நேத்தே சொன்னேன்லம்மா..” என்றவன் “கார் வேணா எடுத்துக்கோங்க.. நான் பைக்ல போயிக்கிறேன்…” என்று கிளம்பியேவிட்டான்..

அவனுக்கு வேலையும் அதிகம் இருந்தது. பல்லவி திரும்ப வந்தபிறகு வீட்டில் தங்களின் காதலைப் பற்றி பேசவேண்டும் என்று அவள் கிளம்பிச் சென்ற மறுநொடியே முடிவு செய்திருந்தான். எப்படியும் எடுத்ததுமே சம்மதம் எதிர்பார்க்கவில்லை ஆனால் அத்தனை கடினமாய் ஒன்றும் இருக்காது என்றே அவனுக்குத் தோன்றியது.

பல்லவியிடமும் அடுத்து பேசுகையில் சொல்லியிருந்தான். வீட்டில் லேசாய் பேச்சை ஆரம்பி என்று. ஏதாவது ஒன்றேன்றால் நான் பேசுகிறேன் என்றும். ஆக ஷ்யாம்தேவ் இப்போது ஒருமுடிவில் இருந்தான்.

எப்போதுமே வருடத்திற்கு ஒருமுறை ஷ்யாமின் உறவுகளில் யாராவது ஒருவரது  குடும்பம் மொத்தமாய் வந்திடுவர் ஊர் சுத்திப்பார்க்க என்று. முதலில் ஷ்யாமும் சந்தோசமாகவே அவர்களோடு பங்குகொள்வான்.  ஆனால் நாள் செல்ல செல்ல, வரும் மனிதர்கள் சிலரின் சுயம் புரிய புரிய கொஞ்சம் விலகி இருந்துகொண்டான்..

அதிலும் இப்போது வருபவர்களோ அத்தனை மோசமில்லை இருந்தாலும் அது இதென்று சொல்லிக்கொண்டே தான் இருப்பர். அதிலும் அவனது சின்னத் தாத்தா ஜாதகம் ஜோசியம் பார்ப்பதில் வல்லுநர். ஆக வந்ததுமே முதல் வேலையாய் அவனது ஜாதகத்தைத் தான் கேட்பார்.

“இன்னிக்கு இந்த கலர் சட்டை போடு..”

“கிழக்கு பக்கமா போகாத..”

“இன்னிக்கு உனக்கு சந்திராஷ்டமம்…” என்று ஷ்யாமை ஒருவழி செய்துவிடுவார்.  அதற்காகவே காத தூரம் ஓடுவான் ஷ்யாம்.

அவனுக்கு இப்படியான விசயங்களில் எல்லாம் சுத்தமாய் நம்பிக்கையே இல்லை. ஆக இப்படி கொஞ்சம் பிரச்சனையான ஆட்கள்  யாரேனும் வருகிறார்கள் என்றால் ஆபீஸில் கூட தங்கிக்கொள்வான். அன்றும் அப்படியே வீட்டிற்கு செல்லாமல் இருக்க, மஞ்சுளா அழைத்துவிட்டார்.

“ம்மா நான் வரலை.. மார்னிங் முடிஞ்சா வர்றேன்.. இல்லைனா நாளைக்கு நைட்டு தான்..”

“ஏன்டா இப்படி பண்ற??? அத்தை மாமா எல்லாம் வந்திருக்காங்க..”

“அதுக்கு நான் என்னம்மா பண்ண???”

“ப்ளீஸ் எனக்காக கிளம்பி வா..”

அவ்வளவுதான் இதோடு முடிந்தது. எப்போதுமே மஞ்சுளா இப்படித்தான் மகனிடம் கெஞ்சினால் மட்டுமே காரியம் எடுபடும் என்று அவருக்கு நன்றாய் தெரியும். வேண்டா வெறுப்பாய் தான் கிளம்பிப் போனான். போய் பார்த்தபின்னே தான் தெரிந்தது ஒரு கூட்டமே வந்திருந்தது கிட்டத்தட்ட பதினைந்து பேர்..

‘இத்தன பேரா…’ என்று அவன் பார்க்கையில் பல்லவியிடம் இருந்து அழைப்பு. அன்று காலையில் இருந்து அவளோடு பேசவேயில்லை. ஆக அவளோடு பேசும் ஆவல் அவனுள். ஆனால் கண் முன்னே இத்தனை பேர்.. வீட்டில் எங்கேயும் ப்ரைவசி கிடைக்காது என்று நன்றாகவே தெரிந்தது. என்ன செய்ய??

“நானே கால் பண்றேன்..” என்று சொல்லி அவளது அழைப்பைத் துண்டித்து, வந்திருப்பவர்களை பல்லைக் கடித்து ஒரு சிரிப்பு சிரித்து வரவேற்று பேசி, என்று எல்லாம் முடிய இரவு பதினோரு மணி ஆகிவிட்டது..

‘இதற்குமேல் முடியாது..’ என்றேண்ணியவன் மெல்ல எழுந்து ஹாலைத் தாண்டி செல்ல “என்ன ஷ்யாம் இப்போவே தூங்க போற?? எல்லாம் உட்கார்ந்து பேசி எத்தனை நாள் ஆச்சு..” என்று அவனின் அத்தை முறை பெண்மணி ஒருவர் அழைக்க,

“இல்லத்தை.. ஒரு கம்பனி கால் இருக்கு.. பேசணும்…..” என்று சொல்லி, அவனது அறைக்கு வேகமாய் கதவையும் சாத்திக்கொண்டான்.

அனால் கொஞ்ச நேரத்திலே கதவு தட்டப்பட, எரிச்சலாய் திறந்தவன்  மஞ்சுளா நிற்பது கண்டு, “என்னம்மா…” என்றான்.

“இன்னிக்கு மட்டும் தாத்தா உன்னோட ரூம்ல படுக்கட்டும்டா…”

“என்னது.!!!” என்று பார்த்தவன், “யார்வேணா இங்க படுக்கட்டும்.. நான் கிளம்பி போறேன்…” என,

“ப்ளீஸ் ஷ்யாம்.. வந்தவங்களை நம்ம நல்லபடியா கவனிச்சு அனுப்பனுமில்லையா…” என்ற மஞ்சுளாவிடம்,

“அதேதான் நீங்க நல்லபடியா கவனிங்க.. பட் என்னை விட்ருங்க.. இல்ல நான் தெரியாமத்தான் கேட்கிறேன்ம்மா ஒருத்தர் வீட்டுக்கு இப்படியா கும்பலா கிளம்பி வருவாங்க…” என்று நியாயம் பேசிக்கொண்டு இருக்க, அதற்குள் அந்த தாத்தாவே வந்துவிட்டார்.

ஷ்யாமுக்கு அதுக்குமேல் பேச முடியாது என்று தோன்ற, ஒன்றுமே சொல்லாமல் அவருக்கு வழிவிட்டு, மஞ்சுளாவை முறைத்தபடி உள்ளே போனான். பல்லவியோடு பேச நேரம் பார்த்துக்கொண்டிருக்க, அந்த தாத்தாவோ விடாது பேசியபடி இருந்தார்.

“சாரி டியர்.. கெஸ்ட் ஹியர்…” என்று ரைமிங்காக அவளுக்கு ஒரு மெசெஜை தட்ட, அவளோ எப்போதோ உறங்கியிருப்பாள் போல அவனுக்கான பதில் வரவேயில்லை.

இரண்டு நாட்கள் இப்படியே செல்ல, ஷ்யாமிற்கு அன்று பார்த்து அலுவலகத்தில் வேலை நெட்டி முறித்தது. ஆடிட்டிங் வேறு நடந்துகொண்டு இருக்க, அவனுக்கோ உணவு உண்ணும் நேரம் கூட குறைந்து போனது. வீட்டிலும் கொஞ்சம் எரிச்சலாய் இருக்க, பல்லவியும் அங்கில்லாது போக, வேலையும் சேர்ந்து அவனை ஒருவித கடுப்பிலேயே சுற்ற வைத்தது.

மதியம் அப்போது தான் கிடைத்த நேரத்தில் அனைவரும் சாப்பிட அமர்ந்திருக்க, சரியாய் சிவபாலன் அழைத்தார்..

“ஹலோ அப்பா சொல்லுங்க…”

“தாத்தா உனக்கு ஜாதகம் பார்த்தார் ஷ்யாம்.. அதுல உனக்கு..” என்று சொல்கையிலேயே,

‘கடவுளே…’ என்று நொந்தவன், “ப்பா ப்ளீஸ்… எதுவா இருந்தாலும் நீங்களும் அம்மாவுமே பாருங்க.. நான் செம டென்சன்ல இருக்கேன், நீங்களே பார்த்து பண்ணுங்க…” என்று அவன் என்னவோ பரிகாரம் செய்ய சொல்லியிருக்கிறார் போல என்ற எண்ணத்தில் பேசிவிட்டு வைத்துவிட,

அங்கே வீட்டிலோ சிவபாலன் “எதுவா இருந்தாலும் நம்ம எடுக்கிற முடிவுதான்னு சொல்லிட்டான்..” என்று பெருமையாய் மகனது பேச்சின் பொருளை மட்டும் சொல்ல,

“நாளைக்கு நல்ல முஹூர்த்த நாள்.. சிம்பிளா ஒரு என்கேஜ்மென்ட் வச்சிடலாம்..” என்று அந்த தாத்தா சொல்ல, அனைவரும் மகிழ்வாகவே சம்மதிக்க, இது எதுவுமே தெரியாமல் ஷ்யாம்தேவ் அவனுக்கு கிடைத்த சிறிது நேரத்தில் பல்லவியோடு பேசிக்கொண்டு இருந்தான்.

விஷயம் வேறொன்றுமில்லை, ஷ்யாமின் ஜாதகம் பார்த்த அவனது தாத்தா, இந்த இரண்டு மாதத்தில் அவனுக்குத் திருமணம் முடிக்காவிட்டால் பின் திருமணம் நடப்பதே சிரமம் என்றிட, என்னடா செய்வது என்று சிவபாலனும், மஞ்சுளாவும் திகைக்க,

அந்த தாத்தாவும் யோசித்தவர், பின் “சொந்தத்துல கல்யாணம் பண்ண எந்த பிரச்சனையும் இல்லையே..” என்றார் கேள்வியாய்.  

இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி பார்த்துக்கொண்டு அவரைப் பார்க்க,

“நம்ம சுமதிக்கும் வரன் பார்க்கலாம்னு இருக்கோம். அதான் கேட்டேன்.. அவளோட ஜாதகம் எனக்கு அத்துப்படி.. ஷ்யாம் ஜாதகத்துக்கு பொருந்தி வரும்னு தோணுது.” என்றவர் “நீங்க என்ன சொல்றீங்க…” என்று தன் மகள் மருமகனைப் பார்க்க,

“அப்பா நீங்க பொருத்தம் இருக்குனு சொல்லிட்டா நாங்க வேண்டாம்னு சொல்லவா போறோம்..” என்று அந்தப்பக்கமும் பச்சை கொடி பறக்க,

“சிவாபாலா நீ என்ன சொல்றப்பா..” என்றார் தாத்தா..

“ஜாதகம் பொருந்துன்னா எங்களுக்கும் சம்மதம்..” என்றவர் மஞ்சுளா முகம் பார்க்க, அவரும் சம்மதமாய் தலையை ஆட்டினார்.. 

அடுத்து வேகமாய் பேப்பர் பேனா எடுத்து சில பல கணக்குகளைப் போட்டுப் பார்த்து, “ஷ்யாமுக்கும் சுமதிக்கும்  ஜாதகம் அம்சமா பொருந்திப் போகுது. முக்கியமான பொருத்தம் எல்லாம் இருக்கு..” என்று அனைவரையும் பார்த்து சொல்ல,  

“ரொம்ப சந்தோசம்…” என்று அனைவரும் மகிழ,

மஞ்சுளா “எதுக்கும் சுமதிக்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுடலாம்…” என்று சொல்ல,

“அதுக்கென்ன அண்ணி..” என்று எழுந்த சுமதியின் அம்மா பரிமளா, மகளிடம் கொஞ்சம் தனியே பேசிவிட்டு வந்து “அவளுக்கு பரிபூரண சம்மதம்..” என,

“ஷ்யாம் கிட்டயும் கேட்டு சொல்லுப்பா…” என்று தாத்தா சொல்லவும்,     

சிவபாலன் ஷ்யாமிற்கு அழைக்க அவனோ என்ன விஷயம் என்றே காதில் கேட்காமல் ‘நீங்களே பார்த்து செய்யுங்கள்…’ என்றிட, அழகாய் அங்கே சம்பந்தம் பேசி முடித்தனர்..  

சுமதி.. ஷ்யாம் இப்போது வரைக்குமே ஒரு ஹாய் ஹலோ கூட அவளிடம் தனிப்பட்டு சொன்னது இல்லை. ஆனால் அவனுக்கும் அவளுக்கும் பேசி முடித்தாகிற்று.

அன்றிரவு “ஷ்யாம்.. நாளைக்கு சீக்கிரம் வர முடியுமா???” என்று மஞ்சுளா கேட்க,

“ஏன் ம்மா…” என்றவனுக்கு, “நாளைக்கு ஈவ்னிங் வீட்லயே…” என்று மஞ்சுளா சொல்கையில்,

“முதல்ல ஷேவ் பண்ணு ஷ்யாம்.. இதென்ன இப்படி தாடி வச்சிட்டு..” என்றபடி வந்தார் சிவபாலன்.

“டைமே இல்லப்பா..” என்றவன் “ம்மா என்ன சொன்ன.. நாளைக்கு ஈவ்னிங் தானே.. யா சீக்கிரம் வந்திடுறேன்…” என்றவன் மனதிலோ அடுத்த நாள் பல்லவி வந்துவிடுவாள் என்ற நிம்மதி.   

மறுநாள் சொன்னது போலவே ஷ்யாம் சீக்கிரம் வீடு செல்ல, வீட்டிலோ விசேச சாயல் தெரிய, என்னவென்று மஞ்சுளாவிடம் கேட்க போனால்,

அவரோ “சீக்கிரம் இந்த ட்ரெஸ் போட்டுக்கோடா.. அப்படியே ஷேவ் பண்ணிட்டு பளிச்சுன்னு வா..” என்றபடி அவன் கையில் ஒரு கவரை கொடுத்துவிட்டு செல்ல,

அவனோ பல்லவிக்கு தாடி வைப்பது பிடிக்கும் என்பதால், அவள் வருகையில் லேசாய் ட்ரிம் செய்வோம் என்று அப்படியே விட்டுவிட்டான்.. ஷ்யாம் தயாராகி கீழே வர, அனைவரும் அங்கே குழுமியிருக்க, ஷ்யாம் ‘என்ன நடக்குது..’ என்றே பார்த்தபடி நிற்க,

“ஷ்யாம் வாடா.. எவ்வளோ நேரம் சுமதி வெய்ட் பண்ணுவா.. வா.. வந்து ரிங் போட்டு விடு..”  என்ற மஞ்சுளாவின் பேச்சில் அதிர்ந்து, 

“ம்மா.. என்ன சொல்ற..??” என்றவனிடம்,

“என்ன மாப்பிள்ள.. சீக்கிரம் வந்து மோதிரம் போடுங்க…” என்று சுமதியின் அப்பா அழைக்க, அப்போது தான் ஷ்யாமிற்கு ஓரளவு விஷயம் புரிந்தது..

அடுத்தநொடி அவனுக்கு கோபமே தலைக்கேற, ‘என்னைக் கேட்காமல் என்ன இது…’ என்று பார்க்க,

“என்ன ஷ்யாம்…” என்ற சிவபாலன் அவனருகே வர, “கொஞ்சம் உள்ள வாங்க பேசணும்..” என்றவனின் குரலும் முகமும் மாறிட,

“எதுவாயிருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்.. நேரம் போகுது.. எல்லாரும் வெய்ட் பண்றாங்க..” என்றவரிடம்,

“அப்பா நான் பேசியே ஆகணும்.. உள்ள வர்றீங்களா.. இல்லை எல்லார் முன்னாடியும் பேசவா??” என்று இறுகிய குரலில் சொல்ல,

“என்னாச்சு??” என்றபடி மஞ்சுளாவும் அவனருகே வர, ஷ்யாம் ஒன்றுமே பேசாமல் ஒரு அறைக்குள் செல்ல, “இதோ வந்திடுறோம்.. பேசணும் சொல்றான்…” என்றபடி அவர்களும் உள்ளே செல்ல,

“யாரைக்கேட்டு இதெல்லாம் பண்ணீங்க??” என்று ஷ்யாம் அடிக்குரலில் சீர, மற்ற இருவருக்கும் திக்கென்று இருந்தது..

“என்னடா சொல்ற???”

“ம்மா இப்போ சொல்றது தான்.. நான் இந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்க முடியாது..”

“ஷ்யாம் என்ன பேச்சு இது.. உன்கிட்ட கேட்டுதானே பண்ணோம்..” என்று சிவபாலன் விளக்க, ஷ்யாம் அப்படியே தலையில் அடித்துக்கொண்டான்.

“ஷ்யாம்…” என்று மஞ்சுளா அவனது கரங்களைப் பற்ற,

“ம்மா இதை இப்போவே நிறுத்துங்க.. நான் ஒரு பொண்ண மூணு வருசமா லவ் பண்றேன்.. என்னால இதை அக்சப்ட் பண்ண முடியாது..” எனும்போதே,

“என்னாலையும் நீ சொல்றத அக்சப்ட் பண்ணமுடியாது ஷ்யாம்…” என்றிருந்தார் சிவபாலன்..

என்ன சொல்லியும் கேட்பதாய் இல்லை.. மஞ்சுளாவோ நீ வந்து மோதிரம் போடு மற்றதை பின்னே பேசுவோம் என்றே சொல்லிக்கொண்டு இருந்தார். நேரம் கடந்துகொண்டே இருக்க, ஷ்யாமோ பிடிவாதமாய் இருக்க, சிவபாலனும் பிடிவாதமாய் இருக்க, வெளியே காத்திருந்தவர்கள் வந்து எட்டிப்பார்க்க,

“என் மரியாதையை காப்பாத்தனும் நினைச்சா வந்து ஒழுங்கா மோதிரம் போடு…” என்றுவிட்டு சிவபாலன் வெளியேறிட, அவனோ மஞ்சுளாவை முறைத்து நிற்க,

“ஷ்யாம் எங்களை அசிங்கப்படுதிடாதடா.. வாடா…” என்று கலங்கி நிற்க, சூழ்நிலை கைதியாகிப் போனான் ஷ்யாம்..

சுமதியின் முகத்தைக் கூட அவன் நேராய் பார்க்கவில்லை, மனதினுள் அப்படியொரு இறுக்கம், அவளது விரலைக்கூட அவன் விரல் தொட்டிருக்காது, எப்படி மோதிராம் போட்டான் என்று அவனுக்கே தெரியவில்லை.. மஞ்சுளா அவனது கரங்களைப் பற்றியிருந்தார் என்பதுமட்டும் தெரியும்.. அடுத்த நொடி வீட்டை விட்டு கிளம்பிட்டான்..

மறுநாள் பல்லவி வரும்வரைக்கும் வெறுமெனே சாலையில் சுற்றிக்கொண்டு இருந்தான். எங்கே போகவும் பிடிக்கவில்லை. நண்பர்களை சந்திக்கவும் இஷ்டமில்லை. பிளாட்பார்மில் கொஞ்ச நேரம் படுத்திருந்தான். பல்லவி வந்ததும் அவளிடம் வந்துவிட்டான். அனைத்தையும் கொட்டியும் விட்டான்..             

      

 

 

Advertisement