Advertisement

காதல் – 11

மேலும் ஒருவாரம் சென்றிருந்தது.. திருமணத்திற்கு என்று எடுத்த விடுமுறை எல்லாம் முடிந்து ஷ்யாம் திரும்பவும் வேலைக்கு போக வேண்டும்.. திருமணம் முடிந்து ஒருவாரம், மறுவீடு போய்வந்து, மஞ்சுளா மகனுக்காக வைத்திருந்த வேண்டுதல்களுக்காக என்று கோவில் சென்று வந்து, இதற்கே சரியாய் போய்விட,

முன்னே ஹனிமூன் செல்லவேண்டும் என்று நினைத்து வைத்திருந்தது எல்லாம் இப்போது நினைவில் இருக்கிறதா தெரியவில்லை.. பல்லவி ஷ்யாம் பேச்சு வார்த்தையே இல்லாது இருந்தது இந்த ஒருவாரத்தில் எங்கோ பார்த்து யாரிடமோ பேசுவதுபோல் ஆரம்பித்து இருந்தது. அலைச்சல்கள் எல்லாம் முடிகையில் அவனது விடுமுறையும் முடிந்திருந்தது.. மறுநாள் ஆபிஸ் போக வேண்டும்..

அவளுக்கும் அது தெரியும்.. இருந்தாலும் ஒன்றும் கேட்காது இருந்தாள். அவனோ சுவரிடம் சொல்வது “நாளைக்கு ஆபிஸ் போகணும்..” என்று முணுமுணுக்க,

ஷ்யாமை ஒருபார்வை பார்த்தவள், “யாரு போகணும்…” என்றாள்..

“இந்த வீட்ல எத்தனை பேர் போறாங்க.. நான்தான்..” என்றான் கடுப்பாய் சொல்வதுபோல்..

“ஓ.. சரி..” என்று சொன்னவள் புரண்டு படுத்துவிட,

“ஏய் என்ன ஓவரா பண்ற???” என்று ஷ்யாம் கத்த, அவனால் இதற்குமேல் பேசாது இருக்க முடியவில்லை என்பது அவளுக்கும் புரிந்திருந்தது.. அவனுக்குமே..

பின்னே இந்த திருமணத்திற்கு தான் எத்தனை பாடு அவர்கள் இருவரும்.. அதுவும் நடந்தபின்னே அது நல்முறையில் நிலைப்பது அவர்களின் கையில் தானே.

மஞ்சுளா கூட அன்று மாலை தான் பல்லவியிடம் “எப்படிம்மா இவனை லவ் பண்ண??” என்று கேட்டேவிட்டார்..

ஷ்யாமும் பார்த்துகொண்டு தான் இருந்தான்.. பல்லவிக்கோ அப்படியொரு சிரிப்பு.. ஷ்யாமைப் பார்த்து பார்த்து சிரித்தாள். அவனுக்குமே சிரிப்புதான் வந்தது..  இருந்தாலும் சிரித்தால் என்னாவது என்று இருக்க,

“ம்மா கொஞ்சமாவது எனக்கு சப்போர்ட்டா இரு..” என்றவன் “உனக்கென்ன இவ்வளோ சிரிப்பு..” என்றான் கோபமாய் கேட்பதுபோல்..

இத்தனை நாளுக்கு பிறகு இன்றுதான் நேருக்கு நேராய் முகத்தைப் பார்த்து பேசியிருக்கிறான்.. பல்லவியோ வேறெதுவும் சொல்லாது,

“சிரிப்பு வந்தது சிரிச்சேன்…” என்றவள் வேலையைப் பார்க்க சென்றிட,

“டேய் நீ பண்றதும் ஓவர்தான்டா…” என்று மஞ்சுளாவும் சென்றிட,

“என்ன எல்லாரும் என்னை சொல்றீங்க.. நான் என்ன பண்ணேன்..??” என்று கேட்டவன் பேச்சை கேட்க அங்கே யாருமில்லை..

எப்படியோ ஒன்று நேருக்கு நேராய் பேசியபின்னே அடுத்து அப்படியே பேசிட வேண்டியதுதான் என்றுதான் ஷ்யாம் நாளை ஆபிஸ் போவது பற்றி பல்லவியிடம் சொல்ல அவளோ எதுவுமே ரியாக்சன் காட்டாது இருக்க, அதற்குமேல் அவனால் பொறுமையாய் எல்லாம் இருக்க முடியவில்லை..

“ஓவரா?? நானா ???” என்று பல்லவி கேட்க,

“பின்ன.. நானா??” என்றான் அவன்..

“ஷ்ஷ்ஷ்….. எனக்கு சண்டை போட எல்லாம் தெம்பில்ல தேவ்..” என்றவள் அலுப்பாய் திரும்பவும் படுக்க,

“ஓ.. அப்போ நான் பேசினா சண்டை போடுறேன்னு அர்த்தமா?? சரி இனிமே பேசல..” என்றவன் முகத்தை திரும்ப தூக்கிக்கொள்ள,

“ம்ம்ச் உனக்கு என்னதான் பிரச்சனை தேவ்..” என்றவள்,

“இல்ல நான் தெரியாமத்தான் கேட்கிறேன்.. உனக்கு என்ன பிரச்சனை.. எப்போ நல்லா பேசுற.. எப்போ இப்படி பண்றன்னு எனக்கு புரியலை…” என்று இத்தனை நாட்கள் மனதில் அழுத்தி வைத்திருந்த கேள்வியைக் கேட்க,

“என்ன புரியலை உனக்கு?? இல்லை என்ன புரியணும் உனக்கு..” என்றான் அவனும்..

“இந்த பிராப்ளம் ஸ்டார்ட் பண்ணதுல இருந்து என்னை ஒரு டென்சன்லயே தான் நீ வச்சிருந்த..  திடீர்னு வந்து பிராப்ளம்னு சொன்ன.. அடுத்து கிளம்பி போயிட்ட.. ஃபோன் எடுக்கலை.. அப்புறம் வந்து வீட்டுக்கு கூப்பிட்ட.. தென் வேலையை  விட்ட..

எல்லா டைம்லயும் நான் நீ சொன்னதை கேட்டுத் தான் நடந்தேன்.. உன்கிட்ட சண்டை போட்டாலும், அடுத்த நிமிஷம் சரி நானும் உன்னை டென்சன் பண்ணக் கூடாதுன்னு அமைதியா போனேன்.. அதுதான் என்னோட தப்பா சொல்லு…” என்று கேட்கையில் பல்லவிக்கு மனம் நிரம்பவே வேதனைப் பட்டுவிட்டது..

இவனுக்காக தானே இத்தனையும் பொறுத்துப் போனோம்.. கடைசியில் ‘ஓவரா போற..’ என்று சொன்னால் என்ன அர்த்தம் என்று.. என்னவோ அவளால் அந்த வார்த்தையை தாங்க முடியவில்லை.. இத்தனை நாள் சொன்னதெல்லாம் விட்டு இப்போது என்னவோ மிக மிக மிக வலித்தது..

ஷ்யாமோ ‘நான் சாதரணமா பேசினதுக்கு இப்படி பேசுறா…’ என்று பார்க்க,

“என்ன பாக்குற தேவ்.. நிஜம்தான்.. இத்தனை நாள் உன்னை நான் எதுவும் டென்சன் பண்ணிருக்கேனா சொல்லு. அப்பா அம்மாவை இத்தனை நாள் வெய்ட் பண்ண வச்சதுக்கே அவ்வளோ கஷ்டப்பட்டேன்.. நான் மதுரைக்கு போய் அத்தனை டைம்ஸ் கால் பண்றேன் நீ எடுத்துப் பேசவேயில்லைன்னா எப்படி..

அப்போ எனக்கு எவ்வளோ கஷ்டமா இருந்திருக்கும் நீ நினைச்சுப் பார்த்தியா?? ஒருவேளை அங்க எனக்கு வேற ஏதாவது ப்ராப்ளம் வந்து உன்கிட்ட சொல்ல நான் கால் பண்ணிருந்தா கூட நீ இப்படிதானே இருந்திருப்ப..

உனக்கு இங்க வீட்ல பிராப்ளம்… ஜாப் பிராப்ளம்.. அதெல்லாம் சரி ஆனா என்கிட்ட ஒருவார்த்தை பேச என்ன வந்தது. சரி கல்யாணம் தான் நிச்சயம் ஆச்சே.. அதுக்கப்புறம் பேசுவன்னு பார்த்தா என்னவோ போனா போகுதுன்னு மேரேஜ் பண்ற லுக்ல இருந்த.. இந்த கல்யாணம் நடக்கணும்.. நம்ம ஒண்ணு சேர்ந்திடனும்னு தான் நானும் எல்லாம் பொறுத்து போனேன்.. ஆனா நான் ஓவரா பண்றேன்னில்ல.. நீ இப்பவும் இப்படித்தான் இருப்பன்னா நீ என்னவோ பண்ணு போ..” என்றவள் திரும்பிப் படுத்துவிட,

“ஹே பல்லவி என்ன நீ…” என்று ஷ்யாம் அவளைத் திருப்ப முயல,

“என்னை விடு தேவ்….” என்றவள் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

“பல்லவி நான் அப்படி எதுவும் மீன் பண்ணலை.. இங்க பாரேன்.. ஏன் இப்படி பேசுற..” என்று ஷ்யாம் அவளை சரி செய்ய முயல,

“விடு தேவ்.. நாளைக்கு நீ ஆபிஸ் கிளம்பனும் இல்லையா.. நிம்மதியா தூங்கு.. பேசி பேசி அது பிரச்சனை தான் ஆகும்..” என்றவள் அடுத்து மேற்கொண்டு இதை பற்றி பேசிட தயாராகவேயில்லை..

என்னவோ, என்ன பேசி என்னாகப் போகிறது என்ற நிலை அவள் மனத்தில்.. யாரைக் காதலித்தோமோ அவனையே கரம் பிடித்தாகிவிட்டது. அதுவே ஒரு பெரும் திருப்தி கொடுத்திட, இதற்குமேல் வாழ்வு எப்படி செல்கிறதோ அப்படியிருக்கட்டும் என்று தான் இருந்தாள்..

ஆனால் ஷ்யாம் பேசியதும், தன் மனதில் இருந்தது எல்லாம் பேசிவிட, அவனோ எல்லாம் புரிந்தும், இவளை எப்படி சரி செய்ய என்று தெரியாமல் படுத்திருந்தான்..

எப்போதுமே சண்டை, மனஸ்தாபம் என்றால் ஒருவார்த்தை எடுத்து சொன்னால் புரிந்துகொள்வாள். ஆனால் இப்போது சண்டையும் இல்லை.. மனஸ்தாபமும் இல்லை.. இருந்தாலும் ஒன்றும் சரியில்லை என்கையில் அவனால் முடியவில்லை..

“பல்லவி…” என்று அழைத்துப் பார்த்தான் அவள் பதிலே சொல்லவில்லை..

ஆனால் இத்தனை நாளில் அனைவருமே அவர்கள் நிலையை வாய் விட்டு சொன்னர் தான்.. ஷ்யாமைத் தவிர.. இப்போது பல்லவிகூட சொல்லிவிட்டாள் ‘எனக்கு எப்படி இருந்தது தெரியுமா…??’ என்று.. இப்போது வரைக்கும் ஷ்யாம் அப்படி சொல்லவேயில்லை..

அனைவரையும் விட அவனுக்கு அதிகமான டென்சன். வீட்டில் நடந்த பிரச்சனையில் தவறு தன் மீது என்ற நிலையில் முதலில் ஆடித்தான் போனான்.. இதை சரி செய்வது எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.. ‘நான் எப்படி இப்படி இருந்தேன்..’ என்ற கேள்வியே அவனை கொன்றுவிட்டது..

எப்படியாவது இதை சமாளித்துவிட வேண்டும் என்கையில் அவனே எதிர்பார்க்காத சிலதும் நடக்கத்தான் செய்தது. பல்லவியை வீட்டிற்கு அழைத்து போகும் நிலை.. பின் வேலையை விட வேண்டிய நிலை.. இதில் எந்த இடத்திலும் அவனது பெற்றோர்களை அவன் விட்டுக்கொடுத்து விட கூடாது.. அடுத்து பல்லவி கிளம்புகையில் மொத்தமாய் மனதளவில் நொறுங்கிப் போனான்..

அவள் கிளம்பியதும் மனதில் ஒருவித பயம் வேறு வந்து சூழ்ந்துகொண்டது. இவள் போகிறாள் என்றால்?? அடுத்தது?? என்ற கேள்வி அவன் முன்னே பயம் காட்டிவிட்டது..

அதன் பொருட்டே எப்படியேனும் பல்லவியை இருக்கவைக்க முயன்றான்.. ஆனால் அது முடியவில்லை. அவளின் நிலையும் அப்படி.. அதுவும் புரிந்தது. இருந்தாலும் அவனுக்கிருந்த உள்ளக் குமுறலுக்கு யாரிடமும் ஆறுதல் கிடைக்கவில்லை.

வீட்டில் யாரும் முகம்கொடுத்து பேசவில்லை, பல்லவி இங்கில்லை… வேலையில்லை இத்தனை இல்லைகளை வைத்துக்கொண்டு அவன் அலைந்துகொண்டு இருந்தான்.. என்னவோ ஒரு இறுக்கம் மனதில்.. இதுதான் என்று சொல்லிடமுடியாத இறுக்கம்.. அதுதான் பல்லவியிடமும் பேசவிடாமல் செய்தது..

அதன்பின் ஒருவழியாய் திரும்ப அதே வேலை கிடைத்தது.. வீட்டிலும் ஓரளவு சூழல் இலகுவாக, அவனுக்கோ அடுத்து திருமணம் நல்லபடியாய் நடந்தால் போதும் என்றுதான் இருந்தது. வேறு எதுவும் நினைக்க மனதில்லை அவனுக்கு..

‘நான் பேசலைன்னா என்ன பல்லவி பேசுவா…’ என்று ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்க, அதை பல்லவி முதலில் அடித்து நொறுக்கினால்..

‘நீயே பேசலைன்னா நான் மட்டும் ஏன் பேசணும் ..’ என்று..

இப்போதோ ‘டென்சன் எல்லாம் உனக்கு மட்டும்தானா.. ஏன் எனக்கில்லையா??..’ என்று பல்லவி சொல்லாமல் சொல்லிவிட, எல்லாமே புரிந்தும் தெரிந்தும் தான் அப்படி பேசாமல் இருந்தது தவறு என்று நினைத்தவன் போக போக பேசி சரி செய்துவிடலாம் என்று இருக்க, இப்போது பல்லவி இத்தனை வருத்தம் தெரிவிக்கவும்

‘ச்சே என்னடா..’ என்றாகிவிட்டது..

இத்தனை சிரமங்கள் பட்டது எதற்காக இதற்காகவா என்று தோன்றியதும் “இதுக்கா ஷ்யாம் நீ ஆசைப்பட்ட..??” என்று அவன் மனமே கேட்டதும்,

“பல்லவி… ” என்று அவளை எழுப்பியே விட்டான்..

அவளும் தூங்கவெல்லாம் இல்லைதான்.. அதற்குமேல் பேச விரும்பாமல் படுத்திருந்தாள்.. அவ்வளவே.. இத்தனை நேரம் அமைதியாய் இருந்தவன் திடீரென்று எழுப்பவும், ‘இது எதற்கோ…’ என்று நினைத்தபடி அவனை யோசனையாய் பார்க்க,

“என்னைப் பத்தி உனக்குத் தெரியும் தானே..” என, ‘இப்போ எதுக்கு இது..’ என்று பல்லவியின் பார்வை மாற,

“வாய் திறந்து பேசு பல்லவி.. இப்படி பேசாம எல்லாம் இருக்காத..” என்று ஷ்யாம் அடுத்த பிடிவாதம் போக,

“ஓ.. அப்போ நான்தான் பேசாம இருந்து பிடிவாதம் பண்றேனா??” என்றாள் வேகமாய்..

“சரி… சரி.. தப்புதான்.. நான் பேசிருக்கணும் தான்.. பட் என்னையும் கொஞ்சம் புரிஞ்சுகோ..” என,

“என்ன புரிஞ்சுக்கல உன்னை நான்??” என்றாள் வார்த்தைகளுக்கு இடைவெளி விட்டு..

“இல்ல நான் அப்படி சொல்லலை..” என்றவனை பேசாதே என்பதுபோல் சைகை காட்டி,

“நிம்மதியா தூங்கு தேவ்.. மத்தது எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்.. நீயோ நானோ விளக்கம் கொடுத்துக்கணும்னு அவசியமில்ல புரியுதா.. எனக்கு உன் நிலைமை நல்லா தெரியும்.. என்ன என்கிட்ட பேசலைன்னு வருத்தம் அதை இப்போ சொன்னேன் அவ்வளோதான்.. அதுக்காக நீ எனக்கு எதையும் எக்ஸ்ப்ளெயின்  பண்ணனும்னு அவசியமில்லை.. ஐ க்னோ அபௌட் யூ.. சோ தூங்கு..” என்றவள் அவன் மார்பில் லேசாய் இரண்டு தட்டு தட்டி, அவளும் கண்களை மூடிக்கொள்ள,

ஷ்யாம்தேவ் வெகு நேரம் உறங்காது தான் அவளைப் பார்த்திருந்தான்..  உறக்கம் வரவில்லை..  தட்டிவிட்டு எடுக்க இருந்த அவளது கரங்களை பிடித்து அப்படியே அவன் நெஞ்சின் மீதே அழுத்திக்கொண்டான்.. வேறு எதுவுமே அவனுக்குத் தோன்றவில்லை.. என்னவோ மனது ஒரு அமைதியில் அப்படியே நின்றிட பல்லவி இப்போது இப்படி சொன்னது அவனுக்கு மற்ற அனைத்தையும் விட மேலும் பெரும் அமைதியை கொடுத்தது..

ஆக இத்தனை நாள் அலைப்புருதல்களுக்கு பதிலாய் இந்த அமைதியை முழுதாய் அனுபவிக்க நினைத்தான்..

இதுநாள் வரைக்கும் அவனுக்கு ஒரு எண்ணம் இருந்தது தான்.. என்னால் தான் இந்த திருமணம் நல்லபடியாய் நடந்தது என்று.. ஆனால் அது அப்படியில்லை என்று இப்போது புரிந்திட, பல்லவி மட்டும் திடமாய் உறுதியாய் பொறுத்து போகவில்லை என்றால் என்றோ அனைத்தும் ஒன்றுமில்லாது போயிருக்கும் என்று நன்கு புரிந்துபோனது..

‘நீ இப்படி பண்ண சோ நான் அப்படி பண்ணேன்.. நீ என்னை இதெல்லாம் சொன்ன சோ நான் இதை சொன்னேன்’ என்று அது இதென்று ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி பேசினால் நிச்சயம் இந்த பிரச்சனைகள் ஓயாது தான்..

பிரச்சனைகள் வருவது சகஜம் ஆனால் அது பெரிதாய் வளராது பார்த்துக்கொள்ள வேண்டும் அவ்வளவே.. இன்னும் கொஞ்சம் நாம் நிதானமாய் போகவேண்டும் என்று தோன்றியது ஷ்யாமிற்கு.. இப்படியே யோசனைகளில் இருந்தவன் உறங்கியும் போனான்..

மறுநாள் காலையிலோ, வழக்கம் போல் மஞ்சுளா தான் அவனுக்கு கிரீன் டீ போட்டுக்கொடுத்தார்..

“ஷ்யாம் இந்த ரெண்டு ஷர்ட் தான் அயர்ன் பண்ணது இருக்கு..” என்று வந்து கொடுத்துவிட்டு போனார்..

சாப்பிடும் போதும் கூட அவர்தான் பரிமாறினார்.. அவனுக்கோ ‘பல்லவி எங்க??’ என்று கேள்வியே மனதில்..

‘இத்தனை நாள் பேசலை.. இப்போ என்ன இவளுக்கு…’ என்று சுற்றி முற்றி அவள் எங்கே என்று பார்க்க, அதிலும் கல்யாணத்திற்கு பிறகு முதல்நாள் ஆபிஸ் போகிறான் சரி அருகே இருந்து கவனிப்பாலோ என்று எதிர்பார்த்தான் போல,  அவளோ சிவபாலனோடு அமர்ந்து என்னவோ பேசிக்கொண்டு இருந்தாள்..

“ம்மா அப்பா சாப்பிடல??” என்று கேட்க,

“இல்லடா.. நீ கிளம்பவும் நாங்க மூணு  பேரும் சாப்பிடுவோம்..” என்றவர் “இன்னும் கார சட்னி போடவா பல்லவி பண்ணது…” என,

“அப்படியா???” என்று பார்த்தவன், பின்னே திரும்பி பல்லவியையும் ஒருமுறை பார்த்துவிட்டு

“ம்மா என்ன சட்னி இது.. அய்யே வாய்ல வைக்க விளங்கல.. இப்படியே பண்ணா இனிமே எனக்கு டிஃபனே வேணாம்.. கேண்டீன்ல சாப்பிட்டுக்கிறேன்..” என்று சத்தமாகவே சொல்ல, பல்லவிக்கும் அவன் சொன்னது காதில் விழுந்தது..

நொடி பொழுதே “என்ன சொல்றான் இவன்..” என்று பார்த்தவள், பிறகு மீண்டும் சிவபாலன் பக்கம் திரும்பிக்கொள்ள, மஞ்சுளவோ அங்கே எதுவுமே நடக்காதது போல் நின்றிருந்தார்..

“ம்மா என்ன… சட்னி பிடிக்கவேயில்லனு சொல்றேன்.. எல்லாம் அமைதியா இருந்தா என்ன அர்த்தம்??” என்று மீண்டும் ஷ்யாம் கத்த,

“ஷ்யாம் இப்போ என்ன பிரச்சனை உனக்கு..??” என்று சிவபாலன் தான் கேட்டார்..

“எனக்கு என்னப்பா பிரச்சனை ஒண்ணுமில்லை..” என்று பல்லைக் கடித்தவன், வேண்டா வெறுப்பாய் உண்பதுபோல் பாசாங்கு காட்டி உண்டுவிட்டு, ஆபிஸ் கிளம்ப, பைக்கை வீட்டின் வெளியே நின்று உறும விட்டுக்கொண்டே இருந்தான்..

‘என்ன இப்படி பண்றான்..’ என்றவள் வெளியே போய் பார்க்க,

“என்ன??” என்றான் எதுவும் தெரியாதவன் போல,

“எதுக்கு இப்படி சீன் போட்டிட்டு இருக்க??” என்று பல்லவி கேட்க,

“என்னது…” என்று எதுவோ சொல்ல வந்தவன், “ஈவ்னிங் ரெடியா இரு.. வெளிய போவோம்…” என்றுமட்டும் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்..

‘இதுக்குத்தானா இவ்வளோ பில்ட்டப்..’ என்று சொன்னவளுக்கு உள்ளே சந்தோசமாகவும் இருந்தது..

ஷ்யாம் வரும் நேரம் பொறுத்து கிளம்புவோம் என்றிருக்க, அவனோ மாலை சீக்கிரமே வந்துவிட்டான்.. அவளோ இன்னமும் தயாரகாமல் இருக்க, “உன்னை என்ன சொன்னேன் நான்..” என்று அவன் முறைக்க,

“இரு இரு டென் மினிட்ஸ் வந்திடுறேன்..” என்றவள் வேகமாவே கிளம்பி வர, அவனும் தயாராகி நிற்க,

“கார்ல போகவேண்டியது தானே ஷ்யாம்..” என்று சிவபாலன் சொல்ல,

“இல்லப்பா பைக்கே போதும்..” என்றவன் பல்லவியை அழைத்துக்கொண்டு மஞ்சுளாவிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டான்..

பிர்லா மந்திர்..

அடிக்கடி பல்லவியும் அவனும் அங்கே வந்திருக்கிறார்கள் தான்.. ஆனால் திருமணம் முடிந்து போவது இன்னும் ஸ்பெஷல் இல்லையா.. ஹுசைன் சாகர் ஏரியை ஒட்டி ஒரு குன்றின் மீது எழுப்பபட்டிருந்த கோவில்..

அங்கே இருக்கும் சூழலும்.. சிலு சிலு காற்றும் மேல் நின்று ஏரியின் அழகிய தோற்றம் மட்டுமில்லாது, ஏரியின் நடுவே இருக்கும் பெரிய புத்தர் சிலையும்  பார்க்க யாருக்குத் தான் பிடிக்காது போகும்..

பல்லவிக்கு எப்போதுமே அங்கே கோவிலில் நின்று ஏரியையும், அந்த புத்தர் சிலையையும் காண பிடிக்கும்.. அது மாலை நேரத்தில் இன்னமும் க்ளைமேட் ஜில்லென்று இருக்க, அவளுக்கோ கிளம்பவே மனமில்லை..

மனதார ஆண்டவனை வேண்டி, நன்றிகளும் கூறிவிட்டு, கிளம்ப மனமில்லாமல் இருந்தவளை “பல்லவி இன்னும் எத்தனை நேரம்..” என்று சொன்னவனும் கிளம்பாமல் தான் இருந்தான்..

நேரம் போக போக கொஞ்ச நேரத்தில் மஞ்சுளா அழைத்துவிட்டார்.. “வர லேட்டாகுமா..” என்று..

“இல்லம்மா கிளம்பிடுவோம்..” என்றவன், பல்லவியைப் பார்க்க, “சரி போகலாம்..” என்று புன்னகையோடு தான் சொன்னாள்..

வீட்டிற்கு போனதும் இரவு உணவை முடித்துக்கொண்டு, அனைவரும் சிறிது நேரம் பேசலாம் என்று அமர, சிவபாலன் தான் கேட்டார்,

“பல்லவி.. ஷ்யாம் அங்கயில்லைன்னு வேலையை விட்ட.. இப்போ என்ன ஐடியால இருக்க..” என்று..

அவருக்கு அது உறுத்திக்கொண்டே இருந்தது.. அவளின் படிப்பு.. திறமை இரண்டிற்கும் கிடைத்த வேலைதான் அது.. அதை ஷ்யாமிற்காக விட்டுவிட்டாள்.. இப்போதுதான் அனைத்தும் சரியாகிவிட்டது என்றதும் இதனை கேட்டுவிட்டார்..

பல்லவி அதைப்பற்றி யோசிக்கவேயில்லை என்பது அவள் முகம் மாற்றத்திலேயே தெரிந்தது.. ஷ்யாமை பார்த்தவள், பின் “இதைப்பத்தி இன்னும் யோசிக்கவேயில்ல மாமா..” என்றாள்.

“ஏன்மா பழைய வேலைக்கே ட்ரை பண்ண முடியாதா.. ரெண்டுபேரும் சேர்ந்து போய் வரலாமே..” என்று மஞ்சுளா கேட்க,

“இல்லத்தை அது சரி வராது.. ஷ்யாம் இல்லைன்னு விட்டேன்.. இப்போ மறுபடி போனா.. என்னவோ நம்ம இஷ்டத்துக்கு போனதுபோல ஆகிடும்.. கொஞ்ச நாள் போகட்டும் வேற வேலைக்கு ட்ரை பண்ணிக்கலாம்..” என்றவள் “என்ன தேவ்..” என்று அவனிடமும் கேட்க,

“ஜாப் எல்லாம் உன்னோட விருப்பம் தான் பல்லவி.. போ.. போகக்கூடாதுன்னு நான் சொல்ல மாட்டேன்..” என்றுவிட,

“ஹ்ம்ம் அதுவும் சரிதான் உனக்கு எப்போ தோணுதோ அப்போ பாத்துக்கலாம்..” என்று சிவபாலனும் சொல்லிட, மேலும் சிறிதுநேரம் பேசிவிட்டு, பல்லவியும் ஷ்யாமும் அவர்களின் அறைக்கு வர, வந்ததுமே

 “பல்லவி..” என்று அழைத்தவன், “கொஞ்சம் பேசணும்..” என,

“பேசு…. அதுக்கேன் இவ்வளோ தயக்கம்..“ என்றாள்  சாதாரணமாய்..

“தயக்கமெல்லாம் இல்லை.. பட்.. ம்ம்ச் ஒண்ணுமில்ல..” என,

“தேவ்.. பேசணும் சொன்னது நீதான். சோ எதுன்னாலும் இன்னிக்கே பேசிடு..” என்றவள், “என்கிட்ட என்ன தயக்கம்..” என,

“எஸ்.. தயக்கம் இல்லை.. பயம்.. சொல்லப்போனா நான் ரொம்ப பயந்துட்டேன் பல்லவி..” என்றான் அவனது உணர்வை முகத்தில் காட்டி..

“ஏய்.. தேவ் என்ன சொல்ற?? பயமா?? எதுக்கு?? ஏன்??” என்றவள் ஒன்றும் புரியாது அவனருகே வந்து அமர, அவளது இரண்டு கைகளையும் தன்னோடு பற்றி இழுத்துக்கொண்டவன்,

“ம்ம்ஹும்.. இது போதாது..” என்று சொல்லி, ஒருமுறை அவளை இறுக அணைக்க,

“தேவ் பேசிட்டு இருக்கப்போவே என்ன இது..” என்று பல்லவி சொன்னதும்..

“பேசத்தான்..” என்று அவளை விட்டு கொஞ்சம் மட்டும் விலகியவன்,

“இப்படில்லாம் நடக்காம போயிடுமோன்னு தான் பயந்துட்டேன்..” என, அப்போதும் அவளுக்குப் புரியவில்லை..

“வீட்ல பிரச்சனை ஆனதுமே எனக்கு என் மேலவே ஒரு கோபம் பல்லவி.. அடுத்து வேலையை நானே விடவேண்டிய நிலை. விட்டுட்டேன்.. அடுத்து நீ கிளம்பினதும் மனசுல ஒரு பயம்.. எப்படி எல்லாம் சரி பண்ண போறேன்னு.. எதுவும் சரியாகலைன்னா எந்த தைரியத்துல நான் உங்க வீட்ல பேச முடியும்னு..

நான் நினைச்சது போல வேலையும் அவ்வளோ ஈசியா கிடைக்கலை.. சோ நாள் போக போக ஒரு டென்சன்.. அதுவே ஒரு அழுத்தம் கூடிட்டே போச்சு.. அதான் பேசவேயில்ல.. மத்தபடி உன்னை ஹர்ட் பண்ணனும்னு எல்லாம் இல்லை.. சாரி ரொம்ப சாரி பல்லவி..” என,

அவன் சொன்னதைக் கேட்டு அவன் முகத்தையே பார்த்திருந்தவள், அவன் கன்னங்களை லேசாய் வருடி, “நான் நேத்தே சொன்னேன் நீ எனக்கு எதுவும் எக்ஸ்ப்ளெயின் பண்ண தேவையில்லைனு..” என, அவளின் கரங்களை அப்படியே அவனது இதழ்களுக்குக் கொண்டு வந்தவன், மெதுவாய் அதில் ஒரு பதிவையும் இட்டு,

“பின்ன வேற என்ன பண்ண சொல்ற??” என்றான்.

“ஒண்ணும்..  பண்ணவேணாம்.. இதேபோல எப்பவும் என்னை லவ் மட்டும் பண்ணு போதும்..” என்று பல்லவி சிரிக்க,

“ஹ்ம்ம் பண்ணிடலாம்.. அதுபோல நீயும் ஒண்ணு பண்ணனுமே..” என்றுசொல்லி அவளைக் குறும்பாய் பார்க்க,

“என்ன பண்ணனும்..??” என்றாள் ஆர்வமாய்..

“இப்போன்னு இல்லை.. அடுத்தடுத்து.. அடுத்த ஜென்மத்துல கூட.. நீ என்னை மட்டும் தான் லவ் பண்ணனும்…” என,

“தோடா.. இதெல்லாம்… பேராசை..” என்று சொல்லி பல்லவி சிரிக்க,  “அடேங்கப்பா.. போ டி.. என்ன மட்டும் லவ் பண்ணு போதும்.. மத்ததெல்லாம் நான் பார்த்துக்கிறேன்..” என,

“அதெல்லாம் சரி.. அன்னிக்கு எங்கப்பாக்கிட்ட என்ன சொல்லி பெர்மிசன் வாங்கின என்னை இங்க கூட்டிட்டு வர்றதுக்கு..” என்று அதிமுக்கிய கேள்வியைக் கேட்டாள் பல்லவி..

‘இது ரொம்ப முக்கியமா..’ என்று பார்த்தவன், “நான் எங்க பெர்மிசன் கேட்டேன்..” என்று ஸ்டைலாக தோள்களைக் குலுக்க, “பின்ன…” என்று பல்லவி கண்களை விரிக்க,

“நானும் பல்லவியும் வெளிய போறோம்னு தான் சொன்னேன்.. அதை வச்சுதான் அன்னிக்கு நைட் எனக்கு கால் பண்ணி கேட்டார்..” என்றான் கூலாய்..

“அப்போ… அப்போ… அன்னிக்கு என்னவோ டைலாக் எல்லாம் சொன்ன??” என்று கேட்டவளுக்கு,

“வேற வழி.. இல்லாட்டி நீயும் வந்திருக்க மாட்ட, உங்க வீட்ல தெரிஞ்சு தான் இங்க வந்திருக்கன்னு சொன்னாதான் உனக்கும் ஒரு மதிப்பிருக்கும் அதான்..” என்று அசட்டையாய் சொன்னவனை “அடப்பாவி…” என்றவளின் பார்வை  பின் ஆசையாய் தான் பார்த்தது..

      காதல்…. அவர்களை இன்னும் காதல் பண்ணியது..      

Advertisement