Advertisement

ஆஹா கல்யாணம் – சரயு

கல்யாணம் – 1

“சுதர்சன்என்னதான்டா செய்ற நீ???!! நேரமாச்சு.. நல்ல நேரம் முடியுறக்குள்ள அங்க போகணும்…” என்ற காவேரியின் குரலுக்கு மெதுவாய் அறையில் இருந்து தலை காட்டினான் சுதர்சன்.

“என்னடா சாவகாசமா எட்டிப் பாக்குற…”

“அதுக்கேம்மா இவ்வளோ கத்துற.. இங்கன இருக்க தென்கரைல வீடு.. பத்து நிமிஷம் கூட ஆகாது…” என்றபடி மிடுக்காய் சுதர்சன் வெளிய வர,

“நீ ஏன் சொல்லமாட்ட.. சின்னவ நேரா அங்க வர்றேன் சொல்லிட்டா.. பெரியவ  இங்கன இருக்க தேனில இருந்து வர இம்புட்டு நேரம்.. உங்கப்பாரு அப்போவே கிளம்பிப் போயி வாசல்ல உக்காந்தாச்சு.. சின்னவன் கார் எடுத்துட்டு வர்றேன்னு போனவனை ஆள காணோம்..” என்று காவேரி பொங்க ஆரம்பிக்க,

‘ஷப்பா..!! பொண்ணு பாக்க போறதுக்கே இவ்வளோ அலம்பல்னா.. கல்யாணம் முடியுறக்குள்ள நம்ம என்னாகப் போறோமோ…’ என்றுதான் நினைத்தான் சுதர்சன்.

முப்பதை தொடப் போகிறான். ஆளும் பார்க்க அம்சமாய்தான் இருப்பான். கை நிறைய சம்பளம். பெங்களூரில் ஐடி வேலை. குடும்பத்திலும் எந்த பிக்கலும் பிடுங்கலும் இல்லை. இரண்டு அக்காக்களுக்கு அப்புறம் பிறந்தவன் ஆக வீட்டிற்கு மூத்த வாரிசு இவன்தான்.. இவனின் திருமணப் பேச்சு எடுக்கையில் எல்லாம் ஏதாவது ஒன்று நடக்கும்.  அதனாலேயே தான் காவேரிக்கு இத்தனை டென்சன்.

ஆனால் சுதர்சனுக்கு மனதில் ஒரு உற்சாகம் ஊறிக்கொண்டே தான் இருந்தது. காரணம் பெண் பார்க்க போவது அவனுக்குப் பிடித்த பெண்ணை. அது இன்று வரைக்கும் யாருக்கும் தெரியாத விசயமும் கூட. காக்கா  உட்கார பனம்பழம் விழுந்த கதையாய் தன்னப்போல் எல்லாம் நடந்தது.

அம்மாவோடு பேசியபடி இருக்க, அவனின் பெரியக்கா ஜெயக்கொடியும், மாமா ரமேஷும் வந்திட, “வாங்க மாமா வாக்கா..” என்றபடி நின்றான்.

அதற்குள் இவனின் அப்பா முருகவேலும் உள்ளே வந்திட “என்னப்பா போலாமா??!!” என்று ஜெயக்கொடி கேட்க,  “சின்னவன் கார் எடுக்கப் போனான் ஆளக் காணோமே..” என்றார் நேரத்தைப் பார்த்தபடி.

“வந்திட்டு இருக்கானாம்.. போன் போட்டேன்..” என்ற காவேரி, “இவ்வளோ நேரமா??!” என்று மகளை கடிய,

“ம்ம்.. சொந்தத்துல கொடுக்கணும்னு கொடுத்தைல.. எங்க மாமியா வேற கெளம்பி உக்காந்து வர்றேன்னு சொல்லி இம்சை பண்ணிட்டாங்க.. அவங்க வந்தா இதை நடக்கவே விடமாட்டாங்க.. கழட்டிவிட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு.. பிள்ளைங்களை வேற பள்ளிக்கூடம் அனுப்பனும்ல..” என்றபடி ஜெயக்கொடியும் அம்மாவிற்கு உதவி செய்ய,

“ம்ம் ஜெயராணி நேரா அங்கவே வர்றேன்னு சொல்லிட்டா..” என்ற காவேரி “சுதர்சன் போ போய் சாமி கும்பிட்டு அப்படியே தாத்தா பாட்டி படத்துக்கு  விழுந்து கும்பிட்டு வா..” என்று மகனைப் அனுப்ப, அவனுக்கு பின்னேயே சென்ற ரமேஷ்

“என்ன மாப்பிள்ள இப்போவே ஒரு தேஜஸ் தெரியுதே..” என்றான் கிண்டலாய்.

“அப்படியா மாமா…” என்றவன் அதற்குமேல் எதுவும் சொல்லாது சாமி கும்பிட, மனதோ நிஜமாகவே ‘இது நல்லபடியாய் முடிந்திட வேண்டும்…’ என்று வேண்டியது.

அவன் பிரார்த்தித்து முடித்து கண்ணை திறக்கவேண்டும் என்பதற்காகவே காத்திருந்தது போல் ரமேஷ் “மாப்பிள்ள அப்புற ஒரு விஷயம்.. பொண்ணு வீட்டுல ஜாடை மாடைய எங்க பொண்ண பிடிச்சிருக்கான்னு எல்லாம் கேட்பாங்க.. ஆனா வாயே திறந்திடாத..” என, ‘இதென்ன வில்லங்கம்…’ என்றுதான் பார்த்தான் சுதர்சன்..

“ஆமாடா மாப்பிள்ள.. பெரியவங்க நாங்க பேசிப்போம்… உனக்கு பிடிச்சேயிருந்தாலும் உடனே சொல்லக் கூடாது புரிஞ்சதா??!!” என,

‘விளங்கிடும்…’ என்று எண்ணிக்கொண்டான் சுதர்சன்.

அதே நேரம் ஆதிகேசவன், அதான் ‘சின்னவன்..’ கார் எடுத்துக்கொண்டு வர, வீட்டினர் அனைவரும் பெண் பார்க்க கிளம்பினர்.

அங்கே பெண் வீட்டிலோ “ஏ பிரியா… பிரியா..” என்று அறையின் கதவை தட்டும் சத்தம் கேட்டு, “வந்துட்டேன் பெரிம்மா..” என்றபடி வந்து கதவினைத் திறந்தாள் சண்முகப் பிரியா.

“எல்லாம் கிளம்பிட்டாங்களாம்.. ரெடியா நீ??” என்றவர் அவளை ஆராய,

“ம்ம் ம்ம் எல்லாம் ரெடிதான்..” என்றவளைப் பார்த்து “இங்கபாரு கண்ணு.. இப்படியெல்லாம் அசால்ட்டா பேசக்கூடாது.. அமைதியா இருக்கணும்.. மாப்பிள்ளை உள்ளார வர்றப்போவே இங்கன ஜன்னல்கிட்ட நின்னு பார்த்திடு.. கீழ வந்து சரியா பார்க்க முடியாது…” என்று பூமா சொல்லவும், பட்டென்று சிரித்துவிட்டாள் பிரியா.

“ஏய் நான் என்னடி ஜோக்கா சொல்றேன்..”

“பெரிம்மா நீங்க பெரியப்பாவ இப்படித்தான் பார்த்தீங்களோ…” என,

“அடிக்கழுத.. உனக்கு நான்லாம் லாயக்கில்லை… உங்கம்மாவை கூப்பிடுறேன்..” என்றவர் “மீனா மீனா…” என்றழைக்க, “என்னக்கா… ரெடியா??!!” என்றபடி மீனாட்சியும் மேலே வர,

“இவள பாரு..” என்றுவிட்டு போனார் பூமா.

கூட்டு குடும்பம்.. அண்ணன் தம்பி இருவர்.. மூத்தவர் சரவணன் அவரின் மனைவி பூமா.. அவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உண்டு.. இருவருக்கும் திருமணம் ஆகிட, இளையவர் சண்முகம் அவரின் மனைவி மீனாட்சி.. இவர்களுக்கு சண்முகப் பிரியா, குமரன் என்ற இரு பிள்ளைகள்.

“என்ன டி இன்னும் கொஞ்சம் பூ வைக்க வேண்டியது தானே..” என்று மீனாட்சி கேட்க,

“போதும்மா தலை இழுக்குது..” என்றவள், “ம்மோய் வந்ததுக்கு நீயும் சொல்லிட்டு போயேன் எதையாவது..” என்றாள் கேலியாய்.

தன்னைப் பெண் பார்க்க வருகிறார்கள் என்ற பதற்றத்தை இப்படி பேசி தீர்த்துக்கொண்டு இருந்தாள் சண்முகப் பிரியா.. உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன் கதைதான். அக்கா வருவாள் என்று நினைத்திருக்க, மசக்கை காரணமாய் வரவில்லை.. அண்ணிக்கோ கீழே வேலைகள் இருக்க, தானே தயாராகிக் கொண்டாள். 

“என்னது??!! என்னத்தையாவது சொல்லணுமா… அதுசரி.. வர்றவங்கக்கிட்ட இப்படி பேசி வைக்காத.. அப்புறம் மாப்பிள்ளை வீட்ல இருந்து வர்ற பொம்பளையாளுங்க ஜாடை மாடையா கேப்பாங்க எங்க பையனை பிடிச்சிருக்கான்னு.. வாய் திறக்கக் கூடாது..” என்று மீனாட்சி சொல்ல, “என்னது??!!!” என்றுதான் பார்த்தாள் பிரியா..

“ஆமா.. வீட்ல பெரியவங்க சொல்றதுதான் அப்படின்னு சொல்லணும்… எதுக்கேட்டாலும் லேசா சிரிச்சே மழுப்பிடு என்ன..”

“அப்போ பிடிச்சிருந்தாலும் சொல்லக் கூடாதா??!!”

“எங்கக்கிட்ட சொல்லு.. நாங்க கேட்டுப்போம்..” என்றவர், “பொண்ணு பார்க்கத்தான் வர்றாங்க பிரியா.. எல்லாத்தையும் உடனே முடிவு பண்ணிட முடியாது.. நம்ம ஊரு.. ஓரளவு தெரிஞ்ச ஆளுங்க.. அதான்.. ஆனா இன்னும் முழுசா மாப்பிள்ள வேலை செய்யுற இடத்துல எல்லாம் விசாரிக்கல.. உங்க அண்ணன் செய்றேன் சொல்லிருக்கான்.. அலசி ஆராய்ஞ்சு தான் முடிவு செய்யணும்..” என்றார் மகள் ஆரம்பத்திலேயே மனதில் ஆசை வளர்த்திடக் கூடாது என்று.

ஆனால் இதனைக் கேட்டவளோ ஏகத்துக்கும் முறைத்தாள்.

“என்னடி..??”

“இந்த அலசி ஆராயுறது.. கிண்டி கிளருறது.. எல்லாம் முன்னாடியே செஞ்சிட்டு அப்புறம் பொண்ணு காட்ட வேண்டியது தானே..”

“அதெல்லாம் எங்களுக்குத் தெரியும்..” என்று மீனாட்சி சொல்லும்போதே வெளியே கார் வரும் ஓசைக் கேட்க,  “சரி சரி வந்துட்டாங்க போல நான் கீழ போறேன்.. நீ போய் வேகமா பாரு…” என்று கீழே இறங்கி வந்தார்.

சண்முகப் பிரியாவிற்கு மனதில் லேசாய் ஒரு நடுக்கம்.. ஜன்னல் பக்கம் நின்று கீழே பார்த்தாள்.. உயரமாய் இருப்பவன் தான் மாப்பிள்ளையோ என்று தோன்றியது. இந்த ஊர் தான் அதிகம் பார்த்ததில்லை.. அப்படியே பார்த்திருந்தாலும் கூட மனதில் பதிந்ததில்லை.. இப்போதோ, கண்களில் பார்த்து, மனது அவனின் உருவத்தை உறுதி செய்யுமுன் அனைவரும் வீட்டினுள்ளே வந்திருந்தனர்.

“ஆண்டவா..!!! டென்சனா இருக்கே….” என்று நகத்தை கடித்தபடி நின்றிருந்த சண்முகப் பிரியாவிற்கு வயது இருபத்தி மூன்று.. இஞ்சினியரிங் முடித்து ஐந்து மாதங்களே ஆகியிருந்தது.. வரன் பார்க்க ஆரம்பித்துவிட்டனர்..

வேலைக்குப் போகவேண்டும் என்றதற்கு ‘நீ வேலைக்கு போகணும்னு படிக்கவைக்கல.. நாலு விஷயம் தெரிஞ்சுக்கணும்னு தான் அனுப்பினோம்..’ என்று சொல்லி வாய் மூடிவிட்டனர்.

அவளின் அக்கா கஸ்தூரியும், வீட்டிற்கு மருமகளாய் வந்த மேகலாவும் வேலைக்குச் செல்லவில்லை. ஆனால் அனைவருமே பட்டதாரிகள்.. ஆக இவளுக்கும் வேலைக்குப் போகவில்லை என்பது பெரிய விசயமாய் தெரியவில்லை. எப்படியும் திருமணம் செய்துவைக்கப் போகிறார்கள் என்று தெரியும். அதனால் அதற்கு மனதளாவில் தயாராகிட, இதற்கு முன் ஓரிரு வரன் வந்ததுகூட பெண் பார்க்கும் அளவில் எல்லாம் வரவில்லை. பேச்சு வாக்கிலேயே நின்றுவிட, என்னவோ அவளுக்கு இது முடிந்திட வேண்டும் என்றே ஒரு எண்ணம்.

‘முதல்ல பார்க்க வர்றாங்க.. இதுவே முடிஞ்சிடணும்..’ இதுதான் அவளுக்கு மனதில் ஓட, சுதர்சனுக்கும் அதே எண்ணம் தான்..

கொஞ்சம் டென்சனாக இருந்தது அவனுக்கும்.. இதுவரைக்கும் எந்த பெண்ணையும் இப்படி பார்த்து எல்லாம் போனது இல்லை.. வீட்டினர் தான் போனார்கள்.. ஆனால் அதெல்லாம் முடியவில்லை.. ஊருக்கு வந்தே பல மாதம் ஆனது என்று பத்து நாட்கள் விடுமுறை எடுத்து வந்திருந்தான்.

அவன் வந்ததுமே காவேரி சொன்ன முதல் விஷயம் “ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்க.. முதல்ல குளிச்சிட்டு கோவிலுக்குப் போயிட்டு வா…” என்பதுதான்.

அன்று சனிக்கிழமை வேறு என்பதால், மாலை பெருமாள் கோவிலுக்கு துளசி வாங்கிக்கொண்டு சுதர்சன் செல்ல, அவன் முதன்முதலில் சண்முகப் பிரியாவை பார்த்ததும் அங்கே தான். அவளும், மேகலாவும் வந்திருந்தனர். எப்போதும் செவ்வாய் வெள்ளி அம்மன் கோவில் செல்வதும், சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்குச் செல்வதும் அவர்களுக்குப் பழக்கம் தான். இன்றும் அதுபோலவே வந்திருக்க, சுதர்சன் நின்றிருந்த வரிசைக்கு எதிர் வரிசையில் தான் பிரியாவும் நின்றிருந்தாள்.

முதலில் அவன் கவனிக்கவில்லை. எதிரே பார்த்தவனுக்கு, அந்த நொடி சண்முகப் பிரியாவை தவிர மற்றது எதுவுமே கண்ணில் தெரியவில்லை.. இள மஞ்சள் நிற புடவையில் அழகாய் ஒளிர்ந்தாள். சுதர்சனின் பார்வை அப்படியே அவளை வருட, பார்த்ததும் மனதில் நின்றது அவளின் சுருட்டை முடிதான்.

புஸ் என்றிருந்தது.. அதனை அடக்கி வைக்க ஏகப்பட்ட ஹேர் பின் குத்தியிருக்க ‘இவளுக்கு ஹேர் பின் வாங்கிக் கொடுக்கவே தனியா சம்பாரிக்கனும் போல..’ என்றுதான் நினைத்தான்.

தன்னை ஒருவன் பார்க்கிறான் என்பதுகூட தெரியாது, அவளோ வேண்டுதலில் தீவிரமாய் இருக்க, “ண்ணா.. அங்க பாரு.. தீபம் காட்டுறாங்க..” என்ற ஆதிகேசவனின் குரலில் தான் மீண்டான் சுதர்சன்..

அப்புறமென்ன பெருமாளிடம் ஏகப்பட்ட வேண்டுதல்கள் நொடியில் சுதர்சன் வைக்க, பிரசாதம் வாங்கி, கோவில் சுற்றி வெளியே வரும்வரைக்கும் கூட அவனின் பார்வை பிரியாவைத் தான் தொடர்ந்தது. விட்டால் பின்னேயே தொடர்ந்து போய் வீடு வரைக்கும் பார்த்து வந்திருப்பான். ஆனால் அவனின் உடன்பிறப்பு விடவேயில்லை.

“கிளம்பு ண்ணா…. கிளம்பு…” என்று ஒரு நச்சரிப்பு.

“ஏன்டா படுத்துற..” என்று இவன் பார்க்க “பெட் மேட்ச் இருக்குண்ணா போகணும்..” என்று தம்பிக்காரனோ பறந்தான்.

“இருட்டிருச்சு… இதுக்குமேலயா??!!” என்று கேட்டபடி பைக்கை கிளம்ப்ப, கிரவுண்ட்ல லைட் போட்டிருக்காங்க..  என்றான் தம்பி..

“நாங்க விளையாடுறப்போ இதெல்லாம் போடலையேடா..” என,

“அதெல்லாம் அந்த காலம்….” என்றவனை கண்ணாடி வழியாய் முறைக்க மட்டும்தான் முடிந்தது சுதர்சனுக்கு.

சுதர்சன் வீட்டில் இறங்கியதும், கேசவன் பைக்கில் பறந்துவிட, “என்னடா கூட்டமா??” என்று முருகவேல் கேட்க, “அவ்வளோ இல்லை..” என்றபடி அப்படியே இவனும் அமர்ந்திட,

“ஏங்க நாளைக்கு நம்ம ராணி நாத்துனாவோட கொழுந்தியா பொண்ணுக்கு நிச்சயம் பண்றாங்க.. ஒரு எட்டு போகணும்..” என்றபடி வந்தார் காவேரி.

மனதிற்குள் இதென்ன உறவுமுறை என்று சுதர்சன் கணக்குப் போட்டுக்கொண்டு இருக்க “அதுக்கென்ன நீயும் பெரியவனும் போயிட்டு வந்திடுங்க..” என்று அசராது சொன்ன அப்பாவை லேசாய் அதிர்ந்துப் போய் தான் பார்த்தான் சுதர்சன்..

“என்ன சுதர்சன்..”

“அப்பா… நான்லாம் மாட்டேன்..” என்று தலையை உலுக்க, “டேய் வா… பைக்ல போயிட்டு வந்திடலாம்.. தென்கரை மண்டபத்துல தான் விசேசம்….” என்று அம்மாவும் அழைக்க,

“ம்மா நீயும் அப்பாவும் போங்க…” என்றான் கொஞ்சம் எரிச்சலாய்..

“பின்ன இப்படி விசேசம் போனாதான் சொந்தம் பந்தம் நாலு பேருக்கு உன்னையும் தெரியும்.. உனக்கும் அவங்களை தெரியும்.. நீ பாட்டுக்கு வேலைன்னு அங்க போயிட்ட இப்போவே உன்னை நிறைய பேர் ஊர்ல மறந்துட்டாங்க.. எங்க போனாலும் பிறந்த ஊருதான்டா வேர்.. ஆஸ்திய தேடுறது போல, ஆள் பழக்கமும் வேணும் புரிஞ்சதா..” என்ற அம்மாவிடம் சரி என்றுமட்டுமே சொல்ல முடிந்தது.

மறுநாள் ஜீன்ஸ் டி ஷர்டில் வந்தவனிடம் “ஏன் சுதர்சா வேட்டி சட்டை எல்லாம் போட்டா என்ன??” என்று காவேரி கேட்க, ஆதிகேசவன் பட்டென்று சிரித்தேவிட்டான்.

அவனுக்குத் தெரியும் அண்ணனுக்கும் வேட்டிக்கும் காத தூரமென்று.

“டேய்…!!!” என்று தம்பியைப் பார்த்து முறைத்தவன் “நான் வரணுமா வேணாமா??!!” என்று கேட்க,  “சரி சரி வா..” என்று தான் இருவரும் கிளம்பிப் போயினர்.

இவர்கள் சென்றதுமே ஜெயராணியும், அவள் கணவன் பாண்டியனும் வந்து அருகமர்ந்திட அதன் பின்னே தான் சுதர்சனுக்குப் பொழுதே போனது. அம்மா சொன்னதுபோல நிறைய பேரை இவனுக்குத் தெரியவேயில்லை.. உன்னை எனக்குத் தெரியும் என்பதுபோல் பார்த்துச் சிரித்தவர்கள் வெகு சிலரே..

“என்ன மச்சான்.. கூட்டத்துல காணாம போனவன் கணக்கா முழிக்கிற..” என்று பாண்டியன் கேட்க,

“அட ஏன் மாமா.. எல்லாருமே புதுசா இருக்காங்க.. நீங்க மட்டும் வரலை அவ்வளோதான்..” என்று பேசியபடியே திரும்பியவனுக்கு திக்கென்று இருந்தது.

மேடையில் மணப்பெண்ணின் அருகே சண்முகப்பிரியா நின்றிருந்தாள். கோவிலுக்குச் சேலையில் வந்தவள், இப்போது ஒரு டிசைனர் சுடிதாரில் வந்திருக்க, இப்போதும் கூட அவளின் சுருட்டை முடித்தான் புஸ் என்று அவனைப் பார்த்து சிரித்தது.

‘இவ மட்டும் கொஞ்சம் உயரமா இருந்தா வீட்ல ஒட்டடை குச்சியே தேவையில்லை.. குருவிக் கூடு..’ என்று மனதில் கிண்டல் அடித்தவனுக்கு முகத்தில் சிரிப்புத் தெரிய,

“டேய் மச்சான்.. யாரப் பார்த்து சிரிக்கிற??” என்று பாண்டியன் கேட்க, “ஆ..!! யாரையும் இல்ல மாமா.. சும்மாதான்..” என்றவன் அடுத்து கொஞ்சம் உசாராகவே இருந்துகொண்டான். ஆனாலும் அவளைக் கவனிக்காமல் இல்லை..

‘ஒருவேளை நமக்கும் இந்த பொண்ணு சொந்தமோ..’ என்று பார்வை ஆராயா, அவளோடு வீட்டுப் பெரியவர்கள் யாரும் வந்ததாய் காணோம். மாறாகா ஏறக்குறைய அவளின் வயதில் இன்னும் இருவர் வந்திருக்க, ‘சரி கல்யாணப் பொண்ணுக்கு பிரண்ட்ஸ் போல…’ என்று எண்ணிக்கொண்டான்..

“பார்த்தியா மச்சான்.. உன்கிட்ட உக்கார வச்சிட்டு உங்க அக்காவும் அம்மாவும் அரட்டைக்குப் போயிட்டாங்க..” என்று பாண்டியன் சொல்ல, அவனையும் அறியாது அவனின் பார்வை அக்காவையும் அம்மாவையும் காண, அப்போது தான் சண்முகப் பிரியாவும் மேடையில் இருந்து இறங்கி வர, ஜெயராணி அவளின் கைகளைப் பிடித்து நிறுத்தி என்னவோ பேசுவது தெரிந்தது.

அவ்வளோதான் உடனே இவள் தனக்கு யார் என்று தெரிந்துகொள்ளும் வேகம் வர, “அக்கா யாரோடவோ பேசுது மாமா..” என, பாண்டியனும் பார்த்தவன் “அதுவா.. எங்க சின்னமாமா  பொண்ண இவங்க அண்ணனுக்குத் தான் கட்டிருக்கு..”என, மீண்டும் ஒரு உறவுமுறை கணக்கிடல்..

‘யப்பாடி நல்லவேளை நமக்கு தங்கச்சி வராது..’ என்று ஒரு நிம்மதி பெருமூச்சு வேறு..

இப்படி ஒவ்வொரு விசயமும் சுதர்சனுக்கு சாதகமாய் நடக்க, ஜெயராணி அங்கே அம்மாவிடம் என்ன சொல்லியிருந்தாளோ வீட்டிற்கு வந்ததுமே “ஏங்க நம்ம ஜெயராணி சொந்தத்துலயே பொண்ணு இருக்குங்க..” என்றார் காவேரி..

“யாரு..??” என்று முத்துவேல் கேட்க, காவேரி அதற்கு விளக்கம் கொடுக்க, இவனை கையிலேயே பிடிக்க முடியவில்லை..

“அவங்க வீடா.. நல்ல குடும்பம் தான்..” என்று முருகவேலும் சொன்னவர் “நீங்க கிளம்பவுமே தரகர் வந்து நாலஞ்சு பொண்ணு ஜாதகம் போட்டோ எல்லாம் கொடுத்துட்டு போனாரு.. என்னனு பாரு..” என்று ஒரு கவரை கொடுக்க, வாங்கி ஒவ்வொன்றாய் பார்த்த காவேரிக்கு மகிழ்ச்சியே.

“ஏங்க நான் சொன்னது இந்த பொண்ணத்தான்..” என்று சண்முகப்பிரியாவின் புகைப்படம் காட்ட, “நல்லாத்தான் இருக்கு.. அவனுக்குக் காட்டு..” என்றுவிட்டு சென்றுவிட்டார்..

ஆனால் அந்த புகைப்படம் பார்ப்பதற்குள் இந்த சுதர்சன் செய்த பிகு இருக்கிறதே சொல்லி மாளாது..

“அதென்னம்மா.. நாலு பேரு பார்த்து ஒருத்தரை செலெக்ட் பண்றது.. எனக்கு இதுல எல்லாம் விருப்பமே இல்லை..” என,

“டேய்.. இந்த போட்டோ மட்டும் பாருடா..” என்று காவேரி கண் முன்னே பிரியாவின் புகைப்படம் நீட்ட, ‘அட நம்ம குருவிக் கூடு.. எங்க போனாலும் சுத்தி சுத்தி வர்றாளே..’ என்றுதான் பார்த்தான்.

அதன்பின் என்ன நடக்கும்.. அது இதென்று இதோ பெண் பார்க்கும் படலம்..   

  

  

                      

Advertisement