Advertisement

ஆஹா கல்யாணம் !!

“என்னங்க.. மாமா.. வாங்க எல்லாம் வந்து உக்காந்தாச்சு…” என்று சண்முகப் பிரியா வந்து அழைக்க, “ஏன் டி.. தியேட்டர் எபெக்ட் கொடுத்து வச்சிருக்கீங்க எல்லாம்..” என்று சொல்ல,

“ம்ம் நம்ம கல்யாண வீடியோவும், தியேட்டர்ல வர படமும் உங்களுக்கு ஒண்ணா..” என்று நின்றவளை,

“ச்சே ச்சே நான் அப்படி சொல்வேனா..” என்றுதான் பார்த்தான்.

“என்ன லுக்கு.. வாங்க எல்லாம் வந்தாச்சு…” என்று கை பிடித்து சண்மு அழைக்க, “இப்போ ஏன் டி கூட்டத்துல கோவிந்தா போடணும்னு நினைக்கிற.. நம்ம மட்டும் ஹாயா பார்க்கலாம்ல…” என்று அவனும் கேட்க,

“ஊர்ல போய் ரெண்டுபேருமா கோவிந்தா போடலாம்.. இப்போ கூட்டத்துல போடலாம்..” என்று இழுத்துக்கொண்டு போனாள்.  

வீட்டு ஹாலில் பார்த்தால் மொத்த குடும்பமும் அமர்ந்திருந்தது. என்ன சண்மு வீட்டினர் மட்டும் இல்லை.. ஆதிகேசவன், ப்ரொஜக்டர் வாடைக்கு எடுத்து வந்து வைத்து எல்லாம் தயார் செய்திருக்க,

“டேய் இதெல்லாம் ஓவரா தெரியலையா??!!” என்றுதான் பார்த்தான்..

ஆனாலும் கேட்க முடியாதே. முதல் நாள் இப்படி எதுவோ சொன்னதற்கு தான் சண்முகப் பிரியா “பக்கத்து தெருவுல என் பிரன்ட் இருக்கா.. அவ கல்யாணத்த லோக்கல் கேபிள் சேனல் புல்லா போட்டாங்க… நான் என்ன அப்படியா கேட்டேன்.. வீடியோ எல்லார் கூடவும் சேர்ந்து பார்க்கனும்னு அண்ணிங்க ரெண்டு பேரையும் வர சொன்னேன்..” என்றிட,

“நீ நடத்து ம்மா தாயே..” என்றுவிட்டான்..

என்ன சொன்னாலும் இதுதான் நடக்கப் போகிறது என்று தெரியும் அவனுக்கு.. அக்காக்களிடம் சொன்னால், ‘ஏன் டா அப்போ எங்களுக்கும் ஆசை இருக்காதா ?? ஒண்ணா உக்காந்து பார்க்கனும்னு..’ என்றுதான் சொல்வர்..

முருகவேலோ முழுக்க முழுக்க மருமகள் கட்சி..

“சின்னபுள்ள ஆசை படுது சுதர்சா..” என்று முடித்துக்கொள்ள,

“கைப்புள்ள மாதிரி இருந்துத்ட் நீ எல்லாம் சின்ன புள்ளயா??” என்று சுதர்சன் கேட்டுவிட, பிரியா பிரியமாய் பார்த்த பார்வையில் “ஹி.. ஹி..” என்று அவனே இளித்து வைத்தும் விட்டான்..

“ச்சே.. என்ன கொடுமைடா.. சொந்த வீட்ல கூட இப்படி.. பெங்களூரு போறது வரைக்கும் வாய் திறக்காத சுதர்சன்..” என்று அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டாலும், அவனால் சண்முகப் பிரியாவை சீண்டாது எல்லாம் இருந்திடவே முடியவில்லை.

அது அவனையும் மீறி நடக்கும் ஒன்றாய் இருந்தது. அவளுக்கும் கூட அது பிடித்தே இருந்தது.. இப்போதெல்லாம் “டேய் சுதர்சா..” என்பதும் “சொல்றா சூனா பானா..” என்பதும் அவர்களுக்குள் வழக்கமான ஒன்றாகவும் இருந்தது.

இப்படி அனைவரும் ஒன்றாய் திருமண காணொளி பார்ப்பது என்று முடிவு செய்ய, காவேரியோ “எல்லாம் சரிதான்.. வீடியோ பாக்குறோம்னு யாரும் வேலைல கை வைக்காம இருக்கக் கூடாது.. அது ஒரு பக்கம் இது ஒரு பக்கம்னு இருக்கணும்.. ” என,

“ம்மோவ் இந்த வீட்லயே நீ ஒரு ஆள் தான் ம்மா சரியா பேசுற…” என்று சுதர்சன் சொல்ல,

“அதனால தானா உங்கப்பாக்கு வேற பொண்ணு பார்க்க கிளம்பின..” என்று காவேரி பதிலுக்கு சொல்ல, சண்முகப் பிரியாவிற்கு சிரிப்பினை அடக்கவே முடியவில்லை..

“இந்த அசிங்கம் தேவைதானா??!!” என்று அவனிடம் தனியே இருக்கையில் கேட்க,

“போ டி… மண்டை மேல ஒரு குருவி கூடு வச்சிட்டு நீ இவ்வளோ எல்லாம் பேசக்கூடாது..” என்று அவளின் தலையை பிடித்து ஆட்ட,

“பாஸ் பாஸ்.. நீங்க வாசம் செய்றதே அந்த கூட்டுல தான்..” என்று கண்ணடித்து சொல்ல, “சிக்க வச்சது நீதான் டி…” என்று செல்லம் கொஞ்சிக்கொண்டான்.

பெரியகுளம் வந்ததில் இருந்து மனைவியோடு பேசுவது என்பது அவர்களின் அறையில் என்றுமட்டும் தான் ஆனது.. யாரேனும் பார்க்க வந்திடுகிறார்கள்.. இல்லையோ யார் வீட்டிலேனும் விருந்து என்று அழைத்துவிடுகிறார்கள்.. சுதர்சனுக்கோ பிரியாவோடு பொழுது கிடைப்பது அரிதாகத்தான் இருந்தது.  

வீடே கலகலவென்று இருந்தது. சண்முகப் பிரியா உட்கார இடம் பார்க்க “ஒழுங்கா என்கிட்டே தான் உட்காரனும்..” என்று அவளை தன்னருகே அமர்த்திக்கொண்டான்..

அவளுக்கு இந்தப்பக்கம் ஜெயக்கொடி வேறு அமர்ந்திருக்க ஒன்றும் சொல்லாமல் அமர்ந்துகொண்டாள். எழுந்து வேறு இடம் போனால் அதற்கும் ஜெயக்கொடி எதுவும் வில்லங்கம் செய்வாளோ என்ற காரணமே..

“டேய்.. போட்டுவிடு டா.. பாப்போம்…” என்று முருகவேல் சொல்ல, ஆதிகேசவன், வீடியோவினை ப்ளே செய்ய, விநாயகர் துதியில் இருந்து ஆரம்பித்தது..

என்னதான் கண் முன்னே காட்சிகள் விரிந்தாலும், பிரியாவிற்கும் சுதர்சனுக்கும் நினைவு என்னவோ அந்த நாளுக்குத்தான் சென்றது.. வசதியாய் சாய்ந்து அமர்கிறேன் என்று சாய்ந்தவன், பிரியாவின் தோள் வளைத்து கை போட்டுக்கொள்ள,

“எதுவும் வேணுமாடா??!!” என்று கேட்டது ஜெயக்கொடியே..

சண்மு அமட்டு கடித்து சிரிப்பினை அடக்க, சுதர்சனோ “இல்லையேக்கா…” என்றவன் வேகமாய் கையை எடுத்துவிட்டு, சண்முவின் கை பிடித்து தன் மடி மீது வைத்துக்கொண்டான்..

“கை வச்சிட்டு சும்மா இருக்கணும்…” என்று சண்மு கிசுகிசுக்க,

“கட்டியா பிடிச்சேன்?? கை தானே பிடிச்சேன்..” என்று அவனும் அவளைப் போலவே சொல்ல,

தனி வீட்டினில், அவர்கள் இருவர் மட்டுமே இருக்கையில், எப்படி வேண்டுமானாலும் இருப்பது என்பது வேறு.. கூட்டு குடும்பத்தில் இத்தனை பேருக்கு மத்தியில், கணவனை ஒட்டி உரசி இப்படி அமர்ந்திருப்பதே அவளுக்குக் கொஞ்சம் லஜ்ஜையாய் தான் இருந்தது..

“ஏன் ராணி.. உன் சேலை கலரு வீடியோல வேற மாதிரி இருக்குல…” என்று ஜெயக்கொடி கேட்க, அவளின் பேச்சினில் கொஞ்சம் தெளிந்த சண்முகப் பிரியாவிற்கு என்னவோ கண் முன்னே நகர்ந்தோடும் காட்சிகளைப் பார்க்க பார்க்க அப்படியொரு நிறைவு மனதினில்..

மாப்பிள்ளை அழைப்பு காட்சி தான் ஓடிக்கொண்டு இருந்தது.. பூமா, மீனாட்சியும், ஆரத்தி எடுத்து, சுதர்சன் பாதம் கழுவி, மச்சான் முறைக்கு என்று குமரனும், வேலவனும் அவனுக்கு கழுத்து சங்கிலியும், கைச் சங்கிலியும் போட்டு உள்ளே அழைத்துவர, சுதர்சன் பார்க்கவே அப்படியொரு அழகனாய் இருந்தான்..

மாப்பிள்ளை பொலிவு அவன் முகத்தினில் அப்படியொரு பிரகாசம் கொடுத்திருந்தது.

“பெங்களூர்ல இருந்து வர்றப்போ பேசியல் எதுவும் பண்ணீங்களா?? இம்புட்டு ஷைனிங்கா இருக்கு..” என்று சண்மு சத்தமில்லாது கேட்க,

“போன் பேசுறப்போ நீ முத்தம் வச்சு வச்சு என் மூஞ்சி இப்படி ஆகிடுச்சு…” என்று அவன் கூசாது சொல்ல, நறுக்கென்று அவனின் தொடையில் கிள்ளிவிட்டாள்.

அவனால் கத்தவும் முடியவில்லை.. வலியை பொறுக்கவும் முடியவில்லை. அவன் அசைந்ததில், ரமேஷ் அவன் பக்கம் அமர்ந்திருந்தவன் “என்ன மாப்பிள்ள என்ன வேணும்??” என,

“ஒன்னும் வேணாம் மாமா…” என்றவன் பல்லைக் கடித்து சண்முகப் பிரியாவை முறைத்தான்.

அவளோ அதெல்லாம் கண்டுகொள்ளவேயில்லை. காவேரி என்னவோ  கேட்க “ஆமாங்க அத்தை.. அவங்க என் பெரிம்மாவோட சின்ன மதினி வீட்டு ஆளுங்க..” என்று உறவு முறையை விளக்கிக்கொண்டு இருந்தாள்.

ஒன்றும் சொல்லாது இப்போது சுதர்சன் திரும்ப வீடியோ பக்கம் பார்வை பதிக்க, இப்போது பெண்ணை அழைத்துக்கொண்டு மேடைக்கு வந்தனர், ஜெயக்கொடியும் ஜெயராணியும். சண்முகப் பிரியாவிற்கு புது பெண்ணுக்கே உரிய ஒரு தயக்கம் ஒரு பயம் அனைத்தையும் தாண்டி தனக்கு பிடித்தவனே மணவாளன் என்கிற பெருமிதம் எல்லாம் கலந்து அவளை இன்னும் அழகாய் காட்ட, சுதர்சன் எப்போதும் ரசிக்கும் அவளின் குருவிக் கூட்டின் இயற்கை அழகு தெரியாதவாறு அலங்காரம் செய்திருக்க,

“எங்க டி போச்சு உன் குருவி கூடு???” என்று மெதுவாய் கேட்டான்..

ரகசியம் பேசுகிறேன் என்று அவளின் காதருகே கேட்க, அவனின் மீசை முடி எல்லாம் அவள் கன்னம் உரச, சண்முப்பிரியாவோ “இப்போ எதுக்கு நீங்க என்னை கிஸ் பண்றீங்க??” என்று அதை விட மெதுவாய் கேட்க,

“நல்ல நல்லா பாட்டா போட்டிருக்காங்க..” என்ற பாண்டியனின் பேச்சில் இருவரும் திரும்பிக்கொண்டனர்.

இப்படியெல்லாம் நடக்கும் என்றுதான் சுதர்சன் பெங்களூர் போய் நாம் இருவரும் தனியே பார்ப்போம் என்று சொன்னது. இவள் தான் கேட்கவில்லை..

இப்படியே மாப்பிள்ளை அழைப்பு பெண் அழைப்பு, பின் நிச்சய புடவை, திருமண புடவை என்று மாறி மாறி இரு வீட்டு ஆட்களும் தங்களின் முறை செய்து, நலங்கு வைத்து என்று காட்சிகள் நகர, இவர்களுக்குள் பேச்சும் சீண்டலுமாய் தான் அந்த பொழுது கழிந்தது..

முதல் நாள் வீடியோ முடிந்துவிட, அடுத்து திருமண நாள் வீடியோ என்று ஆதிகேசவன் அதை ப்ளே செய்ய ஆரம்பிக்க, காவேரி “எல்லாம் சாப்பிட்டு வந்து பாத்துப்போம்…” என்றவிட, அனைவரும் இரவு உணவு என்று எழுந்தனர்.

ஆண்கள் அனைவரும் வரிசையாய் அமர்ந்துவிட, அவரவர் கணவன்மார்களுக்கு பெண்கள் பரிமாற, முருகவேல் நேரம் பார்த்தவர் “நீங்களும் அப்படியே போட்டு சாப்பிடுங்க.. இனி நாங்க சாப்பிட்டு அடுத்து நீங்க சாப்பிட்டு நேரமாகிடும்..” என,

“இருக்கட்டுங்க…” என்றுவிட்டார் காவேரி..

எப்போதும் அங்கே அந்தப் பழக்கமில்லை.. ஆண்கள் உண்ட பிறகு தான் பெண்கள்.. அதை மாற்றிக்கொள்ள அவர் எண்ணவில்லை.. அதற்குமேல் அங்கே யாரும் எதுவும் சொல்லவும் முடியாதே, ஆண்கள் முண்டு முடித்து, பெண்கள் உண்டு முடிக்க, நேரம் பிடித்தது.. பின் பாத்திரம் ஒதுக்கிப்போட “ம்மா காலைல கூட கழுவிக்கலாம்…” என்று ஜெயராணி சொல்ல,

“வேணாம் ராணி.. ஆளுக்கு ஒரு கை வச்சா அஞ்சு நிமிசத்துல முடிஞ்சிடும்.. எப்படியும் தூங்க லேட்டாகிடும்.. காலைல கொஞ்சம் லேட்டாவே எந்திரிச்சுப்போம்..” என,  பின் பிரியவும், ராணியும் தேய்த்துக் கொடுக்க, ஜெயாவும் காவேரியும் கழுவி வைத்தனர்..

“ம்மா எவ்வளோ நேரம்மா…” என்றுவந்து சின்ன மகன் அழைக்கவும்,

“அப்போ நீ வந்து கழுவுடா..” என்று அம்மா சொல்ல, பேசாது சென்றுவிட்டான்.

“என்னடா?? வர்றாங்கலா??” என்று பாண்டியன் கேட்க “கேட்டா நம்மளை கழுவச் சொல்றாங்க மாமா..” என்று வந்து அமர்ந்துகொண்டான்..

மேலும் அரைமணி நேரம் கழித்து பெண்கள் அனைவரும் வந்துவிட, இப்போது முன்னைப் போல் அமர முடியவில்லை. சுதர்சன் தன்னருகே பிரியாவிற்கு இடம் பிடித்து வைப்பது போல் அமர்ந்திருந்தான். ஆனாலும் அப்பா வந்து அமர்கையில் அவனால் வேணாம் என்று சொல்லிட முடியாது தானே. ஆண்கள் எல்லாம் சோபாவிலும் சேரிலும் இருக்க, காவேரி ஒருப்பக்கம் சுவரில் சாய்ந்து கால்களை நீட்டிக்கொள்ள, பெண்கள் இருவரும் அம்மாவின் அருகிலேயே பாய் விரித்து அமர்ந்துகொண்டனர்.

சண்முகப் பிரியா இவர்களுக்கு அடுத்து வந்தவளோ, எங்கே அமர்வது என்று பார்க்க, ஜெயராணி பக்கத்தில் இடம் பார்க்க, ஜெயராணியோ “பிரியா இப்படி வா..” என்று சொல்ல, அவளும் ஒன்றும் சொல்லாது அமர்ந்துகொண்டாள்.

ஆனால் அவர்கள் மூவரும் சாய்ந்து அமர்ந்திருக்க, இவளுக்கு சாய எல்லாம் இடமில்லை. எத்தனை நேரம் அப்படியே இருக்க, இத்தனை பேரின் முன்னே கால் நீட்டிக்கூட அமர முடியாது, இப்படி அப்படி என்று ஆடிக்கொண்டு இருந்தவள், சுதர்சனைத்தான் பார்த்தாள்.

திருமண நாள் வீடியோ ஓடிக்கொண்டு இருக்க, இளம் மஞ்சள் நிற புடவையில், சண்மு மேலும் அழகுற தெரிய, சுதர்சனுக்கு ‘ம்ம்ச் பேசாம அப்போ உக்காந்து இருந்தது போலவே இருந்திருக்கலாம்..’ என்று தோன்றிய நொடி, அவனின் பார்வையும் பிரியாவைத் தான் தொட்டது..

தனக்கு முன்னே மனைவி தன்னை நோக்குவது கண்டு என்ன என்று தலையை மட்டும் ஆட்ட, உட்கார முடியலை..  என்று பிரியாவும் சைகை செய்ய, ‘இரு..’ என்று கை காட்டியவனோ அடுத்த இரண்டு நொடியில் “சண்மு.. எனக்கு ஒரு பாயும் தலகாணியும் கொண்டு வா..” என்று கீழே இறங்கிக்கொண்டான்..

“ஏன்டா உக்காந்து பார்க்க முடியலையா??” என்று அப்பா கேட்டதற்கு,

“ஆபிஸ்ல உக்காந்துட்டே வேலை செய்றது.. ரொம்ப நேரம் இப்படி உட்கார முடியலைப்பா..” என்றவன், பிரியா பாய் கொண்டு வரவும் விரித்து தலையணை மீது லேசாய் சாய்வது போல் சாய்ந்து அமர்ந்துகொள்ள, பிரியாவும் அப்படியே அமர்ந்துகொண்டாள்.

அவளுக்கு பின்னே சோபாவின் கால் பகுதி இருக்க “சண்மு அப்படியே பின்னாடி சாஞ்சுக்க…” என்று சுதர்சன் சொல்லவும்,

அவனைப் பார்த்து லேசாய் சிரித்தவள் “தேங்க்ஸ்..” என்றபடி சாய்ந்துகொண்டாள்.

சண்மு சாய்ந்துகொள்ளவும், அவளின் கால்களுக்கு அருகேயே தலையணை போட்டு சுதர்சன் படுத்துக்கொள்ள, அவளின் கை பிடித்து தன் நெஞ்சின் மீது வைத்துக்கொண்டான்..

விளக்குகள் அமர்த்தி, வீடியோவின் வெளிச்சம் மட்டுமே இருக்க, அனைவரும் அமைதியாய் பார்த்துக்கொண்டு இருக்க,  சுதர்சனும் சண்முகப் பிரியாவும் ஹோம குண்டத்தின் முன் அமர்ந்து அமர்ந்து மந்திரங்கள் சொல்லிக்கொண்டு இருக்க,  சண்மு கண்கள் எரிந்து வழிந்த நீரை துடைத்துக்க, சுதர்சனுக்கோ வியர்த்துக்கொண்டு இருந்தது..

“இன்னொரு ஏசி கூட வச்சிருக்கலாம்..” என்று சுதர்சன் சொல்ல,

“ஆமா மச்சா மண்டபத்தையே சென்றல் ஏசி போட்டு இருக்கலாம்..” என்றான் பாண்டியன் கிண்டலாய்.

அடுத்து எதுவும் பேசவில்லை.. அனைவரின் கவனமும் திரையினில் தான் இருந்தது. யாகம் வளர்த்து, மந்திரங்கள் ஜபித்து, முப்பது முக்கோடி தேவர்களும், சொந்தமும் சுற்றமும் நட்பும் என்று அனைவரின் சாட்சியாக சுதர்சன் சண்முகப் பிரியாவின் கழுத்தினில் தாலி கட்ட, அனைவரும் அட்சதைத் தூவ, ஜெயக்கொடி தான் நாத்தனார் முடிச்சு போட்டாள்.

அதற்கு அவள் முதல் நாளே “ம்மா நான்தான் நாத்தனார் முடிச்சு போடுவேன்..” என்றுவேறு சொல்லியும் வைத்திருந்தாள்.

மீனாட்சிக்கு மகளின் கழுத்தினில் தாலி ஏறுகையில் சந்தோஷத்தில் கண்கள் கலங்கித்தான் போனது. அவருக்கு ஆதரவாய் பூமா கை பற்றிக்கொள்ள, அப்பாக்கள் இருவரின் முகத்திலும் எங்கள் பெண்ணின் திருமணம் நல்ல முறையில் முடிந்தது என்ற பெருமிதம் நிறைந்திருந்தது.

தன் வீட்டினர் முகங்கள் திரையில் தெரியவுமே, சண்முவிற்கு ஒருவித உணர்வு அவளை ஆட்கொள்வது போலிருந்தது. என்ன இருந்தாலும் அன்றைய தினம், அவளுக்கொரு உணர்வு கொடுத்தது என்றால், பெண் பிள்ளையின் திருமணம் செய்து கொடுத்த வீட்டினற்கு வேறொரு உணர்வு கொடுத்தது.    

தாலி கட்டி, மாலை மாற்றச் சொல்ல, சண்முகப் பிரியா சற்றே எம்பித்தான் சுதர்சனுக்கு மாலை சூட நேர்ந்தது.. அதுவும் உடனே எல்லாம் விடவில்லை.. ஜெயராணியும், ஜெயக்கொடியும் வந்து தங்களின் தம்பியை மறைத்து நின்றுகொண்டனர்..

அக்காட்சிகளை திரையில் பார்க்க அப்படி அழகாய் இருந்தது.. கையில் மாலை வைத்துக்கொண்டு, மணப்பெண் கோலத்தில், முகத்தில் சிரிப்பும் லேசான சிணுங்கலுமாய் சண்மு அவனைப் பார்த்து நிற்க,

அவனோ அவளை ரசித்துப் பார்க்கும் புன்னகையில் “நான் என்ன செய்வேன்..??” என்று அவளைப் பார்த்து நின்றான்..

“ம்ம் போடு போடு…” என்று ஜெயராணி சொல்வது, திரையில் தெளிவாய் தெரிய,

ஜெயக்கொடியோ “பிரியா நீ எப்படித்தான் மாலை போடுவான்னு நாங்களும் பார்த்துட்டு இருந்தோம்.. ஆனா.. பாரு.. எங்களையே சுத்தி வந்து என் தம்பிக்கு போட்டுட்ட…” என்று சொல்லி சிரிக்க,  நடந்ததும் அது தான்..

இவர்கள் இருவரும் மறைத்துக்கொள்ள, சண்மு முயன்று முயன்று பார்த்தவள், கண் இமைக்கும் நொடியில், நாத்தனார்கள் இருவரையும் சுற்றிக்கொண்டு போனவள், சுதர்சன் அருகே நின்று லேசாய் எம்பி மாலையை போட்டுவிட்டாள்.

பிரியா, திரையைப் பார்த்துக்கொண்டே சிரித்தபடி “நீங்களும் இவ்வளோ கலாட்டா செய்வீங்கன்னு நான் நினைக்கல அண்ணி..” என,

“பின்ன கல்யாணம்னா கலாட்டா இல்லாமையா??!!” என்று ஜெயாராணி கேட்க,

சுதர்சனோ ‘கல்யாணத்து அன்னிக்கு மட்டுமா கலாட்டா பண்ணீங்க??!! கல்யாணம்னு பேச்சு எடுத்ததுல இருந்து தானே கலாட்டா பண்றீங்க..’ என்று எண்ணிக்கொண்டான்..

அடுத்தது குடத்தில் இருந்து யார் முதலில் மோதிரம் எடுப்பது என்று இருவருக்கும் இடையில் குடம் கொண்டு வந்து வைத்திட, ரமேஷ் தான் ஆளுக்கு முதலில் அவனின் மோதிரம் கழட்டிக் கொடுத்தான்..

“ஜெயிக்கிறவங்களுக்குத்தான் இந்த மோதிரம்.. உங்களுக்கு வராது பரவாயில்லயா??!!” என்று அங்கிருந்த ஒருவர் கேட்க,

“கல்யாணமே என் மாச்சானுக்கு நான் பார்த்து முடிச்சது தான்.. மோதிரம் எல்லாம் என்ன பெரிய விஷயம்..” என்று ரமேஷ் அப்போது சொன்னது இப்போதும் கூட சுதர்சன் பிரியா இருவரும் நினைவு வந்தது.

உண்மையும் அதானே.. இந்த ரமேஷும் அவனின் அம்மாவும் கொஞ்சம் மனம் வைக்கவில்லை என்றால் இன்னும் நிறைய குட்டி கலாட்டாக்கள் நடந்துகொண்டு தான் இருந்திருக்கும்..

“ஏன் அண்ணி நிஜமாவே அண்ணன் தான் மோதிரம் எடுத்தானா??!! இல்லை நீங்க விட்டுக் கொடுத்தீங்களா??!!” என்று ஆதிகேசவன் கேட்க,

“நிஜமா உங்கண்ணா தான் எடுத்தார்..” என்று அவள் சொன்னதிலேயே அனைவர்க்கும் புரிந்தது, இவள் தான் கொடுத்திருக்கிறாள் என்று..

சுதர்சன் படுத்திருந்தபடி, பின்னே பார்வையை மட்டும் நிமிர்த்தி தன் மனைவியைப் பார்த்தான்..

“மச்சா… இப்போ மோதிரம் மட்டும் தங்கச்சி எடுத்துச்சு… அவ்வளோதான் நீ..” என்று பாண்டியன் கிண்டலாய் சொல்லிக்கொண்டு இருக்க, சண்மு தான் மோதிரத்தை எடுத்தவள், அப்படியே குடத்தினுள்ளே சுதர்சன் கையினில் திணித்துவிட்டாள்.

மோதிரம் எடுத்துவிட்டாள் என்று சுதர்சன் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே, அவள் தன் கையில் திணித்திட, அவன் அந்த நொடி சண்முவை பார்த்த பார்வை திரையினில் தெரிய

“டேய் தம்பி நல்லா தெரியுது டா.. நீ பாக்குறதிலேயே..” என்று ஜெயராணி கிண்டல் அடித்தாள்.

இப்படி ஒவ்வொன்றாய் முடிந்து, திருமண வீடியோவும் முடிந்திட, நேரம் பார்த்தால் இரவு ஒரு மணி.. அனைவருக்குமே உறக்கம் கண்களை சொக்கிக்கொண்டு இருந்தது. காவேரி மருமகளிடம் “காலைல சீக்கிரம் எழுந்து வரணும்னு எல்லாம் இல்லை…” என்று சொல்லித்தான் அனுப்பினார்..

அவளோ அறைக்குள் வந்ததும், படுத்துக்கொள்ள, சுதர்சன் வந்தவன், கதவடைத்து, விளக்கணைத்து அவளின் அருகே படுத்தவன், பின் சிறிது நேரத்தில் அவளின் கேசத்தில் முகம் புதைக்க,

“பிசாசே.. எதனை தடவ சொல்றது ஹேர் பின் கழட்டி வச்சிட்டு படுன்னு..” என்றான் வேகமாய்..

“ம்ம்ச் அதெல்லாம் உங்க வேலைன்னு நீங்கதானே மாமா அன்னிக்கு சொன்னீங்க…???” என்றாள் தூக்க கலக்கத்தில்,

“நானா??!!!”

“ம்ம் நீங்க தான்..” என்றவள் அவன்பக்கம் திரும்பிப் படுக்க, “ஒய் சண்மு உனக்குத் தூக்கம் வருதா??!!” என்றான் கொஞ்சலாய்..

“ம்ம்…” என்றவள், அவன் தோள் மீது தலை வைத்துக்கொள்ள, “கீழ மட்டும் அப்படி ரசிச்சு பார்த்த.. இப்போ நேர்ல இருக்கேன் பாக்க மாட்டியா??!” என்று ஆசையாய் கேட்படி அவளின் கன்னம் கழுத்து என்று முத்தமிட,  

“தினமும் தானே மாமா பாக்குறேன்..” என்றாள்.

“போ.. டி.. உன்னைப் போய் கொஞ்சுறேன் பாரு…” என்று அவன் தள்ளிப் படுத்துக்கொள்ள, சிறிது நேரம் அமைதியாய் இருந்த சண்மு,

“டேய் சுதர்சா….” என்று அவன் கை எடுத்து அவள் மீது போட்டுக்கொண்டு, அவளாகவே அவனை அணைத்துக்கொள்ள,

“ஹா ஹா அப்படி வாடா சூனா பானா…” என்றவனோ இன்னும் இன்னும் கொஞ்சத் தொடங்கினான்..

 

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத

முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்

மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து, என்னைக்

கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்..           

       

 

Advertisement