Advertisement

ஆஹா கல்யாணம் – 9

“என்னங்க.. சண்மு கிளாஸ் போறது வர்றது எல்லாம் சரி.. ஆனா நம்மள நம்பித்தான் இங்க அனுப்பி இருக்காங்க.. ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா நமக்கும் தான் கஷ்டம்..” என்று மேகலா சொல்ல, வேலவன் புரியாது தான் பார்த்தான்.

முதல்நாள் இருந்து மேகலாவின் முகம் சரியே இல்லை என்று அவனும் எண்ணிக்கொண்டு தான் இருந்தான். இன்று வார விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தவன், அவளிடம் கேட்கவேண்டும் என்று பேச்சை ஆரம்பிக்க அவளே விசயத்தையும் ஆரம்பித்துவிட்டாள். ஆனால் கேட்டவனுக்கோ ஒன்றும் விளங்கவில்லை.

“என்ன சொல்ற மேகலா??!! சண்மு இங்க இருக்கிறதுல என்ன பிரச்னை உனக்கு??” என,

“எனக்கு பிரச்னை எல்லாம் எதுவுமில்லை.. ஆனா எல்லாருக்கும் சேர்த்து பிரச்னை ஆகக்கூடதுன்னு தான் சொல்றேன்..” என்றவள், முதல்நாள் ஜெயராணி அழைத்தது, சுதர்சனுக்கு உடல்நிலை சரியில்லாது போனது, பின் பிரியாவோடு அவர்கள் பேசியது என்று எல்லாம் சொல்ல,

“லூசா நீ..!!!” என்று கோபமாய் கேட்டேவிட்டான் வேலவன்..

நல்லவேளை சண்முகப் பிரியா இன்னும் தூங்கி எழுந்து வரவில்லை.. ஆகையால் இவர்கள் பேச்சு கேட்கவில்லை.. கேட்டிருந்தாலும் என்ன ஆகியிருக்கும் அவளே “ஆமாண்ணா பேசினேன்…” என்று அவளே சொல்லியும் இருப்பாள்.

வேலவன் கத்தியதும், மேகலாவின் பார்வை வேகமாய் பிரியாவின் அறைக்குத்தான் சென்றுவந்தது.

‘கேட்டிருக்குமோ..’ என்று.

அதைப் பார்த்தவன் குரலை தளர்த்தி  “ம்ம்ச் என்ன மேகலா நீ… அவளே இதுல இருந்து வெளிய வரணும் அப்படினுதான் இங்க வந்திருக்கா…” என,

“அப்படின்னு நம்ம எல்லாம் நினைக்கிறோம்.. அவ அதெல்லாம் முயற்சியே செய்யப் போறதில்லை. பார்க்கலை பேசலைன்னா மனசுல தோணுனது இல்லைன்னு ஆகிடுமான்னு கேட்கிறா..” என்றவள்,

“நான் ஒன்னு கேக்குறேன்.. அந்த பத்து பவுணுல என்ன வந்திடப் போகுது.. இல்லை நம்மக்கிட்ட வசதி தான் இல்லையா??!! நம்மலே ஒருத்தரை கூட்டிட்டு வந்து முன்னாடி நிறுத்தி பிடிச்சிருக்கா சொல்லுனு கேட்டு, அவளும் சரின்னு சொன்னதுக்கு அப்புறம் இதில்ல உனக்குன்னு சொன்னா எப்படி நியாயம்?? ” என்றதும்,

“இப்போ நீ சண்முக்கு சப்போர்ட் பண்றியா?? இல்லை என்னைத் திட்டுறியா??” என்றான் புரியாது.

“ரெண்டும் இல்லை.. பொதுவா நியாயத்தை எடுத்து சொன்னேன்.. வீட்ல பேசுங்க கொஞ்சம்.. அவ மனசுல ஆசையா வளர்த்துக்கிட்டா…” என்ற மேகலாவிற்கு என்ன பதில் சொல்வது என்றுதான் பார்த்தான் வேலவன்..

மேகலா சொல்வதும் சரிதான்.. ஆனால் வீட்டில் பெரியவர்களோ அவர்கள் ஒரு நியாயம் சொன்னார்கள். இதில் சண்முகப்பிரியா எழுந்துவந்து என்ன சொல்வாளோ என்றுவேறு இருந்தது அவனுக்கு..

யோசித்துப் பார்த்தால், அனைவர்க்கும் இடையில் தான் மாட்டிக்கொண்டதாய் உணர, சிறிது நேரம் அமைதியாய் அமர்ந்திருந்தான்.

“என்னங்க இப்படி இருந்தா என்ன அர்த்தம்??!!”

“ம்ம்ம் யோசிக்கிறேன்னு அர்த்தம்..” எனும்போது தான் பிரியா எழுந்து வந்தாள்.

தூக்கி எழுந்து அவள் வந்த கோலம் பார்த்து சிரிப்புதான் வந்தது இருவருக்கும்.. சுருட்டை முடி வேறா.. பப்பரப்பா என்று இருந்தது..

வேலவன் கூட சிரிப்பை அடக்கிக்கொள்ள, மேகலாவோ “ஹா ஹா சண்மு… கண்ணாடி பார்த்தியா இல்லையா??!!” என,

“ஏன் அண்ணி..” என்றவள், சோம்பலாய் அமர, “இல்ல உன் முடி புசுபுசுன்னு இருக்கா, காக்கா குருவி எதுன்னா பார்த்தா கூட கூடு கட்டிரும்..” என்று சிரிக்காமல் சொல்ல,

“என்னது?!!!!” என்று முறைப்பாய் கேட்கத் தொடங்கியவள், பின் அவளும் சிரித்துவிட,

‘என்ன நேத்து சிரிச்சது போலவே சிரிக்கிறா??!!’ என்றுதான் பார்த்தாள் மேகலா..

“என்ன சண்மு.. பதிலுக்கு நீயும் வாருவன்னு பார்த்தா சிரிக்கிற..” என்று வேலவன் கேட்க, “என் முடியைப் பார்த்தா எல்லாருக்கும் அப்படிதான் தோணுதா??!!” என்றவளுக்கு இன்னும் முகம் புன்னகை பூசிக்கொள்ள,

“வேற யாரு சொன்னா??!!” என்று போட்டு வாங்கினாள் மேகலா..

“ம்ம்..” என்று இழுத்த பிரியாவோ “நேத்து பேசினேன்ல.. அப்போதான்..” என்று அரைகுறையாய் பேசிவிட்டு எழுந்து உள்ளே போய்விட,

‘பார்த்தீங்களா??!!!’ என்றுதான் பார்த்தாள் மேகலா வேலவனை.

வேலவன் திரும்பவும் யோசனைக்குப் போய்விட்டான், இத்தனை தூரம் போனபிறகு தங்கையிடம் நீ இதெல்லாம் மறந்துவிடு என்று சொல்லவும் அவனுக்கு மனதில்லை. சொல்லப்போனால் வேலவனுக்குமே சுதர்சனைப் பிடித்து இருந்தது.

உறவில் நட்பு அமைவது என்பது ஒரு வரம்.. அது அனைவர்க்கும் அமையாது இல்லையா??!! ஆனால் சுதர்சனிடம் எளிதாய் வேலவனுக்கு நட்புப் பாராட்ட முடிந்தது. ம்ம்ம்… வீட்டினில் பேசுமுன் ஒருமுறை சுதர்சனிடம் பேசலாம் என்று அழைத்தான்.

அங்கே சுதர்சனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அவனின் அலைபேசி சத்தம் எழுப்பிக்கொண்டே இருக்க, காவேரி ஜெயராணியிடம் “அவன் போன் அடிச்சிட்டே இருக்கு.. யாருன்னு கேளு.. இல்லன்னா முழிச்சிக்க போறான்..” என,

“ம்மா.. ஏதாவது ஆபிஸ் போனா இருக்கும்.. நம்ம என்ன பேசுறது..” என்றவள் யார் அழைத்தது என்று பாராது சைலெண்டில் போட்டுவிட, இரண்டு முறை அழைத்துப் பார்த்த வேலவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

“போன் எடுக்கலை…” என்று சொல்ல,

“ஹ்ம்ம் நம்ம பேச வேண்டியது நம்ம வீட்ல… அதைவிட்டு சும்மா சும்மா அவங்கட்ட பேசி என்னாகப் போகுது..” என்று மேகலா எழுந்து செல்ல,

“யாருண்ணா…” என்றபடி சண்முகப் பிரியா வர, அவளை கண்டிப்பாய் ஒரு பார்வை பார்த்தவன் “நேத்து யார்ட பேசின சண்மு??” என்றான்..

“தெரிஞ்சிட்டே கேட்கிறியே…” என்றவள், அமைதியாய் அவனைப் பார்க்க,

“இது தப்புன்னு உனக்கு தெரியலையா சண்மு.. ஒருவேளை இதெல்லாம் நடக்கலைன்னா?? அப்போ கஷ்டம் உனக்குத்தான் ஜாஸ்தி..” என்றான் ஒரு அண்ணனாய்.

“ம்ம்ம்.. நமக்கு பிடிச்ச விஷயத்துக்கு நம்ம முயற்சியே பண்ணாம ஐயோ இது நடக்கலையேன்னு அழுது புலம்பினா அதான் அண்ணா தப்பு. என்னிக்கும் எப்பவும் நான் உங்களை எல்லாம் மீறி போயிட மாட்டேன்.. அதுக்காக என்னோட முயற்சியை விடவும் மாட்டேன்…” என்றவளை என்ன செய்ய முடியும்..

அவள் மீது தவறுகள் இல்லாத போது யார் தான் என்ன செய்ய முடியும்.??

அண்ணன் ஏதாவது சொல்வான் என்று பிரியா அவனையே பார்க்க, “சரி போ… நான் ஒரு ரெண்டு நாள் கழிச்சு வீட்ல திரும்ப பேசிப்பாக்குறேன்.. நாளைக்கு இருந்து உனக்கு கிளாஸ் இருக்கு சண்மு…” என,

“ம்ம்…” என்று சந்தோசமாய் தலையாட்டிவிட்டுப் போனாள்.

அங்கே சுதர்சனோ அப்போதுதான் உறக்கம் முடித்து கண் விழிக்க, வழக்கம் போல அவன் கைகளை அலைபேசியை தேடித் தடவ, அதைக் காணோம் என்றதும் வேகமாய் எழுந்து அமர்ந்தவன் “ம்மா…!!!!” என்று குரல் கொடுத்தான்.

மகன் எழுவதற்காகவே காத்திருந்த காவேரி “எந்திரிச்சிட்டியா… சீக்கிரம் பல்லு விளக்கிட்டு வாடா.. சூப் போட்டு வச்சிருக்கேன் வந்து குடி..” என,

“ம்மா… என் போன் எங்க??!!” என்றான்

காவேரியோ நான் என்ன சொல்றேன் நீ என்ன சொல்ற என்று பார்க்க, “ம்மா.. சொல்லும்மா.. போன் எங்க??” என்றான் திரும்ப.

“அப்போயிருந்து கத்திட்டே இருந்தது.. ராணிதான் என்னவோ பண்ணா..” என்றவர் “இன்னிக்கு செக்கப் வேற போகணும்..” என,

“அதுவேறயா..??!!” என்று எண்ணிக்கொண்டவன், “அக்கா எங்க என் போன்…??” என்று ஜெயராணியைக் கேட்டுக்கொண்டே போக,

பாண்டியனோ “என்ன மச்சா.. எழுந்து வர்றப்போவே போன் போன்னு கேட்டிட்டு வர்ற.. யார் காலும் வருமா என்ன???!!” என்றான் கிண்டலாய்.

ஜெயராணி பாண்டியனிடம் சொல்லியிருந்தாள் போல, சுதர்சனும் பிரியாவும் பேசியதை.. நின்று அவனைப் பார்த்தவன் “யார் காலும் வராது.. ஆட்டுக்கால் சூப் வேணா வரும்..” என்றுவிட்டு போக,

நிறை நாட்களுக்குப் பிறகு மகன் அனைவரோடும் இயல்பாய் பேசவது போலிருந்தது முருகவேலுக்கு..

ஜெயராணியோ “அப்போ இருந்து ரிங் ஆச்சுடா.. நீ தூங்கிட்டு இருந்தன்னு சைலன்ட்ல போட்டு வச்சேன்..” என்றவள், அவனின் அலைபேசியை எடுத்துக்கொடுக்க,

“ம்ம்ம்…” என்றவனின் பார்வை மிஸ்ட் காலில் பதிந்து, வேலவன் அழைப்பைக் கண்டதும் “யார்னு பார்த்து எழுப்பிருக்க வேண்டியது தானேக்கா..” என்றபடி, வீட்டினர் முன்னிலையே வேலவனுக்கு அழைத்தான்.

இனியும் தெரியாமல் பேசி, அதெல்லாம் வேண்டியதில்லை என்று இருந்தது. எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக இருப்போம். என் விருப்பம் இதுதான் என்று சொல்லியாகிற்று, ஆக, அதற்கான முயற்சியை மட்டும் யாருக்கும் தெரியாமல் ஏன் செய்திட வேண்டும்??!!

அனைவரும் எதுவோ ஆபிஸ் கால் என்று எண்ணிக்கொண்டு இருக்க, “ஹாய் மச்சான்…” என்ற சுதர்சனின் குரலில் வேலவனே நொடியில் ஆடித்தான் போனான்.

அங்கே அவன் வீட்டினரோ, சரி யாரோ நண்பனுக்குப் பேசுகிறான் என்று எண்ண, “ஹலோ.. வேலவன்…” என்றவனின் பேச்சில் அனைவருமே நிமிர்ந்துப் பார்க்க,

வேலவனோ “அ..!!! சொ.. சொல்லுங்க மாப்பிள்ள…” என்று அவனும் அறியாது சொல்லிட, சுதர்சன் முகத்தினில் அப்படியொரு சந்தோசமும் சிரிப்பும்..

கண்கள் சுருங்க, சிரித்துப் பேசிய மகனை கண்கொட்டாமல் தான் பார்த்தார் காவேரி..

அவர் என்னவோ சொல்ல வர, முருகவேல் இப்போது எதுவும் பேசாதே என்று தடுத்துவிட, பாண்டியனோ “உன் தம்பி பலே ஆளுதான்…” என்றுவிட்டுப் போக,

‘பொண்ணு கூட சிரிச்சு பேசினாலும் பரவாயில்ல, பொண்ணோட அண்ணன்கிட்ட என்னத்த இப்படி சிரிச்சு பேசுறான்..’ என்றுதான் பார்த்தாள் ஜெயராணி.

வேலவனுக்கோ சுதர்சனின் இயல்பான பேச்சு மிக மிக பிடித்திட, இருவருமே சண்முகப் பிரியா பற்றியோ இல்லை அவர்களின் திருமணம் பற்றியும்  பேசவில்லை. பொதுவான பேச்சு.. என்னானது எதானது… இப்போது உடல்நிலை எப்படி.. வேலை எப்படி என்னவென்று..

இவ்வளவுதான்..

ஆனால் சுதர்சனுக்கோ பிரியாவை பற்றி கேட்க ஆசையாய் இருந்தது. ஒருமுறை பேசியாகிற்று.. மீண்டும் மீண்டும் பேச ஆசையாய் இருக்க, “ம்ம் அப்புறம்..” என்றான் சுதர்சன்..

“அப்புறம்..!!! ” என்று இழுத்த வேலவன், “ம்ம் ஓகே.. நான் வீட்ல பேசிட்டு சொல்றேன்..” என,

“ம்ம்…” என்று வேறு வழியில்லாமல் அலைபேசியை வைத்தான்..

வைத்தபின் தான் அவனுக்குப் புரிந்தது அவனைச் சுற்றி அப்படியொரு அமைதி நிலவுகிறது என்று.. மெதுவாய் பார்வையை மட்டும் ஒட்டியவன், ஒன்றும் அறியாதவன் போல, அங்கேயே அமர்ந்து செய்தித்தாள் படிக்க,

“உன்னை பல்ல விளக்கிட்டு வரச் சொன்னேன்..” என்று பல்லைக் கடித்தார் காவேரி.

அம்மாவின் கோபம் புரியாதா என்ன??!!

“அதும்மா..” என்று ஆரம்பிக்க,

“நீ ஒன்னும் சொல்லவேணாம்… எல்லாம் பெரிய மனுசங்க ஆகிட்டீங்க…” என்று புலம்பியபடி நகர்ந்து செல்ல,

முருகவேல் “என்ன சுதர்சன்..” என,

“ஹெல்த் பத்தி கேட்க கூப்பிட்டாங்கப்பா…” என்றான்..

“ம்ம்.. சரி…” என்றவருக்கு ஊருக்கு செல்லவுமே இதனை பேசி முடித்திட வேண்டும் என்று தோன்ற, “நானும் அம்மாவும் இன்னும் ரெண்டு மூணு நாள்ல கிளம்பலாம்னு இருக்கோம்..” என,

“அதெல்லாம் இல்ல.. பத்து பதினைஞ்சு நாள் இருந்து அவனை தேத்தனும்..” என்றார் காவேரி.

அம்மா அப்பா இருவரின் முகத்தையும் மாறி மாறி சுதர்சன் பார்க்க, அவனுக்கு நன்கு புரிந்தது அப்பா ஒரு முடிவில் இருக்க, அம்மாவும் எதுவோ ஒரு முடிவில் இருப்பது.

“ரெண்டுபேரும் பேசிட்டு ஒரு முடிவுக்கு வாங்க..” என்றவன், அறைக்கு எழுந்து செல்ல, 

‘ச்சே பிரியாக்கிட்ட பேசணும்னு கேட்டு இருக்கலாம்.. ஒரு நம்பர் வாங்க இவ்வளோ நாள்.. அவனவன் எப்படி எப்படியோ லவ் ஸ்டார்ட் பண்றான்….’ என்றுதான் அவனின் உள்ளம் எண்ணியது..

வேலவனிடம் நேரடியாய் உன் தங்கையின் அலைபேசி எண் வேண்டும் என்று கேட்பது அப்படியொன்றும் உசிதமாய் இல்லை.. ஜெயராணியிடம் சொன்னால் அவளே எப்படியேனும் வாங்கிக்கொடுப்பாள் தான்.. ஆனால் அவனுக்கோ தானே தேடிக்கொள்ள வேண்டும் போல் ஒரு ஆசை வர,

பேஸ் பூக்கில் சண்முகப் பிரியா இருக்கிறாளா என்று தேடத் துவங்கினான்.. ம்ம்ஹும் அவளின் பெயரை எத்தனை விதமாய் போட்டு பார்க்க வேண்டுமோ அதெல்லாம் போட்டு தேடிப் பார்த்துவிட்டான், அவளைக் கண்டுப்பிடிக்கவே முடியவில்லை.

‘ஒருவேளை இல்லையோ…’ என்று பார்த்துக்கொண்டு இருக்க,  

காவேரியோ “சுதர்சன்…!!” என்று அழைத்துக்கொண்டு இருக்க,

“ம்மா இதோ இதோ..” என்றவன் பத்து நிமிடமாகியும் வெளி வராது கண்டு,

“டேய் நீ என்ன நினைச்சிட்டு இருக்க??!!” என்றபடி உள்ளே வந்தார்.

“என்னம்மா..??!!!!”

“நீ பண்றது எதுவும் சரியில்லை சுதர்சன்.. உன்னைப் பெத்தவங்க நாங்க இருக்கோம்.. உடம்பு சரியில்லைன்னு உன்னை பார்த்துக்க இங்க வந்தா நீ கொஞ்சம் கூட என் பேச்சை காதில வாங்காம சுத்திட்டு இருக்க..” என்று காவேரி பேசவும்,

ஜெயராணி  “ம்மா என்னம்மா..” என்று வர,

“நீ எதுவும் பேசாத.. இது நானும் என் பையனும் பேசுறது.. யாரும் வரக்கூடாது..” என்றவர்,

“இப்போ என்னடா??!! உனக்கு அந்த பொண்ண பிடிச்சிருக்கு அதானே..” என, அக்கா தம்பி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.   

“என்னடா முழிக்கிற.. அதான் மாமன் மச்சான்னு உறவு கொண்டாடுற.. இதுக்குமேல நாங்க என்ன சொல்லி நீ கேட்கப் போற.. இல்ல சொல்லாம எதுவும் செய்யனும்னு நினைச்சு இருக்கியா??!!!” என்றதும்

“ம்மா போதும்மா…” என்று சுதர்சன் கோபத்தில் கத்திவிட்டான்.

நேற்றிலிருந்து மனதில் இருந்த சந்தோசம் துளியும் இல்லை.. சொல்லாமல் எதுவும் செய்யப் போகிறேன் என்றால் என்ன செய்துவிடப் போகிறேன் நான்??!! என்றுதான் அம்மாவைப் பார்த்தான்..

நேருக்கு நேரான பார்வை.. நிச்சயம் அந்த பார்வை பார்த்து தவறாய் எதுவும் செய்திட முடியாது. காவேரியும் மகனை நேருக்கு நேர் பார்த்தவர்,

“எங்களை மீறி இப்படி நீ பண்ணிட்டு இருக்க??!! இதெல்லாம் எங்களுக்கு அவமானம் இல்லையா சுதர்சன்..” என,

முருகவேலோ “காவேரி இந்த பேச்சை விடு..” என்று அதட்டினார்.

இப்போது கணவரும் இவர்கள் பக்கம் சேர்ந்துகொள்ள  காவேரிக்கு என்னவோ மனது இன்னமும் அடிபட்டு போனது.

“அப்போ அவன் பண்றது தப்புன்னு எடுத்து சொல்ல வேணாமா??!!” என்று கணவரைப் பார்க்க,

“அவன் தப்பு பண்ணா, நமக்கு தெரிஞ்சு பண்ணனும்னு நினைக்கமாட்டான்.. தெரியாம செய்யனும்னு தான் நினைப்பான்..” என, சுதர்சனுக்கு ‘அப்பாவாவது தன்னை புரிந்துகொண்டாரே..’ என்று இருந்தது.

காவேரிக்கு அனைத்தும் புரிந்தாலும், என்னவோ ஒன்று சட்டென்று அனைவரும் ஒன்று சேர்ந்துகொண்டு இப்போது தனக்குத் தெரியாமல் எல்லாம் செய்வதாய் ஓர் உணர்வு..

மகனது மனம் அறிந்தாலும், வீட்டினர் விருப்பம் புரிந்தாலும் காவேரிக்கு அதை உடனே ஒப்புக்கொள்ள மனது வரவில்லை.

அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவர் “எல்லாம் சேர்த்து என்னை ஒத்துக்கிட்டீங்க தானே..” என்றுவிட்டு நகர்ந்துசெல்ல,

“ம்ம்ச்…!!!” என்று அப்படியே சுதர்சன் சோர்ந்து போய் கட்டிலில் அமர்ந்துவிட்டான்.

        

 

 

Advertisement