Advertisement

ஆஹா கல்யாணம் – 8

“நம்ம ராணியோட தம்பிக்கு உடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரியில சேர்த்து இருந்தாங்களாம் டி..” என்று மேகலாவின் அம்மா சொல்ல,

“என்னம்மா சொல்ற??!! நிஜமாவா??!! உனக்கு யாரு சொன்னா??!” என்ற மேகலாவின் பார்வை, சண்முகப்பிரியா காதினில் இது விழுந்திட கூடாதே என்று சுற்றி முற்றி பார்த்தது.

“ம்ம் உன் நாத்துனா இப்போதான் மாடிக்கு போனா.. நேத்து இங்க வர்றப்போ ராணியோட மாமியாவ பார்த்தேன்.. அவங்கதான் சொன்னாங்க.. இப்படின்னு..” என,

“ஓ!!! என்னவாம்??!!” என்றாள் மேகலா.

“அது என்னவோ ரெண்டு நாளா சாப்பிடலையாம் அந்த பையன்..  பிரஷர் வேற கூடிருக்காம்.. எல்லாம் சேர்த்து மயக்கம்போட்டு..” என்று மேகலாவின் அம்மா, தனக்கு தெரிந்த இரண்டு புள்ளியை, ஊடுபுள்ளி, வைத்து கம்பிக்கோலம் போட்டு முடிக்க,

“அச்சோ..!!!” என்று வருந்தினாள் மேகலா.

“ம்ம்ம் பேசாம அப்போவே பேசி முடிச்சு இருக்கலாம்.. நல்ல பையனும் கூட…”

“அதுக்கு நாங்க என்ன செய்ய முடியும்மா.. அவங்களும் கொஞ்சம் சமாதானம் ஆகி வரணும்ல.. கஷ்டம் எல்லாருக்கும்தான்..” என்ற மேகலாவிற்கு அவளின் அம்மா கிளம்பிச் சென்ற பின்னே தான் கொஞ்சம் மூச்சு விட முடிந்தது.

எங்கே சண்முகப்பிரியாவின் முன்  அது இதென்று பேசி, அவள் மேலும் சங்கடப் பட நேருமோ என்று என்றிருக்க, அவளோ இங்கே வந்த இந்த இரண்டு நாட்களும் ஒருவித அமைதியில் தான் இருந்தாள்.

எப்போதும் இருக்கும் பேச்சு, கேலி கிண்டல் அதெல்லாம் எதுவுமில்லை. எதோ ஒரு யோசனை அது அவளின் முகத்தில் நன்கு தெரிந்தது.

அன்று காலையில் வேலவன் “என்ன கோர்ஸ் பண்ணலாம்னு இருக்க சண்மு..” என,

“ம்ம்ம்… எனக்கு பேக்கரி கிளாஸ் போகணும்னு ஆசைண்ணா..” என்றாள்.

“பேக்கரி கிளாசா??!!!” என்று கணவன் மனைவி இருவரும் ஒருவர் முகத்தினை ஒருவர் பார்க்க,

“ம்ம்..” என்று உதடு பிதுக்கி தலையை ஆட்டியவளை கண்டு சிரிப்புதான் வந்தது.

“அதை நானே சொல்லித் தருவேனே..” என்று மேகலா சொல்ல,

“நோ நோ.. எனக்கு ப்ரோபஸ்னலா கத்துக்கணும்.. வீடியோஸ் பார்த்து செய்றது எல்லாம் வேணாம்..” என,

“ம்ம்ம்  நீ இருக்க பாரு..” என்ற வேலவன், “ஓகே.. ஈவ்னிங் வர்றபோ எங்க என்னன்னு பார்த்துட்டு வர்றேன்..” என்றுவிட்டு போயிருந்தான்.

முதல் நாள் இரவே, மதுரையில் ஒரு விசேசம் என்று மேகலாவின் அம்மாவும் அங்கே வந்திருக்க, வேலவன் கிளம்பிய பிறகு மகளிடம் சுதர்சன் பற்றிய செய்தியை சொல்லிவிட்டுக் கிளம்ப, மேகலாவிற்கு மனது ஒருவித சங்கடத்தில் உழன்றது.

அன்று சுதர்சன் கேட்டான் என்று இருவரையும் பேச விட்டிருக்கக் கூடாதோ என்று எண்ணினாள்.

சண்முகப்பிரியா மாடியில் இருந்து காய்ந்த துணிகளை எடுத்துக்கொண்டு வந்தவள் “எங்க அண்ணி அத்தை கிளம்பிட்டாங்களா??!!” என,

“இப்போ தான் சண்மு…” என்றவள்,  “சண்மு நான் இப்படி சொல்றேன்னு தப்பா நினைக்கக் கூடாது..” என்றாள் தயங்கி..

‘என்ன சொல்லப் போறீங்க??!!!’ என்றுதான் பார்த்தாள் பிரியா..

“அன்னிக்கு உங்களை பேச விட்டிருக்கவே கூடாதுன்னு தோணுது.. அதுனால தானே உனக்கும் இவ்வளோ கஷ்டம்..” என,

“ம்ம் பேசலைன்னாலும் மனசுல தோணுனது மாறுமா அண்ணி??!!” என்றாள் சண்முவும்.

உண்மை தான், ஒருவரைப் பார்த்தாலும், பார்க்காவிட்டாலும், பேசினாலும் பேசாவிட்டாலும் நம் மனதில் தோன்றிய எண்ணங்கள் மாறுமா என்ன??

அதிலும் நேசம் என்பது??

மாறுவது சிரமம் தானே..

“இல்ல சண்மு.. அது.. என்ன இருந்தாலும் பெரியவங்க சொல்றது சரிதான். கல்யாண விஷயம்.. நம்ம நினைச்சுது போல நடக்கலைன்னா கஷ்டம் தான..”

“ம்ம்… எனக்கும் ஒரு சேஞ் வேணும்னு தானே அண்ணி இங்க வந்தேன்..”

“நீயும் கொஞ்ச மனச மாத்திக்கப் பாரு சண்மு.. எது நடந்தாலும் உனக்கு நல்லதா நடக்கணும்.. அதான் எங்களுக்கு வேணும்..” என,

“சரிண்ணி, சாயங்காலம் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போயிட்டு வரலாமா??” என்று பிரியா கேட்க, மேகலாவும் போகலாம் என்றுவிட்டாள்.

எப்படியோ சண்முகப்பிரியா இந்த விசயத்தில் இருந்து வெளியே வந்தால் போதும் என்றானது அவளுக்கு.

அங்கே சுதர்சனோ மருத்துவமனையில் இருந்து வீடு வந்திருந்தான்.. ஆதிகேசவனும், ஜெயக்கொடியும் ரமேஷும் ஊருக்கு வந்திட, அங்கே அப்பா அம்மா மற்றும் ஜெயராணியும் பாண்டியனும் இருந்தனர்.

“லீவ் போடு..” என்று காவேரி சொல்ல,

“ஏற்கனவே லீவ் போட்டுத்தானே ம்மா ஊருக்கு வந்தேன்.. இனி போட முடியாது..” என்றவன் ‘வொர்க் ப்ரம் ஹோம்..’ என்று வீட்டில் இருந்தபடியே வேலைகள் செய்தான்.

உடலில் அசதி இருந்தாலும், ஒவ்வொரு நொடியும் அவனுக்கு சண்முகப் பிரியாவிடம் பேசிடவேண்டும் என்ற எண்ணமும் அதிகரித்துக்கொண்டு இருந்தது.

அவள் தன்னை நினைப்பாளா??? என்ன நினைப்பாள்?? இதெல்லாம் தோன்ற,

‘பெரிய இவனாட்டம் பேசிட்டு வந்துட்டு கடைசில இவன் ஒரு வெத்துவேட்டுன்னு நினைப்பா…’ என்று அவனின் மனதே கேலி பேச,

“ம்ம்ச்…” என்று சலிப்பாய் அமர்ந்துகொண்டான்.

மனது ஒருவித சலிப்பை உணரத்தான் செய்தது. என்னடா வாழ்க்கை இது என்று.. நல்ல படிப்பு.. உத்தியோகம்… குடும்பம் எல்லாம் இருந்தும் கூட, மனதினில் நிம்மதியில்லை எனில் அவனும்தான் என்ன செய்வான்??

அவன் நினைத்தது எல்லாம் ஒன்றே ஒன்றுதானே மனதிற்கு பிடித்த பெண்ணோடு தன் வாழ்வை அமைத்துக்கொள்வது.. இதில் தவறு என்று ஏதேனும் இருக்கிறதா என்ன??

யார் யாரோ ஒருவரின் பிடிவாதங்களுக்காக இன்று அவன் இப்படி..

வேலை செய்கிறேன் என்று அறையினுள் வந்து அமர்ந்தவனுக்கு அந்த எண்ணமே இல்லை.. முழுக்க முழுக்க அவனின் குருவிக்கூட்டினுள் புகுந்துக்கொண்டான்.. அப்படியே சாய்ந்து அமர்ந்து இருக்க, ஜெயராணி உள்ளே வந்தவன்,

“என்னடா என்ன பண்ணுது??!!” என்றாள் கொஞ்சம் பதற்றமாய்..

கண்களை திறந்தவனோ “ஷ்..!! அக்கா சத்தம் போடாத..” என்று வாயில் விரல் வைத்தவன்,

“ஒன்னும் பண்ணலை.. ஜஸ்ட் சும்மா சாஞ்சிருக்கேன்..” என,

“வேலை செய்ய முடியலைன்னா மெடிக்கல் லீவ் கூட போடவேண்டியது தானே.. இழுத்து வைக்காத சுதர்சன்.. லீவ் போட்டு ஊருக்கு வாங்க எங்களோட..” என்று அவளும் சொல்ல,

“ஊருக்கு வந்து??!!!” என்றான் கொஞ்சம் வேகமாய்..

“என்னடா இப்படி சொல்ற??!!”

“நிஜமாதான்.. வந்து என்ன செய்ய சொல்ற??? நான் இனி ஊருக்கு வர்றதா இல்லைக்கா..” என்றவன், மீண்டும் கண்களை மூடிக்கொண்டான்.

மனதில் குற்றவுணர்வு.. சும்மா இருந்தவளையும் பேசி மனது கலைத்துவிட்டோமோ என்று. இவன் காரின் பின்னே போகாது இருந்திருந்தால், அவளும் அப்படியே கடந்து போயிருப்பாள் என்று எண்ணினானோ என்னவோ.

ஜெயராணி இரண்டொரு நொடி நின்று பார்த்தவள் “ம்ம் ஜூஸ் எடுத்துட்டு வரவா??!!” என,

“எனக்கு ஒன்னும் வேணாம்..” என்றவன், “நாளைக்கு டிக்கட் போடுன்னு மாமா சொன்னார்.. போடவா??!!” என்றான்.

“ஏன்டா எங்களை போன்னு சொல்றியா??!!” என்றாள் கிண்டலாய் சிரித்து.

இப்படி பேசினாலாவது தம்பி ஒருநிலையில் சகஜமாய் பேசுவான் என்று அவள் முயற்சிக்க, “ம்ம்ச் போ க்கா.. போடணும்னா சொல்லு.. போடறேன்.. இல்லையா விடு..” என,

“டேய்.. நீ என்ன இப்படி பேசிட்டு இருக்க.. வாழ்க்கையே வெறுத்துப் போனது மாதிரி..” என்றவள், அவன் அருகே வந்து உக்கார்ந்து “வேற எதுவும் பிரச்னையா சுதர்சன்..” என்று கேட்க,

“ம்ம்.. மனசுல என்னவோ ஒரு தவிப்பா இருக்குக்கா. அந்த புள்ள சும்மா கூட இருந்திருக்கும்.. இல்லை அவங்க வீட்ல சொல்றதுக்கு மனசை மாத்திருக்கும். நான் வேற போய் பேசி.. அது மனசுல இப்போ என்ன நினைக்கிதோ தெரியலை..” என்றான் உள்ளார்ந்த வருத்தத்தோடு.

“ம்ம்ம்.. இப்போ பீல் பண்ணி ஒன்னும் ஆகப்போறது இல்லை.. இதுக்காக நீ உடம்பை கெடுத்துக்காத.. இப்போ என்ன அந்த பொண்ணு உன்னை தப்பா எதுவும் நினைக்கலைன்னு தெரிஞ்சா உனக்கு நிம்மதியா இருக்குமா??” என்று ஜெயராணி கேட்கவும்,

“ஏன் நீ என்ன செய்யப் போற??!!” என்றான் வேகமாய்.

“வேறென்ன செய்ய.. நீ இப்படி மூஞ்சி வச்சிருக்கிறது சுத்தமா பிடிக்கல.. அம்மா பார்த்தா இன்னும் அழும்.. அதான் மேகலாக்கிட்ட பேசிப் பார்க்கலாம்னு இருக்கேன்..” என்ற ஜெயராணி அவளின் அலைபேசி எடுத்து வர,

“அக்கா அதெல்லாம் வேணாம்.. அங்க என்ன சூழ்நிலையோ என்னவோ..” என்றான் சுதர்சன்..

“மறுப்பு தெளிவா வரலையே தம்பி…” என்று சிரித்தவள்,

“நான் பேசுற விதத்துல பேசுறேன் போதுமா.??” என்றுசொல்லி மேகலாவிற்கு அழைக்க,

அங்கே மதுரையில் மேகலாவும், சண்முகப் பிரியாவும் மதிய சமையலுக்கு தயார் செய்துகொண்டு இருக்க, ஜெயராணி எண்ணில் இருந்து அழைப்பு என்றதும் மேகலாவிற்கு திக் என்றுதான் இருந்தது.

“அண்ணி எடுத்துப் பேசுங்க அண்ணி… அப்போ இருந்து ரிங் அடிக்குது..” என்று பிரியா சொல்லும்போதே,

“வேணாம் சண்மு…” என்றாள் மேகலா பதற்றமாய்.

“ஏன்?? என்னாச்சு?? யாரு..” என்று சண்முகப் பிரியா கேட்க “அது.. ஜெயராணியக்கா தான் கூப்பிடுறாங்க…” என,

“ஓ..!!!” என்ற பிரியாவின் முகத்தினில் கலவையான பாவனைகள்.

“எ.. எடுத்துப் பேசுங்கண்ணி… எனக்காக பார்க்க வேணாம்.. அவங்க உங்களுக்கு சொந்தம் தான..”

“அதுக்கில்ல.. என்ன சொல்வாங்களோ என்னவோன்னுதான்..” என்று மேகலாவும் இழுக்க,

“சும்மா பேசுங்க..” என்ற பிரியா சமயலறையில் இருந்து வெளிக் கிளம்ப,

“நீ நீயும் இரு சண்மு..” என்ற மேகலா திரும்ப ஜெயராணிக்கு அழைக்க,  முதல் ரிங்கில் எடுத்தவள் “என்ன மேகலா பிசியா இருக்கியா??” என,

“இல்லக்கா.. இ.. இ.. இங்க பிரியா வந்திருக்கா அதான் பேசிட்டு இருந்தோம்..” என்றாள் தயக்கத்துடனே.

“ஓஹோ..!! நானும் ஒரு விசயமா தான் கூப்பிட்டேன்..” என்ற ஜெயராணி, “நான் சொல்றேன்னு தப்பா நினைக்காத மேகலா.. ஒருதடவ பிரியாவ என் தம்பிக்கிட்ட பேச சொல்றியா??!!” என,

“ஐயோ..!!” என்று பதற்றத்தின் உச்சிக்கே போய்விட்டாள் மேகலை..

மறுபடியும் முதல்ல இருந்தா….!!

“இல்ல மேகலா.. அவன் ரொம்ப ஒருமாதிரி இருக்கான்.. ஒருதடவா பிரியா கிட்ட பேசிட்டா.. சரியாகிடுவான்னு நினைக்கிறேன்.. எங்களுக்கு பார்க்கவே சங்கடமா இருக்கு.. அதான்…” என,

‘இதென்னடா… தம்பி.. லவ் மேட்டரு.. பீல் ஆகிட்டாப்ல.. ஒருதடவ பேசினா சரியாகிடுவாப்ல..’ன்னு சொல்ற மாதிரி இருக்கு.. என்றுதான் மேகலா நினைக்க,

“இந்த விஷயம் நமக்குள்ளயே இருக்கட்டும் மேகலா.. நானும் வெளிய சொல்லிக்க மாட்டேன்.. பிரியாக்கிட்ட கேளு.. பேசுறாளான்னு.. வேணாம்னா வேணாம்..” என, பிரியாவோ மேகலாவின் முகத்தினையே பார்த்துக்கொண்டு இருந்தவள்,

மேகலாவின் பார்வை தன் முகத்தில் படியவும் “என்ன அண்ணி??!!” என்று சைகை செய்ய,

அங்கே சுதர்சனின் பார்வையும் அவனின் அக்கா முகத்தில் இருந்தது. ஜெயராணி பேசியதில் இருந்து பிரியா அங்கேதான் இருக்கிறாள் என்று புரிந்துகொண்டவன் அவள் பேசுவாளா??!! என்று ஆவலோடு பார்க்க, மேகலாவோ “நீ.. நீ அவங்க தம்பியோட பேச முடியுமான்னு கேக்குறாங்க..” என்றாள் தவிப்பாய்

‘இதெல்லாம் எங்க கொண்டு போய் முடியுமோ..’ என்றுதான் தோன்றியது மேகலாவிற்கு..

ஒன்றிற்கு இரண்டு மாமியார் மாமனார்.. தெரிந்தால் அவ்வளோதான்.. உண்டு இல்லை என்று ஆக்கிடுவார்.. இதில் வேலவன் வேறு என்ன சொல்வானோ தெரியாது..

‘பிரியா நோ சொல்லிடு..’ என்று பார்க்க, அவளோ “எ.. என்னவாம்??!!” என்றாள் இதழ்கள் துடிக்க,

பிரியாவின் குரல் அருகில் கேட்கவுமே ஜெயராணி இங்க ஸ்பீக்கர் ஆன் செய்திட, அவளின் குரல் சுதர்சனுக்கும் கேட்டது. அதில் தெரிந்த சிறு நடுக்கம் கூட அவனால் உணர முடிய,

“கேளுக்கா…” என்று ஜெயராணியை ஊக்கினான்..

“ஹ.. ஹலோ.. மேகலா..”

“அ.. சொல்லுங்கக்கா..” என்றவள் பிரியாவை பார்க்க “எனக்கு பயமா இருக்குண்ணி..” என்றாள் பிரியாவும்..

பேசிட ஆசை இருந்தது. ஆனால்?? என்னவோ சொல்ல முடியாத ஒரு பயம் வந்து அவளைக் கவ்விக்கொள்ள,

“மேகலா ஒருதடவ ஸ்பீக்கர்ல போடேன்.. நான் பிரியாக்கிட்ட பேசிக்கிறேன்..” என, மேகலாவிற்கு வேறு வழியில்லாமல் ஸ்பீக்கர் ஆன் செய்ய,

“பிரியா உன்னை நாங்க போர்ஸ் பண்ணல. ஆனா பாரேன்.. நீ இவனை தப்பா நினைச்சுப்பன்னு நினைச்சு நினைச்சே ஆஸ்பத்திரியில படுத்துட்டான்..” என,

“ஐயோ..!!!” என்றுவிட்டாள் சத்தமாய் சண்முகப்பிரியா.

அவளின் பதற்றமே சுதர்சனுக்கு கொஞ்சம் புன்னகை கொடுத்தது. எனக்காக பதறுகிறாள் என்று.

“நீ அப்படியெல்லாம் எதுவும் நினைக்கலைன்னு சொல்லிட்டா கூட அவன் கொஞ்சம் தெம்பாகிடுவான்..” என்று ஜெயராணி சொல்ல, “ம்ம்…” என்றாள் பிரியா..

“என்னம்மா பேசுறியா??!!” என்று திரும்ப கேட்க, பிரியா மேகலாவின் முகம் பார்த்தவள் “ம்ம் சரி..” என,

மேகலாவிற்கோ மேலும் பயம் வந்து உட்கார்ந்துகொண்டது.

“அண்ணி.. ஜஸ்ட் டூ மினிட்ஸ் தான் பேசிக்கிறேன்…” என்றுவிட்டு போனை எடுத்துக்கொண்டு பிரியா நகர்ந்து போக,

‘இவ என்ன தனியா போய் பேசப் போறா??!!’ என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டாள் மேகலா..

அங்கே ஜெயராணியிடம் போன் வாங்கியவனோ ஸ்பீக்கர் மோட் ஆப் செய்துவிட்டு “நீ என்ன நூடில்ஸா செய்யப் போற.. டூ மினிட்ஸ் சொல்ற..” என்றபடி பால்கனியில் நிற்க,

அவனின் கேலி புரிந்தாலும் “என்.. என்னாச்சு??!!” என்று கேட்டபடி பிரியாவும் அவளின் அறைக்குள் நுழைந்துகொண்டாள்.

“ம்ம்.. என்னாச்சு?? எனக்கே தெரியலை… ஆக மொத்தம் நான் நல்லா இல்லை அவ்வளோதான்..” என்றான் கிண்டல் மாறி கொஞ்சம் வருத்தமாய்.

“ஏன் அப்படியெல்லாம் சொல்றீங்க??!” என்று கேட்டவளுக்கும் அதே வருத்தம் இருக்க,

இதுதான் இருவருக்குமான முதல் அலைபேசி உரையாடல் என்பது இருவருக்குமே அந்த நொடி நியாபகம் வர, வருத்தம் மீறி ஒரு சிறு மகிழ்வும் கூட.

“ம்ம் வேறென்ன சொல்ல??!!” என்றவன் குரலில் லேசானதொரு மாற்றம் பிரியா உணர,

“உடம்ப பார்த்துக்கோங்க.. நான் உங்களை தப்பா எல்லாம் எதுவும் நினைக்கலை..” என்றாள் சமாதானம் செய்யும் விதத்தில்..

“ம்ம் இல்லை.. எனக்கு கொஞ்சம் கில்டியா போச்சு..”

“ஏன்??!! நீங்க தப்பா எதுவும் பண்ணலையே..”

“நீ தப்பா நினைக்கலைன்னா சரிதான்..” என்று அவனும் சொல்ல,

“ஒருவிசயம் பண்ணா அது சரின்னு நமக்கு முதல்ல நம்பிக்கை இருக்கணும்.. இல்லைனா இப்படிதான் சின்ன விசயத்துக்கு கூட இழுத்து வச்சு படனும்..” என்று சண்முகப் பிரியா படபடவென பேச,

‘இப்போ இவ திட்டுராளா?!!! இல்லை சமாதானம் செய்றாளா…’ என்று யோசித்து நின்றான் சுதர்சன்.

“ஹலோ .. இருக்கீங்களா??!!”

“ம்ம்…”

“ஹெல்த் பார்த்துக்கோங்க.. இது நடக்குது.. நடக்கல.. அது வேற விஷயம்.. ஆனா எது எப்படி இருந்தாலும் நான் உங்களை எப்பவும் மட்டமா நினைச்சிட மாட்டேன் சரியா..” என்று கேட்க,

“நீ சொன்னா சரிதான்..” என்றான் முழு மனதாய்.

அவளின் ஒவ்வொரு வார்த்தைகளும் அவனுக்கு அப்படியொரு அமைதி கொடுத்தது மனதினில்.

“ம்ம்.. அவ்வளோதானே…”

“அதுக்குள்ள என்ன அவசரம்.. பர்ஸ்ட் டைம் போன்ல பேசுறோம்..” என்று சுதர்சன் கொஞ்சம் சலுகை எதிர்பார்க்க,

“இது என் போன் இல்லை மணி கணக்கா பேச, அண்ணியோட போன்..” என்று அவளும் சொல்ல,

“அப்போ உன் நம்பர் சொல்லு..” என்றான் பட்டென்று..

“அ.. அது சரி.. நான் உங்களோட பேச மதுரைக்கு வரலை..” என்றாள் இவளும் அதே வேகத்தில்..

“பி.. பின்ன??”

“பேக்கரி கிளாஸ் போகப் போறேன்..” என்று சண்முகப் பிரியா கொஞ்சம் கெத்தாய் சொல்ல,

“ஓ..!! உனக்கு அதுல எல்லாம் இன்ட்ரெஸ்ட் இருக்கா??!!” என்றான் ஆச்சர்யமாய்.

“அப்படின்னு இல்ல. எனக்கு ஐசிங் பண்றது ரொம்ப பிடிக்கும்.. அந்த க்ரீம் கேக்ல வந்து உக்காற்றது செமையா இருக்கும்…” என,

‘சரியான கேக் பைத்தியம் போல இவ..’ என்றுதான் எண்ணிக்கொண்டான் சுதர்சன்.. அந்த நினைப்பே அவனுக்கு சிரிப்பை கொடுக்க,

‘ஐசிங் பிடிக்கும்னு பேக்கரி கிளாஸ் போறாளாம்…’ என்று எண்ணியவன் சத்தமாகவே சிரிக்க,

“என்ன?? என்ன சிரிப்பு..??” என்றாள் இவளும்..

“ம்ம்ம்…” என்று இழுத்தவன் “உன்னோட பேசணும்னு தான் நினைச்சேன்.. ஆனா இப்போ.. நிஜமா சொல்றேன்.. உன்னைப் பார்க்கணும் போல இருக்கு..” என, அவனின் இச்சொற்கள் சண்முகப் பிரியாவிற்கு ஒரு படபடப்பு கொடுக்க,

“ஏ.. ஏனாம்??!!” என்றாள் எழும்பாத குரலில்..

“ஏன்… ம்ம்ம்.. ஏன்னு கேட்டா??!!…” என்று யோசிப்பது போல் பாவனை செய்தவன் “உன் குருவிக்கூடுக்கு எத்தனை ஹேர் பின் பாடிகாட் வேலை பாக்குறாங்கன்னு கவுன்ட் பண்ணனும்..” என,

“என்ன?? என்னது..?!!” என்று வேகமாய் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்குத் தயாராவதுப் போல் கேட்டவளுக்குமே பின் சிரிப்பு வந்திட்டது..

பிரியா கொஞ்சம் சத்தமாகவே சிரித்துவிட, அது வெளியில் மேகலாவிற்கும் கேட்க, ‘என்னத்தை பேசி இப்படி சிரிக்கிறா??!!’ என்று பயந்து போய் தான் பார்த்தாள்.

இங்கே சுதர்சனுக்கோ இந்த சில நிமிடங்களில் அவனின் உடல், மன சோர்வு எல்லாம்.. எல்லாமே காணாது போனதுபோல மிக மிக புத்துணர்வாய் உணர்ந்தான்..

         

     

            

 

                                             

                                   

Advertisement