Advertisement

ஆஹா கல்யாணம் – 5

ஆகிற்று கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கும் மேலாய் சுதர்சன் பெங்களூரு வந்து.

சண்டை என்றால் சண்டை வீட்டினில் அப்படியொரு சண்டை. இத்தனை வருடங்களில் அவர்கள் வீட்டில் இப்படியொரு சண்டை நடந்ததே இல்லை எனலாம்.

சுதர்சன் பேச பேச காவேரியும் பேசிவிட்டார். இருவருமே வார்த்தைகளை விட, முருகவேலோ, “சுதர்சா நீ ஊருக்கு கிளம்பு..” என்பதிலேயே இருந்தார்.

“என்னை ஏன்ப்பா யாருமே புரிஞ்சுக்க மாட்டேன்கிறீங்க??” என்று இவன் கேட்க,

“கொஞ்ச நாள் இதை இப்படியே விடு.. எல்லாரும் கொஞ்சம் அமைதியாகட்டும்.. விடு..” என,

ஜெயராணியும் பாண்டியனும் வீட்டுக்கே வந்துவிட்டனர். ஆதிகேசவன் சொல்லி அவர்கள் வந்திட, ஜெயராணியோ “என்னடா இதெல்லாம்…” என்றுதான் பார்த்தாள் சுதர்சனை.

“இப்போ நான் என்ன பண்ணிட்டேன்..” என்று அவன் மீண்டும் ஆரம்பிக்க,

“மாப்ள விடு.. கொஞ்சம் ஆற விடு..” என்று பாண்டியன் சொல்ல,

“அப்படியில்ல மாமா… அப்போ நான் எனக்கு பிடிச்ச பொண்ணோட வாழக்கூடாதா??” என்றான் மீண்டும் முதலில் இருந்து.

காவேரியோ “அப்போ உனக்கு நாங்க யாரும் முக்கியமில்லை.. நீயே முடிவெடுத்தா அப்போ நாங்கலாம் எதுக்குடா ??” என,

“காவேரி…” என்று அதட்டினார் முருகவேல்..

“இப்போ சொல்றேன்.. நான் வேற பொண்ணுதான் பாப்பேன்..“ என்றுவிட்டு காவேரி சென்றிட, அதன் பின் வீட்டினர் அது இதென்று பேசி இவனை பெங்களூரு அனுப்பிவிட்டனர்.

“எதுவும் உடனே நடக்காது சுதர்சன்.. கொஞ்சம் பொறுமையா போவோம்..” என்றுதான் பாண்டியனும் ஜெயராணியும் சொல்ல,

“நானும் உடனே சரின்னு சொல்லுங்க சொல்லலை.. பட் அம்மா பேசினதும் தப்புக்கா…” என,

“டேய் இப்போ ஏதும் பேசாத நீ..” என்று சொல்லி அனுப்பிட, இதோ அவன் வந்தும் பத்து நாட்கள் ஆகிப்போனது.

வந்ததில் இருந்து வீட்டினர் யாரோடும் பேசவுமில்லை. நாளொன்றுக்கு இரண்டு முறையாவது அழைத்துப் பேசிடும் அம்மாவிடமும் பேசவில்லை. அடுத்தது என்னவென்று அப்பா, அக்காவிடமும் கேட்கவில்லை. என்னவோ யாரோடும் பேசவேயில்லை..

ஊருக்கு வந்ததுமே வேலை வேறு அவனை இழுத்துக்கொண்டது. காலையில் அலுவலகம் சென்றால், இரவு வரவே அவனுக்கு வெகு நேரம் ஆகிப்போனது. வந்தபின்னோ அவனுக்கு மனதில் பலவேறு யோசனைகளை.

தானுமே கொஞ்சம் நிதானமாய் இருந்திருக்க வேண்டுமோ என்று..

அவசரப்பட்டு சண்முகப் பிரியாவிடமும் பேசியிருக்கக் கூடாதோ என்று..

வேலவனிடம் பேசிய அளவில் இருந்திருக்கவேண்டுமோ என்று..

ஆனால் அதுவே அவனுக்கு இப்போது மனதினில் வண்டாய் குடைந்தது. வேலவனிடம் ஊருக்குச் செல்வதையும் சொல்லவில்லை. ஊருக்கு வந்தபின்னேயும் பேசவில்லை. என்னவோ எதோ ஓரிடத்தில் தான் சறுக்கிவிட்டது போல் உணர்ந்தான்.

பிரியா என்ன நினைத்துக்கொண்டு இருப்பாள். மனதினில் எதனையும் போட்டு தான் எதுவும் செய்வேனோ என்று எதிர்பார்த்துக்கொண்டு இருப்பாளோ என்று யோசித்தான்.

கிட்டத்தட்ட நேரம் இரவு பதினொன்று.. வேலை விட்டு எப்படி வீடு வந்தான் என்பதுகூட அவனுக்குப் புரியவில்லை. காரில் வந்தாலும், அவன் சிந்தை அதில் எதிலும் இல்லை. மனது எல்லாம் பெரியகுளத்தில் தான் இருந்தது. அப்பா அம்மா அழைத்தும் பேசவில்லை.

வந்தவன் அப்படியே தன் பையை தூக்கிப் போட்டுவிட்டு சோபாவில் படுத்துக்கொண்டான். உடை மாற்ற எண்ணமில்லை.. உணவுண்ண எண்ணமில்லை.. எதிலுமே மனது லயிக்கவில்லை. புறங்கையை நெற்றியில் வைத்து வெறுமெனே கண் மூடி படுத்திருக்க, ஜெயராணி அழைத்தாள். 

அலைபேசி எடுத்துப் பார்க்க, “ம்ம்ச்..” என்ற எரிச்சலோடு போனை சைலெண்டில் போட்டுவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டான்..

ஆனால் அவளோ விடாது அழைத்து, அலைபேசி வைப்ரேட் ஆக, “இப்போ என்னதான் க்கா வேணும்…” என்று காட்டு கத்தல் தான் கத்தினான் சுதர்சன்..

“டேய் ஏன் டா??!!”

“ஏன் இந்தளவு கூட என்னை நிம்மதியா இருக்க விடமாட்டீங்களா..”

“நான் என்ன சுதர்சன் பண்ணேன்..” என்று ஜெயராணி கேட்கும்போதே அவளுக்கு அழுகை வந்தது.

“இப்படி பேசாத டா..” என,

“ம்ம்ச் இப்போ என்னத்துக்கு அழற.. சொல்லப் போனா நான் தான் அழனும்..” என்றவன் “என்னனு சொல்லு..” என,

“நீ அம்மாட்ட பேசுடா தம்பி..” என்றாள்.

“எதுக்கு??!”

“எதுக்குன்னு கேட்டா எப்படி சுதர்சன்.. என்ன இருந்தாலும் அவங்க நம்ம அம்மாடா..”

“நான் இல்லைன்னு சொன்னேனா?? ஆனா என்ன இருந்தாலும் என் பையன்னு அவங்க என்னை புரிஞ்சுக்கலையே. நீங்க எல்லாரும் கூட என்னை விரட்டித்தானே விட்டீங்க..” என,

“டேய் இப்படி எல்லாம் பேசாத..” என்றாள் இன்னும் அழுது.

“இப்போ அழுது காட்டத்தான் போன் பண்ணியா நீ..” என்றவனுக்கு ஒருபக்கம் எரிச்சல், இன்னொரு புறம் தன்னை நினைத்தே கோபமும் கூட.

ஒரு சில சூழலை ஆண்களால் கையாள முடியாது. அது வரவும் செய்யாது என்பதும் ஒன்று. அதுவும் பெண்களுக்கு இடையில் சிக்கி, அம்மா, அக்கா, தான் விரும்பும் பெண் என்று அனைவரின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு அனைவர்க்கும் யாராலும் நல்ல பிள்ளை ஆக முடியாது.

அதே நிலைதான் இப்போது சுதர்சனுக்கு..

இருக்கமாட்டாது போய் சண்முகப் பிரியாவிடமும் பேசிவிட்டு வந்தாகிவிட்டது. தெரிந்தோ தெரியாமலோ அவள் மனதில் நம்பிக்கையை விதைத்தாகிவிட்டது. அவளுக்கு என்ன பதில் சொல்வான்??!!

அம்மாவோடும்.. அக்காகளோடும் என்னவேண்டுமானாலும் மல்லுக்கட்டி சமாதானம் செய்துகொள்ளலாம். ஆனால் சண்முகப் பிரியாவிடம்??!!

சுதர்சனுக்கு தலை வெடிப்பது போலிருந்தது.

அதற்குள் ஜெயராணி “சுதர்சா.. டேய் தம்பி..” என்று திரும்ப திரும்ப அழைப்பது தெரிய,

“ம்ம் சொல்லுக்கா..” என,

“அம்மாக்கிட்ட பேசுடா.. நீ சண்டை போட்டாலோ இல்லை இப்படி பேசாம இருந்தாலோ எல்லாம் எதுவும் சரியாகாது.. ஜெயாக்கா மாமாவ பத்தி தான் உனக்குத் தெரியும்ல.. ” என்று எடுத்து சொல்ல,

“ம்ம் நாளைக்கு பேசுறேன்..” என்றான் இறங்கி வந்து.

ஆனாலும் மனது முழுதாய் சமாதானம் ஆகவில்லை.

“கண்டிப்பா காலையில பேசணும்..” என்றவள் அடுத்து பாண்டியனிடம் கொடுக்க “கொஞ்சம் விட்டுப் பிடிப்போம் மாப்பிள்ள..” என்றான் அவன்.

“ம்ம் சரிங்க மாமா..” என்றவனுக்கு அப்போது தான் பசியே தெரிந்தது.

பேசிவிட்டு வந்து அடுப்படி விளக்கு போட்டு பார்க்க, அதுவோ இரண்டு நாட்களாய் என் பக்கம் நீ எட்டிக்கூட பார்க்கவில்லை என்று சொல்லாமல் சொல்லியது. ஆம் இரண்டு நாட்களாய் வீட்டினில் ஒன்றுமே செய்யவில்லை தான். ஆபிஸ் கேண்டினில் பார்த்துக்கொண்டான்.

இன்றோ எதுவும் செய்து சாப்பிடும் எண்ணமும்  இல்லை. உடலும் அதற்கு ஒத்துழைக்கவில்லை. ஆனால் பசி பின்னி எடுத்தது.

பிரிட்ஜ் திறந்து பார்க்க, இரண்டு பிஸ்கட் பாக்கெட் மட்டும் இருக்க, அதை காலி செய்தவன், தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு அப்படியே சோபாவில் படுத்துப் போனான். காலை வெயில் முகத்தினில் பாடவும் தான் விழித்தான். உடலில் அப்படியொரு சோர்வு. மனதில் அதற்குமேல்.

எழுந்து மணி பார்த்தவன் அது ஒன்பது என்று காட்ட ‘இவ்வளோ லேட்டா..??!!’ என்று சொல்லியபடி அடித்துப் பிடித்து கிளம்பிப் போனான். அம்மாவோடு பேசவேண்டும், வேலவனோடு பேசவேண்டும் என்று எண்ணியிருந்தது எல்லாம் அப்படியே மறந்தும் போனது.

அங்கே சண்முகப் பிரியாவோ நாள் செல்ல செல்ல தனக்குள்ளேயே இறுகத் தொடங்கினாள். என்னவோ அவளுக்கு சொல்ல முடியாத ஒரு பயம் வந்து கவ்விக்கொண்டது. வேலவனும் மேகலாவும் மதுரை வந்துவிட்டனர். வேலவனுக்கு அங்கேதான் வேலை.

ஆக அவர்கள் அங்கே வந்துவிட, முதல் இரண்டு நாட்கள் அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை. ஆனால் சுதர்சன் பக்கமிருந்து எவ்வித நகர்வும் இல்லை என்று உணரும் நேரத்தில் மனதினில் ஒரு பயம்..

என்ன யோசிக்கிறோம் என்றே தெரியாது யோசனையில் இருந்தாள். அவளையும் அறியாது ஒரு அமைதி வேறு. வீட்டில் எல்லாம் கவனித்துக்கொண்டு தான் இருந்தனர். அப்பாவும் பெரியப்பாவும் “என்னடா…” என்று கேட்டால்,

“ஒண்ணுமில்லப்பா…” என்றுவிடுவாள்.

அதற்குமேல அவர்களாலும் எதுவும் கேட்க முடியவில்லை. பூமாவும் மீனாவும் என்ன என்ன என்று அவளிடம் கேட்டு கேட்டு வாய் ஓய்ந்து போனது தான் மிச்சம்.

வீட்டினில் கலகலப்பாய் இருப்பவள், இப்போது இருக்கும் இடம் தெரியாது இருக்கவும் அந்த வீட்டின் சூழலே மாறிப்போனது..

“என்னக்கா இப்படி இருக்கா??!!” என்று மீனாட்சி அழவே ஆரம்பித்துவிட்டார்.

“எல்லாம் சரியாகிடும்.. விடு.. சட்டுபுட்டுன்னு ஒரு நல்ல இடமா பேசி முடிச்சா அவளுக்கே பழசு எல்லாம் மறந்திடும்..” என்று பூமா சொல்ல,

வீட்டினில் துரிதமாய் வரன் பார்க்க, சண்முகப் பிரியாவிற்கு இரவுகளில் உறக்கம் போனது தான் மிச்சம். யாரிடம் என்ன கேட்பது என்றுகூட தெரியவில்லை. வேலவனிடம் கேட்கலாம் என்றால், அவன் மட்டும் என்ன செய்வான் என்று இருந்தது.

ஆனாலும் இத்தனை நாட்களில் இருந்தது போல் அன்று அவளால் இருக்க முடியவில்லை. காரணம் ஒரு சம்பந்தம் தோதாய் வந்திட, வீட்டினில் அதற்கான பேச்சு நடந்துகொண்டு இருந்தது.

“எனக்கு வேண்டாம்..” என்று சொல்லிப்பார்த்தாள், காரணம் கேட்டனர்.

“வேண்டாம்னா வேணாம்..” என,

“சரியான ஒரு காரணம் சொல்லு..” என்றார் மீனாட்சி..

“எனக்குப் பிடிக்கலம்மா..” என,

“ஏன் டி இந்த மாப்பிள்ளையா பிடிக்கலை??” என்று குரலை உயர்த்தினார்.

“ஆமா பிடிக்கலை..” என்று தீர்க்கமாய் பிரியா சொல்ல, “உன் தலையில நீயே மண்ணள்ளி போட போற போ..” என்று மீனாட்சி அழ,

பூமாவோ “ஐயோ மீனா என்ன பேச்சு இது..” என,

“அவ எப்படி பேசுறா பாருங்கக்கா..” என்று அவரும் சொல்ல, முகத்தை உம்மென்று வைத்து அமர்ந்திருந்தாள் சண்முகப் பிரியா.

“நீ போ நான் பேசுறேன்…” என்று பூமா சொன்னவர், மீனாட்சி செல்லவும் “என்னடா இன்னும் பழசையே நினைக்கிறியா??!!” என,

“எனக்கு இப்போ கல்யாணம்லா வேணாம் பெரிம்மா.. ப்ளீஸ்..” என்றாள் கண்களை சுருக்கி..

அதற்குமேல் அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

“சரி இப்போ வேணாம்.. வேணும்னா நான் அப்பா பெரிப்பாட்ட சொல்லி ஒரு இரண்டு மாசம் கழிச்சு பார்க்க சொல்லவா..??”

அவளால் உடனே சரியென்று சொல்ல முடியுமா என்ன?? இரண்டு மாதங்கள் கழித்து, அப்போதும் எதுவும் நடக்கவில்லை எனில்?? எச்சில் விழுங்கினாள் சண்முகப் பிரியா.

“என்ன சண்மு சொல்லு.. இரண்டு மாசம் கழிச்சு பார்க்க சொல்லட்டுமா??” என்று பூமா கேட்க,

“இல்ல பெரிம்மா அது..” என்று இழுத்தாள்.

“பார்த்தியா உன்னால அதையும் தெளிவா சொல்ல முடியலை.. இப்போ இப்படிதான் இருக்கும்.. நமக்குன்னு ஒருத்தர் முடிவாகி, அதான் இப்போ போன்ல எல்லாம் பேசுறீங்களே அப்படி பேசி பழகினா எல்லாமே மாறிடும் மறந்துடும்.. பின்ன நாங்களே கண்ணுக்குத் தெரிய மாட்டோம்.. அப்புறம் கல்யாணம் ஆகி அதான் உன் வாழ்க்கைன்னு ஆகிட்ட நீயே இதெல்லாம் மறந்திடுவ நினைக்கக் கூட நேரமிருக்காது…” என்று அழகாய் அங்கே ஒரு மூளைச் சலவை அரங்கேறியது.

ஆனால் சண்முகப் பிரியாவோ அந்த நேரத்தில் எதுவும் சொல்ல இயலாதவளாய் “ம்ம் ம்ம்..” என்று மட்டும் சொல்ல,

“நீயும் கொஞ்சம் தெளிவா யோசி.. இல்லையா எதையும் யோசிக்காத.. உனக்கு பிடிச்ச பாட்டு கேளு.. இல்லை படம் எதுனா பாரு.. நான் வீட்ல சொல்லிக்கிறேன் கொஞ்ச நாள் போகட்டும்னு..” என்று அவளின் கன்னம் வழித்து முத்தம் வைத்து கீழே வந்தவர்,

மீனாட்சியிடம் “பிள்ளைக்கிட்ட இப்படியா பேசுறது.. ரொம்ப குழம்பி போயிருக்கா.. அவ வயசு அப்படி.. நல்ல சம்பந்தமா பார்த்துட்டே இருப்போம்.. அவக்கிட்ட எதுவும் காட்டிக்க வேணாம்..” என, பெண்ணைப் பெற்றவர் சரி என்பதை தவிர வேறென்ன சொல்வார்..

இதற்குமேல் சண்முகப் பிரியாவிற்கு பொறுக்கவே முடியவில்லை. வேலவனுக்கு அழைத்து,

“அண்ணா என்னண்ணா…??” என்று கேட்கயிலேயே அவளின் குரல் உடைந்துப் போனது..

“சண்மு.. சண்மு… என்னடா..” என,

“எனக்கு ஒண்ணுமே புரியலைண்ணா.. பயமா இருக்கு.. வீட்ல வேற அல்லயன்ஸ் பேசுறாங்க.. நீ.. நீ அவர்க்கிட்ட பேசினியா??” என்று திக்கிக்கொண்டே கேட்க,

“இ.. இல்ல சண்மு.. நம்மளும் ரொம்ப போர்ஸ் பண்ணக் கூடாதுன்னு பேசலை..” என்றான்..

“ம்ம்ம்..”

“நீ வொரி பண்ணாத.. நான் வீட்ல என்னனு கேக்குறேன்..”

“இல்ல வேணாம்..” என்றவள், “அண்ணா…” என,

“எனக்காக ஒன் டைம் பேசி பாக்குறியா??!!” என்றாள்.

அப்போது கூட நான் பேசவேண்டும் என்று அவள் சொல்லவில்லை. அவளுக்குத் தெரியும், அவளின் எல்லை எதுவென. ஆகையாலே தான் அண்ணனைப் பேசச் சொன்னாள்.

“ம்ம் சரி நான் பேசுறேன்.. நீ அழாத..” என்று வேலவன் சொல்ல,

“ம்ம் பேசிட்டு சொல்லுண்ணா.. நான் கேட்டேன் சொல்லாத நீயா பேசினது போல பேசு.. நான் வொரி பண்றேன் தெரிஞ்சா அதுவே அவங்களுக்கு ரொம்ப ஒருமாதிரி இருக்கும்..” என,

“ம்ம் சரி விடு.. நான் பேசுறேன்..” என்ற வேலவன், அடுத்து சுதர்சனுக்கு அழைத்து அழைத்துப் பார்க்க, அவனோ எடுக்கவேயில்லை.

அவனின் அலைபேசி தான் சைலன்ட்டில் இருந்ததே.                        

          

                    

 

                         

Advertisement