Advertisement

ஆஹா!! கல்யாணம் – 3

“இங்க பாருங்க மத்த விசயம்னா கூட பரவாயில்லை.. ஆனா இந்த விசயத்துல கருத்து வேறுபாடு வந்தா அது காலம் முழுக்க கடைசி வரைக்கும் நிக்கும்.. அதனால பொறுமையாத்தான் எதுவும் முடிவு சொல்ல முடியும்..” என்று சரவணன் சொல்ல,

“அண்ணே.. இதுல யோசிக்க எதுவுமில்ல.. மூத்தவளுக்கு எத்தன போட்டோமோ அதேதான் சண்முக்கும்.. ரெண்டு பொண்ணுங்களுக்கும் ஒரேமாதிரி தான் செய்வோம்.. இதுல எந்த ஒரு கணக்கு வித்தியாசமும் இல்லை..” என்று அடித்துப் பேசினார் சண்முகம்.

தரகரோ “அப்படியில்லங்க.. நல்ல இடம் விட்டுட கூடாது இல்லையா…” என,

“எங்க பொண்ணுக்கும் எந்த குறையும் இல்லையே..” என்றார் சண்முகம்.

வீட்டுப் பெண்களோ கொஞ்சம் வாடிய முகத்துடன் பார்த்துக்கொண்டு இருக்க, வேலவனோ “அப்பா.. சித்தப்பா நான் சொல்றேன்னு தப்பா நினைக்க வேணாம்.. இப்போ என்ன சண்முக்கு எவ்வளோ எக்ஸ்ட்ரா பண்றோமோ அதுபோல கஸ்தூரிக்கும் செஞ்சிடலாம்.. அவ்வளோதானே..” என,

“இல்லடா அது சரியா வராது.. செய்றது பத்தி பிரச்னை இல்லை.. ஆனா இதுக்காக செய்றதுங்கிறது சரியா வராது..” என்றார் சரவணன்.

தரகரோ யாருக்கு ஏற்றுக்கொண்டு பேசுவது என்று முழிக்க, “வேற நல்ல சம்பந்தம் இருந்தா பாக்கலாம்..” என்று சொல்லி அனுப்பினார் சரவணன்.

பூமா, மீனாட்சி, மேகலா என அனைவர்க்கும் வருத்தமாய் இருந்தது. நல்ல இடம்.. நல்ல மனிதர்களும் கூட.. மாப்பிளையும் பார்க்கவும், பழகவும் நல்லவனாய் இருக்க, இதைவிட வேறென்ன வேண்டும் என்றுதான் நினைத்தனர். அனைத்திற்கும் மேலே உள்ளூர் ஆட்கள் வேறு..

நாளைக்கு எந்தவொரு விசேசம் என்றாலும் சண்முகப்பிரியா இங்கே வந்து போகவும் ஏதுவாய் இருக்கும் என்று பெண்கள் எண்ண, வீட்டின் இரு ஆண்களோ வேறு எண்ணினார்கள்.

தரகர் கிளம்பவும் “கல்யாண விசயம்னா இதெல்லாம் சகஜம் தானே..” என,

“சகஜம்தான்..” என்று இழுத்த பூமா, “சட்டுன்னு முடிவு சொல்லிருக்க வேணாம்.. கொஞ்சம் யோசிச்சிருக்கலம்..” என, மீனாட்சிக்கு மகளை எண்ணித்தான் வருத்தமாய் இருந்தது.

பெண் பார்த்துவிட்டு போனதில் இருந்து வீட்டினில் சந்தோசமாய் உலாத்திக்கொண்டு இருந்தாள். அவ்வப்போது பாட்டுக்கள் வேறு.. அவளைக்காணவே சந்தோசமாய் இருந்தது அனைவர்க்கும்.

“என்ன என்ன எல்லாம் அப்படி பாக்குறீங்க??!!” என்று அனைவரிடமும் செல்லமாய் ஒரு மிரட்டல் வேறு விட்டுக்கொண்டாள்.

எப்படியும் இந்த சம்பந்தம் தான் முடியும் என்று தீர்க்கமாய் அவளின் மனது நம்ப, இன்று வந்து தரகர் இப்படி சொல்லவும் அதைக் கேட்டு அப்படியே முகம் கூம்பிப்போனது. அதிலும் அப்பாக்கள் இருவரும் பேசியது கேட்டு அழுகையே வந்துவிட்டது அவளுக்கு. என்னவோ சுதர்சனைத் தாண்டி வேறெதுவும் அவளால் சிந்திக்கவும் முடியவில்லை..

அப்படியொரு அழுகை வந்தது. அறையில் இருந்து வெளியே வராது உள்ளேயே இருக்க, மீனாட்சி தான் மேலே சென்றவர் “பிரியா வெளிய வா..” என்றழைக்க, சத்தமேயில்லை.

மகள் வாய் திறந்து சொல்லவில்லை என்றாலும், அவளுக்கு இந்த வரன் பிடித்திருக்கிறது என்று அம்மாவிற்கு தெரியாதா என்ன?? ஒருவித கலக்கத்தோடு தான் மீனாட்சி சென்று பிரியாவை அழைக்க, அவளோ எழுந்தே வரவில்லை. கதவும் திறக்கவில்லை.

“பிரியா இப்போ எந்திரிச்சு வர்றியா இல்லையா??” என்று கதவினை சத்தமாய் தட்ட, அதற்குள் பூமாவும் மேலே வந்துவிட்டார்.

“ரெண்டு நாளா சந்தோசமா திரிஞ்சா… ம்ம்ம்..” என்று பெருமூச்சு விட்டவர்,

“கண்ணு.. வெளிய வா..” என,

“இப்போ என்னதான் வேணும் உங்களுக்கு??” என்று எகிறிக்கொண்டே தான் கதவினை திறந்தாள்.

அவளைப் பார்த்தாலே தெரிந்தது அழுதிருக்கிறாள் என்று. ஆனாலும் முகம் கழுவி பவுடர் போட்டு அவளாகவே சமாளித்து தான் கதவு திறந்திருக்கிறாள் என்பது பார்க்கைலேயே புரிந்தது. மீனாட்சியும் பூமாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு,

“இப்போ என்னத்துக்கு இப்படி வந்து படுத்துக்கிடக்க..??” என,

“இப்போ என்னத்துக்கு இங்க வந்து நிக்கிறீங்க??” என்றாள் பார்வையை எங்கோ பதித்து..

மீனாட்சியோ “ஏய் இங்க பாரு.. இப்போ என்னாச்சுன்னு இப்படி நடக்குற?? அன்னிக்கே சொன்னேன்ல பொண்ணுதான் பார்த்து வர்றாங்க.. நீயா எதுவும் நினைக்கக் கூடாதுன்னு..” என,

“அப்போ.. நானா யாரையாவது நினைச்சா, கட்டி வச்சிடுவீங்களா??!!” என்று பட்டென்று கேட்டுவிட,

“பிரியா..!!” என்று அதட்டியவர் “இம்புட்டு வாய் உனக்கு ஆகாது…” என்று அவள் தோளைப் பிடித்து சிலுப்ப,

“அச்சோ என்னதிது ரெண்டு பெரும்…” என்று சத்தமிட்ட பூமா,

“நீ போ மீனா.. நான் பேசி கூட்டிட்டு வர்றேன்.. சின்ன பொண்ணு அவளுக்கு என்னத் தெரியும்..” என்று சமாதானம் செய்து அனுப்பியவர்,

சண்முகப் பிரியாவை அழைத்துக்கொண்டு திரும்ப அவளின் அறைக்கே வந்தவர், “இப்போ என்ன உனக்கு??!!” என்றார் தன்மையாகவே.

“எனக்கென்ன நல்லாத்தான் இருக்கேன்…”

“அதை நாங்க நம்பணுமா பிரியா??”

“பின்ன என்ன பெரிம்மா… நானா சொன்னேன் இந்த மாப்பிள்ள பாருங்கன்னு.. நீங்க எல்லாரும் தானே சொன்னீங்க.. இப்போ நீங்களாவே அழிச்சா எப்படி??” என்றவளுக்கு எதை எப்படி தெளிவாய் கேட்கவேண்டும் என்று விளங்கவில்லை.

என்னென்னவோ சொல்லவேண்டும் என்று தோன்றினாலும், அதை கோர்வையாய் அவளால் சொல்ல முடியவில்லை. இதற்கு முன் வந்த இரண்டு மூன்று வரங்கள் பேச்சு வார்த்தையிலேயே நின்றுபோனாலும் அவளுக்கு அதிலெல்லாம் ஒன்றும் பாதிப்பு ஏற்படவில்லை.

ஆனால் சுதர்சன்??

அவனை என்னவோ அவளுக்குப் பிடித்துப் போனது அதுதான் உண்மை.. பிடித்ததினால் மட்டுமே அவனோடு பேசுகையில் அப்படி பேசவும் முடிந்தது. இல்லையெனில் கண்டிப்பாய் சண்முகப்பிரியா முதல்முறை பேசும் ஒருவனிடம் இப்படி பேசியிருக்க மாட்டாள்.

“என்ன பிரியா நீ.. கல்யாணம்னு வந்தா இதெல்லாம் சகஜம்டா.. என்னையவே எடுத்துக்கோ ஆறு பேரு பொண்ணு பார்த்து வந்தாங்க.. எல்லாத்துக்கும் நம்ம வீட்ல சண்டை போட முடியுமா என்ன?? உங்க பெரிப்பா ஆறாவதா வந்தாரு வீட்டு பெரியவங்க பேசினாங்க.. எல்லாம் ஒத்துவரவும் கல்யாணம் முடிஞ்சது..” என,

“வந்த ஆறு மாப்பிள்ளைல பெரியப்பாவ தவற ஒருத்தரையும் பிடிக்கலையா பெரிம்மா??!!” என்று கேட்டாள் பிரியா..

“பிடிச்சுச்சு பிடிக்கலைன்னு எல்லாம் யோசிக்கத் தெரியலை.. இதுல என்ன கொடுமைன்னா வந்ததுல ரெண்டு பேர் முகத்தை கூட நான் பார்க்கல..” என்று லேசாய் பூமா சிரித்தவர்,

“மனசுல எதுவும் குழப்பிக்காத.. உனக்கு தப்பா நாங்க எதுவும் செஞ்சிட மாட்டோம்..” என்று சமாதானம் செய்ய,

“ம்ம் இப்போவே சொல்லிட்டேன் இனி அடுத்தத் தடவ முன்னக்கூடியே எதுவும் பேசாம செய்யாம தலைய சீவு, தட்டத் தூக்குன்னு சொன்னீங்க நான் மனுசியாவே இருக்க மாட்டேன்…” என, அவள் சொன்ன விதத்தில் பூமாவிற்கு இன்னமும் சிரிப்பு வந்தது.

“நல்லா சிரிங்க..” என்று பொரிந்தவள், எழுந்து கீழே செல்ல, வீட்டினர் அனைவரும் பார்க்க,

“இப்போ  என்ன??!!” என்றாள் அனைவரையும் பார்த்து.

மீனாட்சிக்கோ மகள் இப்படி நடந்துகொள்வது கண்டு யாரேனும் எதுவும் சொல்லிடுவரோ என்று பயம் வேறு.. என்ன இருந்தாலும் பெண் பிள்ளை திருமண விஷயம் அல்லவா. ஆக மகளை அடக்கவே நினைத்தார்.

“பிரியா?? என்ன பழக்கம் பழகுற நீ..” என்று அதட்ட, அவளோ காதே கேளாதது போல தட்டில் போட்டுக்கொண்டு உண்ண அமர,

வேலவனோ “சண்மு சாயங்காலம் அப்படியே ஒரு ரவுண்ட்ஸ் போயிட்டு வருவோமா??” என்றான் தங்கையின் மனதை அறிந்து.

“எங்க??”

“சும்மா அப்படியே வைகை டேம் வரைக்கும்.. போயிட்டு வருவோம்..”

“ம்ம் இவங்க எல்லாம் வருவாங்கன்னா நான் வரலை..” என்று வீட்டிலிருந்த பெரியவர்களை காட்ட,

“இல்ல இல்ல.. நீ நான் அண்ணி குமரன் நாலு பேரு மட்டும் போவோம்.. வர்றப்போ ஹோட்டல்ல சாப்பிட்டு வரலாம்..” என,

‘ஹ்ம்ம் இந்த சுதர்சன நான் நினைக்கக் கூடாதுன்னு வைக டேமும், ஹோட்டல் சப்பாடுமா…’ என்று எண்ணிக்கொண்டவள், சம்மதமாய் தலை அசைத்தாள்.

பிரியாவின் பிடிவாதம் என்னவென்று இனிதானே இவர்களுக்குத் தெரியப் போகிறது.

அங்கே சுதர்சனோ காவேரியிடம் கத்திக்கொண்டு இருந்தான்.. முதலில் தன்மையாய் தான் பேசினான். ஆனால் தான் சொல்வதை புரிந்துகொள்ளாது காவேரி பேசியதையே பேச,

“ஏம்மா.. நமக்கென்ன குறைச்சல்.. என்ன இல்லை இங்க.. இல்லை எனக்கென்ன குறை?? படிப்பில்லையா?? சம்பாத்தியம் இல்லையா?? இல்லை பார்க்கத்தான் நல்லா இல்லையா?? பின்ன எதுக்கும்மா இப்படி பேசிட்டு இருக்கீங்க..” என,

“டேய் கண்ணா அப்படி இல்லடா.. உனக்கு எல்லாமே இருக்கு.. அதான் நல்லா செஞ்சா என்னன்னு சொல்லுறாங்க..” என்று காவேரியும் சொல்ல,

“யாரு சொல்றா??!! இல்ல யாரு சொல்றா?? உன் சித்தி கிழவி தானே…” என்று சுதர்சனும் எரிச்சலாய் தான் பேசினான்.

“டேய் ஏன் டா இப்படி பேசுற..??”

“வேற எப்படி?? நானும் கவனிச்சிட்டு தான் இருந்தேன் சும்மா ஊருக்கு வந்தவன பொண்ணு பார்க்க போகலாம்னு சொல்லி கூட்டிட்டு போயிட்டு, எனக்கும் பிடிச்சிருக்குன்னும் சொல்லிட்டேன்.. இப்போ வேண்டாம்னு பேசினா என்ன அர்த்தம்??” என,

“கல்யாணம்னா நாலஞ்சு பொண்ணுங்களை பார்க்கிறது தானடா.. ஏன் நம்ம ஜெயாவையும் ராணியையும் எத்தனை பேரு பார்த்து வந்தாங்க.. உனக்கும் தெரியும்தான..” என்றார்..

“ஆனா எனக்கு இந்த பொண்ண பிடிச்சிருக்கு.. பத்து பவுனு தானே.. நான் செஞ்சி போட்டுக்கிறேன்.. பேசி முடிங்க..” என்றான் பிடிவாதமாய்.

‘என்ன இவன் இப்படி பேசுகிறான்…’ என்றுதான் பார்த்தார் காவேரி.

“என்ன பாக்குறம்மா.. இதான் என் முடிவு.. சொல்லிட்டேன்.. அவ்வளோதான்.. அப்புறம் அந்த சூனியக் கிழவி வந்து அது இதுன்னு சொல்லிச்சுன்னா நான் சும்மா இருக்க மாட்டேன்..” என்று கத்திவிட்டுப் போக, காவேரிக்கு தலை வலியே வந்துவிட்டது.

“என்னங்க இப்படி சொல்றான்..” என்று கணவரிடம் சொல்ல,

“நானும் பொறுமையா பேசிக்குவோம்னு சொன்னேன், நீ அவசரப்பட்டு தரகர்கிட்ட விசயத்தை சொல்ல, அவரு போய் அங்க விசயத்தை சொல்ல, அவங்க வேற வரன் இருந்தா கொண்டு வர சொன்னாங்களாம்..” என்று முருகவேலும் கடிய,

“ஐயோ..!!” என்றுதான் வாயில் கை வைத்தார்.

“ஆமா இப்போ வை வாய்ல கை.. பொறுமையா போவோம்னு சொன்னா கேட்கணும்.. சுதர்சன் இப்படி சொல்றான்.. இப்போ நம்ம போய் எந்த முகத்தை வச்சிட்டு அவங்கட்ட பேசுறது..” என்று அவரும் கடிந்துவிட்டுப் போக, காவேரி தான் என்ன செய்வார்??

அவரின் ஆறுதல்கள் எல்லாம் பெண் பிள்ளைகளிடம் தானே கிடைக்கும் என்றெண்ணி முதலில் ஜெயக்கொடிக்கு அழைக்க, அவளோ எடுக்கவேயில்லை. அடுத்து ஜெயராணிக்கு அழைத்து நடந்தவைகளை சொல்ல

“என்னம்மா நீ… தம்பிக்கு தான் பிடிச்சிருக்கு பேசி முடிங்கன்னு சொன்னா தேவையில்லாம இப்படி எல்லாரையும் பேச விட்டு கெடுத்து வச்சிருக்கீங்க..” என்று வருந்தினாள்.

“இப்படியெல்லாம் ஆகும்னு நான் என்ன கண்டேன்..”

“சரி நீ ஒன்னும் டென்சன் ஆகாத.. அக்காக்கிட்ட சொன்னியா??”

“இல்ல.. அவ போன் எடுக்கல..”

“எடுத்தாலும் அவங்க வீட்ல வேற வரன் பார்க்கப் போறதை சொல்லாத.. அப்புறம் அவங்க அத்தைக்கு சங்கதி தெரிஞ்சு ஒன்னுக்கு ரெண்டா விஷயம் பெரிசாகும்.. இப்போதைக்கு யாருக்கிட்டயும் எதுவும் பேசாத.. அவர் வரவும் நான் பேசி மேகலா வீட்டாளுங்க மூலமா எதுவும் பேசலாமான்னு பாக்குறேன்..” என்று சொல்லி வைத்தாள்.

அங்கே சுதர்சனுக்கோ மனது ஆறவேயில்லை.. என்னடா இது இருந்து இருந்து ஒரு பெண்ணை பிடித்தது தவறா??

‘எங்க வீட்டு பொண்ணுங்களுக்கு செஞ்சது போலன்னு இவங்களும், எங்க வீட்ல பொண்ணுங்களுக்கு ஒரேமாதிரி தான் செய்வோம்னு அவங்களும் இப்படி மாத்தி மாத்தி பேசினா என்னதான் வழி..’ என்று யோசித்துக்கொண்டு இருந்தான்..

யாரைப் பிடித்தால் இந்த விஷயம் சுமுகமாய் முடியும் என்று தோன்ற, அவனுக்கு வேலவன் நினைவு வந்தது. அன்று பெண் பார்த்து சென்ற நாளிலேயே வேலவன் இவனோடு சகஜமாய் பேச, அவனின் எண்ணை கூட வாங்கி வைத்திருந்தான்.

“ஏன் மச்சான் பொண்ணு நம்பர் வாங்குவன்னு பார்த்தா.. பொண்ணோட அண்ணன் நம்பர வாங்குற..” என்று பாண்டியன் கூட கிண்டல் செய்தான்.

‘நல்லவேள நம்பர் வாங்கினது..’ என்று எண்ணியபடி வேலவனுக்கு அழைக்க,

அவனோ “நான் சுதர்சன் பேசுறேன்..” என்ற குரலில் கொஞ்சம் வியந்து தான் போனான்.

பெரியவர்கள் முடிவெடுக்கையில் நிச்சயம் மாப்பிள்ளையோ பெண்ணோ என்ன செய்ய முடியும் என்பது வேலவன் எண்ணம். ஆனால் சுதர்சன் அழைக்கவும்,

“அ… சொல்லுங்க!!” என்றவனுக்கு இன்னமும் வியப்புத் தீரவில்லை.

“நான் உங்களை நேர்ல பார்த்து பேசணும்.. ஈவ்னிங் மீட் பண்ண முடியுமா??” என,

“பேசலாம் ஆனா.. ஈவ்னிங்..” என்று வேலவன் இழுக்க,

“ஏன் பிசியா நீங்க.. ஒன்னும் பரவாயில்லை நாளைக்குக் கூட பேசுவோம்..” என்றான் சுதர்சன்.

“பிசியில்ல..” என்று யோசித்த வேலவன், பின் “இல்ல தங்கச்சி கொஞ்சம் மூட் அப்சட்.. அதான் அவளை கூட்டிட்டு வைகை டேம் வரைக்கும் சாயங்காலம் போயிட்டு வரலாம்னு..” என்று இழுக்க,

“ஒ..!!! சரி அப்போ நீங்க வந்ததும் சொல்லுங்க..” என்று வைத்தவனுக்கு சண்முகப் பிரியாவின் முகமே மனதில் நின்று போனது..

‘மூட் அப்சட்…’ இதனை இரண்டு முறை உச்சரிதவனுக்கு,

‘ஒருவேளை நம்மள மாதிரிதான் நினைக்கிறாளோ.. இந்த குருவிக் கூடுக்கு அப்படியெல்லாம் நினைக்கத் தெரியுமா??’ என்று எண்ணம் போனது..

“ச்சே நமக்கே இப்படி இருந்தா அந்த பொண்ணுக்கு எப்படி இருக்கும்..” என்று அவளுக்கும் சேர்த்து இப்போது இவன் வருந்த,  அங்கே அவளோ ஹாயாக வைகை டேம் செல்ல கிளம்பிக்கொண்டு இருந்தாள்.

சுதர்சனோ “ஏன் டைம் வேஸ்ட் பண்ணனும்.. பேசாம நம்மளும் டேம் போயிட்டா.. நேராவே அவங்களை எல்லாம் பார்த்து பேசிடலாம் தானே..” என்று எண்ணம் போக,  

அங்கே யார் யார் வருகிறார்கள் என்று தெரியாது இல்லையா.. ஆக கொஞ்சம் தயக்கமாகவும் இருந்தது.

‘ஒருவேளை வீட்ல பெரியவங்க வந்தா அப்புறம் எல்லாமே தப்பாகிடும்..’ என்றெண்ணியவன், மதியத்திற்கு மேலேயே பைக்கை எடுத்துக்கொண்டு சாலையின் ஒரு பிரிவில் நின்றுகொண்டான்.

‘எப்படியும் இந்த வழியா தானே போகணும்.. அப்போ பார்த்திடலாம்..’ என்ற யூகிப்பு அவனுக்கு.

அவனது எண்ணமும் சரியாய் தான் இருந்தது அனால் அது சரிதான் என்று தெரியவே ஒருமணி நேரத்திற்கு மேலானது. வேலவன், மேகலா பிரியா குமரன் நால்வரும் மதியம் மூன்று மணிக்கு மேலே தான் கிளம்ப, இவனோ இரண்டில் இருந்தே அங்கே காத்திருந்தான்.

‘எவ்வளோ நேரம்…’ என்று பொறுமையாகவே நின்றவனுக்கு பலன் கிடைக்காது இல்லை.

சரியாய் வேலவனின் கார் வர, சுதர்சன் தான் நிற்பது தெரியாமல் இருக்க, அங்கே இருந்த கடையின் உள் பகுதியில் நின்றுகொண்டான்.  பின்னிருக்கையில் சண்முகப் பிரியா ஜன்னலை பாதி திறந்துவிட்டு வேடிக்கைப் பார்த்துக்கொண்டு வருவது நன்றாய் தெரிந்தது.. வேடிக்கைப் பார்த்தபடி வந்தவளின் பார்வை அப்படியே அந்த கடையை கடக்கையில் இவனிலும் நின்று தேங்கி பின் இமைகள் விரித்துப் பார்க்க, காரும் நகர்ந்திருந்தது.

விரல் சொடுக்கும் நொடியில் அவள் பார்வையின் மாற்றம் கண்ட சுதர்சனுக்கு ‘இவதான் டா.. என்ன ஆனாலும் சரி.. எவன் வந்தாலும் சரி.. கல்யாணம் பண்றேன்.. கூட்டிட்டு போறேன்..’ என்ற முடிவிற்கு வந்தேவிட்டான்..

கடையில் இருந்து வெளியே வந்துப் பார்க்க, சண்முகப் பிரியாவோ, கார் ஜன்னலில் இருந்து எட்டிப் பார்த்து லேசாய் புன்னகைப்பது போலிருந்தது..

‘ஏய்.. குருவிக்கூடு.. இந்த சிரிப்பு போதும்.. இந்தா வர்றேன்..’ என்றவன் பைக்கை கிளப்பிக்கொண்டு காரை தொடர்ந்து போனான்.              

   

 

           

                 

     

            

Advertisement