Advertisement

                        ஆஹா..!! கல்யாணம் –  2

“என் தம்பிக்கிட்ட எதுவும் பேசணுமா??” என்று ஜெயராணி கேட்டதுமே, சண்முகப் பிரியாவிற்கு பார்வை அரக்கப் பறக்கப் பறந்து போய் தன் அம்மா பெரியம்மாவிடம் தான் ஒட்டியது.

‘என்னை இவங்கக்கூட உக்கார வச்சிட்டு இவங்கலாம் என்னா செஞ்சிட்டு இருக்காங்க…’ என்று பார்க்க, இதனை மேகலா பார்த்துவிட்டாள்..

‘என்ன??’ என்று ஜாடையில் இருக்க, ‘இங்க வாங்க..’ என்று பிரியாவும் தலையை அசைத்து அழைக்க, ஜெயராணிக்கு சிரிப்பு வந்துவிட்டது.

அவளுக்கு பிரியா ஒன்றும் புதியவள் அல்லவே. ஆனாலும் என்னதான் தெரிந்தவர்கள் என்றாலும் கூட இன்றைய நாளின் பதற்றம் என்பது யாருக்கும் இருக்கத்தான் செய்யும்.. மாப்பிள்ளையாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும்.

“சும்மா சொல்லு பிரியா.. உங்க வீட்ல எதுவும் சொல்ல மாட்டாங்க..” என,

“இல்ல.. அது…” என்று பிரியா இழுக்கும்போதே, மேகலா வந்தவள், “என்ன சண்மு..” என,

“சுதர்சன்கிட்ட பேசுறியான்னு கேட்டேன் மேகலா. அதான் டென்சன் ஆகிட்டா போல..” என்று ஜெயராணி சொல்ல, மேகலா சிரித்தவள் “பேசுறதுன்னா பேசு..” என்றாள்..

“ம்ம் இரு.. நான் போய் அவனையும் கேட்டிட்டு வர்றேன்..” என்று ஜெயராணி நகர,

“அண்ணி.. என்னண்ணி…” என்று பிரியாவிற்கு டென்சன் ஏறினாலும் மனதில் ஒரு ஆவல் எட்டித்தான் பார்த்தது.

அதற்குள் பூமாவும், மீனாட்சியும் வந்து மகளிடம் என்னவென்று கேட்க, “மாப்பிள்ளையும் பொண்ணும் பேசிக்கலாமான்னு கேட்கிறாங்க அத்தை….” என்றாள் மேகலா..

மீனாட்சி பூமாவின் முகம் பார்க்க, அவரோ “உங்க அப்பாருங்க என்ன சொல்வாங்கத் தெரியலையே..” என,

“இந்த காலத்துல இதெல்லாம் சகஜம்தானே..” என்ற மேகலா தன் கணவனை ஒரு பார்வை பார்த்தாள் இங்கே வா என்று.

“என்ன மேகலா…” என்றபடி வேலவன் வர, மேகலா விஷயம் சொல்ல “போய் அப்பாவங்க கிட்ட கேட்டுட்டு வா வேலவா…”என்று மீனாட்சி சொல்ல,

“ம்ம் சரி சித்தி.. பேசுறதுன்னா பேசிக்கட்டும்..” என்று அவன் முடிவையும் சொல்லிவிட்டு போனான்.

சரவணனும் சண்முகநாதனும் கூட சரியென்று சொல்லிட, அங்கே ஜெயராணி தன் அம்மாவிடம் “ம்மா.. ரெண்டு பேரும் பேசி பார்க்கட்டுமே..” என,

காவேரி பதில் சொல்வதற்கு முன்னேயே ஜெயக்கொடி “நம்ம எல்லாம் பேசிக்கிட்டோமா என்ன..??” என்றாள் பட்டென்று.

அது என்னவோ அந்த வீட்டினில் ஜெயக்கொடி தென் துருவம் என்றால், ஜெயராணி வாட துருவம். ஆனால் இருவருக்கும் சண்டைகள் எல்லாம் வராது.. கருத்துக்கள் எப்போதுமே மாற்றுதலாய் தான் இருக்கும்.. அதிலும் தம்பிக்கு ஜெயராணி அவளின் கணவன் வீட்டு சொந்தத்தில் முடிக்கப் போகிறாள் என்றதுமே மனதில் ஒரு சிறு சுணக்கம் வேறு இருந்தது.

நாளை அனைத்திற்கும் அவளைத் தானே முன்னே வைப்பார்கள் என்று. இருந்தாலும் சுதர்சனுக்கு நல்லதொரு வாழ்வு அமையவேண்டும் என்றே எண்ணினாள்.

“ம்ம்மா நீ சொல்லு..” என்று ஜெயராணி கேட்க,

“உங்கப்பாவை கேட்கணும்.. அவனையும் கேளு பேசுறானா அப்படின்னு..” என்று காவேரி சொல்லிட,

நேராய் தன் அப்பாவிடம் பேசியவள், அவர் சரியென்றதும் சுதர்சனிடம் “பொண்ணு கூட பேசுறியா??!!” எனவும் “அவங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே…” என்றான்.

“ஓஹோ..!!!” என்று கிண்டலாய் பார்த்தவள், பின் திரும்பி சண்முகப் பிரியாவிடம் வந்து “உனக்கு ஓகே வா..” என,

பூமா “ஒரு அஞ்சு நிமிஷம் மட்டும் பேசிக்கட்டும்…” என்றார்..

அப்படி இப்படி என்று இருவரும் தட்டுத் தடுமாறி தயங்கி திணறி பின்னே தோட்டத்தில் வந்து நிற்பதற்கே அந்த ஐந்து நிமிடத்தில் பாதி போய்விட, ஏற்கனவே இவளைப் பார்த்திருக்கிறான் என்றாலும் கூட சுதர்சனுக்கு எடுத்ததுமே என்ன பேச என்று தெரியவில்லை.

‘பேசாம எல்லா படத்துலயும் கேட்கிற மாதிரி என்னைப் பிடிச்சிருக்கான்னு கேட்டிடுவோம்..’ என்று அவன் யோசித்து முடிக்கும் நேரம்,

“உங்கள நான் இதுக்கு முன்னாடி பார்த்த மாதிரி இருக்கு..” என்றாள் பிரியா..

“ம்ம்.. மே பி பார்த்திருக்கலாம்.. இந்த ஒன் வீக்கா ஊர்ல தானே இருக்கேன்..” என்று அவனும் இலகுவாய் ஆரம்பிக்க,

“ம்ம்ஹும் அதில்ல.. அதுக்கும் முன்னாடி..” என்று யோசித்தவள், “ஹா..!! நீங்க அந்த வடகரை சுமதியக்கா பின்னாடி தானே கொஞ்ச நாள் சுத்தினீங்க…” என்று கேட்டதும், கண் விழி பிதுங்கி வெளியே வந்துவிடும் போலிருந்தது சுதர்சனுக்கு..

“என்.. என்னது??!!!” என்று சுதர்சன் அதிர்ந்து கேட்க,

“நீங்கதானே.. எனக்கு அப்படித்தான் தோணுது…”

‘இல்லைன்னு சொல்லிடு சுதர்சா…’ என்று அவனின் மனது சொல்ல “அ.. அது எப்படி உனக்குத் தெரியும்??!!” என்று கேட்டுவிட்டிருந்தான் அவன்..

“ம்ம் இது நடந்து ஒரு பத்து வருஷம் இருக்குமா??” என்று சிரிப்போடவே பிரியா கேட்க,

‘அடிப்பாவி குருவிக் கூடு எல்லாத்தையுமே இந்த கூட்ல சேவ் பண்ணி வச்சிருப்பாளோ..’ என்றுதான் பார்த்தான்..

“என்ன??!! நான் சுமதியக்கா அம்மாக்கிட்ட தான் டியூசன் படிச்சேன்.. அப்போ சுமதியக்காவும் அவங்க பிரண்டும் பேசிப்பாங்க…” என்று சண்முகப் பிரியா என்னவோ பெரிய ராணுவ ரகசியம் தனக்குத் தெரியும் என்பதுபோல் சொல்ல,

‘இதை வைச்சே வேண்டாம் சொல்லிடுவாளோ..’ என்று கொஞ்சம் டென்சனாய் போனது சுதர்சனுக்கு..

‘இந்த தொல்லைக்கு பேசாமையே இருந்திருக்கலாம்.. இவளுக்கு டியூசன் படிக்க வேற இடமே இல்லையா..???’ என்றெண்ணியவன்,

“அது.. ஆக்சுவலி.. சுமதி…” என்று என்னவோ சொல்லி சமாளிக்க முயல,

“தெரியும் தெரியும்.. இப்போ அவங்களுக்கு ரெட்டைப் பசங்க இருக்காங்க.. நான் ஒன்னும் தப்பா நினைச்சுக்கல.. ஜஸ்ட் உங்களைப் பார்த்ததும் அது நியாபகம் வந்தது.. கன்பார்ம் பண்ணிக்கலைன்னா தலை வெடிச்சிடும்…” எனும்போதே,

“அக்கா..!!!” என்றொரு அழைப்பு குமரனிடம் இருந்து..

அவ்வளோதான் உங்களுக்குக் கொடுத்த நேரம் முடிந்தது என்பதுபோல் இருக்க, “ம்ம் ஓகே..” என்று தோளை குலுக்கிவிட்டு சண்முகப் பிரியா சென்றுவிட்டாள்.

என்ன இருந்தாலும் இது அவளின் வீடல்லவா.. அழைப்பு வந்ததும் சென்றிட, இவனுக்கோ ‘இவ டிசைனே இதானோ..’ என்று பார்த்து நின்றிருந்தான்.

என்னென்னவோ பேசவேண்டும் என்று எண்ணி, கடைசியில் அவள் கேட்ட ஒரே கேள்வியில் மொத்தம்மாய் அவுட்டாகி, ஹ்ம்ம் கல்யாணம் முடிஞ்சா கடைசி வரைக்கும் இப்படிதானோ என்று தோன்ற சிரித்துக்கொண்டான்.

“என்ன மாப்பிள்ள தனியா சிரிச்சிட்டு இருக்க??” என்றபடி வந்தனர், ரமேஷூம், பாண்டியனும்.

“சும்மாதான் மாமா…” என,

“சரி பொண்ணு எப்படி??” என்று பாண்டியன் கேட்க, “அட என்ன சகல.. எல்லாம் இங்கவே பேசிட முடியுமா?? அங்க போய் பேசிக்கலாம்.. மாமா கிளம்பலாமான்னு கேட்டு அனுப்பிட்டார்..” என,

“ம்ம் சரி போலாம்..” என்று சுதர்சனும் சொல்லிட, இரண்டு வீட்டினருமே தங்களின் முடிவினை சொல்லவில்லை.

‘கலந்து பேசிவிட்டு சொல்கிறோம்..’ இதுவே இரு தரப்பின் வாக்கியமாய் இருக்க, சம்பந்தப் பட்ட இருவருக்கும் பிடித்தே இருந்தது.

சுதர்சன் குடும்பத்தினர் தங்கள் வீட்டிற்குள் நுழையவுமே, முருகவேல் “எல்லாருக்கும் ஏதாவது பண்ணு..” என்று காவேரியிடம் சொல்ல,

“ம்ம் எல்லாரும் சாப்பிட்டிட்டு தான் போகணும்..” என்று காவேரியும் சொல்ல,

“இல்லம்மா… இவருக்கு தோட்டத்துல என்னவோ வேலை இருக்காம்.. கிளம்பனுமாம்..” என்று ஜெயக்கொடி சொல்ல, மற்ற அனைவரும் ரமேஷ் முகம் பார்க்க,

“ஆமா மாமா.. நீங்க எல்லாம் பேசி ஒரு முடிவுக்கு வாங்க..” என்றுசொல்லி அவர்கள் இருவரும் கிளம்பியே விட்டானர்.

காவேரிக்கு இந்தமட்டும் ரமேஷ் பொறுமையாய் வந்துபோனது பெரிது என்று இருந்தது. காவேரிக்கு சொந்த சித்தியின் மகன். இவருக்கு ஒன்றுவிட்ட தம்பி. ஆனாலும் மாப்பிள்ளை முறுக்கை எப்பவுமே காட்டுவான். ஜெயக்கொடி சமயத்தில் கணவனின் புத்திக்கு ஏற்ப பார்த்து நடந்துகொண்டு சூழ்நிலையை சமாளித்துவிடுவாள்.

ஆனால் பாண்டியன் அப்படியல்ல.. அந்நிய சம்பந்தம் என்றாலும் கூட, கொஞ்சம் சகஜமாய் பழகும் ரகம்.. ஜெயராணியும் அப்படித்தான் இழுத்துப்போட்டு எல்லாம் செய்வாள்.

“ம்மா… இந்த சம்பந்தம் முடிஞ்சா நல்லது..” என்று ஜெயராணி சொல்ல,

“ம்ம் பொறுமையா தானே முடிவு செய்யணும்.. ஆளுங்க எல்லாம் நல்லவிதமா தான் இருக்காங்க..” என்று காவேரி சொல்லிக்கொண்டே அடுப்படி வேலையை ஆரம்பிக்க,

பாண்டியனோ “என்ன மாமா முடிவு செஞ்சிருக்கீங்க..” என, “இதுல என்ன மாப்பிள்ளை முடிவெடுக்க, இங்கன இருக்காங்க.. தெரிஞ்ச மனுசங்களும் கூட.. எல்லாத்துக்கும் மீறி உங்க பக்கத்து சொந்தம்.. அடுத்து பேசி பார்த்து முடிச்சுக்கலாம்..” என, சுதர்சனுக்கு அப்போது தான் நிம்மதியாய் இருந்தது.

ஆனால் காவேரியோ “ஜெயக்கொடிக்கு என்னவோ மனசுல வருத்தம் போல ராணி..” என,

“தெரியும்மா.. நானும் பார்த்தேன்.. அங்க அவங்களும் என்கிட்டவே பேசினாங்களா.. ஆனா மேகலாவை அங்க கொடுத்ததுனால வந்த சொந்தம் தானே..” என்று ராணியும் சொல்ல,

“ம்ம் ஆமா.. சரி என்ன செய்வாங்கன்னு விசாரிச்சையா??” என்று விசயத்திற்கு வந்தார்.

என்னதான் இப்போது வரதட்சினை வாங்க மாட்டோம் என்று மாப்பிள்ளை வீட்டினர் சொன்னாலும் கூட, அவர்களின் பெண்ணுக்கு என்ன செய்கிறார்கள் என்று தெரிந்துகொள்வது ஊர் வழக்கமாய் தானே இருந்தது. அதிலும் காவேரியும் இரு பெண்களைக் கட்டிக்கொடுத்தவர், நாளைக்கு பின்னே எதுவும் பேச்சாகிட கூடாது என்றே கேட்டார்..

“ம்ம் மேகலாக்கிட்ட கேட்டேன் ம்மா.. அவங்க பெரியவர் பொண்ணுக்கு மொத்தம் அம்பது போட்டிருப்பாங்க போல.. பொண்ணுக்கு நாப்பது.. மாப்பிள்ளைக்கு பத்துன்னு.. இந்த பொண்ணுக்கும் அப்படித்தான் செய்வாங்களாம்..” என்றதும், காவேரியின் முகம் யோசனைக்குச் சென்றது.

“என்னம்மா..??!!”

“நான் உங்க ரெண்டு பேருக்கும் அறுவதுல டி போட்டிருக்கேன்.. குறைச்சு போட்டுட்டு வந்தா நாளைக்கு ஒரு பேச்சு வருமே..” என,

“நம்ம வெளிய சொன்னாதானேம்மா.. அவங்க என்ன இல்லாத பட்டவங்களா?? ரெண்டு பொண்ணுங்களுக்கும் ஒரேமாதிரி செய்றதுல என்ன தப்பு..” என்று ஜெயராணி இலகுவாய் இதனை முடித்துவிட, ஆனால் இது இலகுவாய் முடியும் பிரச்சனையாய் இருக்கவில்லை.

மறுநாளே, ஜெயக்கொடியோடு அவளின் மாமியார், அதாவது காவேரியின் சித்தி வந்துவிட “வாங்க சித்தி..” என்று மனதில் ஒருவித திடுக்கிடலோடு தான் வரவேற்றார் காவேரி.

சுதர்சன் இருந்தவனும் “வாங்க பாட்டி..” என,

“ம்ம் ம்ம் வர்றேன் கல்யாண மாபிள்ள.. வாங்கன்னு சொல்றது சரி.. நேத்து பெரிய மனுசியா என்னை கூட்டிட்டு போகணும்னு தெரிஞ்சதா..” என்று வந்ததுமே ஆரம்பித்து விட,

“பொண்ணு பார்க்கத் தானே சித்தி போனோம்.. இன்னும் ஒன்னும் முடிவு பண்ணலைங்களே…” என்றார் காவேரி..

“அதான் என்ன எதுன்னு கேட்டு போகலாம்னு வந்தேன்..” என்ற மகேஸ்வரி,

“என்ன ஜெயக்கொடி.. கம்முன்னு இருக்க..” என்று கேட்க, “நீங்கதானே பேசணும் கூட்டிட்டு போன்னு சொன்னீங்க.. பேசுங்க..” என்றுவிட்டு அம்மாவின் முகம் பார்த்தாள்..

“சரி.. இன்னிக்கு என்னவோ நடக்கப் போகுது..” என்றெண்ணிய சுதர்சன், “ம்மா நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வர்றேன்..” என்று கிளம்பிட,

அவன் போகும் வரைக்கும் காத்திருந்த மகேஸ்வரி “எல்லாம் சரி என்ன செய்வாங்கன்னு விசாரிச்சயா இல்லையா?” என, காவேரிக்கு சொல்வோமா வேண்டாமா என்றிருந்தது.

ஆனால் அதற்குள் ஜெயக்கொடி, மேகலா ஜெயராணியிடம் சொன்னதை சொல்ல “ஏன் உன் பொண்ணுங்களுக்கே அவ்வளோ போட்டிருக்க.. அப்போ உனக்கு மறுமகளா வர்றவ அதுக்கு ஏதுவா இருக்கவேணாமா??” என,

அம்மாவும் மகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

“இல்ல சித்தி.. பார்த்துட்டு தானே வந்திருக்கோம் இன்னும் முடிவு பண்ணலை..” என்று காவேரி சமாளிக்கப் பார்க்க,

“நானும் விசாரிச்சேன்.. அவங்க வீட்டு மூத்த பொண்ணோட மாப்பிள்ளை வெறும் BE தானாம்.. நம்ம பைய MEல அதனால தாராளமா நெறையவே செய்யலாம்..” என்று மகேஸ்வரி மேலும் பேச, காவேரி கப்சிப் என்றாகிப்போனார்.

இதற்குமேல் பேசினால் கண்டிப்பாய் வீண் வம்புதான் வளரும் என்று..

ஒருவழியாய் அவர்கள் இருவரும் கிளம்பிட, அடுத்து ஜெயராணி அழைத்து “என்னம்மா அப்பா சம்மதம்னு சொல்றதுபோல அவர்க்கிட்ட சொன்னாராம்.. ஒரு முடிவா சொல்லிட்டா அவங்க வீட்ல பேசிடலாம்..” என்று கேட்க,

“ம்ம் இரு டி.. நீ வேற..” என்று சலித்தார் காவேரி..

“ஏன் என்னாச்சு??!!” என்றதும், மகேஸ்வரி சொன்னது எல்லாம் காவேரி சொல்ல, “போச்சு டா.. இந்த அக்காக்கு எப்போ எதை சொல்லனும்னு இல்லையா…” என்றவள்,

அடுத்து சுதர்சனுக்கு அழைத்து விஷயம் சொல்ல “என்னக்கா இதெல்லாம் ஒரு விசயமா??!!” என்றான் ஒன்றும் விளங்காது.

“நாளைக்கே இது பெரிய விசயமா ஆகிட கூடாதுன்னு தான்டா நானும் நினைக்கிறேன்.. எனக்கு தெரியும் உனக்கு பிரியாவை பிடிச்சிருக்குன்னு..” என்ற ஜெயராணி, “ஒருதடவ அம்மாக்கிட்ட பேசு.. அவங்க தெளிவாகிட்டா சரியாகிடும்..” என்று வைத்துவிட்டாள்.

சுதர்சனுக்கு இதென்னடா தலைவலி என்று இருந்தது. பொதுவாய் வீட்டினில் பெண்கள் பேசுகையில் அதை கவனித்துக்கொள்ள மாட்டான். அவர்களுக்குள் பேச ஆயிரம் இருக்கும் அதில் நாமென்ன தலை கொடுப்பது என்று தள்ளியே இருந்துவிடுவான்.

ஆனால் இப்போதோ, தான் கிளம்பி வெளியே போனதே தவறோ என்று தோன்றியது. பார்த்தால் இதொரு சிறு விசயம்தான். ஆனால் ஊதியே பெரிதாக்க ஆட்கள் உண்டு..

“ம்மா…” என்று சுதர்சன் அம்மாவை தேடித் போக, அங்கே சண்முகப் பிரியா வீட்டிலோ,

“அவங்க வீட்ல இருந்து நம்ம பதிலுக்கு காத்திருக்காங்களோ என்னவோ..??” என்றார் சண்முகம்..

“நம்ம விசாரிக்கிறது எல்லாம் செஞ்சிட்டு தானே சண்முகம் பதில் சொல்லமுடியும்..” என்ற சரவணன், “பொண்ணு என்ன சொல்றா??!!” என்று பூமாவைப் பார்க்க,

“அவளுக்குப் பிடிச்சிருக்காம்..” என்றார் பூமா..

“ம்ம் காலையில் இருந்து பாட்டா பாடிட்டு இருந்தா.. அப்போவே நினைச்சேன்..” என்று சரவணன் சொல்ல,

“அப்பா மாப்பிள்ளை வேலைப் பார்க்கிற இடத்துலயும் விசாரிச்சாச்சு.. நல்லதா தான் சொல்றாங்க..” என்று வேலவன் சொல்ல, அனைவர் முகத்திலும் ஒரு நிம்மதி.

இதெல்லாம் சண்முகப் பிரியாவின் காதிலும் விழுந்தது. எப்படியும் வீட்டினர் அனைவர்க்கும் இந்த சம்பந்தம் பிடித்திருக்கும் என்ற யூகம் இருந்தாலும் அண்ணனின் இந்த சொல்லுக்குத் தான் காத்திருந்தாள்.. மேகலா வந்தவளோ “என்ன சண்மு.. சந்தோசமா…” என, சிரித்தபடி தலையை ஆட்டினாள் சண்முகப் பிரியா..       

      

    

                        

                        

Advertisement