Advertisement

ஆஹா கல்யாணம் – 11

“என்னம்மா நீ நிஜமாத்தான் சொல்றியா??!” என்று ஜெயக்கொடி அதிர்ந்து கேட்க,

“வேறென்ன செய்ய சொல்ற.. அவன் ஒரேதா நிக்கிறான்.. ஆசுபத்திரிக்குக் கூட வரமாட்டேங்கிறான்.. இங்க காலத்துல அவனவன் என்னென்னவோ செய்றான்.. ஒரு பொண்டாட்டிக்குத் தெரியாம இன்னொருத்தியோட குடும்பம் நடத்துறான்.. என் பையன் அப்படியா?? தங்கம் அவன்.. ஒவ்வொண்ணுக்கும் என் முகம் தான் பார்த்து நிக்கிறான்..” என்று காவேரி அப்படியே பேச்சினை உல்டாவாக மாற்ற,

அதைக் கேட்டுக்கொண்டு இருந்த ஜெயராணி அப்படியொரு சிரிப்பு வந்தது..

‘தம்பி.. நீ லேசுபட்ட ஆளு இல்லடா..’ என்று எண்ணிக்கொண்டாள்.

அப்பாவும் அம்மாவும் அன்றைய தினம் காலையில் தான் பெரியகுளம் வந்திருக்க, ஜெயராணி தான் அவர்களுக்கு காலை உணவு கொண்டு வந்திருந்தாள். பாண்டியன் வந்து விட்டுவிட்டு சென்றிட, முருகவேல் உண்டுவிட்டு தோட்டம் பார்க்கப் போய்விட,

“என்னம்மா என்ன முடிவு பண்ணிருக்கீங்க??!!” என்று ஜெயராணி கேட்கவும்,

“வேறென்ன செய்ய.. அந்த பொண்ணு மேகலா அப்பா அம்மாக்கிட உன் மாமியாரை பேச சொல்லு..” என்றவர், பெரிய மகளுக்கு அழைக்க, நல்லவேளை ஜெயக்கொடியும், ரமேஷும் ஒரு திருமணத்திற்கு என்று மதுரை சென்றிருந்தனர். 

“சரி வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் பேசுவோம்..” என்று காவேரி சொல்லும்போதே,

ஜெயக்கொடியோ “பரவாயில்ல சொல்லும்மா கார்ல போயிட்டு தான் இருக்கோம்..” என, காவேரியும் இப்படி என்று சொல்லிட, அவளுக்கு நம்பத்தான் முடியவில்லை.

ஆனாலும் மகனின் பேச்சில் காவேரி இப்படி தலைக்குப்புற விழுவார் என்பது சுதர்சனுக்கே தெரியாத ஒன்று.

அவன் பேசும்போது கூட “ம்ம் பாப்போம்… நீ இப்படி உடம்ப கெடுத்து வச்சிக்கிறது நல்லா இல்லை..” என்று மட்டும் தான் சொல்லிவிட்டு ஊரு வந்து சேர்ந்தனர்.

கிளம்ப மாட்டேன் என்ற அம்மா ‘டிக்கட் போடு..’ என்று சொன்னதுமே அவனுக்குப் புரிந்துபோனது. இந்த விசயமாய் தான் பேசப் போகிறார்கள் என்று.

ஆனால் அதை வெளிக்காட்டவும் இல்லை. மனதில் எதிர்பார்ப்பு என்பதை வைத்துக்கொள்ளவும் இல்லை. மனதில் இருப்பதை சொல்லியாகிவிட்டது இனி அவர்கள்தான் முடிவு செய்யவேண்டும் என்று. ஆனாலும் மனதில் நம்பிக்கை மட்டும் குறையவில்லை..

சுதர்சனும் கணேஷும் தான் வந்து இவர்களை பஸ் ஏற்றிவிட, முருகவேல் கிளம்புகையில் “ஒன்னும் கவலைப் படாத.. நான் பார்த்துக்கிறேன்..” என்றுவிட்டே கிளம்பினார்..

எத்துனை வயதானாலும், ஒரு பிள்ளைக்கு அது ஆணோ பெண்ணோ அப்பாவின் ‘நான் பார்த்துக்கிறேன்..’ என்ற சொல் யானை பலம் தான்.. அப்பாவிடம் எனக்கு இதை செய்யுங்கள் என்று கேட்பது போல் வேறாரிடமும் கேட்கவும் முடியாது தானே..

முருகவேலின் இப்பேச்சில் சுதர்சன் கொஞ்சம் சந்தோசமாய் உணர, “ம்மோவ் கொஞ்சம் பார்த்து பண்ணு.. இல்லை எங்கப்பாக்கு வேற பொண்ணுதான்..” என்று மிரட்ட,

“போடா டேய் போடா..” என்றுவிட்டு போனார் காவேரி.. ஆனால் அவருக்குமே மனதில் ஒரு சந்தோசம் தான்.  அதுதான் ஊருக்கு வந்ததுமே அந்த வேலையில் இறங்கிவிட்டார்.

முருகவேலும் விவரமாய், “உன் பையன் உன்னை நம்பி அவன் வாழ்க்கைக்கு கேட்கிறான்.. சந்தோசமா செய்யேன்..” என்றுவிட, காவேரிக்கு என்னவோ பெரிய பொறுப்பு தன்னிடம் ஒப்படைத்த உணர்வு.

ஜெயக்கொடி தான் “ம்மா நாங்க வந்துக்கிறோம் அதுக்கு அப்புறம் எல்லாம் உக்காந்து பேசி முடிவு பண்ணுவோம்.. வேணாம் சொல்லிட்டு இப்போ நம்ம இறங்கிப் போனா நம்மள என்ன நினைப்பாங்க..??” என,

“இனி என்னடி உக்காந்து பேச இருக்கு.. நம்ம என்ன அவனாக முகத்துக்கு நேராவா வேணாம் சொன்னோம்.. எல்லாம் பொது மனுசங்க வச்சுதானே.. கல்யாணம்னா இதுபோல ஆயிரம் நடக்கும்..” என்று ஒரேதாய் முடித்துவிட்டார்.

இது என் மகனுக்கான வாழ்வு விஷயம். அதை சரியாய் செய்து முடித்திட வேண்டும் என்ற எண்ணம் இருக்க, “நகை நட்டெல்லாம் பெரிய விசயமா என் மகன் லச்சத்துல சம்பளம் வாங்குறான்..” என்று ஜெயராணியிடமே பிகு காட்ட,

“ம்மோய்.. பயங்கரம்தான் போ..” என்றவள், தன் மாமியாருக்கு அழைத்து மேகலா வீட்டினரிடம் பேசச் சொல்ல, அடுத்த அரைமணி நேரத்தில்,

“அவங்க எல்லாம் மதுரைல இருக்காங்களாம்.. வரவும் நேர்ல பேசிக்கலாம்னு சொல்றாங்க..” என்று ஜெயராணியின் மாமியார் சொல்லிட,  ஜெயராணிக்கு மனதில் ஒரு யோசனை தோன்றியது.

“ம்மா அக்காவும் மாமாவும் மதுரைல தானே போறாங்க.. இன்னிக்கு முகுர்த்த நாள் வேற.. ஏற்கனவே பார்த்த பொண்ணுதானே.. அவங்களை அப்படியே போய் பார்த்து பேசி பூ குடுத்துட்டு வர சொல்லேன்..” என,

“வேணாம் வேணாம்.. கூடவே ஜெயா மாமியாரும் போறாங்களாம்..” என்று காவேரி மறுத்துவிட,

“இல்லம்மா அவங்க வீட்டு ஆளுங்களை முன்ன நிறுத்தலைன்னு தானே இவ்வளோ பிரச்னை வந்துச்சு.. இப்போ போய் அவங்களை பேசச் சொல்லு எல்லாம் சரியாகும்..” என்றாள் உறுதியாய்.

அவள் சொல்வதும் கூட ஒருவகையில் சரிதான். திருடனை காவலுக்கு வைக்கும் கதைதான்.. என்ன இருந்தாலும் தம்பி என்ற பாசம் ஜெயக்கொடிக்கும் உண்டுதான்.. ஜெயராணியும் பாண்டியனும் நிச்சயம் மனதில் ஒன்றும் வைத்துகொள்வது போல் தெரியவில்லை. ஆக அவர்களே பேசிவிட்டு வரட்டும் என்றுதான் ஜெயராணி நினைத்தாள்.

அதையே அம்மாவிடமும் சொல்ல, “அப்பாக்கிட்டயும் தம்பிக்கிட்டயும் கேட்டுக்கலாம்..” என்றவர்,

முருகவேலுக்கு அழைத்து “என்னங்க பெரிய மாப்பிள்ளை எல்லாம் மதுரைல தான் இருக்காங்களாம்.. அந்த பொண்ணு வீட்லயும் எல்லாம் மதுரைல தான் இருக்காங்களாம்.. அப்படியே ஒருவார்த்தை ஜெயா வீட்டு ஆளுங்கள பேசி பூ கொடுத்துட்டு வர சொல்லுவோமா?? இன்னிக்கு நல்ல நாள் வேற..” என,

முருகவேல் அடுத்த பத்து நிமிடத்தில் வீட்டிற்கு வந்தவர், “நிஜமாத்தான் சொல்றீங்களா??!!” என்று மனைவி மகள் இருவரையும் பார்த்துக் கேட்க,

“நான் தான்ப்பா சொன்னேன்..” என்றாள் ஜெயராணி.

“ஜெயா மாமியார் வேற போயிருக்காங்க.. அதான் யோசனை..” என்று முருகவேல் தயங்க,

“ப்பா.. மாமாக்கிட்ட பேசுங்க.. தம்பியையும் பேச சொல்லுவோம்.. ஆள் மாத்தி ஆள் பேசினா கண்டிப்பா செய்வாங்க..” என்றவள், சுதர்சனை அழைத்து விஷயம் சொல்ல,

“அக்கா.. கண்டிப்பா ரமேஷ் மாமாக்கிட்ட சொல்லனுமா??!!” என்றான்..

“சொல்லேன்டா.. அவரை பேசுற மாதிரி பேசி கிளம்பிவிடு. எல்லாம் நடக்கும் அப்பாவும் பேசுவார்..” என, இப்படி மாமனார், மச்சான் என்று ஆள் மாற்றி ஆள் தனக்கு அழைத்து பேசி,

‘இதை முடிச்சு விடுங்க..’ என்று சொல்லாமல் சொல்ல, ரமேஷை கையில் பிடிக்க முடியவில்லை.

“மாமா.. அவங்க வீடும், போன் நம்பரும் மட்டும் சொல்லுங்க.. வர்றப்போ நல்ல முடிவோட வர்றோம்..” என்றுவிட்டான்.

ஜெயக்கொடிக்கு எங்கே கணவன் அது இதென்று பேசி இன்னும் வீட்டினில் பிரச்னை கிளம்புமோ என்று எண்ண, ரமேஷ் இப்படி சொன்னதும் ஆச்சர்யம் தான்.. அதைவிட, ஜெயக்கொடியின் மாமியார்,

“என்ன திடீர்னு இங்கவே பேச சொல்றாங்க??!!” என்றவர், “உன் அம்மா பத்து பவனுலயே நின்னா.. இப்போ என்ன??” என,

“ம்மா.. நமக்கு நகை பணம் எல்லாம் முக்கியமா?? அவங்க பொண்ணுக்கு அவங்க செய்யமாட்டாங்களா??!!” என்று ரமேஷ் அடித்துப் பேச,

“டேய்.. அங்க பொண்ணு வீட்ல போயிட்டு இப்படி எல்லாம் பேசக்கூடாது..” என்ற மகேஸ்வரி, “நான் பேசிக்கிறேன் அங்க..” என்று முடிக்க, ஜெயக்கொடிக்கு திக்கென்று தான் ஆனது.

இப்போதும் ஏதாவது கெடுத்துவிட்டால் கண்டிப்பா தம்பி தன்னோடு மனம் கசந்து போய்விடுவான் என்று தெரியும். “அம்மா தாயே மதுரை மீனாட்சி.. நீதான் நல்லது செஞ்சு கொடுக்கணும்..” என்று வேண்டியபடி தான் சென்றாள்.

இப்படி அனைவருக்குமே இந்தத் திருமணம் சரியாய் நடந்திட செய்திடவேண்டும் என்று எண்ணம் வந்திட, அதெல்லாம் தெரியாத சண்முகப் பிரியாவோ அவளின் வழக்கமான பேக்கரி வகுப்பு சென்றிருக்க, அங்கே வீட்டிலோ இவர்கள் வருகிறார்கள் என்று தகவல் வந்ததும் அனைவருக்குமே ஒரு டென்சன் வந்து ஒட்டிக்கொண்டது.

மீனாட்சியும் பூமாவும் வேகம் வேகமாய் வீட்டினை கொஞ்சம் சுத்தம் செய்ய, வேலவனும் மேகலாவும் வருபவர்களுக்கு வைக்கவேன்று இனிப்பு பலகாரம் வாங்க கடைக்குச் செல்ல, இரு அப்பாக்களும் அடுத்து என்ன செய்வது எப்படி பேசிக்கொள்வது என்று கலந்தாலோசித்துக்கொண்டு இருக்க,

பூமா மேகலாவுக்கு அழைத்து “வர்றப்போ பிரியாவ கூட்டிட்டு வாங்க.. அவங்க வர்றப்போ அவ இல்லன்னா நல்லாருக்காது..” என,  அண்ணனும் அண்ணியும் வந்து நிற்பது கண்டு பிரியா குழப்பமாய் தான் பார்த்தாள்.

“உள்ள சொல்லிட்டு வா சண்மு.. மாப்பிள்ள வீட்ல இருந்து வர்றாங்களாம்..” என, திக்கென்று பார்த்தாள் சண்மு..

“அட நிக்க நேரமெல்லாம் இல்லை.. இப்போ கொஞ்ச நேரத்துல வந்திடுவாங்க.. நீ வந்து ரெடியாகனும் சீக்கிரம்..” என்று இருவருமே யார் வருகிறார்கள் என்று சொல்லாது சண்முகப் பிரியாவை அழைத்துக்கொண்டு கிளம்ப, அவளுக்கு அழுகையில் உதடு பிதுங்கியது..

வீடு வரும்போதே கண்ணில் நீரோடு தான் உள்ளே வர, “வா வா.. வந்து முகம் கழுவி ரெடியாகு..” என்று மீனாட்சி கை பிடிக்க, வெடுக்கென்று தட்டிவிட்டவள், உள்ளே போய்விட,

“என்னடா சொல்லிட்டு கூட்டிட்டு வரலையா??!!” என்றார் சரவணன்.

“மாப்பிள்ளை வீட்ல இருந்து வர்றாங்கன்னு சொல்லித்தான் மாமா கூட்டிட்டு வந்தோம்..” என்று மேகலா சொல்ல,

“மொட்டையா அப்படி சொன்னா அவ என்ன நினைப்பா??!” என்ற பூமா “பிரியா கண்ணு..” என்று அழைத்தபடி உள்ளே செல்ல, அவளோ முகத்தினை மூடி அழுதுகொண்டு இருந்தாள்.

“அடடா..!!” என்று அருகே வந்தவர், “இப்போ என்னத்துக்கு அழுகை..” என,

“யாரும் ஒன்னும் சொல்லவேணாம் போங்க..” எனும்போதே, மீனாட்சி “முகத்தை கழுவு.. இல்லன்னா திரும்ப  குளி..” என்றபடி வர,

“நான் இனிமே குளிக்கவே மாட்டேன் போங்க..” என்றாள் வெடுக்கென்று..

கோபத்திலும் ஆற்றாமையிலும் என்ன சொல்கிறோம் என்று புரியாது சொல்ல, “அய்யே.. இது மட்டும் மாப்பிள்ளைக்கு தெரிஞ்சது அவ்வளோதான் பெங்களூருல இருந்து வாரவே மாட்டார்..” என்று அம்மாக்கள் இருவரும் கிண்டல் செய்ய,

“என்ன??!! என்ன??!!” என்றாள் அலங்க மலங்க விழித்து.

“பெரியகுளம்ல இருந்து வர்றாங்க பிரியா சட்டுபுட்டுன்னு ரெடியாகு..” என, வருபவர்களுக்குத் தெரியாதே இவர்களும் சம்மதம் என்ற நிலையில் இருப்பார் என்று.

சுதர்சனுக்கு அங்கே கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. இந்த ரமேஷ் எப்படி என்ன செய்வான் என்றெல்லாம் ஒன்றும் விளங்கவில்லை. சும்மா நாளிலேயே வில்லங்கம். இதில் கேட்கவும் வேண்டுமா என்று எண்ணியவன், வேறு வழியில்லாது

வேலவனுக்கு அழைத்து டென்சனில் “கொஞ்சம் பேசணுமே..” என, “சொல்லுங்க மாப்பிள்ளை..” என்றான் சந்தோசமாய் வேலவன்.

அவனின் அந்த அழைப்பே ஒரு அப்படியொரு தைரியம் கொடுக்க “அங்க உங்க வீட்ல எல்லாம் எப்படி இருக்காங்க??” என்று விசாரிக்க,

“எல்லாருக்கும் உங்க அக்கா மாமாக்கு தான் வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க…” என்ற வேலவனின் சொல்லில் நெஞ்சில் பால் வார்த்தது போலிருந்தது.

“அப்.. அப்போ..!!” என்றவனுக்கு அதற்குமேல் வார்த்தை வரவேயில்லை..

“அட ஆமா மாப்பிள்ளை.. இங்க பிரியா ஒரே அழுகை… என்ன இருந்தாலும் அவளோட வாழ்க்கை சந்தோசமா இருக்கிறதுதானே முக்கியம்..” என,

“க… கண்டிப்பா..” என்றவன், “நான்.. நான் அவளோட பேசலாமா??!!!” என்றான் ஒருவித தயக்கத்தோடு..

“இப்.. இப்போவா?!!!” என்று இழுத்த வேலவனோ “அவ ரெடியாகிட்டு இருக்கா..” என,

“ஜஸ்ட் ஒன் செக்கன்ட் மட்டும்..” என்று சுதர்சன் சொல்ல, அதற்குமேல் அவனால் மறுக்கமுடியாது போக, தங்கையிடம் சென்று போன் கொடுத்தவனைப் பார்த்து,

“யார்டா??!!” என்று பூமா கேட்க, “மாப்பிள்ளை..” என்றான் மெதுவாய்..

“சீக்கிரம் பேசிட்டு சீக்கிரம் ரெடியாகு..” என்ற பூமா வெளியில் வந்துவிட,

சண்முகப் பிரியாவோ போன் வாங்கியவள் பேசவெல்லாம் இல்லை. அமைதியாகவே இருக்க, “ஒய்!!! குருவிக் கூடு.. என்ன ஹேர் பின் குத்திட்டு இருக்கியா??!!” என்று சுதர்சன் சந்தோசத்தில் கிண்டல் அடிக்க,

“நீங்க வாங்க.. உங்களையும் ஹேர் பின் வச்சு குத்துறேன்..” என்றாள் பட்டென்று..

அவளின் டென்சன் எல்லாம் அவன் குரல் கேட்டதும் தான் இறங்கியிருந்தது.

“அடிப்பாவி ஸ்பாஞ்சி கேக்ன்னு நினைச்சா நீ சண்டை கோழியா இருப்ப போல..” என்று சுதர்சன் கேட்க,

“ம்ம்ம்… நீங்களும் வந்திருக்கலாம்..” என்றாள் அவளின் உள்ளம் மறைக்காது..

“வரலாம்தான்.. ஆசைதான்.. ஆனா எனக்கே இப்போதானே தெரியும்.. சொல்லப்போனா அப்பா அம்மா காலைல தான் ஊருக்கே வந்திருப்பாங்க.. வந்ததும் இவ்வளோ வேகம்..” என்று அவனும் சொல்ல,

“ஓ!!!” என்றவளுக்கு அடுத்து என்ன பேசவென்று தெரியவில்லை.

அமைதியாய் இருக்க, மீனாட்சி வந்துவிட்டார் “ரெடியா சண்மு.. அவங்க எல்லாம் வந்தாச்சு..” என்றபடி.

“ஹா..!! இதோம்மா..” என்றவள், “நான் வைக்கட்டுமா??!!” என்று அவனிடம் கேட்க,

“ஹேய் ஹேய் ஒன் செக்கன்ட் உன்னோட நம்பர் சொல்லிட்டுப் போ..” என, “அப்புறம் அப்புறம்..” என்று வைத்துவிட்டாள்.

இங்கே மகேஸ்வரியோ “கல்யாணம்னா ஆயிரம் இருக்கும்.. ஆனாலும் பாருங்க சுதர்சன் நான் தூக்கி வளர்த்த பையன்.. அதனால நம்பி நீங்க குடுக்கலாம்..” என்று பேச, அனைவரும் ஒருவரை பார்த்துக்கொண்டனர்.

“அன்னிக்கே நான் வந்திருந்து முன்ன நின்னு பேசிருந்தா இந்நேரம் நிச்சம் பண்ணிருக்கலாம்.. சரி அதுக்கு அதுக்கு ஒரு காலம் இருக்குல.. இன்னிக்கு நிறைஞ்ச நாள் வேற.. நல்ல பதிலா சொன்னாதான் எங்களுக்கும் மனசு குளிரும்..” என்ற மகேஸ்வரி,

தன் பேச்சினை கொஞ்சம் ஆச்சர்யமாய் பார்த்துகொண்டு இருந்த ஜெயக்கொடியிடம்,

“என்ன அப்புடி பாக்குற.. இதெல்லாம் இப்படிதான் பேசணும்.. அப்போதான் காரியம் நடக்கும்..” என்று மெதுவாய் சொல்ல,

‘எப்படியோ நல்லதாய் நடந்தால் சரி..’ என்று தலையை ஆட்டிக்கொண்டாள்.

மகேஸ்வரிக்கும் ரமேஷிற்கும் ஒரு எண்ணம். தாங்கள் வந்து பேசியதால் தான் இவர்கள் சம்மதித்தனர் என்று.  அதே நினைப்பில் இருக்கட்டும் என்று அனைவருமே ஒன்றும் சொல்லவில்லை..

ரமேஷ் “என் மச்சானுக்கு இப்போ லீவ் இல்ல.. நிச்சயத்துக்கு அவன் இல்லைன்னா நல்லாருக்காது. அதுனால ஒரு பத்துநாள் கழிச்சு அங்க பெரியகுளம்ல வச்சு பேசி முடிச்சிக்கலாம்.. இப்போ சம்பிரதாயத்துக்கு பூ வைச்சுட்டு போகலாமா..” என்று கொஞ்சம் தாட்டியமாகவே பேச,

சண்முகமும் “எங்களுக்குமே பெரிய மக, மாப்பிள்ளை எல்லாம் வரணும்.. அவங்க வர்றப்போதான் முறைப்படி நிச்சயம் வைக்க முடியும். இப்போ சம்பிரதாயமா நீங்க வச்சிட்டு போங்க..” என்று அப்போதும் தங்களின் பெரிய மகள் மாப்பிள்ளையை விட்டுக்கொடுக்காது பேச,

மகேஸ்வரி எதுவும் சொல்லிடுவாரோ என்று ஜெயக்கொடி வேகமாய் மாமியாரின் முகம் பார்த்தாள்.

அவரோ “அது வாஸ்தவம்தான்.. எப்பவும் சம்பந்த சார்வழிய விட்டுக்கொடுக்கக் கூடாது.. நாங்களும் அப்படிதான்.. அதனாலதான் இப்போ நானே வந்தேன்..” என்று அதையும் தன் பக்கம் திருப்பிக்கொண்டார்.

“நல்ல நேரம் முடியறதுக்குள்ள பூ வச்சிட்டா நல்லது..” என்று மேகலா பொதுவாய் சொல்ல,

ஜெயக்கொடி வாங்கி வந்திருந்த மதுரை மல்லிகையை எடுத்து மாமியாரிடம் கொடுக்க, “நாத்தி நீதான்.. நீதான் வைக்கணும்.. அப்போதான் உறவு வளரும்..” என்று மகேஸ்வரி மருமகளை முன்னே நிறுத்த, ரமேஷிற்கு பெருமை பிடிபடவில்லை.

சண்முகப்பிரியாவிற்கு அனைத்துமே கனவாய் தெரிந்தது.. நம்பக்கூட முடியவில்லை. ஒருவித உணர்வு அவளை ஆட்கொண்டு இருந்தது. சுதர்சன் வரவில்லை. அவனின் அப்பா அம்மா யாரும் வரவில்லை.. உடன் பிறந்தவள் தான் வந்தாள்.

ஆனாலும் ஜெயக்கொடி குங்குமம் வைத்து, அவளுக்கு பூ சூட்டுகையில் மனதில் ஒரு நடுக்கம்.. சொல்ல முடியாத ஓர் உணர்வும் கூட. கண்கள் பணிக்க, தலைகுனிந்துகொண்டாள்.

ரமேஷ் அனைத்தையும் புகைப்படம் எடுக்க, வேலவனும் தன் பங்கிற்கு எடுக்க, சண்முகப் பிரியாவிற்கு வார்த்தையே வரவில்லை. ஜெயக்கொடி எதுவோ கேட்டதற்கு தலையை உருட்டினாளே தவிர ஒன்றும் சொல்லவில்லை.

அனைத்தும் நல்லபடியாய் முடிந்து, அனைவரும் கிளம்ப, வேலவன் முதல் வேலையாய் சுதர்சனுக்கு புகைப்படங்களை அனுப்ப, என்னாச்சோ ஏதாச்சோ என்று காத்திருந்தவன், புகைப்படங்களைப் பார்த்ததும் உடனே அழைத்தும் விட்டான்.

“ரொம்ப தேங்க்ஸ் மச்சான்..” என்று மனம் நிறைந்து சொல்ல,

“அடடா அதெல்லாம் இல்லை… இது என் தாங்கச்சிக்காகவும் தான்..” என்று வேலவன் சொல்ல,

“அது…” என்று சுதர்சன் ஆரம்பிக்கும்போதே, “சண்மு நம்பர் வாட்ஸ் அப் பண்றேன்.. அவளுக்கே பேசிக்கோங்க..” என்று வைத்துவிட்டான்..

‘அடடா..!! இப்படி ஒரு மச்சான் கிடைக்க சுதர்சா.. உனக்கு எங்கயோ மச்சம் இருக்குடா..’ என்று எண்ணிக்கொண்டவன், பிரியாவின் அலைபேசி எண் வரவுமே அவளுக்கு அழைக்கவெல்லாம் இல்லை,

‘ஹாய்…’ என்று வாட்ஸ் அப் தட்ட, வெகு நேரம் பதிலே இல்லை அவளிடம். ஆனால் தான் அனுப்பிய மெசேஜ் பார்த்திருக்கிறாள் என்று தெரிந்தது.

“ஹேய்.. குருவி கூடு…” என்று அடுத்து மெசேஜ் தட்ட, சிறிது நேரத்தில் “நீங்க தானா??!!” என்று அவளிடம் இருந்து பதில் வர, அப்படியே அடுத்து பேச்சு நீண்டது..

என்ன பேசினார்களோ தெரியாது.. ஆனால் நீண்ட நேரம் அவர்களின் வார்த்தை பரிமாற்றங்கள் தொடர, திடீரென்று நியாபகம் வந்தவனாய்

“உன்னோட பேஸ் புக் ஐடி என்ன?? நானும் தேடி தேடி பார்த்துட்டேன்..” என்று கேட்க, அவள் ஏற்கனவே இவனின் ப்ரோபைல் வேறு பார்த்திருந்தாள்.

ஆனாலும் உடனே சொல்லாது “கண்டு பிடிங்க பாப்போம்..” என, “நான் தேடிட்டேன்.. ஆனா இல்லையே..” என,

“ஓகே.. க்ளூ கொடுக்கிறேன்.. நம்ம ஊரு க்ரூப்ல இருப்பேன்..” என்று வைத்துவிட்டாள்.

சுதர்சனோ என்னவோ பெரும் வேலை தனக்கு சண்முகப் பிரியா கொடுத்ததைப் போல், கர்மமே கண்ணாக அவர்கள் ஊர் முகப் புத்தகப் பக்கத்தை அலசி ஆராய ‘shan_pri’ என்ற பெயரைக் கண்டதும் அப்படியே பார்வை நின்றது..

“ஷான் ப்ரீ… அஹான்..!!!” என்று அந்த ப்ரோபைல் பார்க்க, அவளே தானே.. அவனுக்கு சிரிப்பைத் தாங்க முடியவில்லை அவள் வைத்திருக்கும் பெயர் பார்த்து.

“கொய்யாக்கா..!!! பெரியகுளத்துல பிறந்துட்டு பில்கேட்ஸ்  பிஏவாட்டம் பேரு வாச்சிருக்கா..??” என்று எண்ணியவன், அவளுக்கு ஒரு நட்பு கரம் நீட்ட, அவன் வாய் சும்மா இருக்காது இப்போது தான் நினைத்ததை மெசேஜ் வேறு தட்ட,

“தோடா..!!!” என்று பதில் வேறு வந்தது..

இத்தனை நேரம் வாட்ஸ் அப்பில் தொடர்ந்த பேச்சு இப்போது மெசெஞ்சரில் தொடர, ‘சங்கீத சுவரங்கள் ஏழே கணக்கா…’ என்று குப்பிட் பாடியது….

           

                   

                        

                                              

     

               

          

               

Advertisement