Advertisement

ஆஹா கல்யாணம் – 10

வேலவனுக்கு கொஞ்சம் படபடப்பாய் தான் இருந்தது. வீட்டினர் அனைவரும் மதுரைக்கு வந்திருந்தனர். சண்முகப் பிரியா அவளின் பேக்கரி கிளாஸ் சென்றிருக்க, இவனோ வேலைக்குச் சென்றவனை மேகலா போன் போட்டு அழைத்துவிட்டாள்.

“என்னங்க எல்லாரும் வந்திருக்காங்க.. யார் முகமும் சரியில்லை.. நீங்க லீவ் சொல்லிட்டு வாங்க..” என, இவனுக்கோ திக்கென்றானது.  

“மதியம் வரைக்கும் அட்ஜஸ்ட் பண்ணு மேகலா.. இப்போதானே வந்தேன்.. இன்னிக்கு மண்டே வேற பேங்க்ல செம கூட்டம்..” என,

மேகலாவோ “அதெல்லாம் எனக்குத் தெரியாது..” என்று வைத்துவிட, சிறிது நேரத்தில் சண்முகமும் அழைத்துவிட்டார் “வீடு வரைக்கும் கொஞ்சம் வா வேலவா..” என்று.

இதற்குமேல் மறுக்கமுடியுமா என்ன??!!

வீட்டிற்கு வந்ததும் யாரிடம் என்ன பேசுவது என்றுகூட தெரியாது “என்னப்பா ஒரு போன் பண்ணிருக்கலாம்ல… நானே ஊருக்கு வந்திருப்பேனே..” என்று பேச்சை ஆரம்பிக்க,

“சும்மாதான் வந்தோம்..” என்றார் சரவணன்.

‘பார்த்தா அப்படி தெரியலையே..’ என்று பார்த்தவன் “சரி இருங்க மதியம் எல்லாருக்கும் கடைல சொல்லிட்டு வர்றேன்..” என்று கிளம்பப் பார்க்க,

“அதெல்லாம் அம்மாவும் சித்தியும் செய்வாங்க..” என்ற சண்முகம்,

“உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..” என, மேகலா உள்ளே மாமியார்களோடு சமையலறையில் இருந்தாலும் கவனமெல்லாம் இங்கேதான் இருந்தது.

பூமாவும் மீனாட்சியும் கூட அவளோடு சரியாய் பேசவில்லை என்றே தோன்றிக்கொண்டு இருக்க,  அவளே வழிய வழிய பேச்சுக்கொடுத்துக் கொண்டு இருந்தாள்.

“மேகலா மதியத்துக்கு சும்மா பருப்பும் ஒரு கூட்டும் செஞ்சா போதும்..” என்று பூமா சொல்ல,

“காலைலயே எல்லாம் பண்ணிட்டேன் அத்தை.. சாதம் மட்டும் வச்சுக்கிட்டா போதும்..” என்றவள் “முன்னாடியே சொல்லிருந்தா ஏதாவது நல்லா சமச்சிருப்பேன்…” என்று மெதுவாய் தூண்டில் போட்டாள்.

“ம்ம் விருந்து சாப்பிடவா வந்தோம்…” என்ற மீனாட்சி, “ஆனாலும் நீயும் வேலவனும் கூட எங்கக்கிட்ட இருந்து மறைச்சிருக்க வேணாம்..” என,

‘ஆத்தாடி தெரிஞ்சு போச்சா..!!’ என்றுதான் பார்த்தாள் மேகலா..

அங்கே சண்முகமோ “நேத்து வடகரைக்கு ஒரு விசேசம்னு நானும் உன் சித்தியும் போனோம்… அங்க அந்த ரமேஷும் ஜெயக்கொடியும் வந்திருந்தாங்க..” என,  வேலவனுக்கு உடனே என்ன பதில் சொல்வது என்று தெரியாது அமைதியாய் இருக்க,  

“அந்த தம்பி நம்ம பிரியாக்கூட பேசணும் சொன்னப்போ எங்கட்ட ஒருவார்த்தை கேட்கத் தோணலையா உனக்கு??!!!” என்று சரவணன் கேட்க,

“இல்லப்பா அது..!!” என்று இழுத்தவனுக்கு தன் தவறு புரிந்தது..

இந்த விஷயம் தெரிய வருகையில் பெற்றவர்களின் நிலை எப்படி இருந்திருக்கும் என்று இவர்களின் முகத்தினை நேரே பார்க்கையில் தலை கவிழ்ந்துகொண்டான் வேலவன்.

“எங்க தம்பி உங்க பொண்ணுகூட பேசிட்டு வந்து, அவ நெனப்புலயே உடம்ப கெடுத்து ஆசுபத்திரியில படுத்துட்டான்.. இதுல உங்க மகன் வேற அப்பப்போ நலம் விசாரிப்பு.. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, நீங்க என்னடான்னா உங்க பொண்ணுக்கு வேற இடம் பார்த்துட்டு இருக்கீங்க.. என் தம்பிக்கு ஒன்னு கிடக்க ஒன்னு ஆச்சுனா நீங்களா பதில் சொல்வீங்க.. அவனை நிம்மதியா இருக்கவிட்டா போதும்…” என்று ஜெயக்கொடியும் பேசியிருப்பாள் போல,

எல்லாம் சேர்ந்து ஒன்றிருக்கு இரண்டாய் ரமேஷ்,ஜெயக்கொடி இருவரும் பேசிட, சண்முகம் மீனாட்சிக்கு மனது மிகவும் காயப்பட்டு போய்விட்டது.

வீட்டிற்கு வந்து அனைத்தையும் பூமாவிடமும், சரவணிடமும் சொல்ல “இது போன்ல விசாரிக்கிற விஷயமில்ல.. நேர்ல போய்தான் பேசணும்..” என்றவர்கள் குமரனை பள்ளிக்கூடம் அனுப்பிவிட்டு அனைவரும் கிளம்பி மதுரைக்கு வந்துவிட்டனர்.

வேலவன் அமைதியாகவே இருக்க, அங்கே வந்த மேகலாவோ “மாமா நான் நடுவில பேசுறேன்னு தப்பா நினைக்கவேணாம்.. நாங்க பண்ணது உங்க பார்வைல தப்பாவே இருக்கட்டும்.. ஆனா மனுஷங்களோட மெல்லிய உணர்வுகளுக்கு நம்ம மதிப்புக் கொடுக்கணும் தானே..

அதைதான் நாங்களும் செஞ்சோம்.. சண்மு எங்களுக்குத் தெரியாம பேசணும்னா எப்படின்னாலும் பேசிருக்கலாம்.. அதேமாதிரி அந்த அண்ணனும் நம்மை மீறி சண்முக்கிட்ட பழகனும்னா அதையும் செஞ்சிருக்கலாம்.. யாரும் அப்படி பண்ணலை.. ரெண்டுபேருமே எதையும் மறைக்கல..

அதைவிட, நம்ம வீட்டு பொண்ணுக்காக ஒருத்தர் உடம்பையும் மனசையும் கெடுத்துட்டு வைத்தியம் பாக்க போறதுன்னா சும்மாயில்ல.. இதைவிட நல்ல மனுஷன் நம்ம சண்முக்கு அமைய மாட்டாரு…” என்று படபடவென பேசிவிட்டாள்.

வேலவனோ “ம்ம்ச் மேகலா நீ கொஞ்சம் சும்மா இரு..” என்று அடக்க,

“எதுக்கு.. இப்போ பேசலைன்னா இனி எப்போ பேச??!! இப்போ நமக்கு மட்டுமே தெரிஞ்சது  நாளைக்கு அங்க ஊர் முழுக்கத் தெரிய வரும்.. ஆளாளுக்கு ஒன்னொன்னு பேசுவாங்க.. தேவையா??!!” என, மீனாட்சி அதிர்ந்து போனார்.

பூமாவோ மேகலா சொல்வதில் உண்மை இருந்தாலும் மீனாட்சி முகம் பார்த்து “மேகலா கண்டதையும் பேசாத..” என்று அதட்ட,

மீனாட்சியோ “என்னங்க இதெல்லாம்..” என்று கண்ணீர் விடவே ஆரம்பித்துவிட்டார்..

கஸ்தூரியின் திருமணப் பேச்சு எடுக்கையில், வரன் தேடுகையில் வீட்டில் அப்படியொரு சந்தோசம் இருந்தது.. அதேபோல் வீட்டினர் அனைவர்க்கும் பிடித்து அவளுக்கும் பிடித்துத்தான் சுவாமிநாதனுக்குக் கொடுத்தது. ஆனால் சண்முகப்பிரியாவின் திருமண விஷயம் என்பது இத்தனை பிரச்னைகளையும், மனக் கஷ்டத்தையும் இழுத்துவிடும் என்று யாருமே எண்ணவில்லை.

வேலவனும் அதையே தான் சொன்னான்..

“நல்ல விதமா இருக்காங்க.. அவங்களே விரும்பித்தானே பார்த்து வந்தாங்கப்பா.. நம்மளும் சரின்னு தானே பொண்ணு காட்டினோம்.. இப்போ அவங்க ரெண்டு பேருக்குமே பிடிச்சிருக்குன்னு சொல்றப்போ நம்ம கண்டிப்பா பெருந்தன்மையா நடந்துக்கணும்..

சித்தப்பா இப்படி சொல்றேன்னு தப்பா நினைக்கவேணாம்.. கஸ்தூரிக்கு என்ன வீட்ல பண்ணீங்களோ அதையே சண்முக்கும் பண்ணுங்க.. அண்ணனா நான் தனியா பண்றேன்..” என,

“நம்மளா போய் அவங்கட்ட எப்படி கேட்க முடியும்???” என்றார் சண்முகம்..

“நம்மளா கேட்கவேணாம்.. ஆனா நமக்கு இதுல மறுப்பு இல்லைன்னு காட்டினா போதும்.. அடுத்து அவங்களே கண்டிப்பா இப்போ இல்லைன்னாலும் அடுத்து சீக்கிரமே பேசி வருவாங்க..” என்று வேலவன் சொல்ல,

“அதெப்படி நம்ம உறுதியா சொல்றது..??!!” என்றார் பூமா..

“ம்மா சில விசயங்கள்ல நம்பிக்கையாத்தான் ம்மா இருக்கனும்.. நான் பேசின வரைக்கும் சுதர்சன் நல்லவிதமா இருக்கார்.. கண்டிப்பா அவர் வீட்ல பேசி சரி சொல்ல வைப்பார்..” என்று சொல்ல,

மேகலாவும் “மாமா.. அத்தை.. கொஞ்சம்  யோசிங்களேன்.. நாளைக்கு நம்ம சண்மு சந்தோசமா இருந்தா நமக்கு கசக்குமா என்ன??!!” என்று கேட்க,  இவர்கள் அனைவருக்குமே மனது ஒருவிதமாய் சரி என்ற நிலைக்கு வரத்தான் செய்தது.

அப்பாக்கள் இருவரும் முடிவு இதுதான் என்று சொல்லவில்லை என்றாலும் கூட ஓரளவு அவர்களின் மனதை உணரத் தொடங்கிட, மீனாட்சியோ “ம்ம் மருமகளா போரப்போவே அங்க மாமியார் நாத்தனாருக்கு பிடிக்காம போனா நல்லாவா இருக்கும்..” என்று ஆரம்பிக்க,

மேகலா ‘அடுத்த கதையா இது…’ என்று பார்த்தாள்.

இப்படி ஆளாளுக்கு ஒவ்வொன்றாய் பேசினால் முடிவு என்பதே வராது என்பது அனைவர்க்கும் தெரியும்.. இருந்தாலும் பெண் பிள்ளையை ஒருவீட்டில் கொடுப்பது என்பது சாதாரண விசயமும் இல்லையே.. பெற்றவர்களின் மனது உறுதியாய் ஒரு முடிவிற்கு வர முடியாது தவிக்க, சண்முகப் பிரியாவோ அவளின் முதல் நாள் வகுப்பு முடிந்து வீடு வர,

வீட்டில் அனைவரையும் பார்த்து “அட..!! சொல்லவே இல்லை.. எப்போ வந்தீங்க..” என்று சந்தோசமாகவே கேட்டாள்.

“ம்மா நீ காலைல பேசுறப்போ கூட சொல்லல வர்றோம்னு..” என்று மீனாட்சியை போய் ஒரு இடி இடித்துக்கொண்டு உட்கார,

“ம்ம்ச் கொஞ்சம் சும்மாத்தான் இரேன் டி..” என்று காய்ந்தார்..

“அய்யே..!!!” என்று உதடு பிதுக்கியவள், “பெரிம்மா.. என்ன கொண்டு வந்தீங்க…??” என்று கேட்க,

“சண்மு..!!” என்ற மேகலா, எதுவும் பேசாதே என்று சைகை செய்ய, அப்போது தான் அனைவரின் முகத்தினையும் பார்த்தவளுக்கு என்னவோ விஷயம் என்று புரிந்தது.

பார்வையை அனைவரின் முகத்திலும் பதியச் செய்தவள், அமைதியாய் அமர்ந்துவிட, பூமா தான் கேட்டார் “எதுன்னாலும் பெரிம்மான்னு வந்து அப்படியே சொல்வியே.. இப்போ இதெல்லாம் சொல்லனும்னு தோணலையா கண்ணு..” என்று..

அதட்டவில்லை, கோபிக்கவில்லை, தன்மையாகவேத்தான் கேட்டார். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல்.. அது சுருக்கென்றும் பிரியாவிற்கு தைக்கவும் செய்தது..

அனைவரும் அனைத்தும் தெரிந்தே வந்திருக்கிறார்கள் என்று புரியவும் யோசனையாய் அண்ணன் அண்ணி முகம் பார்க்க, வேலவனோ ‘தைரியமா பேசு..’ என்று பார்வையிலேயே தைரியம் சொன்னான்.

ஆனால் அப்போதும் பிரியா பேசாது இருக்க, “ஏய் கேக்குறாங்கள்ள பதில் சொல்லு..” என்று மீனாட்சி சொல்ல,

“என்னம்மா சொல்லணும்..” என்றாள் வார்த்தையே வராது.

சண்முகப் பிரியாவிற்கு அனைவரையும் பார்த்ததும் மனதில் சந்தோசம் வந்தாலும், இப்போது என்னவோ ஒரு பயமும் கூட, வீட்டினர் அனைவரும் ஒன்றாய் வந்து வேறெதுவும் வரன் அது இதென்று முடிவுக்கு வந்துவிட்டனரோ என்று.

‘தைரியமா பேசு பிரியா..’ என்று அவளுக்கு அவளே சொல்லிக்கொண்டாலும் கூட, அனைவரின் முன்னும் அவளால் பேசிட முடியவில்லை..

தான் ஏதாவது சொல்லப்போய் பெரியவர்கள் அனைவரும் திண்ணமாய் மறுத்துவிட்டால்??!!

முடியவே முடியாது என்றுவிட்டால்… நினைக்க நினைக்க கண்ணில் நீர் முட்டிட, அவளையும் அறியாது விம்மல் வெடித்திட, அதற்குமேல் பொறுக்க முடியாது முகத்தினை மூடிக்கொண்டு சண்முகப் பிரியா அழவே தொடங்கிட, அனைவரும் ‘ஐயோ..!!’ என்றுதான் பார்த்தனர்.

“சண்மு.. என்னம்மா?? என்னாச்சு..” என்று மேகலா அவளிடம் சென்று அமர, அவளோ அழுதுகொண்டே இருந்தாள்.

மகள் அழவுமே பெரியவர்களுக்கு மனது மேலும் சங்கடப் பட்டுவிட “டேய் அழாதடா..” என்றார் பெரியப்பா,

அப்பாவோ “பாப்பா அழாத..”என,

அம்மாவும் பெரியாம்மாவுமோ “பிரியா இப்போ என்ன சொல்லிட்டோம்னு இப்படி அழற நீ.. நாங்க எதுவுமே கேட்கக் கூடாதா..” என்று ஆதங்கப்பட,

சண்முகப் பிரியாவோ “நான்.. நான் என்ன செய்ய இப்போ..??!” என்றாள் கண்ணீர் வடிய..

அனைவரும் அவளையே பார்க்க, “பிடிச்சு போச்சி.. மறக்கணும்னு நினைக்கிறதை கூட நினைக்க முடியலை..” என்று திரும்ப கேவியவள்,

“இப்.. இப்போ என்ன.. நீங்க பாக்குற மாப்பிள்ளைக்கு நான் சரின்னு சொல்லனுமா??!!” என்று கேட்கையில் அவள் முகத்தினில் அப்படியொரு வேதனையின் சாயல்.

வேலவனோ ‘இப்போ கூட இவங்க சரின்னு சொல்ல மாட்டாங்களா??!!’ என்று பார்க்க,

சண்முகப் பிரியாவோ “சரி.. நீங்க சொல்றதுக்கு சரி.. நான்.. நான் எதுவும்.. யாரையும் நினைக்கல போதுமா.. எனக்காக நீங்க யாரும் வருத்தப்பட வேணாம்.. யார்கிட்டயும் இறங்கிப் போய் பேசவும் வேணாம்.. எ.. எனக்கு எல்லாத்தையும் விட நீங்க எல்லாரும் தான் ம்மா முக்கியம்..” என்று சொல்லியபடி கண்களைத் துடைக்க துடைக்க கண்ணீர் வழிய திரும்பவும் முகத்தினை மூடிக்கொண்டு அழுதாள்.

ஆனால் பெற்றவர்களாய் அவளின் இந்த சொல்லில் பெரியவர்களுக்கு மனது குளிரத்தான் செய்தது. கடைசியில் மகள் தாங்கள் தான் முக்கியம் என்றதும் கொஞ்சம் பெருமையாகக் கூட உணர்ந்தனர்.. இப்படியான பெண்ணுக்கு அவளின் விருப்பப்படி வாழ்வு அமைத்துக்கொடுக்க வில்லை என்றால் அது தானே இறுதியில் தவறாய் முடியும்..??!!! அப்படித்தான் நினைத்தது நால்வரின் மனதும்.

அங்கே பெங்களூரிலோ சுதர்சன் இரண்டு நாட்களாய் வீட்டில் யார் என்ன சொன்னாலும் செக்கப் வரவே மாட்டேன் என்றுவிட்டான். ஜெயராணியும் பாண்டியனும் அம்மாவிற்கும் மகனுக்குமாய் அறிவுரைகளை சொல்லிவிட்டு ஊருக்குக் கிளம்பியிருக்க, காவேரி யாரோடும் பேசிடவில்லை.  

இத்தனை நாள் பொறுமையாய் இருந்த முருகவேல் கூட காவேரியை கடிந்துவிட்டார்.

“இப்போ இவ்வளோ பிடிவாதம் பிடிச்சு நீ என்ன சாதிக்கப் போற?? கடைசியில உன் புள்ளையத்தான் நீ இழந்துட்டு நிக்கப் போற..” என்று கத்த,

“கடைசியில எல்லாம் என்னை சொல்லுங்க..” என்று அதற்கும் அவர் பேசத் தொடங்க, சுதர்சன் அவன் வேலைப் பார்த்துக்கொண்டு இருந்தவன் அம்மா அப்பா சத்தத்தில் வெளியே வந்து,

“அப்பா நீங்க எதுவும் பேச வேணாம்..” என்றுவிட்டு “ம்மா இங்க வா..” என்றான்.

காவேரியோ காதே கேளாது வேண்டுமென்றே அடுப்படியில் இருக்கும் பொருட்களை எல்லாம் போட்டு உருட்டிக்கொண்டு இருக்க,

“ம்மோய் உன்னத்தான்.. இங்க வா..” என,

“ஏன்?? உனக்குத்தான் அப்பா அக்கான்னு எல்லாம் இருக்காங்கதானே.. பின்ன என்னத்துக்கு அம்மான்னு கூப்பிடுற..” என்று கடுப்படித்தார்.

சுதர்சன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டு தான் அம்மாவை அழைத்தான். நேரடியாக காவேரியிடமே பேசிவிடுவது என. எப்படியாக இருந்தாலும் அம்மா.. அனைத்திற்கும் மேல்.. தனக்கொரு வாழ்வு அமைவது என்பது அம்மாவின் கண்ணீரிலோ இல்லை வருதத்திலோ அமைவது என்பது அவனுக்கு சிறிதும் விருப்பமில்லை.

எதுவாக இருந்தாலும் சரி அம்மாவின் காலில் விழுந்தாலாவது சமாதானம் செய்துவிடுவது என்று இருக்க, காவேரியோ ரொம்பவும் பிகு செய்ய,

“ம்மா ரொம்ப பண்ணாம வா.. இல்லை அப்பாக்கு வேற பொண்ணு பார்த்திடுவேன்..” என்று காவேரியின் தோளோடு கை போட்டு இழுக்க,

அவன் சொன்ன விதத்தில் முருகவேல் சிரித்துவிட, காவேரியோ “உன் கல்யாணத்துக்கே ஒரு வழிய காணோம்.. இதுல நீ உங்கப்பாக்கு.. ம்ம்ஹும்.. விளங்கிடும்..” என்று வாய் திறக்க,

“அதான் ம்மா.. விளங்காது தானே.. நீயே சொல்லு நீ இப்படி இருந்தா நான் நல்லாருப்பேனே.. என் வாழ்க்கை தான் நல்லாருக்குமா??!!” என்று கேட்க, மகன் சரியான பாயிண்டை பிடித்து பேசிக்கொண்டு இருக்கிறன் என்று புரிந்தது அப்பாவிற்கு..

“ம்ம்ச் இப்போ ஏன் இப்படி பேசுற??!!” என்ற காவேரி கூட, “உனக்கு ஒரு நல்ல வாழ்கையை அமைச்சுக்கொடுக்கத்தான் நான் இவ்வளோ போராடுறேன்..” என்று அப்போதும் இறங்காது பேச,

“ம்மோவ்.. என்னம்மா??!! நான் வேணும்னா தியாகம் பண்ணிடவா??” என்றவனை புரியாதுப் பார்த்தார்..

“வாம்மா வாம்மா.. இப்படி உட்கார்..” என்று அமர வைத்து, அவரருகே அமராது, அவருக்கு கீழே அமர,

“இப்போ ஏன்டா இவ்வளோ குனியுற.. சும்மா நிமிர்ந்து உக்காந்தே பேசு..” என்றார் அப்போதும் இடக்காய்.

“ஆனாலும் நீ எப்பவுமே சிக்ஸ்தான் ம்மா அடிக்கிற..” என்றவன் “சொல்லு உனக்கு என்ன கோபம்??!!” என,

“எனக்கென்ன கோபம்.. நான் யாரு கோபப்பட.. நீங்க எல்லாம் ஒன்னு கூடி ஒரு முடிவுக்கு வந்தாச்சு.. என்னைத்தான் ஒதுக்கிட்டீங்க..” என்று அவரும் சொல்ல,

“ம்ம் முடிவுக்கு வந்து இப்போ நான் என்ன பண்ணிட்டேன் சொல்லும்மா??! அந்த பொண்ண கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தேனா??!! முதல்ல அப்படி செய்ய முடியுமா?? முடியும் வேற யாருக்கோ.. ஆனா என்னால கண்டிப்பா உன்னை மீறி அப்பா மீறி எதுவும் செய்ய முடியாதும்மா.. கடைசி வர இப்படிக்கூட இருந்திடுவேன் ஆனா அப்படி மட்டும் பண்ணிட மாட்டேன்..” என்றவனுக்கு, அவனையும் மீறி மனது கனத்துப் போனது..

“நீயேன்டா இப்படி இருக்கணும்.. உனக்கு பொண்ணு கொடுக்க நீ நான்னு வருவாங்க..”

“ஆனா அவங்களை எல்லாம் எனக்கு பிடிக்குமா??!!!” என்றான் கேள்வியாய்.. கொஞ்சம் ஏக்கமாய் கூட இருந்தது..

உண்மை தான்.. சண்முகப் பிரியாவின் இடத்தினில் வேறு யாரையும் எண்ண முடியவில்லை… அவனின் முகம் அப்படியே ஒருவித வேதனைக் காட்ட, அம்மாவாய் காவேரிக்கு மகனின் கவலை புரியாதா என்ன??!!

“இப்போ என்னத்துக்கு இப்படி மூஞ்சிய வைக்கிற.. ஒழுங்கா ஆஸ்பத்திரிக்கு கிளம்பு..” என்று ஒரு அதட்டல் விட்டார்..

“வேணாம்.. நான் வரலை..”

“எதுக்கு??!!”

“வந்து என்னம்மா செய்ய??!! மனசே சுத்தமா நல்லா இல்லைங்கிறப்போ, நமக்கு பிடிச்ச வாழ்கைய கூட நமக்கு அமைச்சுக்க முடியலைங்கிறப்போ இந்த பாழாப்போன உடம்பு மட்டும் மூணு வேலையும் தின்னு தின்னு கின்னுன்னு இருந்து என்ன சாதிக்கப் போகுது..” என்று சுதர்சன் பேசிக்கொண்டே போக,

“டேய் போதும் நிறுத்துடா..” என்று பதறிவிட்டார் காவேரி..

“என்னடா விட்டா பேசிட்டே போற.. இதுக்கா உன்னை பெத்து அருமை பெருமையா வளர்த்தேன்.. உன்னை நல்லா வாழ வச்சுப் பாக்குறதுல எனக்குமட்டும் என்னடா கஷ்டம். நாளைக்கு உன்னை யாரும் எதுவும் பேசிடக்கூடாது, நம்மளை யாரும் மட்டமா நினைச்சிட கூடாதுன்னு தானே இவ்வளோ யோசிக்கிறேன்..” என,

“சொல்ற எல்லாரும் எனக்கு சந்தோசம் கொடுப்பாங்களா??!! இல்லை என் அம்மா நீ எனக்கு சந்தோசமா லைப் அமைச்சுக் கொடுப்பியா ம்மா…??” என, காவேரி மகனின் இக்கேள்வியில் ஆடித்தான் போனார்.                            

    

                               

      

 

 

      

            

Advertisement