Advertisement

தென்றல்  – 28(2)

“என்ன பேச போறோம்னு தெரிஞ்சும் கிளம்பற. இது சரியில்லை பிரசாத். அவர் என்ன வேணும்னா பயந்து நடுங்கறார்? அவரை போய் உங்களை யார் பொண்ணு பார்த்து சொல்ல சொன்னான்னு போய் அடிச்சா வேற என்ன பண்ணுவார்? உன் அடாவடித்தனம் இந்த ஊர்ல கொஞ்ச நஞ்சமா?…” தனத்தின் பேச்சில் அஷ்மி சிரித்துவிட அவளை முறைத்தவன்,

“அம்மா நான் இருந்தா சரியா பேசமாட்டார். நான் வெளில போய்ட்டு வரேன்…”

“அவர் பேசாத அளவுக்கு தலைவர் என்ன பண்ணுனீங்க?…” அஷ்மி கெட,

“உன்னை இவன்கிட்ட கேட்காம பேசி முடிச்சுட்டோமாம். நீ தான சம்பந்தம் பார்த்துக்குடுத்தன்னு காலையில இருந்து சாயந்தரம் வரைக்கும் ஒரே இடத்தில அசையவிடாம அங்கையிங்க நகரவிடாம ரொம்ப துயரம் பண்ணிட்டான். பிரபா தான் போய் இவரை காப்பாத்திவிட்டான். இன்னும் எங்க எல்லாம் வம்பிழுத்து வச்சிருக்கானோ?…” என்றவர்,

“மரியாதையா உள்ள வந்துட்டு விஷயத்தை பேசி முடிச்சுட்டு போ. நீ இருந்தா சரியான விலையை சொல்லுவான்…” என சொல்லி அவர் உள்ளே செல்ல,

“என்ன, என்ன விலை?…” என்றவளையும் சேர்த்து இழுத்துக்கொண்டு அவன் உள்ளே செல்ல அதுவரை கிளம்பிவிட்டானே என்று நிம்மதியாக இருந்தவர் திக்க ஆரம்பித்தார்.

“இப்ப நீங்க சரியா சொல்லலைன்னா திரும்பவும் உங்க வீட்டுக்கு நான் வரவேண்டியதாகிடும் பழனி அண்ணே…” என மிரட்டுவதை போல கேட்க,

“அம்மா நான் நாளைக்கு வந்து பேசறேனே?…” தரகர் நழுவ பார்க்க,

“எப்ப வேணும்னாலும் பேசலாம். ஆனா நான் தான் பேசுவேன். இன்னொன்னு இடம் கைவிட்டு போச்சு அவ்வளோ தான்…” என்று கை முஷ்டியை மடக்கிக்கொண்டு சாதாரணம் போல சொன்னாலும் கண்களில் அப்பட்டமாய் மிரட்டல்.

“அம்மாடியோவ் இவன் நிஜமாவே சண்டியர் தான். கண்ணாலையே கத்தி வீசறான்” என அஷ்மி பார்க்க,

“அதெல்லாம் கைவிட்டு போகாது தம்பி. ஏனா விலைக்கு வாங்கின ஒருத்தருக்கும் விருத்தி இல்லாம போய்டுச்சு. ஒருவேள அவங்க மூலமூத்தோர் ஆசையும் இவுக கைக்கு கெடக்கனும்னோ இப்படி ஒருத்தரையும் நிலைக்கவிடமாட்டிக்கு…” என சொல்ல,

“நீங்க எதை பத்தி பேசறீங்கன்னு சொல்றீங்களா?…” தாங்கமாட்டாமல் அவள் கேட்டுவிட,

“நீ இன்னும் சொல்லலையா பிரசாத்?…” தனம் வேறு கேட்க இல்லையென்ற தலையசைப்புடன் அஷ்மியை பார்த்து அவன் புன்னகைக்க,

“அப்போ வேணும்னே தான் சொல்லாம மறைச்சீங்களோ?…” கோபமாகிவிட்டது அஷ்மிக்கு.

“அடடா இவன் சொல்லிடறதா சொன்னதால தான்மா நானும் சொல்லலை. வேணும்னே சொல்லாம இருக்க மாட்டான். ஏதோ வேலையில மறந்திருப்பான்…” தனம் மகனுக்கு பரிந்துகொண்டு வர,

“நீங்க வேற அத்தை. மறைக்கிறதுல உங்க மகன் எக்ஸ்பெர்ட்…”

இதை சொல்லவேண்டும் என்று இல்லை. ஆனால் சொல்லிவிட்டாள். ஆனாலும் சொல்லிவிட்டோமே என்கிற பதட்டமும் இல்லாமல் அவனை பார்க்கத்தான் செய்தாள்.

சொல்லிய பின்பு எதற்கு தெரியாமல் சொல்லிவிட்டேன் என்கிற மன்னிப்பு பார்வை எல்லாம்? அதுதான் தவறியோ தவறாமலோ வார்த்தை வடிவம் பெற்று வந்துவிட்டதே. சேரும் இடத்தை சேர்ந்துவிட்டதே.

ஆனால் பிரசாத் இதெற்கெல்லாம் அசரவே இல்லை. அவள் சொல்லியதை பெரிதாய் எண்ணவும் இல்லை. கோபமாய் தன்னை பார்த்தவளை பார்த்து கண்ணடித்தவன்,

“உட்கார் சொல்றேன்…” என தன்னருகே அழைக்க அசையாமல் நின்றவளின் கை பிடித்து அமர்த்தியவன்,

“மறைக்கிறதுல கண்டிப்பா நான் எக்ஸ்பெர்ட் தான் வெள்ளெலி. அதான் உனக்கு தாலி கட்டினதை இங்க யாட்டையும் சொல்லாம மறைச்சு உன்னை தேடுனேன். உன்னை பார்த்த பின்னால கோபத்தை தாண்டி உன்னை உரிமையா நினைச்சதை, அந்த சந்தோஷத்தை மறைச்சு உன்கிட்ட பொய் கோபமா இருந்தேன். இப்போ கூட உன் மேல எனக்கிருக்கிற எக்கச்சக்க ஆசையை என் மனசுக்குள்ள மறைச்சு வச்சு உனக்காக காத்துக்கிட்டு இருக்கேன். மறைக்கிறது எனக்கொன்னும் புதுசில்ல…”

“நான் இந்த மறைக்கிறதை சொல்லலை…”

“நான் இந்த மறைக்கிறதை தான் சொன்னேன். நீ எத்தனை தடவை சொன்னாலும் நீ சொல்லும் போதெல்லாம் நான் இப்ப சொல்லிய விஷயங்கள் தான் எனக்கு ஞாபகம் வரும்…” என அவளின் கை பிடித்து அழுத்தி சொல்ல படக்கென எழுந்தவள்,

“எனக்கொரு போன் வரவேண்டியதிருக்கு. பேசிட்டு வரேன்…” என அவனிடம் கடுப்பாய் சொல்லி,

“அத்தை நீங்க பேசி முடிச்சுட்டு மெதுவா கூட சொல்லலாம். அவசரமில்லை…” நக்கலாய் சொல்லியவள் மொபைலை எடுத்துக்கொண்டு தூரமாய் சென்று அமர்ந்துகொண்டாள்.

“ஹ்ம்ம் பழனி அண்ணே, அப்போ வீடு என் மாமனார் கைக்கு வந்து சேரனும்னு காத்துக்கிட்டு இருக்குன்னு சொல்றீங்க அப்படித்தானே?…” என சத்தமாய் அஷ்மிக்கு கேட்கும் படி பழனியிடம் கேட்க அஷ்மிக்கு முதலில் ஒன்றும் புரியாமல் பின் விஷயம் விளங்க சட்டென திரும்பி பார்த்தாள்.

“ஆமாங்க தம்பி. தலைமுறை தலைமுறையா செழிச்சு வாழ்ந்திருக்காங்க. இப்ப ரெண்டு தலைமுறையா வீடு வேற கைக்கு போகவும் செழிம்பில்லாம போச்சு. பெரிய வீடுன்னு ஆசைப்பட்டு வாங்கிபோட்டு இப்ப கை மாத்திவிட பாத்துட்டு இருக்காக…”

“சரிங்கண்ணே ஒரு நல்ல நாளா பார்த்து சொல்லுங்க. விலையையும் நான் சொன்ன மாதிரி பேசி முடிச்சுடுங்க. கடைசி நேரத்துல கூட குறைய வேணும்னு தகராறு பண்ணினாங்க…” மீசையை நீவியபடி அவன் கேட்க,

“தம்பி இதெல்லாம் சொல்லனும்களா? அதெல்லாம் படிஞ்சு வர பார்ட்டி தான். நாமளும் ஒன்னும் கொறச்சு குடுக்கலியே…”

“அப்ப சரி, நீங்க கிளம்புங்க…” என அவரை அனுப்பிவிட்டு விஷயத்தை அதிரூபனுக்கு சொல்ல போனை எடுத்துக்கொண்டு வாசலுக்கு சென்றான். அவன் செல்லவும் தனம் அஷ்மியின் அருகே வந்தார்.

“நிஜமாவே மறந்துருப்பான்மா. இல்லைன்னா உனக்கு இன்ப அதிர்ச்சி குடுக்கலாம்னு நினைச்சிருக்கலாம். அதை விடு. பேசினதுல இருந்தே உனக்கு தெரிஞ்சிருக்குமே விஷயம். உங்கப்பா இங்க திருவிழாவுக்கு வந்தப்பவே அந்த வீட்டை கலங்கி போய் பார்த்துட்டு நின்னாரு…”

“மனசே ஆறலை. வாழ்ந்த வீட்டை விட்டுட்டு வேற இடத்துக்கு போய் வாழ்ந்த வாழ்க்கையை நினைச்சு பார்க்கும் போது எம்புட்டு வேதனையா இருக்கும்னு எனக்கு தெரியும்மா. நானும் கொஞ்ச காலம் அதை அனுபவிச்சிருக்கேன். அவர் மனசு எனக்கு புரிஞ்சது…” கண்ணீர் துளிர்த்த கண்களை துடைத்துக்கொண்டவர்,

“அதான் பழனிட்ட எதுக்கும் இருக்கட்டும்னு ஒரு வார்த்த சொல்லி வச்சேன். யாராச்சும் கை மாத்தி விடறாங்களான்னு. இந்த ஊர்ல நில கிரயம், வீடு வாங்கறது விக்கிறது, ஜோசியம், ஜாதகம்னு எல்லாமே பார்க்கிறது இவன் ஒருத்தன் தான். கை சுத்தம். அதான் விஷயம் இவனுக்கு தெரியவும் நம்ம காதுல போட்டுட்டான்…”

தனம் சொல்ல சொல்ல கேட்டுக்கொண்டிருந்தவள் முகத்தில் புன்னகை. தலையை மட்டும் அசைத்துக்கொண்டு இருந்தாள்.

“இவரு தான் உன்னோட ஜாதகத்தை கொண்டு வந்து குடுத்தது. உங்கப்பா உனக்கு மாப்பிள்ளை இந்த திசையில தான் அமையும்னு ஜோசியர் சொன்னதா இன்னொருத்தர்ட்ட குடுத்திருக்கார். அவர் மூலமா பழனிக்கு வந்திருக்கு. பார்த்தா தூரத்து சொந்தமும் கூட…”

“இருந்தாலும் பொருத்தம் பார்க்கனும்ல. பார்த்ததுல ரொம்பவே திருப்தி. அத்தனை பொருத்தமும் பொருந்தி இவனுக்கு இவ தான்னு அடிச்சு சொல்லிட்டான்ல பழனி. அதை வச்சு தான் பேச்சு வார்த்தையும் ஆரம்பிச்சு அதி தம்பி வந்தாரு…” என முடிக்க,

“உன் ஜாதகம் மட்டும் இந்த திசையை காட்டலைன்னா?…” என்ற படி வந்த பிரசாத் முடிக்கவும் இல்லை,

“இல்லைன்னா வேற ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் செஞ்சிருப்பீங்களோ?. அப்போ ஏற்கனவே எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு, கல்யாணம் ஆகிடுச்சுன்னு என்னை தேடுனீங்களே எதுக்காம்?…” என்றதும் பிரசாத்தின் முகம் அசடு வழிய அங்கிருந்து நாசூக்காய் எழுந்து சென்றுவிட்டார் தனம்.

இருவரும் என்னவும் பேசி அடித்துக்கொள்ளட்டும் என்னும் விதமாய் சலிப்பும் சந்தோஷமும் அவரின் முகத்தில். அஷ்மியும் எழுந்து அறைக்குள் நுழைய அவளின் பின்னோடு வந்தவன் கதவை சாற்றிவிட்டு,

“ஏய் வெள்ளெலி உன்னை இப்ப இதை அம்மா முன்னாடி சொல்ல சொன்னாங்களா?…” என எகிறிக்கொண்டு வர,

“ஓய் ஏன்னா? சும்மா சும்மா இந்த உதார் எல்லாம் உங்க பழனி அண்ணேங்கிட்ட வச்சுகோங்க. இல்ல…” என தரை உரசும் தன்னுடைய அனார்க்கலி சுடிதாரை வேஷ்டியை மடித்துக்கட்டுவதை போல கட்டிக்கொண்டு நிற்க அவளை கீழிருந்து மேலாக பார்த்தவன்,

“வட போச்சே.” என நினைத்து கள்ளப்புன்னகையுடன் குறும்பாய் பார்க்க,

“பேட், வெரி பேட் ஹஸ் நீங்க…” என சுடிதாரை கீழே இறக்கியவள் அவனை முறைப்பாய் சொல்ல,

“இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா” என அவனிதழ்கள் பாடலை முனுமுனுக்க அவனின் பார்வையின் வேறுபாட்டில் கைகட்டி வேடிக்கை பார்த்தாள் அஷ்மி. அவனின் பார்வையும் குரலும் மாறிப்போய் அவளை மயங்க  செய்தது.

பில்டிங் ஸ்ட்ராங். பேஸ்மட்டம் வீக். திடனாய் அவனின் பார்வையை எதிர்கொண்டவள் வதனம் செம்மை பூசியது.

வார்த்த ஏதும் பேசிட தோணல வாரேன்  ஒ பின்னால

வேற ஒரு வார்த்தைய தேடிட ஆகாதினி என்னால

மொத்த சென்மம் ஓஞ்சு போச்சே ஒத்த பார்வையில

———————————————————————————————

 

இரண்டு மாதங்களுக்கு பின்,

“அவன் எதுக்கு நம்ம வீட்ல வந்து உட்கார்ந்திருக்கான்? நீ கேட்டியா?…” பத்மினியிடம் ரத்தினசாமி கேட்க,

“எதுவும் சொல்லலை. உங்களை பார்க்கனும்னு சொன்னாரு. கொஞ்சம் சீக்கிரம் வாங்க…”

“அதிபனை பார்க்காம என்னைய பார்க்கனும்னானா? அதிபனுக்கு தெரியுமா?…”

“தெரியாதுன்னு நினைக்கேன். நீங்க முதல்ல வாங்க. நான் அதிக்கிட்ட சொல்லிடறேன்…” என்றார் பத்மினி.

“சரி கிளம்பறேன். சாப்பிட ஏதாவது குடு…”

“அதெல்லாம் வந்ததும் கவனிச்சாச்சு…”

“தெரியுமே…” என்றவர் பார்த்துக்கொள் என்றுவிட்டு மொபைலை வைத்துவிட்டு கட்சி அலுவலகத்தில் இருந்து கிளம்பிவிட்டார்.

அவரின் வீட்டில் நடுநாயகமாக அமர்ந்திருந்தது பிரசாத். முகத்தில் அத்தனை தீவிரம்.

Advertisement