Advertisement

தென்றல் – 9
          பிரசாத் வீட்டிற்கு வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. அஷ்மிதாவிற்கு ஓரளவிற்கு அந்த வீட்டின் நடைமுறைகள் பிடிபட ஆரம்பித்தது. இன்னும் இரண்டு நாளில் ஊர் திருவிழா. 
சந்தியாவும் சந்தோஷும் தங்களை விட்டுவிட்டு அன்றிரவே திரும்பி விட்டனர். மறுவாரம் விருந்துக்கு வருகிறோம் என்று. தினமும் பிரசாத்தை பகலில் பார்க்கமுடிவதில்லை. இரவிலுமே அவள் உறங்கிய பிறகு வருபவன் காலை சாப்பிடும் வரை தான் இருப்பான்.
ஒரு வாரத்திலேயே என்ன இவன் இப்படி என்று அவளுக்கு தோன்றிவிட அவனிடம் கேட்டேவிடுவது என்று முடிவுக்கு வந்தாள்.
அதியசமாக அன்று மாலையே வந்துவிட்டவன் வந்ததிலிருந்து தனத்திடமே பேசிக்கொண்டிருக்க பார்த்தவள் பேசலாம் என்று சென்று அமர அவளை பார்த்ததும்,
“வா வெள்ளெலி உன்னை தான் தேடிட்டிருந்தேன்…” என சொல்ல அவனின் காலுக்கு கீழே எதையோ தேடினாள் அஷ்மிதா. 
அவள் எதற்கு தேடுகிறாள் என்பதை அறிந்தவனாக அடக்கப்பட்ட புன்னகையோடு அவளே பேசட்டும் என பார்க்க அவளோ தேடிவிட்டு சிறு தோள் குலுக்கலுடன் முகத்தை திருப்ப புருவம் உயர்த்தியவன்,
“வெள்ளெலி, உன்னைத்தான்…” என அழைக்க காது கேளாதவள் போல இருக்க,
“என்னடா உனக்கு? சும்மா சும்மா வெள்ளெலின்னுட்டு இருக்க?…” தனம் கேட்க அவன் அஷ்மியை கண் காண்பிக்க ஒரு சிரிப்புடன்,
“ஏம்மா அவன்கிட்ட என்னனு கேளேன்…” தனம் மருமகளிடம் சொல்ல,
“என்கிட்டே எதுவும் சொல்லவே இல்லையே. நான் என்ன கேட்க அத்தை?…” 
அவள் அசல்ட்டாய் சொல்ல சொல்லியவிதம் பிரசாத்திற்கு அது புன்னகையை கொடுத்தாலும் தனத்திற்கு அது சுவைக்கவில்லை. முகம் சுருங்கிவிட்டது. 
மருமகள் மகனை மதிக்கவில்லை. இப்படித்தான் அவர் நினைத்தார். மகனை மதித்து என்னவென்று கேட்டால் தான் என்ன என்று தோன்ற அமைதியாகிவிட்டார். 
“டீ ஆறிட்டு இருக்குதே அத்தை. குடிங்க…” என அஷ்மி சொல்ல அவளிடம் தலையசைத்துவிட்டு டீயை எடுத்து குடிக்க ஆரம்பித்தார். ஆனாலும் உள்ளுக்குள் ஒரு சற்று எரிச்சலாக தான் உணர்ந்தார். காட்டிக்கொள்ளவில்லை அவ்வளவு தான்.
“உன்கிட்ட பேசனும்…” என்று பிரசாத் விளையாட்டை கைவிட்டவனாக கூற அப்போதும் நிமிராமல் இருந்தாள்.
இதை முதலிலேயே நீ செய்திருக்க வேண்டும் என அவள் மனம் முரண்டுவதை அவன் அறியவில்லையே. 
“அஷ்மிதா அவன் உன்னைத்தான் அப்போதிருந்து கூப்பிட்டுட்டே இருக்கான்…” மகன் அவளிடம் மீண்டும் மீண்டும் தாங்குவது பிடிக்காமல் நேரடியாக சொல்லிவிட,
“என்னைன்னா என் பேரை சொல்லி தான கூப்பிட்டிருக்கனும். ஆனா இல்லையே அத்தை…” என கிண்டலாக அவனை பார்க்க அவனும் அவளைத்தான் பார்த்தான்.
அதற்கு மேலும் அங்கிருக்க விரும்பாதவராக தனம் எழுந்துகொண்டார். அவருக்கு தெரியும் மகனும் மருமகளும் அந்தளவிற்கு இயல்பான திருமண வாழ்க்கையை வாழவில்லை என்பது.
அது ஒருபுறம் முணுமுணுவென்ற வலியை கொடுத்திருக்க இன்னும் பிரசாத்திடம் அஷ்மிதாவின் ஒட்டாத பாங்கும் வேறு அவரை கவலையில் ஆழச்செய்திருந்தது.  இப்போது இந்த படபட பேச்சும் கூட.
ஆனால் காண்பித்துக்கொள்ள முடியாதே? புதிதாய் வந்திருப்பதால் கூட இருக்கலாம். போக போக சரியாகி விடும் என நம்பினார்.
எத்தனை தான் இருந்தாலும் மகனென்று வரும் போது மிக சுலபமாய் ஒரு மாமியாராய் தான் அவரின் மனம் சிந்தனைவயப்பட்டது. இது அவரே உணராமல் போனது  தான் அவரின் துரதிர்ஷ்டம்.
அஷ்மியை முழுதாக அறிந்தவரில்லையே. அதனாலேயே முதன்முதலாய் ஒரு அதிருப்தி. தனம் சென்றதும்,
“வெள்ளெலி உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும். கொஞ்சம் ரூம்க்கு வா…” பிரசாத் நேரடியாகவே அழைக்க,
“வெள்ளெலி வந்தா கூட்டிட்டு போங்க. எதுக்கு என்னை பார்த்து சொல்றீங்க?…”
“ப்ச், சொன்னா கேட்கமாட்ட…” என்றவன் வேகமாய் அவளின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு போனான்.
அஷ்மிதாவும் அமைதியாக அவனின் பின்னோடு சென்றாள். அவளுக்கும் பேசவேண்டியதிருக்கிறதே.
அறைக்குள் வந்து கதவை அடைத்தவன் மரநாற்காலியில் அமர்ந்தவன் அவளை பார்க்க அஷ்மிதா இன்னும் நின்ற இடத்திலேயே நின்றிருந்தாள். அதில் எரிச்சலானவன்,
“உன்னோட பெரிய ரோதனையா போச்சு. உன்னை பார்த்த நாளில் இருந்து இதே பொழப்பு எனக்கு. உள்ள வரைக்கும் வந்தவ கூட வந்து உட்காரவேண்டியது தானே? இதுக்குமா கெஞ்சனும்?…” என்று அவன் கடுப்படிக்க,
“நீங்க சொல்றதையும் நினைக்கிறதையும் செய்ய நான் என்ன பொம்மையா? நினைச்சா பேசுவீங்க?  நினைச்சா கண்டுக்காம முகத்தை கூட காட்டாம மறைவீங்க. நான் மட்டும் நீங்க சொல்றதை கேட்கனுமா?…” 
கோபமாய் அவனிடம் கேட்கவும் ஒரு நொடி திகைத்தவன் முகத்தில் கொஞ்சம் சிரிப்பும் பரவ அவளை பார்த்தவன்,
“என்னை தேடினியா?…” என கேட்க,
“என்ன தேவைக்கு?…” அஷ்மியும் சொல்ல,
“தேவை இல்லாததுக்கா இவ்வளவு கோவம் வரனும்?…” என்றதும் அஷ்மி பதில் சொல்லாமல் மௌனமாய் பார்த்தாள்.
“ஓகே, இதை இப்ப விட்றலாம். நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லத்தான் கூப்பிட்டேன். கேட்கறியா?…” என்று தன்மையாக அவன் சொல்லவும் அமைதியாய் வந்தமர்ந்தாள்.
“திருவிழா முடியவும் நீ பெருமாள் மாமா ஹாஸ்பிட்டல்ல ஜாயின் பண்ணிக்க. நான் அவர்ட்ட எல்லாமே பேசிட்டேன். இப்பத்தான் கல்யாணம் முடிஞ்சதனால நீ ரெஸ்ட் எடுக்கனும்னு சொல்லாம இருந்தேன்…” 
அவள் ஏதாவது சொல்லுவாள் என பார்க்க பேசவந்ததை கேட்க மட்டுமே வந்தேன் என்பதை போல அவள் பார்வை கொடுக்க,
“ப்ச், இப்படி பார்த்தா என்ன அர்த்தம்? ஏதாவது சொல்லேன்…”
“நீங்க சொல்ல வந்த ஒரு முக்கியமான விஷயம் இதுவா இருந்தா ஓகே. கேட்டாச்சு, நான் போறேன்…” அவள் அறையை விட்டு வெளியேற நினைக்க,
“இன்னும் என்ன தான்டி உனக்கு பிரச்சனை? ஒரு வாரமா ரொம்ப வேலை. முடிக்கவேண்டிய முக்கியமான வேலை. தள்ளிவைக்க முடியாத அளவுக்கு. எல்லாமே முடிஞ்சது. நீ ஹாஸ்பிட்டல்ல ஜாயின் பன்றப்ப கூட இருக்கனும்னு நினைச்சேன். அதான் வேலை வேலைன்னு ஓடினேன். அதான் வீட்டுக்கு கூட வராம உன்கூட பேசக்கூட இல்லாம ஓடிட்டே இருந்தேன். போதுமா?…” 
அவனின் இரைச்சலில் காதை பொத்திக்கொண்டவள் கண்களையும் மூடி நிற்க அவளின் கோலம் அவனை அமைதிபெற செய்தது.
“ப்ச், ச்சே…” என கையை உதறிவிட்டு மீண்டும் சேரில் அமர,
“இந்த கத்தி பேசற வேலை இத்தோட ஸ்டாப் பண்ணிக்கனும். எதுக்கு இவ்வளவு இரைச்சல்? பண்ணினது தப்பு. அதை சத்தமா சொன்னா சரியாகிடுமா? உங்களுக்கு வேலைன்னு எனக்கெப்படி தெரியும்? சொன்னா தான தெரியும். உங்க மனசுக்குள்ளயே வச்சிட்டு நா இப்படி நினைச்சிருந்தேன். அப்படி நினைச்சிருந்தேன்னு சொன்னா சரியாபோச்சா?…”
அவளும் அவனின் கோபத்திற்கு ஈடான கோபத்தில் தான் சொன்னாள். என்ன ஓன்று இவனின் சத்தத்தில் பாதி அளவு கூட அவளிடம் இல்லை. அழுத்தமான குரலில் நிதானமாக சொல்ல,
“நான் எப்படி பேசனும்னு கூட நீ தான் முடிவு செய்வியா?…”
“அது பேசற இடத்தை பொறுத்து. பெட்ரூம்ல இந்த மாதிரி சண்டை சத்தம் இருக்க கூடாது…” 
“அப்போ…” என அவன் விஷமமாய் பார்க்க அதை புரிந்தவளாக அவனை முறைக்க அதில் சிரித்தவன்,
“உன்கிட்ட பேசினா என்ன பேச வந்தேன்றதையே மறந்திடறேன். என்னை ரொம்பவே டைவர்ட் பன்ற நீ…” என்று சொல்லி,
“நாளைக்கு நாம பிரபா வீட்டுக்கு விருந்துக்கு போறோம். அதையும் சொல்லத்தான் கூப்பிட்டேன்….”
“அப்போ ரெண்டு முக்கியமான விஷயம். இதை கூட உருப்படியா சொல்ல தெரியலை…” என்று முணங்கியபடி வெளியே செல்ல,
“ஏன் வெளில போக பறக்கற? கொஞ்ச நேரம் உட்கார்…” அவனின் அழைப்பில் அஷ்மி வியப்பாய் திரும்ப,
“இல்ல, வீட்ல இல்லை, பேசலைன்னு சொல்ற. ஆனா பேச வரப்ப பேசாம போற?…” சமாளிப்பாய் ஏதேதோ சொல்ல,
“நீங்க பேசலைன்னு கோவப்பட்டதா நான் சொல்லவே இல்லையே…” என்று பார்க்க,
“உன்கிட்ட பேச வந்தேன் பாரு என்னை சொல்லனும்…” என்று அவன் இப்போது எழுந்து செல்ல அஷ்மிக்கு தான் சிரிப்பாய் இருந்தது.
திருமணத்திற்கு முதல் நாள் தன்னை பார்த்ததும் இவன் பொங்கியதென்ன, இன்று தன்னிடம் அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லாததை போல நடந்துகொள்வதென்ன என நினைத்தவளின் முகம் புன்னகை பூசியது. 
வெளியில் வந்துவிட்டான் தான். ஆனாலும் இன்னும் கொஞ்சம் நேரம் அவளிடம் பேசிக்கொண்டிருந்தால் தான் என்னவென்னும் உணர்வை இதயத்தில் தூவியது. முனுமுனுவெனும் சுகமான வேதனையை அனுபவித்தான்.
தங்கள் முதல் சந்திப்பின் பின்னால் மீண்டும் அவளை சந்தித்தால் அவளை தன்னோடு தன் மனைவியாய் அழைத்து வந்துவிட வேண்டும் என்கிற முனைப்பு மட்டுமே அவனிடத்தில்.
தாலி கட்டிவிட்டோம், எதுவாகினும் இனி இந்த ஜென்மத்தில் அவள் மட்டுமே தான் மனைவி என்கிற எண்ணம் அவனை ஆக்ரமித்துகிடந்தது. அதற்கு மேல் அவளோடு வாழ்வதா என்ற யோசனை கூட அவனுக்கு இல்லை.
சூழ்நிலை காரணமாக பிரபா, நந்தினி திருமணம். அதற்கு காரணியாக தான் இருந்திருந்தும் தாலி என்கிற ஒன்று நந்தினியின் கழுத்தில் பிரபாவினால் ஏறிவிட்ட காரணத்தினால் மட்டுமே அரும்பாடுபட்டு சிலபல வில்லத்தனங்கள் செய்து பிரபாவே நந்தினியை அழைத்துவரும் படி செய்தவன் தனக்கென்று வரும் பொழுது விட்டுவிடுவானா?
தனக்கும் அதே போல சூழ்நிலை திருமணம். தன்னால் கூட தடுக்கமுடியாத திருமணம். யாருக்கும் தெரியாது தான். ஆனாலும் நடந்துவிட்டதே. அதை தக்கவைத்துக்கொள்ள ஊர் ஊராய் அஷ்மியை தேடி அலைந்தான் எவரும் அறியாமல்.
மீண்டும் அவளை பார்த்த அன்று அத்தனை கோபத்தின் மத்தியிலும் மனதினுள் அத்தனை நிம்மதி. ஆனால் அஷ்மியின் நடவடிக்கையும் பேச்சும் அவள் மீதான கோபத்தை இன்னுமே அதிகமாக்கியது தான்.
திருமணம் தன் வாழ்வில் ஒரு முறை. விரும்பியோ விரும்பாமலோ நடந்துவிட்டது. நடந்தது நடந்ததுதான் என்ற ஸ்திரம் அவனை வேறு எதையும் சிந்திக்க விடவில்லை. 
அதிலும் அஷ்மியை மீண்டும் சந்திக்கும் வரை அவள் மீது உண்மையில் கொலைவெறியில் தான் இருந்தான். 
ஒரு பெண்ணாக இருந்துகொண்டு செய்ய தயங்கும் ஒரு காரியத்தை செய்ததும் இல்லாமல் தன் அனுமதியின்றி அவளின் சுயநலத்திற்காய் நடத்திகொண்ட திருமணத்தை துட்சமென தூக்கியெறிந்து சென்றுவிட்டாளே என்கிற ஆற்றாமையும் அவள் மீது தீரா கோபத்தை விதித்திருந்தது.
மீண்டும் அவளை சந்தித்து தன்னுடன் அழைத்துவந்த பின் அவளின் செயலுக்கு சரியான பாடம் புகட்டவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்க அவளை சந்தித்த பின் நடந்தேறிய அனைத்து நிகழ்வுகளும் அவனின் கட்டுப்பாடின்றி நடந்துவிட்டிருந்தது.
கோபப்படவேண்டும் என்று நினைப்பான். ஆனால் அவனுக்கெதிராய் அவனே நின்றான். அவளை காயப்படுத்த நினைத்தவனே அதிலிருந்து அவளை காப்பாற்ற நினைத்தான். 
இப்படி அஷ்மியால் தன்னியல்பு தொலைந்து அவளியல்பில் மூழ்கிக்கொண்டிருந்தான் அவனறியாமல்.
தன்னுடைய கோபத்தையும், வெறுப்பையும் அவளிடம் காட்ட முயன்று தானே தோற்று நிற்கும் விந்தையை உணரும் போது ஒருவித குளுமையையும் உணர்ந்தான்.
உதடுகளில் மெலிதாய் புன்னகை பூக்க,
“என்னால முழுதா கோவப்பட கூட முடியலையே இவட்ட. இவளால இன்னும் நான் என்னவா மாறப்போறேனோ?…” என சொல்லிகொண்டான். 
மறுநாள் காலையே அனைவருமாக உதயா வீட்டிற்கு விருந்திற்கு சென்றனர். முதன் முதலாக அங்கே செல்கிறாள். அனைத்தையும் ரசனையுடன் பார்த்து உள்ளே செல்ல வந்தவர்களை உபசரித்த பாக்கியலக்ஷமி நேராக பூஜையறைக்கு அழைத்து செல்ல அங்கே நாச்சி ஏற்கனவே சாமி கும்பிட்டுகொண்டிருந்தார்.
இவர்களை பார்த்ததும் எழுந்தவர் புன்னகைக்க அவரை அஷ்மியிடம் அறிமுகப்படுத்தினான் பிரசாத்.
“இவங்கதான் நாச்சி பாட்டி. மூர்த்தி அப்பாவோட அம்மா. எங்க மொத்த குடும்பத்துக்கே பெரியவங்க…” என சொல்ல,
“ஹாய் பாட்டி…” என்றாள் அஷ்மி. அவளின் ஹாயில் கண்களை விரித்த நாச்சி,
“அவுட்டு யூ ட்டூ…” என்று தன் கைவரிசையையும் அவர் காட்ட,
“கிழிஞ்சது, இன்னைக்கு காதுல ரத்தம் வராத குறை தான்…” என விஷ்ணு முனுமுனுக்க,
“செம்ம இங்க்லீஷ் போங்க…” அஷ்மியும் பாராட்டுதலாய் பார்த்துவிட நாச்சிக்கு மகிழ்ச்சி தாண்டவமாடியது.
“அம்மா முதல்ல அவங்களை ஆசிர்வாதம் செய்ங்க. வெளில ஹால்ல உக்காந்து சாவகாசமா பேசுவோம்…” கிருஷ்ணமூர்த்தி சொல்லவும் தான் அமைதியானார் நாச்சி.
அதன்பின் அவரின் காலில் விழுந்து இருவரும் ஆசிர்வாதம் வாங்க அவர்களிக்கு அட்சதை தூவி மனமார ஆசிவதித்தார் நாச்சி.
அதன்பின் வெளியில் வந்து  அமரவும் நந்தினி அனைவருக்கும் குடிக்க எடுத்துவர சென்றாள்.
“திருவிழாவுக்கு உங்க வீட்ல சொல்லிட்டியாம்மா?…” பாக்கியலக்ஷ்மி கேட்க,
“சொல்லிட்டேன் ஆன்ட்டி. நாளைக்கு மார்னிங் வந்திருவாங்க…”   என அவளும் பதில் சொல்ல அடுத்தடுத்து அவர்களிடமே அஷ்மிதா பேசிக்கொண்டிருக்க நாச்சி கடுப்பாகிவிட்டார்.
“இந்தாபுள்ள அம்மி. நல்லா பேரு வச்சாக அம்மி தும்மின்னு. இங்கனவும் பேத்திக்கு அதத்தேன் வச்சிருக்காங்க. வயசான காலத்துல வாயில நுழையிற மாதிரி பேரு வைக்க தெரியுதா? என்னத்த படிச்சீங்களோ?…” என நாச்சி அங்கலாய்க்க,
“அஷ்மிதா வாயில நுழையாத பேரா என்ன? நல்லாருக்கு கிழவி நீ பேசறது…” உதயா அஷ்மிதா எதுவும் தவறாக நினைத்துவிடுவாளோ என பதறி பேச,
“ஐ லைக் இட் பாட்டி. இனி நீங்க என்னை அம்மின்னு சொல்லிக்கோங்க. புதுசா இருக்கு. உங்க வாயில வரமாதிரியே கூப்பிடுங்க. நானும் உங்களை பாட்ன்னு கூப்பிடறேன். ஓகேயா?…”   என அவரிடம் டீல் பேச திகைத்துப்போன நாச்சி,
“சும்மா சொன்னேன்த்தா. இந்த பயலுக்கு ஏத்த பொண்டாட்டி தான் நீ…” என்று கன்னம் வழித்து அவளை உச்சிமுகர அஷ்மியும் நாச்சியை கட்டிக்கொள்ள அதை வைத்தகண் வாங்காமல் பார்த்தான் பிரசாத்.
“ம்க்கும்…” என்ற சத்தத்தில் கலைந்தவன் நிமிர்ந்து பார்க்க நந்தினி காபியுடன் நின்றிருந்தாள் இவனுக்கு ட்ரேயை நீட்டியபடி. அவளின் முறைப்பை கண்டவனுக்கு,
“இந்த அரைக்காப்படிக்கு வேற வேலையே இல்லை. எப்பப்பாத்தாலும் என்னை முறைச்சிட்டே இருக்கறது…” என உதயாவிடம் முனுமுனுக்க,
“காபி எடுத்துக்க முடியுமா முடியாதா? எவ்வளவு நேரம் நிக்கிறது?…” என்று மற்றவர்கள் அறியாது அவனை கடிய,
“ப்ச், இப்ப என்ன?…” என்றபடி அவனும் எடுத்துக்கொள்ளவும் நகர்ந்தாள் நந்தினி.
அதன் பின் அனைவருமாக பேசி முடித்து உண்டுவிட்டு கிளம்ப வேகமாய் நந்தினியிடம் வந்தான் உதயா. 
“என்ன நந்து இப்படி பன்ற? நம்ம வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டுட்டு அவனை கோவமா பேசற?. தப்பும்மா…” என கடிந்துகொள்ள பதில் பேசாமல் வாயை மூடிக்கொண்டாள் நந்தினி.
“இதுவரை அவன்ட்ட நீ கோபமா பேசியிருக்க தான். அதை நானும் அவனும் பெருசு பண்ண மாட்டோம். ஆனா இப்ப அவனுக்குன்னு மனைவி வந்தாச்சு. அவளுக்கு நீ பிரசாத்கிட்ட இந்தமாதிரி நடந்துக்கறது தெரிஞ்சா என்ன நினைப்பா? அதையும் தாண்டி அந்த பொண்ணு ரொம்ப புத்திசாலியா வேற தெரியறா…”
“அதனால? அதுக்கு நான் என்ன பண்ணனும்?…” நந்தினி விட்டேற்றியாக பேச,
“நீ எதுவும் பண்ண வேண்டாம்னு தான் சொல்றேன். அந்த பொண்ணுக்கு உன்மேல அபிப்ராயம் எப்படி உருவாகும்ன்றதை தாண்டி உன்னோட இந்த வெறுப்புக்கும் கோபத்துக்கும் காரணம் என்னனு கிளற ஆரம்பிச்சா பிரச்சனை தான் பெருசாகும் நந்தினி…” 
அவனின் அழுத்தமான பேச்சில் இருந்த உண்மை நந்தினியை சுட கண்கள் கலங்க அவனை பார்த்தாள். 
“ப்ச், பார்த்தியா இதுக்குதான் எதையும் சொல்ல எனக்கு யோசனையா இருக்கு. பிரசாத் பண்ணினது தப்பு தான். அது சூழ்நிலையால நடந்தது.  இன்னும் அதையே நினைச்சுட்டு இருக்கறது நமக்கும் நல்லதில்லை. நம்மை சுற்றி இருக்கறவங்களுக்கும் நல்லதில்லைம்மா…
“என்னால முடியலைங்க…” அவனின் தோள் சாய்ந்தவளை ஆறுதலாய் அணைத்தவன்,
“சில விஷயத்தில் மாற்றம் அவசியம் நந்து. புரிஞ்சுக்கோ. அவனும் பிறப்பிலேயே கெட்டவன் இல்லை…” என்றவனுக்கு பதில் கொடுக்காது மௌனம் காத்தாள் நந்தினி.
உதயா எதை எண்ணி பயந்து நந்தினியிடம் பேசிக்கொண்டிருந்தானோ அதுதான் பிரசாத் வீட்டில் அட்சுபிசகாமல் நடந்தேறியது.
“உங்களை நந்தினிக்கு பிடிக்காதா? உங்க மேல எதுக்கு அவங்களுக்கு இவ்வளவு கோபம்?…” 
அஷ்மியின் கேள்வியில் விதிர்த்துப்போனான் பிரசாத். எதை எதிர்கொள்ளவே முடியாதென எண்ணிக்கொண்டிருந்தானோ எதை இன்றே இவ்வளவு விரைவில் எதிர்கொள்ள வேண்டியதாகும் என அவன் நினைக்கவே இல்லை.
என்ன பதில் சொல்வது என அவன் அஷ்மிக்கு முகம் காட்டாமல் திரும்பி யோசனையோடு நிற்க அவனின் உடல் லேசாய் நடுக்கத்தை உணர ஆரம்பித்தது. 
ஆனால் இப்படியே நின்றுகொண்டிருந்தால் சரிவராது என நினைத்தவன் அஷ்மியின் புறம் திரும்பி,
“ஏன் அப்படி கேட்கற?…” என,
“இன்னைக்குன்னு இல்லை. நம்ம மேரேஜ் அன்னைக்கும் நான் அவங்களை நோட் பண்ணினேன். இப்படித்தான் பிகேவ் பண்ணினாங்க. இன்னைக்கும் அப்படித்தான்…”
அவனின் அமைதியில் அஷ்மிதாவிற்கு என்னவோ போல ஆகிற்று. குடும்பத்திற்குள் ஆயிரம் பிரச்சனை இருக்கும். இதை ஒரு விஷயமாக தான் பேசியிருக்க கூடாது என தன்னையே கடிந்துகொண்டவள்,
“இட்ஸ் ஓகே, லீவ் இட். ஐ திங்க் பேபிக்கு நேம் செலெக்ட் பன்றதுல உங்க ரெண்டு பேருக்கும் ஈகோ க்ளாஷ் ஆகியிருக்கும்னு நினைக்கேன். அதான் அவங்க இன்னும் கோபமா இருக்காங்க போல…”
அஷ்மியாய் ஒரு காரணம் கற்பித்து அவனிடம் கூற உள்ளுக்குள் நூறுமுறை மரித்து உயிர்த்தான். அஷ்மியையே அவன் பார்த்திருக்க,
“ஓகே, அவங்க கோபமா இருந்தா இருக்கட்டும். பட் இதுவே கன்டினியூ ஆக கூடாது. இன்னொரு தடவை உங்களை இந்த மாதிரி பார்த்தா நான் ரியாக்ட் பன்றதே வேற மாதிரி இருக்கும்…”
அஷ்மிதா வெகு சாதாரணமாக சொல்லிவிட பிரசாத் தான் துகள்களாய் சிதறிக்கொண்டிருந்தான்.
இவளுக்கு நடந்த உண்மை தெரிந்தால்? என்று இப்பொழுதே அவனிதயம் தாளம் தப்பி துடிக்க ஆரம்பித்தது.

Advertisement