Advertisement

தென்றல் – 8

              “அஷ்மி என்னடா பன்ற?…” என கேட்டுக்கொண்டே வந்த அதிபனை பார்த்து சிரித்தவள்,

“சும்மா தண்ணி குடிக்கலாம்னு வந்தேன். நீயும் தூங்கலையா?…”

“பேபிக்கு தூக்கம் வரலை அதான் நானும் துவாவும் கார்டன்ல ஒரு வாக் போனோம். துவா அங்க தான் இருக்கா. நீ கீழே வந்ததை பார்த்தேன். அதான் கேட்கலாமேன்னு…”

“ஹேய் சொல்லிருக்கலாம்லடா….” என கேட்டு வேகமாய் அஷ்மி ஓட,

“அஷ்மி ஏய் நில்லு. அஷ்மி…” என அழைத்தும் அவள் நிற்பதாய் இல்லை.

“போச்சுடா…” என தலையில் கை வைத்தவன் பின் சிரிப்புடன் கிட்சனிற்குள் நுழைந்தான்.

மூவருக்கும் காபி தயாரித்து பிளாஸ்கில் ஊற்றி கொறிப்பதற்கு சிப்ஸும் எடுத்துக்கொண்டு சென்றான்.

“நானே கேட்கனும்னு நினைச்சேன். நீயே கொண்டு வந்துட்ட. சில்லுன்னு க்ளைமேட். நம்ம சொந்தக்காரங்க எல்லாம் வானத்துல உலா போற நேரம். செம்மையா இருக்குல…” என்று சிரித்தவளை பார்த்தவனின் மனதிற்கு எதுவோ பிசைந்தது.

“என்ன முயல்க்குட்டி நானா தான் பேசிட்டே இருக்கேன். நீ ஒருவார்த்தை கூட பேசலையே…” என்றவள்,

“நான் வந்ததுல இருந்து தனியா பேசிட்டு இருக்கேன்டா. உன் பொண்டாட்டி எனக்கு கம்பெனி குடுக்கவே இல்லை. என்னனு கேளு…” என அவனிடமும் சொல்லி அவனின் பதிலை எதிர்பார்க்காமல்,

“இந்த ஜாஸ்மின் வச்சு எவ்வளவு நாள் ஆச்சுடா. இன்னும் மொட்டு வைக்கவே இல்லை. நீ என்ன பன்ற, ப்ரீயா இருக்கறப்ப வேற ஒரு நர்சரில இருந்து செடி வாங்கிட்டு வந்து இங்க குடுத்திரு. அடுத்து நான் எப்ப வருவேனோ? அப்பா இதுல பூ பூத்திருக்கனும்…” என கட்டைளையாக சொல்லியவளுக்கு தலையை அசைக்க,

“ரெண்டும் ஊமை சாமியாரா இருப்பீங்கன்னு தெரிஞ்சா நான் வீட்டுக்குள்ளயே இருந்திருப்பேன்…” என கோபம் போல சொல்லி எழ,

“டாக்டர்…” என அதுவரை அடக்கிவைத்திருந்த கண்ணீர் உடைப்பெடுத்தது துவாரகாவின் விழிகளில் இருந்து.

“துவா…” என ஆஷ்மி அருகில் அமர்ந்துகொள்ள அவளை கட்டிக்கொண்டு அப்படி அழுதாள். அஷ்மியும் உடைந்துதான் போனாள்.

“அதி இங்க பாரேன் துவா எவ்வளவு நாள் கழிச்சு அழறான்னு. இதுவரை பயந்து பயந்து அழுதவ இன்னைக்கு எனக்காக அழறா. உண்மைய சொல்லு துவா, எங்க நான் இங்க இருந்து போகாம இருந்திருவேனொன்னு தான அழற?…” என கிண்டல் செய்ய அவளின் குரலும் தழுதழுத்தது.

சிறிது நேரத்தில் துவாரகாவின் அழுகை மட்டுப்பட அவளின் கண்ணீரை துடைத்த அஷ்மி,

“நான் எங்க போய்ட போறேன்? பக்கத்துல தானே? இதுக்கு போய் அழுவாங்களா? துவா எப்பவும் ப்ரேவ் கேர்ள். அப்படித்தான் இருக்கனும். அப்பத்தான் மயிலு கண்ணுல விரலை விட்டு ஆட்ட முடியும். நீ அழுதன்னு தெரிஞ்சா அந்தாளுக்கு கொண்டாட்டமா போய்டும்…”

“உனக்கு அவரை இழுக்கலைனா பொழுது போகாது…” என சலித்துக்கொண்டே சொல்லிய அதிரூபன் மூவருக்கும் காபியை ஊற்றினான்.

“உன் பொண்ணை பார்த்தியா அதி, இங்க எவ்வளோ ஜாலியா தூங்கறான்னு. இந்த பேச்சு சத்தத்துளையும்…” என சிரித்தபடி கப்பை வாங்கிகொண்டவள் மேலும் சில நிமிஷங்கள் பேசிக்கொண்டிருந்தாள்.

பேசினாளே தவிர முழு ஈடுபாட்டுடன் பேசவில்லை. அவளின் கவனம் அவர்களையும் தாண்டி அந்த வீட்டின் ஒவ்வொரு இடத்தையும் அங்குலம் அங்குலமாய் கண்களில் உள்வாங்கி மனப்பெட்டகத்தினுள் நிரப்பிக்கொண்டிருந்தது.

அவர்கள் அமர்ந்திருந்தது தாழ்வான சேர் என்பதால் தரையில் இருந்த புற்களை வருடிக்கொண்டே இருந்தாள் அஷ்மிதா. அவளின் கண்களில் ஒருவித தவிப்பும் பிரிவுத்துயரமும் அப்பிக்கிடந்தது.

கார் பார்க்கிங், தோட்டம், நடைபாதை என ஒவ்வொன்றையும் பார்த்துக்கொண்டே இருந்தாள். இடையிடையே வானத்தையும் பார்த்துவைக்க,

“சொந்தக்காரங்க இன்னும் போகலையா டாக்டர். பார்த்துட்டே இருக்கீங்க?…” துவா கேட்க அவளின் கேள்வியில் புன்னகைத்தவள்,

“சொந்தங்கள் மட்டுமில்லை அங்கதான் அம்மாவும் இருக்காங்க துவா. அம்மா இருக்கற இடத்தில் அவங்க கூட பழகற எல்லாரும் எனக்கு சொந்தங்கள் தானே? அதான் பார்த்துப்பேன். நான் போற ஊர்ல அம்மா இருப்பாங்களான்னு தெரியலை. அப்பா இங்க, நான் அங்க. அம்மா மேல…”

அதற்குமேல் பேசமுடியாமல் தொண்டை அடைத்தது அஷ்மிக்கு. அவளால் முடியவில்லை.

“நான் தூங்கறேன் அதி. குட்நைட் துவா…” என்றவள் வேகமாய் உள்ளே ஓடிவிட்டாள்.

“என்னாச்சு மாமா?…” என துவா அதிபனை பார்க்க,

“அஷ்மி அம்மாவை பத்தி பேசி முதல் முதலா கேட்கறேன் துவா. அவ இதுவரை யார்ட்டையுமே பேசினதில்லை. இவ்வளவு ஏன்? அவ அம்மான்னு யாரையுமே கூப்பிட்டதும் இல்லை. ஆனா இன்னைக்கு…”

“மாமா…”

“அவ ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கா துவா. அவ பார்வைல ஏதோ தவிப்பு. உணர்வுகளை அடக்கறா…” அஷ்மியின் அலைப்புருதல்களை கண்டுகொண்டவன் மனதினுள் பெரும் தாக்கம்.

நாளையோடு இனி அஷ்மி அவர்கள் அஷ்மி அல்ல. இந்த உண்மை அவனை அடியோடு புரட்டிப்போட்டது.

“நான் போய் அங்கிளை பார்த்துட்டு வரேன்…” என்று எழுந்தவன் குழந்தையை தூக்கிக்கொள்ள துவாரகாவும் மற்ற பொருட்களை எடுத்துக்கொண்டாள்.

“நீ இதை வச்சிட்டு ரூம்க்கு போ. நான் பார்த்துட்டு வரேன்…” என்றவன் ராஜாங்கத்தின் அறைக்கு வர அங்கே அஷ்மி நின்றிருந்தாள்.

இவனின் வரவை உணர்ந்தவள் போல் திரும்பாமல் அசையாமல் நின்ற இடத்திலேயே நின்றவள்,

“அப்பாவுக்கு ஸ்லீப்பிங் டேப்லெட் ஒன்னே ஒன்னு பாலோட குடுத்திட்டேன் அதி. அதான் நல்லா தூங்கறாரு. நான் குடுக்கலைன்னா கண்டிப்பா தூங்க மாட்டார்…”

“அஷ்மி…” அவளின் தோளை அவன் தொட்ட நிமிடம் அவன் மேல் அப்படியே சாய்ந்தவள்,

“அப்பாவுக்கு நாளைக்கு நீ குடுத்திருடா. ஒரு ரெண்டு மூணு நாள் அதுக்கு பின்னால தானா சரியாகிடுவாரு…” என்றவளை அணைத்துக்கொண்டவன்,

“ஏன்டா ஏன் இப்படியெல்லாம் பேசற?…”

“ப்ச், அதை விடு. முடிஞ்சா ஒரு ஒன் மந்த் இல்ல இல்ல. பேசாம இங்கயே இருந்திடேன் நீ. இல்லைனா அப்பாவை உன்னோட வச்சுக்கடா. அவருக்கு அவருக்கு…” என்றவள் அவனை விட்டு விலகி,

“மரமண்டடா நீ. எல்லாமே உனக்கு நானே சொல்லனும். சொன்னா புரிஞ்சிக்க மாட்டியாடா? லூஸு, ட்யூப்லைட், பச்சபட்டாணி, யூஸ்லெஸ் யூஸ்லெஸ். அவர உன்னோட வச்சுப்பியோ? நீ அவரோட இருப்பியோ? ஆனா ரெண்டு பெரும் ஒரே வீட்ல தான் இருக்கனும். உனக்கு ஈகோனா ரெண்டு பேர் பேர்லயும் புதுசா ஒன்னை வாங்கு. அங்க போய் இருங்க. ஆனா இந்த மனுஷனை தனியா விட்ட…”

“நான் பார்த்துப்பேன்டா. நீ பீல் பண்ணாத…” அவளை அமைதிபடுத்தும் விதமாய் சொல்ல,

“நான் ஒன்னும் பீல் பண்ணலையே. அதுக்குத்தான் நீ இருக்கியே. எனக்கென்ன கவலை?…” என்றவள்,

“போ போ போய் தூங்கு. இப்ப முழிச்சிருந்து காலையில நான் கிளம்பறப்போ தூங்கிவழியாத. நான் டென்ஷன் ஆகிடுவேன்…” என்று எச்சரித்தவள் வாசலில் நின்ற துவாரகாவை பார்த்து,

“ஒரு மனுஷனை நிம்மதியா தூங்க விடமாட்டீங்க போல புருஷனும் பொண்டாட்டியும்?. போங்க போங்க போய் புள்ளகுட்டிய தூங்க வைங்க…” என விரட்ட அதிபனின் கண்ணசைவில் கவலையுடன் நகர்ந்தாள் துவாரகா.

“நீ என்னடா இன்னும் இங்க வேடிக்கை பார்த்துட்டு. போ போ…” என,

“நீ போகல? நீயும் போய் தூங்கேன்டா?…”

“ஹ்ம்ம், போறேன். நீ போ. நான் தண்ணி குடிச்சுட்டு தண்ணி எடுத்திட்டு போறேன்…” என்றவள் கிட்சனை நோக்கி செல்ல அதிரூபனும் மாடிக்கு சென்றான்.

சென்றவன் அறைக்குள் சென்று குழந்தையை படுக்கவைத்துவிட்டு மீண்டும் அறையை விட்டு வெளியில் அஷ்மியின் கண்களில் படாதவண்ணம் நின்றுக்கொண்டான்.

வாட்டர் பாட்டிலுடன் வந்தவள் அங்கிருந்த ஒவ்வொரு இடத்தையும் தொட்டு தடவி பார்த்து பார்த்து நின்றாள். ஒவ்வொரு இடத்திற்கும் பத்திநிமிடங்கள் குறையாது நின்று அங்கு நடந்த நிகழ்வுகள் எதையாவது அசைபோட்டுக்கொண்டு புன்னகையுடன் நகர்வாள்.

ஹாலில் ஆளுயரத்தில் உள்ள புகைப்படத்தில் ராஜாங்கமும் அஷ்மிதாவும் சிரித்தபடி நிற்க அதில் இருந்த தந்தை முகத்தையே பார்த்தவள்,

“அப்பா, அஷ்மி நாளைக்கு இங்க இல்லைலப்பா. உங்களால அதை தாங்கிக்க முடியுமா? என்னால முடியலைப்பா. நீங்க, உங்க குரல், உங்க தொடுகை, பார்வைன்னு எதுவும் இல்லாம அஷ்மி இருக்க முடியுமாப்பா? எனக்கு முடியலைப்பா. அழனும்னு தோணுது. ஆனா என்னோட பிடிவாதமும் நான் எனக்கு விதிச்சுக்கிட்ட கட்டுப்பாடும் என்னோட கண்ணீருக்கு தடை போடுதுப்பா…”

“நாளைக்கு கிளம்பறப்ப உங்களை கட்டிபுடிச்சு அழனும்னு தோணுது. ஆனா நான் அழுதுட்டா உங்களை யார் சமாதானம் செய்ய? என்னால உங்க கண்ணுல கண்ணீரை பார்க்க முடியாதுப்பா. இத்தனை வருஷம் அம்மா இல்லை. இனி உங்க கூட இந்த அஷ்மியும் இல்லை. போங்கப்பா…”

“ஏன்ப்பா பொண்ணுங்க புகுந்த வீட்டுக்கு போகனும்? அவங்களுக்கும் அப்பாம்மா இல்லையா? இப்படிப்பட்ட மரபுகளை வகுத்து ஏன் என்னை மாதிரி உங்களை மாதிரி அப்பா பொண்ணுங்களை பிரிக்கறாங்க? எனக்கு நீங்க உங்களுக்கு நான்னு வாழ்ந்த இந்த உலகத்தை தனித்தனியா மாத்திடுச்சே இந்த மேரேஜ்…”

அஷ்மிதா பேசிக்கொண்டே இருந்தாள் அவளின் மனதில் இருந்த அத்தனை விஷயங்களையும் ஒப்புவித்துக்கொண்டிருந்தாள். பேசுவது கேட்கவில்லை என்றாலும் அவளின் முகத்திலும் உதடசைப்பையும் கண்டு அதிரூபனின் மனதில் பெரும் வலி உண்டானது.

இருளில் நின்று அவளை கவனித்துக்கொண்டிருந்தது அதிரூபன் மட்டுமல்ல பிரசாத்துமே. அஷ்மிதா எழுந்து கீழே சென்ற சிறிது நேரத்தில் தானும் எழுந்துகொண்டவன் அவளை காணாமல் தேட அதிரூபன், துவாரகாவுடன் அவள் அமர்ந்திருந்ததை பார்த்துவிட்டு மேலே வந்துவிட்டான்.

வந்தவனுக்கு ஏனோ உறக்கம் வராமல் அங்கேயே உலாத்திக்கொண்டிருக்க அதன் பின் அதிரூபனும், துவாரகாவும் மேலே வந்த பின்னரும் அஷ்மி வாராமல் இருக்க அவள் என்ன செய்கிறாள் என்று கவனிக்க ஆரம்பித்தான்.

“தூங்க வரலையா மாமா?…” துவாரகா வர,

“ஹ்ம்ம், தூக்கம் வரலைடா. நீ தூங்கு…” என அவன் பார்வை அஷ்மியிடம் செல்ல தானும் பார்த்தவள்,

“இன்னுமா டாக்டர் தூங்க போகலை?…”

“ஷ்ஷ், துவா சத்தமா பேசிடாத. அவளுக்கு கேட்டுச்சு உண்டில்லைன்னு ஆக்கிடுவா…”

“நாளைக்கு மாப்பிள்ளை வீட்டுக்கு போகனும். இன்னும் தூங்காம என்ன பன்றாங்க?…”

“விடுடா, இருக்கட்டும். இன்னைக்கு அவளுக்கு மனசே சரியில்லை. அதான்…” என்ற கணவனை பார்த்தவளுக்கு வருத்தமாய் போனது.

ராஜாங்கம் மட்டுமென்ன தன் கணவனுமே அஷ்மியின் பிரிவை எப்படி தாங்கிக்கொள்ள போகிறானோ? சில நாட்கள் பழகிய தனக்கே இத்தனை வேதனை. அவர்களுக்கு எப்படி இருக்கும்?.

மேலும் அரைமணி நேரம் கடக்க வீட்டை மூன்று நான்கு முறை சுற்றி சுற்றி வந்தவள் மெதுவாய் மாடி ஏற ஆரம்பித்தாள். என்றுமில்லாமல் அவளின் முகத்தில் அப்படி ஒரு சோகம் மண்டிக்கிடந்தது.

“உங்களையெல்லாம் பார்த்தா எனக்கு கோவம் கோவமா வருது மாமா…” திடீரென துவாரகா கோவமாய் பேச,

“என்ன?…” என்று பார்த்தான்.

“யார கேட்டு டாக்டருக்கு வெளியூர்ல மாப்பிள்ளை பார்த்தீங்க. பாருங்க அவங்க முகத்தை பார்க்கவே முடியலை. ஏன் மாமா? இந்த ஊர்ல இல்லாத மாப்பிள்ளையா?…” துவாரகா அழுதேவிட்டாள்.

“இல்லடா அங்கிள்…”

“இப்ப அவரும் தானே வேதனை படறாரு. இல்லைன்னு சொல்லுங்க பார்ப்போம்…” என்று முடிந்து போனதற்கு அவனிடம் சண்டையிட அவளின் வாயை பொத்தியவன்,

“போதும் துவா, இது அங்கிள் முடிவு. அவங்க இவர்தான் மாப்பிள்ளைன்னு முடிவே பண்ணிட்டார். அதுக்கு மேல நாம என்ன சொல்ல? இப்ப கல்யாணமும் முடிஞ்சாச்சு. இனி இதை பத்தி பேசி என்ன ஆகப்போகுது?…” என்றவன் அஷ்மி அவளறைக்குள் செல்வதை பார்த்துவிட்டு தான் தங்களறைக்குள் சென்றான் துவாரகாவுடன்.

அஷ்மிதா மேலே வருவதை பார்த்த பிரசாத் சத்தமின்றி உள்ளே சென்று கட்டிலில் படுத்துக்கொள்ள வந்தவள் கதவை அடைத்துவிட்டு அவனருகே படுத்துக்கொண்டாள்.

படுத்துவிட்டாளே தவிர உறக்கம் என்பது துளியும் இல்லை. அவள் மட்டுமில்லை பிரசாத்துமே விழித்து கிடந்தான்.

அவள் கீழே நின்ற விதம், நடந்த விதம், தந்தையின் படத்தின் முன் பேசிய பாவனைகள் என்று அவனை கொஞ்சம் கொஞ்சமாய் அவளுள் ஸ்வீகரித்து சென்றது.

கண்களை மூடினால் கலக்காமான அவளின் முகம் தோன்றி அவனை இம்சிக்க அவள் புறம் புரண்டு படுத்தான். அவனின் அசைவில் கண்களை மூடிக்கொண்டாள் அஷ்மிதா.

“இவ என்னை என்னவோ செய்ய பார்க்கிறா” என்ற பார்வை பார்த்தவன் அதன் பின் சுத்தமாய் உறங்கவில்லை. ஆனால் அவனின் பார்வை பட்ட நிமிடம் கண்களை மூடியவள் சில நொடிகளில் உறக்கத்தை தழுவினாள்.

காலை பரபரப்பாய் அனைத்து வேலைகளும் நடந்துகொண்டிருந்தாலும் ஒவ்வொருவரின் மனதிலும் ஒருவித மந்தநிலை. ஏதாவது ஒரு காரணம் சொல்லி இன்னும் இரண்டு நாட்கள் இருந்துவிடமாட்டோமா என அஷ்மிதாவும், அவளை இருத்திவிட்ட மாட்டோமா என மற்றவர்களும் நினைத்துக்கொண்டிருக்க,

“மச்சான் நல்ல நேரம் முடியறதுக்குள்ள கிளம்பனும். அதே மாதிரி அம்மா சொன்ன டைமிங்ல ஊரை ரீச் பண்ணிடனும். ஏனா நாளைக்கு ஊர் திருவிழாவுக்கு கொடியேத்தறாங்க. இன்னைக்கு நாம நேரத்துக்கு போனாதான் முடியும். இல்லைனா தெரியும்ல…”

விஷ்ணு சொல்லியது அனைவருக்குமே கேட்டது தான். யாரும் பேசவில்லை. மௌனமாய் இருந்தனர்.

சீர்வரிசைகள் வண்டிகள் அடுத்தடுத்து புறப்பட சாமி கும்பிட்டுவிட்டு வாசலுக்கு வந்து நின்றனர் அனைவருமே. அஷ்மிதாவுடன் துவாரகாவும் அதிபனும் செல்வதாய் இருந்தது.

ஆனால் ராஜாங்கத்தை விட்டு அங்குமிங்கும் நகரகூடாது என்று அஷ்மிதா சொல்லியிருந்தபடியால் சங்கரனிடம் சொல்லி சந்தியாவையும், சந்தோஷையும் உடன் அனுப்ப முடிவெடுத்தனர்.

“கிளம்பறேன்ப்பா. ஹெல்த்தை கவனிச்சுகோங்க. டைமிங்க்கு சாப்பிடனும். நேரத்துக்கு தூங்கனும். இதெல்லாம் நான் சொல்லவே மாட்டேன். சொன்னா எனக்கே காமெடியா இருக்கும்ப்பா. அவ்வளவு பொறுப்பா நீன்னு எனக்கே தோணும்…”

“பார்த்துக்கோங்கப்பா…” என்று சிரிக்க மகளின் தலையை தடவியவர் மெல்லிய தலையாட்டலுடன் விடை கொடுத்தார். அகிலாவிடம் வந்தவள் அவரின் கலங்கிய விழிகளை பார்த்து,

“அகிலா ஆன்ட்டி இருக்கிற இடத்துல அழுகையா? நோ வே. இங்க இருக்கிற ஒவ்வொருத்தவங்களும் ஒவ்வொரு விதத்துலையும் குழந்தைங்க மாதிரி தான் ஆன்ட்டி. அதுலையும் உங்க மருமகன் வெளில தான் கெத்து. ரூம்க்குள்ள வெத்து. உக்காந்து குமுறி குமுறி அழுதுடுவான். அவனே அப்டி. உங்க பொண்ணை சொல்லவா வேணும்?…”

“அஷ்மி, நீங்க சந்தோஷமா போய்ட்டுவா. நான் பார்த்துக்கறேன்…”

“கண்டிப்பா நீங்க பார்த்துக்கனும் ஆன்ட்டி. அப்பாலாம்…” என ராஜாங்கத்தை பார்த்து சிரித்தவள்,

“நீங்க முடியறப்போ எல்லாம் என்னை பார்க்க வரனும். வருவீங்க தானே?…”

“கண்டிப்பாடா…”

“என்னோட முயல்க்குட்டியோட முயல்க்குட்டியை நீங்கதான் வளர்க்கனும். உங்களை மாதிரி. இப்ப இந்த குடும்பத்துக்கு நீங்க தான் எல்லாமா இருக்கனும். பெரிய பொறுப்பு தான். உங்க மேல திணிக்கப்படற பொறுப்பு…”

அவள் சொல்லியதை கேட்டு அவளின் கையை பிடித்து அழுத்திகொடுக்க துவாரகாவிடம் வந்தவள் அவளை அணைத்து விடுவித்து குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

கடைசியாக அதிபனிடம் வர அவனும் புன்னகையுடன் அவளை எதிர்கொண்டான். பலவீனமான மனநிலை. தானும் அவளை கண்ணீருடன் அனுப்ப கூடாது என்று புன்னகைத்தான்.

“வரட்டுமாடா?…”

“ஹ்ம்ம், போய்ட்டு வா அஷ்மி…” அவன் சொல்லவுமே வேகமாய் சென்று காரில் ஏறி அமர்ந்துகொண்டாள்.

அவள் வரவும் கார் கிளம்பிவிட பிரசாத்திற்கு அவள் அழுகிறாளோ என தோன்றியது. அவளின் முகத்தையே திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டு வந்தான். அவனின் பார்வையை உணர்ந்தவள் பட்டென கண்களை திறந்து,

“என் முகத்துல எதையாச்சும் தொலைச்சுட்டீங்களா?…” என கேட்க,

“என்ன?…” என்றான் புரியாமல்.

“என் மூஞ்சியை உத்து உத்து பார்த்துட்டு இருந்தீங்களே? அதான் எதையாச்சும் தொலைச்சுட்டீங்களான்னு கேட்டேன். காதுமா கேட்கல?…”

“உன்னை போய் பாவம்னு பார்த்தேன் பாரு…” என கடுப்பாகிவிட்டான் பிரசாத்.

“நான் பாவம்னு உங்கட்ட சொன்னேனா? இல்ல சொன்னேனா?…”

“ஆமாமா, உன்னை பாவம்னு சொன்னா என்னைத்தான் பாவமா பார்ப்பாங்க…”

“ஐ டோன்ட் கேர்…” அலட்சியமாய் சொல்லியவளை பார்த்து நமுட்டு சிரிப்பை உதிர்த்தவன் பின்னால் அமர்ந்திருந்த சந்தோஷை பார்த்து கண்ணடிக்க,

“இப்ப எதுக்கு இவரு என்னை சைட்டடிக்காரு?” என்று முழித்தான் அவன்.

“சந்தோஷ் தான் சொன்னாப்ல. அது கரெக்ட்டா இருக்கே…” என்று சொல்ல வேகமாய் திரும்பியவள்,

“டேய் பச்சைக்கிளி என்னடா சொன்ன?…” என்று அவனிடம் பாய,

“ஒண்ணுமே சொல்லையே. நான் சொல்லலையே?…” என அவன் புலம்ப,

“நீ சொல்லாமலா சொல்வாரு? உண்மையை சொல்லிடு. என்ன சொன்ன?…” என்று சண்டையிட அஷ்மிதாவின் மனநிலை லேசாய் மாற்றம் பெற்றது. அதற்காகவே பேசிய பிரசாத்தும் அதை கண்டு சிரித்துவிட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

அதன் பின் பேச்சும் சிரிப்புமாய் பயணத்தை கடக்க மூன்றுமணி அளவில் குறிஞ்சியூரை நெருங்கிக்கொண்டிருந்தார்கள் அவர்கள்.

நெருங்கிக்கொண்டிருந்தது ஊரை மட்டுமல்ல இதுவரை பிரசாத், நந்தினி, உதயா மட்டுமே அறிந்திருந்த அவர்களின் ரகசியத்தை நோக்கியும் தான்.

இதை பிரசாத் உணராமல் போனான்.

Advertisement