Advertisement

தென்றல் – 7

          ரத்தினசாமி இல்லத்திலிருந்து கிளம்பும் வரை பிரசாத் வாயே திறக்கவில்லை. அவனின் மௌனம் வேறு எவரையும் கவராமல் விஷ்ணுவை மட்டும் உறுத்தியது.

“என்னடா ஆச்சு? ரொம்ப டென்ஷனா இருக்கற மாதிரி தெரியுது?…”

“ப்ச், பேசாம சீக்கிரம் கிளம்ப பாரு…” என்றதும் விஷ்ணுவும் கௌரியிடம் என்ன சொன்னானோ கெளரி பத்மினியிடம் கிளம்புகிறம் என ஆரம்பிக்க,

“அதுக்குள்ளையா? ஈவ்னிங் எங்கையாவது வெளில எல்லாரும் சேர்ந்து போகலாம்னு ப்ளான் பண்ணிருந்தேன். ஜாலியா இருக்கும்ல…” ஸ்வேதா சொல்லவும்,

“அதானே, நாளைக்கு நீங்க ஊருக்கு கிளம்பிடுவீங்க. நாங்க எங்க அஷ்மியை மிஸ் பண்ணுவோம்ல. அதனால இன்னைக்கு எங்க கூடத்தான் நீங்க இருக்கனும்…”

சந்தோஷும் பிடிவாதமாய் சொல்ல கௌரியின் சங்கடமான முகத்தை பார்த்த அஷ்மியும், அதிபனும்,

“இல்லடா, அவங்களுக்கு டயர்டா இருக்கும்னு நினைக்கேன். அதான் கிளம்பறாங்க. ரெஸ்ட் எடுக்கட்டும். இன்னொரு முறை வரப்ப ஒன வீக் இங்க இருக்கற மாதிரி வர சொல்லுவோம். சரிதானே?…”

அதிரூபன் சொல்லவும் எவரும் மறுப்பு கூறவில்லை. ஆனால் முகம் வாடிவிட்டிருந்தது.

“இப்ப என்ன வெளில போனா தானா? எங்களோட வீட்டுக்கு வாங்களேன். அங்கையும் ஜாலியா இருக்கலாம்…” என்று சொல்லிய அஷ்மி பிரசாத்தின் கையை சுரண்ட அவளின் பார்வையில் ஒரு பெருமூச்சுடன்,

“ஆமாம், வாங்க.  எங்களோட இருக்கலாம்…” என்று அவனும் சொல்லவும் அனைவருக்கும் குஷியாகிவிட்டது.

“சரி, சரி. நானுமே வரேன். போகலாம். ஆனா அவங்க முன்னால போகட்டும். அங்க அவங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும். நாம ஈவ்னிங் கிளம்புவோம்…” என்றதும் பிரசாத் எழுந்துகொண்டான்.

“கிளம்பறோம் அம்மா. முடிஞ்சா நாளைக்கு எங்களோட ஊருக்கு வாங்க. எங்க ஊர் பார்த்ததில்லைல. கண்டிப்பா வரனும் நீங்க…” என்றவனுக்கு பத்மினியை அத்தனை பிடித்தது.

அவரை மட்டுமல்ல ரத்தினசாமியை தவிர்த்து அக்குடும்பத்தில் அனைவரையுமே பிடித்தது. விஷால் மீது வெறுப்பும் இல்லை. அதே நேரம் அவனின் மீது பிடித்தமும் இல்லை.

அவன் பார்வை அஷ்மியின் மீது படரும் பொழுதெல்லாம் இவனுக்குத்தான் தீ பற்றியது. அதன் கொண்டே அவனை எந்த வட்டத்திற்குள்ளும் சேர்க்கவில்லை.

“நாளைக்கு வரது கஷ்டம் தம்பி. இன்னொரு நாள் கண்டிப்பா வருவேன். நீங்க எங்க அஷ்மியை நல்லா பார்த்துக்கோங்க…” என்று சொல்ல,

“உங்க மகன் ஏன் இவ்வளவு நல்லவரா இருக்கார்ன்னு எனக்கு புரியுதும்மா. அப்படியே உங்களை கொண்டு அத்தனை குணமும். பெரியவங்கன்னா இப்படித்தான் இருக்கனும்…”

பிரசாத் சொல்லும் பொழுது அவனின் கண்கள் ரத்தினசாமியின் புறம் சென்றதையும் அதில் தெறித்த கோபத்தையும் கண்டுகொண்டான் அதிரூபன்.

அனைவரிடமும் சொல்லிக்கொண்டு விஷ்ணுவும் கௌரியும் முன்னால் சென்றுவிட அவர்களுடன் சென்ற அதிரூபனின் பார்வை மொத்தமும் பின்னால் வரும் அஷ்மி, பிரசாத்திடமே.

ரத்தினசாமி அருகில் சென்றதுமே அவரை முறைத்தவன் அஷ்மிதாவை பார்த்தான்.

“இவர்ட்ட சொல்லனுமா நீ?…” குரலில் அத்தனை கடுமை.

“ஏன்? என்ன சொல்லனும்?…” புரியாமல் அஷ்மி கேட்க,

“போய்ட்டு வரனும்னு சொல்லனும்னு நினைச்சாலும் சொல்ல கூடாதுன்னு சொல்லத்தான் கேட்டேன். கிளம்பு…” என்று அவளை முன்னால் அனுப்பி ரத்தினசாமியை பார்க்க அவருக்கோ தூரத்தில் மகன் நிற்பது புரிந்து தன் முகமாற்றத்தை மிக கவனமாக கையாண்டார்.

“சொன்னது ஞாபகம் இருக்குது தான பெருசு?…” என்றபடி தன் மீசையை முறுக்கிவிட,

“இவன் என்ன காட்டான் மாதிரி பார்க்கான். அது சரி அந்த வாயாடிக்கு இவன் தேவை தான். ஆனா அவளுக்குல இவன் சப்போர்ட் பன்றான்” இப்படியாக யோசனைகள் ஓட பிரசாத் கேட்டதற்கு பதில் சொல்லவில்லை.

“வாங்க தம்பி…” என பத்மினி அவன் அருகே வந்துவிட,

“இதோம்மா…” என்றபடி பத்மினியுடன் சென்றான்.

“அஷ்மி, அப்பா எதாச்சும் பேசினாரா?…”

“வாழ்க்கைல சில அடிகள் விழத்தான் செய்யும் அதிபா…”

“அஷ்மி…” அதிரூபன் பல்லை கடிக்க,

“என்னை பார்த்துட்டு உங்கப்பாவுக்கு என்னைக்காச்சும் வாய் ஒட்டுக்கிடந்திருக்கா? பேசினாரு, வாங்கிக்கட்டினாரு…”

“ஏன் என்கிட்டே சொல்லலை?…”

“டேய் என்னை என்னனுடா நினச்ச? உன்கிட்ட ஆஷ்மி வந்து கம்ப்ளைன்ட் பண்ணனுமா? அசிங்கமா இல்ல. இதப்போய் என்னவோ சுனாமி அறிக்கை மாதிரி வாசிக்க சொல்றியா?…”

“ஆரம்பிக்காத, மாப்பிள்ளை வராரு…”

“டேய் அதி, விஸ்வாசத்த பார்த்ததும் மயிலு மூஞ்சி ப்யூஸ் போன பல்ப் மாதிரி ஆகிடுச்சுடா. இப்பத்தான் நோட் பண்ணேன்…” என்று வேறு கோர்த்து விட,

“இவரு என்னைக்கு தான் திருந்த போறாரோ?…” என்று கடுப்பாய் சொல்ல,

“நல்லா சொன்ன போ. மயிலு என்னைக்கும் மானாக முடியவே முடியாது. அதுக்கு வாய்ப்பில்லை ராஜா…”  என்றதும் அவள் சொல்லிய விதத்தில் சிரித்துவிட்டவன் பிரசாத் வரவும் காரில் ஏறி அமர்ந்தான்.

அனைவரிடமும் சொல்லி கொண்டு அவர்கள் கிளம்பிவிட உள்ளே வந்த பத்மினியிடம்,

“அங்க யாரும் இனி போகக்கூடாது. அவ திமிருக்கு யாருமில்லாம அவ நிக்கனும்….” என்று ஆரம்பிக்க அனைவருமே நின்று பார்த்தனர்.

“என்ன ஆச்சு உங்களுக்கு?…” பத்மினி கேட்க,

“என்ன பேசினா தெரியுமா அவ? அவ மட்டுமில்ல…” என்றவர் வெளியில் சொன்னால் அசிங்கமே என நினைத்து அமைதியாக,

“நீங்க ஆரம்பிக்காம அவ பேசியிருக்க மாட்டா. சும்மா சும்மா அவளையே குறை சொல்லாதீங்க…” என்ற பத்மினி,

“தூங்கறவங்க தூங்குங்க. அஷ்மிக்கு கொஞ்சம் பலகாரம் செஞ்சிருக்கேன். எனக்கு ஹெல்ப் பண்ணனும்னா கூட வாங்க.  ஈவ்னிங் போறப்ப கொண்டு போவோம்…” என்றதும் விஷாலை தவிர அனைவரும் பத்மினியுடன் சென்றனர்.

“பார்த்தியா விஷால், உன் அம்மா மனசையும் அவ எப்படி மாத்தி வச்சிருக்கான்னு. அவளையும் அவ புருஷனையும் சும்மா விடக்கூடாதுடா…” என்று அவனின் கையை பிடிக்க அதுவரை என்றுமே ரதினசாமியிடம் கோபப்பட்டிறாதவன் முதல் முதலாய் அவரின் கையை ஆவேசத்துடன் உதறினான்.

“போதும் பெரியப்பா உங்க பேச்சு எல்லாம். எல்லாம் போச்சு, உங்களால எல்லாமே போச்சு. என் வாழ்க்கை, என் எதிர்காலம், என் ஆசை எல்லாம் எல்லாமே உங்களால போய்டுச்சு. இனி இருக்கறவங்களையாவது நிம்மதியா வாழவிடுங்க….” என்றவன் வேகமாய் அங்கிருந்து நகர்ந்துவிட்டான்.

பிரம்மை பிடித்ததை போல ரத்தினசாமி நிற்க அவரால் நம்பமுடியவில்லை. எதற்காக இவனுக்கு தன் மீது இத்தனை வெறுப்பும் கோபமும் என்று புரியவே இல்லை.  ஒருவித கரும்புகை ஒன்று அவரின் மனதை சூழ ஆரம்பித்தது.

ராஜாங்கத்தின் வீட்டிற்கு வந்ததும் கெளரி உறங்க போவதாக சொல்லி செல்ல அதிபன் பிரசாத்தை சிறிது நேரம் ஓய்வெடுக்க அனுப்பினான்.

“பாஸ்க்கு ரெஸ்ட் வேணும்னா நேராவே சொல்லலாம். எங்களை அனுப்பும் சாக்குல நீங்க…”

“அட போதும் போதும். போங்க…” என லேசான வெட்கத்துடன் அதிபன் சொல்லவும் அதை ரசித்து பார்த்தான் பிரசாத்.

“அடேய் அடங்கமாட்டியா நீ? எப்ப பார்த்தாலும் அசடு வழியிற. நியூலி மேரிட் நாங்க தான்டா…” என்று அஷ்மி அவனை கலாய்க்க,

“உன் மூஞ்சியில வெக்கத்த பார்த்துட்டாலும்…” பிரசாத் அவளிடம் கிசுகிசுக்க அதில் அவளின் முகம் மிளகாயாய் சிவந்து போனது.

“வெட்கம் தானே? பட்டுட்டா போச்சு…” என்று சொல்லவும் சிரித்துக்கொண்டே அவ்விடம் விட்டு நகர்ந்தான் அதிரூபன்.

“மேல வாங்க ஹஸ்…” என்று அவள் முன்னால் மாடிப்படியில் நடக்க அவளின் பின்னால் நடந்தவனின் கண்கள் ஏறுக்கு மாறாய் தாவ அவனின் இதயம் தப்பி துடித்தது.

“ஏய் நில்லு…” என்றவன் அஷ்மி நின்று பார்த்ததும்,

“நான் முன்னால போறேன். நீ மெதுவா வா…” என்று குடுகுடுவென ஓடவே செய்தான்.

“விஸ்வாசம் ஏன் இந்த ஓட்டம் ஓடுது? ம்ஹூம். என்றபடி அவள் செல்ல அவன் அதற்குள் படுத்திருந்தான். அவனை பார்த்ததும்,

“இதுக்கா இந்த ஓட்டம்? நம்ம முடியலையே” என நினைத்தபடி அவனின் முகத்தின் வெகு அருகே குனிந்தவள்,

“ஹஸ், ஹஸ்…” என்று ஹஸ்கி வாய்ஸில் அழைக்க,

“எனக்கு தூக்கம் வருது. டோன்ட் டிஸ்டர்ப் மீ…” என்று கண்களை இருக்கமாய் மூடிக்கொண்டான்.

ஆவான் அவளின் நெருக்கம் அவன் நாசி உணர்ந்தது. அவளின் வாசனை மூச்சுக்குழல் வழியாய் நுரையீரலை நிறைக்க உள்ளுக்குள் மத்தாப்பு சிதறல்கள்.

“வசியம் பன்றாளே? இவ மேல நான் செம்ம காண்டுல இருக்கேன்” என நினைத்தவன் கண்களை திறக்கவே இல்லை.

அவன் படுத்திருந்த விதமும், பிடிவாதமாய் கண்களை மூடியிருந்ததும் அஷ்மியுனுள் ஒருவித சந்தோஷ கிளர்ச்சியை தூண்ட அவனை இன்னும் சீண்டி பார்க்க தூண்டியது.

“மிஸ்டர் ஹஸ்…” இன்னும் அழுத்தமாய் அவனை அழைக்க,

“இவ அடங்கமாட்டா” என கோபமாய் எழுந்துகொள்ள தடுமாறி பின்னால் விழுந்தாள் அஷ்மிதா. அவள் கீழே விழுந்ததை பார்த்தும் தூக்கி நிறுத்த தோன்றாமல் அவன் அப்படியே நிற்க,

“யோவ் சொல்லிட்டு எழுந்துக்க மாட்டியா? ஆள பாரு…” என்று திட்டிக்கொண்டே எழுந்து நிற்க அதுவரை இருந்த மயக்கம் அவனின் கண்களில் மிச்சமிருந்தாலும் அதை ஒதுக்கிவிட்டு,

“உனக்கு அந்த ஆள் கூட என்ன பிரச்சனை?…” என நேரடியாக இப்பொழுது கேட்டுவிட,

“எந்த ஆளை சொல்றீங்க?…”

“அதுதான் அதி பாஸ் வீட்டில இருந்த ஆள். அவரோட அப்பா…”

“ஒஹ் மயிலா? ஒரு பிரச்சனையும் இல்லையே. ஏன்?…” ஒன்றும் அறியாத அப்பாவியை போல சொல்லவும் பிரசாத்தின் கோபம் சட்டென வந்தது.

“பொய்யா சொல்ற?…” என வேகமாய் அவள் முன்னால் நிற்க அஷ்மிக்கு புரிந்துபோனது.

“ஹஸ்?…”

“ப்ச், அந்தாள் தான் சரியில்லன்னு உனக்கு முன்னவே தெரிஞ்சிருக்கு தானே? நீயும் எதுக்கு மல்லுக்கு நிக்கிற?…”

“சரியில்லன்னா? நான் என்ன செஞ்சிருக்கனும்னு நினைக்கீங்க?…” அஷ்மிதாவும் விளையாட்டுத்தனத்தை கைவிட்டுவிட்டு அவனின் கோபத்திற்கு சளைக்காத கோபத்துடன் எதிர் கேள்வி கேட்டாள்.

“விலகி இருக்கனும். அந்த ஆள் உன்னை பேசினா அவன் பேச்சு சரியில்லைனா நீ எதுக்கு அந்த இடத்துல இருக்க?…”

“ஓஹ் அதுக்காக, என்னை பயந்து அதுவும் அந்த மயிலுக்கு பயந்து நான் பேசாம இருக்கனுமா?…”

“அதுக்கு பேர் பயம்னு கிடையாது. சமயோசிதத்தனம். நின்னா தானே பேச்சு வரும்? ஏன் நிக்கனும்? ஏன் பேசனும்?. விலகிட வேண்டியது தானே? தனியா ..”

“என்னால அது முடியாது. நான் பேசுவேன். எனக்கு தப்புன்னு பட்டா கேட்பேன். அதும் மயிலுக்கிட்ட நான். அது என்கிட்டே எப்பவும் நடக்காது…”

“நடக்கனும். நான் சொல்றேன். இனியும் நீ இப்படி துடுக்கா பேசறதை குறைச்சிக்கோ…”

“என்னால மாத்திக்க முடியாது. நான் எந்த தப்பும் பண்ணலை. நானாவும் வம்புக்கு போகலை…”

அஷ்மிதாவின் முகத்தில் இருந்த பிடிவாதம் பிரசாத்திற்கு பழைய நினைவுகளை கிளற ஒரு நிமிடம் அருவியூரில் நந்தினி தன் முன் ஆவேசமாய் நின்ற நிகழ்வு தோன்றி மறைந்தது.

இந்த கோபமும், கொந்தளிப்பும் அளவுக்கு மீரா அவசியமில்லை. அஷ்மியை இதிலிருந்து மாற்றவேண்டும் என நினைத்தான். அது அவளுக்கு மட்டுமல்ல தன் எதிர்காலத்திற்கும் நல்லது என்று எண்ணம் கொண்டவன்,

“ஒரு இடம் சரியில்லைன்னு அங்க போய் நின்னுட்டே சொல்றதுக்கு பதில் சரியில்லைன்னு தெரிஞ்சதும் அங்க இருந்து விலகிடறது தான் புத்திசாலித்தனம் அஷ்மிதா…”

அவளது பெயர். அத்தனை அழுத்தம் திருத்தமாக அவனது வார்த்தைகளாக. இதுவரை உதயா, நந்தினி குழந்தையை கூட அப்பெயரிட்டு அழைத்ததில்லை அவன்.

ஏனோ அதை குழந்தைக்கு என தேர்ந்தெடுத்ததிலிருந்து அதன் மேல் ஒரு வெறுப்பு. சொல்லவே கூடாது என்றிருந்தான். சொல்லிவிட்டான் மனைவிக்காக.

“உங்களுக்கு மயிலு பத்தி தெரியாது ஹஸ். அந்தாளு…”

அஷ்மிதாவிற்கு அவன் அவளை பெயர் சொல்லி அழைத்ததெல்லாம் காதில் ஏறவே இல்லை. ரத்தினசாமி மீதான கோபம் மட்டுமே பிரதானமாய் இருந்தது அவளிடத்தில்.

“எனக்கு தெரிய வேண்டாம். தெரிஞ்சுக்க நினைக்கலை. ஆனா உன்ன எதாச்சும் பண்ண நினைச்சா அது அந்தாளுக்கு தான் நல்லதில்ல. நான் பார்த்துட்டு சும்மாவும் இருக்க மாட்டேன். அதுக்கப்பறம் உனக்கும் அதி பாஸ்க்குமான ப்ரெண்ட்ஷிப்…”

“ஹா ஹா ஹா என்னை எதாச்சும் பண்ண நினைச்சு நீங்க மயிலை வச்சு செஞ்சு அது அதிக்கு கோவம் வந்து ஹா ஹா. போங்க ஹஸ். நீங்க சரியான பால்டப்பி…” என்றவள்,

“அப்ப வரப்போ மயிலை மிரட்டினீங்களா? அதான் மயிலுக்கு கோவமா?…”

“நான் என்ன சொல்றேன், நீ என்ன பேசற?…” அவனின் எரிச்சலில்,

“இங்க பாருங்க ஹஸ், கதையில நீங்க இப்பத்தான் என்ட்ரி. நம்ம கல்யாணத்துக்கு முன்ன நடந்தது எதுவுமே உங்களுக்கு தெரியாது. மயிலால என்னை ஒன்னும் பண்ணவும் முடியாது. சும்மா பயந்துட்டு இருக்காதீங்க…”

“உன்கிட்ட போய் அட்வைஸ் பண்ணேன் பாரு…”

“நீங்க பன்றது அட்வைஸ் மாதிரி இல்ல. ஆடர் மாதிரி இருக்கு. அட்வைஸ்ஸோ, ஆடரோ எதுக்கும் என்னால கட்டுப்பட முடியாது…” விட்டேற்றியாக அஷ்மி சொல்ல,

“ஆமா உன்னோட கட்டுப்பாட்டோட அளவு தான் எனக்கு தெரியுமே. கல்யாணம் ஆனதையே மறைச்சு என்னை மேரேஜ் பண்ணிக்க வந்தவ தான நீ…”

மீண்டும் அவன் ஆரம்பித்த இத்தட்டில் வந்து நிற்க அவனை அழுத்தமாய் பார்த்தாள் அஷ்மிதா.

“என்ன லுக்கு? உண்மையை சொன்னா கோவம் வருதோ?…”

“எனக்கா? நான் எங்க கோவப்பட்டேன்?…” கூலாக கேட்க,

“பின்ன எதுக்கு இந்த பார்வை?…”

“நீ பை பெர்த் இப்படித்தானா? இல்ல பாதில மண்டைல அடிகிடி பட்டுடுச்சோன்னு யோசிச்சேன்…”

“ஏய்…” என அடிக்க வருவதை போல அவள் மேல் பாய,

“என்ன ஏய்? உனக்கு ஒருதடவை சொன்னா புரியாதா? என்னை பொறுத்தவரை இப்ப நடந்தது தான் மேரேஜ். அன்னைக்கு நடந்தது எல்லாம் ஒரு ஆக்சிடென்ட். ஃபுல்லா வாஷவுட் பண்ணிட்டேன். மாப்பிள்ளை நீன்னு தெரிஞ்சது. யாரா இருந்தாலும் ஓகேன்ற மைண்ட்செட்க்கு நான் ஏற்கனவே வந்ததுனால எனக்கு நீன்னு தெரிஞ்சதும் ஒரு ஈகர். என்னை பார்த்ததும் உன்னோட ரியாக்ஷன் எப்டி இருக்கும்னு. ஜஸ்ட், ஜஸ்ட்…”

“இதை எல்லாத்தையும் உன்கிட்ட அன்னைக்கும் சொன்னேன். நேத்தும் இதை பத்தி பேசியாச்சு. திரும்பவும் என்னை அக்யூஸ்ட் மாதிரி பேசின அவ்வளோ தான்…” அஷ்மி பேச பேச கோபம் அதிகமானது பிரசாத்திற்கு.

“என்னோடான திருமணம் இவளுக்கு ஒன்றுமில்லையாமாம்?  எவ்வித தாக்கத்தையும் கொடுக்கவில்லையாமாம். ஆனால் எனக்கப்படி இல்லையே” என உள்ளுக்குள் குமைந்தவன்,

“உன்னை மாதிரி நான் நினைக்கலையே. நான்….”

“நீ, நீன்னா? என்னனு நினைச்ச? என்னை பொண்டாட்டியா நினைச்சிருந்தா என்னை தேடினியா? இல்லை இந்த மேரேஜ் ப்ரபோசலை அவாய்ட் பண்ணுனியா? தாலி கட்டற வரைக்கும் வந்துட்டு நீ என்னை பேசற?. இனி ஒரு வார்த்தை இப்படி பேசின பார்த்துக்கோ…”

அஷ்மிதா விரலை நீட்டி எச்சரிக்கும் விதத்தில் சொல்லவும் பிரசாத் கோபத்திற்கும், குற்றவுணர்விற்கும் நடுவில் மாட்டிக்கொண்டவன் அங்கே நிற்க முடியாமல் தடுமாறி வெளியேறிவிட்டான்.

அவன் சென்றதும் புயலடித்து ஓய்ந்ததை போல இருக்க வாழ்க்கை முழுவதும் வாக்குவாததிலேயே சென்றுவிடுமோ என்று ஒரு நொடிதான் தோன்றியது அஷ்மிதாவிற்கு.

அதன்பின் விஸ்வாசம் எங்க போய்ட போறான்? எதுவானாலும் சமாளிப்போம் என்னும் வழக்கமான உற்சாகம் அவளை தழுவ தண்ணீரை எடுத்து குடித்தாள் அவள். அதிரூபனும் குழந்தையுடன் அதே நேரம் அங்கு வந்துவிட,

“வாடா அதி, பொண்டாட்டி தூங்கறாளாக்கும்?…” என்றபடி குழந்தையை வாங்கிக்கொள்ள,

“என்ன அஷ்மி பிரசாத் கோவமா போற மாதிரி தெரியுது?…” அதிபனின் முகத்தில் கவலை பரவ,

“ஹ்ம்ம், வேதாளம் மாங்காய் மரம் ஏறிடுச்சு…” என்று சிரிக்க,

“வேதாளம் எப்ப மாங்காய் மரமெல்லாம் ஏறுதாம்?…” அவளின் சிரிப்பை கண்டு அவனுக்கும் தானே புன்னகை வந்தது.

“எனக்கு மாங்காய், மாம்பழம் புடிக்கும். அப்ப என்னோட வேதாளம் மாங்காய்மரம் தான ஏறனும்?…” என கண்ணடிக்க,

“பாவம் பிரசாத்…” அதியும் கலகலத்து சிரிக்க,

“பாவமா தான் இருக்கு. ஆனாலும் மரம் ஏறரப்ப கோவமாவும் இருக்கு…” என்றவளை பார்த்தவன்,

“அஷ்மி…” எதுவோ சொல்ல வர,

“இது நீயும், அப்பாவும் எனக்கு அமைச்சு குடுத்த வாழ்க்கை. இதை என்னைக்கு தொலைச்சுட மாட்டேன் அதி. நீ பீல் பண்ணாத…” என அவனின் சஞ்சலத்தை போக்கியவள்,

“உனக்கொரு உண்மையை சொல்லட்டுமா அதி, இப்போலாம் விஸ்வாசம் என்கிட்டே கோவமா பேசறப்ப பட்டாம்பூச்சி பறக்கத நான் லைட்டா பீல் பன்றேன்டா…” என்றவளை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவளின் நண்பனுக்கு.

“அஷ்மி…” அவனின் குரலில் சந்தோஷக்கூத்தாட,

“அடங்குடா. இது மஞ்சள் கயிறு மேஜிக் லாஜிக் இதெல்லாமான்னு தெரியலை. ஹஸ்பண்ட் இந்த ரிலேஷன்ஷிப்ல உள்ள ஒரு க்ரேஸ் குடுத்த பீலா? அதுவும் புரியலை. ஆனா, ஹ்ம்ம். ஹ்ம்ம்…” என்று இழுத்துபிடித்து சொல்ல இந்த அஷ்மி அவனுக்கு புதிது.

“அப்போ உன் வேதாளத்துட்ட சொல்லிட வேண்டியது தானே?…” அதிபனுக்கு அப்படி ஒரு சிரிப்பு.

“சொல்லனும், ஆனா இப்ப இல்லை. முதல்ல நான் கன்பார்ம் பண்ணிக்கறேன்…” என்றவளுக்கு தெரியாது அதற்கான வாய்ப்பை அவன் தரப்போவதில்லை என்று.

Advertisement