Advertisement

தென்றல் – 6
            பிரசாத் காரை விட்டு இறங்கியதுமே விஷாலுக்கு தூக்கிவாரிபோட்டது. அதற்கடுத்ததாய் அஷ்மிதா இறங்கவும் அங்கே நிற்கமுடியாமல் தடுமாறிப்போனான்.
அவனின் முகத்தை வைத்தே அவனின் எண்ணவோட்டத்தை கண்டுகொண்டாள் அஷ்மிதா.
“இவன் என்ன பெரிய தேவதாஸ் மாதிரி லுக் விடறான். இவனுக்கு அம்புட்டு சீன இல்லையே…” என முறைப்பாய் பார்க்க, பிரசாத்தும் விஷாலை பார்த்தான். அவனின் பார்வையில் பிரசாத் பார்வை கூர்மையடைந்தது.
அனைத்தையும் கடந்து வந்தவனால் விஷாலின் தவிப்பும், தவிர்ப்புக்குமிடையே உள்ள போராட்டத்தை கண்டுகொண்டான். மனதினுள் எதுவோ தோன்ற அவனை பார்வையால் அளந்துகொண்டே முன்னே நடக்க,
“விஷால் எங்க கிளம்பிட்ட?…” என அதிரூபன் கேட்க,
“அண்ணா ஒரு ப்ரெண்ட பார்க்க போலாம்னு. போன் பண்ணியிருந்தான். அதான் கிளம்பிட்டேன்…” என்றதற்கு,
“அஷ்மி வந்திருக்கா, கிளம்பறேன்ற? வா உள்ள போகலாம்…” என்றுவிட்டு பிரசாத்தையும் அஷ்மியையும் உள்ளே அழைத்தவன் விஷ்ணு கௌரியையும் அழைத்தான்.
அதற்குள் சத்தம் கேட்டு பத்மினி ஆரத்தி தட்டுடன் வேகவேகமாய் வந்துவிட்டார். உடன் ஸ்வேதாவும், சந்தியாவும்.
பிரசாத்திற்கு இந்த இரண்டு நாட்களிலேயே அதிரூபன் அஷ்மிதாவின் குடும்பத்திற்கு எத்தனை முக்கியம் என்பதையும் கண்டுகொண்டான். இரு குடும்பதிற்கிடையேயான பாசப்பிணைப்பையும் புரிந்துகொண்டான்.
“உள்ள வாங்க மாப்பிள்ளை, வா அஷ்மி…” என்று அழைத்த பத்மினி அதிபனை கண்ணை காட்ட,
“அப்பா…” என்ற அழைப்பு முடிவதற்குள் வந்து நின்றார் ரத்தினசாமி.
“அதிபா, அப்பா இங்க இருக்கேன்யா…” என்றவர் மகனின் பார்வை உணர்ந்து,
“வாங்க எல்லாரும் வாங்க…” என்று அழைக்கவும் அஷ்மியின் நக்கல் பார்வை கூடியது.
அவர்களை உள்ளே அழைத்துவிட்டு பெரியவர்கள் உள்ளே செல்ல மற்றவர்கள் ஹாலில் சென்று அமர,
“ஏன்டா அதி, இந்த மயிலு அப்பான்னு கேட்டதும் அதிபான்னு அட்டேன்ஷன்ல வந்து நிக்கிறதை எப்பதான் நிறுத்த போறாரோ?…”
அவனின் காதில் கிசுகிசுக்க அவளின் பேச்சில் வழக்கமாய் அவளின் தலையில் கொட்டுவைக்க போனவன் பிரசாத்தை பார்த்து கையை கீழே இறக்கவும் அஷ்மியின் இதயம் ஒரு நொடி துடித்து போனது.
“என்னடா?…” என பார்த்தவள் பார்வையில் நொடியில் ஒரு சஞ்சலம் பரவ,
“நத்திங்…” என்ற அதிபன் இனி இது போன்ற சீண்டல்களை குறைத்துக்கொள்ள வேண்டும் என நினைத்துக்கொண்டிருக்க அவனுக்குமே அது பெரும் வலி தான்.
“ஏன் நிறுத்திடீங்கன்னு கொட்டை கேட்டு வாங்கறாங்கள. எனக்கும் சேர்த்தே ரெண்டு கொட்டு கொட்டுங்க. கொஞ்சம் சந்தோஷமா இருக்கும்…” என புன்னகையுடன் சொல்லிய விதம் அதிரூபனுக்கு அத்தனை மகிழ்வை தந்தது.
வேகமாய் அவனை அணைத்துக்கொண்ட அதிரூபனின் கண்கள் கலங்க,
“என்ன பாஸ் இதுக்கு இவ்வளோ எமோஷன்? உங்க ப்ரெண்ட்ஷிப் என்னைக்கு போல இருக்கட்டும். நான் ஒருத்தன் வந்திட்டதால எதையும் மாத்தனும்னு நினைக்காதீங்க. நீங்க நீங்களா இருக்கனும். அதுதான் சரி. மாறனும்னு நினைச்சா சிலருக்கு வலி, சிலருக்கு கேள்வி. ஏன் எதுக்குன்னு?…”
“பெரிய விஷயத்தை ரொம்ப சாதாரணமா சொல்லிட்டீங்க. எனக்கு ரொம்ப சந்தோஷம் பிரசாத். யூ ஆர் க்ரேட் மேன்…” என கை குலுக்க,
“ஏன்டா இதுக்காகவா நீ டிஸ்டன்ஸ் கீப் அப் பண்ண நினைச்ச? இனி என்கிட்டே பேசாத…” என அதிரூபனின் கையை கிள்ளியவள் கோபமாய் நகர,
“உங்கபாடு அவ பாடு. போய் சமாதானம் செய்ங்க…” என அதிரூபனை அனுப்பிய பிரசாத் அஷ்மியின் கோபத்தையும், அதிரூபனின் கெஞ்சலையும் பார்த்துக்கொண்டே வர,
“உனக்குள்ள வானத்தை போல மனம் படைச்ச மன்னவன் இருப்பான்னு நான் நினைக்கவே இல்லைடா மச்சான். அம்புட்டு நல்லவனாடா நீயி?…” விஷ்ணு இழுக்க,
“உன்னை தங்கச்சி கூட தான போக சொன்னேன்? உன்னை யாருடா இங்க வர சொன்னா?…”
“மனசாட்சியே இல்லாம பேசாதடா? ஹாலுக்கும்  நீ நிக்கிறதுக்கும் என்ன நாநூறடி தூரமாடா? நாலே அடிதான்டா…”
“சரி வா போகலாம்…” என அவனுடன் சென்று சோபாவில் அமர்ந்தவனுக்கு தன்னையறியாமல் விஷாலின் மீது பார்வை சென்றது.
அதிரூபனுடன் சண்டையிட்டுகொண்டிருந்தவளை பார்க்கவும் செய்து பாராமல் இருக்கவும் முயற்சி செய்தும் அவனின் நிலை பரிதாபமாய் இருந்தது.
“இவனுக்கு இந்த வெள்ளெலி மேல எதாச்சும்…” என்று எண்ணத்துடன் அவனை பார்க்க பிரசாத்தின் பார்வையை உணர்ந்தவன் அவனை பார்த்ததும் பிடிபட்ட உணர்வின் திருதிருவென முழித்தான்.
“அப்பா நாம நினச்சதுதா…” என்று நினைக்கும் போதே பிரசாத்திற்கு சுறுசுறுவென உள்ளுக்குள் ஏதோ கருகியது.
விஷாலை பார்த்து என்னவென? பார்வையால் கேட்க என்னவென அவனும் பதில் சொல்லுவான்? இல்லை என்பது போல தலையசைத்துவிட்டு சந்தோஷிடம் திரும்பி பேச ஆரம்பித்தான்.
ஒரு வழியாக அஷ்மியை சமாதானம் செய்தபின் அவனுடன் கிட்சனுக்குள் சென்றவள் அங்கே பத்மினி செய்து வைத்திருக்கும் பதார்த்தங்களை பார்த்துவிட்டு,
“உங்களுக்கு ஏன் ஆன்ட்டி இந்த வேலை? பேசாம ஹோட்டல்ல ஆடர் பண்ணிருக்கலாம்ல. இல்ல ஐட்டம்ஸ் கம்மி பண்ணியிருக்கனும். ரெண்டும் இல்லை….” என்று சொல்லி இடுப்பில் கை வைக்க,
“அதுக்கென்னடா? தினமுமா செய்ய போறேன்? இனி அடுத்து எப்போ சென்னை வருவன்னு தெரியாது. அதுதான் இன்னைக்கு உனக்கு பிடிச்சதா செஞ்சிருக்கேன்…” என்றவர் ஸ்வேதாவை அழைக்க,
“அதி நீ போய் மாப்பிள்ளை கூட பேசிட்டு இரு. அவங்க தனியா பீல் பண்ண கூடாது பாரு…” என்று அவனை அனுப்பிவிட்டு ஸ்வேதா வரவும் அவளிடம் ஒரு ட்ரேயை கொடுக்க,
“இன்னைக்கு நான் கொண்டு போறேனே ஆன்ட்டி…”
“வேண்டாம் அஷ்மி. என்ன மனநிலைல இருக்கான்னு தெரியலை. ஸ்வேதா கொண்டு போனா கொஞ்சம் அமைதியா நடந்துப்பா…”
“இல்லை நான் தான் கொண்டு போவேன். ஊருக்கு போறேன்ல சொல்லிட்டு கிளம்பறேன். நான் பார்த்துக்கறேன்…” என ஸ்வேதாவிடம் அதை வாங்கிக்கொள்ள,
“நீயும் கூட போ ஸ்வேதா, பார்த்துக்க…” என அனுப்பவும் இருவருமாக மாடியறைக்கு சென்றனர்.
கீழே அமர்ந்திருந்த வீட்டினருக்கு அவர்கள் எங்கே போகிறார்கள் என்று தெரிந்து பார்க்க, பிரசாத் குடும்பத்திற்கோ ஒன்றும் புரியவில்லை எதற்கு இந்த திடீர் மௌனம் என்று.
“என்னோட அத்தைக்கு தான் சாப்பாடு கொண்டு போறாங்க. அவங்களுக்கு உடம்பு சரியில்லை. அதான்…” அதிரூபன் சொல்ல ரத்தினசாமிக்கு கோபம் அப்படி வந்தது.
“என் தங்கச்சியை பேசற பேச்செல்லாம் பேசிட்டு இப்ப பெரிய இவளாட்டம் சாப்பாடா குடுக்க போற? வா இனி இந்த வீட்டுக்கு வரமுடியாத அளவுக்கு உனக்கு பாடம் சொல்றேன்…” என கோபத்துடன் பார்த்தார்.
ஸ்வேதா அரை கதவை தட்டியதுமே வந்து திறந்த அன்னபூரணியை பார்த்து அஷ்மிதா திகைத்துபோனாள்.
அவரிடம் எந்தவிதமான மாற்றமும் இல்லை. எப்பொழுதும் போல வெகு நேர்த்தியான புடவைக்கட்டு, தலைவாரி சுத்தபத்தமாக இருந்தார். நெற்றியில் குங்குமம் மட்டும் இல்லை. அவ்வளவே. இன்றளவும் அப்படியே இருக்கிறார்.
வைத்தியநாதன் இறந்த வீட்டில் பார்த்தது. அதன் பின் அவள் நினைத்தாலும் பார்க்க முடியவில்லை. அன்னபூரணி அதற்கு இடமளிக்கவும் இல்லை. இத்தனை ஏன் அதிரூபனே இன்னும் அன்னபூரணியை பார்க்க முடியவில்லை.
அன்னபூரணியின் பிடிவாதம் அந்தளவிற்கு இருந்தது. யாராலும் மாற்றமுடியவில்லை.
“என்ன ஸ்வேதா?…” என கேட்டாலும் பார்வை அஷ்மிதாவிடம் இருந்தது.
“ஹாய் ஆன்ட்டி, ஹவ் ஆர் யூ?…” என சிரித்த முகமாக கேட்க,
“நல்லா இருக்கேன். என்ன வேணும்?…” பட்டென பேச,
“நான் ஊருக்கு கிளம்பறேன். அதான் உங்கட்ட சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்…”
“எனக்கு தேவையில்லாத விஷயத்தை என்கிட்டே ஏன் சொல்ற?…” என்றவர்,
“ஸ்வேதா…” என பார்த்ததும் அவள் அஷ்மியின் கையில் இருந்த ட்ரேயை வாங்கி அன்னபூரணியிடம் கொடுத்துவிட்டு அஷ்மிதாவை கையை பிடித்து கீழே இழுத்துவந்தாள்.
“நல்ல வேலை இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா அம்மாவுக்கு கோபம் வந்துடும். நானா இருந்தாலும் வேற எதுவும் பேசமாட்டாங்க. இப்ப வரை அவங்க மாறவே இல்லை. என்னால அவங்கட்ட எதுவுமே ஷேர் பண்ணிக்க முடியலை தெரியுமா?…” என சிறுபிள்ளையாய் ஸ்வேதா விசும்ப அவளை அணைத்துக்கொண்டாள் அஷ்மிதா.
“எனக்கு தாயே இல்லை. இவளுக்கு இருந்தும் இல்லை. அப்படி என்னதான் புருஷன் பைத்தியமோ? செத்த பின்னலையும் அவரை விடாம துரத்துறாங்க இந்தம்மா. அவர் ஆத்மா கூட இவங்க டார்ச்சர்ல சாந்தி அடையாது போல” என நினைத்தவள்,
“ச்சு ஸ்வே பேபி, நீ சிடுசிடுன்னு இருந்தா தான் க்யூட்டா இருக்கும். என்கூட சண்டை போட்டுட்டு மல்லுக்கு நின்னா. இதுக்கு போய் அழலாமா? இன்னும் எவ்வளவு நாள் அம்மா இப்படியே இருப்பாங்க? சீக்கிரமே சரியாகிடுவாங்க…” என்றவள்,
“உனக்கு ஏதாவது ஷேர் பண்ணனும்னா அம்மாவுக்கு அம்மாவா உன்னோட பத்மிம்மா இருக்காங்க. துவா அண்ணி இருக்காங்க. சந்தியா அக்கா இருக்காங்க. இவங்கட்ட ஷேர் பண்ணி போர் அடிச்சுட்டா நான் இருக்கேன். ஒரு கால் பண்ணு, கடலை வறுக்கலாம். தீய்ஞ்சு போற அளவுக்கு…” என்று கண்ணடிக்க அதில் கலகலப்பாய் சிரித்தவள்,
“நான் போய் டேபிள்ல அரேஞ்ச் பன்றேன்….” என ஓட,
“ஏய் இரு, இரு. அத நாங்க பார்த்துக்கறோம். நீ போய் உன் அண்ணாவோட பேசிட்டு இரு…” என அனுப்பிவிட்டு மீண்டும் பத்மினியிடம் சென்றாள்.
“இன்னும் எவ்வளவு நாளைக்கு ஆன்ட்டி பூரணி ஆன்ட்டியை இப்படியே வச்சிருக்க போறீங்க?…” என வந்ததும் கேட்க,
“என்ன சொல்ற அஷ்மி?…” அவர் புரியாமல் பார்த்தார்.
“வைத்தி அங்கிள் இருக்கும் போதுதான் அவரே உலகம்னு இருந்து அவரையும் வேற யாரயும் நினைக்கவிடாம பண்ணினாங்க. இப்பவும் செத்தவரை நினைச்சுட்டு புள்ளைங்களை அநாதையாக்க பார்க்கிறாங்க. என்ன மனுஷி அவங்க?…”
“அஷ்மி மெதுவா பேசு. அவருக்கு கேட்டது, ஆடிடுவாரு…”
“எங்க என் முன்னால ஆட சொல்லுங்க பார்ப்போம்…” அவளும் கையில் இருந்த வளையலை பின்னால் தள்ளி கையை முறுக்க அதை கண்டு சிரித்த பத்மினி,
“உங்க சண்டை என்னைக்கு தான் தீருமோ?…” என்று சொல்லி,
“நானும் சொலி பார்த்துட்டேன்மா. இவர் என்னமோ தங்கச்சி விருப்பப்படி இருக்கட்டும்னு சொல்லி அதுக்கு மேல பிடிவாதமா இருக்காரு. நான் யாருக்குன்னு பார்க்க. புள்ளைங்க வெளிக்காட்டிக்கலைனாலும் உள்ளுக்குள்ள மருகத்தான் செய்யுதுங்க…”
“நான் ஒரு சைக்யாடிஸ்ட் சொல்லட்டுமா ஆன்ட்டி. வீட்டுக்கே வர சொல்லலாம். மிஸ்டர் மயிலுக்கு தெரியாம. ரிஸ்க் தான். இருந்தாலும் ட்ரை பண்ணுவோம்…”
“அதி செஞ்சுட்டான்மா. அதுக்கே பூரணி ஆர்பாட்டம் பண்ணிட்டா. வீடே களேபரமா போச்சு…”
“ப்ச், போங்க ஆன்ட்டி…”
“இருக்கட்டும்மா. அதுதான் தலைவிதின்னா அப்படியே இருந்துட்டு போகட்டும். தினமும் எழுந்ததும் குளிச்சுட்டு வருவா. அவளே வாங்கி வச்சிருக்கற பூவை வைத்தி அண்ணன் படத்துக்கு போட்டு விளக்கேத்தி கும்பிட்டுட்டு மாடிக்கு போய்டுவா. அவ நடமாட்டம் வீட்டுக்குள்ள அவ்வளவு தான். பூஜை ரூம்க்கு கூட வரமாட்டா. சாமி கும்பிடறதையே நிறுத்திட்டா. இப்படியும் ஒரு பொண்ணு இருப்பாளா?…”
பத்மினி சொல்ல சொல்ல அன்னபூரணியின் மேல் எரிச்சல் தான் வந்தது அஷ்மிதாவிற்கு.
“எப்போதும், தன் சுகம், தன் சுயநலம், தன் மனநிலை. இதுக்கு மட்டுமே முக்கியத்துவம் குடுத்து குடுத்து இப்படி யாரையும் தேவையில்லைன்னு இருக்காங்க. அதுக்கு அவங்க போக்குல விட்ட இந்த குடும்பமும் ஒரு காரணம். முக்கியமா மயிலு…” என்று கடுகடுக்க,
“விடுடா. இன்னைக்கு நீ சந்தோஷமா இருக்கனும். இதையெல்லாம் நினைச்சு மனசு வருத்தப்பட்டுக்காத. விடு. வா போய் சாப்பிடலாம்…” என்று சொல்லி அனைத்தையும் எடுத்துவைத்தனர்.
ஹாலில் அமர்ந்திருந்தவர்களை அழைக்க அனைவருக்கும் சந்தியாவும் பத்மினியும் பரிமாற சங்கரனும் வந்துவிட்டார் அங்கே. பிரசாத்திடம் மரியாதை நிமித்தம் பேசிவிட்டு அஷ்மியையும் வாழ்த்திவிட்டு சாப்பிட அமர ரத்தினசாமியால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை.
அஷ்மிதா எப்போது தனியாக வருவாள் என எதிர்பார்த்து காத்திருந்தார். அதிரூபனுக்காக முகத்தை சந்தோஷமாய் சிரிப்புடன் வைத்துகொள்வது அதைவிட கடினமாக இருந்தது அவருக்கு.
சாப்பிட்டு முடித்து கை கழுவிவிட்டு அனைவரும் வந்து அமர பலமான விருந்தென்பதால் அனைவருக்கும் லெமன் ஜூஸ் எடுத்துவர பத்மினியுடன் சந்தியாவும் ஸ்வேதாவும் செல்ல, வீட்டை சுற்றிகாட்ட சந்தோஷ் அர்னவுடன் விஷ்ணு கெளரி பிரசாத் செல்ல விஷாலுடன் அலுவலகம் சம்மந்தமாக பேச அதிரூபன் சென்றுவிட்டான்.
சங்கரனுடன் அஷ்மிதா பேசிக்கொண்டிருக்க அதற்குள் ஒரு போன் வந்துவிட்டதென சங்கரனும் எழுந்து செல்ல இதுதான் சமயம் என ரத்தினசாமி அஷ்மிதாவை பார்த்தார்.
“மயிலு, பார்வையெல்லாம் பலமா இருக்கே? என்ன விஷயம்?…” என சாதாரணமாக தான் கேட்டாள். வம்பிழுக்கும் எண்ணமெல்லாம் இல்லை அவளுக்கு. மனம் முழுவதும் அன்னபூரணியை எப்படி சரிசெய்வது என்று இருந்தது.
இப்பொழுது ரத்தினசாமியின் பார்வையில் எதுவோ சொல்ல போகிறார் என்பதை புரிந்து கேட்க அதற்குள் பத்மினி வந்துவிட்டார் ஜூஸ் தம்ளருடன்.
“ஏன் ஆன்ட்டி ஸ்ட்ரா எல்லாம் போட்டிருக்கீங்க? நான் அப்படியே குடிச்சிடறேன்…” என்று சொல்லி சிரிக்க,
“சரிடாம்மா, நான் போய் மத்தவங்களுக்கு குடுக்கறேன்…” என்று நகர ஆஷ்மி அதை வாயில் வைக்கும் முன்,
“ஆத்து நிறைய தண்ணி ஓடினாலும் நாய் நக்கித்தான் குடிக்குமாம். விருந்துக்கு வந்த இடத்துல எப்படி நடந்துக்கனும்னு தெரியல. நீயெல்லாம் என்னத்த படிச்சு…” என்று அவளை வேண்டுமென்றே காயப்படுத்திவிட நினைத்து சீண்ட,
“செத்தடி மயிலு. யாரை பார்த்து நாய்ன்னு சொல்வ?” என பார்த்த அஷ்மி,
“ஆத்துல நக்கி குடிச்சா வீட்ல எப்படி இந்த மாதிரி நீ கிளாஸ்ல குடுத்தா ஸ்ட்ரா போட்டு குடிக்குமாக்கும்? இல்ல வீட்ல தண்ணி குடுக்கறையேன்னு கைல வாங்கி குடிச்சிருமாக்கும்?…”
“ஏய்…” என்று எகிறியபடி வர,
“ஏன் உன் வீட்டு நாயை குடிக்க வையேன். நானும் அந்த அதிசயத்தை பார்த்துட்டு போறேன்…” என எள்ளலுடன் அஷ்மிதா திருப்பி கொடுக்க,
“உன்னை உன்னை, நாய குளிப்பாட்டி நடு வீட்ல வச்ச மாதிரி இருக்கு…” என்று சொல்ல,
“உன்னை யாரு நடு வீட்ல வைக்க சொன்னா? ஏன் மயிலும் கட்டி வைக்க வாசல்ல இடமா இல்ல?…”  
அஷ்மியும் விடுவதாய் இல்லை. இன்று உன்னை என்ன செய்கிறேன் என்று பார் என்னும் போர் முழக்கம் அவளின் கண்ணில் தெரிய ரத்தினசாமி அதற்கு மேல் நின்றார்.
“நான் யார சொன்னேன் தெரியுமா?…”
“யார வேணும்னாலும் சொல்லு. அதை இப்ப என் முன்னால சொல்லு பார்ப்போம். பேசறதுக்கு முன்ன யோசிச்சு பேசு மயிலு. என் புருஷனோட வந்திருக்கேன்னு இதோட விடறேன்….” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே மற்றவர்கள் சிரிப்பு சத்தம் இவர்களை சமீபிக்க அவளை முறைத்துவிட்டு வெளியே போனார் ரத்தினசாமி.
தோட்டத்தில் சென்று நின்றவருக்கு புகைச்சல் இன்னும் அடங்கவில்லை.  அஷ்மிதாவை அவமானப்படுத்த நினைத்து தானே இப்படி வந்து நிற்கும் நிலையாகிவிட்டதே என எண்ணி எண்ணி குமைந்தார்.
“ஹாய் ஸார்…” அவரின் பின்னால் சத்தம் கேட்டு திரும்பி பார்க்க அங்கே பிரசாத் நின்றிருந்தான்.
இவன் எதற்கு இங்கே என்று பார்த்தவர் முகத்தில் எதையும் காண்பித்துக்கொள்ளாமல்,
“சொல்லுங்க தம்பி, அதுக்குள்ளே வீட்டை சுத்தி பார்த்துட்டேங்களா?. பெருசாச்சே, இன்னும் நேரமாகுன்னு நினச்சேன்…” என்று பெருமையாக கேட்க,
“வீடு பெருசா இருந்து என்ன ஸார் பிரயோஜனம். வீட்டுல இருக்கற மனுஷங்க மனசு பெருசா இருக்கனும். அதுல சுத்தமான எண்ணம் இருக்கனும். வீடு தேடி வந்தவங்களை முழு மனசோட வரவேற்று உபசரிக்கிற உயர்ந்த பண்பும், மனசும் இருக்கனும். ஆனா அது இங்க இல்லை…”
இத்தனையும் பிரசாத் சொல்ல சொல்ல ரத்தினசாமியின் முகமே மாறிவிட்டது. பிரசாத் என்ன நினைத்து இதை சொல்கிறான் என பார்வையால் ஆராய,
“முதல்ல மனச சுத்தமா வச்சுட்டு வீட்டுக்கு கூப்பிடுங்க. வீடு பெருசா இருக்கறதுல இல்ல பெருமை…”
“தம்பி, போதும். எதுக்கு இப்படி பேசறீங்க? எனக்கு புரியலை…”
“என் பொண்டாட்டியை பேசினதை சொல்றேன்…” என்றவனது பார்வையும் உடல்மொழியும் சட்டென மாற்றம் பெற்றது.
“உங்களுக்கு என்ன பிரச்சனைங்க இப்ப? யார்க்கிட்ட என்ன பேசனும்னு வார்த்தைல ஒரு கவனம் இருக்கனும். வயசுக்கு எத்த பேச்சா இல்லையே உங்களோடது. இதுவே வேற யாராவதா இருந்திருந்தா தட்டி தூக்கியிருப்பேன். அதி பாஸ் அப்பன்றதால உனக்கு இந்த மரியாதையும் எச்சரிக்கையும்…”
“தம்பி, நான்…”
“ஷ்ஷ்…” உதட்டில் கை வைத்து அவரின் பேச்சை நிறுத்தியவன்,
“எப்பவும் இந்த அமைதி என்கிட்டே இருக்காது. அரசியல் பேக்ரவுண்ட், பெரிய ஆள் இது எதுவும் என்னை எதுவும் செஞ்சிட முடியாது. உங்களோட செல்வாக்கு எல்லாம் என் முடிக்கு சமானம். நான் வேற மாதிரி. எங்கம்மாவுக்காக எல்லாத்தையும் மூட்டை கட்டிட்டு இருக்கேன்…” என்று கை முஷ்டியை மடக்கியவன்,
“அவ என் பொண்டாட்டி, இனி அவட்ட பேசறப்ப அதை மனசுல வச்சிட்டு பேசுங்க. இல்லைனா இன்னொருக்க பேச வாய் இருக்காது…” என்றவன் மீண்டும் வீட்டினுள் செல்ல அசையாமல் நின்றுவிட்டார் ரத்தினசாமி.
அவருக்கு புரியவில்லை நமது எண்ணமும் செயலும் பார்வையும் சரியாக இருந்தால் அனைத்தும் சரியாக இருக்குமென்பது.
தவறாகவே நினைத்து, தவறாக பேச அதன் எதிர்வினை அவருக்கும் நடந்தது தவறாகவே.
பிரசாத் இதை கேட்டு இப்படி வந்து வெடித்துவிட்டு மிரட்டலாய் பேசுவான் என எதிர்பார்க்காதவர் இதை தன் மகனிடம் கூட சொல்ல முடியாமல் அங்கேயே அமர்ந்துவிட்டார்.
தன் நிலை திருடனுக்கு தேள் கொட்டிய கதையாகி போனதை எண்ணி தலையில் கைவைத்தார் ரத்தினசாமி.
ஆனால் பிரசாத் இத்தோடு நிறுத்தவில்லை. அவனின் மொத்த கோபமும் இப்பொழுது அஷ்மியிடம் வந்தது.

Advertisement