Advertisement

தென்றல் – 5
          அஷ்மி என்னவோ சொல்லிவிட்டாள் தான். ஆனால் அவளுள்ளும் சிறு படபடப்பு, இனம்புரியா ஒருவித உணர்வு.
“வந்து பாருன்னா டக்குன்னு கன்னத்தை புடிச்சுட்டானே? சரியான ஆளா இருப்பான் போல. அஷ்மி நல்லவேளை கெத்தா சமாளிச்சுட்ட. இல்லன்னா இந்நேரம் டப்பா டான்ஸ் ஆடிருக்கும். பில்டிங் ஸ்ட்ராங். பேஸ்மட்டம் வீக்குன்னு கலாய்ச்சிருப்பான்…” அவளுக்கவளே மெதுவாய் சொல்லிக்கொள்ள,
“இப்ப என்னதான் சொல்ற? என்னால, என்னால இப்படி எல்லாம் படுக்க முடியாது. தூக்கமும் வராது…” பிரசாத் தலையை சொரிந்துகொண்டு அவளை பார்க்க எழுந்தமர்ந்தவள்,
“யோவ் இன்னும் எவ்வளவு நாளைக்குய்யா என் கூட தூங்காம இருப்ப? சும்மா சீன போட்ட எதாச்சும் சொல்லிட போறேன். உனக்கெல்லாம் சண்டியர் மாதிரி பேச்சு வேறையா? இனி பேசு, வாயில ஒன்னு டப்புன்னு குடுக்கேன்…” என்று பொங்கிவிட்டு மீண்டும் படுத்துக்கொள்ள அவளை ஒரு மார்க்கமாய் பார்த்துக்கொண்டே வந்து மறுபுறம் படுத்துக்கொண்டான் பிரசாத்.
இருவருக்கும் ஒருவர் அருகாமையில் ஒருவர் படுத்திருப்பது ஒருவித அவஸ்தையை கொடுக்க ஏனோ உறக்கம் வருவேனா என சண்டித்தனம் செய்தது.
“ஐயோ, இம்சையா இருக்கே இவனோட. ஏன் தூக்கம் வரலை?…” என்று புரண்டு படுக்க அவனும் இவளை பார்க்கும் வண்ணம் தான் படுத்திருந்தான்.
“தூங்கலை?…” இப்பொழுது அவன் முறைப்புடன் பேச்சுக்கொடுக்க பட்டென கண்ணை மூடிக்கொண்டாள்.
சிறிது நேரம் அவளின் முகத்தையே மிதமான புன்னகையோடு பார்த்திருந்தவன் உறக்கம் விழிகளை தழுவ தூங்கிப்போனான்.
காலை அவளுக்கு முன்பே எழுந்தவன் தன்னுடைய வேலைகளை முடித்துவிட்டு குளித்து கிளம்பி இருந்தான். ஆறு மணிக்கு மேல் மெதுவாக கண்களை திறந்தவள் முன்பு கட்டிலில் சாய்ந்தமர்ந்து தனது மொபைலில் மூழ்கி கிடந்தவனை விழி விரிய பார்த்தவள் எழுந்து பார்க்க அவன் அவளை கண்டுகொள்ளவே இல்லை.
தோளை குலுக்கிவிட்டு எழுந்து அவளும் கிளம்பி வந்தாள். அப்போதும் அவன் அப்படியே இருக்க,
“இங்க போன்லயே இன்னைக்கு பொழுதை ஓட்டிடலாம்னு முடிவு பண்ணியிருக்கீங்களா? ஒரு கட்டர்சிக்கு சின்னதா குட்மார்னிங் கூட இல்லை. இப்பவும் நானா தான் கூப்பிடனுமா?…” அஷ்மி கேட்க நிமிர்ந்து பார்த்தவன்,
“குட்மார்னிங்ல சின்னதென்ன? பெரியதென்ன? குட்மார்னிங்னா குட்மார்னிங் தான். ஏன் நீ முழிச்சு என்னைத்தான பார்த்த. அந்த குட்மார்னிங்கை நீ சொல்லி இருக்க வேண்டியது தானே? ஏன் சொல்லலை?…” என்று அமர்த்தலாய் கேட்க,
“ஓஹ் மிஸ்டர் ஹஸ்க்கு ஈகோ ப்ராப்ளமா? எனக்கு அந்த ஈகோ போகோலாம் கிடையாதுப்பா. குட்மார்னிங். போதுமா? கீழ போகலாம்….” என்று அழைக்கவும் அவனும் குட்மார்னிங் சொல்ல போக,
“நான் சொன்னேன்றதுக்காக எனக்கு சொல்லனும்னு இல்லை. அது தானா வரனும். நான் ஏன் சொல்லலைனா எனக்கு மறந்துடுச்சு. நிஜமாவே தோணலை. ஆனா நீங்க வேணும்னே சொல்லாம இருந்து நான் சொல்லுவேனான்னு பார்க்கறீங்க. இனி நீங்க சொன்னா அது நான் கேட்டு வாங்கின மாதிரி. சோ…” என்று புன்னகைத்துவிட்டு சென்றாள்.
அஷ்மி பேசிவிட்டு சென்றதும் ஒரு நொடி பிரசாத்தின் மனம் துணுக்குற்றது.
“ஒரு சின்ன விஷயத்தில் இத்தனை பார்க்கிறாளா இவள்?” என தோன்ற ஏனோ ஒருவித பயப்பந்து அடிமனதை சுழற்ற ஆரம்பித்தது. போன வேகத்தில் அஷ்மி மீண்டும் வர என்னவென்று அவன் பார்க்க,
“உங்க போன் நம்பரை சொல்லுங்க ஹஸ். ஏதாவது சொல்லணும், மெசேஜ் பண்ணனும்னா வேணும்ல…” என்று கேட்க அவனுக்கு தன்னை தானே அடித்துக்கொள்ள வேண்டும் போல இருந்தது.
அவளிடம் நம்பரை கொடுத்துவிட்டு இவன் கேட்பதற்குள் அவனின் மொபைலிற்கு ஒரு ரிங் விட்டு கட் செய்தவள்,
“என்னோட நம்பர், வேணும்னா சேவ் பண்ணிக்கோங்க. நான் கால் பண்ணா நான் பன்றேன்னு தெரியனும் இல்லையா?…” என்று கேலி பேச அவளை முறைத்தவன் சேவ் செய்துவிட்டு அவளை தாண்டிக்கொண்டு முன்னே சென்றான்.
“முரடன்…” என்ற முணுமுணுப்போடு அவளும் செல்ல இருவரும் ஒன்றாய் இறங்கி வருவதை பார்த்ததும் கீழே இருந்த அனைவருக்கும் பெரும் நிம்மதியாகி போனது.
அதையும் தாண்டி அனைவருமே பிரசாத்தின் முகத்தை ஆராய்ச்சியாய் பார்த்து வைக்க அதில் கடுப்பானவன் அதை வெளிக்காட்டாமல் முகத்தை சிரித்தபடி வைத்துக்கொண்டான்.
“இந்த ராட்சசி பத்தி எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கு. அதான் என்னை உத்து உத்து பார்க்காங்க. எல்லாம் என் நேரம். முதலிரவு முடிஞ்சு வர பொண்ணுங்களோட முகத்தை தான் பார்த்து பார்த்து கணிப்பாங்க. இங்க எல்லாமே உல்ட்டாவா இருக்கு…”
“மச்சான், நீ மைண்ட் வாய்ஸ்ன்னு நினைச்சு சத்தமா சொல்லிட்டு இருக்கடா…” விஷ்ணு அவனின் காதை கடிக்க பதறி திரும்பியவன்,
“அதுக்குள்ளே வந்து உட்காந்துட்டேனா?…” என சுற்றிலும் பார்க்க,
“அம்புட்டு வேகமா வந்திருக்க. ஏன்டா கல்யாணத்துக்கு முன்னவே அடி பலம். இப்ப தனியா ரா முழுக்க சிக்கிருக்க. உண்மையை சொல்லு, பேக்ரவுண்ட்ல வடிவேலு அழகான மனைவி அன்பான துணைவின்னு சும்மா சுத்தி சுத்தி பாடியிருப்பாரே? தலையணை பஞ்செல்லாம் பஞ்சு பஞ்சா பறந்திருக்குமே?…”
“வாயை மூடுடா….” பிரசாத் அனைவரையும் கருத்தில் கொண்டு கடுகடுக்க,
“இந்த தலையணை மந்திரம், தலையணை மந்திரம்னு சொல்றாங்களே. அதுல இதுவும் ஒரு வகை. பில்லோவுல அடி வாங்கறது. நம்ம தலையெழுத்து ரெண்டாவது வகையில தான் வாழ்க்கை நடத்தனும்னு இருக்குடா மச்சான்…” என பெருமூச்சு விட,
“என்னை ஏன்டா அதுல சேர்க்கற? ஆமா முதல் வகை?…” விஷ்ணுவின் பேச்சில் பிரசாத்தின் மனதில் சிறிது உற்சாகம் பரவ,
“ச்சீ அத எப்படிடா என் வாயால சொல்வேன்?…” என வெட்கப்படுவதை போல சொல்ல அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டான் பிரசாத்.
அனைவரும் அவனின் சிரிப்பை பார்த்து அவர்களுக்கும் இதழ்களில் புன்னகை பூக்க பார்த்தனர்.
“என்னண்ணா இப்படி சிரிக்கறீங்க?…” என கெளரி வர,
“உன் வீட்டுக்காரன் ஒரு ஜோக் சொன்னான்ம்மா. அதான் சிரிப்பு வந்திருச்சு…” என்று மாட்டிவிட்டு விஷ்ணுவை பார்த்து கண்ணடிக்க,
“என்ன ஜோக்? எனக்கும் சொல்லுங்க…” என வந்து அமர்ந்துவிட்டாள் கெளரி.
“சவுரி, வேண்டாம்டி…” என்றவனின் மனக்கண்ணில் வடிவேலுவின் பேக்ரவுண்ட் மியூஸிகில் இப்பொழுது வடிவேலுவுக்கு பதில் தானும், கோவை சரளாவாக கௌரியும் தெரிய மிரண்டுபோனான்.
“துக்கம் சில நேரம் பொங்கி வரும் போது. மக்கள் மனம் போலே?..” என பிரசாத் அவன் காதருகில் பாட,
“அரிசிமூட்டைட்ட இன்னைக்கு வாங்கி கட்டணும்னு என் ஜாதகத்துல இருக்கு போல?…” என முனுமுனுத்தவன்,
“அது வந்துடாம்மா, நம்ம வடிவேலு ஜோக். அதான். அதத்தான் சொன்னேன்…” என சமாளிக்க பார்க்க,
“கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல, இதுதான அந்த ஜோக்….” என்று அஷ்மி வந்து எதிரில் அமர,
“இன்னைக்கு என்ன நேரகாலம் இந்த வாங்கு வாங்குது என்னை? இந்த புள்ளை முன்ன உக்காந்து நா சாப்புட்ட மாதிரித்தான்…” என்று நினைத்துக்கொண்டே,
“அதே தான் சிஸ்டர், அதேதான். என்னடா?…”  என்று பிரசாத்திடமும் கேட்டுவைக்க அதற்கும் சிரித்தான் பிரசாத்.
“அடங்குடா, நீ சிரிக்கிறதுல நா பொய் சொல்லிட்டேன்னு உன் தங்கச்சி கண்டுபிடிச்சுட போறா…” என படபடக்க பிரசாத்தின் மறுபக்கம் அமர்ந்திருந்த அதிரூபனும் விஷ்ணுவின் பதட்டத்தில் அடக்கமாட்டாமல் சிரித்தான்.
“கேட்ருச்சா பாஸ்…” பிரசாத்தை தாண்டி அவனை எட்டிப்பார்க்க,
“டோட்டலா கேட்ருச்சு…” அவனும் விஷ்ணுவை போலவே சொல்ல விஷ்ணு முழித்த முழியில் பார்த்தவர்களின் சிரிப்பில் அவ்விடமே ரகளையானது.
வேறொரு மனநிலையில் இருந்திருந்தால் அஷ்மி இதில் கலந்திருப்பாள் ஆனால் அவள் எண்ணம் தன்னிடம் பேசாத தந்தையையும், தன்னை கண்டுகொள்ளாத அதிரூபனையுமே சுற்றி வந்தது.
“அப்படி என்ன கோபம் என் மேல் நம்பிக்கை இல்லாமல்?” என இவள் மனம் சுணுங்க அதை பார்த்த அகிலவேணிக்கு மிகுந்த கஷ்டமாக போனது.
ராஜாங்கத்திடம் பேச வரும் போது அர்னவும், சந்தோஷும் வந்துவிட்டனர் பிரசாத்தையும், அஷ்மியையும் விருந்திற்கு அழைக்கவென.
“இன்னுமா யாரும் ப்ரேக்பாஸ்ட் சாப்பிடலை? வாங்க, வாங்க…” என சந்தோஷ் அழைக்க வேகமாக எழுந்துகொண்டான் விஷ்ணு.
“என் இனமடா நீ. வாங்க பாஸ்…” என்று அவனோடு இணைந்து நடக்க,
“பச்சைக்கிளி…” அவளின் அழைப்பில் திரும்பியவன்,
“உங்க ப்ரெண்டை ஏர்போர்ட்ல ட்ராப் பண்ணிட்டு தான் வரேன். அவங்க உங்களுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அதாவது டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு. அதான் இன்பார்ம் பண்ணலை…” என சொல்லவும்,
“இப்ப எதுக்கு இவ்வளோ லாங் ரிப்ளே பச்சைக்கிளி. கிளம்பிட்டா, ரீச் ஆனதும் மெசேஜ் பண்ணுவா. இதை மட்டும் சொல்றதுக்கென்னவாம்?…” என தலையில் அடித்துக்கொண்டாள்.
“தோடா, மேடம் மட்டும் வண்டி வண்டியா வசனத்தை பொழியுவாங்கலாம். வேற யாரும் வாயை திறந்திர கூடாது…” என பிரசாத் முனங்க,
“ஏன் திறந்து தான் பாருங்களேன்? யார் வேண்டாம்னது?…” அருகில் அமர்ந்திருந்த அதிரூபன் சொல்லவும் ஒரு நொடி திருத்திருத்த பிரசாத்தை பார்த்து கையை நீட்ட அவனும் ஹைபை கொடுத்துகொண்டான் அதிரூபனுடன்.
திருமணத்திற்கு முன்பு இறுக்கமாகவும், எண்ணி எண்ணி பேசும் பிரசாத்தையே பார்த்திருந்தவனுக்கு இந்த பிரசாத் புதிதாய் தெரிந்தான். அதற்கு காரணம் முதலில் அவர்களுக்கு நடந்த திருமணம் என்று புரிந்தது.
அதை பற்றி நினைக்கவுமே அதிபன் அஷ்மிதாவை பார்க்க அதே நேரம் அவளும் அவனைத்தான் பார்த்தாள் கோபத்துடன்.
“என்னையா அவாய்ட் பன்ற?” என்கிற கோபம். அது அவனுக்கும் நன்றாகவே புரிந்தது. அவளை சளைக்காமல் எதிர்கொண்டவனை இன்னும் முறைத்தவள் அப்பொழுது தான் அவனருகில் இருந்த பிரசாத்தை பார்த்தாள்.
“இவன் ஏன் முறைக்கான்?…” என யோசனையில் புருவம் சுருங்க பிரசாத் இன்னமும் அவளை பார்வையால் எரித்துகொண்டிருந்தான்.
அஷ்மியின் முகமாற்றத்தை வைத்து அதிரூபனும் பிரசாத்தை பார்க்க சிரிப்பு தான் வந்தது.
“பிரசாத், அந்த முறைப்பு உங்களுக்கு இல்லை. எனக்கு. நீங்க ஏன் டென்ஷன் ஆகறீங்க?…” என கேட்கவும் அசடு வழிந்தான். அவனின் மனசாட்சியோ,
“அவ யாரை பாத்தாலும் உன்னை பாக்கரமாதிரியே இருக்கோ?” என எக்காளமிட சட்டைசெய்யாமல் அதிரூபனுடன் உணவருந்த எழுந்தான்.
காலை உணவை உண்டு முடித்தவர்களை கோவிலுக்கு போய்விட்டு அப்படியே ரத்தினசாமி வீட்டிற்கும் மதிய உணவிற்கு சென்று வருமாறு ராஜாங்கம் சொல்லிவிட்டு கை கழுவ செல்ல அவரின் பின்னே சென்ற அகிலவேணி,
“இன்னும் உங்களுக்கு என்னதான் அண்ணே பிரச்சனை? எப்படி பார்த்தாலும் அவ நீங்க பார்த்திருக்கிற மாப்பிள்ளையை தான் கல்யாணம் செஞ்சிருக்கா. இதுல இன்னும் கோவம் எதுக்கு?…” யாருக்கும் கேட்காதவண்ணம் அவரை கடிந்துகொள்ள,
“தெய்வாதீனமா அதே மாப்பிள்ளையை நான் பார்த்தேன். இல்லைனா எவ்வளவு தப்பா போய்ருக்கும்? கடைசி நேரத்துல அஷ்மியை கூட்டிட்டு வந்து நின்னவரு நான் வேற மாப்பிள்ளையை பார்த்து அப்ப வந்து நின்றிருந்தா? எத்தனை அசிங்கம்?…” ராஜாங்கம் உடைந்துபோனார்.
“ப்ச், சும்மா நடக்காததை நினைச்சு பேசி உங்களை நீங்களே வருத்திக்காதீங்க. இதனால உங்களுக்கும் வேதனை, உங்க பொண்ணுக்கும் வேதனை. நடந்ததை நினைச்சு சந்தோஷப்படுங்க. இன்னும் ரெண்டு நாள்ல அவ புருஷன் வீட்டுக்கு போய்டுவா…” என்றதும் அந்த உண்மை சுட நிமிர்ந்து பார்த்தவன் கண்கள் கலங்கியது.
“இப்போ கலங்குங்க, அவ இருக்கும் போதே நல்லபடியா பேசி நீங்களும் சந்தோஷமா இருந்து அவளையும் சந்தோஷமா அனுப்பி வைக்கிறதை விட்டுட்டு முகத்தை தூக்கிவச்சிட்டு ஆகாதபோகாத கோவத்தை இழுத்து பிடிக்கிறது நல்லதில்லை…”
“சரிம்மா, நான் பேசறேன். ஆனாலும் அவ…”
“அவ ஒன்னும் வேணும்னு மறைக்கலையே. அப்படி மறைச்சதுக்கு காரணம் உங்களை நினைச்சு மட்டும் தான் இருக்கும். சொல்லணும், சொல்ற அளவுக்கு விஷயம் பெருசுன்னு அவளுக்கு தோணலை. உங்களை குழப்ப வேண்டாம்னு நினைச்சிருக்கா. இதுக்கு போய் கோவிச்சுக்கலாமா?…” என்றவர்,
“அவளை நீங்க தள்ளி வைக்கிறது மாதிரியே தோணுது அண்ணே. பாவம் பிள்ளை, அவ முகத்துல வருத்தத்தை இதுவரை நான் பார்த்ததே இல்லை. அவளால யாரும் கஷ்டப்பட்டதும் இல்லை. இப்படி பட்ட பொண்ணை பெத்துட்டு நீங்க அவளை கஷ்டபடுத்தலாமா?…”
அகிலவேணி கேட்ட ஒவ்வொன்றும் ராஜாங்கத்தை வெட்க செய்தது. அவர் புரிந்தளவிற்கு தான் புரிந்துகொள்ளவில்லையோ என வருத்தமாய் பார்த்தார்.
“நீங்க ரூம்க்கு போங்க. நான் அஷ்மியை அனுப்பி வைக்கிறேன். ஞாபகம் இருக்கட்டும் அண்ணே. அவளை வேதனைபடுத்திடாதீங்க. அவளா சொன்னா சொல்லட்டும். இல்லைனா விடுங்க…” என்றதற்கு தலையசைப்புடன் சென்றார் ராஜாங்கம்.  செல்லும் பொழுது அதிரூபனையும் பார்வையில் தன்னோடு அழைக்க,
“ஹ்ம்ம் பேர் தான் ராஜாங்கம். இங்க ராஜாங்கம் செலுத்தறது யார்ன்னே தெரியலை…” என சிரிப்புடன் அதை பார்த்தவர் அஷ்மி சாப்பிட்டு முடித்து வரவும் மேலே அனுப்பிவைத்தார்.
சந்தோஷ், அர்னவுடன் பிரசாத் பேசிக்கொண்டே தோட்டத்திற்கு சென்றுவிட துவாரகாவும் கௌரியும் குழந்தையை வைத்துக்கொண்டு விஷ்ணுவுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அறைக்குள் நுழைந்த அஷ்மி தந்தையையும், தன் நண்பனையும் மாறி மாறி பார்த்து இருவரின் மனநிலையை கணிக்க ஆரம்பித்தாள்.
“பார்வையில மெசர் பண்ணினது போதும். வா இங்க…”
“ப்ச் அதி, இப்ப எதுக்குடா முறைச்சிட்டே இருக்க?. ரெண்டு அடியாவது அடிச்சிட்டு பேசிடுடா. ரெண்டு பேரும் இப்படி இருக்காதீங்க…” என வேகமாய் வந்து அவனை அடித்துவிட்டு அவனின் தோள் சாய அவளை அணைத்துகொண்டவன்,
“ஏன்டா, எங்கட்ட சொல்லாம மறைச்ச? அதான், அதான்…” அதற்கு மேல் பேச முடியாமல் குரல் உடைய அவளை கட்டிகொண்டவனை பார்த்த ராஜாங்கத்திற்கும் கண்ணீர் குளம் கட்டியது.
தன்னை தைரியமாக இருக்கவேண்டும், உடைந்துவிடகூடாது என அத்தனை அறிவுரை சொன்னவனே சடுதியில் இப்படி குழந்தையாய் ஆனதென்ன என பார்த்து நின்றார்.
இனி தன் காலத்திற்கு பின் தன் பெண்ணை தகப்பனுக்கு தகப்பனாய் அதிபன் பார்த்துக்கொள்வான் என்னும் எண்ணம் முன்பை விட இன்னும் அதிகமாய் ஸ்த்திரம் பெற்றது.
“சொல்லாம என்ன? மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்ச பின்னால சொல்லனும்னு தான் நினைப்பேன். ஆனாலும் இப்போ வேண்டாம்னு தோணுச்சு. நான் தான் பொண்ணுன்னு தெரிஞ்சு பிரசாத் என்ன ரியாக்ஷன் குடுப்பார்ன்னு பார்க்கனும்னு நினைச்சேன். அதான் மேரேஜ் வரை சொல்லாம வைக்கலாம்னு…”
“இது தேவையா அஷ்மி? எல்லார் முன்னாடியும் உன்னை அவர் கூட்டிட்டு வந்து இப்படி சொல்லும் போது எங்களோட மனநிலை எப்படி இருந்துச்சு தெரியுமா? அதிலும்…”
“அதி, அது கல்யாணமே இல்லை. அவர் தான் அதையே பிடிச்சுட்டு தொங்குறார்ன்னா நீ அதுக்கு மேல…”
“கல்யாணமே இல்லைனா? பொண்டாட்டின்னு ஏன் சொல்லனும்? நீயும் சைலன்ட்டா தான நின்ன?. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருவித எமோஷன் இருக்கும் அஷ்மி. நம்ம பாயின்ட் ஆஃப் வியூல அவங்களும் நினைப்பாங்கன்னு நாம சொல்ல முடியாதில்லையா?…” என அதிபன் கண்டிக்க,
“ப்ச், அதி, அப்பா, நான் நடந்ததை சொல்றேன். நீங்களே நான் செஞ்சது சரியா தப்பான்னு சொல்லுங்க…” என்று ஒன்றுவிடாமல் நடந்ததை சொல்ல ராஜாங்கத்திற்கும், அதிரூபனுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.
இதை தான் விதி என்பதா? சூல்நிலை செய்த சதி என்பதா? குழம்பி போயினர் அவர்கள் இருவரும்.
“இப்ப சொல்லுங்க. இதுல நான் செஞ்சதுல என்ன தப்பு இருக்கு?…” அஷ்மி கேட்பதில் இருந்த நியாயம் அவர்களை எட்டினாலும் அவளின் கழுத்தில் ஏற்கனவே ஒருமுறை தாலி ஏறியது ஏறியது தானே?  திருமாங்கல்யம் என்ன விளையாட்டு பொருளா? ராஜாங்கம் தன் மகளை கண்ணீருடன் அணைத்துகொண்டார்.
“உங்களுக்காக, அதிக்காக தான்ப்பா நான் சொல்லலை. விஷயத்தை உங்கட்ட சொன்னா நீங்க உடைஞ்சு போய்டுவீங்க. பிரசாத்தை தேடுவீங்க. எனக்கே யாருன்னு தெரியதப்போ. தெரிஞ்சுக்கனும்னு தோணாதப்போ ஏன் சொல்லனும்னு தோணுச்சு…”
“இவன் இருக்கான் பாருங்க, சொல்லவே வேண்டாம். எதாச்சும் கோவத்துல செஞ்சிடுவான். என் விஷயம்னா சார்க்கு கண்டிப்பா கன்ட்ரோல் கிடையாது…” என்றவள் பின் மெதுவாய்,
“அதுவும் இது வான்ட்டடா ப்ளான் பண்ணி என்னை சிக்கவச்சிருக்காங்கன்றப்போ இதை தவிர வேற எந்த முடிவை எடுக்கறது?…”
“வாட்? வான்ட்டடாவா?…” அதிபனும், ராஜாங்கமும் ஒரு சேர சொல்ல ஆமாம் என தலையசைத்தாள் அஷ்மி.
“அந்தளவுக்கு யாருக்கு தைரியம் இருக்கு?…” என்று கைகளை முறுக்கியவனுக்கு சந்தேகம் எழ அதை புரிந்துகொண்டவள்,
“மயிலு  அந்த அளவுக்கெல்லாம் இப்ப வொர்த் இல்லைடா அதி. இவன் வேற. என்ன செய்யனுமோ நான் செஞ்சிட்டேன். நீ விடு…” என அசால்ட்டாய் சொல்ல,
“அவன் யாருன்னு சொல்லு அஷ்மி…” அதிபன் கோபப்பட,
“ப்ச் அதி…” அஷ்மி அலுப்பாய் சொல்ல,
“அவனை நான் பாக்கனும். அவனை…” என பற்களை கடிக்க,
“என்னடா? உங்கப்பா அடங்கி இருந்தா அதை நீ கையில எடுக்கலாம்னு பார்க்கறியா? தொலைச்சிடுவேன். எங்களுக்கு தெரியும். மூச்…” என அதட்ட,
“ப்ச்…” அவன் கோபமாக முகம் திருப்ப அவனின் கன்னம் பற்றி திருப்பியவள்,
“ப்ளீஸ்டா, சொன்னா புரிஞ்சுக்கோ. செல்லம்ல…” என அஷ்மி அவனை சமாதானம் செய்துகொண்டிருக்க அந்த அறையை கடந்து சென்ற விஷ்ணு லேசாய் திறந்துகிடந்த கதவிலிருந்து கேட்ட சத்தத்தில்,
“என்னது செல்லமா? நம்ம மேடம் தல சவுண்டுல இது. மந்திரம் நம்பர் ஒண்ணை மச்சான் ட்ரை பன்றான் போல…” என சொல்லி குஷியுடன் திரும்ப மாடிப்படியில் இருந்து மேலே வந்துகொண்டிருந்தான் பிரசாத்.
“இவன் இங்கன்னா அப்ப உள்ள உள்ள செல்லம் யாரு?…” குழப்பத்துடன் நிற்க அறைக்கதவும் திறக்கப்பட்டு அஷ்மி வெளியில் வர இவனின் முகம் பேயறைந்ததை போல ஆனது.
“ஒடிருடா விஷ்ணு, இல்லை பேயறைஞ்ச மாதிரி இல்லை. பேயே அறைஞ்சிடும்…” என்று திரும்பிவதற்குள் அந்த அறையில் இருந்து ராஜாங்கம் வெளிவர,
“இந்த செல்லமா, ஹப்பாடா அப்பா செல்லம். கொஞ்ச நேரத்துல மண்டைக்குள்ள நூத்தியெட்டு இரயில்வண்டி குறுக்கும் நெடுக்குமா ஓடிருச்சு…” என்று ஆசுவாசப்பட,
“என்னாச்சு, ஏன் முகம் ஸ்வெர்ட் ஆகுது?…” அஷ்மி கேட்க,
“வந்து சும்மா, காத்தோட்டமா நடந்து வந்தேன். இந்தா போய்ட்டேன்…” என்று பதறியடித்து ஓடவே செய்தான். அவனின் செய்கையில் புன்னகைத்த அஷ்மி,
“இன்ட்ரெஸ்ட்டிங் கேரெக்டர் இல்லப்பா…” என்று சிரிக்க,
“நல்ல வேளை கொஞ்ச நேரத்துல ஹெட்நியூஸ் ஆகாம வந்தோம். தப்பிச்சடா விஷ்ணு…” என்று கீழே வந்து நிற்க,
“என்னாச்சுங்க? முகமெல்லாம் வேர்த்துக்கொட்டுது?…” கெளரி வந்து கேட்க,
“வேணா சவுரி. அழுதுடுவேன். இன்னைக்கு கோட்டா முடிஞ்சது. நல்ல குடும்பத்துல வந்து  வாக்கப்பட்டேன். இதுக்கெல்லாம் காரணம்…” என நரம்பு புடைக்க கேட்க,
“என்ன காரணம்?…”
“ஆங், உங்கண்ணன் தான் காரணம். சாவடிக்கிறானுங்களே என்னிய…” என்ற புலம்பலுடன் வெளியே சென்றான்.
சிறிது நேரத்தில் ராஜாங்கம், துவாரகா, அகிலவேணி தவிர அனைவரும் கிளம்பி கோவிலுக்கு சென்றனர். பின் ரத்தினசாமி வீட்டிற்கு செல்வதாய் முடிவு.
அங்கே ரத்தினசாமியோ தாம்தூம் என குதித்துக்கொண்டிருந்தார் வீட்டில். அஷ்மியை விருந்திற்கு அழைத்ததற்கு பத்மினியிடம் காய்ந்துகொண்டிருக்க,
“இது அதியோட, அதான் உங்க பிள்ளை அதிபனோட ஆடர். முதல் விருந்து இங்க தான் குடுக்கனும்னு. வேணும்னா அவன்ட்ட பேசிக்கோங்க. அவன் வேண்டாம்னு சொன்னா நானும் குடுக்கலை…” என பத்மினி சொல்ல,
“பத்மி, வர வர என் பேச்சுக்கு இந்த வீட்ல மரியாதையே இல்லாம போச்சு. நீ கூட மகனை சொல்லி மிரட்ட ஆரம்பிச்சுட்ட. எல்லாம் அவ பன்ற வேலை. சேர்க்கை சரியில்லை…” என்று கொந்தளித்துக்கொண்டிருந்தார்.
இதை அனைத்தையும் ஒரு பார்வையாளனாக பார்த்து நின்றான் விஷால். அவனுக்குமே அஷ்மி இன்று வராமல் இருந்தால் போதும் என்று தோன்றியது.
கணவனுடன் இணைந்து அவளை காணும் அளவிற்கு தன் மனதில் திடமில்லை என்று உணர்ந்தவனால் அதற்கு மேலும் அங்கிருக்க முடியவில்லை.
கார் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே வர அஷ்மி தன் கணவனுடன் காரிலிருந்து இறங்கினாள்.

Advertisement