Advertisement

தென்றல்  – 4
            விடியற்காலை நான்கு மணிக்கே வந்து அனைவரையும் எழுப்பிவிட்டுவிட்டான் அதிரூபன். மற்றவர்கள் எழுந்து கிளம்ப துவங்கியதும் குளித்து விட்டு வந்த சந்தியா ஸ்வேதாவை எழுப்ப,
“அக்கா ப்ளீஸ், எல்லாரும் கிளம்பிட்டு கடைசியா எழுப்புங்க. இன்னும் கொஞ்ச நேரம். ப்ளீஸ்…” என பெட்ஷீட்டினுள் தலையை விட்டு தூங்க முற்பட்டவளை அடித்து எழுப்பி குளிக்க அனுப்பிவிட்டு தானும் கிளம்ப அதற்குள் அஷ்மியை அலங்கரிக்க ஆட்கள் வந்துவிட்டனர்.
சந்தியாவின் குழந்தை, துவாரகாவின் குழந்தை இருவரையும் கிளப்புவதற்குள் ஒரு வழியாகிவிட்டனர் சந்தியாவும், துவாரகாவும்.
அதிலும் நிலாவிழி உறக்கத்திலும் அத்தனை தெளிவு. உடையை அணிவிக்கவே விடவில்லை. அதை கண்ட சந்தியா,
“அண்ணி, அப்படியே அண்ணாவை மாதிரி நிலா. அண்ணாவுக்கும் பெரியப்பா தான் எல்லாத்துக்கும் வரனும்னு பிடிவாதம் பண்ணுவாங்கன்னு பத்மிம்மா சொல்லுவாங்க. உங்க பொண்ணும் அந்த ரகம். பேசாம அண்ணாவை கூப்பிட்டு கிளப்பிவிட சொல்லுங்க…” என கிண்டலடிக்க அவளை முறைத்தவள்,
“என் பொண்ணுக்கு எல்லாமே நான் தான் செய்வேன். நேரமானாலும் நானே கிளப்பி விட்டுக்கறேன்….” என்று துவாரகா சொல்ல எதற்கோ அந்த நேரத்தில் வந்த அகிலவேணி மகளின் பேச்சை கேட்டு அப்படியே நின்றுவிட்டார்.
இன்னமும் துவாரகா மனதில் எத்தனை எத்தனை காயங்கள் வடுக்களாக இன்னும் இருக்கிறதோ என வலியுடன் பார்த்தவர் பின் தன்னை தேற்றிக்கொண்டு உள்ளே சென்றார்.
ஆறரையிலிருந்து ஏழரை முகூர்த்தம் என முடிவாகியிருக்க அதற்குள் அனைவரும் பரபரவென கிளம்பினார்கள்.
அஷ்மிதா முந்தைய நாளை நினைத்துக்கொண்டே தன்னை தயார் செய்துகொண்டிருந்தாள்.
முதல் நாள் அதிரூபனை பார்த்ததும் என்ன சொல்லி சமாளிக்கவென அவனின் அருகே கையை பிசைந்துகொண்டு நெருங்க,
“இப்ப உன்னை எதுவும் கேட்க விரும்பலை அஷ்மி. இப்ப நீ என்ன எக்ஸ்ப்ளநேஷன் குடுத்தாலும் சத்தியமா என்னால ஏத்துக்க முடியாது. கண்டிப்பா ஆர்க்யூ பண்ண வேண்டியதாகிடும். காலையில கல்யாணத்தை வச்சிக்கிட்டு உன்கிட்ட சண்டை போட்டுட்டும்  இருக்க முடியாது. சோ இப்ப நீ போய் தூங்கு…” என சொல்லி அங்கிருந்து சென்றவன் மீண்டும் அவளை கையை பிடித்து அவளின் அறைவரை கூட்டி சென்று விட்டுவிட்டு,
“என்ன இருந்தாலும் நீ எங்கட்ட இந்த விஷயத்தை மறைச்சத்தை கண்டிப்பா மன்னிக்க முடியாது அஷ்மி…” என்றுவிட்டு சென்றுவிட்டான். அதன் பின் அவனுக்கு போனில் அழைத்து அழைத்து பார்த்தவள் அவன் எடுக்கவில்லை என்றதும் ஆயாசமானாள்.
இதில் துவாரகா வேறு முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு பேசாமல் மௌனம் வேறு அவளை கடுப்பில் ஆழ்த்த,
“பார்ரா முயல்க்குட்டியெல்லாம் மூஞ்சியை காட்டுது என்கிட்ட…” என்று கிண்டல் செய்ய அதையும் கண்டுகொள்ளாமல் இருந்தாள் துவாரகா.
இவர்களை எப்படி சமாளிக்க போகிறோம் என்னும் கவலை மனதை அரித்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்னும் நம்பிக்கை அதைவிட பலமாய் இருந்தது.
இங்கே பிரசாத்திற்கு ஒரே படபடப்பாக இருந்தது. ஒருவித மயக்கத்தில் இருப்பவனை போல தன்னை யாரோ இயக்குவதை போலவே இருந்தான். என்னவிதமான உணர்வு இது என யோசித்து முடிக்கும் முன்னே அனைத்தும் நடந்துவிட்டிருந்தது.
ஆம், அஷ்மிதாவின் கணவனாக மாறியிருந்தான். அவளின் வாழ்க்கைக்குள் பெரும் பொறுப்புடன் நுழைந்திருந்தான். இனி அவளுடனான வாழ்க்கை தனக்கு என்ன வைத்திருக்கிறது என தெரியாமல் இருந்தான்.
என்ன இருக்கிறதோ இல்லையோ இனி அவள் தன் வாழ்வின் பாதி. சந்தோஷம் இருக்கிறதோ இல்லையோ சுவாரசியத்திற்கு குறை இருக்காது என்று நினைத்தவன் முகம் அவனறியாது மெல்லிய முறுவலை பூசியது.
விரல்கள் கன்னத்தை தடவ ஒரு நொடி தன் எண்ணப்போக்கை எண்ணி வியந்து போனான்.
“நானா இது?” என எண்ணியவன் அஷ்மியை பார்க்க அவள் தன் பக்கத்தில் நின்ற துவாரகா கௌரியுடன் வளவளத்துகொண்டிருந்தாள்.
“வாய், வாய். இவ வாய் மூடவே மூடாது போல?…” என நினைத்து கொண்டவன்  மேடையில் தங்களை வாழ்த்த வருபவர்களை கவனிக்க ஆரம்பித்தான்.
கிருஷ்ணமூர்த்தி பாக்கியலட்சுமி வரவும் அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிகொண்டவர்கள் அடுத்து வந்த ரத்தினசாமி பத்மினியின் காலில் விழ தயாராகும் முன்,
“வேண்டாம், இருக்கட்டும்ப்பா…” என்றவர் அஷ்மிதாவை பார்த்து முறைப்புடன் அவள் நெற்றியில் விபூதியை பூச,
“மயிலு காலை காப்பாத்திக்கிச்சு…” என அவருக்கு கேட்கும் வகையில் சொல்ல இன்னும் கடுமையாக முறைக்க முடியாமல் தவித்தவர்,
“நல்லா இருங்க…” என வாழ்த்தை கூட சபிப்பதை போல சொல்லிவிட்டு அவளுக்கு பக்கத்தில் குழந்தையுடன் நின்றிருந்த மருமகளை பார்த்தார்.
“பத்மி,  என்னத்துக்கு கூட்டத்துக்குள்ள புள்ளைய வச்சிக்கிட்டு சிரமப்படனும்? புள்ளைய நாம வச்சிக்குவோம். குடுக்க சொல்லு…” துவாரகாவிடம் பேத்திக்கு கையை நீட்டிவிட்டு பத்மினியிடம் சொல்ல,
“குடுமா துவா…” என சந்தோஷமாய் பத்மினியும் சொல்ல,
“என்னவாம் புதுசா கரிசனம்?…” கேட்டது துவாரகா அல்ல சாட்சாத் அஷ்மிதாவே. பல்லை நொறுங்குமளவிற்கு கடித்தவர்,
“பத்மி…” விட்டால் அங்கேயே பொங்கிவிடுபவர் போல பொறுமையிழந்தவரை பார்க்க பார்க்க அஷ்மிதாவிற்கு சிரிப்பாக இருந்தது.
மேடையில் வைத்து இதென்ன வம்பு? என துவாரகா குழந்தையை அவரிடம் கொடுத்துவிட நொடியில் ரத்தினசாமியின் முகம் பூவாய் மாறிவிட்டிருந்தது.
“வாடா, வாடா, எங்கம்மா வாடாம்மா…” என கொஞ்சிக்கொண்டே யாரையும் கண்டுகொள்ளாமல் ரத்தினசாமி கீழே இறங்கிவிட அவரை கண்டுகொள்ளாத அஷ்மி தன்னுடைய நண்பர்கள் வருவதை கண்டு தன் கவனத்தை அவர்களிடம் திருப்பினாள்.
வந்தவர்களை பிரசாத்திற்கு இயல்பாய் அறிமுகப்படுத்த அவளின் இயல்போடு ஒன்றமுடியாமல் அவன் தான் தவித்து போனான்.
அவளை போல் தன்னை சேர்ந்தவர்களை அறிமுகப்படுத்தும் பொழுது முகத்தை இப்படி மலர்ச்சியாய் வைத்துக்கொள்ள முடியாமல் தடுமாறிப்போனான். கடமைக்கு அனைவரையும் அறிமுகப்படுத்தி வைத்தவனுக்கு அத்தனை குழப்பம்.
“இவள் உண்மையாகவே முழுமனதுடன் இந்த திருமணத்தை ஏற்றுக்கொண்டு அனைவரிடத்திலும் தன்னை கணவன் என அறிமுகம் செய்கிறாளா? இல்லை எந்த பிணக்கையும் யாரிடமும் காட்டிவிட கூடாது என இப்படி நடந்துகொள்கிறாளா? என நினைத்து குழம்பி நின்றான்.
“யோவ் மிஸ்டர் ஹஸ்? ஏன் மூஞ்சி ஜிஞ்சர் ஈட்டிங் ஹஸ் மாதிரி இருக்கு? கொஞ்சம் சிரிச்சா தான் என்னவாம்? பல்லு பதினெட்டும் பத்திரமாத்து தங்கமா? இப்படி காப்பாத்தி வச்சிருக்க?…” வழக்கம் போல சிரித்துக்கொண்டே கலாய்க்க முதலில் குழம்பியவன் பின் அவள் சொல்லிய அர்த்தத்தில் வெடுவெடுத்தான்.
“எவ்வளவு தைரியம் இருந்தா என்னை குரங்குன்னு சொல்லாம சொல்லுவ?…” என குதிக்க,
“நான் எங்க சொல்லாம சொன்னேன்? நேரடியாவே தான சொன்னேன்? நேத்துத்தான என் தைரியம் என்னன்னு பார்த்த. அதுக்குள்ளே மறந்துடுச்சா? இப்ப வந்துட்டு அம்மாவுக்கு அப்பா டாடியான்னு கேட்கற?…”
“என்னை டென்ஷன் ஏத்தாத?…” அவனுக்கு பொறுக்கவே இல்லை. இப்படி ஒருத்தி தன்னை மட்டம் தட்டுவதா என அவனின் தன்மானம் சீண்டப்பட,
“நான் டென்ஷன் ஏத்தினா நீ ஏன் தூக்கி சுமக்கற ஹஸ்? இறக்கி வச்சிடேன்…”
“அதென்ன ஹஸ்?…” அதிமுக்கிய கேள்வியாக இதை அவளின் முன்வைக்க,
“ஹஸ்பண்ட் ஷார்ட் ஹஸ்…” என சொல்லி அஷ்மி கண்ணடிக்க நிமிடத்தில் எதிலோ மிதந்து தரையிறங்கிய சிலிர்ப்பு அவனுக்கு.
“உனக்கு வாய் ஜாஸ்தி தான்…”
“அதை நீ சொல்றியா?…” அதற்கும் அஷ்மி கவுன்ட்டர் குடுக்க அய்யோவென்றானது பிரசாத்திற்கு.
அந்நேரம் உதய் பிரபாகரனும், மித்ரநந்தினியும் குழந்தையோடு வர அவர்களை கண்டு புன்னகைத்தவன்,
“தங்கக்குட்டி…” என்று குழந்தையை கையில் அள்ளியவன் அழுத்தமாய் முத்தமிட குழந்தை அஷ்மியை பார்த்து,
“நீ நீ குட்டிம்மாவா…” என கேட்க அதன் அழகில் மயங்கியவள்,
“குட்டிம்மாவா?…” என கேட்க,
“இவன் குட்டிப்பா இவளுக்கு. அதான் உங்களை குட்டிம்மான்னு சொல்றா…” என்று உதய் சொல்ல,
“சோ ஸ்வீட் பேபி. செல்லக்குட்டி பேர் என்ன?…” என கேட்க,
“தங்கக்குட்டி…” பிரசாத் முந்திக்கொண்டு சொல்ல அதை கேட்டு முறைத்த நந்தினி,
“அது நீங்க கூப்பிடறது. அவளுக்கு நாங்க வச்ச பேர அவளே சொல்லுவா…” என்றவள் குழந்தையை பார்க்க குழந்தையோ பிரசாத்தின் கழுத்தை கட்டிக்கொண்டது. அதில் நந்தினியை பெருமிதமாய் வெற்றி பார்வை பார்க்க இருக்கும் இடம் உணர்ந்து தன் கோபத்தை அடக்கிக்கொண்டாள் நந்தினி.
ஆனால் நந்தினி போல அஷ்மி கிடையாதே?
“செல்லக்குட்டி உங்க குட்டிம்மாவுக்கு உங்க பேரை சொல்ல மாட்டீங்களா?…”  என பிரசாத்தின் கழுத்தின் பின்னால் மறைந்திருந்த குழந்தையின் கன்னம் தடவி கேட்க அதில் மகிழ்ந்தவள் அவனிடமிருந்து விலகி,
“பேர்ரு அத்த்த குட்டிப்பா சொல்லகூடாது சொல்லி…” என உதட்டை பிதுக்க இங்கே நந்தினியின் ரத்த அழுத்தம் எகிறியது. ஆனால் அஷ்மி குழந்தையை போலவே உதட்டை பிதுக்க அதை கண்ட குழந்தை,
“நோ, குட்டிம்மா நோ சேட். நோ…” என அவளிடம் தாவியது. உண்மையில் ஆச்சர்யத்துப்போன அஷ்மிதா,
“ஹேய் க்யூட்டிபை உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குதுடா. என்ன பேர் தான் சொல்லமாட்டேன்றீங்க…” சோகம் போல சொல்ல மீண்டும் பிரசாத்தின்  முகம் பார்த்தது குழந்தை.
“பெரிய பில்டப்பா இருக்கே. இப்ப சொல்லலைனா உங்க குட்டிப்பாவும் சேட் ஆகிடுவாங்க. ஏனா உங்க குட்டிப்பாவோட குட்டிம்மா தான நான்…” என வெகு இலகுவாய் பேசி இந்த முறை அவன் புறம் திரும்பாமல் குழந்தையிடம் பேச்சுக்கொடுக்க,
“அச்சும்மி எம்பேர்று அச்சும்மி…” என்றதும் புரியாமல் நந்தினியை பார்க்க,
“அஷ்மிதா கெளரி…” என புன்னகையுடன் சொன்னாள் நந்தினி.
“அடடே இதுக்கா சொல்லமாட்டேன்னு சொன்னீங்க. அஷ்மினா எதுக்கும் யோசிக்க கூடாது. யாருக்கும் பயப்பட கூடாது. சும்மா கெத்தா இருக்கனும். இவ்வளவு அழகான பேரை யாராவது சொல்லாம இருப்பாங்களா?…” என்று சில்லாகிக்க நந்தினியின் மிதப்பான பார்வையை அலட்சியம் செய்தான் பிரசாத்.
“ஆனா எனக்கு தங்கக்குட்டி…” என அவன் சொல்ல,
“வச்சுக்கோங்க. குழந்தைக்கு செல்லமா பேர் வச்சு கூப்பிடறதெல்லாம் அப்பாம்மா வச்ச பேர் ஆகிடுமா?…” அஷ்மி என்னவோ சாதாரணமாக தான் இதை சொன்னாள். ஆனால் அப்படி இல்லை என்று பிரசாத்தின் முகத்தை பார்த்ததுமே தெரிந்துபோனது.
“இதற்கு ஏன் மூஞ்சியை இப்படி வச்சிருக்காரு” என அஷ்மி பார்க்க,
“யார் என்ன சொன்னா என்ன? எனக்கு தங்கக்குட்டிதான்…” பிடுங்காத குறையாக மனைவியின் கையில் இருந்த குழந்தையை வாங்கிக்கொள்ள அதை கண்டு சிரிப்பு தான் வந்தது.
“அவருக்கு அஷ்மிதான்ற பேர் பிடிக்கலையாம். பேர் வைக்கிற அன்னைக்கு அவ்வளவு ரகளை. அதான் தங்கக்குட்டின்னு கூப்பிடுவார்…” நந்தினி இதை சிரித்துக்கொண்டே சொன்னது தான் அங்கே அதிசயமாக போனது உதயாவிற்கும், பிரசாத்திற்கும்.
“வந்ததை மறந்திட்டு பேசிட்டு இருக்கோம் பாருங்க…” என உதயாவை பார்க்க அவனும் கையில் இருந்த கிப்ட் பேக்கை அவர்களிடம் கொடுக்க நீட்ட நந்தினியும் அதில் தன் கரத்தை வைத்து கொண்டாள்.
“உங்களுக்கு எங்களோட வாழ்த்துக்கள்…” என கொடுக்க,
“என்னடா பிரபா இது?…” பிரசாத் கண்டன பார்வை பார்க்க,
“என்னோட வெட்டிங்க்கு கிப்டா நீ இவளை எனக்கு குடுத்த. உனக்கு கிப்ட்டா நானும் எதாச்சும் குடுக்கனும்ல…” என உதய் சொல்ல அவனை முறைத்தவள் அஷ்மியிடம் சொல்லிகொண்டு கீழே இறங்க உதய்யும் வாழ்த்திவிட்டு சென்றான்.
அதன் பின்னான நேரங்கள் சக்கரம் கட்டிக்கொண்டு செல்ல பெண் வீட்டில் தான் அனைத்து சாங்கியங்களும் என்பதால் பிரசாத்தை அஷ்மிதாவின் வீட்டில் விட்டுவிட்டு அவனை சேர்ந்தவர்கள் கிளம்பிவிட அவனுக்கு துணையாய் கௌரியும், விஷ்ணுவும் இருந்துகொண்டனர்.
பால் பழம் கொடுப்பது அது இதுவென சில சம்பிரதாயங்கள் அனைத்தையும் செய்ய ஒவ்வொன்றையும் துவாரகா தனக்குள் உள்வாங்கிக்கொண்டிருந்தாள். தன் திருமணத்தில் தாலி கட்டியதோடு சரி. அதன் பின்னான எந்த சடங்கையும் செய்யவில்லை என்ற உண்மை ஒரு ஏக்கத்தை அவளிடம் துளிர்வித்தது.
அதிரூபனின் கையை பற்றிகொண்டவள் விரல்கள் நடுங்க அவளின் முகத்தை கண்டவன் அவளின் உணர்வுகளையும் அவதானித்தான். ஒன்றுமில்லை என்பதை போல கண்களை மூடி திறந்து என்றும் போல் இன்றும் அவளை ஆசுவாசம் அடைய செய்தான்.
ராஜாங்கம் முதல்நாள் பேச்சற்று நின்றவர் தான் இன்றும் அப்படியே இருக்க வந்தவர்கள் வருபவர்களிடம் வாங்க, சாப்பிடுங்க என்கிற உபசரிப்புகளை தாண்டி வேறெதுவும் பேசவில்லை. அவரை யாரும் தொந்தரவு செய்யாத அளவிற்கு அதிபனின் ஆளுமை அங்கே நிறைந்து இருந்தது.
அதில் மிகவும் ஆறுதலாய் உணர்ந்த ராஜாங்கம் அஷ்மிதாவை பார்க்கும் போதெல்லாம் கண்கலங்குவதை போல பார்த்தார். அவளும் கூட்டத்தில் அவரிடம் பேச முயலவில்லை. அவரும் அதற்கு இடமளிக்கவில்லை.
“நான் கண்டிப்பா பேசுவேன்ப்பா…” என சொல்லிக்கொண்டவள் பத்மினி சொல்ல சொல்ல அனைத்தையும் கேட்டு பார்த்து செய்தாள்.
வந்திருந்த சிலரும் கிளம்பி விட வீட்டினர் மட்டுமே. பிரசாத்திற்கு அந்த வீட்டில் ஒட்டவே முடியவில்லை. அவனின் பட்டுக்கொள்ளாத தன்மையில் அதிரூபனுக்கு வருத்தமாய் இருந்தது.
பேச்சு கொடுத்து அவனை இலகுவாக்க முயன்றான். உடன் சந்தோஷ், அர்னவை சேர்த்துக்கொள்ள விஷ்ணுவின் அலப்பறையில் சந்தோஷும் இணைந்துகொள்ள அவ்விடம் சிறிது நேரத்திலேயே கலகலப்பானது.
விஷால் வேலை இருக்கிறது என கழன்றுகொண்டதால் அவன் அங்கே இல்லை. அவன் வர விரும்பவில்லை. முதல் நாள் முழுவதும் உறக்கம் பிடிக்காமல் சுற்றிகொண்டிருந்தவனின் மனதில் வெளிச்ச கீற்றாய் அஷ்மிதா மண்டபத்திலிருந்து வெளியேறிவிட்டாள் என்கிற செய்தியில் மனமகிழ்ந்து போனான்.
ஒருவேளை இப்பொழுதுதான் தன்னுடைய விருப்பத்தை கன்ஸிடர் செய்து திருமணத்தில் விருப்பமில்லாமல் வெளியேறிவிட்டதாய் நினைத்துக்கொண்டிருக்க அவளோ பிரசாத்துடன் வந்து தங்களுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்தது என்கிறாள். வெறுத்தவன் அப்போது சென்றவன் தான். அதன் பின் வரவே இல்லை.
இரவு விருந்து முடிந்ததும் அடுத்த சடங்குக்கான ஏற்பாடுகள் நடக்க ஆரம்பித்தது. பிரசாத் எப்போதடா போய் உறங்குவோம் என்கிற நிலைக்கு வந்துவிட்டான். அந்தளவிற்கு அவனை தூக்கம் ஆட்டிப்படைத்தது.
ஒருவித ஆசுவாசம். அலைப்புருதல்கள் அற்ற நிர்மலமான மனது. பலநாட்கள் உறக்கம் தொலைத்த அவனுக்கு அன்று ஒரு நிம்மதி கிடைக்க கண்களை சுழற்றியது.
“பிரசாத், வாங்க. அஷ்மி ரூம் காமிக்கிறேன். ப்ச், உங்க ரூம் காமிக்கிறேன்…” என அதிரூபன் புன்னகையுடன் சொல்லவும்,
“ஓஹ், இன்னைக்கு அதுல்ல. வசமா சிக்கின வெள்ளெலி…” என மர்மமாய் புன்னகைத்தவனின் முகத்தை பார்த்து அவன் சொல்லியதை கேட்ட அதிரூபனுக்கு தான் அடிவயிறு கலங்கியது.
“அடேய் தம்பி, ஓவரா உஷ்ணபடாதடா. பல்ப் எரியுதே. தனியா சிக்க போறது அவ இல்ல. நீ தான்…” என புலம்ப,
“என்ன பாஸ், ஏதோ நினைக்கிறீங்க…” உறக்கமெல்லாம் பறந்து தனியே அஷ்மிதாவை சந்திக்கபோகும் உற்சாகம் அவனை பற்றிக்கொள்ள அதே உற்சாகத்துடன் அதிரூபனை பார்த்தான்.
“ஒண்ணுமில்லையே, ஒண்ணுமில்லை. சும்மா பாப்பா தூங்கிட்டாளான்னு நினைச்சேன். அதான். அதான்…” என சொல்ல,
“உங்க குழந்தை ரொம்ப அழகா சிரிக்குது பாஸ். கூப்பிட்டா தான் வரமாட்டேன்னு பிடிவாதம் செய்யுது…” என்று அவனிடம் பேசிக்கொண்டே அந்த அறைக்கு வந்துவிட,
“ஓகே பிரசாத், என்னை பாஸ்னு எல்லாம் கூப்பிட வேண்டாம். எல்லாரை மாதிரியும் நீங்களும் பேர் சொல்லியே கூப்பிடுங்க…” என நட்பு பாராட்ட,
“தேங்க் யூ பாஸ். தப்பா நினைச்சுக்காதீங்க. சீக்கிரமே அப்படி கூப்பிட ட்ரை பன்றேன்…” என்றவன் அறையை பார்க்க கட்டிலில் அலங்காரங்கள் எதுவும் பண்ணப்படாமல் எப்போதும் போல இருக்க அதிலேயே லேசாய் நிம்மதி ஆனது.
“ஓகே, பை. குட்நைட்…” என அதிரூபன் சொல்லிவிட்டு வந்துவிட்டான்.
அறைக்குள் நுழைந்தவனோ சுற்றிலும் பார்த்துவிட்டு அஷ்மிதாவிற்காக காத்திருந்தான்.  
கதவு திறக்கப்பட்டு ஓசை கேட்க, “திறந்திருந்த கதவு எப்படி மறுபடியும் திறக்கும்?” என்கிற குழப்பத்துடன் அறை வாசலை பார்த்தால் அங்கே இல்லாமல் அவனின் முதுகுக்கு பின்னால் இருந்து சத்தம் கேட்டது. திரும்பி பார்த்தவன் திகைக்க,
“என்ன முன்ன பின்ன பாக்காத மாதிரி இந்த பார்வை?…” என கேட்டுக்கொண்டே  தோளில் கிடந்த டவலை சோபாவின் மேல் போட்டவள் அறை கதவை பூட்டிவிட்டு,
“உள்ள வந்தா டோர் லாக் பண்ணமாட்டீங்களா?… என அதற்கும் கேள்வி கேட்க,
“நீ வருவன்னு நினச்சேன். அதான் லாக் பண்ணலை. ஆனா இப்படி வருவன்னு நான் நினைக்கலை…”
“இப்படி வருவன்னா? பாத்ரூம்ல இருந்தா?…”என்று கேட்க அவனோ அவளை மேலும் கீழும் பார்த்தான்.
பாட்டியாலா பேண்டும் டிஷர்ட்டுமாய் அவள் நின்றிருக்க அவனின் பார்வையில் கேலி பரவ,
“இந்த ட்ரெஸ்ல என்ன ப்ராப்ளம் உங்களுக்கு?…”
“ட்ரெஸ் தான் ப்ராப்ளம்…” வம்பாய் பதில் சொல்ல,
“வாட் எ ரொமான்ஸ் மிஸ்டர் ஹஸ்…” என்று சில்லாகித்து கைதட்ட,
“ஏய் என்ன எதுக்கெடுத்தாலும் ஹஸ்? உனக்கு மரியாதைனா என்னன்னே தெரியாதா? அதிலும் பர்ஸ்ட் நைட் ரூம்ல போடற ட்ரெஸ்ஸா இது?…” என்று எறிந்துவிழுந்தான்.
“வேற எப்டி இருக்கனும்? புடவை கட்டி தலை நிறையா பூ வச்சு உங்க கால்ல விழுந்து. எந்த காலத்துல இருக்கீங்க ஹஸ்?…”
“அதான கல்யாணம் ஆகினதை மறைச்சு இன்னொரு கல்யாணத்துக்கு ரெடியாகின உன்கிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்?…” என வேண்டுமென்றே அவளை காயப்படுத்த,
“அங்க மட்டும் என்ன வாழுதாம்? நானாவது மாப்பிள்ளை நீதான்னு தெரிஞ்சு பேசாம இருந்தேன். நீ பொண்ணு யாருன்னே தெரியாம தாலிகட்ட கிளம்பி வந்துட்ட. நீ என்னை பேசறியா?…” என்றவள்,
“இன்னும் அன்னைக்கு நடந்ததை கல்யாணம், கல்யாணம்னு பினாத்திக்கிட்டே இருந்த கடுப்பாகிடுவேன் பார்த்துக்க. திரும்ப திரும்ப அதை கல்யாணம்னா எனக்கு வர டென்ஷன்ல இழுத்து வச்சு அப்பிடலாம்னு தோணுது…”
“ஏய் என்ன நானும் போனா போகுதுன்னு பார்த்தா வாய் ஓவரா நீளுது? என்னை யார்ன்னு நினைச்ச?…” என பிரசாத் வேஷ்டியை மடித்துக்கட்ட,
“நடந்ததுக்கு பேர் கல்யாணமா? இல்ல கல்யாணமான்னு கேட்டேன். மண்டையில மசாலா இருக்கறவன் இப்படி சொல்லுவானா? அன்னைக்கு அத்தனை தடவை சொல்லிட்டு தானே வந்தேன். அதுக்கு பேர் கல்யாணமே இல்லை. இப்ப வரைக்கும் அதை நான் அக்ஸப்ட் பண்ணிக்கவும் இல்லை…”
“நீ சொன்னா இல்லைன்னு ஆகிடுமா? பொண்ணாடி நீ?…”  என அவளிடம் சண்டைக்கு நிற்க,
“டவுட்டுன்னா பக்கத்துல வந்து நல்லா உத்து பாரேன். பொண்ணா இல்லையான்னு?…” என அவனை சீண்ட அவள் மீதான கோபத்தை தாண்டி ஏனோ அவளை ரசிக்க விழைந்தது அவன் மனம்.
இவ என்னை என்னன்னு நினைக்கிறா? சரிக்கு சரி நிக்கிறாளே? என உள்ளுக்குள் இனிமையாய் கொந்தளித்தான்.
இதழ்களில் பூத்த சிரிப்போடு சட்டை பட்டனை கழட்டியவன் கை சட்டையை மேலேற்றி முட்டி வரை இழுத்துவிட்டுக்கொண்டு அவளை நெருங்கினான். அவளோ இருந்த இடம் விட்டு அசையவில்லை அவனின் அருகாமையில் அசரவும் இல்லை.
ஒருவித மிதப்பான புன்னகையுடன் அவனை எதிர்கொள்ள அதில் மனம் கொஞ்சம் கொஞ்சமாய் மயங்க ஆரம்பித்தது. அவளின் கன்னம் பற்றி மூக்கோடு மூக்கை உரசி,
“என்ன பொண்ணுடி நீ? என்னை பார்த்து கொஞ்சமும் பயப்படலை…” என்று கேட்கும் போதே அஷ்மியின் விழிகளில் குறும்பு பூக்க அதில் அவன் தான் லயித்து போனான்.
அவளின் அருகாமை, பார்வை, அவளின் மென்மை அதில் தன் விரல்கள் உணர்த்தும் அவளின் ஸ்பரிசம் என ஏதோ ஒரு மாய வலைக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் புதைந்துகொண்டிருந்தான்.
பார்வை பார்த்தபடி இருக்க அதன் தாக்கம் போதையை தர அவள் மீதான கோபம், தங்கள் திருமணம் என அனைத்தையும் மறந்து மோனநிலைக்குள் கரைந்துகொண்டிருந்தவனை இழுத்து பிடித்தது அஷ்மியின் குரல்,
“இன்னும் எவ்வளவு நேரம் பார்த்துட்டே இருப்ப? நான் வேணும்னா நீ பார்க்கற மாதிரி படுத்துக்கறேன். நீ பார்த்துட்டே இரு. எனக்கு நோ அப்ஜெக்ஷன்…” என சிரிப்போடு சொல்ல அவளின் கிண்டலில் சட்டென அவளை விட்டு பின்னால் சென்றான்.
“உன்னையெல்லாம் பெத்தாங்களா? செஞ்சாங்களா?…” என கேட்க,
“அந்த டவுட் நிறைய பேருக்கு இருக்கு…” அவளும் சளைக்காமல் வாயாட இவகுக்கு தான் வாய் வலிக்கும் போலானது. அவனை பார்த்துக்கொண்டே கட்டிலின் ஒரு புறத்தில் படுத்தவள்,
“தூங்கலை?…” என கேட்க அவனின் பார்வையில் பின் அவளாகவே,
“இங்க என் பக்கத்துலையே படுத்துக்கோ. லைசன்ஸ் வாங்கியாச்சுல. வெக்கப்படாம வந்து தூங்கு. உன் கற்புக்கு நான் கியாரண்டி…” என்று வேறு கிண்டலடித்தாள்.
பிரசாத்திற்கு தான் அவளின் அலப்பறையில் முழி பிதுங்கியது.
இவளை நான் எப்படி சமாளிக்க போறேன்?  என இப்பொழுதே யோசிக்க ஆரம்பித்தான்.
அவனுக்கு தெரியவில்லை. கர்மா மட்டும் பூமாராங் இல்லை. அஷ்மி பாஷையில் அவளிடம் சாதாரணா வார்த்தை கூட  பூமாராங் தான். உடனுக்குடன் திருப்பி கொடுப்பாள்.
காதலை கொடுத்தால் காதலையும் கூட பலமடங்காக….

Advertisement