Advertisement

தென்றல் – 3
           இரவு நேரம் சாலையோரம் மெதுவாய் நடந்துகொண்டிருந்தவளின் மனது அந்த நிமிடம் சமன்பட துவங்கி இருந்தது.
இரவு ஒரு மணியை நேரம் நெருங்கிகொண்டிருக்க அதை தன்னுடைய கை கடிகாரத்தில் பார்த்தவள் சுற்றியது போதும் என நினைத்து மீண்டும் மண்டபத்திற்கு திரும்ப நினைக்கையில் ஒரு டீ கடை திறந்திருப்பதை பார்த்தாள்.
“சூடா டீ குடிச்சா இன்னும் கொஞ்சம் பெட்டரா இருக்குமே…” என சொல்லிகொண்டவள் அதை நோக்கி செல்ல ஐந்தாறுபேர் மட்டுமே அங்கே நின்றிருந்தனர்.
“அண்ணா ஸ்ட்ராங்கா ஒரு டீ…” என்ற குரலில் அனைவரும் ஏறிட்டு பார்க்க அதை எல்லாம் கண்டுகொள்பவளா அஷ்மிதா?
அங்கே போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்தவள் காலை ஆட்டிக்கொண்டே டீ போடுவதை வேடிக்கை பார்த்தாள்.
அங்கிருந்தவர்களோ அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்தனர். ஒரு பாட்டியாலா பேண்டும், டாப்பும் மட்டும் அணிந்திருக்க தூக்கி கொண்டையிடப்பட்டிருந்த முடியில் இருந்து சிலுப்பிக்கொண்டு முடிக்கற்றைகள் காற்றில் பறந்தது.
அவளுக்கு அது மிகவும் சாதாரண உடை தான். ஆனால் அது அவ்விடத்திற்கு பொருந்தாமல் அவளை பெரிய இடத்து பெண் என்பதை அப்பட்டமாக காட்டியது. ஆனால் ஏன் இப்படி ராத்திரியில் தனியாக இந்த பெண் வந்திருக்கிறது? என நினைத்தனர்.
ஒருவேளை பெண் காவலராக இருக்க கூடுமோ என்றும் சந்தேகமாய் பார்த்தனர். ஆம், கொஞ்சமும் அச்சமின்றி அவள் அமர்ந்திருந்த தோரணையும் பார்வையில் இருந்த மிடுக்கும் அப்படியும் இருக்குமோ என்று நினைக்கவைக்க அனைவரிடத்தில் சிறிது எச்சரிக்கை பரவியது.
அனைவருமே ஒருவித மரியாதைத்துவத்துடன் அவளை பார்த்தனர். டீயை கொண்டுவந்து கொடுத்ததும் வாங்கி குடிக்க ஆரம்பித்தவள் ஒரு கார் வரும் ஓசையில் நிமிர்ந்து பார்த்தாள்.
காரில் இருந்து இறங்கிய ட்ரைவர் இரண்டு டீயை சொல்லிவிட்டு அஷ்மிதாவை பார்த்ததும் அடையாளம் கண்டுகொண்டார்.
“வணக்கம் டாக்டரம்மா. எப்படி இருக்கீங்க?…” என கேட்க அவரை அடையாளம் தெரியாமல் இவள் பார்த்தாள்.
“ஒரு ரெண்டு மாசம் முந்தி காலேஜ்ல சண்டை போட்டுட்டு தலையை உடச்சுட்டு வந்த என் புள்ளைக்கு வைத்தியம் பாத்தீங்களே. நீங்க தினத்துக்கும் ஆயிரம் பேர் பார்ப்பீங்க. என்னை மறந்திருப்பீங்க. ஆனா நான் மறக்கலைங்க…” என்றதும் தான் அஷ்மிதாவிற்கும் ஞாபகம் வந்தது.
“ஆமா, ஞாபகம் இருக்கு. உங்க பொண்ணு நல்லாவே ஞாபகம் இருக்கு. சொல்லுங்க இப்போ உங்க பையன் எந்த வம்புக்கும் போகாம இருக்கானா?…” என கேட்டவள்,
“டீ சொல்லிட்டீங்களா? நான் சொல்லவா?…” எனவும் கேட்க,
“இந்த மனசு தானம்மா உங்களை மறக்காம வச்சிருக்கோம். உங்க புண்ணியத்துல அவன் நல்லாவே இருக்கான். நல்ல வேலையில சேர்ந்துட்டு உங்களை பார்க்க வருவேன்னு சொல்லியிருக்கான்…” என மகிழ்வாய் அவர் சொல்ல,
“என் புண்ணியமா? இப்படி எல்லாம் சொல்லகூடாது. அவங்கவங்க பாவ புண்ணியம் அவங்கவங்களுக்கு. உங்களோட புண்ணியமும், வேண்டுதலும் தான் அவனை காப்பாத்தி இருக்கு. நான் கேட்டேன்னு சொல்லுங்க…” என்றவள்,
“உட்காருங்க…” என சொல்ல,
“இருக்கட்டும் டாக்டர். எங்க ஊர்க்காரர் வந்திருக்காரு. கார்ல தான் இருக்காரு. அதான் டீ சாப்பிடலாம்னு வந்தோம்…” என்று சொல்லும் பொழுதே காரிலிருந்து இறங்கினான் அவன்.
அவனை பார்த்ததும் ஒரு நிமிடம் இங்கே இவன் ஏன் என குழம்பியவள் பின் கண்டுகொண்ட பாவனை முகத்தில் வந்திருக்க அதே நேரம் அவனும் இவளை பார்த்துவிட்டான்.
அவன் இவளை நெருங்குவதற்குள் இவளே அவனின் பக்கம் சென்றாள்.
“ஏய் நீங்க மிஸ்டர் விஸ்வாசம் தானே?…” என்றபடி அஷ்மிதா வந்து அவனின் முன்னால் நிற்க அவளை நொடியில் இனம் கண்டுகொண்டவன் முகத்தில் பலமடங்கு ஒளிகற்றைகள் வாரியிறைக்கப்பட்டது அஷ்மியின் வருகையால்.
கொஞ்சம் விட்டிருந்தால் அடுத்த கேள்வியை கேட்டிருப்பாள். ஆனால் அதற்கு எல்லாம் பிரசாத் இடம் கொடுத்தால் தானே? கோபம் கரையுடைத்தது.
அதே நேரம் கண் மூடி திறக்கும் முன்னால் பிரசாத் அறைந்திருந்தான் அஷ்மிதாவை. ஒரு நொடி என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை அஷ்மிதாவிற்கு.
“டேய் என்னடா அடிச்சுட்ட?…” என கேட்டவளுக்கு கோவம் வருவதற்குள்,
“ஒரு அறையோட விட்டேன்னு சந்தோஷப்பட்டுக்க. உன்னை பாத்த நிமிஷம் என்னென்னவோ பண்ணனும்னு நினச்சேன். ஆனா இருக்கிற கோவத்துக்கும், நிக்கிற இடத்துக்காகவும் மட்டும் தான் இந்த அடி…”
“நீ அடிச்சா நான் வாங்கிட்டு போகனுமோ?…” அவனை திரும்பவும் அறைந்துவிடும் வேகம் அஷ்மிதாவின் பேச்சில் தெறிக்க அதை கண்டுகொள்ளாதவனின் அலட்சியம் இன்னமும் அவளை சூடேற்றியது.
“என்கிட்டையே உன் திமிரை கட்டுறயா?…” என்று எகிறிய அஷ்மியின் பேச்சு எதுவும் பிரசாத்திடம் எடுபடவில்லை. அவளை அவனின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருந்தான்.
அஷ்மிதாவின் கையை பிடித்து பின்பக்கமாய் சுழற்றி அணைத்தவன்,
“உன்னை நான் ஊர் ஊரா தேட நீ இங்கய இருக்க?…” என இறுக்கியவன் காரில் ஏற்றபார்க்க,
“என்னய்யா நடு சாமத்துல வந்து பொம்பள புள்ளைய தூக்கிட்டு போறவன்?…” என டீக்கடையில் இருந்த ஒருவர் கேட்க அருகில் இருந்தவன் அதான என எசை பாட அவர்களை கண்டு அவன் முறைத்த முறைப்பில் கப்சிப்பென வாயை மூடினர்.
அஷ்மிதாவிற்கோ இவனுக்கு இத்தனை கோபம் வருமா என்று தோன்றியது. அவள் அதிலேயே சிறிது தடுமாற இலகுவாக பிரசாத்தால் அவளை அவனின் கைவளைவிற்குள் கச்சிதமாக நிறுத்த முடிந்தது.
“அண்ணே, டீக்கு காச குடுத்துட்டு வண்டியில ஏறுங்க…” அவனின் குரலில் அப்படி ஒரு ஆளுமை. கட்டளை.
“இவன் கட்டளையே சாசனத்துக்கு பிறந்திருப்பான் போலையே? இந்த காட்டு காட்டறான்?…” என முனக,
“ஏறு வண்டியில…” என அஷ்மியை உள்ளே திணிக்க முயல,
“தம்பி, டாக்டர உங்களுக்கு தெரியுமா? எதுக்கு தம்பி அவுக மேல இம்புட்டு கோவம்?…” என மெதுவாய் டிரைவர் கேட்க,
“காரை ஸ்டார்ட் பண்ணுங்கன்னு சொன்னேன்…” என்றவன் அஷ்மிதாவை பார்க்க,
“யோவ் விஸ்வாசம், நான் சொல்றத கொஞ்சம் கேளுய்யா…” என்ற அவளின் பேச்சு எதுவும் அவளின் காதில் விழுவதை போல தெரியவில்லை.
“வாயை மூடிட்டு ஏறு…” என்று ஒரே தள்ளாக அவளை உள்ளே தள்ளி தானும் ஏறிக்கொண்டவன் மண்டபத்தின் முகவரியை சொல்லி வண்டியை வேகமாக விடுமாறு பேசியவன் அஷ்மிதாவை முறைப்பாய் பார்த்தான்.
“இப்பவாச்சும் நான் சொல்றதை கேளுங்க மிஸ்டர். உங்க நல்லதுக்கு தான் சொல்றேன்…” என்ற அஷ்மிதாவை முறைத்து வாயை மூடு என்பதை போல சைகை செய்ய,
“போடா டேய், உன் நல்லதுக்கு சொன்னா என்கிட்டையே காட்டுறியா? போய் மொக்கை வாங்கு…” என அஷ்மியும் கண்டுகொள்ளாமல் சாலையை பார்த்தாள்.  
பிரசாத்தின் கோவம் மட்டுப்படவே மறுத்தது. எந்த பெண்ணும் செய்ய தயங்கும் ஒரு காரியத்தை வெகு இலகுவாய் செய்துவிட்டு அந்த உறுத்தல் சிறிதும் இன்றி இருக்கிறாளே என நினைத்து நினைத்து தனக்குள் கனன்றான்.
சிறிது நேரத்தில் மண்டபத்தின் வாசலில் கார் வந்து நிற்க அசால்ட்டாய் இறங்கினாள் அஷ்மிதா. அவள் முகத்தில் எந்த ஒரு பாவனையையும் கண்டுகொள்ள முடியவில்லை.
அஷ்மிதா இறங்கி காரில் சாய்ந்துகொண்டு கைகளை கட்டி இவனை பார்த்த பார்வையில் ஒரு நிமிடம் பிரசாத் தான் தடுமாறி போனான்.
“தம்பி காசு எல்லாம் வேண்டாம்…” என ட்ரைவர் சொல்லும் பொழுதே அவரின் பாக்கெட்டில் ரூபாய் நோட்டுக்களை திணித்தவன்,
“நாளைக்கு காலையில நீங்க கண்டிப்பா கல்யாணத்துக்கு வரனும். வருவீங்கள்ள…” என்று சொல்ல வேகமாய் தலையாட்டி சென்றார் ட்ரைவர்.
“பெரிய சண்டியரு, சாஃப்டா இன்வைட் பண்ண கூட முடியாதாமா? உள்ள வாடி மகனே…” என்ற பார்வை பார்த்தவள் முன்னே நடக்க,
“ஏய் நில்லு, என்னவோ உன் வீட்டு விசேஷம் மாதிரி கையை வீசிக்கிட்டு போற?…”
“ப்ச்…” என சலிப்பாய் அவனை கண்டுகொள்ளாமல் முகம் திருப்பியவளின் கையை இழுத்து தன் கரங்களுக்குள் வைத்தவன்,
“என் கூட சேர்ந்து வா. இப்படி…” என்று மிரட்டலாய் சொல்ல உதட்டை சுழித்துக்கொண்டு பார்த்தாள்.
“உள்ள நான் பேசறதுக்கு எதாச்சும் அகைன்ஸ்ட்டா பேசின நான் மனுஷனா இருக்க மாட்டேன்…”
“மிருதா மிருதா மிருதா…” என அஷ்மி பாட இவ என்ன லூஸா என்னும் பார்வை பார்த்தவன்,
“என்ன எடக்கா? இந்த லந்தெல்லாம்  என்கிட்டே வச்சுக்காத…” என்று சொல்லி விறுவிறுவென அவளை இழுத்துக்கொண்டு கேட்டை தாண்டி உள்ளே செல்ல அங்கே மண்டபத்து ஹாலில் இரு குடும்பத்தினரும் கையை பிசைந்துகொண்டு நின்றிருந்தனர்.
“போச்சுடா அதி நிக்கிறான்…” என அஷ்மி பார்க்க தன் குடும்பத்துடன் அஷ்மிதா குடும்பமும் நிற்பதை பிரசாத் பார்த்தான். தயக்கமின்றி இன்னும் வேகமாய் அவளோடு உள்ளே செல்ல பார்த்தவர்களின் நிலையை சொல்லவும் வேண்டுமா?
பிரசாத்துடன் எப்படி அஷ்மி என அவனின் குடும்பமும், அஷ்மியுடன் எப்படி பிரசாத் என அவளின் குடும்பமும் குழப்பமாய் பார்க்க ராஜாங்கத்தின் முன்னால் வந்து நின்றான் பிரசாத்.
“ஸாரி டு சே திஸ் ராஜாங்கம் ஸார். என்னால உங்க பொண்ணை கல்யாணம் பண்ணிக்க முடியாது. ஏனா எனக்கு இவளுக்கும் ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு. இதை இப்ப இந்த நேரத்துல நான் சொல்றது தப்புதான். ஆனா வேற வழி இல்லை…”
மிக உருக்கமாக ஒரு தந்தையின் நிலையில் இருந்து அந்த சூழ்நிலையை யோசித்து பார்த்தவன் வசனம் பேச அஷ்மிக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. அடக்கிக்கொண்டாலும் அவளின் கண்கள் காட்டிகொடுக்க அதிரூபன் அஷ்மிதாவை அதிர்ச்சியாய் பார்ப்பதை அப்போதுதான் கண்டாள்.
“பத்தவச்சுட்டியே பரட்ட…” என்று பிரசாத்தை பார்த்து அவள் மெதுவாய் சொல்ல அவனுக்கு புரியாமல்,
“என்ன, என்ன சொல்ற?…” என்று கேட்டவன் அவனின் வீட்டாட்களை பார்த்தான்.
யாரும் கோபப்படாமல், திட்டாமல், அறிவுரை கூறாமல் சண்டை பிடிக்காமல் அமைதியாய் நின்றிருந்த அந்த நிசப்தம் இப்பொழுது அவனை வெகுவாய் குழப்பியது.
“நீங்க என்ன சொல்றீங்க மாப்பிள்ளை?…” தான் கேட்டது உண்மையா என தெரிந்துகொள்ள ராஜாங்கம் கேட்க,
“இங்க பாருங்க மாப்பிள்ளைன்னு சொல்லாதீங்க. சங்கடமா இருக்கு. நான் இன்னொருத்திக்கு புருஷன். எங்க மேரேஜ் எதிர்பாராம நடந்தது. அதுக்கு இப்ப உங்கட்ட விளக்கம் சொல்ல முடியாது. உங்க பொண்ணுக்கிட்ட நீங்கதான் எடுத்து சொல்லனும்…” என்று மீண்டும் அவன் சொல்ல,
“அடங்கமட்டானா இவன். ஏற்கனவே அவங்க குழம்பியிருக்காங்க. இவன் முழுசா குட்டையை குழப்பி குட்டிசுவராக்காம விடமாட்டான் போலவே…” என்றவள் அதிபனிடம் இறைஞ்சும் பார்வை பார்க்க அவனோ தீயாய் பார்த்தான்.
“அம்மாடியோவ் காலி நான்…” என்று சிணுங்கலுடன் அஷ்மி பார்க்க,
“அவரோட பொண்ணுக்கு மாப்பிள்ளை நீங்க. உங்களை மாப்பிள்ளைன்னு கூப்பிடாம வேற யாரை கூப்பிடுவார் மிஸ்டர் பிரசாத்?…” அதிரூபன் முன்னே வந்து கேட்க,
“நான் தான் என்னோட சூழ்நிலையை சொல்லிட்டேன். திரும்பவும் அவருக்கு நான் மாப்பிள்ளைனா டென்ஷன் ஆகுது…” பிரசாத் புரிந்துகொள்ள அவர்கள் மாட்டினரே  என்கிற எரிச்சலில் பேச,
“இப்பவும் நீங்க அவரோட மாப்பிள்ளை தான். ஏனா அஷ்மி அவர் பொண்ணு. அதாவது இப்ப உங்க மனைவின்னு சொல்ற இந்த பொண்ணு அஷ்மிதா அவரோட பொண்ணு. இப்ப சொல்லுங்க நீங்க அவர் மாப்பிள்ளை தானே?…” அதிரூபன் பொறுமையாக அவனிடம் சொன்னாலும் அவனுக்குள் அத்தனை கோபம் முகிழ்ந்தது.
“வாட்?…” என பிரசாத் தன் வீட்டினரை பார்க்க தனத்திற்கு அழுகையே வந்துவிட்டது. என்ன காரியம் செய்திருக்கிறான் தன் மகன் என?
சூழ்நிலையை கிருஷ்ணமூர்த்தி தான் கையில் எடுத்தார்.
“இதை பெருசு பண்ண வேண்டாம். கடவுளா ஏற்படுத்தின பந்தம். அதுவும் இருமுறை வலுவான பந்தம். இதை பத்தி என்ன நடந்ததுன்னு பொறுமையா நாளைக்கு பேசுவோம். இப்போதைக்கு அவங்கவங்க அறைக்கு போய் ரெஸ்ட் எடுங்க. நாளைக்கு விடியக்காலை முகூர்த்தம்…” என சொல்லவும் அவர்கள் குடும்பத்தினர் ராஜாங்கத்தையும் அதிரூபனையும் பார்த்தனர்.
ராஜாங்கம் ஏற்கனவே உடைந்து போய் இருந்தார் அஷ்மிதா தன்னிடம் மறைத்ததை நினைத்து. இதுவே மாப்பிள்ளை வேறாக இருந்திருந்தால்? நினைக்கவே நடுக்கமாய் போனது அவருக்கு. அதனால் அவர் எதுவும் பேசாமல் இருக்க இனி இதை விவாதித்து ஒரு பயனுமில்லை என நினைத்த அதிரூபன்,
“ஓகே அங்கிள், நீங்க போய் தூங்குங்க. நாங்களும்…” என்றவன் ராஜாங்கத்தை பார்க்க அந்த தந்தையின் முகம் அவனிடம் வெளிப்படுத்திய உணர்வுகளை வார்த்தையில் நிறைக்க முடியாது.
ஒரு மாதிரி தவித்துபோனான் அதிரூபன். இதுவரை அப்படி இவன் பார்த்ததே இல்லையே. அஷ்மிதாவின் மேல் கோவம் கோவமாக வந்தது.
ஆனால் அவளிடம் இதை பற்றி விசாரிக்க நேரமுமில்லை. கோபத்தை காட்டுவதற்கும் நேரமில்லை. அவளை முறைத்துவிட்டு ராஜாங்கத்தை கை தாங்களாக அழைத்து சென்றவன் திரும்பி பார்த்து,
“அஷ்மி போய் தூங்கறியா? இல்லையா?…” என உறும,
“போறேன்டா…” என்று மெதுவாய் நடந்து சென்றாள்.
அனைவரும் போய்விட்டார்களா என திரும்பி பார்த்தவள் பிரசாத் மட்டும் அங்கேயே நிற்பதை பார்த்ததும் நிம்மதியானவள் சொடக்கு போட நிமிர்ந்து அவளை பார்த்தான்.
“இங்க வா…” என ஒரு விரல் நீட்டி அழைக்க அவள் மீது கோபம் கூடியிருந்தவன்,
“கார்ல வரப்ப சொல்லியிருக்கவேண்டியது தான? ஊமைகொட்டான் மாதிரி உட்கார்ந்திருந்தள்ள. இப்ப பாரு எல்லாரும் என்னை என்னனு நினைச்சிருப்பாங்க?…” என அருகில் வந்து பொரிய,
“ஹ்ம்ம் இன்னுமா உனக்கு சந்தேகம்? லூஸுன்னு நினைச்சிருப்பாங்க. நான் தான் அப்பவே சொல்ல வந்தேன்ல. நீ என்னவோ பெரிய இவன் மாதிரி மூச் மூச்ன்னு மிரட்டிட்டு இருந்த? என்ன நான் பயந்து இருந்தேன்னு நினைச்சியா?…” மிதப்பாய் கேட்க,
“நீ திமிர்பிடிச்சவன்னு எனக்கு தான் அன்னைக்கே தெரியுமே? ரொம்ப தைரியமானவளும் கூட. உன் தைரியத்தை தான் இன்னைக்கு வரை மறக்கமுடியாம உன்னை தேடிட்டு இருந்தேன்…” என்றவன்,
“அப்ப நான் தான் மாப்பிள்ளைன்னு உனக்கு முன்னமே தெரியுமா?…” என்று கேட்க,
“ஏன் தெரியாம? யார்ன்னே தெரியாத ஒருத்தனை என் வாழ்க்கைக்குள்ள நுழைய நான் அனுமதிச்சிடுவேனா? அஷ்மி எப்பவுமே அப்படி முடிவெடுக்க மாட்டா…”
“உன் பேர் அஷ்மியா?. அன்னைக்கு வேற பேர்…” என யோசித்தவன்,
“ராஸ்கல் ஏமாத்தவா செஞ்ச? உன்னை…” என மீண்டும் கையை ஒங்க அதை தடுத்தவள் தன் கரத்தை மின்னல் வேகத்தில் அவனின் கன்னத்தில் இறக்கினாள் அஷ்மிதா.
அதில் அதிர்ந்து போனவன் கன்னத்தை பற்றிக்கொண்டு அவளை கடுமையாய் பார்தத்தவன் மீண்டும் ஒரு அறை குடுக்க நினைக்க அவனின் எண்ணவோட்டத்தை கண்டுகொண்டதை போல,
“இன்னொரு அடி அடிக்கனும்னு நினைச்ச திரும்பவும் அதையும் திருப்பி கொடுப்பேன். நீ அடிக்க அடிக்க திரும்ப அது உன்னை வந்து சேர்ந்துட்டே இருக்கும். யோசிச்சுக்கோ. உன் கிட்ட அடி வாங்கற அளவுக்கு நான் எந்த தப்பும் செய்யலை. நான் தப்பே செஞ்சிருந்தாலும் அடிச்சிடுவியா நீ?…”
“நீ என்னை அடிச்சப்பவே நான் உனக்கு இதை திருப்பி கொடுத்திருக்கனும். ஆனா அப்போ இருந்த சூழ்நிலை வேற. நீயும் ஏதோ குழப்பத்தில தான் வெளில சுத்த வந்திருக்கன்னு நினச்சேன்…”
“இங்க பாரு இப்ப இங்க தனியா கூப்பிட்டு உன்னை அடிக்க தெரிஞ்ச என்னால எல்லார் முன்னாடியும் அடிக்க தெரியாதா? என்னை யாரும் கேட்க முடியாது. ஏன் அடிக்கலை தெரியுமா? நாளைக்கு நீ எனக்கு புருஷனா வர போறவன். உன் மான அவமானம் என்னையும் சேர்ந்தது. இந்த அஷ்மி என்னைக்கும் யார் முன்னாடியும் தலை குனிஞ்சிட மாட்டா…”
“பொம்பளைன்னா ஈஸியா கை நீட்டுவியோ? என்னை என்ன உன் அடிமைன்னு நினைச்சியா? பொண்டாட்டிட்ட அடி வாங்கிட்டோமேன்னு நீ அவமானப்படாம காப்பாத்தி இருக்கேன். ஆனா பொண்டாட்டி ஆனப்பறமும் கை நீட்டுவேன் காலை நீட்டுவேன்னு இருந்த தொலைச்சிடுவேன் பார்த்துக்க. நான் யோசிக்கவே மாட்டேன். எனக்கு என்னோட செல்ப் ரெஸ்பெக்ட் அவ்வளவு முக்கியம். புரியுதா?…”
அஷ்மிதா பேச பேச விழி விரித்து கேட்டுகொண்டிருந்தவனுக்கு கோபம் இருந்தாலும் இப்போதைக்கு அதை இங்கே காட்டவேண்டாம் என அமைதியானான்.
“என்கிட்டையே உன் திமிரை காட்டறியா?. உங்கப்பா முகத்தை தொங்கப்போட்டுட்டு போனாரே அப்ப பேசியிருக்க வேண்டியது தானே? கொஞ்சமும் கில்டிநேஸ் இல்லாம உன்னால எப்படி வாயடிக்க முடியுது?…”  
“சரியான பெட்ரோமாஸ் லைட்டுடா நீ…” என்றதும் பொங்கியவன் அவளின் கழுத்தை பிடிக்க போக ஒற்றை பார்வையில் அவனை நிறுத்தினாள் அஷ்மி.
“உண்மையை சொன்னா உனக்கு கோவம் பொத்துக்கிட்டு வருதோ? எங்கப்பாவை சமாதானம் செய்ய எனக்கு தெரியும். எனக்கு  எதுக்கு கில்டி? ப்ராக்ட்டிக்கலா பார்த்தா நான் என்னையும், உன்னையும் சேவ் பண்ண தான் அந்த முடிவெடுத்தேன். இதுல எந்த இன்டேன்ஷனும் இல்லை…”
“இதை எங்கப்பாக்கிட்ட சொல்லாம மறைச்சதுக்கு அவரோட உடல்நிலை தான் காரணம். நீ சொன்னியே கல்யாணம். என்னை பொறுத்தவரை அது நம்மை காப்பாத்தின சேஃப் கார்ட். தட்ஸ் ஆல். இதுல எனக்குன்னு சுயநலமா நான் யோசிக்கவே இல்லையே…” என்றவளை கூர்மையாக பார்த்தவன் யாரோ வரும் அரவம் தெரிய,
“உன்னை நாளைக்கு பார்த்துக்கறேன்…” என விரல் நீட்டி எச்சரிக்க,
“இவ்வளவு நேரம் பார்க்காமலா இருந்த?…” அஷ்மி கலாய்க்க முறைப்புடன் அங்கிருந்து சென்றான் பிரசாத். அவனுக்கே அவனின் அமைதி புரியவில்லை.
அஷ்மிதா மேல் எந்தளவிற்கு கோபம் இருக்கிறதோ அந்தளவிற்கு வேறு ஒன்று அவனை ஆட்டிவைத்தது. அதுதான் அவளை பார்த்ததும் ஆசுவாசப்படுத்தவும் செய்தது, ஆர்ப்பாட்டம் செய்யவும் வைத்தது.
தன் கன்னத்தை தடவிக்கொண்டே வந்தவன் எதிரில் வந்த விஷ்ணுவை முட்டிக்கொண்டு நின்றான்.
“என்னடா?…” என கேட்க,
“உன்னை தூங்க கூப்பிட வந்தேன். இப்பத்தான் வந்தேன். ஜஸ்ட் ஒரே ஒரு செகேன்ட் முன்னாடி தான்…” என உளறிக்கொட்ட,
“அதான் பார்த்துட்டல? வாடா…” என அவனை இழுத்துக்கொண்டு உள்ளே சென்றவனை பார்த்து நின்றவள் தன் அறைப்பக்கம் செல்ல போக அங்கே அதிரூபன் நின்றிருந்தான் இவளை அழுத்தமாய் பார்த்தவண்ணம்.
இரண்டுபேருக்கும் முட்டிக்கொண்டாலும் அத்தனை கலவரத்திலும் இதற்கு மேலும் இத்திருமணம் தேவையா என அவளுக்கும் தோன்றவில்லை. அவனுக்கும் தோன்றவில்லை.

Advertisement