Advertisement

தென்றல்  – 28(1)

                காதலில் ஆதி என்பதும் அந்தம் என்பதும் ஏது? எப்போது தொடங்கியது இந்த நேசம் இருவருமே அறியார். முடிவென்பதும் உண்டா என்றால் நிச்சயம் இல்லை.

அஷ்மி பிரசாத் இடையே சில முரண்பாடுகள் இருந்தாலும் அதையும் தாண்டிய அவர்களின் காதல்  குறைகளை கடந்து நிறைகளில் சென்று நின்றது.

அடுத்த ஒரு மாதத்தில் அஷ்மியுடன் ஆக்ரா சென்றவன் அங்கு விதவிதமாய் புகைப்படங்களை எடுத்து தள்ளிக்கொண்டிருந்தான்.

அதனோடு அதை அதிரூபனுக்கும் ராஜாங்கத்திற்கும் அனுப்பிவைக்க ஆச்சர்யமாய் பார்த்தாள் அஷ்மி.

“உனக்கு அவங்ககிட்ட நீ ஆக்ரா போனதை சொல்லனும். சொன்னா யார் யார் போனீங்கன்னு கேட்பாங்க. போட்டோஸ் காமிக்கனும். இதெல்லாம் சொன்னா ஏன் என்னை விட்டுட்டு போனன்னு சொல்லவேண்டியதாகிடும்னு அதை மறைக்க எவ்வளவு கஷ்டப்படற?…”

“இப்போ எந்த கஷ்டமும் இல்லை. தாஜ்மஹால் பார்த்தாச்சு. என்னோட போட்டோஸ் எடுத்தாச்சு. இப்ப அதை அதிக்கும், மாமாவுக்கும் அனுப்பியாச்சு. மறைக்கிறோம்னு நீ எதையும் இனி நினைக்க வேண்டாம்…”

அவன் சொல்லவும் காதல் சொட்ட சொட்ட அவனை பார்த்தவண்ணம் நின்றாள். அவளை பார்வையில் குளிர்ந்தவன்,

“எப்படி என்னோட ஐடியா?…” என்று காலரை தூக்கி சொல்ல தன் நெகிழ்வை மறைத்து அவனை முறைத்தவள்,

“அப்போ வெறும் போட்டோஸ்க்காக மட்டும் தான் இங்க கூட்டிட்டு வந்தீங்களா? நான் கூட ரொமான்ட்டிக் மூட்ல கூட்டிட்டு வந்து லவ் பீல் குடுப்பீங்கன்னு பார்த்தேன். இவ்வளோ தானா நீங்க ஹஸ்?…” என்று ப்ளேட்டை மாற்றி போட ங்கே என்று பிரசாத் விழித்தான்.

“அப்படிலாம் இல்ல அஷ்மி பீலும் இருக்கு தான். இது உனக்காக. நீ பீல் பண்ணுவன்னு தான்…”

“நான் என்ன சின்னபிள்ளையா தாஜ்மஹால் போட்டோ காமிச்சு ஏமாத்த? இதுல எந்த பீலையுமே நான் பீல் பண்ணலை…”

“போதும்டா சாமி. இந்த பீல் கூட என்னோட பீலிங்கை பார்த்து பீல் பண்ணிடும். ஆளை விடும்மா தாயே…” என்று அவளிடம் சரணடைய அவனின் ஒப்படைத்தலில் ஆர்ப்பரிப்பாய்  சிரித்தாள் அஷ்மி.

———————————————————————-

“வெள்ளெலி இன்னும் தூங்காம ஏன் ரூம்க்குள்ள வாக்கிங் பண்ணிட்டு இருக்க?…” பிரசாத் அவளிடம் கேட்க,

“ப்ச், உங்க வேலையை நீங்க பாருங்க…” அஷ்மி கோபமாய் பதில் கொடுத்தாள்.

“வேலையை பார்க்காம உன்னவா பார்த்தேன். ரொம்பத்தான். குறுக்கையும் நெடுக்கையும் நடந்துட்டே இருந்தா டிஸ்டர்ப் ஆகுதுல…” என சொல்லிவிட்டு மடியில் இருந்த லேப்டாப்பில் கவனம் செலுத்த அவனை கண்டுகொள்ளாமல் யாரோக்கோ அழைப்பை விடுத்துக்கொண்டே இருந்தாள் அஷ்மிதா.

“என்னனு கேட்டா பதில் சொல்ல மாட்டாங்க இந்த மேடம். கொஞ்ச நேரம் கழிச்சு வந்து எதாச்சும் கேட்டியா அக்கறை இல்லை இக்கரை வெள்ளைன்னு உசுர வாங்கறது…” என முனக அவனை பார்த்து முறைத்தவள்,

“ஆடிட்டர் அனுப்பின அக்கவுண்ட்ஸ் எல்லாம் டேலி ஆகிடுச்சா?…” என்றாள்.

“பார்த்துட்டு இருக்கேன்…”

“முதல்ல அதை பாருங்க. இங்க எதுக்கு பேசறேங்க?…”

“நேரம் தான். அட போம்மா…”

கடுப்பானவன் மீண்டும் அவனின் வேலையை பார்க்க நேரம் பன்னிரெண்டை நெருங்க இன்னும் பத்து நிமிடங்களே இருந்தது. கோபம் எல்லை மீற மொபைலை கட்டிலில் வீசியவள் தலையை பிடித்துக்கொண்டு படுத்துவிட்டாள்.

அதற்கு மேல் அவனால் வேலை பார்க்க முடியாமல் லேப்டாப்பை மூடிவிட்டு அவளருகே வந்து அமர அதை உணர்ந்து அவனின் மடியில் இடம் பெயர்ந்து தலைசாய்த்துக்கொண்டாள்.

“என்ன அஷ்மி?…” ஆதுரமாய் அவள் சிகை கோதியவன் அவளின் முகம் நிமிர்த்த,

“ஹஸ்…” என்று அவனின் வயிற்றில் முகம் புதைத்துகொண்டவள் நிமிரவே இல்லை.

“இப்போ சொல்ல போறியா இல்லையா?…” என்று அதட்ட,

“அதி பர்த்டே. விஷ் பண்ணலாம்னு கால் பண்ணினா இம்பார்ட்டேன்ட் மீட்டிங்க்ல இருக்கேன்னு மெசேஜ் பன்றான். இத்தனை வருஷத்துல நான் தான் பர்ஸ்ட் விஷ் பண்ணுவேன் அவனுக்கு. ஆனா இந்த வருஷம்…” என்று வருந்த,

“ப்ச், இதென்ன குழந்தை மாதிரி? அவர் தான் வேலையில இருக்கார்ன்னு சொல்லிட்டாரே? பிறகென்ன? சரி எழுந்து வா. போய் ஒரு காபி குடிச்சுட்டு திரும்ப ட்ரை பண்ணுவோம்…”

“ஒன்னும் வேண்டாம். நான் தூங்கறேன். அவனா பேசும் போது விஷ் பண்ணிக்கறேன். அது நாளைக்கா இருந்தாலும் சரி இன்னும் ஒரு மாசம் கழிச்சாலும் சரி…” என்று பெட்ஷீட்டை போர்த்த அதை இழுத்து போட்டவன்,

“எனக்கு குடிக்கனும். வந்து கம்பெனி குடு. அட்லீட்ஸ் இதுக்காவது…” என்று அவளின் கன்னம் நிமிண்ட,

“இதுக்காவதுன்னா? இப்போலாம் நீங்க பேசற மீனிங் இருக்கே. ரொம்ப பேசறீங்க ஹஸ்…” என்றாலும் அவனுடன் எழுந்து அறையை திறந்துகொண்டு வெளியில் வந்தாள் அஷ்மிதா.

“லைட்டை போடுங்க. குட்டி லைட் எப்பவும் அத்தை போட்டிருப்பாங்க தானே?…” என்றபடி தட்டு தடுமாறி ஸ்விட்ச் போர்ட் அருகே வர,

“நான் போடட்டா அஷ்மி?…” என்ற குரல் வெளிச்சத்தை பரப்பவும் செய்தது வீட்டினுள்ளும் அஷ்மியின் மனதினுள்ளும்.

“அதி…” என்ற கூக்குரலுடன் அவனின் கழுத்தை பிடித்துக்கொண்டு சுற்று சுற்றியவள் குதியாட்டம் போட்டாள் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியில். இரண்டு நிமிடங்கள் தான்.

“அவாய்ட் பண்ணினியாடா? எத்தனை கால் பண்ணேன். அட்டென் பண்ணுனியா? என்கிட்டே சொல்லவே இல்லை…” என்று அத்தனை அடியும் அடித்துவிட்டாள். சந்தோஷத்தில் கண்கள் கலங்கிப்போயின.

“உனக்கு சப்ரைஸ் குடுக்கலாமேன்னு பிரசாத் தான் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டார். அதான் இப்ப நேராவே வந்து நின்னு கேட்கறேன்ல. சொல்லு. நீ தான் பர்ஸ்ட் விஷ் பண்ணுவன்னு துவா கூட இன்னும் சொல்லலை…”

அவன் கேட்டதும் தான் சுற்றிலும் இருந்தவர்களை கவனித்தாள். துவாரகா கையில் குழந்தையுடன் நிற்க அவளுடன் ராஜாங்கம், அகிலா, ஸ்வேதா, சந்தோஷ், பத்மினி  என மொத்தமாய் வந்து நிற்க சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனாள்.

“என்னடா அதி?…” பேச்சு வராமல் திணற அவளை புன்சிரிப்புடன் பார்த்து நின்றான் அதிரூபன்.

“மெனி மோர் ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் தி டே அதி. உனக்கு நீ ஆசைப்பட்ட எல்லாமே கிடைக்கனும். நம்ம முயல்க்குட்டி உனக்கு கிடைச்ச மாதிரி. எப்பவும் சந்தோஷமா இருக்கனும். எப்பவும் எத்தனை ஜென்மத்திலும் எனக்கு கூடவே நீ இருக்கனும். இதே அதியா…” என்று வாழ்த்தி அவனின் தோள் சாய அவளின் மகிழ்வை கண்கள் பனிக்க பார்த்தவன் பிரசாத்திடம் நன்றி பார்வை செலுத்தினான்.

“அட போதும் பாஸ். வாங்க கேக் கட் பண்ணலாம்…” என்று பிரசாத் அழைக்க டைனிங் டேபிளை சுற்றி நின்றுகொண்டனர் அனைவரும்.

“ஏன்டா கேக் கட் பன்ற கத்தியை எங்கடா வச்ச?…” என்றபடி தனம் வர,

“நீங்களுமா தூங்காம இருக்கீங்க அத்தை?…” என்று அவரை பார்த்தாள் அஷ்மி.

அதன் பின்னால் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஆர்ப்பாட்டமாய் அரங்கேறியது. ஒவ்வொருவரின் மனதிலும் அந்த பொன்னான மணித்துளிகள் சேமிப்புகளாய் சேகரம் ஆகியது.

அதிலும் அஷ்மி சொல்லவே வேண்டாம். நொடிக்கொருமுறை அவளின் பார்வை பிரசாத்தை தீண்டி மீண்டுகொண்டிருந்தது. அதியுடன் பேசிக்கொண்டிருந்தவன் அதை உணர்ந்தாலும் பேச்சிலிருந்து எழாமல் அவளின் தவிப்பை ரசித்துக்கொண்டிருந்தான்.

அவனின் இந்த ரகசிய புன்னகை இவளை கொள்ளைகொண்டது. எனக்காய் இத்தனை செய்திருக்கிறானா? என பார்த்தாள்.

எனக்குன்னு பொறந்தான் பாரு, எனக்குள்ள புகுந்தான் பாரு

நெனப்பெல்லாம் கலந்தான் பாரு அவன்தான் என் உசுருக்கு வேரு

தேனை விட தித்திப்பாய் இரண்டு நாட்கள். கோடிகள் கொட்டிகொடுத்தாலும் கிடைக்காத நேரங்கள். அவளின் குடும்பம் அவளருகில் நினைக்க நினைக்க தெவிட்டவில்லை.

கிளம்பும் போதும் மகிழ்வுடன் சிறு முகசுணக்கம் இன்றி அவள் அவர்களை வழியனுப்ப கிளம்பியவர்களுக்குமே இன்னொருமுறை இதே போல் வந்து தங்கி செல்ல ஆசை பிறந்தது. அனைவரும் வந்த கார் கிளம்பிவிட பார்த்தபடி வாசலில் நின்ற பிரசாத் அஷ்மியிடம்,

“இப்ப என்ன சொல்ற?…” என அவன் புருவம் உயர்த்த,

“சொல்றதுக்கு என்ன இருக்கு?…” அவன் சொல்லிய தொனியில் இவளும் பேச,

“எவ்வளவோ இருக்கு. சொல்லலாம். பேசலாம். குடுக்கலாம்…” என இவன் அடுக்கிக்கொண்டே செல்ல,

“உள்ள வரலாங்களா தம்பி?…” என ஒருவர் பயந்து நின்றிருந்தார். சத்தம் கேட்டு  திரும்பி பார்க்க,

“வாங்க பழனி அண்ணே…” என்று உள்ளே அழைக்க அவர் சிரிக்க முயன்றாலும் அவரால் முடியவில்லை.

“இவர் ஜாதகம் பார்க்கிறவர். தரகரும் கூட…” என்று அஷ்மியிடம் சொல்லிவிட்டு,

“உள்ள வாங்க. அம்மா நேத்தே வருவீங்கன்னு சொன்னாங்க…” என பேசிக்கொண்டே உள்ளே அழைத்து சென்றான். அவரை அமர சொல்லியதற்கு,

“இருக்கட்டும் தம்பி…” என்று தனத்திற்காய் நிற்க பிரசாத்தின் முறைப்பில் உடனே அமர்ந்தும்விட்டார்.

“என்னடா பழனி முகம் இப்படி வேர்த்துப்போய் இருக்குது. பேனை கூட்டி வைபிரசாத்…” என தனம் வந்து சொல்ல சொல்லியதை செய்தவன் பைக் சாவியை எடுத்துக்கொண்டு வெளியேற பார்க்க அவனின் பின்னேயே வந்த தனம்,

“என்னடா கிளம்பிட்ட?…”

“பின்ன? என்னை பார்த்தாலே நடுங்கிட்டு அவர் உட்கார கூட மாட்டேன்னுட்டார். அதான் நீங்களே பேசுங்கன்னு கிளம்பறேன்…”

Advertisement