Advertisement

தென்றல்  – 20(1)

              எத்தனை நேரம் அங்கேயே அமர்ந்திருந்தாளோ? தனம் அஷ்மியை தேடி அங்கேயே வந்துவிட்டார்.

“என்னாச்சும்மா இங்க வந்து தனியா உட்கார்ந்திருக்க?…”

“வீட்டுக்கு போகலாமா அத்தை?…” என அவரை நிமிர்ந்து பார்த்தவள் கேட்க அஷ்மியின் வாடிய முகத்தை பார்த்த தனம்,

“உடம்புக்கு முடியலைன்னா சொல்லவேண்டியது தானம்மா. சரி வா…” என அழைத்துக்கொண்டு கிருஷ்ணமூர்த்தியடம் வந்தார். உடன் பாக்கியலட்சுமியும் இருக்க,

“வீட்டுக்கு கிளம்பறோம் அண்ணே. அஷ்மிக்கு உடம்புக்கு சரியில்லை…” என சொல்லி பிரசாத்தை பார்க்க அவன் அங்கிருப்பவர்களுடன் பேசிக்கொண்டு கவனித்துக்கொண்டு இருந்தான்.

“தனியா எப்படி போவீங்க? பிரசாத்தை கூப்பிடறேன்…” பாக்கியலட்சுமி சொல்ல,

“வேண்டாம் ஆன்ட்டி, நான் ட்ரைவ் பண்ணிப்பேன். கீ கூட என்கிட்ட தான் இருக்கு…” என சமாளிப்பாய் சொல்லிய அஷ்மி பிரசாத்தை பார்த்த பார்வையில் அவ்வளவு வெறுமை. அவனை அரை நொடி கூட முழுதாய் பார்க்க முடியவில்லை.

நந்தினியின் சொற்கள் அவளை ரணமாக்கி கொண்டிருந்தன. இப்போதைக்கு தனக்கு தனிமை தேவை என்று நினைத்தாள். எதையும் யோசிக்க முடியாமல் மூளை செயலற்று போனது போல இருந்தது.

“உடம்புக்கு முடியாததோடு எப்படிம்மா வண்டி ஓட்டுவ? இரு நான்…” கிருஷ்ணமூர்த்தி மீண்டும் பிரசாத் புறம் பார்க்க,

“அங்கிள் ப்ளீஸ், அவர் இங்க இருக்கட்டும். டென்ஷன் ஆக்க வேண்டாம். நாங்க கிளம்பறோம்…” என சொல்லியவளின் முகம் சுரத்தில்லாமல் இருக்க,

“என்ன நீங்க கோவில்ல வச்சு பொம்பள புள்ளைட்ட. அவ பார்த்துக்கறேன்னு சொல்லிட்டாள. விடுங்க….” என்ற பாக்கியலட்சுமி அஷ்மியை பார்த்து தலையசைக்க,

“மழை வந்துட்டா அவன் நனைஞ்சிடாம பார்த்துக்கங்க. காய்ச்சல்ன்னு படுத்தான்னா படுத்திருவான். சாமானியத்துக்கு சரியாகாது…” என சொல்ல அஷ்மியின் பார்வை சட்டென பிரசாத்தை தீண்டியது.

“ஓஹ் இப்போ புரிந்தது” என்னும் பார்வை அவளிடம் எதையோ விளக்க,

“எங்களுக்கு தெரியாதா தனம்? நாங்க பார்த்துக்கறோம்…” பாக்கியலட்சுமி சொல்லவும்,

“பத்திரமா கிளம்புங்க…” என்று சொல்லிய  கிருஷ்ணமூர்த்தி எங்கே பிரசாத்தை அழைத்துவிடுவாரோ? இல்லை அவனாக வந்துவிடுவானோ என எண்ணி வேகவேகமாய் தனத்தையும் பிடித்துக்கொண்டு காரில் ஏறி வீடு வந்துவிட்டாள்.

“கோவில்ல இருந்து வந்ததும் தலைக்கு குளிக்காதம்மா. முகத்தை கழுவிட்டு புடவையை மாத்திட்டு வா. நான் குடிக்க சூடா ஏதாவது எடுத்துட்டு வரேன்…” என்றதும் குளியலறைக்கு சென்றவள் இயந்திரம் போல அனைத்தையும் செய்தாள்.

“தான் ஏன் இப்படி இருக்கிறோம் என்கிற நினைப்பு வேறு அவளை படுத்த, இல்லை எதுவும் தெரியாமல் முடிவு செய்ய வேண்டாம். முழுதாய் தெரிய வேண்டும். தெரிந்துகொள்வோம்” என்று ஸ்திரமாய் நினைத்தவள் தனம் காபி கொண்டுவரவும் வாங்கி குடிக்க,

“கொஞ்சம் நேரம் தூங்கி எழுந்தா சரியாகிடும். மாத்திரை வச்சிருந்தா போட்டுக்கம்மா…” என கரிசனையாக சொல்ல விழிகள் கலங்கும் போல இருந்தது.

தன் தந்தை ராஜாங்கம், நண்பன் அதிரூபன் இவர்களுக்கடுத்ததாக அஷ்மியின் முகம் கண்டு உள்ளார்ந்த அன்புடன் கவனிக்கும் தனத்தை முன்பை விட அதிகமாய் பிடித்தது.

அவரின் மடி சாயவேண்டும் போல இருந்த உணர்வை திசை திருப்பியவள் தனத்திடம் தலையை அசைத்துவிட்டு உள்ளே வந்து படுத்துக்கொள்ள கதவை சாற்றிவிட்டு சென்றார் தனம்.

அஷ்மி படுத்த சிறிது நேரத்திலேயே அவளின் மொபைல் சிணுங்கியது. தலை பாரமாய் இருப்பதை போல தோன்ற யாரென்று பார்க்கத்தான் எழுந்து சென்றாள். அழைப்பு அதிரூபனிடமிருந்து.

“என்னடா பங்க்ஷன் எப்படி போகுது? நீ என்ன பன்ற?…” என கேட்கவும் அஷ்மியின் கண்கள் கலங்கியது.

“நீ ஏன் போன் பண்ணின அதி?…” சோர்வாய் கேட்க,

“உடம்புக்கு முடியலையா அஷ்மி? ஏன் வாய்ஸ் டல் அடிக்குது?…” மறுபுறம் அவனின் பதட்டம் இவளின் உணர்வுகளில் இறங்கியது.

“ஹ்ம்ம் கொஞ்சம் ஹெட்டேக். என்ன சொல்லு…” வேறு எதுவும் பேசாமல் அவனை கேட்க,

“என்னவோ பேசனும்னு தோணுச்சு. அதான். மனசுல பட்டுச்சு உனக்கு முடியலையோனு. அதே மாதிரி இருக்கு. ஒரு த்ரீ டேய்ஸ்ல நானும் துவாவும் அங்கிளோட வரோம். ஓகே?…” அவளை அறிந்தவன் கேட்க,

“இருக்கற வேலையை விட்டுட்டு உன் பொண்டாட்டியோட ஜாலியா ஊர்சுத்த உனக்கு இது ஒரு சாக்கு. போய் வேலையை பாருடா…” என அதட்டியவள்,

“சும்மா தொந்தரவு செய்யாதே. நான் ரெஸ்ட் எடுக்க போறேன்…” என்று கட் செய்துவிட்டு கட்டிலில் தலையை பிடித்தபடி அமர்ந்துகொண்டாள்.

இன்னும் சில நொடிகள் பேசியிருந்தாலும் ஓன்று இவள் உளறி இருப்பாள். இல்லை அவன் இவளின் குரலை வைத்தே கண்டுகொண்டிருப்பான். அதற்கெனவே பேச்சை மாற்றி வைத்துவிட்டாள். இல்லையென்றால் தனக்கு என்னவோ என நினைத்துக்கொண்டே கவலைப்படுவான் என நினைத்து தான் திட்டிவிட்டு வைத்தது.

அஷ்மி நினைத்தது போல அவன் அமைதியாக இல்லை. தனத்திற்கு அழைத்துவிட்டான்.

“கோவில்ல சாப்பிடற வரைக்கும் நல்லா தான் இருந்தாப்பா. இவளும் எல்லாருக்கும் பரிமாற கூட செஞ்சா. அதுக்கு அப்பறம் தான் முடியலைன்னு சொன்னா…”

“ஓகே ஆன்ட்டி அங்க ஃபூட் எதோ ஒத்துக்கலையோன்னு தோணுது. நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா ஒரு லெமன் ஜூஸ் குடுங்களேன். சரியாகிடுவா…” எங்கே மருமகளுக்கு மாமியாரை வேலைவாங்குவதாக நினைத்துவிடுவாரோ என நினைத்துக்கொண்டே அவன் சொல்ல,

“அதுக்கென்ன தம்பி, குடுத்திரலாம். இப்ப கொஞ்சம் முன்னதான் காபி குடுத்தேன். மாத்திரை போட்டாளான்னு தெரியலை…”

“ஒஹ் ஓகே ஆன்ட்டி அப்ப கொஞ்ச நேரம் கழிச்சு குடிக்கட்டும். இப்ப ரெஸ்ட் எடுக்கட்டும். தேங்க்ஸ் ஆன்ட்டி…” என சொல்ல,

“என்னோட கடமைப்பா. நீங்க பதறுரது நல்லாவே தெரியுது. அஷ்மியை என் பொண்ணு மாதிரி நான் பார்த்துக்கறேன். நீங்க கவலைப்படாம இருங்க…” என சொல்லவும் நிம்மதியுடன் போனை வைத்தான் அதிரூபன்.

இரவு ஆகிவிட்டது பிரசாத் வீட்டிற்கு வர. மழை வேறு பிடித்துக்கொண்டதால் பாக்கியலட்சுமி விடமாட்டேன் என்றுவிட்ட சரி என்று அவர்களுடன் இருந்தவன் அஷ்மிக்கு அழைத்து பார்த்தான். அவளின் மொபைல் எடுக்கப்படாமல் இருக்க தனத்திற்கு அழைத்தான்.

“ஏன்மா என்கிட்டே சொல்லிட்டு கூடவா உங்களால வர முடியாது?…” என கடுப்படிக்க,

“அம்புட்டு அக்கறை இருக்கறவன் ஏன்டா இவ்வளோ லேட்டா வர? நாங்க கிளம்பிட்டா உடனே வந்து உன் பொண்டாட்டிக்கு என்னன்னு பார்க்க வேண்டியது தான? பெருசா வந்துட்டான்…”

“ப்ச், பாதியில விட்டுட்டு எப்படிம்மா வர? அதான்…”

“அதுக்கு தான் நானும் சொல்லாம கிளம்பிட்டோம். அதுக்கு இப்ப என்ன?…” என,

“ப்ச், அஷ்மி எப்படி இருக்கா? சாப்பிட்டீங்களா ரெண்டு பேரும்?…”

“எல்லாம் சாப்பிட்டாச்சு. நீ சாப்பிட்டியா?…”

“அஷ்மிக்கு கால் பண்ணேன். எடுக்கலை…”

“தூங்கறாடா. நீ மெதுவா மழை வெறிச்சதுமே வா…”

“ப்ச், நடந்தா வரப்போறேன்? பாத்துக்கறேன்…” என்று வைத்துவிட்டு விஷ்ணு, உதயாவுடன் பேசிக்கொண்டிருந்தான். நேரம் கடக்க மழை விடுவதை போல தெரியவில்லை.

“டேய் பிரபா, மழையும் விடமாட்டிக்கு. மழை விடாம இவங்களும் விடமாட்டாங்க. நீ தான் எதாச்சும் பண்ணனும். இல்ல…” என அவனின் காதை கடிக்க,

“அம்மா அஷ்மிக்கு பீவரா இருக்காம். நாங்க போய் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய்ட்டு வரோம். வாடா பிரசாத்…” என வாசலில் நின்றுகொண்டு உதயா பாக்கியலட்சுமியிடம் சொல்ல,

“தனம் கால் பண்ணினாளா?…” என கிருஷ்ணமூர்த்தி கேட்க கார் சாவியை எடுத்துக்கொண்டே,

“விஷ்ணுட்ட தான் சொன்னாங்க போன்ல. கேளுங்க அவன்ட்ட…” என்ற பிரசாத் உதயாவை இழுத்துக்கொண்டு ஓடியே போனான்.

“என்னது? எனக்கு போன் வந்துச்சா? எப்படா?…” என விஷ்ணு பேந்த பேந்த விழிக்க அவனை கண்டு பாக்கியலட்சுமி சிரித்துவிட்டார்.

“நல்லா பன்றீங்கடா நீங்க…” என புலம்பியபடி அமர்ந்திருந்தான். பிரசாத் வீட்டை நெருங்கியதும் காரில் இருந்து இறங்க போனவனை நிறுத்திய உதயா,

“அய்யா சாமி, இந்த குடையை பிடிச்சுட்டு நனையாம உள்ள போ. உனக்கு எதாச்சும் வந்துடுச்சு பிரபா செத்தான்…” என அதட்டி குடையை குடுக்க புன்னகையோடு வாங்கியவன்,

“வாடா உள்ள…”

“மாமனார் வீட்ல எல்லாரும் கிளம்பறாங்கடா. போய் வழியனுப்பனுமே. இல்லைனா நந்தினி டென்ஷன் ஆகிடுவா…”

“அரைக்காப்படி என்னைக்கு தான் டென்ஷன் ஆகாம இருந்திருக்கா? எப்ப பார்த்தாலும் சாமியாடிட்டு…”

“ஓகே நீ சொன்னன்னு சொல்லிடறேன்…” என்றவன் காரை கிளப்பிக்கொண்டு செல்ல,

“நம்மளை கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கறதிலையே சிலபேர் பொறப்பெடுத்திருக்காங்க…” என்றபடி வேகமாய் வீட்டிற்குள் வந்தான்.

தனம் உறங்கியிருந்தார் அவன் வரும் பொழுது. அஷ்மி மட்டும்  விழித்திருக்க இவன் நினைத்து வந்த மனநிலை ஓன்று. அங்கு அஷ்மி இருந்த சூழ்நிலை ஒன்று.

என்றைக்கும் போல அவளுடன் வளவளத்துகொண்டே குளித்துவிட்டு தலையை துவட்டிக்கொண்டு வந்தவனை பார்த்து அஷ்மி கேட்ட கேள்வியில் ஸ்தம்பித்து நின்றான்.

“அஷ்மி உனக்கு…” என அதிர்ச்சி விலகாமல் அவன் கேட்க கரைந்துவிடுவேன் என்னும் தைரியத்தை ஒன்றுதிரட்டி திடமாய் அவனை எதிர்க்கொண்டு நின்றாள்.

“எனக்குத்தான் தெரியனும்னு கேட்டேன். சொல்லுங்க…” என நிற்க அவனால் தான் நிற்க முடியவில்லை.

அடித்து சட்டையை பிடித்து சண்டை போட்டிருந்தால் கூட அவளை சமாளித்திருப்பானோ என்னவோ? தள்ளி நின்று ஒட்டாத தன்மையுடன் குற்றவாளியை கேட்பதை போல அவள் தன்னை நிறுத்திய விதம் கூறுபோட்டது.

“சோ அருவியூர்ல நந்தினியை ஏதோ பண்ணிருக்கீங்க. அது உண்மை தான் இல்லையா?…”

“அஷ்மி நான் சொல்றேன். எல்லாமே சொல்றேன். நீ கொஞ்சம் பொறுமையா நான் சொல்றதை கேளு…” அவளை நெருங்க வர இன்னும் பின்னால் தள்ளி சென்றவள்,

“கழுத்தை நெறிச்சீங்கலாம்? அழ சொல்லி எல்லாம் கேட்டிருக்கீங்க. வாவ் வாவ். எவ்வளோ சாஃப்ட்டா ஹேண்டில் பண்ணியிருக்கீங்க. அவ்வளோ பெரிய ஆளா நீங்க? எனக்கு தெரியாம போச்சே…” பரிகாசமாய் அவனை பெசியவளின் வார்த்தையை தாங்கவியலாது,

“அஷ்மி ப்ளீஸ்…” என்று அவளை அணைக்க முயல,

“போயா தள்ளி. கிட்ட வந்த பார்த்துக்கோ. என்னை எதாச்சும் பண்ணிப்பேன்னு எல்லாம் மிரட்ட மாட்டேன். உன் கைய கிழிச்சு நாலு தையலை போட்டுவிட்டுடுவேன். என்னோட எமோஷன்ஸ் எல்லாத்தையும் கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கேன். தொட்ட நீ கெட்ட…” என ஒற்றை விரல் கொண்டு அவள் எச்சரிக்க முகம் சிவசிவவென சிவந்துபோய் மிளகாய்பழம் போல இருந்தது.  

“சொல்லு எனக்கு தெரியனும். அமைதியா கேட்கும் போதே சொல்லிடு. இல்லைன்னா கத்தி எல்லாரையும் வச்சு கேட்பேன். இன்க்ளூடிங் பிரபாகரன் பேமிலி…” அவளின் கேள்வியில் நிமிர்ந்து நின்றவன்,

“கண்டிப்பா நானே சொல்றேன். இனியும் மறைச்சு உன்னை ஏமாத்த விரும்பலை. நீ மிரட்டினதால சொல்றேன்னு நினைக்காத. எனக்கே நீ கேட்டதும் சொல்லிடனும்னு தான் தோணுச்சு…” என்றவன் தண்ணீரை எடுத்து குடித்துவிட்டு,

“உட்கார் முதல்ல. நின்னுட்டே கதை கேட்பியோ?…” என்று கேட்க,

“கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சியே இல்லைல…” அவனை எரித்துவிடுவதை போல அஷ்மி பார்க்க,

“உண்மையை சொல்லனும்னா நான் கொஞ்சம் ரிலீஃபா பீல் பன்றேன். ஒவ்வொரு நாளையும் உன்கிட்ட மறைக்கிறோம்ன்ற குற்ற வுணர்ச்சி என்னை சாகடிச்சிட்டிருந்தது. இன்னைக்கு அதிலிருந்து எனக்கு விடுதலைன்னு கூட சொல்லிக்கலாம். அதுக்கு உனக்கொரு தேங்க்ஸ்…”

“ஏய்…”

“ப்ச், நான் தப்பு பண்ணலைன்னு இல்லை. பண்ணிருக்கேன். இருக்கற மொத்த தெம்பையும் சத்தத்தையும் கதையை சொல்லும் முன்னமே குடுத்துட்டு குறைச்சுக்காத அஷ்மி. நீ திட்டவும் சண்டை போடவும் ஏகப்பட்ட வேலைகள் செஞ்சிவச்சிருக்கேன். இப்ப நான் சொல்றதை கேளு…”

அத்தனை நாள் மனதிலிருந்து அழுத்தமெல்லாம் மாயமாவதை போல உணர்ந்தவன் அஷ்மியிடம் சொல்ல ஆரம்பித்தான்.

Advertisement