Advertisement

தென்றல் – 2
        பத்மினி எத்தனையோ முறை கேட்டும் ரத்தினசாமி நகர்வதாய் தெரியவில்லை. அகிலா வேறு கிளம்பியாகிற்றா என கேட்டுக்கொண்டே இருப்பதனால் வேறு வழியின்றி அதிரூபனுக்கு அழைத்துவிட்டார்.
“கிளம்பிட்டீங்களாம்மா?…” எடுத்ததும் அவன் கேட்டது இதைத்தான்.
“நாங்க ரெடி ஆகிட்டோம் அதி. சந்தியா நேரா வந்திருவா. ஸ்வேதா நானும் ரெடி. ஆனா உன் அப்பா தான் கிளம்பமாட்டேன்னு பிடிவாதமா இருக்காரு…”
“இன்னும் என்னவாம் அவருக்கு? தங்கச்சியை பார்த்துக்கனும்னு எதும் சொல்றாரா?…” என கேட்க,
“அதெல்லாம் இல்லை அதி. அஷ்மி மேல கோவம். அவ மதிக்கிறதில்ல. வரமாட்டேன்னு சின்னபிள்ளை மாதிரி காரணம் சொல்லிட்டு இருக்காரு…” என்றதுமே இங்கே அதிபனுக்குமே புன்னகை தான்.
“மனுஷன் யாருக்கு பயப்படராறோ இல்லையோ அந்த வாலுக்கு இந்த பயம் பயப்படறாரு…” என சொல்லி சிரிக்க,
“ப்ச், கிண்டலா அதி? முதல்ல அவரை கிளம்ப சொல்லு. நான் சொன்னேன்னு சொல்லாத. நீயா கேட்கற மாதிரி அவருக்கு பேசு…”
“இல்லைனாலும் அவருக்கு தெரியாது பாருங்க. ஓகே, நான் பேசிக்கறேன்…” என்று காலை கட் செய்தவன் ரத்தினசாமிக்கு அழைத்தான்.
மகனிடமிருந்து அழைப்பு வந்ததுமே சுற்றிலும் பார்த்தவர் யாருமில்லை என கண்டு போனை எடுத்தார்.
“அதிபா, அப்பா பேசறேன்பா…” என்றதும் அதிரூபனுக்கு இப்போதெல்லாம்,
“மயிலும் நா அம்மா பேசறேன்பா” என்று அஷ்மிதா சொல்லிய ரைமிங் டைமிங்கில் ஞாபகம் வந்து சிரிப்பை மூட்டியது. அதை அடக்கியவன்,
“என்னப்பா கிளம்பிட்டீங்களா? இங்க மாப்பிள்ளை வீட்ல இருந்து எல்லாரும் வந்துருவாங்க. நம்ம வீட்டு ஆளுங்களா இருந்து வரவேற்றா தான மரியாதையா இருக்கும். இன்னும் எவ்வளவு நேரம் உங்களுக்காக நான் வெய்ட் பண்ண?…” என கேட்க,
“இல்லப்பா வந்து…” ரத்தினசாமி திணற,
“இங்க பாருங்கப்பா, இது நான் முன்ன நின்னு நடத்தி வைக்கிற கல்யாணம். நான்னா நம்ம குடும்பம்னு அர்த்தம். நம்ம எடுத்து நடத்தற ஒரு விசேஷம் எவ்வளவு சிறப்பா இருக்கனும். அதை விட அஷ்மி எனக்கு எவ்வளவு முக்கியம்னு உங்களுக்கு தெரியும் தானே?…”
“தெரியும்ப்பா அதிபா…”
“அப்போ இதுல எந்த ஒரு குறை வந்தாலும் அது என்னை சேர்ந்தது தானே? என்னைன்னா நம்ம குடும்பத்தை. புரியுதாப்பா? நீங்க அப்படி இருக்க மாட்டீங்கன்னு நம்பறேன்…” என்று அவருக்கு தூண்டில் போட இதற்கு மேலும் மறுப்பவரா ரத்தினசாமி?
“எனக்கு தெரியாதா அதிபா? அப்பா கிளம்பிட்டேன்ய்யா. உங்கம்மா தான் அங்கயும் இங்கயும் சுத்திட்டு என்னவோ தேடிட்டு இருக்கா…” என்று பத்மினி மேல் பழியை போட கேட்டுகொண்டிருந்த பத்மினிக்கும், அதிபனுக்கும் அப்படி ஒரு சிரிப்பு.
“இன்னும் அரைமணி நேரத்துல வீட்ல இருந்து புறப்பட்டுடுவோம். நீ ஒன்னும் கவலைப்படக்கூடாது. அப்பா இருக்கேன்யா அதிபா…” என்று அதிரூபனுக்கு சொல்லி போனை வைக்க அதுவரை அடக்கிவைத்திருந்த புன்னகை ஆர்ப்பாட்டமாக வெளிப்பட்டது அவனுக்கு.
ஏற்கனவே வீட்டிற்கு வந்துவிட்ட இவனின் சிரிப்பு சத்தத்தில் தன் அறையை விட்டு வெளி வந்து பார்த்ததும் அவளை கண்டு இன்னும் அதிகமாய் சிரித்தான்.
“டேய் என்னை பார்த்தா என்ன பஃபூன் மாதிரி இருக்கா? எதுக்கு இந்த கெக்கபிக்கே?…” என முறைக்க நடந்ததை அவன் சொல்லவும் இடுப்பில் கை வைத்து கொண்டவள்,
“மயிலுக்கு அம்புட்டு ஏத்தமா போச்சா? வரட்டும் இன்னைக்கு மொத்தமா இறக்கிவிட்டுடறேன். என் கல்யாணத்துக்கு வர அவரை அழைக்க ஒரு ஆள் தேவை படுதோ?…”
“அட போதும்மா, போதும். பேசாம இரு. இன்னைக்காவது மனுஷன் நிம்மதியா இருக்கட்டும். பாக்கற நேரமெல்லாம் முட்டிக்குது. உன்னை பார்த்தாலே டென்ஷன் ஆகிடறார்…”
“ஏன் டென்ஷன் ஆகனும்? பேசவேண்டியது தானே? வாய்ல என்ன முழு முட்டையா? போடா…” என சொல்ல,
“ஓகே, ஓகே. நான் கீழே போறேன். இன்னும் ஒருமணி நேரத்துல உன்னோட ப்யூச்சர் இங்க வரார்…” என சொல்லி அஷ்மிதாவின் முகம் பார்க்க கொஞ்சமும் வெட்கமோ நாணமோ இன்றி,
“அப்படியா? ஓகே, ஓகே…” என்று சென்றுவிட்டாள்.
அவளின் அசால்டான அப்ரோச் அதிரூபனை யோசிக்க வைத்தது. இத்தனை நாள் பரவாயில்லை. ஆனால் இன்றும் கூடவா எந்த எதிர்பார்ப்பும் இல்லை இவளுக்கு? என குழம்பினான்.
“என்ன மாமா இன்னும் கிளம்பாம நிக்கறீங்க?…” என துவாரகா வர,
“இதோ, கிளம்பிட்டேன் துவா. நீங்க இங்க ரெடியா இருந்துக்கோங்க. நான் முன்னாடியே மண்டபம் போய்டறேன்…” என்றவன் அவளிடம் சொல்லிவிட்டு வேகமாய் சாப்பிட்டுவிட்டு கிளம்பிவிட்டான்.
வீட்டில் கிளம்புவதற்கு முன்பே அனைவரும் சாமி கும்பிட்டு கிளம்பினார்கள்.
மாலை மயங்கியதும் அஷ்மிதா குடும்பத்துடன் மண்டபத்தை அடையும் பொழுது மாப்பிள்ளை வீட்டினர் ஏற்கனவே வந்துவிட்டிருந்தனர். அஷ்மிதா வந்ததும் அவளை வந்து பார்த்துவிட்டு சென்றனர்.
தனத்திற்கு அத்தனை மகிழ்ச்சி. அஷ்மிதாவின் கலகலப்பான பேச்சும் துறுதுறுப்பும் அவ்வளவு பிடித்துப்போனது. வந்த இடத்தில் உதய் பிரபாகரனும், நந்தினியும் குழந்தைக்கு காய்ச்சல் கண்டுவிட தூக்கிக்கொண்டு ஹாஸ்பிட்டல் சென்றிருக்க அஷ்மிதா வரவும் நிச்சயதார்த்தம் ஆரம்பித்தது.
அவர்கள் முறைப்படி நிச்சயத்திற்கு மாப்பிள்ளை இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதால் பிரசாத்தின் இருப்பு அங்கு அவசியமாகப்படவில்லை.
அவனுக்கும் அதில் கலந்துகொள்வதில் அந்தளவிற்கு விருப்பப்படவில்லை என்பதால் தலை வலிப்பதாக சொல்லி அறைக்குள்ளேயே இருந்துகொண்டான். அவனும் உள்ளே இருக்கிறான் என்கிற எண்ணத்திலேயே இங்கே யாரும் அவனை தேடவில்லை.
நிச்சயதார்த்தம் முடிந்து அஷ்மிதாவை சாப்பிட அழைத்து செல்லும் பொழுதுதான் பிரசாத்தையும் அழைக்க விஷ்ணு சென்றான். எங்கும் அவனை காணாமல் பதறியவன் தனத்திடம் வந்து,
“அம்மா இந்த பயலை காணும்…” என்றதும் தனத்திற்கு திக்கென்று ஆனது.
“விஷ்ணு?…” என பயந்து போய் பார்க்க,
“ஐயோ ரியாக்ட் பண்ணாதீங்க. கேஸ்வலா இருங்க…” என்றவன் மெதுவாய் பேச்சுகொடுத்தவாறே பிரசாத்தின் அறைக்கு அழைத்துவந்திருக்க ஒரு நொடியானாலும் மாறிய தனத்தின் முகத்தை வைத்து என்னவோ பிரச்சனை என புரிந்துகொண்ட பாக்கியலக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியுடன் பின்னே வந்துவிட்டார்.
“தனம் என்னம்மா?…” என அவர் அறைக்குள் வந்து அழைத்ததும் தனத்தின் தைரியமெல்லாம் போய்விட்டது.
“அண்ணே…” என கிருஷ்ணமூர்த்தியை பார்த்ததும் முகத்தை மூடி அழ ஆரம்பித்தவரை பாக்கியலக்ஷ்மி அணைத்துக்கொள்ள,
“இவன் இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கவே இல்லையே…” என்று அழ,
“அம்மா அழாம இருங்க. அவனுக்கு கால் பண்ணியிருக்கேன். ரிங் போகுது…”
“விஷ்ணு, இரு நான் கூப்பிடறேன்…” என கிருஷ்ணமூர்த்தி அவரின் மொபைலில் இருந்து அழைத்ததும் எடுத்தவன்,
“ப்ச், இப்ப எதுக்குப்பா மாறி மாறி கூப்பிட்டுட்டே இருக்கீங்க? நான் என்ன குழந்தையா?…” என்று பிரசாத் எரிச்சல்பட,
“ஏன்டா அறிவிருக்கிற வளர்ந்தவன் செய்யற வேலையாடா இது? இதுல எரிச்சல் மண்ணாங்கட்டி வேற வருது துரைக்கு. எங்கடா இருக்க?…” என அதட்ட,
“தேவையான எல்லா அறிவும் இருக்குது. ஒரு ப்ரெண்டை பார்க்க வந்தேன். வந்துருவேன். அதுவரை என்னை கொஞ்சம் தொந்தரவு செய்யாதீங்க. நம்பிக்கை இருந்தா…” என்றவன் அழைப்பை துண்டித்துவிட,
“இவனை எல்லாம் என்னதான் பன்றது? யார்ட்டையும் சொல்லாம கிளம்பிருக்கான் பாருங்க. ஏற்கனவே அவன் முகமே சரியில்ல. இப்ப இப்படி பண்ணினா இங்க கேட்கிறவங்களுக்கு யார் பதில் சொல்றது?…” பாக்கியலக்ஷ்மி சொல்ல,
“விடு பாக்கியம், அதான் வந்துருவேன்னு சொல்லிட்டான்ல. தனத்தை சமாதானம் செய்…” என்றவர் விஷ்ணுவை பார்க்க,
“பொண்ணோட சேர்ந்து போட்டோ எடுக்கனும்னு வர சொன்னாங்க. சேர்ந்து சாப்பிட வைக்கனும்னு…” தயக்கமாய் அவன் சொல்ல,
“விடு பார்த்துக்கலாம். சமாளிப்போம். என்ன செய்ய?…” என்றவர் உதயாவிற்கு அழைத்து விவரம் சொல்ல காரில் மண்டபத்திற்கு வந்துகொண்டிருக்க விஷயத்தை மெதுவாய் உதயா நந்தினியிடம் சொல்ல அவ்வளவு தான் நந்தினி ஆடித்தீர்த்துவிட்டாள்.   
“நான் சொன்னேன்ல அவன் கிறுக்கன் ஏதாவது செய்வான்னு. பாருங்க அவன் பண்ணிவச்சிருக்கறதை. என்னால மண்டபத்துக்கு வர முடியாது. காரை திருப்புங்க, நாம ஊருக்கு போவோம்…” என்று ஆரம்பித்துவிட,
“அதான் வந்திடறேன்னு சொல்லியிருக்கான்ல நந்து…” என சமாளிக்க,
“அவனை நீங்க நம்புங்க. எனக்கு ஒண்ணுமில்லை. இன்னொரு குடும்பமும் சம்பந்தபட்டிருகேன்னு கொஞ்சமும் அக்கறை இல்லாம விஷயம் வெளியில தெரிஞ்சா பெத்தவங்களுக்கும் சொந்தபந்தங்களுகும் எத்தனை அவமானம் ஆகும்னு நினைக்காம சொல்லாம கொள்ளாம இவன் கிளம்பி போவான். இவனை நம்பனுமா?…”
நந்தினி கேட்பதில் இருந்த உண்மை உரைக்க உதயாவிற்குமே ஏக கடுப்பு தான் பிரசாத் செய்கையில். தன் மொபைலில் இருந்து பிரசாத்திற்கு அழைக்க இரண்டு முறை அழைத்த பின்னர் தான் அதை ஏற்றான்.
“என்ன பிரபா உன் அரைக்காப்படி ஆடி முடிச்சுட்டாளா?…” என்று கேட்டுவைக்க,
“டேய்…” என நந்தினி ஆரம்பிக்கவுமே,
“இங்க பாரு, நிறுத்து,நிறுத்து. போன எனக்கு போன மாதிரி வர தெரியும். வரலைனா எவ்வளவு அசிங்கம்னும் தெரியும். சும்மா உன் தாளிப்பை இங்க கொட்டாத. நானே செம்ம காண்டுல இருக்கேன்…” என்றவன்,
“தங்கக்குட்டியை பார்த்துக்கோ பிரபா…” என்று சொல்லி கட் செய்துவிட்டான்.
“நீ விடுடா அவன் வரவும் நேர்ல என்னன்னு கேட்கறேன்…” உதயா சொல்ல நம்பாத பார்வை பார்த்தவள் முகம் திருப்பிக்கொண்டாள் ஜன்னல் புறம்.
“போச்சுடா, இனி இவளை மலையிறக்கனும்?…” என கவலையாக அவன் பார்க்க கையில் இருந்த குழந்தை அவனின் கன்னம் தாங்கி சிரிக்க,
“அப்பா பொழப்பை பார்த்து பாப்பாக்கு சிரிப்பா இருக்கோ?…” என்று நந்தினியின் காதில் கேட்டுவிடாமல் கிசுகிசுப்பாய் சொல்ல குழந்தையும் காய்ச்சல் குறைந்ததில் இதழ் மலர்ந்து புன்னகைத்தது.
பிரசாத் விஷயத்தை தவிர்த்து நந்தினி என்றுமே இப்படி கிடையாது. தன்னிடம் எத்தனை காதலோடிருந்தாலும் பிரசாத் என்று வந்துவிட்டால் தீயாய் காய்ந்துவிடுவாள். சில நேரம் கவலையாகவும் இருக்கும்.
சில நேரம் அவளை சொல்லி என்ன தவறு என்றும் தோன்றும். முதலில் இருவரையும் சமாதானம் செய்ய முயன்றவன் அது முடியாமல் போக தோற்றே போனான்.
பிரசாத்தும் எதற்கும் முயற்சிக்காதே. இப்படியே விட்டுவிடு என்று சொல்வதோடு நந்தினியோடான வாக்குவாதங்களில் வார்த்தை தடித்து வந்தாலும் பிரசாத் அதை பெரிதுபடுத்தாமல் இருந்துவிடுவான். அதிலும் உதயாவிற்கு வருத்தமே.
நந்தினியை கடிந்து சொல்லவும் மனம் வராமல், பிரசாத்தை விட்டுகொடுக்கவும் முடியாமல் அவனின் நிலை இருதலைகொள்ளி எறும்பு போல தவிக்கும்.
அதுவரையான கோவம் குறைந்து உதயாவை பார்த்தவள் மெதுவாய் அவனின் தோளில் சாய்ந்துகொண்டாள். அவளின் மனம் அறிந்தவன் தானும் அவளின் தலைமீது சாய்ந்து தன் அரவணைப்பை அவளுக்கு உணர்த்தினான்.
மண்டபத்தில் பிரசாத்தை கேட்டு அவன் வரவில்லை என்னும் தகவல் வருவதற்குள் அஷ்மிதா துவாரகாவுடன் சாப்பிட்டு முடித்து மண்டபத்தின் ஹாலில் வந்து அமர்ந்துகொண்டாள்.
கிட்டத்தட்ட பத்துமணியை நெருங்கும் நேரம் உறவினர்கள் சிலர் அங்கேயே தங்கி இருக்க வந்தவர்கள் கிளம்பிவிட சொற்பமானவர்களை தவிர்த்து ஹாலே காலியாக கிடந்தது.
அஷ்மிதா, துவாரகா, ஸ்வேதா, சந்தியா, கெளரி என ஒரு கூட்டமாய் அமர்ந்து அரட்டையில் இருக்க பத்மினியுடன் சாப்பிட்டு விட்டு அப்போதுதான் வந்தமர்ந்தார் ரத்தினசாமி.
அகிலா பத்மினியை அழைக்க இதோ வந்துவிடுமாறு சொல்லிவிட்டு பத்மினி கிளம்பிவிட தனியாக அமர்ந்திருந்தார் ரத்தினசாமி. நேரம் கழித்து சாப்பிட்டதால் ஒருவித சோர்வில் அமர்ந்திருந்தவரை பார்த்ததும் அஷ்மிதா லேசாய் புன்னகைக்க அவளை பார்த்ததும் முகம் கடுகடுக்க திரும்பிக்கொண்டார் ரத்தினசாமி.
“பார்ரா, நாம சும்மா இருந்தாலும் மயிலு பார்வை கூட நம்மளை சும்மா இருக்கவிடமாட்டேங்குதே?…” என துவாரகாவிடம் சொல்ல,
“டாக்டர், நீங்க இன்னைக்கு கல்யாணப்பொண்ணு. பேசாம இருங்க. எதாச்சும் பிரச்சனை ஆகிட போகுது…” என துவாரகா சொல்லியதெல்லாம் அஷ்மிதாவிற்கு கேட்டால் தானே?
“நான் சும்மா தான பார்த்தேன். அதுக்கு ஏன் சிலிர்த்துக்கனும்? இதுக்கு பதிலுக்கு குடுக்கலைனா நான் அஷ்மி கிடையாது முயல்க்குட்டி. பேசாம இரு…” என்றவள் எழுந்தேவிட்டாள்.
“நான் போய் மாமாவை கூட்டிட்டு வரேன்…” என துவாரகா சொல்ல அலட்சியமாய் பார்த்தவள்,
“என்ன பூச்சாண்டியா?…” என்றபடி ரத்தினசாமியை நோக்கி சென்றுவிட சந்தியா என்னவென துவாரகாவை கேட்க அவள் கண்ணை காட்டினாள். பார்த்த சந்தியாவிற்கு,
“போச்சா…” என்று தான் தோன்றியது.
“ஹாய் மயிலு…” என்று அஷ்மிதா அவரின் அருகே சென்று சேரில் அமர சூழ்நிலையை கருத்தில் கொண்டு முகத்தை திருப்பி வேறு புறம் பார்த்தார். அவருக்கு ஏற்கனவே மனதில் பலவிதமான எண்ணங்கள்.
இதே மண்டபத்தில் தான் அதிரூபன் துவாரகா திருமணமும் நடந்தது. அது நடந்த விதமும் அன்றைய அதை தொடர்ந்த இன்று வரையான நிகழ்வுகளும் ரத்தினசாமியின் மனதில் அலை அலையாய் பொங்கிக்கொண்டிருந்தது. அதன் தாக்கம் வேறு அவரின் மனதை ஏனோ பலகீனமாக்கி இருந்தது.
இப்பொழுதும் “அதிபனுக்காக எதுவும் பேசக்கூடாது” என்று உம்மென அமர்ந்திருந்தார். ஆனால் அஷ்மி விட்டால் தானே?
“என்ன மயிலு டைனிங் ஹாலுக்கு வந்துட்டு என்னை பார்த்ததும் சாப்பிடாம கூட திரும்பிட்ட?…” என கேட்க அப்போதும் பேசாமலே இருக்க அவர் அமர்ந்திருந்த விதத்தை பார்த்ததும் தன்னை பார்த்த பார்வையை வைத்தும் அஷ்மிக்கு சிரிப்பு வந்தது.
“மயிலு என்னை கன்னாபின்னான்னு திட்டனும்னு வருது. ஆனா பாரேன் உன்னால முடியலை. ரொம்ப கண்ட்ரோல் பன்ற மாதிரி தெரியுதே?…” என்றதும் ரத்தினசாமி முறைக்க,
“பேசக்கூடாதுன்னு கண்ட்ரோலா இருக்கியே. அத சொன்னேன். பேச கூடாது ஓகே, ஏன் இப்டி ஒடுங்கி உட்கார்ந்திருக்க?…” என்றவள்,
“ஆடி அடங்கும் வாழ்க்கையடா…” என பாட,
“ஏய் உனக்கு சொன்னா புரியாதா?…” ரத்தினசாமி எகிற,
“மயிலு ஆடாம அசையாம அடக்கமா, அமைதியா, அழகா ஒரே இடத்துல உட்கார்ந்திருக்கியேன்னு ஷார்ட்டா பாட்டுல சொன்னேன். நீ ஓவராத்தான் கொதிக்கிற…” என்று சிரிக்க,
“உன்னை எந்த நேரத்துல உங்கப்பன் பெத்தான்னு தெரியல. கல்யாணப்பொண்ணா அடக்க ஒடுக்கமா ஒரு இடத்துல உக்காந்து தொலை…” ரத்தினசாமி எரிந்துவிழ,
“அட அட அட, அழக பத்தி சொன்னதும் செல்லத்துக்கு வெக்கத்த பாரேன். முகம் சிவக்குது போ. இங்க பொண்ணு நானா நீயான்னு எனக்கு டவுட்டே வந்துருச்சு மயிலு…” என அஷ்மி உதட்டை பிதுக்க சேரிலிருந்து படாரென எழுந்தேவிட்டார்  ரத்தினசாமி.
“என் புள்ளைக்காக என் அதிபனுக்காக பொறுமையா இருக்கேன். இல்ல…”
“இல்லன்னா, என்ன பண்ணுவ? அட சொல்லேன்?…” என்று வம்பிழுக்க,
“அஷ்மி…” என்று வந்துவிட்டான் அதிரூபன்.
“ப்ச், இவன் ஒருத்தன் என்னவோ சின்ன புள்ளையை மிஸ் அடிச்சுட்ட மாதிரி புள்ளைய காப்பாத்த வந்துட்டான்…” என சலிப்பாய் சொல்ல,
“ப்ச், இப்ப என்ன உனக்கு? டைம் ஆச்சுல. போ. போய் தூங்குங்க. காலைல சீக்கிரம் எழுந்துக்கனும்…” என விரட்ட,
“சாப்பிட வந்தவரு என்னை பார்த்ததும் சாப்பிடாம திரும்பிட்டாரு அதி. அதை கேட்க வந்தேன். ஏன் இவர் வந்தா வந்த வேலையை பார்க்க வேண்டியதுதானே? எதுக்கு என்னை முறைச்சிட்டு சாப்பிடாம போகனும்?…” என அஷ்மி கேட்க,
“இதை பேச இதுவா நேரம்? போன்றேன்ல…” என்ற பின்னர் ஒரு முறைப்புடன் அவள் செல்ல துவாரகாவை பார்த்தவன்,
“பார்த்துக்கோ துவா…” என்று அனுப்ப ஸ்வேதாவும் அவர்களுடன் சென்றாள் அதிபனின் குழந்தையோடு.
“அதிபா, பார்த்தியாப்பா? இதுக்குத்தான் நான் வரமாட்டேன்னு சொன்னேன். என்ன பேச்சு பேசறா பாரு…” மகனிடம் புகார் வாசிக்க,
“அவ சின்ன பொண்ணுப்பா. உங்களோட விளையாடறா…” அதிபன் விட்டுகொடுக்காமல் பேச,
“அவளா சின்னவ? அவளை…” என அஷ்மியை ஏதேதோ திட்ட வார்த்தைகள் தாறுமாறாய் சிதறவிருந்த நேரம்,
“அப்பா…” என அழுத்தமாய் அதிரூபன் அழைக்க ராஜாங்கம் வந்துவிட்டார்.
“என்னாச்சு? இன்னும் நீங்க தூங்க போகலையா ரத்தினசாமி?…” என கேட்க,
“ஹாங் இதோ வீட்டுக்கு கிளம்பறேன்…” என சொல்ல,
“ஏன் அவ்வளவு தூரம் போய்ட்டு வரனும்? இங்கயே இத்தனை ரூம் இருக்கே. அலைய வேண்டாம். இங்கயே ரெஸ்ட் எடுங்க…” என்று ராஜாங்கம் சொல்லி செல்ல,
“போங்கப்பா, போய் தூங்குங்க…” என்று மகனும் சமாதானமாய் அனுப்ப அதன்பின்னே மனமில்லாமல் சென்றார் ரத்தினசாமி.
இரவு பதினொன்றைய கடந்து மறுநாளைக்கான விடியலை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. அனைத்தையும் சரிபார்த்துவிட்டு மனைவியையும் மகளையும் பார்க்க அஷ்மிதாவின் அறைக்கு சென்றான் அதிரூபன்.
அங்கே இரண்டு பெரிய கட்டில்கள் இருக்க ஒன்றில் சந்தியாவும் ஸ்வேதாவும் சந்தியாவின் குழந்தையை நடுவில் படுக்கவைத்து உறங்கிக்கொண்டிருந்தனர். அதற்கடுத்ததில் துவாரகா, தன் குழந்தையுடன் உறங்கிகொண்டிருந்தாள்.
படுக்கையில் அஷ்மிதா இல்லாமல் இருக்க பாத்ரூமில் இருக்க கூடும் என நினைத்தவன் மெதுவாய் அவர்கள் அருகே சென்று குழந்தைக்கும், துவாரகாவிற்கும் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு எழுந்தான்.
அவனின் இதழொற்றளில் கண் விழித்தவள் கணவனை கண்டதும் புன்னகையோடு எழுந்தமர்ந்தாள்.
“மார்னிங் ஆகிடுச்சா மாமா? அலாரம் இன்னும் அடிக்கலையே?…” என கேட்க,
“இல்லைடா, இன்னும் பன்னெண்டு ஆகலை. நான் சும்மா உங்களை பார்த்துட்டு போகலாம்னு தான் வந்தேன். போய் தூங்கனும்…”
“ஒஹ்,…” என்றவள் பக்கத்தில் அஷ்மி இல்லாததை பார்த்து,
“எங்க டாக்டரை காணும்?…” என கேட்க,
“ரெஸ்ட்ரூம் போய்ருக்கா போல?. ஓகே நீ தூங்கு…” என அவன் கிளம்ப பாத்ரூம் புறம் திரும்பியவள்,
“மாமா, பாருங்க பாத்ரூம் வெளியில லாக் ஆகி இருக்கு…” என்று சொல்லவும் வேகமாய் வந்தவன் கதவை திறந்து பார்க்க அஷ்மிதா அங்கே இல்லை.
“மாமா….” என பதட்டமாக,
“ப்ச், எதுக்கு இவ்வளோ டென்ஷன், தூக்கம் வரலைன்னு வெளில இருப்பாளா இருக்கும்…” என்றவன் தன் மொபைலில் அழைப்பு விடுக்க அவளின் மொபைல் அறையில் தான் இருந்தது.
துவாரகாவின் பதட்டம் அதிரூபனை தொற்ற தன் மொபைலுக்கு அஷ்மிதா ஏதோ மெசேஜ் அனுப்பியிருப்பதை அப்பொழுதுதான் கண்டான். கலக்கத்தோடு மனைவியை பார்த்தான்.
“என்னாச்சு மாமா?…” என கேட்க அதை திறந்து பார்த்தவன் துவாரகாவிடம் காண்பிக்க அதில்,
“ரொம்ப ப்ரஸ்ட்ரேஷனா இருக்கு அதி. வெளில வந்திருக்கேன். மார்னிங் வந்திடறேன். என்னை தேடி டென்ஷன் ஆகாத…” என்று அனுப்பியிருந்தாள் அஷ்மிதா.
“ஏன் மாமா அப்பவே பாக்கலை?…” துவாரகா கடியவும்,
“போன்ல சார்ஜ் இல்லைன்னு போட்டுவச்சிருந்தேன். இப்பதான் எடுத்துட்டு வந்தேன் துவா…”
“யாராவது வந்து கேட்டா என்ன சொல்ல? இப்ப டாக்டர் எங்க போயிருப்பாங்க மாமா…” என பயத்துடன் கேட்க கையை விரித்தான் அதிரூபன்.
அதே நேரம் இருவீட்டாரிடமும் பயத்தையும், பதட்டத்தையும், சஞ்சலத்தையும் கடைபரப்பிய இருவருமே ஒரே இடத்தில் சந்தித்திருந்தனர்.
“ஏய் நீங்க மிஸ்டர் விஸ்வாசம் தானே?…” என்றபடி அஷ்மிதா வந்து அவனின் முன்னால் நிற்க அவளை நொடியில் இனம் கண்டுகொண்டவன் முகத்தில் பலமடங்கு ஒளிகற்றைகள் வாரியிறைக்கப்பட்டது அஷ்மியின் வருகையால்.
அதே நேரம் கண் மூடி திறக்கும் முன்னால் பிரசாத் அறைந்திருந்தான் அஷ்மிதாவை. ஒரு நொடி என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை அஷ்மிதாவிற்கு.
“டேய் என்னடா அடிச்சுட்ட?…” என கேட்டவளுக்கு கோவம் வருவதற்குள்,
“ஒரு அறையோட விட்டேன்னு சந்தோஷப்பட்டுக்க. உன்னை பாத்த நிமிஷம் என்னென்னவோ பண்ணனும்னு நினச்சேன். ஆனா இருக்கிற கோவத்துக்கும், நிக்கிற இடத்துக்காகவும் மட்டும் தான் இந்த அடி…”
“நீ அடிச்சா நான் வாங்கிட்டு போகனுமோ?…” அவனை திரும்பவும் அறைந்துவிடும் வேகம் அஷ்மிதாவின் பேச்சில் தெறிக்க அதை கண்டுகொள்ளாதவனின் அலட்சியம் இன்னமும் அவளை சூடேற்றியது.
“என்கிட்டையே உன் திமிரை கட்டுறயா?…” என்று எகிறிய அஷ்மியின் பேச்சு எதுவும் பிரசாத்திடம் எடுபடவில்லை. அவளை அவனின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருந்தான்.

Advertisement