Advertisement

தென்றல் – 14

         பத்மினியால் நம்பவே முடியவில்லை ரத்தினசாமி பேசியதை. அதுவும் அஷ்மிதாவிடம் ஆறுதலாக பேசியதை. கண்கொட்டாமல் பார்த்து நிற்க அவரோ பிரசாத்தை நோக்கி சென்றார்.

அவன் அப்போது தான் தனத்திடம் பேசிவிட்டு உதயாவிற்கும் அழைத்து விவரத்தை சொல்லிவிட்டு மொபைலை வைத்துவிட்டு நின்றான். தன் முன்னாள் அவர் வந்து நிற்கவும் என்னவென்பதை போல அவன் பார்க்க,

“பொண்டாட்டி பொண்டாட்டின்னு சவடாலா சொன்னா மட்டும் போதாது. மைனர் மாதிரி அன்னைக்கு முறுக்கிட்டு இவளுக்கு ஏந்துக்கிட்டு பேசின. இன்னைக்கு இவ்வளவு தள்ளி நிக்கிற. இதுதான் புருஷலட்சணமா? போயா போய் அவளை சமாதானம் செய். அவ அழுது நான் பார்த்ததே இல்லை. வீம்புக்காரி. இன்னைக்கு எல்லார் முன்னாடியும் கண்ணை கசக்கிட்டு நிக்கிறா…”

பிரசாத்திடம் அவனுக்கு மட்டும் கேட்குமாறு பல்லை கடித்துக்கொண்டு சொல்லியவர் அஷ்மியை சொல்லும் பொழுது அவரின் பார்வை அவளை நோக்கியது.

ஒரே நாளில் கலைந்த ஓவியமென அமர்ந்திருந்தவளை பார்த்தவர் மீண்டும் பிரசாத்தை பார்த்து,

“என் மகன் அதிபன் இருந்திருந்தா இவளை அழவே விட்டிருக்கமாட்டான். அவன் ஒருத்தன் இல்லை. எப்படி ஓஞ்சு போய் இருக்கா பாரு. எதுவும் பேசலைனாலும் போய் பக்கத்துல உட்காரு…” என்று அவனை ஒரு வாங்கு வாங்கிவிட்டு தான் அங்கிருந்து நகர்ந்தார்.

அகிலவேணியும் இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருந்தார். முகத்தில் எந்த உணர்வும் இல்லை.

அஷ்மிதாவை அவர் ஆறுதல் படுத்தியதை பார்க்கும் பொழுது கூட இந்தமட்டும் இவருக்கு மனுஷத்தன்மை இருக்கிறதே என்று தான் எண்ணினார். துவாரகாவிற்கும் இதே எண்ணம் தான்.

“எத்தனை நல்லது செய்தாலும் செய்த செயல்களை மாற்றவியலாது” என்பதை போல தான் பார்த்து நின்றாள்.

பிரசாத் மெதுவாய் அஷ்மியின் அருகில் வந்து நிற்க அவளருகே நின்ற அகிலா,

“உக்காருங்க தம்பி…” என்று சொல்லி தள்ளி நின்றார். அவன் அமர்ந்ததும் தன்னைப்போல அஷ்மி அவனின் தோளில் தலை சாய்த்துவிட இதை அவன் எதிர்பார்க்கவே இல்லை.

நேரம்காலம் பாராமல் காதல்கொண்ட மனம் அந்த நிமிடத்தை கொண்டாடியது கொஞ்சியது. மெதுவாய் அவளின் கை பற்றியவன் ஆறுதலாய் அழுத்தம் கொடுத்தான்.

ஆயிரம் வார்த்தைகள் உணர்த்தாத ஆறுதலை ஒற்றை அழுத்தம் உணர்த்தியது. அவனின் அருகாமை கொடுத்த தைரியத்தில் அஷ்மியின் கண்கள் மெல்ல மூடியது.

தைரியம் அவளுக்கு எப்போதுமே கொஞ்சம் அதிகம் தான். ஆனால் தவித்துக்கிடக்கும் வேளையில் கொண்டவன் துணை கொடுக்கும் அன்பினால் உண்டாகும் தைரியம் அபரிமிதமானது அல்லவா?

தவறாக எதுவும் நடக்காது என்றாலும் நடக்க கூடாது என கோடி தெய்வங்களுக்கு அத்தனை வேண்டுதல்களை வைத்தாள். பெரிதாய் தெய்வங்களை சரணடையாதவள் தன் தந்தைக்காய் மடியேந்தி நின்றாள் மானசீகமாய்.

அவளின் வேண்டுதலில் அஷ்மியின் தாயும் அடங்கியிருக்க மகளின் மனம் புரிந்தவரான அத்தெய்வத்தாய் உடனடி வரமளித்தார் உன் தந்தை உனக்கே உனக்கு என்பதை போல.

ஆம், சிலமணிநேரம் அனைவரையும் ஸ்தம்பித்துபோக செய்த ராஜாங்கம் கண்விழித்தார் தன் மகளுக்காக.

“டாக்டர் அஷ்மிதா உங்க அப்பா கண்முழிச்சாச்சு. இனி பயப்பட எதுவுமே இல்லை. எல்லாமே நார்மலுக்கு வந்திருச்சு. இன்னைக்கு மட்டும் இங்க இருக்கட்டும். நாளைக்கு எல்லா செக்கப்பையும் எடுத்துட்டு டிஸ்சார்ஜ் பத்தி பேசலாம். இப்ப நீங்க போய் பார்க்கலாம். ஒவ்வொருத்தரா போய் பாருங்க…” என்று டாக்டர் வந்து சொல்லி செல்ல ஒரு நொடி மூச்சை இழுத்துபிடித்தவள் மனம் முழுவதும் அத்தனை நிம்மதி.

“அஷ்மி பிரசாத்தையும் கூட்டிட்டு போய் பாரும்மா. சேர்ந்து போங்க…” என்று சொல்லவும்  அஷ்மி எழுந்து பிரசாத்தை பார்க்க அவனும் எழுந்தான் அவளின் கை பிடித்து முன்னே நடந்தான்.

உள்ளே இன்னமும் அதே போல படுத்திருந்த தந்தையை பார்த்ததும் கண்ணீர் வரவா என்பதை போல இருக்க கட்டுப்படுத்தினாள்.

“அப்பா…” என அழைத்தவள் அவரின் இமைகள் திறந்ததும் அசையாமல் பார்த்தாள்.

எழுந்ததும் அவரிடம் அத்தனை சண்டை போடவேண்டும் அதை கேட்கவேண்டும் இதை சொல்லி திட்டவேண்டும் என எத்தனை எத்தனை நினைத்திருந்தாளோ அத்தனையும் மறந்திருந்தது. வார்த்தை வராமல் பார்வை மட்டும் பார்த்து நின்றாள்.

“பயந்துட்டியாடா?…” என கேட்க அஷ்மி அப்படியே நிற்பதை பார்த்த பிரசாத்,

“அஷ்மி உன்னைத்தான் கேட்கறாங்க மாமா. முதல்ல என்னனு கேளு. பேசு…” என்றவன்,

“இப்போ பரவாயில்லையா மாமா…” என கேட்க,

“வாங்க மாப்பிள்ளை…” என்றார் ராஜாங்கம். கேட்டுவிட்டு மகளை பார்த்தவர்,

“ரொம்ப அழுதுட்டியா அஷ்மிடா…” திணறி திணறி அவர் பேச அந்த குரலில் அத்தனை சஞ்சலம் தன்னால் மகள் கலங்கிவிட்டாளே என்று. முகம் சிவந்திருப்பதை பார்த்ததும் கண்டுகொண்டவர் விழிகள் கலங்க ஆரம்பிக்கவுமே,

“நான் ஏன் அழறேன்ப்பா. உங்களுக்கு ஒன்னும் ஆகாதுன்னு எனக்கு முன்னமே தெரியுமே. நான் அழலை. நைட் ட்ராவல் பண்ணி வந்தேனா. தூக்கமே இல்லை. அதான் என்னோட பேஸ் டல்லா இருக்கு…”

எங்கே தன்னை பார்த்து ராஜாங்கம் உடல்நிலை இன்னமும் பின்னடைவாகிவிடுமோ என பயந்து இலகுவாக பேசினாள் அஷ்மி.

சற்றும் இதை பிரசாத் எதிர்பார்க்கவில்லை. ராஜாங்கத்தை பார்த்து பேசிக்கொண்டே அத்தனை அழுதவள், வெளியில் அத்தனை உடைந்துபோய் அமர்ந்திருந்தவள் இப்படி ஒன்றுமே நடவாததை போல பேச திகைத்துபோய் நின்றான்.

“படுத்தே இருக்காதீங்கப்பா. சீக்கிரம் ரெக்கவர் ஆகி வாங்க. நாம வீட்டுக்கு போவோம். உங்களோட ரொம்ப நேரம் டைம் ஸ்பென்ட் பண்ணனும் நான். ஹாஸ்பிட்டல் லீவ் போட்டுட்டு வந்திருக்கேன்…”

“அஷ்மி…” ராஜாங்கம் ஈனஸ்வரத்தில் அழைக்க,

“ப்ச் அப்பா தூங்குங்க. இன்னைக்கு ஃபுல் ரெஸ்ட். நாம நாளைக்கே வீட்டுக்கு போய்டுவோம். சரியா? நான் வெளில வெய்ட் பன்றேன். இங்க தான் இருப்பேன். உங்க கூடவே. உங்க கூடவே…” என கடைசி வார்த்தையில் குரல் நடுங்க சமாளித்துக்கொண்டு வெளியே வந்தாள்.

“மாப்பிள்ளை…” என பிரசாத்தை பார்க்க,

“நீங்க நல்லா ரெஸ்ட் எடுங்க மாமா. இப்ப உங்களுக்கு அதுதான் தேவை. அஷ்மியை பத்தி நீங்க கவலை படவே வேண்டாம். நான் அவ கூட எப்பவும் இருப்பேன். நான் பார்த்துப்பேன்…” அவர் சொல்லாதையும் தானே சேர்ந்து சொல்ல அப்பெரியவரின் கண்கள் நிம்மதியா பார்க்க புன்னகையுடன் பார்த்தவன் வெளியே வந்தான்.

“டாக்டர் அப்பா எப்படி இருக்காங்க? நான் பார்க்கலாமா?…” துவா வந்து கேட்கவும் அவளை கட்டிக்கொண்டு சுற்றிய அஷ்மி,

“முயல்க்குட்டி அப்பா நல்லாவே இருக்காங்க. நாளைக்கு பாரேன் சும்மா ஜம்முன்னு எழுந்து வீட்டுக்கு வந்துடுவாங்க. நீ ஏன் முகத்தை அழுகாச்சியா வச்சிட்டு இருக்க. ஸ்மைல் ப்ளீஸ்…” என்று கண்ணடிக்க துவாரகாவும் அவளை அணைத்துகொண்டாள்.

அஷ்மியின் முகம் தெளிவானதை பார்த்த பின்னர் தான் அங்கிருந்து பத்மினியும், ரத்தினசாமியும் கிளம்பினர். கிளம்பியவர்கள் மனதினுள் அத்தனை வேதனையும் சஞ்சலமும். இரண்டு நாள் போராட்டமல்லவா அவர்களது. வீட்டிற்கு செல்லவே பிடித்தமில்லாமல் சென்றனர்.

“ரெண்டு பேரும் போய் சாப்பிட்டு வாங்கப்பா. ரொம்ப டல்லா தெரியறீங்க. நீங்க வரவரை நான் இங்க இருக்கேன். டாக்டர் கூப்பிட்டா கால் பன்றேன்…” என அகிலா சொல்லவும்,

“ஆமா ஹஸ். வாங்க இங்க ஆனியன் ஊத்தப்பம் செம்மையா இருக்கும். சாப்பிடலாம்…” என அஷ்மியும் அழைக்க,

“யுனிக் பீஸ் தான் போலயே இவ” என நினைத்துக்கொண்டே துவாரகாவை பார்த்ததும்,

“நீயும் வாம்மா, உன்னை பார்த்தாலும் சாப்பிட்டிருக்க மாதிரியே தெரியலை…” என அழைக்க,

“இல்லைண்ணா நீங்க போய் சாப்பிட்டுட்டு வாங்க. அம்மாவுக்கு துணையா நான் இங்க இருக்கேன். நீங்க வரவும் நாங்க ரெண்டு பேருமா போய்க்கறோம்…” என துவா சொல்ல,

“பார்ரா முயல்க்குட்டி பார்மலா பேசறதை? ஓய் எப்ப இருந்து இந்த டிஸ்டன்ஸ்? பிச்சிடுவேன் பார்த்துக்கோ. அவர் எனக்கு ஹஸ்னா உனக்கு அண்ணன். இதுல என்ன தயக்கம்? துவா இரு அதி வரட்டும் பேசிக்கறேன்…” என மிரட்ட,

“யாரும் யார்ட்டையும் பேச வேண்டாம். சாப்பிடவும் போகவேண்டாம்…” என்று அர்னவ் வந்து நிற்க அவனை பார்த்ததும்,

“போகவேண்டாம்னா கேண்டின் நடந்து இங்க வந்துருமா?…” என்று அஷ்மி கேட்கவும் சிரித்தவன்,

“இந்த பேச்சை எல்லாம் நாங்க எவ்வளோ மிஸ் பண்ணினோம் தெரியுமா? நல்ல இருக்கீங்களா மிஸ்டர் அன்ட் மிசஸ் அஷ்மிதா?…” என நலம் விசாரிக்க,

“நல்லா இருக்கோம்…” பிரசாத் நட்பாய் பதில் சொல்ல,

“பார்த்தாலே தெரியனும். இப்ப பசில இருக்கோம்…” என அதற்கும் அஷ்மி சொல்ல,

“ஸ்ஸ்ஸ் மறந்துட்டேன் பாருங்க. சந்தியாவும் ஸ்வேதாவும் குக் பண்ணி குடுத்து விட்டுட்டாங்க. அண்ணிக்கு இப்போலாம் வெளில சாப்பிட்டா ஒத்துக்கறது இல்லையாம். அதான்…” என அர்னவ் சொல்ல,

“அப்போ குக்கிங் துவாவுக்காக தானா? நீயே சாப்பிடும்மா, நீங்க வாங்க ஹஸ், நாம கேண்டீன் போவம்…” என்று பிரசாத்தின் கை பிடித்து இழுக்க,

“சரண்டர் மேடம் சரண்டர். வந்ததுமேவா?…” என கையை தூக்கி அப்பாவியாய் பார்க்க,

“அது…” என கெத்தாய் பார்த்தவள் துவாவை பார்க்க,

“வாங்க நமக்கு ஒரு ரூம் குடுத்திருக்காங்க. அங்க போய் ப்ரஷ் ஆகிட்டு சாப்பிட்டுட்டு வரலாம்…” என்று அர்னவ்வை பார்க்க,

“நான் வரும் போதே ரூம்ல வச்சிட்டே வந்துட்டேன் அண்ணி. நீங்க போய் சாப்பிட்டு வாங்க…” என்று அங்கிருந்த சேரில் அமர,

“ஆன்ட்டி வாங்க…” அஷ்மிதா அகிலாவை அழைக்கவும்.

“நீங்க சாப்பிடுங்கம்மா, நான் டேப்லெட் போட்டு அரைமணி நேரம் கழிச்சுதான் சாப்பிடனும்….” என்றவர்,

“துவா பேக்ல டேப்லெட் இருக்கு, சாப்பிட்டு வரப்ப எடுத்துட்டு வந்திரு…” என சொல்ல,

“நானும் கூட வரேன் அண்ணி. என்கிட்டே குடுங்க, அத்தைக்கு நான் குடுக்கறேன். இப்போ சாப்பிட்டா தான் நீங்க முடிச்சுட்டு வரப்ப அவங்க சாப்பிட கரெக்டா இருக்கு…” என்று அர்னவ் அவர்களுடன் செல்ல ஒன்றும் பேசாது அமர்ந்துவிட்டார் அகிலா.

துவாவும் இதை பார்த்துதான் இருந்தாள். எதுவும் பேசவில்லை. துவாரகாவும் இன்றுவரை அர்னவிடம் தானாக பேசுவதில்லை. அவனாக வந்து வந்து பேச பதில் மட்டும் சொல்லுவாள். அவ்வப்போது சிறு புன்னகை. அதை தாண்டி அவளும் வரவில்லை. யாரும் வற்புறுத்தவும் இல்லை.

டேப்லெட் மற்றும் தண்ணீர் பாட்டிலையும் எடுத்து வந்தவன்,

“அத்தை டேப்லெட். இப்பவே போட்டுடுங்க…” என அகிலாவிடம் கொடுக்க அதை வாங்கியவர் மாத்திரையை போட்டுவிட்டு அமர கண்கள் அர்னவின் புறம் சென்றது.

இவர் பார்த்ததுமே அவனும் பார்த்து புன்னகைத்தான். சலனமில்லாமல் பார்த்துவிட்டு கண்களை மூடி பின்னால் சாய்ந்து அமர்ந்துகொண்டார் அகிலா.

அவர் இப்படி செய்ததை அர்னவ் தவறாக நினைக்கவில்லை. அவனின் புன்னகையும் வாடவில்லை. தன் வரவை முறிக்காமல் இந்தளவேனும் ஒத்துகொள்கிறாரே என்று நிம்மதிகொண்டான்.

துவா, அஷ்மி இருவரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த அறைக்குள் செல்ல அப்போதுதான் ப்ரஷ் ஆவதற்கு எதுவும் எடுத்துவராததை கருத்தில் கொண்ட பிரசாத்,

“நான் போய் லக்கேஜ் எடுத்துட்டு வரேன். நீங்க வெய்ட் பண்ணுங்க…” என்று சொல்ல,

“ஹஸ், நாம இங்க என்ன சுத்தி பாக்கவா வந்திருக்கோம் லக்கேஜ் எடுத்துட்டு வர? இப்போதைக்கு ஒரு டவல், ப்ரெஷ், பேஸ்ட் போதும். அதை மட்டும் கொண்டு வாங்க…” என சொல்ல,

“இந்த ட்ரெஸ்லையே இருப்பியா நீ?…” அவனின் குரலில் கண்டனம் தெரிந்ததோ? தன்னை குனிந்து பார்த்தவள் முகம் சுருங்கியது.

முதல்நாள் இரவும் ஒரு காட்டன் டாப்பும், பட்டியாலாவும் அணிந்திருந்தாள். அதனோடு அவன் அள்ளிக்கொண்டு வந்திருந்தான். இப்போதுதான் புரிய தலையை சொறிந்துகொண்டு அவனை பார்த்தவள்,

“தூக்கிட்டு வரப்ப ட்ரெஸ் சேஞ்ச் பண்ணனும்னு தெரியாதா ஹஸ்? இப்படியா நைட் ட்ரெஸ்ல தூக்கிட்டு வருவீங்க?…” என்று கேட்டுவிட விழிகள் தெறித்துவிடும் போல அவளை பார்த்தவனுக்கு மூச்சடைத்தது.

இப்படி பேசுவாள் என்று அவனும் எதிர்பார்க்கவில்லை. துவாரகாவை தேட அவள் வந்ததுமே பாத்ரூமினுள் சென்றிருந்ததால் நிம்மதியானவன் அஷ்மியை பார்க்க அவனின் பார்வையில் உதட்டை சுழித்தவள்,

“இந்த கற்பனை  எல்லாம் கட்டாந்தரையில கூட காணக்கூடாது. ட்ரெஸ் சேஞ்ச் மீன்ஸ் என்னை எழுப்பி பண்ண சொல்லியிருக்கனும். இதைதான் சொல்ல வந்தேன். இதுல ஸ்வீட் ட்ரீம்ஸ் வேறயா ஹஸ்?…” என்று கிண்டல் செய்ய,

“சத்தியமா உன்னோட பேச முடியாதுடி…” என்றவன் முகம் நிறைந்த புன்னகையோடு வெளியே செல்ல அஷ்மியும் சிரிப்புடன் பாத்ரூம் கதவை தட்டினாள்.

“எவ்வளவு நேரம் முயல்க்குட்டி உள்ளயே ஒளிஞ்சிருப்ப?…” என்றதும் மெதுவாய் துவா வெளியில் வர அவளின் முகம் பார்த்த அஷ்மிக்கு அப்படி ஒரு புன்னகை.

“இதெல்லாம் இஸ்திரிகளுக்கு சகஜம் தானே? நான் பேசினத கேட்டு உனக்கு எதுக்கு இவ்வளவு வெட்கம் வருதுங்க முயல்க்குட்டி?…” என்று துவாவை கலாய்க்க,

“நானா? நான் ஒன்னும் வெக்கப்படலை. எதையும் கேட்கவும் இல்லை…” என்று படபடக்க,

“அச்சோ குழந்தைப்புள்ள…” என அவளின் கன்னம் கிள்ள,

“விடுங்க டாக்டர், இந்தாங்க உங்களுக்கு ப்ரஷ் பேஸ்ட், உங்க டவல் எல்லாம் எடுத்துட்டு வந்திருக்கேன். உங்க ட்ரெஸ் கூட. வர அவசரத்துல இதை எல்லாம் மறந்திருந்தா? அதான் எதுக்கும் இருக்கட்டும்னு எடுத்துட்டு வந்துட்டேன். எல்லாமே உங்க திங்க்ஸ் தான்…”

அனைத்தையும் எடுத்து அங்கிருந்த மேஜையில் துவாரகா வைக்கவும் அவளை கட்டிக்கொண்டாள் அஷ்மிதா.

“ஐயோ டாக்டர் எத்தனை தடவை கட்டிப்பீங்க? விடுங்க. போய் ப்ரஷ் ஆகுங்க…” என அவளை பாத்ரூமினுள் அனுப்பிவைத்தாள்.

அதற்குள் பிரசாத்தும் வந்துவிட மூவருமாய் சேர்ந்து அமர்ந்து பேசிக்கொண்டே சாப்பிட பேச்சு பேச்சாக இருந்தாலும் அஷ்மியின் முகம் எதையோ யோசித்துக்கொண்டே இருந்தது.

“டாக்டர் கவனம் இங்க இல்லையே? என்னையே பார்த்துட்டு இருக்கீங்க?…” என துவா கேட்க,

“ஒண்ணுமில்லை துவா, இப்போ நீ மயிலு வீட்டு சாப்பாட்டை சாப்பிடற. அதான் எப்போ இருந்துன்னு யோசிச்சேன். எனக்கு இது தெரியாது. நீயும் சொல்லலை…” என்றதும் துவாவின் முகம் மாறிவிட்டது.

“இப்போ இல்லை டாக்டர் எப்பவும் அங்க சமைச்சு எடுத்துட்டு வந்து நான் சாப்பிட மாட்டேன்…” என ஸ்திரமாய் சொல்ல,

“அப்போ இது சந்தியாவும், ஸ்வேதாவும் சமைச்சதுன்னு அர்னவ் எடுத்துட்டு வந்தாங்க…”

“உங்களுக்கே தெரியும் நான் மாசமா இருக்கறப்ப கூட அங்க இருந்து கொண்டு வந்தா நான் சாப்பிடறதில்லைன்னு அத்தை நம்ம வீட்டுக்கே வந்து தான் சமைச்சு குடுப்பாங்க எனக்கு. எது வந்தாலும் அதை நான் தொடர்தும் இல்லை. அப்படி இருக்கறப்ப நான் எப்படி சாப்பிடுவேன்?…” என்றவள்,

“சந்தியா அண்ணி நம்ம வீட்ல இருக்காங்க. கூடவே ஸ்வேதாவும். பாப்பாவை அவங்க தான் பார்த்துக்கறாங்க. ஹாஸ்பிட்டல்ல இன்பெக்ஷன் ஆகிடுமாம் பேத்திக்கு. இங்க தூக்கிட்டு வர கூடாதுன்னு உங்க மயிலு சொல்லிட்டார்…”

“அதான் ஸ்வேதாவும் சந்தியாவும் அங்க இருக்காங்களா?…” என்றதும் துவாரகாவின் முகம் கோபத்தில் மின்னியது.

“ஹேய் எதுக்கு இத்தனை கோபம்?…” என அஷ்மி கேட்க,

“ஏய் வெள்ளெலி முதல்ல துவாவை சாப்பிட விடு. நேத்து நைட்ல இருந்து அவளும் சாப்பிடலை…” என்று பிரசாத் கண்டிக்க,

“துவா நீ சொல்லு. என்ன ப்ராப்ளம்?…” அஷ்மி அவனின் பேச்சை கேட்காமல் துவாவை கேட்க,

“ஸ்வேதா நேத்து காலையிலையே வந்துட்டா. அவளை சமாதானம் செஞ்சு கூட்டிட்டு போக சந்தியா அண்ணி வந்தாங்க. வீட்ல சண்டை. இது இன்னும் மாமாவுக்கு தெரியாது டாக்டர். மாமா வரவும் தான் சொல்லனும். இப்போ சொல்ல வேண்டாம்னு இருக்கோம்…”

துவாரகா சொல்லவும் அஷ்மிக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன சண்டை? யாருக்கு பிரச்சனை என்று துவாரகாவை பார்த்தாள்.

——————————————————

“எனக்கு ரொம்ப சந்தோஷம்ங்க. நீங்க அஷ்மிக்கிட்ட ஆறுதலா பேசினது என்னோட மன பாரங்களை குறைச்சதுன்னு கூட சொல்லலாம்…”

தங்கள் வீட்டிற்குள் வந்ததுமே அறைக்குள் தன் பின்னோடு வந்த ரத்தினசாமியிடம் பத்மினி மனதின் எண்ணத்தை பகிர்ந்துகொள்ள அமைதியாய் பார்த்தார் ரத்தினசாமி.

“நீங்க உங்களோட இந்த மாற்றம் எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கு…”

“இதுல ஆச்சர்யப்பட என்ன இருக்கு பத்மி? இப்பவும் எனக்கு அவ மேல கோவம் இருக்குது தான். கொஞ்ச பேச்சா பேசினா என்னை? எத்தனை அவமானப்படுத்தினா. அதை எதையும் மறக்க முடியுமா? இப்பவும் எனக்கு நினைக்கும் போது ஆத்திரமா தான் இருக்கு…” என்றவர் கட்டிலில் அமர்ந்தார்.

“என்ன சொல்றீங்க?…” பத்மினி குழப்பமாய் பார்க்க,

“ஆனா இன்னைக்கு அவ கண்ணுல கண்ணீரை பார்த்ததும் எனக்கே உள்ளுக்குள்ள எதுவோ பண்ணிடுச்சு பத்மி. சின்னதுல இருந்து அவளை நான் பார்க்கறேன். அவளோட அம்மாவோட இறப்புக்கு போனப்ப தான் ஒரு வயசு குழந்தையா பார்த்தேன்….”

“இப்பவும் எனக்கு அவ்வளவு ஞாபகம் இருக்கு. அவ வளர வளர அவ புத்திசாலித்தனத்து மேல எனக்கு எவ்வளவு ஆச்சர்யம் இருக்கும் தெரியுமா? அதனால தான் அஷ்மி நம்ம அதிபனுக்குன்னு கேட்க சொன்னப்ப எனக்கும் பிடிச்சது. ஆனா ஹ்ம்ம்…” என பெருமூச்சுவிட்டவர்,

“அதுக்கப்பறம் என்னவெல்லாமோ நடந்துருச்சு. இத்தனை வருஷம் ஆகிடுச்சு. அவ கண்ணுல தண்ணி. சத்தியமா நான் பார்த்ததில்லை பத்மி. அவ கலங்கி உக்கார்ந்தும் நான் பார்த்ததில்லை. இன்னைக்கு அப்படி பார்க்கவும் என்னால தாங்க முடியலை….”

“உங்களுக்குள்ள அவ மேல பாசம் இல்லாமலாங்க? இருக்கு, ஆனா நீங்க காட்டிக்கலை..”

“அது மட்டுமில்லை. இந்த நேரம் அதிபன்  இருந்தா அவளை அழ விட்டிருப்பானா? அவனுக்காக நான் இதை செய்யவேண்டாமா பத்மி? எனக்கு என் மகனும் முக்கியம். நான் சொன்ன ஒரு வார்த்தை உனக்கே இவ்வளவு ஆச்சர்யம் தரும் போது என் மகனுக்கு எத்தனை சந்தோஷம் தரும். இதுல என்னோட சுயநலமும் இருக்குன்னு வச்சுக்கோயேன்…”

ரத்தினசாமி சொல்லவும் பத்மினியின் மனதே குளிர்ந்துவிட்டது. அவருக்கு இதை விட வேறு என்ன வேண்டும். பாசத்திற்கு கட்டுப்பட்ட மனிதர். ஆனால் நிறைய மன்னிக்கமுடியாத குற்றங்களை செய்த குறைபாடுள்ள மனிதரும் கூட. இந்தளவிற்கேனும் மாற்றம் உள்ளதே என மகிழ்ச்சியுடன் காபி எடுத்துவர வெளியே வந்தார்.

அங்கே கோபத்துடன் அன்னபூரணி இவர்களுக்காகவென வெளியில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்துகொண்டிருக்க பார்த்ததுமே பக்கென்று ஆனது பத்மினிக்கு.

“அண்ணன் எங்க அண்ணி?…” அன்னபூரணி பத்மினியை பார்த்ததும் கேட்க,

“அவர் அவர் தூங்கறார் பூரணி….”

“இப்ப தானே வந்தீங்க? அதுக்குள்ளவா தூங்கிட்டார்?…”

“ப்ச், நேத்து நைட் ஃபுல்லா ஹாஸ்பிட்டல்ல இருந்தார். டயர்ட்ல தூங்கிட்டார்….”

பத்மினி சொல்லவும் அங்கேயே அமர்ந்த அன்னபூரணி அமைதியாக இருக்க,

“நீயும் போய் ரெஸ்ட் எடேன்…”

“அண்ணன் எழுந்து வரட்டும். நான் பேசனும்…” இதற்குமேல் பேசாதே என்பதை போல பத்மினியை முறைத்துவிட்டு வாசலை வெறிக்க ஆரம்பித்தார்.  

Advertisement