Advertisement

தென்றல் – 13(2)

மறுநாள் தனம் விசயத்தை அஷ்மியிடம் சொல்ல அஷ்மியும் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு செல்வதாக சொல்ல தனத்தை முறைத்துவிட்டு சென்றான் அவன்.

“உன்னால முடியுமா? தோப்புக்கு வரையா இல்லையான்னு ஒரு வார்த்தையும் அம்மா கேட்கலை. அவளுக்கும் வந்து பார்க்க ஆசை இல்லை. ரெண்டு பேரையும் வச்சிட்டு என்னதான் செய்ய?” என இருவரையும் மனதினுள் வருத்தெடுத்தவன் அடுத்து வந்த பத்து நாட்களும் விரைத்துகொண்டே திரிந்தான்.

அஷ்மிக்கு அவனின் இந்த விறைப்பு எதனால் என ஓரளவிற்கு புரிந்தாலும் மனதினுள் சிறுபுன்னகையோடு கடந்துவிடுவாள். அதிலும் அவனை அவ்வப்போது வெறுப்பேற்ற இன்னும் காண்டானான்.

ஒரு மாதம் கடந்திருந்த நிலையில் இரவு நேரம் பிரசாத்தின் மொபைலுக்கு அழைப்பு வர எழுந்து வந்து பார்த்தான். அழைப்பு துவாரகாவிடமிருந்து வந்திருந்தது.

“சொல்லும்மா துவா…” என்னும் பொழுதே மறுமுனையில் விசும்பும் சத்தத்தில் பதறிவிட்டான்.

“துவா என்னம்மா ஆச்சு?…”

இரவு நேரம், அஷ்மி மொபைலுக்கு அல்லாது தன் எண்ணிற்கு துவாரகாவிடமிருந்து அழைப்பு. அவனின் எண்ணவோட்டம் எங்கெங்கோ சென்று தன் தந்தை இறப்பு செய்தி வந்த நாளை நினைவுபடுத்தியது.

இதயம் வேகமாய் துடிக்க உடலெல்லாம் வியர்த்துப்போனது. அறையயை விட்டு வேகமாய் வெளியில் வந்தவன்,

“சொல்லும்மா, ஏன் அழற?…”

“அண்ணா ராஜாங்கம் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக். ஹாஸ்பிட்டல் வந்திருக்கோம்…” என்று சொல்லு முடிப்பதற்குள் அழுகை அதிகமாகியது.

“துவா, துவா ப்ளீஸ் கொஞ்சம் பதட்டபடாம பேசுமா. இப்ப மாமா எப்படி இருக்காங்க? எனக்கு தெளிவா சொல்லு…” என்னும் பொழுதே லைனில் அகிலா வந்துவிட்டார்.

“பிரசாத், நான் அகிலா பேசறேன்ப்பா. பதட்டபடாம கிளம்பி வாங்க அஷ்மியை கூட்டிட்டு…”

“அம்மா ப்ளீஸ் நீங்க சொல்லுங்க. நிஜமா மாமா நல்லா தானே இருக்காங்க?.நீங்க அதி இருந்தார்ன்னா போனை அவர்க்கிட்ட குடுங்களேன் ப்ளீஸ்…”

“பிரசாத் அவர் இங்க இல்லை. அப்ராட் போய்ருக்கார். வர டூ த்ரீ டேய்ஸ் ஆகும்….” என்றவர் மேலும் சில விவரங்களை சொல்லிவிட்டு வைத்துவிட பிரசாத்திற்கு இதை எப்படி அஷ்மியிடம் சொல்வது என்று கவலையாக இருந்தது.

அவனின் பேச்சு சத்தத்தில் உறக்கம் கலைந்து வெளியே வந்த தனம் அவனின் முகத்தை பார்த்தே எதுவோ பிரச்சனை என்று கண்டுகொண்டார்.

“பிரசாத், என்னாச்சுப்பா? யார்க்கிட்ட பேசிட்டு இருந்த?…” என்று அவனின் தோளை தொட திரும்பியவனின் கண்கள் கலங்கி இருந்தது.

“பிரசாத்…”

“அம்மா மாமாக்கு ஹார்ட் அட்டாக்காம். துவா கால் பண்ணியிருந்தாம்மா. அகிலாம்மா இப்பதான் விவரம் சொன்னாங்க…”

“ஐயோ கடவுளே? என்ன இது? முதல்ல அஷ்மியை எழுப்புப்பா…” என அவனறைக்கு செல்ல அவரோடே பின்னால் சென்றவன் தனத்தை தடுக்கும் முன்னால் அவர் அழைத்துவிட்டார்.

ஆனால் அவள் நல்ல உறக்கத்தில் இருந்திருந்தாள். கண்களை விழிக்க கூட முடியவில்லை.

“என்னப்பா எழுந்துக்கவே இல்லை…” என்று மகனை பார்க்க,

“நைட் ரொம்ப தலைவலிக்குதுன்னு தூங்கவே முடியலைன்னு டேப்லெட் போட்டாம்மா. ஒரு வேலை அதான் எழுந்துக்கலையோ?…” என்றவன்,

“அவ தூங்கறதும் நல்லது தான்…” என சொல்லி தனது காரை எடுத்து வாசலில் கொண்டு வந்து நிறுத்திவிட்டு தனக்கு தேவையான துணிமணிகள், அஷ்மியின் அன்றாட உபயோக பொருட்கள் என எடுத்து ஒரு பேக்கில் திணித்துகொண்டான்.

“அம்மா நான் போய்ட்டு அங்க என்ன நிலவரம்ன்னு பார்த்துட்டு உங்களுக்கு போன் பன்றேன்…” என்றவன் கொண்டு செல்லவேண்டியவற்றை எல்லாம் எடுத்து காரில் வைத்துவிட்டு அஷ்மியிடம் வந்தான்.

இரு கைகளாலும் அவளை அள்ளிக்கொண்டவன் அவள் உறக்கம் கலையாமல் காரில் அவளை படுக்கவைத்தான். லேசாய் முகம் சுளித்தவள் மீண்டும் வசதியாய் உறங்கிப்போனாள்.

“போற வழில அவ எழுந்துட்டாலும் விஷயத்தை சொல்லிடுப்பா…” தனம் சொல்ல,

“இல்லைம்மா, அங்க போற வரை அவளுக்கு தெரியவே வேண்டாம். தாங்கமாட்டா. இப்ப அதி வேற இல்லை. எப்படி சமாளிக்க போறேன்னு தெரியலை…” என சஞ்சலத்துடன் சொல்லிக்கொண்டு தனத்திற்கு பத்திரம் சொல்லி கிளம்பிவிட்டான்.

அவனின் கார் பயங்கர வேகத்துடன் சென்னையை நோக்கி செல்ல ஆரம்பித்தது. விடிவதற்கு இன்னும் சில மணித்துளிகளே இருக்க கார் குலுங்கியதில் மெதுவாய் உறக்கம் கலைந்து கண் திறந்தவள் காரில் இருப்பதை பார்த்து யோசனையானாள்.

கார் பிரசாத்தினது என்று பார்த்ததும் கண்டுகொண்டவள் அவனையும் பார்த்துவிட்டாள். எங்கோ தனக்கு சொல்லாமல் இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைக்கிறான் என்று நினைத்தவள்,

“என ஹஸ்? ஒன் மந்த் கூட தாங்க முடியலை. பேசாம இருந்தா உடனே கிட்நாப் செஞ்சிருக்கனும். இதுதானா ஹஸ் உங்க டக்கு?. லேட் கிட்நா…” என உறக்கத்திலேயே புன்னகைத்து சொல்லியவளை திரும்பியும் பார்க்கவில்லை பிரசாத்.

“ஓகே ஓகே போகவேண்டிய இடத்துக்கு போய் சேர்ந்ததும் எழுப்புங்க ஹஸ்…” என்று சொல்லி மீண்டும் உறங்கிவிட்டாள் அஷ்மி.

அவன் எதிர்பார்த்த வார்த்தை அவளிடமிருந்து. அந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடியாமல் தற்போதைய சூழ்நிலை. அஷ்மியை நினைத்து உள்ளுக்குள் கலங்கிக்கொண்டிருந்தான்.

ஹாஸ்பிட்டலில் கார் நின்றதும் சிலநொடிகள் தன்னை ஆசுவாசம் செய்துகொண்டவன் தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்துவிட்டு காரிலிருந்து இறங்கி பின்பக்க கதவை திறந்து அஷ்மியை எழுப்பினான்.

“செம்ம ஹாட்டான ப்ளேஸா ஹஸ்? டோர் ஓபன் பண்ணினதும் எப்டி இருக்கு பாருங்க…” என்றபடி கண்ணை கசக்கிக்கொண்டு எழுந்தவள் காரின் முன்னாள் இருந்த இடத்தை நிமிர்ந்து பார்த்தாள்.

அவள் முதலில் வேலை பார்த்த மருத்துவமனை. பார்த்ததுமே எதுவோ சரியில்லை என்று உணர்ந்தவள் பிரசாத்தின் முகத்தை அவனின் ஆறுதல் பார்வை அஷ்மியின் விழிகளில் வலியை உண்டுபண்ணியது. மெதுவாய் இறங்கியவள்,

“அதி எங்க?…” என்றாள் அவனிடம்.

“அஷ்மி முதல்ல நாம உள்ள போவோம் வா…” அவளின் கை பிடித்து அழைக்க,

“அதி எங்கன்னு கேட்கறேன்ல…” என்று அவனின் பிடியை உதறிக்கொண்டு தள்ளி நிற்க,

“டாக்டர்…” என்கிற அழுகையுடன் துவா வந்தாள்.

“அதி எங்க துவா? அவன் இப்ப வரனும்…” பிடிவாதமாய் சொல்ல அகிலா வேகமாய் வந்து அஷ்மியை உள்ளே கூட்டி சென்றார்.

“ஆன்ட்டி ப்ளீஸ், என்னால இதை ஹேண்டில் பண்ண முடியாது. என்ன பிரச்சனை அப்பாவுக்கு? சும்மா எதையாவது நினைச்சு வருத்தப்பட்டு மனசுக்குள்ளயே வச்சுக்கறது. இப்ப பாருங்க…”

அவளுக்கு புரிந்துவிட்டது ராஜாங்கத்திற்கு தான் பிரச்சனை என்று. தன்னிடம் முதல் நாள் பேசும் பொழுது கூட நன்றாக பேசினாலும் குரலில் சோர்வு தட்டியது ராஜாங்கத்திற்கு.

அதிரூபன் வெளிநாட்டு சென்றிருந்ததை அறிந்தவள் ராஜாங்கத்திடம் கவனம் கவனம் என்று அத்தனை முறை கூறினாள்.

“அவன் இப்ப இங்க வரனும் ஆன்ட்டி. அவன் இருந்தா அப்பாவுக்கு இந்த மாதிரி ஆகியிருக்குமா? வரட்டும் அவன், அப்பாவும் எழுந்துக்கட்டும். பேசிக்கறேன் ரெண்டுபேரையும்….”

இத்தனை பேச்சுக்களையும் ஐஸியு விற்கு வெளியே நின்று பேசியவளின் உடல் நடுங்கியது. அவளின் உணர்வு போராட்டத்தை பார்த்த பிரசாத்தால் அவளை இந்த கோலத்தில் காணமுடியவில்லை.

“அவளின் கண்களின் உள்ளேயே வற்றிவிடு விழிநீர். உடைப்பெடுத்துவிடாதே. வேண்டாம்…” என அவளின் கண்ணீரிடம் மனதார மன்றாடினான்.

“அஷ்மி முதல்ல உள்ள போய் அப்பாவை பாரும்மா. உன் குரல் கேட்டா சரியாகிடுவாரு…” அகிலா சொல்ல,

“நேத்து நைட் கூட தான் பேசினேன். அப்போ என்னோட குரல் இந்த ஹார்ட் அட்டாக்கை தடுக்கலையே ஆன்ட்டி?…” என்றவளை பேசி பேசியே கரைத்து உள்ளே அழைத்து சென்றார்.

“என்னால பாக்க முடியாதே ஆன்ட்டி. இனி கண்ணை மூடினா கூட அப்பாவை இந்த கோலத்துல பார்த்தது தானே ஞாபகத்திற்கு வரும். விட்ருங்க ஆன்ட்டி. அவர் கண்டிப்பா கண்ணு முழிச்சு வருவாரு. ப்ளீஸ்…”

உள்ளே வந்த பின்னும் கண்களை மூடிக்கொண்டு அவள் கெஞ்ச அகிலாவிற்கு கலங்கிவிட்டது.

“அஷ்மி நீ ஒரு டாக்டர். இது மாதிரி எத்தனையோ பேஷன்ட்ஸ் பார்த்திருப்ப. உனக்கு நான் சொல்லனுமா என்ன?…”

“அந்த பேஷன்ட்ஸ் யாரும் என்னோட அப்பா இல்லையே ஆன்ட்டி…” அழுகை முட்டியது. உதட்டை கடித்து அடக்கிகொண்டாள்.

“ப்ச், அப்பாக்கிட்ட பேசு. உன்னை பார்க்கனும்னே சீக்கிரம் சரியாகிடும் பாரு…” என்று அவளின் பார்வையை ராஜாங்கத்தின் புறம் திருப்ப மெதுவாய் அவளாகவே அவரருகே சென்று அமர்ந்தாள் அஷ்மி.

அதை பார்த்துவிட்டு சற்று தள்ளி நின்றுகொண்டார் அகிலா. ராஜாங்கத்தின் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துகொண்டவள்,

“எவ்வளவு செல்பிஷ் அப்பா நீங்க? உங்களோட கடமை முடிஞ்சதுன்னு அம்மாவை பார்க்க இவ்வளோ அவசரமா கிளம்பிட்டீங்க? வெரி பேட். அஷ்மி பாவமில்லையாப்பா?…” அடக்கப்பட்ட அழுகை வெடிக்க ஆரம்பித்தது.

“அம்மா போனதும் எனக்காக இத்தனை வருஷம் வாழ்ந்து என்னக்கொரு லைப் குடுத்து செட்டில் பண்ணிட்டு இப்ப உங்க வைப்பை பார்க்க தவிக்கறீங்க. நீ பாட்டுக்கு கிளம்பிட்டா அஷ்மி உங்களையும் அம்மாவையும் பார்க்க எத்தனை வருஷம்ப்பா வெய்ட் பண்ணனும்?…”

“அம்மாவுக்கான காத்திருப்பு இத்தனை வருஷம் உங்களை எந்தளவுக்கு வேதனை படுத்தியிருக்கும். இப்ப அந்த வேதனையை எனக்கும் தரனும்னு நினைக்கறீங்களாப்பா? அந்த காத்திருப்பு எத்தனை வலியை குடுக்கும்னு நம்ம ரெண்டு பேருக்குமே நல்லா தெரியுமேப்பா. இருந்தும் அதை எனக்கு குடுக்க நினைக்கறீங்க? அஷ்மி தாங்குவாளாப்பா?…”

“வந்திருங்கப்பா. அப்பான்னு ஒருத்தராவது எனக்கு மிச்சம் இருக்கட்டும். என்னால உங்களையும் ஒரு நட்சத்திரமா வானத்துல பார்த்து தனியா பேசிட்டு இருக்க முடியாதுப்பா. ப்ளீஸ்…” என்றவளின் அழுகை அதிகமாக வேகமாய் வந்து அஷ்மியை கட்டிகொண்டார் அகிலா.

“இல்லடா, ஒண்ணுமே இல்லை. அப்பா சரியாகிடுவாங்கன்னு டாக்டர் சொல்லிட்டாங்க அஷ்மி. ஒண்ணுமே இல்லைடா…” என்று சமாதானம் செய்ய அஷ்மியின் பின்னால் ராஜாங்கத்தை பார்க்க வந்த பிரசாத்தும் இதை அனைத்தையுமே கேட்டுகொண்டிருந்தான்.

அப்போதும் சிரிப்பும் கலாட்டாவுமாக இருக்கும் அஷ்மியின் கண்ணீர், இந்த பேச்சு என அவளின் இந்த பரிமாணத்தில் அகிலா ஸ்தம்பித்து போனார். அஷ்மியை சமாதானம் செய்து மெதுவாய் எழுப்பி அழைத்துகொண்டு வெளியே வந்து சேரில் அமரவைத்துவிட்டு அவளருகே அமர அங்கே இருந்தவர்கள் யாரையும் அஷ்மி கவனிக்கவே இல்லை.

சிறிது நேரத்திற்கு பின்னால் அவளின் தலையில் ஒரு கரம் அழுத்தமாய் படிய நிமிர்ந்து பார்த்தாள் அஷ்மிதா.

“அதான் டாக்டர் சரியாகிடும்னு சொல்லிட்டாருல. அப்பறம் என்னத்துக்கு அழுகற? ஆங். நாங்கலாம் இல்லையா உனக்கு? அப்படியா விட்ருவோம். கண்ணை துடை முதல்ல…” என்றவரை பார்த்து இன்னும் கண்கள் கலங்கியது.

“மயிலு…” என்றவள் முகத்தை மூடிக்கொண்டு விசும்ப ரத்தினசாமிக்கும் தாளவில்லை.

“ப்ச், சொல்றேன்ல. அழாத அஷ்மி…” என்று அவளின் உச்சந்தலையை தட்டிகொடுத்தவர்,

“பத்மினி இவளை வந்து என்னனு பாரு…” என்றவர் தொண்டையை செருமிக்கொண்டு அங்கிருந்து தள்ளி நின்றார்.

அனைத்தையும் பார்த்தபடி நின்றான் பிரசாத்.

Advertisement