Advertisement

தென்றல் – 13(1)

                 மறுநாள் எதுவுமே நடவாதது போல அஷ்மி எழுந்து குளித்து வந்தவள் தனத்தை தேடி சென்றாள்.

“எதுவும் ஹெல்ப் பண்ணட்டுமா அத்தை?…” என அவள் கேட்டதே தனத்தை குளிர்விக்க,

“அதெல்லாம் வேண்டாம்மா. நானே முடிச்சுட்டேன். பொன்னுக்கு பதிலா நம்ம ரைஸ்மில்லுல வேலைபார்க்கற ஒரு பொண்ணை பிரசாத் ஏற்பாடு செஞ்சிட்டான். நீ போய் ஹாஸ்பிட்டலுக்கு ரெடியாகும்மா…” என அவளை அனுப்பிவிட்டார்.

அறைக்கு வந்த அஷ்மி வெகு நிதானமாக தனது வேலைகளை முடித்து தயாராகி வர சாப்பாட்டு மேஜையில் அனைத்தும் தயாராகி இருந்தது.

“வாம்மா, வந்து சாப்பிடு…” என தனம் அழைக்கும் போது பிரசாத் வந்துவிட அவனுக்கும் தட்டை எடுத்து வைத்தார் தனம்.

“நாமலே போட்டுக்கலாம் அத்தை. நீங்களும் சாப்பிடுங்க…” என தனத்துடன் பேசியபடி சாப்பிட அவளின் முகத்தை பார்ப்பதும் உணவை உண்பதுமாக இவன் இருக்க அதை கவனித்தும் கவனியாதது போல அஷ்மி இருந்தாள்.

அவனிடம் அவளும் அவளிடம் அவனும் பேசிக்கொள்ள முற்படவே இல்லை. தன்னை ஒரு பார்வை அவள் பார்த்திருந்தால் கூட இவனாக சென்று கட்டாயம் பேசியிருப்பான்.

ஆனால் அப்படி ஒருவன் அந்த வீட்டினுள்ளே இல்லாததை போல அவள் நடந்துகொண்ட விதம் அவனை வாட்டியது.

“உனக்கே இவ்வளவுன்னா எனக்கு எவ்வளவு இருக்கும். போடி” என மனதினுள் சொல்லிக்கொண்டாலும் பேசிவிடமாட்டாளா என்பது போய் ஓரப்பார்வையாவது பார்த்துவிடமாட்டாளா என்றிருந்தது.

அவனும் எதிரே வருவதும் பக்கவாட்டில் கடப்பதுமாக நூறு வித்தைகளை பிரயோகித்துவிட்டான். ஒன்றும் ஆவதற்கில்லை.

அஷ்மியும் வேண்டுமென்று அவனிடம் பேசாமல் இல்லை. அது என்ன பெண்கள் என்றால் மட்டமா? அவனின் எண்ணம் இப்படி இருக்கும் போது ஏன் தான் சென்று பேசவேண்டும்? என்ற எண்ணம் அவளுக்கு.  

எதற்கும் ஈகோ பார்க்காதவள் யாராக இருந்தாலும் தானே சென்று பேசுபவள். சதா சர்வகாலமும் முறைத்துக்கொண்டு நிற்கும் ரத்தினசாமியிடம் கூட அவர் பேசாமல் ஒதுங்கி சென்றாலும் வம்பாய் சண்டையிடுபவள். பிரசாத்திடம் ஏனோ வலிந்து செல்ல மனம் வரவில்லை.

“பேச்சா பேசின. உன்னை என்ன பன்றேன் பாரு” என்னும் விதமாய் அவனை அலைகழிக்க இவனுக்குத்தான் சுள்ளென வந்தது.

கோபம் வந்தாலும் கட்டுப்படுத்திகொண்டான். அவனுக்கே தெரிந்தது கண்மண் தெரியாத கோபம். வார்த்தைகள் சிதற தேவையில்லா வாக்குவாதத்தை தானே ஆரம்பிக்க விரும்பவில்லை.

இவள் இவளாக இருந்து என்னை நானாக இருக்கவிடமாட்டேங்கிறாளே? என்னும் ஆதங்கள் அலையலையாய் பரவியது அவனுள்.

இவனின் யோசனைகளை முழுவதும் அவளை எப்படி அணுகுவது என இருக்க அவளோ வேகமாய் தனத்திடம் சொல்லிவிட்டு தன்னுடைய ஸ்கூட்டி சாவியை எடுத்துக்கொண்டு வாசலுக்கு சென்றாள்.

அதை பார்த்தவன் ஒரு நொடி என்ன செய்வதென புரியாமல் திகைத்து பின் இனியும் இப்படியே விடவேண்டாம் என்று,

“அஷ்மி…” என சத்தமாய் அழைத்தும் விட்டான். அளித்த பின்னர் தான் அவனுக்கே உரைத்தது தான் செய்த செயல். என்னவென்று அவள் திரும்பி பார்க்க,

“வாயை திறந்து கேட்கமாட்டாளாமா என்னன்னு? இவக்கிட்ட இனியும் பேசக்கூடாது.” என மனதிற்கு கடிவாளமிட்டுக்கொண்டிருக்க அவனுக்கு முன்பே அஷ்மியிடம் வசீகரப்பட்டு கிடக்கும் அவனின் நெஞ்சம் அடங்குமா என்ன?

“வெய்ட் பண்ணு நானே ட்ராப் பன்றேன்…” கேட்டேவிட்டான்.

இருமனதாய் ஒருவனிவன் போராட அவனின் நெஞ்சமே அவனுக்கு வஞ்சம் செய்தது.

“ஏன்டா கேட்ட? கேட்காத கேட்காதன்னு சொல்லியும் கேட்டுட்ட, வெட்கமாயில்லை.” என உள்ளுக்குள் தனித்தனியே வகுந்துகொண்டிருந்தான் தன் இதய சிறகுகளை.

“நோ தேங்க்ஸ். நான் நேத்தே சொல்லியிருந்தேன்ல நானே போய்ப்பேன்னு…” என்று அவள் பேசவும் அதற்கு மேலும் கட்டுபாடாவது காட்டாற்று வெள்ளமாவது? எழுந்து அவளருகே வந்தான்.

“நேத்து ஈவ்னிங் நான் பிக்கப் பண்ண வரலைன்னு கோபமா? இல்லை நேத்து சண்டையை மனசுல வச்சிட்டு இருக்கியா?…” வாய்க்குள் வளைந்து நெளிந்தது நாக்கு. சத்தம் கம்மியாக வந்தாலும் அவளுக்கு நன்றாகவே கேட்டது.

“எனக்கென்ன கோபம்? நத்திங். உங்க ஒபீனியனை நீங்க சொன்னீங்க. என் ஒபீனியனை நான் சொன்னேன். ஜஸ்ட். இதுல கோவிச்சுக்க என்ன இருக்கு? உங்க கருத்துக்களோட என்னோட கருத்து ஒத்துபோகலை. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வியூ. அதுக்கும் நான் தனியா போறதுக்கும் நீங்க ஏன் முடிச்சு போடறீங்க?…”

அவள் சாதாரணமாக சொல்ல அவனால் பேசமுடியவில்லை. அவ்வளவு தானா அவள் பேச்சு. இன்னும் ஏதாவது பேசுவாளா என நின்றான்.

நீங்க தான் பேசாம இருந்தீங்க. நான் இல்லைன்னு ஏதாவது சொல்லுவா பேசலாம்னு பார்த்தா எனக்கு சான்ஸே குடுக்க மாட்டேன்றா. இதுல நான் மேல் சாவனிஸ்ட்னு பட்டம் வேற. இவ தான் என்னை டாமினேட் பன்றா. அது இவளுக்கு புரியுதா இல்லையா?” என உள்ளுக்குள் புகைந்தவன் அஷ்மியை பார்த்தான்.

இவன் அமைதியாக நிற்கவும் லேசான புன்னகையோடு வெளியில் வந்துவிட்டாள். வண்டியை ஸ்டார்ட் செய்ய அதிலிருந்து கிளம்பும் புகை இவனின் காதில் கிளம்பிய புகைக்கு சற்றும் குறைவானது அல்ல.

அந்த ஸ்கூட்டியை அத்தனை கடுப்பாகவும், எரிச்சலாகவும் பொறாமையோடு பார்த்தான் பிரசாத்.

“இது வந்து இறங்கினப்ப கூட ஒன்னும் தோணலை. இன்னைக்கு இப்படி நடக்கும்னு தெரிஞ்சிருந்தா வந்தனநிக்கே இதை காய்லாங்கடைக்கு அனுப்ப எல்லாம் செஞ்சிருப்பேன்” என வன்மமாய் பார்க்க அவனின் எண்ணம் அவளை அடைந்ததோ திரும்பி பார்த்தவள் அவனுக்கு கை ஆட்டிவிட்டு சென்றுவிட்டாள்.

“இன்னும் எவ்வளவு நேரம்டா இங்கயே நிப்ப? கிளம்பாம…” தனம் வந்து கேட்க,

“என்ன இப்ப லேட்டா போனா? கிளம்பிடறேன். இனிமே விடியுற முன்னமே கிளம்பிடறேன். போதுமா?…” அவனின் ஒட்டுமொத்த கோபத்தையும் தனத்திடம் காட்டிவிட்டு கத்தி செல்ல வியப்பாய் நின்றார் தனம்.

“இப்ப என்ன கேட்டேன்னு இவ்வளவு கோவம் உனக்கு?…”

“அம்மா, ப்ளீஸ்…”

“ஏன்டா என்னனு கேட்டா பதில் கூடவா சொல்ல முடியாது உனக்கு? இன்னைக்குன்னு இவ்வளவு சலிச்சுக்கற?…”

“இன்னைக்கு எனக்கு வாய் வலிக்குது போதுமா? ரெண்டு நாள் கழிச்சு பதில் சொல்றேன்…”

மேலும் இருந்தால் இன்னும் வாயை பிடுங்குவரோ என வேகமாய் பைக் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே வர முதல் நாள் அவளுடனான பயணம் ஞாபகத்திற்கு வர அதனோட அவளின் அருகாமையும் ஸ்பரிசமும் நினைவுபடலத்தில் தேனில் ஊரும் பலாசுளையென தித்திப்பாய் பரவியது.

வண்டியை ஸ்ட்ராட் செய்ய முடியாமல் சாவியை பிடித்தபடி நிற்க அவனின் செய்கையே புதிதாய் இருந்தது தனத்திற்கு. அவரின் முகத்தில் கொஞ்சம் புன்னகையும் கூட.

“பிரசாத்?…” தனம் வாசலில் நின்றே அழைக்க நிமிர்ந்து பார்த்தவன்,

“கிளம்பிட்டேன்…” என பதில் கொடுத்தவாரு வண்டியை கிளப்பி சென்றான்.

பேசினாள் தான். ஆனால் எதுவோ குறைந்தது. புன்னகை ம்ஹூம். பார்வை ம்ஹூம். கோபம் மிச்சமிருந்ததா? நிச்சயம் இல்லை. நடை உடை பாவனை ம்ஹூம். எதுவுமே இல்லை இல்லை இல்லை என அவனின் மிச்சமிருந்த மூளை எடுத்துக்கூறியது.

சட்டென மின்னலடிக்க அவனின் இதழ்களில் புன்னகை. கண்டுபிடிச்சுட்டேன் என இதயம் கும்மாளமிட்டது.

ஆம். அவளின் மிஸ்டர் ஹஸ் என்ற அழைப்பு இன்று இல்லை. அதை கேட்க அவனின் செவிப்பறைகள் பச்சை குழந்தைகள் பசியில் இருப்பதை போல காத்துக்கிடந்தது.

“இம்ப்ரெஸ் பண்ணிட்டா. வெள்ளெலி. ஒரே நாள் சண்டை. கொஞ்சம் அலட்சியம். மொத்தமா கவுத்துட்டியே” என தலையை சுகமாய் சிலுப்பிக்கொண்டவன் கவனம் சிதறி சட்டென வயலில் விழவேண்டி லேசாய் சறுக்கி பின் சுதாரித்து பைக்கை ஓரமாய் நிறுத்தினான்.  

ஏனோ அவளை பார்க்கவேண்டும் என்கிற ஆவல் ஆர்ப்பரிக்க இப்போவாவது பல்ப் எரிஞ்சதே என அவனுள்ளம் குதித்து கும்மாளமிட்டது.

“எல்லாம் ஏற்கனவே புரிஞ்சது எரிஞ்சது தான். கொஞ்சம் லேட் பிக்கப்” அவனே சொல்லிகொண்டான்.

நேராக ரைஸ்மில்லுக்கு சென்றவன் அன்றாட வேலையை பார்த்துவிட்டு மதிய உணவிற்கு வர அஷ்மியோ அவனுக்கு முன்பே வந்து உண்டுவிட்டு சென்றுவிட்டாள்.

“உங்களை யாரம்மா இவ்வளவு சீக்கிரம் சமைக்க சொன்னது? கொஞ்சம் மெதுவா செஞ்சா தான் என்ன?…” என்று தனத்திரம் எகிற,

“என்னைக்கு போலதானடா சமைச்சேன். உனக்கு தான் சமையல் லேட் ஆனா மூக்குமேல கோவம் வருமே? பசி பொறுக்காதவன்…” தனம் புரியாமல் பார்த்துக்கொண்டே பேச,

“நான் வரவும் சேர்ந்து கூட சாப்பிடலை. இப்ப நான் தனியா சாப்பிடவேண்டியதா இருக்கு…”

“இத்தனை வருஷமா நீ அப்படி தானடா சாப்பிடுவ. உனக்காக நான் வெய்ட் பண்ணினா அதுக்கும் கத்துவ. மாத்திரை போட்டுக்கனும் நேரத்துக்கு சாப்பிடுங்கன்னு. இன்னைக்கு என்ன சின்னபுள்ளை மாதிரி?…”

தனம் குழம்பிப்போனார் அவனுக்கு என்னவானது என்று. பிரசாத் படுத்திய பாட்டில் அவனுக்கு எடுத்துவைப்பதை மறந்து வாய்பார்த்து நின்றார்.

“அவளை ஏன் அதுக்குள்ளே கிளம்பவிட்டீங்க? கொஞ்ச நேரம் அவ இருந்து ரெஸ்ட் எடுத்துட்டு போக சொல்ல வேண்டியது தானே?. நான் வரதுக்குள்ள என்ன அவசரம் அவளுக்கு?…”

அவன் கடுகடுத்துக்கொண்டே இதை சொல்லவும் தான் தனத்தின் முகத்தில் வெளிச்சமே பரவியது. மகன் மனைவியை தேடுகிறான் என்று.

இத்தனை நாட்கள் அவளிடம் பற்றுதலோடு இருந்தாலும் உரிமையான ஒட்டுதல் இல்லை என்பது அவருக்கு கவலையை தந்திருந்தது. இன்று அந்த உரிமை அவனிடம் வெளிப்பட அவளை தேடி பேசுவதை பார்க்க உண்மையில் சிரிப்பு தான் வந்தது.

எப்படி இருந்த மகன் இப்படி ஆகிட்டானே? என்கிற எண்ணம் தோன்ற அது முகத்தில் ஒரு பொலிவை கொடுத்தது தனத்திற்கு.

“என்னம்மா சிரிக்கறீங்க?…” என அதையும் பட்டென கேட்டான்.

“முதல்ல சாப்பிட்டு பிரசாத். நேத்தும் ஒண்ணுமில்லாததை பெருசாக்கின. இன்னைக்கு உன் அழிச்சாட்டியம் ரொம்ப அதிகமா போச்சு…”

“உங்களுக்காக அவட்ட பேசினேன்ல. கடைசியில ரேணு பெரும் ஜோடி போட்டுட்டு என்னை ஜோக்கர் ஆக்கிட்டீங்க…”

“உன்னை நான் பேசவேண்டாம்னு தானே சொன்னேன். நீ தான் தாம்தூம்னு குதிச்ச…”

“உங்க கண்ணுல கண்ணீரை பார்த்துட்டு நான் எப்படி சும்மா இருக்க? அதான்…”

“உன்னால நான் கண்ணீர் வடிச்சதே இல்லையாடா?” என மனதிற்குள் கேட்டுக்கொண்டவர் மறந்தும் முகத்தில் அதை காண்பித்துகொள்ளவில்லை.

அதன் பின்னால் மற்ற வேலைகளை பற்றி பேசிக்கொண்டே உண்டுமுடித்தவன் சாப்பிட்டதும் கிளம்பிவிட்டான்.

“நாளைக்கு மாந்தோப்புல காய் ஒடிப்பு இருக்கும்மா. மத்தியானம் சாப்பிட வரமாட்டேன். நீங்க தோப்புக்கு வருவீங்களா?…”

“காலையிலையே எல்லா வேலையையும் முடிச்சிடறேன் பிரசாத். வழக்கம் போல அங்க போய்டுவோம். சாப்பாடும் எடுத்துட்டு…” என்றதும் அவரை பார்த்தவன்,

“வந்தும்மா அஷ்மிக்கு லஞ்ச்?…”

“அவளுக்கு குடுத்துவிட்டுடலாம்டா…” இலகுவாக சொல்லிவிட,

“அம்மா, அவளை தோப்புக்கு கூட்டிட்டு போய் காமிக்கனும்னு தோணுதா உங்களுக்கு? எனக்கு தான் ஞாபகம் இல்லை. நீங்களாவது சொல்லவேண்டியது தானே?…” என்று திடீரென டென்ஷனாக பேச தனத்திற்கு எரிச்சலாக போனது.

“என்னதான்டா நினைச்சுட்டு இருக்க? நான் வேண்டாம்னா சொன்னேன். நேத்துதான் ஹாஸ்பிட்டல்ல சேர்ந்திருக்கா. தோப்பு இங்க இருந்து எம்புட்டு தூரத்துல இருக்கு. அவளை எப்படி கூட்டிட்டு போக?…” என தனம் பிடிபிடியென பிடித்துவிட,

“நான் கிளம்பறேன்…” என முறுக்கிக்கொண்டு கிளம்பினான் பிரசாத்.

Advertisement