Advertisement

தென்றல் – 11

               திருவிழா முடிந்து அனைவரும் ஊர் கிளம்பி விட மீண்டும் அங்கே இயல்புநிலை திரும்பியது. 

திருவிழாவில் நாச்சியுடனும் விஷ்ணுவுடனும் சேர்ந்து அஷ்மி அடித்த கொட்டத்தில் தனத்திற்கு அவள் மீதான சஞ்சலங்கள் கூடியது. நந்தினி கூட அவ்வப்போது கலகலப்பாய் அவர்களோடு கலந்துகொண்டாள்.

எந்தளவிற்கு தனத்தின் மனதில் கலக்கம் சூழ்ந்ததோ அதை விட பலமடங்கு பிரசாத்தின் மனதில் சுகம் பரவியது அஷ்மியால், அவளின் இயல்பால். 

அன்று அஷ்மிதா ஹாஸ்பிட்டலில் சேரும் நாள். ஏற்கனவே அங்கே சென்று பார்த்து வந்துவிட்டதால் தானே செல்வதாக பிரசாத்திடம் சொல்ல அவனோ முடியவே முடியாதென மறுப்பாய் முறைத்தான்.

காலை அனைவருக்கும் முன்னே அஷ்மிதா கிளம்பி விட பிரசாத்தோ அதோ இதொவென இவளின் பொறுமையை சோதித்துக்கொண்டிருந்தான். அவனுக்கு முன்பே உண்டுவிட்டு தனத்திடமும் சொல்லிக்கொண்டு இவள் தயாராக இருந்தாள்.

தனத்திற்கோ முதன்முதலாக தங்கள் ஊர் மருத்துவமனையில் மருமகள் மருத்துவராக பணியாற்ற செல்லவிருக்கிறாள். மங்களகரமாக புடவை கட்டி சென்றால் என்னவென்று தோன்றியது. 

தோன்றியது தான். வாய்விட்டு சொல்லவில்லை. இது அவளுக்காய் தெரியவேண்டும் என நினைத்தார். ஒவ்வொன்றும் சொல்லி சொல்லியா வரும் என்று எண்ணம் வேறு.

முதல் நாளும் அஷ்மியின் வீட்டினர் வரும் வரையிலும் அவள் சுடிதாரிலேயே இருக்க மாலை கோவிலுக்கு கிளம்பும் நேரம் அகிலா சொல்லித்தான் புடவைக்கு மாறினாள் அஷ்மி. கட்ட கூடாதென்றெல்லாம் இல்லை அவளுக்கு. தோன்றவில்லை. அவ்வளவு தான்.

ஹாஸ்பிட்டல் கிளம்புவதற்கும் அஷ்மி அழகாய் ஒரு காட்டன் சுடிதாரில் தயாராய் இருந்தாள். அவளுக்கு ஹாஸ்பிட்டல் செல்லவேண்டும் என்றால் அந்த உடை தான் வசதியானது என்பது அவளின் எண்ணம். 

மற்ற நேரங்களில் இடத்திற்கு ஏற்றார் போல என்பதை விட தன் மனதிற்கு ஏற்றார் போல தான் உடை அணிவதும் தன்னை தயார் செய்வதும். ஆனால் ஹாஸ்பிட்டல் என்று வரும் பொழுது தன்னுடைய உடை விஷயத்தில் எந்தவித மாற்றத்தையும் அவள் விரும்ப மாட்டாள்.

தனக்கு இலகுவாக தன் பணிக்கு ஏற்றவிதமாக இருப்பது காட்டன் உடை தான் என்பதில் ஏனோ அவளால் மாறமுடிவதில்லை. அதிலும் அதிக வேலைபாடுகள் இல்லாமல் நேர்த்தியாக இருக்கும் உடைகளாக இருக்கும்.

திருமணத்தன்றே பிரசாத்துடன் அவள் வந்து நிற்கும் போதும் கூட அவள் அணிந்திருந்த உடை அத்தனை களேபரத்திலும் தனத்தை அசைத்தது. 

இந்த உடையிலேயே இப்படியா வெளியில் சென்றாள் என்று அவரறியாமல் நினைத்து பின் அப்படி யோசிக்க கூடாது என தனக்கே சொல்லிக்கொண்டவர்க்கு இன்று அந்த நாள் நிகழ்வு எழுவதை தவிர்க்க முடியவில்லை.

அவருக்கு அஷ்மியிடம் இதை சொல்லவும் முடியவில்லை. அப்படியே விடவும் இயலவில்லை. ஆனாலும் வாயை திறக்காமல் மௌனமானார். பிரசாத் ஏதாவது சொல்வானா என பார்க்க அவனும் ஒன்றும் சொல்லவில்லை. 

அஷ்மி பொறுத்து பொறுத்து பார்த்து இனியும் விட்டால் மாலை தான் மருத்துவமனைக்கு என நினைத்து பிரசாத்திடம் கேட்டேவிட்டாள்.

“ஆனாலும் நீங்க ரொம்ப பன்றீங்க ஹஸ். ட்யூட்டில ஜாயின் பண்ணபோற நானே எர்லியா ரெடி ஆகிட்டேன். நீங்க நாலுமணி நேரமா ரெடி ஆகிட்டு இருக்கீங்க? சரியான மேக்கப் பார்ட்டி போல?…” என்று அவனை கலாய்க்க,

“வெளில போறப்ப நாலு பேர் பார்ப்பாங்க. நல்லவிதமா இருக்க வேண்டாமா?…” அவன் சொல்ல,

“கான்பிடன்ட் பாஸ்…” அதற்கும் அவள் உதட்டை சுழிக்க அதை பார்த்தவன்,

“பார்க்காமலா சொல்றேன். பார்க்கறவங்களும் இருக்காங்க….” காலரை தூக்கிவிட்டு அவளிடம் வம்பு செய்ய,

“சோ வாட்? ஐ டோன்ட் கேர். பட் எனக்கு என்னை மட்டும் பார்க்கற புருஷன் போதும். ஜஸ்ட் டாட்…” என்று அவள் பார்க்க என்ன பதில் சொல்வதென தெரியாமல் அவன் விழிக்க,

“புரியலையா? வெளில இறங்கி நடந்தா எதிர்ப்படறவங்க பார்க்கத்தான் செய்வாங்க. யார் வேணும்னாலும் பார்த்துட்டு போகட்டும். அதை பத்தி எனக்கு கவலை இல்லை. ஆனா உங்க பார்வை, உங்க மனசுன்னு மனைவியான என்னை மட்டும் தான் பார்க்கனும்னு சொன்னேன்…” சிரிப்பு மாறாமல் முகம் மாறாமல் அவள் சொல்ல மனதினுள் எதுவோ அழுத்தியது.

“கிளம்புங்க, லேட் ஆகிடும். எனக்கு டைம் ரொம்ப முக்கியம். ஒருத்தரும் என்னை கை நீட்டி ஒரு வார்த்தை கேட்டுட கூடாது. என்னோட ப்ரபஷன்ல நான் ரொம்பவே சின்ஸியர்…” என்றவள்,

“லைப்ல கூட…” என சொல்லிவிட்டு அறையிலிருந்து வெளியேறிவிட பிரசாத்திற்கு கால்கள் நின்ற இடத்தை விட்டு அசையவில்லை. படபடவென நெஞ்சம் அடித்துக்கொண்டது.

“ஹஸ் நானே கிளம்பிடட்டுமா?…” என மீண்டும் அறையினுள் தலையை மட்டும் நீட்டி அவள் கேட்டதும் சுயவுணர்வு திரும்பியவன் ஒரு பெருமூச்சுடன் கார் சாவியை எடுத்துகொண்டு சென்றான்.

“செம பந்தா ஹஸ். வாக்கபிள் டிஸ்டன்ஸ்ல இருக்கற ஹாஸ்பிட்டலுக்கு கார். ஓவரா இருக்குல…” என்று கிண்டல் பேச அமைதியாய் அவளை முந்திக்கொண்டு காரில் அமர்ந்து கிளப்பினான். 

உண்மையில் அவளிடம் பேசவே பயமாய் இருந்தது பிரசாத்திற்கு. குற்றம் செய்த நெஞ்சம் அத்தனை குறுகுறுப்பு மூட்டியது.

“ஹஸ் அரைமணி நேரத்துக்கு முன்னால் இருந்து  மௌனவிரதமா?…” 

“என்ன?…” என்று காரை ஓட்டிக்கொண்டே அவன் திரும்பி பார்த்து கேட்க,

“மார்னிங் நல்லா தான் பேசினீங்க. இப்ப கொஞ்ச நேரமா பேசலையா அதான் கேட்டேன். லிப் க்ளாஸ்க்கு பதிலா ஃபெவிஸ்டிக் எடுத்து பூசிட்டீங்களோன்னு கூட நினைச்சுட்டேன்…”

“என்ன லிப் கிளாஸ்ஸா?…” அவன் முறைக்க,

“போடமாட்டீங்களா? சோ சேட்…” அவள் உச்சுக்கொட்ட,

“உங்க வீட்டு ஆம்பளைங்க லிப்கிளாஸ் போடுவாங்கன்னு எனக்கு தெரியாம போச்சு…” அவன் அவளை கேலி செய்வதை போல சொல்ல,

“எங்க வீட்டு ஆண்கள் ஏன் லிப் கிளாஸ் போடனும்? அவங்க தான் நல்லா பேசுவாங்களே. உங்களை மாதிரியா ரீசனே இல்லாம திடீர்ன்னு கம் போட்டு ஒட்டின மாதிரி வாயை திறக்காம பேசாம இருக்க…”

அவள் அவன் பேசாததற்கு அத்தனை விளக்கம் சொல்ல பதில் பேச முடியாமல் விழி பிதுங்கினான் பிரசாத்.

“இப்ப உனக்கு என்னதான் வேணும்?…”…” உண்மையில் அவனின் நிலையை நினைத்து அவன் மீதே கோபம் கொண்டவன் அதை அவளிடத்தில் காட்ட,

“மொரிஷியஸ் ஐலேண்ட் மொத்தமும் எனக்கே எனக்குன்னு வேணும். எப்ப வாங்கி தருவீங்க?…” 

“என்ன விளையாடறியா?…” ஹாஸ்பிட்டலை நெருங்க இன்னும் பத்து நிமிடங்கள் இருக்க,

“நான் மட்டும் விளையாடி என்ன செய்ய? உங்களுக்கு விளையாட தெரியலையே?…”

“என்னை ரொம்ப  சீண்டிட்டே இருக்க. பார்த்துக்கறேன்…” முறைப்புடன் சொல்ல,

“இதுவரைக்கும் பார்க்கலையாக்கும்? சரியான வெண்டைக்காய். ஒன்னும் புரியாது…” அஷ்மி சொல்ல அவள் தான் பேசாததை பற்றித்தான் இவ்வளவு நேரம் பேசி வருகிறாள் என்பதை புரிந்தவனின் இதழோரம் புன்னகை நெளிந்தது.

“ஹேய் வெள்ளெலி, நான் பேசலைன்னு இத்தனை பேச்சா?…” என்று கேட்க அவளோ பதிலே பேசவில்லை. 

கண்டுகொள்ளாத பாவனையில் வெளியில் வயல்வெளியை வேடிக்கை பார்க்க தனது வாட்சை திருப்பி பார்த்தவன் இன்னும் நேரமிருக்க காரை ஓரமாக நிறுத்த பார்த்து அதற்கொரு இடம் கிடைக்கவும் நிறுத்தியவன் இவள் புறம் திரும்பி பார்த்தான். பின் ஒரு செறுமலுடன்,

“அஷ்மி…” ஆழ்ந்த குரலில் அழைக்க அவள் ஆச்சர்யமாய் திரும்பி பார்ப்பாள் என நினைத்து அவளின் முகபாவனைகளை கவனமாய் பார்க்க,

“சொல்லுங்க…” என மிக சாதாரணமாய் கேட்கவும் இவனுக்கு புஸ் என்றானது. இவளுக்காக போனாபோகுதுன்னு  இவ பேரை சொல்லி கூப்பிட்டா ரொம்பத்தான் பன்றா என பார்க்க,

“உங்களை பார்த்துட்டே இருக்கனும்னா வீட்ல ப்ரீ டைம்ல உக்கார்ந்து பார்த்துட்டே இருக்கேன். இப்ப நேரமில்லை…” என்று அவனை இன்னும் கடுப்பேற்ற,

“உன்னை எப்படி சமாளிக்க போறேன்னே தெரியலை…” அவனையறியாமல் வார்த்தையாக அவளிடம் கூறிவிட அஷ்மி முகம் புன்னகை பூசியது.

“ஆனா வேற வழியே இல்லையே…” அவளும் கை விரித்து சொல்ல இன்னுமின்னும் அவளை பிடிக்கும் போல தோன்றியது. 

அஷ்மியின் அழகு, அறிவு, சமயோசித புத்தி, பேச்சு சிரிப்பு எண்ணங்கள், இயல்பு என ஓவ்வொன்றும் அவனை அதிகமாய் கவரப்பார்த்தது. 

“அனைத்தும் நிறைந்த பெண் என்னுடைய செயல் தெரிந்தால்?” என்ற எண்ணம் எழாமல் இல்லை. அவன் பேசுவதை போல தெரியவில்லை பார்த்துக்கொண்டே இருப்பதை கண்டவள் கார் கதவை திறக்க அவளின் கை பிடித்து நிறுத்தினான்.

“உன்கிட்ட பேசனும்னு தானே வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். இறங்கி போனா என்ன அர்த்தம்?…” சட்டென கோபம் சூழ்ந்த குரலால் அவளை தடுக்க,

“முதல்ல வாய்ஸ் ரைஸ் பன்றதை நிறுத்துங்க. இங்க சொல்ல நீங்களும் கேட்க நானும் ரொம்ப பக்கமாவே தான் இருக்கோம். சொல்ல வர விஷயத்தை சத்தமா சொல்லிட்டா என்ன கிடைச்சிடும்?. எதுக்கெடுத்தாலும் சும்மா சும்மா சத்தம் போட்டுட்டு. எனக்கும் கோவம் வரும். நானும் குரலை உயர்த்தவா?…” 

அமைதியாக அவள் சொல்ல ஒரு பெருமூச்சுடன் அவளின் கையை விட்டவன் காரை கிளப்ப,

“சொல்லனும்னு சொன்னீங்க?…”

“இல்லை, இன்னொரு நாள் பேசலாம்…” அவள் புறம் திரும்பாமலே அவன் சொல்ல மீண்டும் கார் கதவை திறக்க பார்த்தாள் அஷ்மி.

“ஏய் என்னடி பன்ற?…” என பதறி காரை மீண்டும் நிறுத்த,

“உங்க இஷ்டத்துக்கு சொல்லனும்னு சொல்லுவீங்க. கேட்க நான் ரெடியா இருக்கனும். அப்பறம் இல்லைன்னு சொல்லுவீங்க. அதையும் கேட்டுட்டு நீங்க சொல்லபோகும் அந்த பொன்னான நேரத்துக்காக நாங்க காத்திருந்து புண்ணாகனுமா? எல்லாம் உங்க இஷ்டமா?…”

அஷ்மி சொல்லவும் அவளின் பேச்சிலும் செயலிலும் ஸ்தம்பித்து போனவன்,

“சொல்லுன்னா சொல்லபோறேன். ஏன் இந்த மாதிரி டென்ஷன் ஏத்தற?…” இப்போது அவன் அமைதியை கையில் எடுக்க சொல் என்பதை போல அவள் பார்க்கவும்,

“இவ்வளவு நேரம் பேசினவ சொல்லுன்னு திரும்ப சொன்னா என்னவாம்?” என்ற சிணுங்கலுடன் இப்போது இதை கேட்டால் சிரிக்க மாட்டாளா என்று தோன்ற பேசாமல் விட்டால் அதற்கும் பேசுவாளே என ஆரம்பித்தான்.

“புதுசா ஒன்னும் இல்லை. உன் மேல நான் எவ்வளவு கோவமா இருக்கேன்னு உனக்கே தெரியும். ஆனாலும் உன்னால எப்படி சாதாரணமா நடந்துக்கற. என்னோட பேசவும் செய்யற…” என்று சொல்லி மொக்கை வாங்க தயாரானான்.

“இதுதானா ஹஸ் உங்களோட டக்கு? வேற என்ன செய்யனும்னு சொல்றீங்க?…” அவள் அதற்கும் கேள்வி கேட்க இதை கேட்டிருக்கவே வேண்டாம் என்கிற சலிப்புடன் அவன் திரும்பிக்கொண்டான்.

“ப்ச், இங்க பாருங்க ஹஸ். உங்க கோவம் நியாயமானதுன்னு சொன்னா அது உங்களுக்கு. நார்மலா மேரேஜ் ஆனா பொண்ணுங்க எல்லாருமே இப்படித்தானே இருப்பாங்க? இல்லையா? நானும் அப்படித்தான் இருக்கேன்…”

“நம்மோட பர்ஸ்ட் மீட், அதில் பேச எதுவும் இல்லை. அந்த மேரேஜ் வேல்யூ இல்லாத ஒண்ணு. ஆனா பெரியவங்க முடிவு செஞ்சு பண்ணிவச்ச மேரேஜ் எனக்கு ரொம்ப வேல்யூ உள்ளது. அதுக்கான மதிப்பை நான் என்னைக்கும் குடுப்பேன். நீங்க என் மேல கோவப்பட நான் எந்த தப்பும் செய்யலை. தப்பா உங்களுக்கு தோணிருக்கு. ஜஸ்ட்…” 

“உன்கிட்ட கேட்டா நீ இப்படி தான் சொல்வான்னு நினச்சேன்…” அவனின் குரலில் எரிச்சல் அப்பட்டமாய் தெரிய,

“இங்க பாருங்க, ஒரு ஹஸ்பண்டா உங்களை புடிக்கும் தான். அது இந்த மேரேஜால வந்த பிடித்தம். அதையும் தாண்டி நீங்க என்ன எதிர்பார்க்கறீங்க? நான் சரியா தான் இருக்கேன். நீங்கதான் குழப்பிக்கறீங்க…” என்றதும் பதில் பேசாமல் காரை கிளப்பியவன் அத்தனை வேகமாய் காரை ஓட்டினான்.

அவனுக்கே அவன் மனம் புரியவில்லை அவளிடம் என்ன எதிர்பார்க்கிறான் என்று. எதிலும் தன்னிடம் அனுமதி வாங்காதவள். முதலிலும் சரி, இரண்டாவதிலும் சரி. ஆனால் அவள் ஆட்டுவிக்கும் பொம்மையாக தான் மாறிய விந்தை தான் புரியவில்லை.

காதலால் அவளை தேடவில்லை. கட்டிவிட்ட மாங்கல்ய பந்தத்தால் மட்டுமே அவளை தேடினான். ஆனால் அவளும் தன்னை தேடியிருக்க வேண்டாமா என்ற எண்ணம் அவனை அறுத்துக்கொண்டிருந்தது.

ஹாஸ்பிட்டல் வந்ததும் ஒன்றும் பேசாமல் அவன் முன்னே நடக்க ஏற்கனவே அங்கே வந்து அனைவரிடத்திலும் தன்னை அறிமுகப்படுத்தி இருந்த காரணத்தால் வழியில் வருபவர்களிடம் பேசிவிட்டே அவன் பின்னே வந்தாள் அஷ்மிதா.

அவனின் வேகத்தை பற்றி கண்டுகொள்ளாமல் அனைவரிடமும் இன்முகம் காட்டி அவள் வர அவள் வர அவன் தான் வேகமாய் செல்வதாகவும் பின்னர் மெதுவாய் நிற்பதாகவும் இருந்தான்.

“என்னை, என் கோபத்தை பற்றி கொஞ்சமும் கவலைப்படமாட்டேன்றா…” என பல்லைக்கடிக்க மட்டுமே முடிந்தது அவனால்.

அதன் பின்னால் பெருமாளிடம் செல்ல அவரிடம் அனைத்தும் பேசிவிட்டு பணியில் சேர்ந்துகொள்ள பெருமாளிடம் சொல்லிக்கொண்டு பிரசாத் கிளம்பினான். அவனின் பின்னே அஷ்மி வரவும்,

“ஹ்ம்ம், ஓகே வாழ்த்துக்கள்…” என சொல்லிவிட்டு,

“ஈவ்னிங் ட்யூட்டி முடியவும் கால் பண்ணு. இல்லைனா அந்த டைம்க்கு நானே வந்திடறேன் பிக்கப் பண்ண. முன்னபின்ன ஆனாலும் கொஞ்சம் வெய்ட் பண்ணு…”

“ஹ்ம்ம் ஓகே…” என்றவள் அவன் கிளம்ப போவதை பார்த்துவிட்டு,

“இன்னைக்கு மட்டும் ஓகே, நாளையில இருந்து நானே என்னோட பைக்ல வந்திடறேன். பிக்கப் ட்ராப்க்கு உங்களை எதிர்பார்த்திட்டு இருந்தா கண்டிப்பா டென்ஷன் ஆகிடுவேன். உங்களை டிபண்ட் பண்ணி இருந்துட்டே இருக்க முடியாது பாருங்க. சோ எனக்கு அதுதான் ஈஸி…” என்று சொல்ல அவனுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை.

எந்த வகையிலும் அஷ்மியை அணுகமுடியாமல் அவளின் குணாதிசயங்கள் அவளை சுற்றி இரும்பு வேலி அமைத்திருப்பதை போன்ற உணர்வு அந்த வட்டத்தை தாண்டவிடாமல் தடுத்தது.

எதைக்கொண்டு அவளை தன்னிடம் பிடித்து நிறுத்துவதென புரியாமல் குழம்பினான். எப்படியாவது இந்த வாழ்க்கையை பிரச்சனையுடன் கூடிய வாழ்வென்றாலும் அவளுடனே பிணைத்து இணைத்து வை என வேண்ட துவங்கியது. 

அவசர கேஸ் எதுவுமில்லை என்பதால் மதிய உணவிற்கு வீட்டிற்கே சென்று வருமாறு பெருமாள் சொல்ல அவளுக்கு முன்பே பிரசாத்திடமும் சொல்லியிருந்தபடியால் அவள் அழைக்கும் முன் அவன் வந்துவிட்டிருந்தான். இப்போது பைக்கில் அவன் வந்திருக்க,

“அடிக்கிற வெயில்ல பைக்ல போனா என்னாகறது ஹஸ்? வான்ட்டடா பன்றீங்க தானே?…” என்று கேட்டு கிறுகிறுக்க வைக்க எச்சிலை கூட்டி விழுங்கியவன்,

“செம்ம பசில இருக்கேன். சத்தியமா முடியாது என்னால…” என்று கேட்டேவிட,

“அது…” என்று சிரிப்புடன் அவனின் வண்டியில் ஏறி அமர்ந்தாள்.

அவளாகவே அவனின் இடுப்பை பிடித்துக்கொண்டு தோளில் கைபோட்டுகொள்ள நெருக்கமான பயணம். அஷ்மிக்கு எத்தனை பிடித்ததோ பிரசாத்திற்கு அத்தனை அவஸ்தையாக இருந்தது.

வேகமாக பைக்கை பறக்கவிட்டவன் வீட்டின் முன்னாள் வந்து நிறுத்த அவள் இறங்கி முன்னால்  சென்றாள். உடன் அவன் வராதிருப்பதை கண்டு திரும்பி பார்க்க இன்னுமே பிரசாத் பைக்கில் அமர்ந்தபடியே இருந்தான்.

அவனுக்கு தன்னை சமன்செய்துகொள்ள சற்று நேரம் பிடிபட்டது. அவளின் அருகாமையை இன்னும் அவன் உணர்ந்துகொண்டே அமர்ந்திருந்தான்.

“என்ன ஹஸ்? பார்த்த முதல்நாளே உன்னை பார்த்த முதல் நாளேன்னு சாங் பேக்ரவுண்ட்ல ஓடுதா?…” என்று பாட்டையும் பாட அதில் தெளிந்தவன் முறைத்தான்.

“சாங்ல சொன்ன மாதிரி பர்ஸ்ட் மீட் ஞாபகம் வந்தா பார்த்த முதல் நாள் ஸாங் வராது. அன்னைக்கு காலையில ஆறு மணிக்குன்னு ரோபோ சங்கர் மாதிரி ஏற்கனவே புலம்பிட்டு இருக்கீங்க. அப்பறம் வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுதுன்னு என்கிட்டே வந்து நிப்பீங்க. சம்பவம் ஆகி சேதாரம் பலமாகிடும். கேர்ஃபுல் ஹஸ்…” என கிண்டல் பேசி அவனை உசுப்பேற்ற,

“உன்னை…” என வேகமாய் அவன் இறங்க துள்ளிக்கொண்டு உள்ளே ஓடினாள் அஷ்மி. 

அவளின் விளையாட்டுத்தனத்தை ரசித்தவன் மனமோ உற்சாகத்தில் பூக்கள் பூத்தது.

“தினமும் என்னை ரசிக்க வைக்கிறாளே?” என நினைவுடன் உள்ளே வர அதற்குள் தனத்துடன் சாப்பிடவே ஆரம்பித்து இருந்தாள். கை கால்களை அலம்பிவிட்டு அவன் வந்து அமரவும் தனம் அவனுக்கும் எடுத்துவைக்க,

“நானே பார்த்துக்கறேன்மா. நீங்க சாப்பிடுங்க…” என்று தனக்கு எடுத்துவைத்துகொள்ள தனத்தின் பார்வை அஷ்மியிடம் சென்றது. அவள் அன்றைய சமையலை புகழ்ந்துகொண்டே சாப்பிட்டு முடிக்க,

“அஷ்மி, நான் வெளில போய்ட்டு ஒரு அரைமணி நேரத்துல வரேன். வந்து ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறேன்…” 

“நானே…” அவள் மறுப்பாய் சொல்ல,

“ப்ச், இன்னைக்கு ஒரு நாள் தானே? நானே வரேன். ஓகே…” அழுத்தமாய் அவன் சொல்லி செல்ல மறுக்க மனமில்லாமல் தலையை ஆட்டிவைத்தாள்.

அவன் கிளம்பியதும் ராஜாங்கத்திற்கு போன் செய்தவள் அன்றைய நிகழ்வுகளை பற்றி அவரிடம் பேசிக்கொண்டே பின்பக்க வாசலில் இறங்கி தோட்டத்தினுள் நடந்தாள்.

பேசி முடித்துவிட்டு அங்கே உள்ள மரங்களையும் காய்கறி செடிகளையும் பார்த்துக்கொண்டே வந்தவள் ஒரு பெண் மயங்குவதை போல தெரிய வேகமாய் அங்கே சென்று அவளை தாங்கிக்கொண்டாள்.

“ஹேய் என்னாச்சு?…” என்றபடி தூக்கி நிறுத்த பார்க்க அவளால் முடியவே இல்லை. 

கைத்தாங்கலாக சமாளித்து பின்கட்டு திண்ணையில் அமர்த்தியவள் வேகமாய் உள்ளே சென்று தண்ணீரை எடுத்துவந்து முகத்தில் தெளித்து குடிக்க குடுக்க அப்பெண்ணால் முடியவில்லை. தனமும் இவளின் பரபரப்பில் எட்டி பார்க்க,

“பொன்னு, என்னாச்சு பொன்னு?…” என்று வரவும் அஷ்மிதா வேகமாய் தனது பெட்டியை தூக்கிக்கொண்டு வந்தாள். வரும் பொழுதே பெருமாளுக்கு அழைத்து ஒரு ஆம்புலன்ஸை வீட்டிற்கு அனுப்புமாறு சொல்லிவிட்டாள்.

டெம்பரேச்சர் செக் பண்ணி பார்த்துவிட்டு அவளுக்கு இன்ஜெக்ஷன் ஒன்றையும் போட்டுவிட்டு வாயில் இரண்டு மாத்திரைகளை போட்டு தண்ணீரை ஊற்றினாள்.

“பொன்னு, இங்க பாருங்க பொன்னு…” என அவளின் கன்னம் தட்டவும் கண்ணை திறந்து பார்க்க,

“எப்ப இருந்து காய்ச்சல் உங்களுக்கு?…” 

“முந்தாநா ராத்திரில இருந்துதானுங்கம்மா…” திணறிக்கொண்டு சொல்ல,

“காய்ச்சலோட உங்களை யார் வேலைக்கு வர சொன்னது?…” என கோபத்துடன் அஷ்மி கேட்டவிதமே தனத்திற்கு நடுக்கத்தை தந்தது.

“வந்தும்மா திருவிழாவுக்கு உங்க சொந்தக்காரங்க வந்திருந்தாங்க. வீட்டுல நெறைய வேலை இருந்துச்சா அதான். நேத்தே தனம்மாக்கிட்ட மாத்தரை வாங்கி குடிச்சுட்டேன். அந்நேரம் விட்டுச்சு. திரும்ப வந்திருச்சு…” என சொல்லி தனத்தை பார்க்க அவரோ அஷ்மியை பார்க்க முடியாமல் பொன்னுவை பார்த்து நின்றார்.

அதற்குள் ஆம்புலன்ஸ் வந்துவிட அதிலிருந்து வீல்சேர் கொண்டுவரப்பட்டது.

“அஷ்மி, காய்ச்சல் தானே? அவளால நடக்கமுடியும். எதுக்கு இதுக்குப்போய் வீல்சேர் எல்லாம்?…” என தனம் கேட்டுவைக்க அவள் பார்த்த பார்வையில் விக்கித்துபோனார் தனம்.

“அவங்க காலை கொஞ்சம் பாருங்க. கால் முழுக்க ஈரத்துலையே இருந்ததால புண்ணாகிருக்கு. அவங்களால நடக்க முடியுமா?…” அடக்கப்பட்ட கோபத்துடன்  சொல்லியவள் தானும் ஆம்புலன்ஸில் வருவதாக சொல்லிவிட்டு தன்னுடைய பேக்கையும் போனையும் எடுக்க வீட்டினுள் சென்றாள். அவளின் பின்னே வந்த தனம்,

“பிரசாத் வரேன்னு சொன்னானேம்மா…” என பேச,

“உங்களுக்கு பொன்னுக்கு இவ்வளவு காய்ச்சல் இருக்குன்னு நேத்தே தெரியும்ல. எதுக்காக இன்னைக்கு வேலை செய்ய விட்டீங்க?…” என நேராக கேட்டுவிட,

“இல்லம்மா, அவளுக்கு சரியாகிடுச்சுன்னு சொன்னா அதான்…”

“நீங்க பண்ணினது தப்பு அத்தை. நம்ம வீட்ல நம்மோட வேலையை பார்க்க தான் அவங்களை வச்சிருக்கோம். அதுக்குன்னு அவங்களை அவங்க கவனிக்க கூடாதுன்னு இல்லை. நமக்கே மனசாட்சி வேண்டாமா? சின்ன குழந்தை இருக்குல அவங்களுக்கு. மதர் பீடிங்க்ல இருக்கறவங்க எத்தனை ஜாக்கிரதையா இருக்கனும் உங்களுக்கு தெரியாதா?…”

“அஷ்மி,…”

“அவங்களே வரேன்னு சொல்லியிருந்தாலும் நீங்க அதட்டி இன்னும் நாலு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு வான்னு சொன்னா கேட்கவா மாட்டாங்க? சொல்லுங்க…” என்றவள்,

“நீங்க இதை பண்ணியிருக்க கூடாது. நமக்கு வேலைக்கு வேற ஆளா கிடைக்காது? இல்லை ஒரு மூணு நாள் நம்மால அட்ஜஸ்ட் பண்ண முடியாதா? இப்ப என்னால பேச முடியாது. ஈவ்னிங் வந்து பேசறேன் அத்தை…” என்று சொல்லிவிட்டு அவள் கிளம்பிவிட தனத்தின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது.

Advertisement