Advertisement

மணியோசை – 19
                பாபநாசம் சென்று வந்த பிறகு ஊருக்கு சென்ற மகாதேவி பின் யாரிடமும் பேசவில்லை. கார்த்திக்கிடம் சுத்தமாகவே இல்லை.
அவனாக போன் செய்தாலும் எடுத்து பேசுவதும் இல்லை. சந்திராவிடம் தன்னை மதிக்காதவர்களிடம் பேச முடியாது என வீராப்பு காட்டினார். அதை தெரிந்த கார்த்திக் அதற்கும் மேல் முறுக்கிகொண்டான்.
“எதையும் புரிஞ்சுக்காம இவங்களா முடிவு செஞ்சு இதுதான் சரின்னு சொன்னா அதை கண்ணை மூடிட்டு நாம கேட்கனுமா?என்னால முடியாது என்று அவன் மணிகண்டனிடம் காய அவரால் பதில் சொல்ல முடியவில்லை.
மனைவி மீது எத்தனை தவறிருந்தும் அவரால் ஓரளவிற்கு மேல் கண்டிக்கவும் முடியவில்லை. அதிலும் பாபநாசத்தில் அருள்மொழிக்கு மொட்டை போட்டுவிட்டு ஊர் திரும்பும் வரை மகாதேவி செய்த அலம்பல்கள் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு இருந்தது.
செய்து கொண்டுவந்த உணவை வேண்டுமென்றே பிடிக்கவில்லை என்றார். வேறு வெளியில் வாங்கி சாப்பிடவும் செய்தார். கண்மணியின் குடும்பத்தினரை வைத்துக்கொண்டு பொதுவில் அவரை கண்டிப்பது தங்களுக்கு மதிப்பல்ல என கார்த்திக்கும், மணிகண்டனும் பொறுமை காத்தனர்.
“இப்ப என்னங்கறீக? கொண்டாந்தது வாய்க்கு புடிக்கலனா இங்கன வாங்கி குடுக்க வேண்டித்தானே?…” என கண்மணியும் சொல்ல கார்த்திக் அவளை முறைத்தான்.
“இவ சொல்லி நீ எனக்கு வாங்கு குடுக்கனுமா?…” என்று அதற்கும் அவர் குறைபட,
“உங்களுக்கு நல்லதே நினைக்க கூடாதும்மா. அவளை சொல்லனும்…” என கார்த்திக்கும் எரிச்சலாய் கூற,
“எனக்கு யாரும் வாங்கி குடுக்க வேண்டாம்.  அந்த ஆண்டவன் அந்தளவுலையா என்னை வச்சிருக்கான்…” என்று கேட்டுவிட்டு வழியில் இருந்த ஹோட்டலில் அவராகவே சென்று சாப்பிட்டு வந்தார்.
ஒருவரையும் மரியாதைக்கு கூட சாப்பிட அழைக்கவில்லை. அதுவே மணிகண்டனிற்கு பெரிய தலைகுனிவாய் போனது. சங்கடமாய் அவர் நிற்க,
“வாங்க சம்பந்தி, காலாற அப்புடி நடந்துட்டு வருவோம்…” நாட்டரசன் அவரை திசை திருப்ப முயல அவரின் முயற்சி புரிந்தவருக்கு மண்ணில் புதைந்துவிடும் அளவிற்கு அவமானமாய் போனது.
இவர்கள் இரக்கப்பட்டு சமாதானம் செய்யும் அளவிற்கு தன் தரம் இறங்கிவிட்டது என உள்ளுக்குள் வெதும்பிபோனார்.
படிக்காத கிராமத்து மனிதர்களுக்கு இருக்கும் பண்பு தன் மனைவிக்கு இல்லாமல் போனதே என அவர் வருந்த அதை போக்கும் விதமாக நாட்டரசனின் பேச்சு இருக்க அதில் கொஞ்சம் கொஞ்சமாய் ஆழ்ந்துபோனார். 
கண்மணியும் அவளின் அம்மா, பெரியம்மா, அண்ணனுடன் குழந்தைக்கு விளையாட்டுக்காட்டியபடி அங்குமிங்கும் நடக்க சந்திராவும், தவமும் செய்வதறியாமல் கையை பிசைந்தபடி நின்றனர்.
கார்த்திக்கிற்கு தான் பொறுமை பறந்தது. யாரும் அருகில் இல்லை என்ற ஊர்ஜிதத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தவர் அருகில் சென்று அமர்ந்தான். அவர் இவனை பார்த்தும் கண்டுகொள்ளாமல் மீண்டும் சாப்பிட அவர் முடிக்கும் வரை பொறுமையாக இருந்தவன் மகாதேவி எழுவதை பார்த்ததும்,
“உட்காருங்கம்மா, சொல்றேன்ல…” குரலில் கடுமையை பூச,
“கையை கழுவ வேண்டாமா?…” அவரும் நழுவ பார்க்க,
“உங்களுக்கு இப்படி நடந்துக்கறதால என்ன கிடைச்சிடுச்சு? எனக்கு தெரியனும். யாரையோ கஷ்டபடுத்தனும்னு நினச்சு நீங்க நம்ம குடும்பத்தை தான் அசிங்கப்படுத்தறீங்க. சாப்பாடு எல்லாம் ஒரு பிரச்சனையாம்மா? ஏன் இப்படி நடந்துக்கறீங்க?…”
“ஏன்டா வயசானவ நான். கொண்டு வந்த சாப்பாடு பிடிக்கலைன்னு தானே வெளில சாப்பிடறேன். எனக்கு ஒத்துக்கலைன்னு. எப்ப சமைச்சது இப்பவும் ஒரே புளிப்பும் உரைப்புமா பழசையே வச்சு சாப்பிட சொல்றியா? என்னோட உடல்நிலையை பத்தி யோசிச்சியா கார்த்திக்? இப்பவும் உன் பொண்டாட்டி வீட்டாளுங்க என்ன நினைப்பாங்கன்னு தான் யோசிக்கிற, என்னை பத்தி நினைக்க தோணலைல…”
உரிமைக்குரல் எழுப்பியவரை வெறுமையாக பார்த்தவன்,
“நீங்க இப்படி நடந்துப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கலைம்மா. நம்ம சொந்தபந்தங்கள்ட்ட தான் விலகி நின்னீங்க. எனக்காகவாவது இங்க சரியா இருப்பீங்கன்னு பார்த்தேன்…”
“இப்ப நான் என்ன சரியில்லை கார்த்திக்?…”
“இது உங்களுக்கே அதிகமா தெரியலையாம்மா? சின்னவங்க நாங்க இந்த மாதிரி அடம் புடிச்சு பிடிவாதமா இருந்தா நீங்க சொல்லி திருத்தனும். கண்மணி மேல இருக்கற கோவத்துல உங்களோட நம்ம குடும்பத்தோட பேரை கெடுக்கற மாதிரி இப்படி நடந்துக்கறீங்க. ரொம்ப கஷ்டமா இருக்கு…”
கார்த்திக் பேசியதில் இருந்த உண்மையை உணராமல் மீண்டும் அதிலும் தவறை கண்டுபிடித்து ஆத்திரம் கொண்டவர்,
“நீ எனக்காக கஷ்டப்பட வேண்டாம்ப்பா. நான் இங்க வந்திருக்கவே கூடாது. என் தப்பு. மகனாச்சேன்னு நானும் அமைதியா போனா நீ இன்னும் பேசுவ கார்த்திக். இனியும் நான் இங்க இருக்க விரும்பலை…” என்றவரை பார்த்து அவன் முறைக்க,
“அம்மா என்னம்மா நீங்க, நம்ம வீட்டு முதல் வாரிசு. நீங்களே இப்படி செய்யலாமா?…” சந்த்ரா வந்து சமாதானம் செய்து அதன் பின்னால் வருவதாக ஒப்புகொண்டார் மகாதேவி.
கார்த்திக்கிற்கு வெறுத்தேவிட்டது. மகாதேவியின் குணம் இதுதான் என்று தெரியும். வேண்டுமென்றே அனைவரின் கவனம் தன் மீது இருக்கவேண்டும், தான் தாங்கக்கூடிய ஒரு முதன்மை நபராக இருக்கவேண்டும் என்பதில் மிகுந்த அலாதி கொண்டவர்.
தங்களின் சொந்தங்களிடம் மட்டுமல்ல அவரின் சொந்தங்களிடமும் இதே தான். பாராபட்சமின்றி எவரையும் அருகில் அண்டவிட்டதில்லை. எங்கேயும் தன்னுடைய இருப்பை மிக அழுத்தமாக காண்பிப்பார். அதனால் யாருக்கு வருத்தமும் சங்கடமும் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்ற எண்ணம்.
இது கார்த்திக் அறிந்தது என்றாலும் மனைவியிடமும், அவளின் குடும்பத்தாரிடமும் இதே செய்கையை தொடர அவனுக்கு சுத்தமாய் பிடிக்காமல் போனது.
“இவங்க திருந்தவே மாட்டாங்களாப்பா? சொந்த மருமகட்ட யாராச்சும் கெத்து காண்பிப்பாங்களா?…” என மணிகண்டனிடம் புலம்ப அவர் ஏற்கனவே நொந்துபோய் இருந்தார்.
மொட்டை அடித்து காத்து குத்தி தாய்மாமன் சீரை கிருஷ்ணன் செய்ய என்ன செய்கிறார்கள் ஏது செய்கிறார்கள் என்பதை கவனமாய் பார்த்துக்கொண்டார் மகாதேவி. ஆனால் அவர்களின் அருகிலும் வரவில்லை.
சந்தோஷமாய் கிளம்பி வந்த அனைவரின் மனதிலும் மகாதேவியின் செயல் ஒருவித கசப்பை உண்டுபண்ணியது.
“ஒ மாமியாரு சிரிச்ச மொகமா இருந்தாத்தேன் என்னவாம்? அந்தம்மா கோரு கொறஞ்சிடுமாக்கும்?…” என பேச்சி இடித்துரைக்க,
“அவக கோரு கொறையுது கூடுது, ஒங்களுக்கு என்னம்மா? பேசாம இருக. அவுக காதுல விழுவா போவுது…” கண்மணி அதற்கு முற்றுப்புள்ளி வைக்க யாரிடமும் அந்த ஆற்றாமையை காட்டமுடியாமல் பேச்சியும், சங்கரியுமாக ஒருவரிடம் ஒருவர் பேசி ஆறுதலாடிக்கொண்டனர்.
அங்கிருந்து கிளம்பும் நேரம் மகாதேவிக்கு ஏதோவாக உடல் படுத்த யாரிடமும் சொல்லிகொள்ளாமல் பின்னால் சென்று உறங்கிப்போனார்.
திருப்பூர் நுழையும் பொழுதே மழை வலுவாய் பெய்துகொண்டிருந்தது. சேர்ந்ததும் அவர் உறங்கிக்கொண்டிருக்க அவரை சந்திரா எழுப்ப சென்றாள்.
“மதினி அத்தே ஒறங்கட்டும். சாமானுகள எறக்கிட்டு எழுப்பிக்கலாம். அசந்து ஒறங்கராக. நா போயி கொடை எடுத்தாறேன்…” என்று சொல்லவும் சந்திராவும் சரியென இறங்கிவிட கொண்டு சென்ற பொருட்கள் அனைத்தையும் எடுத்துவைத்துவிட்டு கடைசியாக அவரை மணிகண்டன் சென்று எழுப்ப தொட்டதுமே உடல் கொதித்தது.
“மகா…” என்று பதறியவர் மனைவியை தொட்டு பார்க்க காய்ச்சல் அனலாய் தகித்திருந்தது.
“கார்த்திக்…” என மகனை அழைத்து இருவருமாய் மகாதேவியை உள்ளே தூக்கி சென்றனர்.
“என்னாச்சு?…” என மற்றவர்களும் வந்துவிட்டனர்.
கேட்டு வந்தவர்களிடம் காய்ச்சல் என்று சொல்ல சங்கரியும் நாச்சியும் பரபரவென அடுப்படிக்கு சென்று கசாயம் தயாரிக்க கண்மணி அவரை படுக்க வைப்பதற்காக படுக்கை விரிப்புகளை மாற்றி சரி செய்தாள்.
அவரை படுக்க வைத்ததும் சிகிச்சையை ஆரம்பித்தவன் ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து தேவையான மருந்துகளை வரவழைத்தான். ப்ளட் எடுத்து டெஸ்டுக்கு அனுப்பிவிட்டு அவருக்கு ட்ரிப்ஸ் போட்டுவிட்டு மருந்துகளை ட்ரிப்சின் மூலமாக செலுத்தினான்.
“என்னப்பா?…” அனைத்தையும் முடித்துவிட்டு வந்த கார்த்திக்கிடம் மணிகண்டன் கேட்க,
“இன்ஜெக்ஷன் போட்டாச்சுப்பா. ஹெவி பீவர் வேற. நாம கிளம்பும் போதே பீவர் இருந்திருக்கனும். சொல்லியிருந்தா அப்பவே டேப்லெட் போட வச்சிருக்கலாம். சொல்லாம விட்டதால குளிர்ல பீவர் அதிகமா ஆகிருக்கு. அலைச்சல் வேற. உடம்பு ஒத்துக்கலை…”
“தம்பி, இந்தாங்க இந்த கசாயத்த அம்மாவுக்கு குடிக்க குடுங்க. நோவு கொறையும்…” என்று வந்த பேச்சியிடம்,
“தூங்கறாங்க அத்தை. எழுந்துக்கட்டும்…”
“அட இந்த கரண்டியால குடுங்க. அப்பத்தேன் நோவு மட்டுப்படும்…” என்றபடி பேச்சோடு பேச்சாக அவரே சென்று மகாதேவிக்கு புகட்ட குழந்தையோடு பின்னே சென்ற கண்மணியை பார்த்தவன்,
“கண்மணி குழந்தையோட அம்மா தூங்கற ரூம்க்கு போக வேண்டாம். இன்பெக்ஷன் ஆகிடும்…”
“அதெல்லாம் ஒன்னும் ஆவாது…” என்று கண்மணி செல்ல அவளை முறைத்தவன்,
“யாருமே பேச்சை கேட்கறதில்லை. என்னை என்னன்னு தான் நினைக்கறீங்க?…” என்று சத்தம் போட கண்மணிக்கே ஒரு மாதிரியாகிவிட்டது.
கார்த்திக்கின் சத்தத்தில் வீட்டில் இருந்த அனைவருமே அதிர்ந்துவிட்டனர். நாட்டரசனும் கிருஷ்ணனும் இரண்டு நிமிடத்திற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் வீட்டின் திண்ணைக்கு வந்துவிட மணிகண்டனும் தவமும் அவனின் கோபத்தில் செய்வதறியாமல் நின்றனர்.
பேச்சியும் சங்கரியும் மகாதேவி இருந்த அறைக்குள் மீண்டும் சென்றுவிட மனம் கனத்துப்போனது அவர்களுக்கு.
சில நொடிகள் நின்று கார்த்திக்கின் முகத்தை பார்த்த கண்மணி குழந்தையோடு தங்களுக்கென்று ஒதுக்கியிருந்த அறைக்குள் சென்றுவிட மணிகண்டனுக்கு கோபமானது.
“என்ன பண்ணிட்ட கார்த்திக்? உனக்கும் உங்கம்மா புத்தி வந்துடுச்சா? இப்படி கண்மணி வீட்டாளுங்களை வச்சிட்டு கண்மணியை பேசற?…” என கண்டிக்க,
“என்னை என்னதான்ப்பா செய்ய சொல்றீங்க? அம்மாவுக்கு அவ்வளோ அதிகமா பீவர் இருக்கு. பிபி ஷூட்டப் ஆகிருக்கு. இன்னும் டெஸ்ட் ரிசல்ட் வரவும் தான் மத்ததை யோசிக்க முடியும்…” என்று தலையில் கை வைத்து அமர கவலையாய் அவனை பார்த்தார்.
“பீவர் குறையுதா இல்லையான்னு பார்த்துட்டு தான் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணனுமான்னு முடிவு செய்யனும். இப்போ பெய்யற மழைக்கு அம்மாவை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போக முடியாது. மார்னிங் வரை பார்ப்போம்…” என்றவன் பேச்சு வீட்டில் இருந்த அனைவருக்குமே கேட்டது தான்.
இடியுடன் மின்னல் வெட்ட வெளியில் மழை இன்னும் காற்றுடன் பலமாய் பொழிய மின்சாரம் தடைபடும் அறிகுறி தெரிந்தது.
“எங்கப்பா மாமாவும், கிருஷ்ணனும்?…” என கேட்டுக்கொண்டே வாசலுக்கு வந்தான்.
திண்ணையில் தலை குனிந்தபடி நாட்டரசன் அமர்ந்திருக்க அருகில் கைகளை கட்டியபடி கிருஷ்ணன் நின்றிருந்தான். பார்த்ததுமே கஷ்டமாய் போனது. 
மழை தன் அசாதாரண வேகத்தினால் அவர்களை லேசாய் நனைத்திருந்தது. பதறிப்போய் வந்தவன்,
“என்ன மாமா? ஏன் இங்க வந்து இருக்கீங்க? மழை பெய்யுது பாருங்க. உள்ள வாங்க…” என அழைக்க,
“அது வந்து ஒண்ணுமில்ல மாப்பிள்ள, சும்மாத்தேன்…” என தடுமாறி பேச அவரின் கையை பிடித்துக்கொண்டான் கார்த்திக்.
“தப்பா எடுத்துக்காதீங்க மாமா. அம்மாவுக்கு முடியலை. இப்ப இருக்கற சுட்சுவேஷன்ல குழந்தைக்கும் முடியலைனா. இப்ப வர பீவர் எல்லாம் குழந்தையால தாங்க முடியாது. அவனுக்கோ, கண்மணிக்கோ எதுவும்னா…” அவனின் குரலில் அத்தனை கலக்கம்.
“அடடே வுடுங்க மாப்பிள்ள. அதெல்லாம் ஒன்னுமாவாது. அம்மாவுக்கு செரியாயிடும்…” என்று அவனை அவர் தேற்றி உள்ளே அழைத்து வந்தார்.
“நாங்க ஒன்னு நெனக்கல, நீக வெசனப்படாதீக…” என்றவர்,
“இந்தாத்தா மணி…” என அழைக்க குழந்தையை சந்திராவிடம் கொடுத்துவிட்டு கண்மணி வரவும்,
“அவருக்கு குடிக்க எடுத்தாத்தா…” என்ற நாட்டரசனிடம் தலையாட்டினாள் அவள். முகம் சாதாரணமாக தெரிந்தாலும் லேசாய் சிவந்திருந்தது. அதை கவனித்த கார்த்திக்கின் மனமோ கவலையானது.
அவனுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் காபியை தயாரித்து அவள் கொண்டுவர வாங்கி குடித்தவன் கண்மணியின் முகத்தையே பார்த்தபடி இருந்தான்.
“கார்த்திக் மழை விட்டுட்டா ஹாஸ்பிட்டல் போய்டலாமா?…” தவம் கேட்க கார்த்திக் பதில் சொல்லும் முன் மகாதேவியின் அறையில் இருந்து சத்தம் கேட்க வேகமாய் விரைந்தான்.
அங்கே குடித்த கஷாயத்துடன் உண்ட உணவுகளும் வயிற்றிலிருந்து வெளியேறி இருக்க தரை எல்லாம் ஆகி இருந்தது. அதை சங்கரி சுத்தம் செய்ய போக பதறிப்போனான்.
“அத்தை நான் பார்த்துக்கறேன்…” என்றவன் சந்திராவை அழைக்க,
“அட வுடுங்கய்யா, இதுக்கா பதறுரீறு? நீங்க போங்க…” என்று அவனை உள்ளேயே விடாமல் சங்கரி அனுப்ப,
“அத்தை இருங்க நான் வரேன்…” சந்திராவும் வேகமாய் வர,
“எத்தா நா என்ன அடுத்தாளா? நா பாத்துக்கிடுதேன்…” என்று அவளையும் அதட்டி அனுப்பியவர் கொஞ்சமும் முகம் சுளிக்காமல் அனைத்தையும் சுத்தம் செய்தார்.
காய்ச்சலின் வீரியத்தில் அயர்ந்துபோய் அசைய முடியாமல் படுத்திருந்தாலும் மகாதேவிக்கு அனைத்தும் விளங்கத்தான் செய்தது. 
அதற்குள் கண்மணி வெந்நீர் வைத்து எடுத்துக்கொண்டு வர கார்த்திக் நிற்பதை பார்த்து நின்றாள்.
“கொண்டா மணி, நீ புள்ளக்கிட்ட இரு. நா அவுகளுக்கு தொடச்சுவுடறேன்…” என வெந்நீரையும் டவலையும் வாங்கிக்கொண்டார் பேச்சி.
எங்கே கண்மணி உள்ளே வந்துவிட்டு மீண்டும் கார்த்திக் அவளை திட்டிவிடுவானோ என்று பயந்து போய் தான் வாங்கிக்கொண்டார். கார்த்திக்கின் நிலை புரிந்தாலும் எத்தனை சங்கடம் இருந்தாலும் அதை தங்கள் முன் காட்டியிருக்க கூடாது என நினைத்தார் பேச்சி.
பேச்சி தன்னை சுட்டு நீரில் சுத்தம் செய்வதை உணர்ந்தாலும் தடுக்க முடியாமல் அவஸ்தையில் இருந்தார் மகாதேவி.
இவர்களின் தயவிலா நான் குணமாக வேண்டும் என்கிற எண்ணம் ஓங்க உடலளவில் கூட மறுப்பை தெரிவிக்க முடியாமல் உள்ளுக்குள் பொருமிப்போனார்.
பேச்சியும் சங்கரியும் வெளியில் வந்ததும் அவர்களை முதலில் குளித்துவிட்டு வர சொல்லிவிட்டான் கார்த்திக். மகாதேவியை பார்க்க உள்ளே செல்ல மணிகண்டனும் சந்திராவும் கூடவே சென்றனர்.
“சாப்பாடு சேரலை போலப்பா. எதுவுமே டைஜிஸ்ட் ஆகலை. சாப்பிட்ட எல்லாமே அப்படியே வாமிட்டா வந்திருச்சு…” கார்த்திக் சொல்ல அறை வாசலில் நின்ற நாட்டரசன்,
“வவுத்துக்குள்ளையே இருந்தாத்தேன் சங்கடம்,. ஒவ்வாம வெளில வந்துருச்சுல இனி கொறஞ்சிரும்…” என்று சொல்லவும்,
“ஹ்ம்ம் ஆமாம் மாமா. இப்ப கொஞ்சம் பீவர் குறைஞ்சிருக்கு. சரியாகற வரைக்கும் லைட் ஃபுட்டா குடுக்கனும். இப்ப தூங்கட்டும். நல்லா தூங்கி எழுந்த பின்னால சாப்பிட குடுப்போம்…” என்றவன்,
“கண்மணி டின்னர் எதுவும் செய்யவேண்டாம். நான் டிபன் வாங்கிட்டு வர சொல்லிட்டேன் எல்லாருக்கும். இப்ப வந்திரும்…” 
“என்னத்துக்கு வெளில சொன்னீக? இப்பத்தேன் அத்தேக்கு வெளி சாப்பாடு ஒத்துக்கிடாம காச்ச கண்டிருக்கு…” கண்மணி சொல்ல,
“இது வீட்ல செய்யற மாதிரியான சாப்பாடு தான். தெரிஞ்சவங்களும் கூட. சின்னதா வீட்லயே வச்சு சமைச்சு தராங்க. நீ பயப்பட தேவையில்லை…” 
“ம்க்கும், அவுகவுக அவுகவுகளுக்குத்தேன் எல்லாந்தெரியும்னு பேசறது. இதுல மத்தவுக செஞ்சிட்டா மட்டும் கூவறது…” தோளில் இடித்துக்கொண்டு அவனிடம் காய்ந்துவிட்டு செல்ல அவளின் செய்கையில் புன்னகைதான்.
“கிங்கிணிமங்கினி இதுதான்டி எனக்கு வேணும்…” என்று அவளை பார்க்க அவனின் ரகசிய பார்வையில் கண்மணிக்கு தான் அவஸ்தையாகி போனது.
“அங்கிட்டு பாருக…” என்று அவனிடம் சொல்லவே செய்துவிட்டாள்.
“இம்புட்டு நேரம் சாமி வந்த அய்யனாராட்டம் ஆடிட்டு இப்ப வந்து பாக்கற பார்வைய பாரு…” என சலித்துக்கொண்டவளுக்கும் அவனின் பார்வை வேண்டுமாக இருந்தது.
முகத்தில் லேசான சிரிப்புடன் வீட்டை ஒழுங்கு படுத்த ஆரம்பித்தாள் கண்மணி. இன்றும் இத்தனை சாமான்களுக்கு மத்தியில் படுக்க முடியாது என்று நினைத்தவள் கடகடவென பெட்டிகளை பிரித்து அடுக்க ஆரம்பிக்க,
“ஹேய் கிங்கினிமங்கினி, இப்ப எதுக்கு இதெல்லாம் பண்ணிட்டு இருக்க? ரெஸ்ட் எடு…” கார்த்திக் அவளிடம் வந்து சொல்ல,
“செத்த பேசாம இரும். இன்னைக்கும் இம்புட்டையும் போட்டுட்டு இதுக்குள்ள உறங்க சொல்லுதீயளா? கூறு இருக்காம்ய்யா ஒமக்கு?…” இரண்டு நாட்களுக்கு பின்னர் அவளின் வாயிலிருந்து இந்த வார்த்தை. என்னவோ விருது பெற்றவன் போல அவனின் முகம் ஒளிர,
“போய் ஓரமா ஒக்காரும். சமைக்கவும் வேண்டாம்னுட்டீக, இத்தையாச்சும் பண்ண விடும். கை வச்சாச்சு. வச்சதோட முடிச்சாத்தேன். இல்லன்னா இழுத்துட்டே கெடக்கும்…” என்று அவனின் பேச்சை காதில் வாங்காமல் வேலையை பார்த்தவளை கண்டவன் மகனை பார்க்க செல்ல அவனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
பின்னர் அனைவருமாக ஆளுக்கொரு வேலையாக பார்த்து மொத்த பொருட்களையும் அதனதனிடத்தில் வைத்து முடிக்க ஒருமணி நேரத்தில் வீடே சுத்தமாய் இருந்தது.
ஆளும் பேருமாய் பார்த்ததினால் அத்தனை சுலபத்தில் முடிந்துபோனது. ஏற்கனவே பத்திரங்கள், சமையலுக்கு தேவையான பலசரக்கு பொருட்கள் என பால் காய்ச்சிய அன்றே கண்மணி அடுக்கி முடிந்திருந்த படியால் மத்த பொருட்கள் மட்டுமே எஞ்சி இருந்தது.
வீடே அத்தனை அம்சமாய் நிறைந்து பொருட்கள் வைத்தபின் பார்க்கவே இன்னும் அழகாய் இருந்தது. கை, கால்களை அலம்பி முகத்தை கழுவிவிட்டு வந்து அமர அவன் சொல்லியிருந்த இடத்திலிருந்து உணவும் வந்துவிட்டது.
இட்லி, மூன்றுவகை சட்னி, சாம்பார் என எளிமையான நிறைவான உணவு. குழந்தைக்கு இரண்டு இட்லியை தனியாய் எடுத்துவைத்து சாப்பிட்ட இலை என அனைத்தையும் அப்புறப்படுத்தி சுத்தம் செய்துவிட்டு அமர கரண்ட் போனது.
குழந்தை பயந்துவிடுவானே என வேகமாய் கார்த்திக் உள்ளே சென்று அவனுடன் அமர்ந்துகொள்ள கண்மணி மெழுகுவர்த்திகளை ஏற்றி எடுத்துவந்தாள்.
“கார்த்திக் இன்வெட்டார் என்னாச்சு? இன்னும் பிக்ஸ் பண்ணலையா?…” மணிகண்டன் கேட்க,
“இன்னும் இல்லைப்பா. ஏதோ வயரிங் ப்ராப்ளம். நாளைக்கு வர சொல்லனும்…”  உள்ளிருந்தே பதிலளித்தவன் சந்திராவை அழைத்து மகனின் அருகில் படுக்க சொல்லிவிட்டு வெளியில் வந்தான்.
“கரண்ட் எப்ப வரும்னு தெரியலையே…” தவம் சொல்ல,
“இல்லையினா என்ன தம்பி? மழை மெலிசா பெஞ்சிட்டிருக்கி. கூதகாத்து வேற அடிக்கிது. வேக்காடே தெரியல…” பேச்சி சொல்ல தவம் புன்னகைத்தான்.
வீடு அத்தனை குளுமையாக ஏசியில் இருப்பதை போலத்தான் இருந்தது. சுற்றிலும் ஜன்னல்கள் வேறு திறந்திருக்க காற்று சிலுசிலுவென குளிரை பரப்பியது.
சிறிது நேரம் பேசிக்கொண்டிர்ந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக ஹாலிலேயே படுத்து உறங்கிவிட்டனர். கண்மணி மகன் எழுந்துகொள்வதை போல தெரியவில்லை என்பதால் பாலை ஆற்றி பாட்டிலில் அடைத்துக்கொண்டு வந்து அவனுக்கு குடுக்க இருந்த பசியில் வேகமாய் குடித்து முடித்தான்.
சந்திராவும் அவனருகே உறங்கியிருக்க இன்னொரு பக்கத்தில் தலையணை ஒன்றை எடுத்து வைத்துவிட்டு பெட்ஷீட்டை அவனுக்கு போர்த்திவிட்டு வெளியில் வந்தாள்.
அனைத்து மெழுகுவர்த்திகளும் அணைக்கப்பட்டு மூலையில் ஒன்றே ஒன்று மெலிதான வெளிச்சம் பரப்பிக்கொண்டிருக்க கணவனை காணாது தேடியவள் வெளியில் வந்து எட்டி பார்த்தாள்.
“என்ன இங்கன என்ன பண்ணுதீரு?…” என்று கேட்டு வந்தவளை தன்னருகே அமர்த்தி அணைத்துக்கொண்டான். மழை இரவில் அவனின் அணைப்பில் மனம் மயங்கியது கண்மணிக்கு.
“ஸாரிடா, ஸாரி கிங்கினிமங்கினி, ப்ராமிஸா ஸாரிடா…” என்று மன்னிப்பை கேட்டு கேட்டு ஒவ்வொரு மன்னிப்பிற்கு அவளுக்கு முத்தம் வைத்துக்கொண்டே இருக்க,
“யோவ் விடுய்யா, விடுய்யான்றேன்ல…” என அவனிடமிருந்து விலகுவதிலேயே அவள் குறியாய் இருக்க,
“முடியாதுடி. மன்னிச்சுட்டேன்னு சொல்லு…” என்று அவனின் இதழொற்றும் வேலையில் கவனமாய் இருக்க,
“ரோட்ல வச்சிக்கிட்டு பாக்கித வேலையா பாக்குதீரு? யாராச்சும் கண்டா கண்டபடி ஏச மாட்டாக? கூறுகெட்ட கூவன்னு எங்கம்மா என்ன ஆஞ்சுபிடும்…” அவனை பிடித்து இழுக்க அவன் விடுவதை போல தெரியவில்லை.
பின் மண்டை முடியை பிடித்து இழுத்தவள் வேகமாய் அவனிடமிருந்து தன்னை பிரித்துக்கொண்டு நின்றாள் மூச்சு வாங்க.
“கிங்கினிமங்கினி…” அவனின் குரல் அத்தனை கிறங்கி இருக்க,
“என்னய்யா ஆச்சு ஒமக்கு?…” அவனிடமிருந்து தள்ளி நின்று பேச,
“கரண்ட் இல்லைடி. பக்கத்துல உட்காரவாச்சும் செய்யேன்…” அவளின் கையை பிடிக்க,
“ஏறு ஓட்டறவே இளிச்சவாயனா இருந்தா மாடு அவன மச்சான்னு கூப்புட்டுச்சாம்…”
“சொல்லவே இல்ல உங்க வீட்டு மாட்டு உன் அண்ணனை மச்சான்னு கூப்பிட்டதா. என்ன இருந்தாலும் உங்க குடும்பத்துக்கு இம்புட்டு தன்னடக்கம் இருக்க கூடாதுடி…” என்று கிண்டல் செய்ய,
“ஒமக்கு எம்புட்டு ஏத்தம்?. ஏ அண்ணன பேசுநீரு எகிறிடுவேனாக்கும்…” என அவனை அடிக்க வர அவளை வளைத்து பிடித்தவன்,
“இத மட்டும் யாரும் பார்க்க மாட்டாங்களா  கிங்கினிமங்கினி?…” அவளை இறுக்கியபடி கேட்க,
“பகல்லயே பசுமாடு தெரியாதாம், ராவுல எரும தெரிஞ்சுருமாக்கும்?…” அவள் இதற்கும் பேச,
“என்ன இருந்தாலும் உன்னோட மனசு யாருக்கும் வராதுடி. எருமைன்னு நீயே ஒத்துக்கிட்ட பாரேன் அங்க நிக்கிறடி கிங்கினிமங்கினி…” என அதற்கும் அவன் கிண்டலாய் பேச இரைந்துகொண்டிருந்த மழை சத்தத்துடன் அவர்களின் சிரிப்பு சத்தமும் உறவாடியது.

Advertisement