Advertisement

மணியோசை – 9
          பயங்கர குறட்டை சத்தம் நிசப்தமான அந்த இரவு வேளையில் அந்த அறை முழுவதும் எதிரொலித்தது. சுத்தமாய் உறக்கம் பறந்துபோனது அவனுக்கு.
“நீ கண்மணி இல்லடி கிண்கிணி மங்கினி, உங்க ஊரு ஆலய மணி. இப்படியா குறட்டை விடுவ? இனி வாழ்க்கை முழுசும் எனக்கு தூக்கம் போச்சு…” என வாய்விட்டு புலம்பிக்கொண்டே அவளை எழுப்ப பார்க்க கண்மணியாவது அசைவதாவது.
எழுப்பி எழுப்பி பார்த்து அந்த அறையில் ஏதாவது பஞ்சு இருக்கிறதா என விளக்கை போட்டு தேட ஆடம்பித்தான். அதுவும் கிடைக்கவில்லை. அங்கிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்தவன் தன்னுடைய மொபைலை பார்க்க ஆரம்பித்தான்.
உறக்கம் முழித்து மொபைலை பார்த்துக்கொண்டே இருந்ததால் தலைவலி வேறு மண்டையை பிளக்க தன்னுடைய பேக்கை எடுத்து ஒரு மாத்திரையை போட்டுகொண்டவன் ஒரு டவலையும் எடுத்து காதோடு சேர்த்து தலையை இறுக்கமாய் கட்டிக்கொண்டு நாற்காலியை இழுத்துபோட்டு கட்டிலின் மீது காலை வைத்து சாய்ந்து அமர்ந்துகொண்டே உறங்க முயன்றான்.
என்னதான் குறட்டை சத்தம் உறக்கத்தை கலைக்க முயன்றாலும் முதல் நாள் சரியாக உறங்காதது, திருமண அலுப்பு என அவனை கண்ணயர செய்தது.
எப்பொழுதுமே விடியற்காலையில் எழுந்துவிடும் ஒரே ஒரு பழக்கம் மட்டுமே நம் கண்மணிக்கு இருந்ததால் கார்த்திக் லைட்டை வேறு போட்டிருந்ததால் ஐந்து மணிக்கு முன்பே விழிப்பு தட்ட எழுந்து பார்த்தவள் திகைத்து போனாள்.
“யோவ் எந்திரிய்யா…” என கார்த்திக்கை எழுப்பியவள்,
“ஆத்தாடி முத்துகருப்பி…” என வாயில் அடித்துக்கொண்டு மீண்டும்,
“என்னங்க, என்னங்க?…” என அழைக்க அவளின் முதல் அழைப்பிலேயே லேசாய் முழித்தவன் இப்பொழுது அவளின் என்னங்க என்ற அழைப்பில் முழுவதும் கண்விழித்தான்.
“என்ன உக்காந்துட்டே உறக்கம்?…” என கேட்க அவளை முறைத்தவன்,
“ஏன்? ஏன்னு உனக்கு தெரியாதாமா?…”  என கேட்டவனின் தலையை பார்த்தவள்,
“என்னாச்சு உங்க தலைக்கு? எதுக்கு இம்மாம் பெரிய கட்டு? எங்குனையும் முட்டிக்கிட்டீகளா?…” அவளின் பதட்டத்திலும் அவள் நின்ற கலைந்த கோலத்திலும் அவனுக்கு சிரிப்பு வர இழுத்து தன் மடியில் அமர்த்திகொண்டவன்,
“அட கிங்கிணி மங்கினி ஒன்னும் ஆகலை. தூங்காததால தலைவலி. அதான் …” என அந்த துண்டை கழட்டி போட,
“ஏன் தூங்கலை?…” என்றவளை வாசம் பிடித்துக்கொண்டே,
“எனக்கு தூக்கத்துல சின்ன சத்தம் கேட்டாலும் முழிப்பு வந்திடும். அதான் தூங்கலை. நேத்து நைட் எல்லாம் யாரோ ரோட் ரோலரை ஆஃப் பண்ணவே இல்லை. அந்த சத்தத்துல தூக்கம் போய்டுச்சு…”
இவன் சுத்தி வளைத்து விளக்கம் சொல்ல அவள் புரியாமல் பார்த்திருக்க அவனுக்கு இன்னுமே சிரிப்பு தான்.
“மேடம்க்கு வாய் மட்டும் தான் போல. பேச்சை கேளு ஊர் அடங்கிடும். ஆனா ஒண்ணுமே புரியாது…” என்று சொல்லி,
“ரோட்ல தார் வண்டியை ஓடவிட்ட மாதிரி என் காதுக்குள்ள உன்னோட குறட்டை சத்தம். எனக்கு மொத்த தூக்கமும் போய்டுச்சு…” என்றதும் அசடு வழிய தலையை சொரிந்தவள் அவன் தன்னை தார் வண்டியுடன் ஒப்பிட்டதை விட்டுவிட்டு,
“ஆத்தே, நாந்தேன் மறந்தே போய்ட்டேன். அம்மா நேத்தே சொல்லுச்சு. கொறட்ட விடாதன்னு. போச்சு. நீங்க உறங்கலைன்னு தெரிஞ்சது என் தாவங்கட்டை பேந்துடும். போச்சு…” என கையை உதற,
“ஹேய் கிண்கிணி மங்கினி. நான் சொன்னா தான. சொல்லமாட்டேன்…” என்று சிரிக்க,
“நெசமாலுமா? அப்ப சரி. நா குளிக்க போறேன்…” என கதவை திறக்க போக,
“இன்னும் மணி அஞ்சு கூட ஆகலை. இப்பவே குளிக்க போற?. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம் தானே?…” என்று விஷமமாய் பேசியவனின் வார்த்தைகளில் இருந்த உள்ளர்த்தம் உணராமல்,
“எப்பவும் அஞ்சுக்கு பெரிம்மா பால் கறக்க போகலையே நானும் கூட போய்டுவேன். பல்லு தேச்சு முகத்த கழுவிட்டு வரதுக்குள்ள காபி போட்டுடுவாங்க பெரிம்மா. அப்புறம் வாச தெளிச்சு கோலம்…” என்றவளை இடைமறித்து,
“நீ கோலம் எல்லாம் போடுவியா?…” என கேட்டுக்கொண்டே எழுந்து நின்றவளை தன் மடியில் மீண்டும் அமர்த்த அமர்ந்தவள் அவனின் கேள்வியில் மீண்டும் நன்றாய் நகர்ந்து,
“நா ஏன் போடறேன்? இல்ல. அம்மா போடும். எனக்கு காபி குடிச்சுட்டே அது போடற கோலத்த பாக்க அம்புட்டு புடிக்கும். அவ்வளோ பெருசா போடும். அந்த குளிர்ல வாசல்ல உக்காந்து காபி குடிக்கறது எப்புடி இருக்கும் தெரியுமா?…”
“ம்ஹூம் தெரியாதே?…” என்று கேலி செய்ய,
“எனக்கு எங்க வீட்டு வாசல்ல திண்ணையில உக்கார்றது அம்புட்டு இஷ்டம். ஆனா  அம்மா விடாது. நா உக்கார்ற நேரம் அது ஒன்னுதேன். அதான் எம்புட்டு லேட்டா படுத்தாலும் டான்னு அந்நேரம் எழுந்துடுவேன்…”
“என்ன வாசல்ல உட்கார கூடாதா?. இப்படி எல்லாமா சொல்லுவாங்க?…” என அவனே ஆச்சர்யப்பட அவனின் பேச்சை எங்கே அவள் கேட்டாள்? வெளியில் மாடு கத்தும் சத்தம் கேட்கவும்,
“பெரிம்மா பால் கறக்க போய்டுச்சு. நா போய் குளிக்கறேன்…” என்று அவள் ஓட,
“ஹேய் கிண்கிணி மங்கினி, மெதுவா கூட குளியேன்…” என சொல்ல,
“குளிச்சுட்டுத்தேன் கீழ வரனும்னு பெரிம்மா சொல்லிருக்கு. இல்ல என் கால ஒடச்சு அடுப்பெரிச்சுடும்…” என சொல்லிவிட்டு மொட்டை மாடியில் இருந்த குளியலறையில் சென்று குளித்து உடையையும் துவைத்துவிட்டு ஈரத்துண்டை தலையில் சுற்றியபடி அவள் வர அதற்குள் கார்த்திக் படுக்கையில் உறங்கியிருந்தான்.
“கூட்டிட்டு போய் காபி குடிச்சுட்டே அம்மா கோலம் போடுததா காமிக்கலாம்னு பாத்தா திரும்ப உறங்கிட்டாரே?…” என்று பார்த்தவள் பின் போர்வையை எடுத்து அவன் மீது போர்த்திவிட்டு லைட்டை ஆஃப் செய்துவிட்டு கதைவை ஒருபக்கமாய் சாய்த்துவிட்டு கீழே இறங்கினாள் கண்மணி.
அதற்குள் பால் காய்ந்துவிட்ட வாசம் வர வாசலில் பேச்சி தண்ணீர் தெளிக்கும் சத்தம் கேட்க ஆரம்பித்தது.
வேகமாய் சென்று சங்கரி கலந்துகொண்டிருந்த காபியை வாங்கிவிட்டு வாசலுக்கு விரைந்து வந்தாள். வழக்கமாய் அமரும் திண்ணையில் அமர்ந்தவள் வசதியாய்  குத்துக்காலிட்டுக்கொண்டு காபியை குடிக்க பேச்சி புள்ளிவைக்க ஆரம்பித்திருந்தவர் கோலமாவு கிண்ணத்தை அப்படியே வைத்துவிட்டு கண்மணியிடம் வந்தார்.
“எந்துச்சதும் இப்படியாடி வாசலுக்கு வருவா? கூறுகெட்டவ கூறுகெட்டவ? காலாங்காத்தால யாராச்சும் சொகமானவுக மொகத்துல முழிக்கறத வுட்டுட்டு படக்குன்னு வந்து நிக்கிற?…” என திட்டிக்கொண்டே வாசலில் இருந்த வேப்பமரத்தில் இருந்து இரண்டு வேப்பிலை கொப்பை பிடித்து பறித்தவர் அவளின் சேலை முந்தானையில் முடிந்தார்.
“ம்மா இது எதுக்கும்மா?…” என சிணுங்க,
“விடிஞ்சுட்டாலும் இருளு இன்னும் போலவடி. காத்து கருப்பு அண்டாம இருக்கனும்ல. முப்பதுநாலு வரைக்கும் வெளில எங்குட்டு போனாலும் வேப்பலையை சொருகிக்கோ…” என சொல்லி மீண்டும் கோலம் போட செல்ல கண்மணி மறுபடியும் அதே இடத்தில் அமர்ந்துகொண்டாள்.
“இந்தா மணி, உள்ளார போ. உன் புருஷனை கவனிடி. இங்க வந்து உக்காந்துருக்கற?…” என சங்கரி சொல்ல,
“அவரு அசந்து உறங்கறாரு பெரிம்மா. பாவம் ராத்திரிலாம் உறங்கவே இல்ல…” என சொல்ல,
“ஆத்தா முத்துகருப்பி இவ வாய தைக்கத்தேன் வருது…” என சங்கரி வேகமாய் உள்ளே சென்றுவிட பேச்சி வாசலில் கிடந்த சிறிய கல்லை தூக்கி எறிந்தார்.
“எந்துச்சு உள்ளார போடி. வேற ஆருக்கிட்டையாச்சும் இப்புடி கூறுகெட்டத்தனமா சொல்லிவச்ச வாய கிழிச்சுபுடுவேன்…” என்றதும் பதறி எழுந்த கண்மணி,
“ஐயோ இது என்ன அர்த்தத்த புரிஞ்சுடுச்சு” என நினைத்து,
“ம்மா, நா அத சொல்லல…”  
“நீ ஒன்னத்தையும் சொல்ல வேணா. போ உள்ள…” என்று கொந்தளிக்க கண்மணி நொடித்துக்கொண்டே உள்ளே சென்றாள்.
அவள் சென்றதும் பேச்சியின் முகத்தில் ஒரு சந்தோஷம். சங்கரியும் வெளியில் வர,
“இவள என்னதான்க்கா செய்ய?…” என சொல்லி பேச்சி சிரிக்க,
“என் வயிறே குளுந்து போச்சு பேச்சி. மாப்புள்ள தம்பி அவுக வீட்டுக்கு கெளம்புததுக்கு முன்ன நம்ம முத்துகருப்பி கோவில்ல போய் பொங்க வச்சு நேத்திகடனை நெறவேத்திடனும்…” சங்கரி சொல்ல,
“செஞ்சுபோடுவோம்க்கா. சம்பந்தகாரகளையும் கூப்புட்டு விருந்து ஆக்கிடுவோம்…” என பேசிக்கொண்டே கோலத்தை போட்டு முடித்து காலை உணவு சமைக்க ஆரம்பிக்க மாரிமுத்து வந்துவிட்டார் இரண்டு கோழிகளுடன்.
“யத்தா மணி இந்த கோழிய கொண்டு போய் ஒம்பெரிம்மாட்ட குடுத்தா…” என சொல்ல வாங்கிக்கொண்டவள்,
“மாமா அத்தைய எங்க? காணோம்?…”
“ராவுக்கு வீட்டுக்கு போய்ட்ட்டோம்த்தா. மாட்டுக்கு தீவனம் போடனும்ல. விடியல பால் கறக்கனும்…”
“இப்பத்தேன் வேல முடிஞ்சிருக்கும்ல. வரதுக்கு என்னவாம்?…” என்றபடி உள்ளே செல்ல,
“ஏண்ணே மதினிய காணோம்?…” என பேச்சி காபியுடன் மாரிமுத்துவிடம் வர,
“வருவாத்தா. நீ போய் ஆகவேண்டியது பாரு…” என அனுப்பிவிட்டு முற்றத்தில் அமர காட்டிற்கு போயிருந்த கிருஷ்ணன் வந்துவிட,
“ஏலே கிட்டுனா…”
“மாமா கிருஷ்ணா சொல்லுங்க…” அவன் திருத்த,
“அட போடா. இங்காருலே மாப்புள்ள வரவும் அவருக்கு என்ன வேணும் எதுன்னு கேட்டு கவனிச்சுக்கோ. அவரு கெளம்புத வரைக்கும் நீ தான் நல்லா கவனிக்கனும். புரியுதா?…” என சொல்லவும் தலையசைத்தவன்,
“எங்க மணிய காணும்?…”
“பின்னால கோழி உரிக்குதா போல அவ பெரிம்மா கூட சேந்து…”
“ஆமாமா, உரிச்சிட கிரிச்சிட போறா. அங்க அது கூட பாடு பேசிட்டுத்தேன் கெடப்பா…” என சிரிக்க,
“என்னமோலே சின்ன புள்ள. புது எடம். எல்லாமே படிச்சவக. விரும்பி கேட்டாகளேன்னு நாமளும் அரக்கபரக்க குடுத்துட்டோம். என்னனு மணி அங்க சேந்து ஒத்து போக போறாளோ?…” என மாரிமுத்து கண் கலங்க,
“அட என்ன மாமா நீரு? பச்சமண்ணாட்டம் கண்ண கசக்கிக்கிட்டு?…”
“பக்கத்து ஊருதேன். ஆனாலும் மனசு கேக்கல. கைக்குள்ளையும் காலுக்குள்ளையுமா வளந்த பொண்ணு. இது மனச அவுக சரியா புரிஞ்சுக்கனும். அம்புட்டுத்தேன்…” என்றதும்,
“மாமா அத்த வராக…” என கிருஷ்ணன் சொல்ல வேகமாய் தோளில் கிடந்த துண்டை எடுத்து கண்களையும் முகத்தையும் துடைத்துக்கொண்டவர் வாசலை பார்க்க அங்கே எவருமில்லை.
கிருஷ்ணனின் முகத்தில் அப்படி ஒரு புன்னகை.
“ஏலே கேலியாலே பண்ணுத? இரு உனக்கு பொஞ்சாதி வரட்டும். உம்பவிசையும் நா பாக்கத்தானே போறேன்…” என கிண்டல் பேச அதற்குள் நாட்டரசனும் அக்கம்பக்கத்தினர் சிலரும் வந்துவிட அடுத்து பேச்சு திசைமாறியது.
கண்மணி வீட்டிற்கு  சீர் அனுப்புவதை பற்றி பேச ஆரம்பித்தனர். ஆம், கண்மணி வீடு தான். கார்த்திக் வீடுதான் இனி கண்மணி வீடும் ஆகிற்றே.
ஒரு பெண்ணின் கழுத்தில் மாங்கல்யம் என்ற ஒன்று ஏறியதும் அவள் ஜனித்து ஜனனம் ஆன இடத்தில் இருந்து வெகு சுலபமாய் வேறிடம் சொந்தமாக்கபடுகிறாள். அவள் வேரிலிருந்து பிடுங்கி இன்னொரு இடத்தில் நடப்பட்டு அங்கும் செழித்து வளரும் தன்மை பெருமை பெண்களுக்கு மட்டுமே.
நேரம் ஒன்பதை நெருங்க நெருங்க வீடு நிறைய ஆரம்பித்தது சொந்தங்களால். கண்மணி கையை பிசைந்துகொண்டு நின்றாள்.
மாப்பிள்ளை எங்கே எங்கே என கேட்கும் சொந்தங்களுக்கு இதோ வந்துவிடுவார் அதோ வந்துவிடுவார் என பதில் சொல்லி சொல்லி ஓய்ந்து போனாள்.
கார்த்திக் இன்னும் எழுந்து வரவே இல்லை. நல்ல உறக்கத்தில் இருந்தான். அவனை சென்று எழுப்புவோம் என இவள் நினைக்க அதையும் செய்ய கூடாது என்று சொல்லிவிட்டார் சங்கரி.
“அவரு தான் உறங்குராருல. எழுப்பனும்னு சொல்லுத? என்ன நெனப்பாரு? வரட்டும்…” என்று சொல்லிவிட  கண்மணியால் ஒன்றும் சொல்லமுடியவில்லை.
இதில் சக வயது பெண்களின் கேலி கிண்டல் வேறு அவளை அவஸ்தையில் தள்ள,
“கம்முனு இருங்கடி. என்னமோ உலகத்துல யாருக்குமே நடக்காதது எனக்கு நடந்துட்ட மாதிரி வந்துட்டாளுங்க…” என இவளும் சரிக்கு சரியாக வாய் குடுக்க அதற்குள் கார்த்திக்கே வந்துவிட்டான் குளித்து முடித்து.
“ஹ்ம்ம் எம்புருசன் பாக்கற மாதிரித்தேன் இருக்காரு…” என கண்மணி பார்க்க அவளின் பார்வையில் கார்த்திக்கின் விழிகளுக்குள் குறும்பு மின்னியது.
அவளிடம் பேசலாம் என்று வர மாரிமுத்து வந்து அவனின் கையை பிடித்து சாப்பிட அழைத்துக்கொண்டு சென்று அமர்த்திவிட்டார்.
“இல்ல எனக்கு பசிக்கலை. லேட்டா சாப்பிடுறேன்…” என்ற அவனின் குரல்,
“ஏய், எல்லாத்தையும் எடுத்துட்டு வாங்க. மாப்பிள்ளை வந்துட்டாரு. வெரசா கொண்டாங்க சாப்பாட்ட. பசி தாங்கமாட்டாருல. மத்தியானமாக போகுது…” என ஆளாளுக்கு குரல் கொடுக்க ஆரம்பிக்க அவனின் குரல் அதில் மறைந்தே போனது.
கார்த்திக் அமர்ந்ததும் அவனோடு மற்ற ஆண்களும் அமர்ந்துவிட துரிதமாய் மின்னல் வேகத்தில் அனைவருக்கும் இலை போடப்பட்டது. அவனுக்காக யாருமே சாப்பிடாமல் காத்திருந்தனர்.
“என்னங்கடா இது ஆட்டை குளிப்பாட்டி சாமி முன்னால நிப்பாட்டின மாதிரியே இருக்குதே? என்னா பாஸ்ட்டா இலை போடறாங்க?” என நினைத்தவன் கண்களில் அத்தனை பீதி.
அவனுக்கு முன்னால் இருந்த பண்ட பாத்திரங்களையும் அதில் இருந்த வகைகளையும் பார்த்தவனுக்கு கிலி பிடித்து ஆட்ட ஆரம்பித்தது.
மயக்கமே வந்துவிடும் போல கண்மணியை பரிதாபமாய் பார்த்தான்.

Advertisement