மணியோசை – 8
     பூ வைத்து திருமணத்தை உறுதி செய்யும் படலம் நிறைவாய் நடந்து முடிந்தது. காபியை தரும் பொழுது கண்மணியை பார்த்ததோடு சரி. அதன் பின் அவளை பார்க்க முயன்று முடியாமல் போக தனியாக அழைத்து பேசிவிடலாமா என்று நினைத்தான்.
நினைக்கத்தான் செய்தான். ஆனால் அதை அவதானித்ததை போல கண்மணி இருந்த அறை வாசலில் முறுக்கு மீசையுடன் விரப்பாய் நின்ற கிருஷ்ணனை பார்த்து தன் எண்ணத்தை மாற்றிகொண்டான்.
சிணுங்கிய மனதை இன்னும் சிறிது நாளில் திருமணம் ஆகிவிடுமே என சொல்லி சாமாதானம் செய்துகொண்டான். அதன் பின்பு வந்த நாட்களில் கண்மணியை சந்திக்க முயன்று முடியாமல் போனது.
திருமணம் என்று பேசிய பின்பு கண்மணியை வீட்டை விட்டு வெளியில் அனுப்பவே இல்லை. எங்கும் கண்மணியை பார்க்க முடிவதில்லை. வழக்கமாய் காலையில் நாட்டரசனுக்கு உணவு கொண்டுவருவாள் என நின்று பார்த்தால் கிருஷ்ணன் தான் வந்தான்.
அதை கண்டவன் ஒரு வார்த்தையும் பேசாமல் கிளம்பிவிட கிருஷ்ணனுக்கும் அவனிடம் சென்று பேசவேண்டும் என தோன்றவில்லை.
திருமணத்திற்கு முன்பான வேலைகளில் புடவை எடுக்கும் வைபவத்தில் அவள் வருவாள் என அவளுக்காய் இவன் வந்திருக்க பெண்ணை இதற்கெல்லாம் அழைத்துவருவது தங்கள் முறை கிடையாது என சொல்லிவிட்டார் நாட்டரசன்.
அதோ இதோவென எதிர்பார்த்த திருமண நாளும் அழகாய் விடிந்து கண்மணியை தன் மனைவியாக வரித்துக்கொண்டவன் மனதில் ஏமாற்றம் குவிந்தது.
திருமணத்தின் போதாவது தன்னை பார்ப்பாள், ஓரிரு வார்த்தையேனும் பேசுவாள் என நினைக்க அவளின் அமைதியும் பாராமுகமும் இவனின் மனதை அலைகழித்தது.
போட்டோ எடுப்பதற்கு கூட சரியாய் முகம் நிமிர்த்தினாள் இல்லை. முகம் வேறு சிவந்திருக்கிறதே? கோவமோ? என நினைத்தான்.
அவளின் முகம் வெட்கத்தில் சிவந்ததை அவன் அறிந்ததில்லையே. கோபத்தில் மூக்கு விடைக்க சண்டைகோழியாய் அவள் சிலிர்த்துக்கொண்டு நின்று தானே பார்த்திருக்கிறான். அதனாலே அவள் எந்த உணர்வில் சிவந்து நிற்கிறாள் என புரியாமல் குழம்பினான்.
அந்த குழப்பம் அதற்கடுத்து வந்த அனைத்து சடங்குகளிலும் நீடித்தது. அவன் என்ன கேட்டாலும் வெறும் தலையசைப்பு மட்டுமே அவளிடம்.
ஒருவேளை அன்று சண்டை போட்டதற்கு பின் இவளை கேட்டு திருமணம் முடித்தது இவள் மேல் கொண்ட கோபத்தில் தானோ என பயந்து போய் இருக்கிறாளோ? ஏதும் பழிவாங்கிவிடுவேன் என நினைத்து பயம் கொள்கிறாளோ? என்று வேறு நினைத்தான்.
அவர்கள் முறைப்படி சாந்தி முகூர்த்தம் பெண்ணின் வீட்டில் தான் நடக்கும் என்பதால் கார்த்திக்கின் வீட்டிற்கு சென்று விளக்கேற்றி பாலும் பழமும் சாப்பிட்டுவிட்டு வந்துவிட இங்கே கண்மணியின் வீட்டில் இரவு விருந்திற்கான ஆயத்தங்கள் கனஜோராக நடந்துகொண்டிருந்தது.
எப்போதடா கண்மணி தனியாய் வருவாள் அவளிடம் பேசுவோம் என இருந்தவனின் மனநிலை இப்பொழுது ஏனோ சலிப்பாய் இருந்தது. கண்மணியின் வீட்டிற்கு வந்ததிலிருந்து உறவினர்கள் யாராவது அவனுடன் பேச்சுகொடுத்துகொண்டே  அவர்களிடம் முகம் திருப்ப முடியாமல் இன்முகமாகவே பதில் சொல்லிகொண்டிருந்தான்.
இரவு உணவை உண்ணும் பொழுதாவது தன்னுடன் சேர்ந்து உண்ணுவாள் என நினைக்க அதற்கும் வழியில்லாமல் அவளை அவனுக்கு பரிமாறவைத்து வேடிக்கை பார்த்து மகிழ்ந்தது அந்த குடும்பம்.
“உங்க குடும்பத்து வரைமுறையில தீய வைக்க” என மனதிற்குள் புலம்பத்தான் முடிந்தது கார்த்திக்கால்.
ஏற்கனவே புது இடம். அவனுக்கு ஒரு மாதிரி வேறு இருக்க கொஞ்சம் சங்கடமாய் உணர்ந்தான்.
சிறிது நேரத்தில் ஆண்கள் அனைவரும் வெளியில் சென்று அமர்ந்துகொள்ள கிருஷ்ணன் வந்தான் கார்த்திக்கிடம்.  என்னவென்பது போல அவனை பார்க்க,
“மாப்பிள்ளை வாங்க மாடிக்கு போகலாம்…” என அழைக்க உண்மையில் கார்த்திக் மிரண்டுதான் போனான். அவனுக்கு பின்னால் யாரேனும் வீட்டினர் இருக்கிறார்களா என பார்க்க சங்கரி புடவை தலைப்பை சுற்றிக்கொண்டு எட்டி எட்டி பார்த்துக்கொண்டிருந்தார்.
“இவன் கூட மாடிக்கு போய் என்ன பண்றது?” என யோசித்துக்கொண்டே,
“மாடிக்கா? எதுக்கு?…” என கார்த்திக் கேட்டுவிட கிருஷ்ணனுக்கு ஒரு மாதிரியாக போனது.
“வந்து, தூங்கறதுக்கு தான் மாப்பிள்ளை…” என்றதும் விழியே தெறித்துவிடுவதை போல பார்த்தான் கார்த்திக் இதயம் குமுற ஆரம்பித்தது.
“அடப்பாவிகளா? உங்க குடும்பத்துல இதுவும் ஒரு முறையாடா? கல்யாணம் பண்ணிட்டு பர்ஸ்ட் நைட்ல மச்சானோட மாரடிக்க விடறது? உன் கூட வந்து நான் என்னடா செய்ய? கேட்கறவங்க அவனா நீன்னு கேட்டுட மாட்டானுங்களா? நல்லா இருப்பீங்களாடா?…” என அழாதகுறையாக நினைத்தவன்,
“தேடி தேடி பொண்ணெடுத்ததுக்கு நல்லா வச்சு செய்யறீங்கடா?” என புலம்பிக்கொண்டே கிருஷ்ணனுடன் பின்னால் இருந்த மாடியறைக்கு நடந்தான் கார்த்திக். அங்கே சென்றதும் வாசலில் கிருஷ்ணன் நிற்க,
“இவன் பாக்கறதே சரியில்ல. பேசாம திரும்பி வீட்டுக்கே போய்டுவோமா?” என யோசிக்கும் பொழுதே கிருஷ்ணன் அந்த அறையின் கதவை திறந்ததும் பார்த்தவனின் கண்கள் விரிந்தது.
“அப்ப உண்டுதான் போலையே” என்கிற ஒரு பெருமூச்சு அவனறியாமல் கிளம்ப பார்த்திருந்த கிருஷ்ணனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
“நீங்க இருங்க மாப்பிள்ளை. செத்த நேரத்துல மணி வந்துடும்…” என சொல்லிவிட்டு அவன் கீழே இறங்கிவிட நிம்மதியாக உள்ளே நுழைந்தான் கார்த்திக்.
உண்மையில் அதுவரை இருந்த ஒருவித இறுக்கம் குறைந்து இலகுவான மனநிலை அவனுக்கு வந்துவிட்டிருந்தது.
கட்டிலில் சென்று அமர்ந்தவன் அதில் தூவியிருந்த மலர்களின் நறுமணத்தில் மனம் மயங்கினான். காலையில் இருந்து இருந்த சஞ்சலமும் குழப்பமும் குறைவது போல தோன்ற கண்மணிக்காக காத்திருக்க ஆரம்பித்தான் சந்தோஷமாய்.
ஆனால் கண்மணியோ இங்கே பஞ்சாயத்தை கூட்டியிருந்தாள்.
“இந்தா மணி உனக்கு ஒருக்கா சொன்னா புரியாதாடி?…” என சங்கரியும்,
“நா சொல்லுதத கேளுடி. அவரு காதுல விழுந்துட போகுது…” என பேச்சியும் அவளிடம் மன்றாடும் குரலில் கேட்க,
“அதெல்லாம் முடியாது. கீழ புழுக்கமா இருக்குன்னு தான ஒரே ஒரு நாளு அவன் ரூமுல போய் படுத்தேன். நாயா வெரட்டின மாதிரி வெரட்டினான். இப்ப அங்க போய் நா தூங்கவா? மாட்டேன்…”  என்று வம்பு செய்துகொண்டிருக்க பெரியவர்களுக்கு இவளை எப்படி சமாளிப்பது என புரியவில்லை.
கீழே கண்மணியின் அறை வீட்டின் நடுநாயகமாக வரவேற்பறையின் முன்னால் இருக்கிறது. வெளியில் பேசுவது உள்ளே கேட்கும். உள்ளே பேசுவது வெளியில் கேட்கும். யாராலும் இயல்பாக இருக்க முடியாது என்பதால் மாடி அறையில் அனைத்தும் ஏற்பாடு செய்தனர். இவளானால் இப்படி பிரச்சனை செய்கிறாளே என அப்படி ஒரு கோபம்.
எங்கே சத்தமிட்டு அதட்டினால் வெளியில் பேசிக்கொண்டிருப்பவர்களுக்கு கேட்டுவிடுமோ என பேச்சி யோசிக்க, இவள் இப்படி திமிருடன் மாட்டேன் என்று சொல்லிக்கொண்டிருந்தால் எங்கே மாரிமுத்துவின் மனைவி காதுக்கு சென்று தங்களை பாசாங்கு செய்வாளோ என சங்கரி யோசித்தார்.
“இங்காரு, கல்யாணமாகிடுச்சேன்னு பாக்கேன். இல்ல சட்டம் பேசற நாக்க இழுத்து வச்சு அறுத்துருவேன். இம்புட்டு தொல பேசறோம். என்னைக்கோ அவன் ஏசினது இன்னைக்கு உனக்கு சுருக்குன்னு குத்துதாக்கும். அந்த புள்ள எம்புட்டு நேரமா காத்திட்டு இருக்கும். கூறு வேணா?…” என பேச்சி எகிறிவிட முகத்தை தூக்கி வைத்துக்கொண்ட கண்மணி,
“எனக்கு அந்த ரூம் புடிக்காது. அங்க உறக்கமும் வராது. இப்ப அந்த மனுஷனையும் அங்க போ சொல்லியிருக்கீங்க…”
“ஆத்தா முத்துகருப்பி இவள கட்டி மாளமுடியல ஆத்தா…” என சங்கரி புலம்ப நறுக்கென அவளின் தலையில் குட்டிய பேச்சி,
“இந்தா இந்த பால் சொம்பை எடுத்துட்டு போ. அவருக்கிட்டையும் துடுக்கா பேசின ஆரயும் பாக்கமாட்டேன். வாய தச்சுபுடுவேன். மரியாதையா நடந்துக்க. அவருக்கு என்ன வேணும்னு கேட்டு பாத்து கவனி. போ. இன்னொன்னும் சொன்னேன் ஞாவகமிருக்கா?..” என மிரட்டலாய் சொல்லி குருவம்மாவை அழைத்து அவளுடன் அனுப்பியவர் கண்மணி நகர்ந்ததும்,
“கொஞ்சமும் கூறு இருக்கா பாருக்கா இவளுக்கு. என் நேர கெரகம். இவளுக்கு இத கூட நா சொல்லி அனுப்பவேண்டியதா இருக்கு. என்ன கூத்து கட்ட போறாளோ? பாவம் அந்த தம்பி…” என புலம்பியவர் வெளியில் அமர்ந்திருந்தவர்களை பார்க்க சென்றார்.
மாடி ஏறி சென்ற கண்மணியிடம், “பாத்துடி, பதவிசா நடந்துக்கடி மணி…” என குருவம்மா சொல்ல,
“அதெல்லாம் எனக்கு தெரியும். நீ கெளம்பு…” என்று கண்மணி சொல்லவும்,
“அடியாத்தி, அதென்னடி ஆத்தா கொஞ்சமும்  வெக்கபடாம பேசிட்ட?…”
“இதுல வெக்கப்பட என்ன இருக்கு? போ போ போய் உன் புள்ளகுட்டிய பாரு…” என கண்மணி விரட்ட,
“டாக்டரத்தேன் காப்பாத்தனும் போல…” என சிரித்துக்கொண்டு குருவம்மா செல்ல,
“நா ஊருக்கே புத்தி சொல்லுவேன். வந்துட்டா என் தலையில ஏத்த. டாக்டர காப்பாத்த எனக்கு தெரியும்…” என சிலிர்த்துக்கொண்டு கோவத்துடன் தான் உள்ளே நுழைந்தாள் கண்மணி.
அவளை பார்க்கவும் கார்த்திக்கின் கண்களில் ஆயிரம் வெளிச்சபூக்கள் பளீரிட்டது.
“ஹேய் கிங்கிணி மங்கினி வா…”
“யோவ், நானே கம்முன்னு இருக்கனும்னு வந்துருக்கேன், என்ன சீண்ட பாக்குத பார்த்தியா?…” என்றவள் நாக்கை கடித்துக்கொண்டு அவனை பார்க்க,
“பரவாயில்ல. என்னை இப்படியே கூப்பிடு. பேசு. ஆனா நாம ரெண்டு பேர் இருக்கறப்ப மட்டும்…” என சொல்லி அவன் சிரிக்க,
“எங்கம்மா அப்பாரு முன்னாடி பேசிடத்தேன் முடியுமாக்கும்? என் சிண்டுமுடிய ஆஞ்சிடமாட்டாக? சோலி முடிஞ்சது…” என்று கண்மணி சொல்லவும் அதற்கும் சிரித்தவன்,
“உங்க வீட்ல யாருக்குமே திட்டவோ, முறைக்கவோ தெரியாதா? ஆவூனா வெப்பன்ஸ் ஹேண்டில் தான் போல. எப்ப பார்த்தாலும் கூலிப்படைல பேசற மாதிரியே வெட்டிடுவேன், குத்திடுவேன், அறுத்துடுவேன்னு…” என கேலி பேச அவனை முறைத்தவள் அமைதியாக அவனை பார்த்தாள்.
“என்ன?…” என கேட்டவனுக்கு பதில் சொல்லாமல் குனிந்துகொண்டு வாயசைக்காமல் எதுவோ முனுமுனுப்பாய் அவள் பேச நெருங்கி அமர்ந்தவனுக்குமே அவள் பேசுவது எதுவும் கேட்கவில்லை.
“என்கிட்டே எதாச்சும் சொல்லனுமா?…” என்றதற்கு அவன் புறம் திரும்பாமலே இல்லை என தலையசைக்க,
“ஏன் என்கிட்டே பேசவே இல்ல கண்மணி?…” என அவன் கேட்டதும் அந்த குரலில் ஏதோ வசியம் இருப்பதை போல உணர அவனை திரும்பி பார்த்தவள் அமைதியாய் இருந்தாள்.
“நான் உன்கிட்ட அன்னைக்கு மிரட்டற மாதிரி சண்டை போட்டு பேசினதும் உன்னை பொண்ணு கேட்டு வந்ததும் எங்க உன்னை பழிவாங்கத்தான் நான் இந்த கல்யாணத்தை பேசி முடிக்க வச்சேன்னு பயந்து போய் பேசாம இருந்தியா?…” என கேட்டதும் அதுவரை இருந்த மாயவலை அறுந்ததை போல அவளின் கண்கள் சிவக்க அவனை பார்க்க,
“என்ன நா கோவமா பேசி உன்ன என்ன செய்யறேன் பாருன்னு சொன்னதுல பயந்துட்டியோ?…”
“யோவ், சுத்த வெவரங்கெட்ட ஆளா இருக்கியே? உன்னால என்னை என்ன செஞ்சிட முடியும்? ஒன்னும் பண்ண முடியாதுன்னு எனக்கு தெரியுமே?. இதுல பழி வாங்கறன்னு நான் பயந்தேனாம்?…” என்று சிரிக்க கார்த்திக் முறைத்தான்.
“யாராச்சும் பழிவாங்க கல்யாணம் பண்ணுவாகளாய்யா? குடும்பம் நடத்த தான் கல்யாணம் பண்ணுவாக. புருஷன் பொண்டாட்டின்னு ஆனதுக்கு பொறவு என்னத்த பழிவாங்க. அது தன்ன தானே பழி வாங்கிக்கற மாதிரி…” என விளக்கம் சொல்ல,
“நீ தான் என்னை பாக்கவே இல்லையே. பேசவும் இல்ல. அதான் நீ இப்படி நினைச்சிருப்பன்னு நானா கெஸ் பண்ணினேன்…”
“லூசாயா நீ? அத்தன கூட்டம்  கூடியிருக்கறப்ப நா என்னத்த உன்ன பாக்கறது? சுத்த கூறுகெட்டதனமால இருக்குது. நீ கூப்புட்டப்ப எல்லாம் நா உன்ன பாத்து பல்ல காட்டியிருந்தே. எங்கம்மா அங்கனையே என் பல்ல தட்டி கையில குடுத்துருப்பாக…” என சொல்ல,
“உங்க குடும்பமே அடிதடி குடும்பம் தான் போல. ஆமா என்ன இப்ப கம்முன்னு வாய்க்குள்ள என்னவோ சொன்னியே. என்ன அது?…”
“உன்னை எப்புடி மரியாதையா கூப்பிடறதுன்னு சொல்லி பாத்தேன். ஆனா பேசறப்ப இப்படித்தானே வருது?…” என கண்மணி கவலையாக கார்த்திக் சத்தமாய் சிரித்துவிட்டான்.
“யோவ் மொல்ல மொல்ல சிரி. என்னவோன்னு எல்லாரும் உள்ளார வந்துர போறாவ…” என பதற அதற்கும் இன்னமும் அதிக சத்தமாக சிரிக்க அவனின் வாயை பொத்தியவள்,
“என்னய்யா பழிக்கு பழி வாங்கல?….” என விஷமமாய் கேட்க இப்போது கார்த்திக் திருதிருத்தான்.
“எங்க என்னை சும்மா ஒரு பேச்சுக்கு பழிவாங்கு பார்ப்போம். நீ என்ன பன்றன்னு நானும் பாக்கேன்…” என பேசியவளின் குரலில் சவால் தெரிய அது கார்த்திக்கிற்கு மிகப்பெரிய சவாலாய் அமைந்தது அவள் சொல்லிய விதம். அவளை பரிதாபமாய் பார்க்க,
“பாத்தியா, பாத்தியா. உன்னால என்ன கோவமா கூட மொறைக்க முடியல. இதுல எங்கிட்டு பழிவாங்க. தாலின்னு கட்டிட்டா பொண்டாட்டிய பொண்டாட்டியா தான் பாக்க முடியும் புரியுதா? சினிமா பாத்து ரொம்ப கெட்டுபோயிட்ட போல…”
புதுவித விளக்கம் கொடுத்தவளை வாய் மூடாமல் அவன் பார்த்திருக்க கண்மணிக்கு சிரிப்பாய் இருந்தது. அவளின் புன்னகையை பார்த்தவனின் விழிகளில் கல்மிஷம் புக,
“இன்னும் எவ்வளவு நேரம் மேடம் பேசிட்டே இருக்க போறீங்க?…”
“நா பேசினா நீயும் பேசுவியா? உன்னை யார் வாய் பாக்க சொன்னது?…” என சரிக்கு சரி வாயாட அதற்கு மேலும் தாமதிக்காதவன் அவளை தன் அணைப்பிற்குள் கொண்டுவந்தான்.
தாம்பத்தியத்தின் தாத்பரியத்தை அவனும் உணர்ந்து அவளுக்கும் உணர்த்தினான். அவள் மேல் தான் கொண்ட காதலை அவளுக்கு புரியவைத்து அவளை தன்னுள் கரைத்தான். தனக்கென உருகவும் வைத்தான்.
பாதி இரவில் உறங்க ஆரம்பித்தவர்கள் திடுமென கேட்ட சத்தத்தில் அலறியடித்து பதறிப்போய் அமர்ந்தவனின் காதை பிளந்தது அந்த சத்தம்.
அது கண்மணியின் குறட்டை சத்தம்.