Advertisement

மணியோசை – 7
          “சுத்த உளறலா இருக்கு? என்ன ஆச்சு உனக்கு. பிரச்சனை பண்ணிட்டு இருக்க? உன் மூஞ்சியே சரியில்ல. என்னை பொண்ணு பாக்க வந்தா உனக்கென்ன வந்துச்சு? இந்த ஊருக்கு வந்த சோலிய பாத்துட்டு கெளம்பிட்டே இரு…” என கோவமாய் சொல்ல,
“ஏன் என் முகத்துக்கு என்னவாம்? இல்ல இப்ப என்னதான் சொல்ல வர?…”
“யோவ் நா எதுக்குய்யா உன்கிட்ட சொல்ல வரேன். நீ தான் என்ன போகவிடமாட்டேன்னு வம்புக்கு நிக்குத. என் அண்ணன்ட்ட என்னால பேச்சு வாங்க முடியாது. வழிய விடு. நீ எது பேசறதுனாலும் அவன்ட்ட பேசிக்க…” அவளின் குரலில் அங்கிருந்து செல்லும் அவசரத்தோடு ஒரு நக்கலும் தொனித்ததை போல உணர்ந்த கார்த்திக்,
“என்ன எனக்கு உன் அண்ணனை பார்த்து பேச தைரியம் இல்லைன்னு சொல்றியா?…”
“ப்ச், உன்னோட ரோதனையா போச்சு. ஆமான்றேன். இப்ப அதுக்கு என்ன? உன்னால என் அண்ணன்ட்ட மட்டுமில்ல யார்ட்டையும் துணிச்சலா பேச முடியாதுதான். என்னய்யா பண்ணுவ?…”
“ஓஹ், அப்ப உன் அண்ணன்ட்ட பேசிட்டா. அதுவும் உன் வீட்டுக்கே வந்து உன் அண்ணாட்ட பேசினா என்ன பண்ணுவ?…”
“ஒன்னும் பண்ணமாட்டேன். எனக்கு வேற வேலை இல்ல பாரு. நடக்காதத பேசாம அங்கிட்டு போ. வந்துட்டான்…” என அவனின் கோப முகத்தை பார்த்துக்கொண்டே அங்கிருந்து சைக்கிளை நகர்த்தி செல்ல சில நொடிகள் தான் கார்த்திக் அப்படியே நின்றான்.
அதன் பின் காரை எடுத்தவன் அடுத்து என்ன செய்யவேண்டும் என்று தீர்மானித்தவனாக ஹாஸ்பிட்டல் சென்றான்.
அடுத்த இரண்டு நாளும் கார்த்திக்கை பார்க்கவே இல்லை கண்மணி. சரியான தொடை நடுங்கியாருப்பான் போல. ஊருக்குள்ளேயே காணலையே…” என கண்மணி கிண்டலாய் நினைத்தாள்.
ஆனால் கார்த்திக் செயல் வீரன் என்பதை ஒரே வாரத்தில் நிரூபித்துவிட்டான் அவர்கள் வீட்டிற்க்குள்ளேயே வந்து.
அன்று மாரிமுத்துவின் வீட்டிற்கு சென்றுவிட்டு மதியவேளை நெருங்கும் முன் வீட்டிற்குள் நுழைய புதிதாய் ஒரு கார் தன் வீட்டு வாசலில் நிற்கவும் யோசனையுடன் உள்ளே சென்றாள் கண்மணி.
வீடே நிசப்தத்தில் ஆழ்ந்திருக்க மெதுவாய் எட்டி பார்த்தவள் அங்கே மாரிமுத்துவின் அருகே நாட்டரசனின் வயதை ஒத்த ஒரு பெரிய மனிதரும், இன்னொருவரும்  அமர்ந்திருப்பதை கண்டதும் புரிந்துபோனது.
‘அடுத்த மாப்பிள்ளையா?’ என சலிப்பாய் நினைத்தவள் வேகமாய் உள்ளே வந்து தன் மாமாவையும், உடன் அமர்ந்திருந்தவர்களையும் பார்த்து வாங்க என்று சொல்லிவிட்டு,
“ம்மா அத்த இந்த பூவ கட்டித்தர சொல்லுச்சு. சாயங்காலம் வந்து வாங்கிக்குமாம்…” என்று பேச்சியிடம் உதிரி மல்லிகை பூவை நீட்ட அவளை முறைத்தவர்,
“உள்ள போடீ கழுத…” என அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் திட்ட ஒன்றும் புரியாமல் உள்ளே சென்றாள்.
“நா பேசறதை எல்லாம் பேசிட்டேன். நீங்க தான் முடிவை சொல்லனும். பிள்ளைங்களுக்கு பத்து பொருத்தமும் கூடி இருக்கு. எங்களுக்கு இந்த சமந்தத்துல பரிபூரண திருப்தி. உங்க விருப்பம் தெரிஞ்சா நாங்க சொந்தபந்தத்தோட நிச்சயம் பண்ண வந்திருவோம்…” என வந்திருந்தவர் சொல்லவும் இன்னமும் தயங்கிக்கொண்டே அமர்ந்திருந்தார் நாட்டரசன்.
“மச்சான், நான் நேத்தே உங்கட்ட எல்லா விவரமும் சொன்னேன்ல. இன்னும் தயக்கமா இருந்தா என்ன அர்த்தம்? பெரிய மனுஷன், மகன் கல்யாணத்துக்குன்னு வெளிநாட்டுல இருந்து லீவு போட்டுட்டு வந்திருக்காரு…” மாரிமுத்து சொல்ல,
“மாரி நா ஒளிச்சு மறச்சு பேசல. உனக்கே தெரியுமேப்பா. இப்பத்தேன் ஒருத்தன் வந்து ஊரக்கூட்டி வச்சு அசிங்கபடுத்தர மாதிரி பேசிட்டு போயிட்டான். இவகள  பாத்தா அத விட பெரியாளுங்களா தெரியறாங்க. அதான் செத்த யோசன…”
“இங்க பாருங்க, எல்லா விஷயமும் கேள்விப்பட்டு தான் நாங்க இங்க வந்தோம். ஏற்கனவே நாங்க முதல்ல பேசனும்னு இருந்தோம். ஆனா மாப்பிள்ள பார்த்துட்டதா தகவல் வந்ததும் சரின்னு விட்டுட்டோம். உங்க பொண்ணு எங்க வீட்டு மருமகளா வரனும்னு இருக்கறது தான் விதி போல. அதான் அந்த இடம் உங்களுக்கு தகையலன்னு நான் நினைக்கிறேன்…” என்றார் மணிகண்டன்.
ஆம், கார்த்திக்கின் தந்தை மணிகண்டன். அவருடன் கார்த்திக்கின் அக்கா மாப்பிள்ளை தவம்.
மணிகண்டன் பேசவும் கிருஷ்ணனும் நாட்டரசனும் ஒருவரை ஒருவர் பார்க்க பேச்சியின் முகத்தில் ஏதேதோ நம்பிக்கைகள். சங்கரிக்கு இதில் முழு திருப்தி உள்ளதை போல அவரின் முகமே காட்டிகொடுத்தது.
“என் மகனை பத்தி நான் சொல்றதை விட உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். உங்க ஊர்ல வேலை பார்க்கறவன். ஆளுங்கட்ட பழக்கவழக்கம் எப்படின்னு கண்கூடா பார்க்கலாம். தெரிஞ்சுக்கவும் செய்யலாம்…” என்றதுமே கேட்டுகொண்டிருந்த கண்மணிக்கு குழப்பமே போனது.
‘மாப்பிள்ளை இந்த ஊரா? எனக்கு தெரியாம எவன் அவன்?’ என யோசனையில் இருக்க நாட்டரசனுக்கு சங்கடமாய் போனது.
வீட்டில் பிரச்சனையே அவனை கொண்டுதானே? இப்போது மாப்பிள்ளையாய் அவனே வருவது எந்தளவிற்கு சரியாய் வரும் என யோசிக்கலானார்.
“ரெண்டு நிமிஷம் இருங்க. நான் போய் வீட்டம்மாட்ட கலந்துட்டு வரேன்…” என்றவர் பேச்சியையும் சங்கரியையும் பார்க்க இருவரும் எழுந்து உள்ளே வந்தனர். உடன் கிருஷ்ணனும்.
“நீ என்ன சொல்லுத பேச்சி?…”
“இதுல நா சொல்ல என்ன இருக்குங்க. அண்ணனே சொல்லுது முதல்லையே இவுக கேட்கனும்னு இருந்தாகன்னு. இப்ப திரும்பவும் கேட்காக. நல்ல எடமுன்னும் சொல்லுதாக…” என சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே மாரிமுத்து வர,
“இங்காருங்க மச்சான், மனுஷன் உங்க சம்மதத்துக்கு அப்பறமா தான் சொந்தக்காரங்கட்டையே சொல்லி கூட்டி வரனும்னு நினைச்சு நம்ம தோதுக்காக இறங்கி வந்துருக்காரு.  நா மொதல்ல கூட்டி வந்தேன் பாருங்க தறுதல அதுமாதிரி கெடையாது அந்த மாப்பிள்ள தம்பி. ரொம்ப நல்ல மாதிரி தான்…”
“எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு மாமா, அந்த டாக்டருதேன் அப்பன அனுப்பி பொண்ணு கேட்க சொல்லிருப்பானோன்னு தோணுது…”
“சொன்னா என்னாலே தப்பு? புடிச்சு கேட்டா நம்ம மணிக்குத்தேன் சவுகரியம். புடிச்சு கட்டிட்டு போனா அவ சந்தோசமாதேன் இருப்பா. டாக்டரு ஒன்னும் பொண்ணு மனச கலைச்சு கூட்டிட்டு போவனும்னு நினைக்கலயே. மொறையா பெரியவுகள அனுப்பி பேசனும்னு நினைக்கிதாக. இது போதாதாலே?…”
“ஒரு கல்யாண வீட்டுக்கோ, கோவில் குளத்துக்கோ போற வரப்ப எதாச்சும் பொண்ணை பிடிச்சா வீட்ல சொல்லி பாக்க சொல்லுததில்லையா? அது மாதிரி தான்லே இதுவும். வந்துட்டான் வெவரங்கெட்டவன்…”
சங்கரி கிருஷ்ணனை கேட்க அதை ஆமோதிக்கும் விதமாக தான் இருந்தது பேச்சியின் முகமும், மாரிமுத்துவின் முகமும். நாட்டரசன் கூட ஒருவழியாக சம்மதிக்கும் நிலைக்கு வந்துவிட்டார்.
கிருஷ்ணனுக்கு தான் உள்ளுக்குள் புகைந்தது. பார்க்கும் இடங்களில் முறைத்து முட்டிக்கொண்டு இப்பொழுது தன் வீட்டிற்கே மாப்பிள்ளையாய் வந்துவிட்டானே? என நினைத்தவன் பின் திருத்தமாய் வந்துவிட்டாரே என நினைத்தான்.
ஆம், இனி தன் பேச்சு எதுவும் வீட்டில் செல்லுபடியாகாது என்பதால் அதை ஏற்றுக்கொள்ளவும் ஆரம்பித்து விட்டான். இன்னொன்று தங்கைக்கு டாக்டர் மாப்பிள்ளை. போதாதா? கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது.
“அப்ப பேசி முடிச்சிடலாம்னு சொல்றீங்களா?…” என மீண்டும் நாட்டரசன் கேட்க,
“அட ஆமாங்கறேன். நல்ல காரியத்த தள்ளி போடவேண்டாம்…” என சங்கரி சொல்லிவிட அனைவருக்கும் சரியாக பட வெளியில் வந்தனர்.
மணிகண்டனும், தவமும் பேசிக்கொண்டிருக்க இவர்களை பார்த்ததும் புன்னகைத்தனர்.
“ரொம்ப நேரம் காக்கவச்சுட்டோமோ?…” என கேட்டுக்கொண்டே மாரிமுத்து வந்து அமர அவர்களின் முகத்தில் இருந்த புன்னகையை வைத்தே மணிகண்டன் ஒரு வகையில் ஊகித்துவிட்டார்.
“சும்மா தான் பேசிட்டு இருந்தோம். நீங்க சொல்லுங்க…”
“எங்களுக்கு சம்மதம். நிச்சயதார்த்தத்துக்கு நாளை குறிச்சிடலாம்…” என மாரிமுத்து சொல்ல நாட்டரசன் தலையசைத்தார்.
“இன்னொரு விஷயம், உங்கட்ட பேசிட்டு சம்பந்தத்தை உறுதி பண்ணிட்டு வீட்ல கூட்டிட்டு வரலாம்னு இருந்தோம். அதான் லேடீஸை கூட்டிட்டு வரலை. இன்னொருக்க ஊருக்குள்ள கூடி போன முறை மாதிரி ஆகிட கூடாது பாருங்க. அதுக்குதான்…” என்னும் பொழுதே பதட்டத்துடன் பார்த்தனர் அனைவரும்.
“இப்ப எல்லாமே நிறைவா போச்சு. அதனால முதல்ல ஒரு நாள் நீங்க எல்லாரும் எங்க வீட்டுக்கு, இல்லை அப்படி இல்லைனா ஏதாவது கோவில்ல வச்சு என் வீட்டு மனுஷங்களை பார்த்து பேசுங்க. என்னதான் ஆம்பளைங்க நாம பேசிக்கிட்டாலும் பொம்பளைங்க அவங்களுக்கு பேச எவ்வளவோ இருக்கும். அங்க வச்சு பேசி முடிவு செஞ்சுப்போம்…”
“ஆமா மச்சான் அண்ணே சொல்றதும் சரியாத்தேன் இருக்கு. நல்ல யோசன. நம்ம ஊர்லையும் ஒருத்தர் கண்ணு மாதிரி ஒருத்தர் கண்ணு இருக்காது. அதனால எல்லாம் முடிவு பண்ணிட்டு ஊருக்குள்ள சொல்லிப்போம். நமக்காகத்தேன் அவரு இம்புட்டு பேசறாரு. நீரு கம்முன்னு இருந்தா என்ன அர்த்தம்ங்கறேன்?…”
மாரிமுத்து நிமிடத்தில் மணிகண்டனை உறவு கொண்டாட பேச்சிக்கும் அதுவே சரி என்று பட,
“கோவில்ல வச்சுனா பொண்ணையும் கூட்டியாரனுமா? மதினியும், மருமவளும் மணியை பாக்கனும்னு நினப்பாவள?…” சங்கரி தன் சந்தேகத்தை எழுப்ப,
“அதெல்லாம் வேண்டாம்மா. ஒரு போட்டோ மட்டும் குடுங்க போதும். ஏற்கனவே பையன் பார்த்திருக்கான். அதுவே என்க வீட்ல எல்லாருக்கும் திருப்தி தான். இது சம்பிரதாயத்துக்கு தான் வீட்ல உள்ளவங்க பழக…” என்றவரை அங்கிருந்த அனைவருக்குமே பிடித்துப்போனது.
“அப்ப நாங்க கிளம்பறோம். உங்களுக்கு என்னைக்கு வசதின்னு சொன்னீங்கன்னா கோவில்ல வச்சு குடும்பமா சந்திக்க ஏற்பாடு பண்ணிடலாம். அங்கயே வச்சு நிச்சயத்துக்கும் கல்யாணத்துக்கும் நாளை குறிச்சிடுவோம்…” என்றதும் அனைவருக்கும் அதில் சந்தோஷமே.
வீட்டில் பேசிவிட்டு தகவல் சொல்வதாக மாரிமுத்து சொல்லவும் கிளம்பினர்.
நிறைவுடன் அவர்களை அனுப்பிவிட்டு மீண்டும் உள்ளே வந்தவர்கள் அடுத்து என்ன செய்வது என்று பேச ஆரம்பித்தனர்.
“ம்மா, பூவ கட்டலையா? கிளம்பிட்டாகளா அவுகளாம்?…” என கேட்டுக்கொண்டே கண்மணி வர,
“உள்ள போ மணி. பெரியவக முக்கியமா பேசனும்…” என கிருஷ்ணன் சொல்ல அவனை முறைத்துக்கொண்டே எழுந்து சென்றாள்.
“ம்மா, இப்ப மணிக்கிட்ட ஒன்னும் சொல்லவேண்டாம். நாம மொத அவுக வீட்டு ஆளுங்களை பார்த்து பேசிட்டு நாள் குறிச்ச பொறவு சொல்லிக்கலாம். புரியுதா?…” என கிருஷ்ணன் சொல்ல அவன் சொல்வதும் சரியாகவே இருந்தது.
அடுத்த இரண்டு நாளில் வெளியூரில் ஒரு கோவிலில் வைத்து சந்திப்பதாக முடிவு செய்யப்பட்டது.
இரண்டு குடும்பத்தினரும் சந்தித்து பேசிக்கொள்ள மகாதேவிக்கு மெல்லவும் முடியவில்லை, முழுங்கவும் முடியவில்லை கதைதான்.
அவருக்கு இதில் துளி விருப்பமும் இல்லை. அவர் தன் மகனுக்கு வரப்போகும் மனைவியை பற்றிய கனவுகள் ஏராளம் இருந்தது. அதனாலேயே சல்லடை போட்டு சலிக்காத குறையாய் அப்படி பெண் தேடிக்கொண்டிருந்தார்.
திடுதிப்பென மணிகண்டனும், தவமும் வந்திறங்கியதும் முதலில் குழம்பியவர்கள் மகனின் திருமண விஷயம் என்றதும் உண்மையில் மகிழ்ந்து தான் போனார். ஆனா பெண்ணை மகனே தேர்ந்தெடுத்துவிட்டதில் அதிர்ச்சியானவர் வீட்டில் ரகளைசெய்ய முயல, ஆம் வெறும் முயற்சியே. அதுவும் அவரால் முடியவில்லை.
முதலில் மணிகண்டனும் யோசிக்க கார்த்திக்கின் ஆசைக்காக சம்மதித்தாலும் அவரும் தனக்கு தெரிந்தவர்களை விட்டு பெண் வீட்டினரை பற்றி விசாரிக்க அதன்பொருட்டு வந்த தகவல்கள் மனதுக்கு திருப்தியை தர அந்த சம்பந்தத்திற்கு ஒப்புகொண்டார். மகாதேவிக்கு தான் ஒன்றவில்லை.
மணிகண்டனின் ஒற்றை பார்வையும் கார்த்திக்கின் பிடிவாதமும் அவரை எந்த விதத்திலும் செயல்படவிடாமல் செய்ய உள்ளுக்கும் பொருமிக்கொண்டே சம்மதிக்க வேண்டிய சூழ்நிலை கைதியானார்.
“இங்க பாருங்கம்மா, அவங்க வில்லேஜ்ல இருக்கறவங்க. உங்க பார்வைல கூட உங்களுக்கு விருப்பமில்லைன்னு தெரிஞ்சது ஈஸியா கண்டுபிடிச்சுடுவாங்க அவங்க. இந்த கல்யாணம் மட்டும் நடக்காம போச்சு. நான் என்ன செய்வேன்னு தெரியாது. புரியுதா?…” என்கிற மிரட்டலில் வந்தவர்களிடம் சிரித்து சிரித்து பேசினார் மகாதேவி.
அவரின் அதிகப்படியான கவனிப்பை சங்கரியும் பேச்சியும் கவனித்துவிட மாரிமுத்துவிடம் சொல்ல மகனுக்கு நல்ல இடமா பக்கத்துலையே மருமக கிடைச்ச சந்தோசம் அவருக்கு என்று சமாதானம் செய்துவிட்டார் அவர்.
சந்திரா சொல்லவே தேவையில்லை. அத்தனை இனிமையாக பழகினாள். எந்தவித அலட்டலும், மேல் பூச்சும் இல்லாத அளவான பேச்சு சந்திராவிடம்.
அனைத்தும் திருப்தியாக போய்விட நிச்சயத்திற்கு நாளும் குறிக்கப்பட்டது.
மணிகண்டனும், தவமும் இரண்டுமாத விடுப்பில் வந்திருப்பதால் அதற்குள் திருமணத்தை முடித்து ஊருக்கு கிளம்ப வேண்டும் என்று சொல்ல ஒரு மாதத்தில் நல்ல முகூர்த்த நாள் பேசப்பட்டு நிச்சயதார்த்தம் திருமணத்திற்கு முதல் நாள் என்று முடிவு செய்துவிட்டனர்.
சம்பிரதாயத்திற்கென அடுத்த வாரம் சொந்தபந்தங்களுடன் பெண் பார்க்க வர சொல்லிவிட்டு கிளம்பி வந்தனர். அப்போதுதான் ஊர் மக்களுக்கு திருமண ஏற்பாடு விஷயம் தெரிவிக்கவேண்டும் என்று.
வீட்டிற்கு வந்ததும் கார்த்திக்கிடம் நடந்ததை சொல்ல அவனின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. எப்போதடா பெண் பார்க்க செல்வோம் என்று இருந்தது. அதுவரை அந்த ஊருக்கு சென்று வந்தாலும் ஏனோ கண்மணியை பார்க்க முடியாத ஏமாற்றம் அவனை வாட்டியது.
‘எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்?’ என்பதை போல இருந்தது அவனின் நிலை.
சொந்தபந்தங்களிடம் கண்மணிக்கு பூ வைக்க மாப்பிள்ளை வீட்டினர் வருவதாக சொல்லி அழைப்பு விடுத்திருந்தனர். இங்கே கார்த்திக் பெண் பார்க்கும் நாளில் மிக ஆவலுடன் கிளம்பி கொண்டிருந்தான்.
‘என்னை பார்த்ததும் அவ எப்படி ரியாக்ட் பண்ணுவா?…” என யோசித்தான்.
இப்படி பார்ப்பாளா, என்ன கேட்பா? பேச முடியுமா? அலோவ் பண்ணுவாங்களா? பயப்பட மாட்டா. ஆனா கண்டிப்பா ஷாக் ஆகிடுவா’
இப்படியாக யோசித்து யோசித்து கற்பனையில் கண்மணியை, அவள் தன்னை பார்த்ததும் வெளிப்படுத்தும் பாவனைகளை தினுசு தினுசாக எண்ணி பார்த்தான். அவளின் வீட்டின் முன்பு காரில் சென்று இறங்கியதும்,
“இந்தா பாருடி நம்ம டாக்டரை? மாப்பிள்ளை டாக்டரா?…” என அனைவரும் வாயை பிளக்க தெரிந்தவர்கள் என்பதால் அனைவரையும் பார்த்து புன்னகைத்தான்.
“காலையில கூட உங்கள பாத்தேனே டாக்டரு. ஒத்த வார்த்த சொல்லலியே?…” என ஒருவர் கேட்க அதற்கும் அவனிடத்தில் புன்னகையே.
மாரிமுத்துவும், கிருஷ்ணனும் வாசலிலேயே நின்று இதை பார்த்தனர். அவர்கள் அறியாமலேயே முதலில் வந்த மாப்பிள்ளையையும் கார்த்திக்கையும்  ஒப்பிட்டு பார்த்தனர்.
“வாங்க மாமா, வாங்க வாங்க…” என வீட்டினர் அனைவரையும் வரவேற்ற கிருஷ்ணன் கார்த்திக்கை பார்த்ததும் ஒரு நொடி தடுமாறி பின்,
“வாங்க மாப்பிள்ளை…” என அழைத்தான்.
அதை பார்த்த கார்த்திக்கிற்கு சிரிப்பு பொங்கியது. ஆனாலும் சூழ்நிலை கருதி அடக்கிகொண்டவன் அவனை பார்த்து அளவான புன்னகை புரிந்தான்.
‘பொண்ணு கழுத்துல தாலியை கட்டுற வர கம்முன்னு அடக்கி வாசிடா கார்த்தி’ என சொல்லிகொண்டு வீட்டில் நுழைய அனைவரும் உள்ளே வந்தனர்.
சம்பிரதாயமான பேச்சுக்கள் பேசி தட்டை மாற்றி திருமணத்தேதியை அறிவித்து அனைவரிடமும் ஒப்புதல் கேட்டு முடித்த பின்னர் தான் கண்மணியை சபைக்கு அழைத்தனர்.
வந்ததிலிருந்து அவளை பார்ப்பதற்கு இவன் தவித்திருக்க மெதுவாய் வந்தவள் பொதுவாய் அனைவருக்கும் வணக்கம் வைத்துவிட்டு பேச்சி கொடுத்த காபியை அனைவருக்கும் சென்று கொடுத்தாள்.
கார்த்திக்கிடம் வரும் பொழுது தன்னை பார்ப்பாள் என அவன் எதிர்பார்த்திருக்க அவளோ தலையை நிமிர்த்தாமலே இருக்க,
“யத்தா மணி, மாப்பிள்ளைய பார்த்தா…” என மாரிமுத்து சொல்ல அவள் நிமிர்ந்து பார்க்கும் முன் ஆயிரமாயிரம் பட்டாம்பூச்சிகள் கார்த்திக்கினுள் சிறகடித்து அவஸ்தயை கூட்ட நிமிர்ந்து பார்த்தவள் மீண்டும் தலை கவிழ்ந்துகொண்டாள்.
‘அடிப்பாவி, உப்புசப்பு இல்லாம என்னடி லுக் இது கிங்கிணி மங்கினி? ‘ என கார்த்திக் தான் ஷாக் ஆகவேண்டியதாக இருந்தது.

Advertisement