Advertisement

மணியோசை – 5
            இப்படி கண்மணி திடீரென வந்து நிற்பாள் என்று தெரியாத கார்த்திக் மனதில் ஒருகணம் சந்தோஷ சாரல். அதன் பின்பு தான் அனைத்தும் ஞாபகம் வர,
‘சண்ட சண்டடா கார்த்தி. அவள பாக்காத’ என சொல்லிக்கொண்டாலும் பார்வை என்னவோ அவளின் மீது நொடிக்கொருதரம் படிந்து மீண்டது.
குருவம்மாவிடம் பேசினாலும் பார்வை அவளை வட்டமிட அதிலேயே எரிச்சலானவள் விட்டுவிட்டும் போகமுடியாத சூழ்நிலை.
குருவம்மாவை கூட்டி வந்துவிட்டு இவன் பார்க்கிறான் என்பதற்காக தான் செல்வதா? ம்ஹூம் என்று சட்டமாய் அவனை நேருக்கு நேர் முறைத்தாள்.
நர்ஸை அழைத்து குழந்தைக்கு தேவையான மருந்துகளை எழுதிகொடுத்தவன் அதை வாங்கி தன்னை சரிபார்த்து தர சொன்ன டாக்டரை வித்தியாசமாய் பார்த்துக்கொண்டே அந்த நர்ஸ் செல்ல அவளுடன் குருவம்மாவையும் போக சொன்னான். பின்னோடு செல்ல முனைந்த கண்மணியை,
“ஹேய் கிங்கிணி மங்கினி…” என ஹஸ்கி வாய்சில் அழைக்க வேகமாய் திரும்பி பார்த்தவள் வெட்டும் பார்வை பார்க்க எழுந்து வந்து அவளின் கை பிடித்து வாஸ்பேஷனில் நிறுத்தி,
“இந்தா சோப்பு போட்டு கையை கழுவு…” என சொல்ல,
“யோவ் என்ன துளிர் விட்டு போச்சா?. ஆனாலும் உனக்கு ரொம்பத்தான் வாய்கொழுப்பு. எடுய்யா கைய. இல்ல எகிறிடுவேன்…”
“துளிர் தானே? அது விட்ட விட்டுட்டு போகட்டும். கழுவுன்னு சொல்றேன்ல. நீ பாட்டுக்கு புள்ளைய சுத்தம் பண்ணாம தூக்கிட்டு வந்துட்ட. உனக்கு இன்பெக்ஷன் ஆகிடபோகுது…”
“இந்தாரு உம்ம கொடச்சல் ரொம்ப நீளுது. ஆஸ்பத்திரின்னு பாக்கேன். இல்ல வெட்டிடுவேன் பார்த்துக்க…” என்று நாக்கை மடக்கி அவனை எச்சரிக்க அதை கண்டுகொள்ளாதவன் அவளின் கையை பிடித்து தன் கையுடன் சேர்த்து கழுவ,
“யோவ் என்னய்யா பன்ற? உனக்கு கெரகம் சரியில்ல. என் அண்ணனுக்கு தெரிஞ்சுச்சு உன் ஊர மறந்துடவேண்டியதான். விடுய்யா…” என்று தன் கையை உருவ பார்க்க அவனுக்கு நேரம் சரியில்லையோ என்னவோ உண்மையில் கண்மணிக்கு தான் நேரம் சரியில்ல.
அந்த நேரம் பார்த்து ஒரு ஆக்ஸிடன்ட் கேஸை சேர்ப்பதற்காக ட்ராக்டரில் ஊர்மக்கள் சிலருடன் கிருஷ்ணனும் வந்திறங்க கண்மணி அவனை கவனிக்கவில்லை. ஆனால் கண்மணியை அவன் கண்டுகொண்டான்.
கண்டவனுக்கு அந்த இடத்திலேயே கண்மணியை கொன்றுவிடும் வேகம் பிறந்தது. ஆனால் சூழ்நிலையை சுற்றி இருப்போரை கருத்தில் கொண்டு அவன் கோபத்தை அடக்க அதை அதிகமாக்கும் பொருட்டு கண்மணி கார்த்திக்கை எச்சரிப்பதை போல கை நீட்ட வெகு இலகுவாக அவளின் கையை பிடித்து சிரிப்புடன் கீழே இறக்கினான் கார்த்திக்.
இதை பார்த்த கிருஷ்ணனுக்கு ரத்தம் கொதித்தது. தன்னை போல வேறு யாராவது இதை பார்த்திருந்தால் கண், காது, மூக்கு வைத்து ஒரு பெரிய கதையையே பரவவிட்டிருப்பரே?
“உன் அண்ணன்னா அவனுக்குத்தான் சண்டை போட தெரியுமா? இல்ல மிரட்ட தெரியுமா? ஆளு பாக்க கரடு முரடா இருந்தா தான் முரடனா? பாக்க சாஃப்டா அழகா இருந்தா எங்களுக்குள்ள முரட்டுத்தனம் இல்லையா என்ன? ஜிம் பாடி. முடிஞ்சா உன் அண்ணாட்ட இவன் என் கைய புடிச்சு இழுத்தான்னு சொல்லி சண்டைக்கு கூட்டிட்டு வா. ஒத்தைக்கு ஒத்த பார்த்துடலாம்…”
“ஓஹ் உனக்கு அம்புட்டு தைரியமா போச்சா? இம்புட்டு வீரம் இருக்கறவன் அன்னைக்கு உன் உச்சி முடிய நா பிடிச்சப்ப என்ட்ட காட்டியிருக்க வேண்டியதான? அரண்டவன் மாதிரி நின்ன? என்கிட்டையே உன்னால ஒத்தைக்கு ஒத்த நிக்க  முடியல. பேயறஞ்சவன் கணக்கா நின்னுட்டு இப்ப சவடால பாரு. போயா போய் ஊசி குத்துற வேலைய பாரு…” என கிண்டலாய் பேச கார்த்திக் முறைத்தான்.
அதற்குள் குருவம்மாவும் வர கார்த்திக்கை பார்த்து கழுத்தை வெட்டிக்கொண்டு சென்றாள் கண்மணி.
அவள் செல்லும் வரை அவன் முகத்தில் சிறிதாய் இருந்த புன்னகை விரிந்தது. மனதிற்குள் ஏதோ ரகசிய உணர்வுகள் பூத்தது.
‘இவள பார்த்துட்டா என்ன செய்யறேன்னே தெரியமாட்டிக்குது? வேண்டாம் வேண்டாம்னு நினச்சாலும் மனசுக்குள்ள உக்காந்து ஆட்டிவைக்கிறா. இவட்ட கெத்து காமிக்கனும்னு நினச்சா அத அவ காட்டிட்டு என்ன டம்மியாக்கிடறா. ஒன்னு மட்டும் உறுதி. இவ சாதாரண பெண்ணில்லை’. என நினைத்தான் கார்த்திக்.
“மணி, உனக்கு புண்ணியம்த்தா. நல்லவேள நீ வரவும் வந்து பாத்தோம். இல்லைனா புள்ளைக்கு காச்சல் அதிகமாகிருக்குமாம். நர்சம்மா சொல்லுச்சு. நன்றித்தா…”
“உன் நன்றி யாருக்கு வேணும்? புள்ளைய பத்தரமா பாத்துக்க…”
“அதெல்லாம் பாத்துக்கிடுதேன். உனக்கு என்ன வேணும் சொல்லு…”
“ஆமா கேட்டதும் வண்டி வண்டியா கொண்டாந்து எறக்கிடுவ? இவ வேற…” என சலித்துக்கொள்ள,
“உனக்கு வண்டி கொண்டாந்து இறக்கற அளவுக்கு இருந்தா நா ஏன் இங்க குப்ப கொட்டுதேன்?. நீ சொல்லு…”  
“உனக்காக வேணா கேட்கேன். பெருசா என்ன கேட்டுட போறேன். ஒருநா காட்டுக்கு கொண்டாந்தியே கத்தரிக்கா கருவாட்டு குழம்பு. அத வச்சுத்தா…” என சொல்ல,
“ஏன்த்தா உன் வீட்டு வவுசுக்கு என் வீட்டு கொழம்புக்கு வருமா? நா ஏதோ கிள்ளி போட்டு வக்கிறேன். அதுவா புடிக்குது உனக்கு?…” என தாடையில் கை வச்சு ஆச்சர்யமாக கேட்க,
“அட ஆமாங்கறேன். முடிஞ்சா வை. இல்லனா விடேன்…”
“சரி சரி கோச்சுக்காத. ஆனா ஒ அம்மாவ நெனச்சாதே கொல நடுங்குது. அதுக்கு இது தெரிஞ்சா என் தலைமுடிய ஆஞ்சுபுடாது?…”
“இந்தா முடிஞ்சா வை. இல்லைனா வேணா. அதுக்கு ஏன் அம்மாவ இழுக்கறவ?…”   என அவளின் வீட்டு வாசலில் இறக்கிவிட்டு கிளம்ப,
“அட கோச்சுக்காத. நீ கேட்டு மாட்டேன்னுவேனா. நெசமாலுமே கொண்டாறேன்…”
“சரி சரி, வைக்கிறது சன்னமா வையி. உன் மாமியார விடாத. தண்ணியகிண்ணிய ஊத்திட போறா. நெய்மீன் கருவாட்ட போடு. வாளகருவாட போட்டு ருசியே மாத்திப்புடாத. பச்ச மிளகாய கீறி விடு…” என குருவுக்கே பதம் சொல்லிவிட்டு வீட்டை நெருங்க அங்கே தங்கள் ட்ராக்டர் வீட்டு வாசலில் நிற்பதை கண்டு புருவம் சுருக்கினாள்.
என்றைக்கும் ட்ராக்டரை வீட்டிற்கு எடுத்து வரமாட்டானே அண்ணன். இன்னைக்கு என்னவாம்? என யோசனையுடன் உள்ளே நுழைந்தவள் வரவேற்பறை தாண்டி உள்ள அறையில் இருந்த மண்பானையில் தண்ணீர் எடுத்து குடிக்க குடித்து முடித்து திரும்பும் முன் கண்மணியின் தலை முடியை கொத்தாய் பற்றியிருந்தான் கிருஷ்ணன்.
“அண்ணே என்னாச்சு. வலிக்குண்ணே. விடு…” என கண்மணி கத்த பின்கட்டில் இருந்த சங்கரியும், பேச்சியும் பதறிக்கொண்டு வந்துவிட்டனர் இந்த சத்தம் கேட்டு.
“டேய் கூறு கெட்டவனே என்னாலே பண்ணுத? விடு அவள…” என சங்கரி கிருஷ்ணனை திட்ட,
“இவளை விட்டா குடும்ப மானத்த சந்தி சிரிக்க வச்சிடுவா பெரிம்மா. நீ போ அங்கிட்டு…” என அவரை பிடித்து தள்ளியவன் கண்மணியை சரமாரியாக அடிக்க ஆரம்பிக்க,
“அண்ணே எதுக்குண்ணே? நா என்ன பண்ணுனேன்? வலிக்குண்ணே. விடு…” என கண்மணி அலற,
“இவட்ட படிச்சு படிச்சு சொல்லிருக்கேன். அந்தாளு டாக்டர்கிட்ட  வச்சுக்காதன்னு. அவன பாத்தாலே சரியில்ல. இன்னைக்கு என் கண்ணு முன்னாலையே அவன் இவ கைய புடிக்கிறான். இவ பார்த்துட்டு நிக்கிறா…” என்றதுமே கண்மணிக்கு புரிந்துவிட்டது.
“ஏத்தா மணி, நீ எதுக்கு ஆஸ்பத்திரிக்கு போன?…” என பேச்சி கேட்டதற்கு,
“ம்மா, குருவக்கா மவனுக்கு மேலுக்கு முடியலம்மா. அழுதுட்டு நின்னுச்சு. அதா கூட்டிட்டு போனேன்…” என சொல்ல,
“அவன் எதுக்கு உன் கையை புடிச்சான்? நீ கன்னம் பழுக்க நல்லா குடுத்துருக்க வேண்டியதுதான?…” சங்கரி கேட்க ஐயோ என்ன சொல்வது என யோசித்தவள்,
“பெரிம்மா புள்ளைய குளிக்காம கொள்ளாம தூக்கிட்டு போனேனா. ஏற்கனவே முடியாம அங்க இருந்தேன்ல. திரும்பவும் தொத்திக்கும் கையை கழுவனும்னு சொன்னாரு. கைல ஏதோ இருந்துச்சா அத காமிச்சாரு. அதத்தான் அண்ணன் பார்த்துட்டு வந்து குதிக்குது…” என சொல்ல சங்கரி கிருஷ்ணனை பார்த்தார்.
‘ஆண்டவா நல்ல வேள. டாக்டர் பேசினத மட்டும் சொல்லிருந்தோம் செத்தோம். என்ன எதுக்கு கேட்காம நீ ஏன் போன, கேட்டன்னு அவனோட சேர்ந்து எனக்கும் சமாதி கட்டிடுவாங்க. என்ன காப்பாத்த அவனையும் காப்பாத்த வேண்டியதா போச்சு’ என பொருமிக்கொண்டு தன் அண்ணனை முறைத்தாள்.
“என்ன திமிரா பாக்கறா பாருங்க. இவள?…” என மீண்டும் அவளை அடிக்க,
“இப்ப எதுக்குடா பச்சபுள்ளைய போட்டு மாட்டடிக்கற மாதிரி அடிக்கற? அந்தாளு டாக்டரு. இவ குருவு கூடதான போயிருக்கா? நீ பாட்டுக்கு இந்த அடி அடிக்கித. கட்டிகுடுக்கறப்ப கொற இல்லாம குடுக்கனும்ல. மூக்கும் முழியும் நல்லா இருந்தாலே அம்புட்டு நொரனாட்டியம் பேசுவானுவ. நீ பாட்டுக்கு கையை உடச்சி விட்டுட்டேனா? விடுடா…” என பேச்சி சொல்ல,
“ஆமா என்னவோ மாமனுக்கும் மச்சானுக்கும் முட்டிக்கறத போல அந்தாளுட்ட போய் மொறச்சிட்டு நிக்கித?…” என சங்கரி கேட்டுவிட,
“பெரிம்மா வாய மூடுதீயலா? அந்தாள பாத்தாலே எனக்கு புடிக்கலை. இதுல மாமே மச்சான்னுட்டு…” என்று அங்கிருந்த தண்ணீர் குடத்தை வேகமாய் தட்டிவிட அவனின் கோபத்தின் அளவு அதிகமாய் தெரிந்தது.
“இப்ப என்ன ஆச்சுன்னு இந்த ஆட்டம் ஆடுத?. நான் சொல்லிடுதேன் அவட்ட…”
“சொல்லி வையுங்க. இனி அந்த டாக்டர்ட்ட இவ பேசறத பாத்தேன்…” என்று விரல் நீட்டி அவளை எச்சரிக்க கண்மணி பார்த்த பார்வையில்,
“ம்மா பாரு. இங்க பாரு. எம்புட்டு திண்ணக்கமா வெடப்பா நிக்கிதா பாரு. இம்புட்டு அடி வாங்கியிருக்கா. திட்டிருக்கேன். அதையும் கேட்டுட்டு நிக்கிதா பாரேன். சொட்டு தண்ணி கண்ணுல கட்டியிருக்கா பாரு. ஒரு வார்த்த இனி பாக்கமாட்டேன். பேசமாட்டேன்னு சொல்லுதாளா?…” என கொந்தளிக்க,
“நா ஏன் சொல்லனும்? என்னவோ அந்தாளோட போய் பேசி பழக யாருக்கும்  தெரியாம ஒளிஞ்சு மறைஞ்சு போனமாதிரி நீ பேசுவ. நா அத ஒத்துக்கிட்டு இனி பாக்க, பேச மாட்டேன்னு சொல்லனுமாக்கும்? என்னவோ நா தப்பு பண்ண மாதிரியே பேசற? என்ன பத்தி என்ன நினைக்கித உன் மனசுல?…”
கிருஷ்ணனின் கோவத்திற்கு சற்றும் சளைக்காது கண்மணியும் கோவத்தில் எகிற பேச்சிக்கே பேச்சற்று போனது.
மகள் சொல்வது சரிதானே? அவள் என்ன தவறுசெய்துவிட்டாள்? இயல்பாக நடந்த ஒன்றுக்கு வீட்டினரே அவளின் செயல்களுக்கு வேறு சாயம் பூச முனைய வெளி ஆட்களை என்ன சொல்வது?
“கிருஷ்ணா, இங்காருடா மொதல்ல கோவத்த கொற. பொறுமையா பேசு…”
“இனி என்னத்த பேச? மொத இவள கட்டிக்குடுத்து அனுப்புங்க. அப்பத்தேன் நிம்மதி எனக்கு…” என சொல்ல,
“ஓஹ் அப்ப என் நடத்தையில சந்தேகப்படுதியோ? அதான் அவதி அவதியா எவன் கையிலையாச்சும் புடிச்சு குடுக்கனும்னு நினைக்குதியோ? இதுக்கு என்னை வெசம் வச்சு கொன்னு உன் மானத்த காப்பாத்திக்க…” என கண்மணி தீயாய் நிற்க சங்கரி வாயடைத்து போய் பார்த்து,
“ஆத்தி என்ன வார்த்தத்தா சொல்லிப்புட்ட? உனக்கு வெசம் வைக்கவா வம்பாடுபட்டு வளத்தோம். ஐயோ முத்துகருப்பி எம்புள்ள வாயில இருந்து இப்படி ஒரு வார்த்தைய கேக்கவா என்ன உசுரோட வச்சிருக்க?…” என கண்மணியை கட்டிக்கொண்டு அழ,
“அட நீ எதுக்கு பெரிம்மா அழற? நானே அழல…”
“நீ சாமானியத்துக்கு அழுதுடுவியா? உன் கண்ணுல கண்ணீர பாத்திருப்பேனா ஆத்தா. ஆனா உன் வாயில இப்படி ஒரு வார்த்தைய கேட்க வச்சுட்ட பாரு. இந்த கட்ட வேகற வரைக்கும் இந்த சொல்லு என்ன சுட்டுட்டே இருக்குமே…” என அவளை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டார் சங்கரி.
பேச்சி அசைவற்று நிற்க கிருஷ்ணனும் கண்மணியின் வார்த்தையில் ஆடிப்போய் நின்றான்.
“இன்னும் என்னய்யா?…” என பேச்சி கேட்க,
“சம்பந்தம் பாக்க ஆரம்பிச்சு ரெண்டு மாசம் போய்ருச்சு. மொத வர மாப்பிள்ள எல்லாத்தையும் அது சரியில்ல, இது சரியில்லன்னு நொட்டு சொல்லி கழிக்கறத விட்டுட்டு முன்ன பின்ன இருந்தாலும் பேசி சட்டுபுட்டுன்னு கட்டிகுடுக்கற வேலையை பாப்பம்…” என்றதும் பேச்சி அவனை பார்த்த பார்வையில் முகம் திருப்பினான்.
தான் அதிகப்படியாக நடந்துகொண்டோமோ என்று மனதிற்குள் குமைந்தவன் பேச்சியிடம் பதில் பேசாது வெளியே வர முற்றத்தில் நாட்டரசன் இடிந்துபோய் அமர்ந்திருந்தார்.
அவரின் முகத்தை பார்த்ததுமே தெரிந்து போனது அனைத்தையும் கேட்டுவிட்டார் என. அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் வெளியேறிவிட்டான் கிருஷ்ணன். உள்ளே வந்த நாட்டரசன் தோளில் கிடந்த துண்டை எடுத்து தரையில் போட்டு அப்படியே படுத்துவிட்டார்.
இப்படி ஒரு சம்பவம் தன் வீட்டில் நடக்கும் என்று என்றைக்கும் நினைத்ததில்லை. பெண் பிள்ளைகள் மீது கை நீட்ட கூடாது என்பதில் மிக உறுதியாக இருப்பார் நாட்டரசன்.
வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் குலதெய்வத்திற்கு சமம் என்று நினைப்பவர். நடமாடும் தெய்வம் என போற்றுபவர். இன்று அவர் வீட்டு தெய்வமே காயப்பட்டிருப்பதை நினைத்து மருகியபடி படுத்திருந்தார்.
அவரை பார்த்த பேச்சி பதறிக்கொண்டு தண்ணீருடன் வந்து எழுப்ப,
“செத்த கண்ணசந்துக்கறேன் பேச்சி…” என படுத்துக்கொள்ள பேச்சியும் அவருக்கே அமர்ந்துகொண்டார்.
சிறிது நேரம் கழித்து எழுந்த நாட்டரசன் கண்மணியை சாப்பிட அழைத்துவருமாறு சொல்லிவிட்டு தானும் அமர்ந்தார். சங்கரியுடன் வெளியில் வந்த கண்மணி அவரை பார்த்து ஒரு கணம் தயங்கியவள் ஒன்றும் பேசாமல் சாப்பிட்டுவிட்டு தன்னறைக்கு செல்ல திரும்ப,
“யாத்தா மணி, இன்னும் ரெண்டு நாள்ல உன் பெரியப்பாவுக்கு திதி வருது. போய் உன் மாமன் வீட்டுக்கு சொல்லிட்டு வந்துடு…” என நாட்டரசன் சொல்ல தலையை ஆட்டியவள் உள்ளே சென்றுவிட்டாள்.
எங்கே கோவத்தில் யாரிடமும் பேசாமல் தன்னுடைய இயல்பை விட்டு வீட்டிற்குள் முடங்கி கிடைப்பாளோ என பெரியவர்களும் கிருஷ்ணனும் இரவுறக்கம் இல்லாமல் விழித்து கிடந்து விடியலில் காட்டிற்கும் தோப்பிற்கும் சென்றுவிட சங்கரிக்கும் பேச்சிக்கும் இருப்பே கொள்ளவில்லை.
என்னவென்று கண்மணியை சமாளிப்பது என்ற யோசனையில் இருக்க அடுப்படியை கண்மணியின் கொலுசு சத்தம் வேகமாய் நிறைக்க ஆரம்பிக்க திரும்பி பார்த்தவர்கள் கண்களை விரித்தனர்.
முதல் நாள் நடந்த களேபரத்தின் சுவடு எதுவும் இல்லாமல் புது மலரென குளித்து முடித்து வந்து நின்றவள்,
“ம்மா சோறு கட்டிட்டியா? தோப்புக்கு கொண்டுபோவ?…” என வழக்கம் போல அவள் வந்து நிற்க சந்தோஷத்திலும் நிம்மதியிலும்,
“தோ பன்றேத்தா. செத்த இரு…” என சங்கரி பரபரப்பாக பேச்சி அவளுக்கு சாப்பாடு எடுத்துவைக்க அவளும் வேகமாய் அமர்ந்து சாப்பிட்டு முடித்து தந்தைக்கான உணவையும் வாங்கிக்கொண்டு சைக்கிளில் ஏறினாள்.
“இந்த புள்ள எப்ப எப்புடி நினைக்கும்னே தெரியல பேச்சி. காத்து தான். கண்ணுக்கும் சிக்காம, கைக்கும் அகப்படாம. ஒரு நல்லவன் அமையனும் இவளுக்கு. நெனச்சது நடந்துட்டா முத்துக்கருப்பிக்கு கடாவெட்டி மொட்டை அடிச்சுக்கறேன்னு வேண்டிருக்கேன்…” என பெருமூச்சுடன் சங்கரி செல்ல மகள் சென்ற  பின் வாசலை பார்த்து நின்றார் பேச்சி.

Advertisement