Advertisement

மணியோசை – 4
         நாட்டரசனுக்கு சாப்பிட கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்தவள் கொஞ்சம் பயத்துடன் தான் உள்ளே நுழைந்தாள். கிருஷ்ணன் வந்திருப்பான் என்று பார்த்தால் இல்லை.
சங்கரியிடம் அண்ணன் எங்கே என கேட்டால் அதற்கு கிடைக்கும் பதிலே தனியாக இருக்கும்.
“என்னைக்கும் இல்லாத திருநாளா எதுக்கு அண்ணன தேடறவ? என்னத்த பண்ணி வச்சுட்டு வந்திருக்க? உன்ன வச்சு நித்தம் பஞ்சாயத்தா இருக்கே? இந்த பேச்சி உன்னை திட்டறதோட நில்லாம என்னை புடிச்சு ஆட்டு ஆட்டுன்னு ஆட்டிடுவாளே? கெரகம் நா என்னத்த பண்ணுவேன்?…” என்று மூலையில் உட்கார்ந்து மூக்கை சீந்த ஆரம்பித்துவிடுவார்.
அந்த அபாயத்தை கண்கொண்டு பார்க்கவும் முடியாது. அதன் பின்னான ஆபத்தை நினைக்கவும் முடியாது என எண்ணியவள் சத்தமில்லாமல் தன்னறைக்கு சென்று  படுத்துக்கொள்ள பசி வயிற்றை கிள்ளியது.
சாப்பிட்டு வந்து உறங்கிவிடுவோம். வயிறு நிறைந்து உறங்கிவிட்டால் பின் அந்த ஆண்டவனே எழுப்பினாலும் நடக்காது. அண்ணன் எம்மாத்திரம். அவனே டயர்டாகிவிடுவான். அடுத்து இரவு மீண்டும் தான் தூங்கிய பின்தான் வருவான்.  முதல் நாள் உஷ்ணம் மறுநாள் மட்டுப்பட்டிருக்கும்.
இப்படியாக இவள் கணக்கு செய்து சாப்பிட செல்ல எழுந்திரிக்க வெளியில் கிருஷ்ணனின் குரல்.
“ஆத்தி…” என படுத்துக்கொண்டவள் சுவற்றுபக்கமாய் திரும்பி முகத்தை தலையணைக்குள் புதைத்துக்கொண்டாள். கிருஷ்ணன் வந்து இவளின் அறைக்குள் எட்டிப்பார்த்து செல்வதை உணர்ந்தவள் கண்களை திறக்கவே இல்லை.
“பெரிம்மா, என்ன மணி படுத்திருக்கு? கழுத சோறு சாப்ட்டாளா?…” என கேட்க,
“இல்லையே. உறங்கிட்டாளா? என்னடா காலக்கொடும? வயிறு இந்நேரம் தொண்ட வர கூவிருக்குமே? ஒரு கவளம் கூட திங்காம உறங்க மாட்டாளே?…” என்றவர்,
“என்னடா? ஊர்வம்பா?. அதான் அம்மணி அதுக்குள்ளே முடக்கிட்டாகளாக்கும்?. எந்திக்கட்டும் சட்டியில போட்டு வதக்கிடறேன்…” என சொல்லிக்கொண்டிருக்க அதை கேட்ட இங்கே கண்மணி,
“இரு இரு, உன்னை ஒரு நாளாச்சும் நெல்லு பானையில போட்டு அமுக்கி அவிக்கல, என் பேரு கண்மணி இல்ல பெரிம்மா…” என இவள் சூளுரைக்க,
“அம்மா எங்க பெரிம்மா?…”
“மாட்டுக்கு தண்ணி காட்டிட்டு பின்னால மாட்டுகொட்டாயில இருக்கா. இந்த மணி என்னனா அவ அம்மாவுக்கே தண்ணி காட்டறா. வர வர அவ துள்ளலு அதிகமாயிட்டே போகுதுலே. நீதான் சொல்லிவைக்கனும்…”
“சரி நான் பார்த்துக்கறேன். பசிக்குது பெரிம்மா. சோறு வைங்க. என்ன கொழம்பு?…” என கேட்டுக்கொண்டே அங்கு இருந்த பாயை எடுத்து விரித்து அமர்ந்தான் கிருஷ்ணன்.
தன் பெரியம்மா என்ன சொல்ல போகிறார் என காதை கூர்மையாக்கி கொண்டு அதாவது தன் காலி வயிற்றின் காதை கூர்மையாக்கி கேட்க,
“சுண்டவத்த போட்டு வத்தகொழம்பு, அப்பளம், முட்ட பொரியல்…” என அடுக்க இவளுக்கு வயிறு கபகபவென எரிய ஆரம்பித்தது. தன் பெரியம்மாவின் கை பக்குவம் அவளறியாததா?
நல்லெண்ணெய் மிதக்க மிதக்க உரைப்பும் புளிப்புமாய் வத்தல்குழம்பு, முட்டையில் வெறும் வெங்காயம், மிளகாயை மட்டும் சேர்க்காமல் லேசாய் மட்டுமே கனிந்து கொஞ்சம் காய் பதத்தில் இருக்கும் தக்காளியை சிறிதாய் நறுக்கி அதனுடன் மிளகுத்தூளை சேர்த்து பொரித்து வைக்கும் ருசிக்கு ஈடு இணை உண்டா?
இவள் சில்லாகிக்கும் போதே கிருஷ்ணன் சாப்பிட ஆரம்பித்த மணம் இவளின் நாசியில் நுழைந்து அவஸ்தையை கூட்டியது.  சில நொடிகள் கூட பொறுக்காதவள் வசவாவது ஒன்றாவது என நினைத்து எழுந்துகொள்ள அங்கே கிருஷ்ணன் அறை வாசலில் தட்டுடன் நின்றான்.
பார்த்தவுடன் பயந்துபோனவள் மாட்டிகொண்ட உணர்வில் திருதிருக்க அதை கண்டவன் உள்ளம் கனிந்தது. மெதுவாய் தலை குனிந்து உள்ளே வந்தவன் அவளின் அருகில் அமர,
“இங்காருண்ணே நா ஒன்னும் அந்தாளோட பேசலை. அவனா தான் வந்து எப்டிருக்க என்னன்னு வந்து நின்னான்…”
கிருஷ்ணன் வந்து கேட்கும் முன்னே கடகடவென இவள் ஆரம்பிக்க அவளின் பார்வை அண்ணன் முகத்திற்கும் கையில் இருந்த தட்டிற்கும் தாவி தாவி தவித்துக்கொண்டிருந்தது. அதை கண்டுகொண்டவன்,
“இந்தா மொத இத சாப்புடு. பொறவு பேசுவோம்…” என அமைதியாய் சொல்ல அவனின் அமைதியில் இவள் வாயை பிளந்தாள்.
வீட்டிற்கு வந்ததும் இழுத்துவைத்து அறைவான் என நினைத்திருக்க இவன் என்னடாவென்றால் சாப்பிட எடுத்துவந்து கனிவாய் கவனிக்கிறானே என ஆச்சர்யம் கொள்ள அவளுள்ளத்தில் எச்சரிக்கைமணி அடித்தது.
“ஆத்தா முத்துகருப்பி, இந்த தடியன்ட்ட இருந்து நீதா என்ன காப்பாத்தனும். காவுகுடுப்பான்னு பார்த்தா கஞ்சி கொண்டாறான். நம்பத்தே முடியல…” என முணங்கியவள் அதற்கு மேல் யோசிக்காமல் தட்டை வாங்கி வேகவேகமாய் சாப்பிட ஆரம்பிக்க,
“ஏத்தா மணி, அவன் நிறுத்தி பேசுனா நீ ஏன் நின்ன? ஊருக்குள்ள பயலுவ பாத்தா கேலியாக்கிடமாட்டானுவளா? நீயா பேசமாட்டன்னும் புரியுது. ஆனாலும் நீ அவன்ட்ட எதாச்சும் உரண்டைய இழுத்து அவனுக்கு கோவம் வந்து உன்ன பேசி நீ கோவத்துல அடிச்சுகிடுச்சு பிரச்சனை பெருசாக்கிடுவன்னு நெனச்சேன்…”
‘அடப்பாவி’ என வாயெல்லாம் முட்டை பொரியலாக ஆவென பார்க்க,
“என்னத்துக்கு வெளியூரான்ட்ட வம்பு. பாக்க வேற ஆள் வாட்டசாட்டமா இருக்கான். நின்னு பேசுததுக்கே ஊர்ல கதைய கட்டிடுவானுக. கொள்ள பயலுவ இப்ப அதத்தேன் வேலையா வச்சிட்டு திரியுறானுவ. குடும்பத்துக்கு ஒரு சொல்லாயிட கூடாதுல…”
‘அதான பாத்தேன்’ என ஒரு பார்வை பார்த்துவிட்டு எழுந்துகொள்ள,
“என்னத்தா?…”
“கொழம்பு ஊத்த போறேன். நீயும் வா. சேந்து சாப்பிட…” என்றவள் முன்னால் நடக்க இவ நம்ம பேச்சை கவனிச்சாளா? இல்லையா என்கிற சந்தேகம் வந்துவிட்ட கிருஷ்ணன் அவளின் பின்னே செல்ல,
“இதென்னடா காலக்கூத்து? இல்லாத வழமையா அவளுக்கு தட்ட தூக்கிட்டு போற? என்னடா புதுசா? என் அடிவயித்துல புளிய கரைக்காதீங்கடா…” என சங்கரி ஆரம்பித்துவிட நடந்ததை கிருஷ்ணன் சொல்ல,
“வந்த கழுதை வாயில போடாம அவளுக்கு சோறூட்டிதியோ? கஞ்சி கொண்டு போனவ போனோமா வந்தோமான்னு இல்லாம நடமாட்டமில்லாத இடத்துல எளந்தாரி பயலுட்ட  நின்னு பேசிருக்கா அந்நேரமே நீ சும்மாவா விட்ட?…” என பேச்சி வந்துவிட உண்டுகொண்டிருந்தவள் தட்டிற்குள்ளேயே புதைந்துவிடுவதை போல குனிந்துகொண்டாள்.
“திங்கும் போது ஒன்னும் காதுல விழாதே. இருக்கட்டும். என்னைக்காச்சும் இன்னொரு தடவ எங்கையாச்சும் நின்னேன் வச்சேன்னு காதுல விழட்டும் கால உடச்சுபோடறேன். எம்புட்டு பேசறேன் எரும மாட்டுமேல மழ பெஞ்சதாட்டம் உட்கர்ந்துருக்கறத பாரு?…”
பேச்சி சொல்லவும் வேகவேகமாய் சாப்பிட்டு முடித்து தன் அறைக்குள் வந்தவள் நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
எல்லாம் அவனால வந்தது. யார் கேட்டா என்ன வந்து பாருன்னு. என திட்டிகொண்டிருக்கும் பொழுதே கண்களை சுழற்ற நன்றாய் உறங்கிப்போனாள்.
ஆனால் வீட்டில் பிரச்சனை வேறு விதமாய் ஆரம்பித்தது. நாட்டரசனுக்கு போனை போட்டு பேச்சி வர சொல்ல அவரும் என்னவோ என்று அடித்துபிடித்து வர பேச்சி தன் ஒன்றுவிட்ட அண்ணனுக்கும் சேதி சொல்லி கிருஷ்ணனை கையுடன் சென்று கூட்டி வர சொல்லிவிட்டார்.
உறங்கிவிட்டால் உலக இயக்கமே நின்றுவிடுவதை போலொரு துயிலில் நாயகி மையம் கொண்டிருக்க வீட்டில் புயல் கரையை கடக்க ஆரம்பித்தது.
நாட்டரசன் வந்ததும் நடந்ததை சொல்லிய பேச்சி இதை பற்றி தன் அண்ணனிடம் யாரும் மூச்சு விடகூடாது என்றும் சொல்லிவைத்தார். கிருஷ்ணனுடன் வந்த மாரியப்பன்,
“என்னத்தா வீட்ல யாருக்கும் மேலுக்கு முடியலையா? மணி நல்லா தான இருக்கு? திரும்ப வயித்து நோவு ஏதும் இல்லையே. நேத்தே சொன்னேன் அதுட்ட கேட்டாளா?…” என அவர் ஆரம்பிக்க,
“என்னண்ணே? என்ன சொன்ன?…” பேச்சி கேட்க அவருக்கு மோர் எடுத்துவந்த சங்கரி அதை கொடுத்துவிட்டு,
“வாடா மாரி. உள்ளூருதேன். ஆனாலும் உன்ன பாக்க முடியறதில்லையே?…” என்றபடி பேச்சியின் அருகில் அமர்ந்தார்.
“என்னத்தக்கா செய்ய. வேல சோலி அப்படி இருக்கு. நேத்து நம்ம  மணி கூட கேட்டுச்சு ஏன் மாமா வரதில்லன்னு. பழைய மாட்டை குடுத்துட்டு புதுசு ரெண்டு எறக்கி இருக்கோம்ல. அதான் சோலி பாடு அதிகமா போச்சு…”
“இருக்கறதையே பாக்க முடியல. இதுல இன்னும் ரெண்டாக்கும்? ம்க்கும்…” என பேச்சி நொடித்துக்கொள்ள,
“என்ன செய்ய வீட்ல கேட்கமாட்டிக்கா. பாக்க நானாச்சுன்னு நின்னு வாங்கனும்னு சொல்லி இந்தா வாங்கினதுக்கு பின்னால நாந்தே பாக்கவேண்டியதா இருக்கு…”
“ஆனாலும் ஒம்பொஞ்சாதிக்கு பேராச தான்டா…” சங்கரி சொல்ல தலையை அசைத்தவர்,
“சொல்லு பேச்சி என்னத்துக்கு அவசரமா வரசொன்ன?…”
“அண்ணே நம்ம மணிக்கு மாப்பிள்ள பாக்க ஆரம்பிக்கலாம்னு நினைக்கறேன்…” என்றதும் பேச்சியை யோசனையாய் பார்த்த மாரிமுத்து,
“இப்ப என்ன பேச்சி அவசரம்? மணிக்கு இருவது தான ஆவுது?…”
“அது கட்டிகுடுக்கற வயசுதான அண்ணே. இப்பவே பார்க்க ஆரம்பிச்சுடுவோம். நல்ல எடமா தகஞ்சா செஞ்சிடுவோம். மணிக்கு முடிச்சுட்டா அடுத்து ரெண்டு வருஷத்துல இவனுக்கும் பாக்கனும். அப்பத்தே சரியா இருக்கும். நீ என்ன சொல்லுத? மாமனா உன்னட்ட கேட்காம செய்ய முடியாதுல்ல…”
மாரிமுத்து இன்னமும் யோசனையுடன் அமர்ந்திருக்க சங்கரி பேச்சியிடம் கண்ணை காட்ட அதை புரிந்துகொண்டதை போல,
“இங்காருண்ணே ஒட்டி பொறக்காட்டாலும் உன்ன எங்கூட பொறந்தவனாட்டந்தே நெனக்கே. அதா மொத உன்ட்ட பேசிட்டு உன் மூலமாவே ஆரம்பிப்போம்னு வர சொன்னே. என்மவளுக்கு நீ தான தாய்மாமனா நிக்கனும்…” என பேச்சி உருக மாரிமுத்து கரைந்துவிட்டார்.
“அதுக்கில்ல பேச்சி, மணி சின்னப்புள்ளையாச்சேன்னு தா யோசன. இப்ப என்னத்தா கட்டிகுடுக்கனும். அம்புட்டு தான. நா பாத்துக்கிடுதே. நீ விசனப்படாத…” என்றவர் நாட்டரசனிடமும், கிருஷ்ணனிடமும் கேட்க பேச்சிக்கு மறுபேச்சு அந்த வீட்டில் உண்டா?
அடுத்து மாப்பிள்ளை எப்படி இருக்கவேண்டும், எவ்வளவு ரொக்கம் போடமுடியும், நகை எவ்வளவு என்று இருப்பதையும் தங்களால் முடிவதையும் சொல்ல அடுத்து ஆகவேண்டியதை தான் பார்த்துகொள்வதாக  சொல்லி கிளம்பிவிட்டார்.
இது எதையும் அறியாது அடுத்து வந்த ஒரு வாரமும் ஓரளவிற்கு அடங்கி அமைதியாக இருந்தாள். ஆனால் நாட்டரசனுக்கு சாப்பாடு எடுத்து செல்வதை மட்டும் அவள் நிறுத்தவே இல்லை. இரண்டு முறை கார்த்திக்கின் காரை எதிர்கொண்டாலும் அவள் கண்டுகொள்ளாமல் கடந்து செல்ல இவனுக்கு தான் கடுப்பாகியது.
‘திமிர், அண்ணனுக்கும், தங்கச்சிக்கும் உடம்பெல்லாம் திமிர். கிங்கிணி மங்கினி என்கிட்டையே உன் திமிரை காட்டுறியா? இந்த கார்த்திக் பத்தி உனக்கு தெரியாது. ஓவரா போற’ என அவளை கடக்கும் பொழுதெல்லாம் நினைத்துக்கொள்வான்.
அதன் பின் அவள் வரும் நேரம் அந்த வழியில் வருவதை கூட குறைத்துக்கொண்டான். அப்படி நினைத்துக்கொண்டான். முடியவில்லை.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கடக்க அதன் பின் பார்க்கும் போதெல்லாம் யாரையோ என்பதை போலத்தான் பார்த்துவிட்டு செல்வான். ஆனால் பார்த்துவிட்டு தான் செல்வான். கண்மணியிடம் அந்த பார்வை கூட இல்லை.
அன்றும் அப்படி உணவை நாட்டரசனுக்கு கொடுத்துவிட்டு சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவள் மாரியப்பன் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தவள் மரிக்கொழுந்தின் வீட்டின் முன்னால் குருவம்மா தன் நான்கு வயது குழந்தையோடு அழுதுகொண்டே நிற்பதை பார்த்து சைக்கிளை நிறுத்திவிட்டு,
“இந்தா குருவக்கா? என்னாச்சு புள்ளைக்கு? ஏன் அழுவுத?…” என வந்து நிற்க,
“நேத்துல இருந்து இவனுக்கு மேலுக்கு முடியலை மணி. காலைல நல்லாத்தேன் இருந்தான். அதுக்கு பொறவு மேலு ரொம்ப கொதிக்க ஆரம்பிச்சுடுச்சு. வவுத்துல ஒன்னும் நிக்கல. இப்பவும் பாரு…”
“வவுத்துல நிக்கலன்னுட்டு நீ வாசல்ல நின்னா சரியா போவுமா? ஆஸ்பத்திரிக்கு போனியா?…”
“இல்ல மணி, போனதடவ வாங்குன மருந்து இருந்துச்சுன்னு குடுத்தேன். கேட்கல. அதான் இப்ப அவருக்கு ஆள் அனுப்பி விட்டுருக்கேன்…”
“நல்லா நின்ன. கொண்டா நா தூக்கிட்டு போறேன். நீ பின்னால வந்து உக்காரு…” என குழந்தையை வாங்க கை நீட்ட,
“இரு மணி. லேசா வெண்ணி வச்சு மேலுக்கு ஊத்திட்டு வேற உடுப்பு எடுத்து போட்டுட்டு வரேன்…”
ஏற்கனவே அழுது துவண்டு கிடந்த பிள்ளையை வெக்கென பிடுங்கியவள் குருவம்மாவின் தோளில் கிடந்த துண்டை எடுத்து நீரில் நனைத்து அவனின் உடலை துடைத்துவிட்டவள் தன் இடுப்போடு தாவணியுடன் அவனை இணைத்து கட்டி சைக்கிளில் அமர்ந்துவிட்டு,
“நீ சீவி சிங்காரிச்சுட்டு வேற உடுப்பு வேணா மாத்திட்டு வா. நா புள்ளையோட போறேன்…” என்று நகர பார்க்க,
“அட இருத்தா, வீட்ட சாத்திட்டு பக்கத்துல சொல்லிட்டு வரேன்…” என்று சொல்லிவிட்டு குருவம்மா வர அவளையும் ஏற்றுகொண்டு ஹாஸ்பிட்டல் சென்றாள் கண்மணி.
அங்கே நர்ஸிடம் சொல்லிவிட்டு கூட்டமில்லாததால் நேராய் டாக்டர் இருக்கும் அறைக்கு செல்ல அங்கே கார்த்திக் அமர்ந்திருந்தான்.
ஒரு நொடிதான். இருவர் விழிகளும் சந்தித்து சங்கேதமாய் பார்த்து நொடியில் சண்டையிட்டு மீண்டது.

Advertisement