Advertisement

மணியோசை  -3
              அடி வாங்கியவனின் தோள்பட்டை கழன்று விடும் போல வலித்தது. திரும்பி அவளிடம் சண்டை போடும் தெம்பில்லாமல் இரவுறக்கமும் இல்லாமல் சோர்வுடன் மெதுவாய் காரை ஓட்டிக்கொண்டு  சென்றுவிட்டான்.
வீட்டில் என்னவானது என கேட்ட தாயிடமும், தன் அக்காவிடமும் கூட இடித்துக்கொண்டேன் என்று சொல்லி சமாளித்தான்.
‘எப்படி சொல்வானாம் ஒரு சிறு பெண்ணின் கையால் அடிவாங்கினேன் என்று?’ அதை அவமானமாக நினைத்தவன் யாரிடமும் சொல்லாமல் அப்படியே மறைத்துவிட்டான்.
கார்த்திக் குடும்பத்திற்கு ஒரே ஆண் பிள்ளை. அம்மா மகாதேவி, அப்பா மணிகண்டன். வெளிநாட்டில் வேலை. ஒரு அக்கா சந்திரா. அக்காவின் கணவரும் மாமனாரை போல வெளிநாட்டில் வேலை.
அதன் பொருட்டு அக்கா தங்களுடனே. மகாதேவிக்கும் மகனை வெளிநாட்டில் வேலைக்கு அனுப்பும் அளப்பறியா ஆசை இருக்க கார்த்திக்கோ அதற்கு துளியும் விருப்பமில்லாமல் இங்கேயே டாக்டருக்கு படித்து கவர்மென்ட் வேலையும் வாங்கிவிட்டான் மணிகண்டனின் துணையுடன்.
அதில் மகாதேவிக்கு விருப்பமில்லை என்றாலும் மணிகண்டனுக்கு பயந்து வேறு வழியின்றி ஒத்துக்கொண்டார். அப்போதும் வெளிநாட்டில் சென்று டாக்டர் உத்தியோகம் செய்யுமாறு அவ்வப்போது மகனை நச்சரிக்கவும் தவறமாட்டார்.
ஆம். மகாதேவியை பொறுத்தவரை அது உத்தியோகம் மட்டுமே. அவனின் தொழிலை அதில் உள்ள சேவையை வெறும் வேலையாக மட்டுமே பார்த்தார் மகாதேவி. சம்பாதனை என்றால் வெளிநாட்டிற்கு போய் கை நிறைய சம்பாதித்து தரவேண்டும் என்று சொல்லுவார்.
அதை அவர்கள் வீட்டில் கண்டுகொள்ளவும் இல்லை. கார்த்திக் மகாதேவி மணிகண்டனை கொண்டே சரிக்கட்டுவான். அதனால் அவரை சமாளிக்க முடிந்தது.
முதலில் திருச்சியில் இருக்கும் பொழுது கூட ஒரு வகையில் ஏற்றுக்கொண்ட மகாதேவியால் இப்பொழுது பக்கத்து கிராமத்தில் மாற்றலாகி கார்த்திக் சென்று வருவதை அவரால் ஏற்கவே முடியவில்லை.
“டாக்டர்ன்னு சொன்னா மட்டுமா பெருமை. அவன் எங்க வேலை பார்க்கரான்னும் பெருமையா சொல்லிக்க வேண்டாமா? போயும் போயும் சாணி அள்ளுற ஊர்ல சம்பாதிக்க போயிருக்கான்…” என கடுகடுத்தாலும் அவனின் காதுபடவெல்லாம் பேசிவிடமாட்டார். பேசிவிட்டு மகனிடமும், கணவனிடமும் யார் பேச்சு வாங்குவது?
ஆனாலும் மகளிடம் தினமும் புலம்பிவிடுவது அவரின் வழக்கம். என்றாவது கார்த்திக் கேட்டுவிட நேர்ந்தாலும் சிறு முறைப்புடன் நகர்ந்துவிடுவான். மகாதேவிக்கு நேரம் சரியில்லை என்றால் அன்றைக்கு மண்டகப்படிதான்.
கோபம் வராது. வந்துவிட்டால் யாரும் அதை தாங்கமுடியாத அளவுக்கு பேசிவிடுவான். அதற்கெனவே அவனிடம் வாயை கொடுக்கமாட்டனர்.
ஏனோ அவனின் இந்த கோபம் கண்மணியிடம் மட்டும் செல்லுபடி ஆகவில்லை. அவன் வாயை திறப்பதற்குள் நூறு பேச்சு பேசி கேட்கும் அவனையே மூச்சுவாங்க வைத்துவிடும் வித்தை எப்படி என்று அவளுக்கே வெளிச்சம்.
அவர்களின் சண்டை அத்தோடு நிற்கவில்லை. அதன் பின் அவள் எதிர்ப்படும் நேரமெல்லாம் வேண்டுமென்றே அவளை வம்பிழுப்பதும் வாங்கிக்கட்டுவதுமாகவே இருந்தான் கார்த்திக். அது ஒரு சுவாரஸியமாகவே  தோன்றியது அவனுக்கு.
படபட பட்டாசாய் மனதில் பட்டதை ஒளிவு மறைவின்றி அவனிடம் சரிக்கு சரியாக நிற்கும் அவளை அத்தனை பிடித்தது அவனுக்கு.
ஆம், பிடித்தம் தான். அதை வெறும் பிடித்தமாக மட்டுமே எண்ணினான். அதற்கு மேல் யோசிக்கவில்லை. யோசிக்கும் சூழ்நிலையும் ஏற்படவில்லை.
அவனை பொறுத்தவரை கண்மணி ஒரு வாயாடி, வெகுளி பெண், சண்டைக்கோழி என்று  தான் நினைத்தான்.
‘நீ வேணா சண்டைக்கு வாயேன்டா’ என்று தோள் தட்டி கூப்பிடுவது போலவே இருக்கும் அவள் இவனை பார்க்கும் பார்வை. அந்த நேரம் அவளை இன்னமும் பிடிக்கும் அவனுக்கு.
ஏனோ கண்மணியை பார்த்துவிட்டாலே உள்ளுக்குள் ஒரு உற்சாக பிரவாகம். அவனின் ஒவ்வொரு அணுவிலும் புத்துணர்ச்சி பிறக்கும். வேறு எவரிடமும் தோன்றாத ஒரு உணர்வு.
ஆனால் கண்மணிக்கோ இவனை பார்த்தாலே பற்றிக்கொண்டு தான் வரும். அதிலும் அவனின் கேலிப்பார்வை வேறு. என்னை பார்த்தா இவனுக்கு கிண்டலா தெரியுதாமா என பொருமலுடன் அவனை முறைப்பாள்.
அன்று அப்படி அவன் தோப்பை கடந்து செல்லும் பொழுது எதிரே இவள் வருவதை பார்த்து இறங்கி வந்தவன்,
“இப்ப வலி எல்லாம் போயிருச்சா? உடம்புக்கு பரவாயில்லையா?…” என அக்கறையாக வந்து கேட்க,
“நீ ஆஸ்பத்திரில வேலை பார்க்கன்னு பார்த்தா பார்க்கற எடத்தை எல்லாம் ஆஸ்ப்பதிரியாக்கிட்டு இருக்க? ரோட்ல வைத்தியம்? போயா…” என அலட்சியமாய் சொல்ல,
“உன்னோட ஹெல்த் பத்தின அக்கறைல தான கேட்க வந்தேன். சரியான மிளகா…”
“தெரியுதுல. மிளகா எரியும். போய்ரு…”
அன்று தனியாக வேறு வந்திருந்தாள். ஏற்கனவே வீட்டில் பயங்கர சண்டை. இவனோடு பேசுவதை யாராவது பார்த்து சொல்லிவிட்டால் என்ன செய்ய என அங்கிருந்து கிளம்ப முற்பட்டாள்.
ஏற்கனவே ஊரில் உள்ளவர்களிடம் வம்பிழுப்பதாக அரசால் புரசலாக கேள்விப்பட்ட அண்ணன் கிருஷ்ணன் அவளிடம் கடுமையாக எச்சரித்திருந்தான்.
“வெளில எங்கையாச்சும் உரண்டைய இழுக்கற மாதிரி தெரிஞ்சது பல்லு பேந்துடும். பொட்டப்புள்ள அடக்க ஒடுக்கமா இரு…” என சீறிவிட்டு செல்ல அவன் சென்றுவிட்டதை உறுதிபடுத்திவிட்டு,
“அடக்கமாம், ஒடுக்கமாம். ஆறடி குழியில இறக்கினாத்தான் உண்டு. அங்க வந்து பாத்தா தெரியும் எப்படி அடங்கியும், ஒடுங்கியும் இருக்கேன்னு. இவன் சொன்னதும்  கைய, கால அசைக்காமலா இருப்பாகலா?…” என அவனின் போட்டோவை பார்த்து நக்கலாக அவள் பேசி துடுக்காய் அவள் சங்கரியிடம் வாங்கிய அடிகள் எண்ணில் அடங்காதது.
“அச்சாணியமா பேசாத பேசாதன்னு எத்தன தடவ சொல்ல? இவ பேசின பேச்சுக்கு நீ சாத்தினதுக்கு பதிலா கம்பிய காச்சி நாக்குல நாலு இழுப்பு இழுத்துருக்கனும் இவ வாய் கொழுப்புக்கு…” என பேச்சி வேறு அவர் பங்குக்கு பேச நாட்டரசனிடம் சொல்லிவிடுவார்களோ என்று நினைத்து மூன்று நாட்கள் வரை அடக்கி வாசித்தாள் கண்மணி.
ஆனால் காற்றை விட வேகமான கண்மணியை கட்டுக்குள் நிறுத்த முடியுமா? அவளின் அலப்பறைகளை பேச்சி கவலையுடன் நாட்டரசனிடம் ஒப்புவிக்க அவரோ,
“அதெல்லாம் ரத்தத்துல ஊறினது பேச்சி. நம்ம புள்ள எப்படி இருக்கும்? எத பார்த்தது வளர்ந்துச்சோ அப்படித்தானே இருப்பா. நீ யாருக்கும் கட்டுபடாம, பயப்படாம, துணிச்சலா இருக்கறத போல அவளும் வாரா. நாம சொன்னா மட்டும் கேட்டு கம்முன்னு இருந்திடவா போறா?…”
“நல்ல மனுஷன்யா நீரு? அவட்ட சொல்லி கண்டிக்கனும்னா எனக்கே புத்தி சொல்லுதீகளோ? போற எடத்துல துப்பிடமாட்டாக…”
“அத அப்ப பார்த்துக்கலாம்…”
“ஏற்கனவே ஊர்க்கார சிறுக்கிங்க பொண்ண வளக்க தெரியல. ஊர் நாயம் பேசறேன்னு சாடுதாளுக. இவள கட்டிக்குடுத்து அங்கயும் நாக்குமேல பல்ல போட்டு ஒத்த வார்த்த சொன்னாலும் மனசு ஆறும்மாய்யா?…”
கலங்கிவிட்ட கண்களை கூட சிந்திவிடாதவாறு சமாளித்தவரை பார்த்த நாட்டரசன் சிரிப்புடன்,
“ரொம்ப அழுத்தமா இருக்காத பேச்சி. என் முன்னால கூட அழக்கூடாதுன்னு எம்புட்டு வைராக்கியம் உனக்கு? இது நல்லதுக்கில்ல ஆத்தா…” என,
“ஆமா நான் அழுதத நீரு பாத்தீரு. அட போமய்யா…” என்று கிளம்பிவிட்டார்.
ஆனாலும் எம்பொஞ்சாதிக்கு எம்புட்டு கர்வம்?’ என நினைத்தார் நாட்டரசன்.
வீட்டில் இப்படி நடந்துகொண்டிருக்க ஏற்கனவே கடுப்பில் இருந்தவள் இப்பொழுது வேண்டுமென்றே வந்து கார்த்திக் பேச்சில் நிற்க அவளுக்கு எரிச்சல் மண்டியது. அவனிடம் பேசாமல் சைக்கிளை ஓட்ட,
“கேட்டா பதில் சொல்ல மாட்டியா கிங்கிணி மங்கினி?…” என்றதும் அத்தனை கட்டுபாட்டையும் மறந்து இறங்கியவள் சைக்கிளை நிறுத்திவிட்டு,
“டேய் என்னடா வேணும் உனக்கு? மவனே ஒதுங்கி போவோம். பொழச்சு போட்டும்னு பார்த்தா என்னை சீண்டிட்டே இருக்க இன்னைக்கு உன் தலை முடியை அக்கக்கா பிச்சு போடலை என் பேரு கண்மணி இல்லடா…” என்று பாவாடையும் தாவணியையும் தூக்கி சொருகிக்கொண்டு அவனை நெருங்க உண்மையில் பயந்துவிட்டான் கார்த்திக்.
“ஹேய் எதுக்கு கோவப்படற? நீ எப்படி இருக்கன்னு தான கேட்டேன்?…”
“நா எப்படி இருந்தா உனக்கென்னடா? அதை தெரிஞ்சு என்ன பண்ண போற? என்னை கட்டிக்கிட்டு வீட்ல வச்சு நல்லா பார்த்துக்க போறவன் மாதிரி கேட்கற? சொல்லுடா?…” என எகிற,
“ஏய் என்ன இதெல்லாம் பேசற? நான் சும்மா தான்?…”
“என்ன சும்மா தான்? உனக்கு பொழுதுபோக நான் தான் கிடைச்சேனா? என்னமோ கட்டுன பொண்டாட்டிய பார்க்கற மாதிரி பார்க்கற எடமெல்லாம் பல்லை காட்டற. கண்ணடிக்கிற. புருவத்தை தூக்கற?…”
“ஹேய் கிங்கிணிமங்கினி நான் சொல்ல வரதை கேளு…” அவனின் நாக்கில் சனி புகுந்துகொள்ள இரண்டு கையாலும் அவனின் தலைமுடியை பிடித்துவிட்டாள் கண்மணி. சுள்ளென மூளைக்கு பாய்ந்த வலியுடன்,
“ஏய் என்ன பன்ற?…” என்று அவளின் கையை விலக்க பார்த்தவன் சுற்றிலும் பார்வையை விட்டான். நல்லவேளை காலை நேரம் யாருமில்லை அங்கே.
“எனக்கு மணின்னு சொன்னாலே புடிக்காது. இதுல என்னமோ பெத்தவனாட்டம் பேர் வைக்கிற? நானும் போனா போகுதுன்னு பார்த்தா ரொம்பத்தான் சீண்டற. இன்னைக்குஇருக்குடி உனக்கு…” என்றவள் அத்தனை நெருக்கத்தில் தான் பேச பேச தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தவனை கண்டு என்ன நினைத்தாளோ சட்டென அவனின் தலையை விட்டுவிட்டு,
“இங்காரு, நா வேற மாதிரி. எங்கிட்ட வச்சுக்கிட்ட உனக்கு ஆப்பு நிச்சயம்லே….” என சொல்லிவிட்டு அவள் சைக்கிளை எடுக்க செல்ல கார்த்திக் ஏதோ மாயவலையிலிருந்து விடுபட்டவன் போல திகைத்து பார்த்தபடி தன் தலை முடியை கோதி சரி செய்தான்.
கண்மணி முணங்களுடன் சைக்கிளில் அமர தூரத்தில் அண்ணன் கிருஷ்ணன் வருவது தெரிந்து உடலெல்லாம் உதற ஆரம்பித்தது.
“போச்சு இன்னைக்கு மாட்டினோம்…” என பயந்தவள் கார்த்திக்கை பார்க்க அவனோ இவளை பார்த்தபடி இன்னும் அப்படியே நிற்க,
“அடப்பாவிப்பயலே, உனக்கு கெரகம் புடிச்சு ஆட்டபோகுதுடா. போய் கார்ல ஏறினா உசுரு தப்பும். போறானா பாரேன்…” என கண் ஜாடையில் அவனை காரில் ஏற சொல்ல அவனோ,
“என்னை ஜாடை காமிக்காதன்னு சொல்லிட்டு இவ மட்டும் ஜாடை காமிக்கிறாளே?…” என பார்க்க,
“சுத்தம். சாவுடா…” என்ற்று சைக்கிளை மிதித்து அங்கிருந்து நகர்வதற்குள் கிருஷ்ணன் அவர்களை சமீபித்துவிட்டான். வரும் பொழுதே காரையும் பார்த்துவிட்டவன்,
“மணி இங்க என்ன பன்ற?…” என அவளிடம் கேட்டு கார்த்திக்கை பார்க்க அவனும் பார்த்தான்.
“யார் நீ?…” என அவனையும் கேட்க குடும்பத்துக்கே மரியாதையை விலைக்கு வாங்கி குடுக்கனும் போல என நினைத்துக்கொண்டே,
“இந்த பொண்ணு கொஞ்ச நாள் முன்னாடி ஹாஸ்பிட்டலுக்கு வந்திருந்தாங்க. அடுத்து செக்கப்க்கு வரலை. இப்ப வழியில பார்த்ததும் இப்ப எப்படி இருக்காங்கன்னு கேட்கலாம்னு…” என்றவனை பேசவும் விடாமல்,
“அதுக்குன்னு ஒரு வயசு பொண்ணுக்கிட்ட வழிமறிச்சு பேசறது வேற மாதிரில இருக்குது. வரசொல்லி வீட்ல கூட்டியாறலைனா நோவு சரியாகிடுச்சுனு தான அர்த்தமாவுது. இது கூட புரியாம என்னத்த படிச்சு வந்தீரு?…” என கேட்க கண்மணியோ,
‘தேவையா உனக்கு. உன்னை விளக்கம் சொல்ல சொன்னாகளா? கம்முன்னு இருந்தா நானே எதாச்சும் சொல்லியிருப்பேன். வாங்கிக்கட்டு’ என்னும் பார்வை பார்க்க,
“ஏய் யார் குறுக்க வந்து பேசுனாலும் பேசிருவியோ? போ மொதல்ல வீட்டுக்கு…” என எரிந்து விழ,
“இல்லண்ணே அப்பாருக்கு சோறு கொண்டாந்தேன். அம்மா குடுத்துச்சு…”
“வந்த வேலையை மட்டும் பாக்கனும். போ முதல்ல…” என்றவன் திரும்பி கார்த்திக்கை பார்க்க அவனும் காரில் ஏறி இருந்தான். கண்மணி சென்றதும் அவனின் காரை நிறுத்திய கிருஷ்ணா,
“ஊருக்குள்ள உன் மேல ஏதோ நல்ல அபிப்ராயம் இருக்குதுன்னு நான் சும்மா விடறேன். உனக்கு கேட்கனும்னா வீட்டு பெரியவங்கட்ட கேட்கனும். அதை விட்டுட்டு என் தங்கச்சிட்ட மட்டுமில்ல, எங்க ஊரு புள்ளைகட்ட கூட பேசி சிரிக்கிறத பார்த்தேன்…”  கை நீட்டின் கிருஷ்ணன் எச்சரிக்க அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு கார்த்திக் விருட்டென காரை கிளப்பி சென்றான். அவனுக்குள் அத்தனை கோபம் கனன்றது.
‘யார் இவன்? யார்ட்ட பேசனும்னு மரியாதை தெரியாத காட்டான் எனக்கு வார்னிங் குடுக்கறான்? இவன் தங்கச்சி என்ன பேரழகியா? நான் என்னமோ தள்ளிட்டு போக வந்த மாதிரி காயறான். நான் பாக்காத பொண்ணுங்களா? பெருசா பேச வந்துட்டான்’
கார்த்திக்கால் தாளமுடியவில்லை. தன்னுடைய தகுதிக்கு கிருஷ்ணன் போன்றவனிடம் எல்லாம் பேச்சு வாங்கவேண்டுமா என்று இருந்தது.
கண்மணியிடம் சரிக்கு சரி நிற்கும் பொழுது தோன்றாத வித்தியாசம் கிருஷ்ணன் தன்னிடம் பேசும் பொழுது அவனின் தன்மானம் சீறிக்கொண்டு வந்தது.
‘ஏதோ அவ அண்ணன்றதால இறங்கி போய் விளக்கம் குடுத்தா ரொம்ப பன்றான். என் ரேஞ் என்னன்னு தெரியாம பேசிட்டான். கிராமத்தான் இவனுக்கு அவ்வளவு திமிரா? இனி கண்மணியை பார்த்தாலும் கண்டுகொள்ள கூடாது’ என்ற முடிவெடுத்திருக்க கண்மணி வீட்டிலோ பிரச்சனை வேறு விதமாய் பூதாகாரம் எடுத்திருந்தது.

Advertisement