Advertisement

மணியோசை – 2
         இரண்டு நாட்கள் பல்லை கடித்துக்கொண்டு கார்த்திக்கின் அடாவடிகளை பொறுமையாய் தாங்கிக்கொண்டிருந்தவள் அவன் தனியாய் சிக்கட்டுமென நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஆனால் அவன் தனியாய் மாட்டி என்ன செய்ய? அவள் தனியாய் இல்லையே. எந்நேரமும் அவளின் இரண்டு பக்கமும் யாராவது இருந்துகொண்டிருந்தனர். அதில் இன்னும் டென்ஷன் ஆனால் கண்மணி.
“ஏன்மா நர்சு, எம்புட்டு நேரமா வீட்டுக்கு போவனும்னு சொல்லுதேன். செவுடு கணக்கா நிக்கிற?…” பேச்சி எரிச்சலுடன் ஆரம்பிக்க அந்த நர்சோ,
‘போயும் போயும் இதுங்கக்கிட்ட வந்து நிக்கனும்னு என் தலைஎழுத்து.’ என்ற முணுமுணுப்புடன்,
“இங்க பாருங்கம்மா, இந்த வரம்பு மீறற பேச்செல்லாம் என்கிட்டே வேண்டாம். நான் டாக்டர்ட்ட சொல்லிடுவேன்…”
“வாடி என் சக்களத்தி, சொல்லுவாளாம்ல. யார்க்கிட்ட?…” சேலையை மீண்டும் உதறி இடுப்பில் சொருக,
“இருங்கம்மா, இப்ப எதுக்கு இந்த கோவம்? டாக்டர் தான் சாயங்காலம் போவலாம்னு சொல்லியிருக்காங்கல. நீங்க அவசரப்படாதீங்க…”
உடனடி சமாதனக்கொடியை பறக்கவிட்டவளுக்கு இப்படி ஆகிவிட்டோமே என ஆற்றாமையாக இருந்தது.
முழுதாக ஒருநாள் ஹாஸ்பிட்டலில் இருந்த கண்மணிக்கு இரண்டாம் நாள் இருக்கவே முடியவில்லை.
உண்மையில் அத்தனை அழிச்சாட்டியங்களை செய்துகொண்டிருக்க அவளை அங்கு வைத்து கண்டிக்க முடியாமலும் சமாளிக்க முடியாமலும் தான் பேச்சி வீட்டில் வைத்து அவளை பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தார்.
“நீ வீட்டுக்கு வா, உன் காலை உடச்சு உடப்புல போடறேன். பொட்ட கழுத வீடு தங்காம ரங்கரங்கமா சுத்தறது. கண்ட இடத்துலையும் பார்க்கறதா வாங்கி வாய்ல போடறது. இப்ப நோவுன்னு வந்து என் உசுரையும் பழியையும் வாங்கறது. இங்க இந்த நர்சுட்ட எல்லாம் பேச்சு வாங்கவேண்டியதா இருக்கு. நேரக்கெரகம்…” பேச்சி கண்மணியை யாருக்கும் கேட்காமல் வசைபாட ட்ரிப்சை நிறுத்த வந்த நர்ஸ் இதை கேட்டுவிட்டு,
‘தோடா இந்தம்மா ஊருக்கே உலைவச்சுடும். இது எங்கட்ட பேச்சு கேட்குதாமா?’ என பார்க்க அவளை பார்த்த பேச்சி முறைக்க நொடியில் சுதாரித்த பெண்,  
“இந்தாங்கம்மா இதுல இருக்கற மாத்திரையை காலயிலையும் ராத்திரிலையும் சாப்பாட்டு அப்பறமா குடுங்க. காரம் கொஞ்சம் கம்மியாவே குடுங்க…” என்றுவிட்டு பேச்சி பார்த்ததும்,
“டாக்டர் சொல்ல சொன்னாரு. அவர் சொன்னத தான் நானும் சொன்னேன்…” என படபடப்புடன் சொல்லியவள்,
“நீங்க இப்பவே கிளம்பலாம்…”
“என்ன? சாய்ங்காலம் ஆவுமின்ன. நினச்சு நினச்சு பேசிட்டு இருக்க?…” அதற்கும் கோவப்பட,
“நீங்க தான வீட்டுக்கு போகனும்னு சொன்னீங்க. அதான் போய் கேட்டேன். இப்பவே கிளம்பலாம்னு டாக்டர் சொல்லிட்டார். மூணு நாள் கழிச்சு திரும்ப ஒருக்கா கூட்டிட்டு வாங்க…”
“திரும்பவும் இங்கயா?…”
“இல்ல சும்மா ஒரு செக்கப்க்கு தான்…”
“ஹ்ம்ம் பொறவு பாக்கலாம்…” என்ற பேச்சி சங்கரியை பார்த்து,
“யெக்கா என்ன மசமசன்னு நிக்கித? வீட்டுக்கு போவோம். எடுத்து வை…” என சொல்லிவிட்டு நாட்டரசனுக்கு போனில் அழைத்தார்.
“இந்தா, வீட்டுக்கு போவ சொல்லிட்டாரு டாக்டரு. உம் வண்டியை எடுத்தாரும்…” என சொல்லி வைத்துவிட்டு கண்மணியை பார்க்க திராட்சை பழத்தை உண்டுகொண்டிருந்தாள்.
“யே மணி, கொஞ்ச நேரம் வாயை அரைக்காம இரேன். பார்க்கறவக கண்ண கிண்ண போடப்போறாக. ஊரு கண்ணு சரியில்லடி…” என்று அவளின் தலையில் கொட்டி அவிழ்ந்து கிடந்த முடியை தூக்கி இறுக்கமாய் பின்னளிட்டார்.
“ம்மா, மெதுவா. வலிக்குதுல…” கண்மணி சிணுங்க,
“குமரி இந்த வலியை பொறுக்கமாட்டியாக்கும்?…” அதற்கும் ஒரு கொட்டு விழுந்தது. பதில் பேசாமல் எழுந்து நின்றவள் பாவாடை தாவணியை சரிசெய்து கொண்டாள்.
சிறிது நேரத்தில் நாட்டரசன் ஒரு ஆட்டோவை அமர்த்திக்கொண்டு தன்னுடைய டிவிஎஸ் பிப்டியில் வந்துவிட்டார். ஆட்டோவில் பொருட்களுடன் ஏறிக்கொண்ட சங்கரியும் கண்மணியும் பேச்சியை பார்க்க,
“நீங்க வீட்டுக்கு போங்க. நான் வட்டி வசூல் பண்ணிட்டு வரேன். நேத்தே போயிருக்கனும்…” என சொல்லிவிட்டு நாட்டரசனுடன் வண்டியில் அமர்ந்துகொண்டார்.
அவர்கள் கிளம்பியதும் ஆட்டோவும் கிளம்பிவிட அவர்களின் பின்னால் கார்த்திக் தன் காரில் கிளம்பிவிட்டான். கார்த்திக் தங்கியிருப்பது பக்கத்து ஊரில் உள்ள தன் வீடு என்பதால் தினமும் வந்து வந்து செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தான்.
ஆட்டோ முன்னால் சென்றுகொண்டிருக்க பின்னால் வந்தவன் ஹாரன் ஒலியை வேகமாக ஒலிக்க விட்டான். முதலில் கண்டுகொள்ளாத ஆட்டோ ட்ரைவர் திரும்பி பார்த்துவிட்டு ஓரமாய் ஒதுங்கி ஓட்ட அதை கண்ட கண்மணிக்கு சுறுசுறுவென பொங்கியது.
பக்கவாட்டில் அவன் கடந்து செல்லும் பொழுது பார்த்த ஒரு நொடி கேலி பார்வையில் உஷ்ணப்பட்டவள்,
“ஏண்ணே உன்ன யாரு அந்தாளுக்கு வழி விட  சொன்னது? அவன் கார் பவிச காட்ட நாம தான் கிடச்சோமாக்கும்?…” என அவனிடம் பொரிய,
“ஏத்தா அவரு டாக்டரு, ஆயிரம் சோலி கெடக்கும். இல்லைனா இந்நேரம் கிளம்பிருக்க மாட்டாருல. யாருக்கு என்ன அவசரமோ. மனுஷன் வேகமா போய்ட்டுருக்காரு…” ஆட்டோ ட்ரைவர் சொல்ல,
“இந்தா மணி, கம்முன்னு வரமாட்ட. உங்கம்மாளுக்கு தெரிஞ்சா அம்புட்டுத்தேன். வெளி எடத்துல என்ன பேச்சு இது?…” சங்கரி கண்டிக்க முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு உட்கார்ந்துகொண்டாள் கண்மணி. அதன் பின் வாயே திறக்கவில்லை.
“இவனுக்கு என் வண்டியை முந்திட்டு போறதுன்னா அல்வா திங்கற மாதிரி…” என்னவோ அவளின் சொந்த ஆட்டோவை அவன் முந்திக்கொண்டு செல்வதை போல தாளித்தாள்.
வீடு வந்து சேர்ந்தும் அவளின் எரிச்சல் மறையவில்லை. ஆட்டோவில் இருந்து இறங்கியதும் அந்த பொருட்களை எதையும் எடுத்து வைக்காமல் நேராய் தன் அறைக்குள் செல்ல,
“தாவாங்கட்டை பேர்ந்துடும் பார்த்துக்க. என்ன விசுக்குன்னு வெட்டிட்டு போற? பொட்டக்கழுதைக்கு கோவம் பொத்துட்டு வருது….” என சங்கரி வந்ததும் அவளை திட்ட மெல்ல திரும்பி நின்றவள் அவரை பார்த்து,
“தூக்கம் வந்தா தூங்க கூடாதா?…” என துடுக்காய் பேச,
“எடு வெளக்கமாத்த, தூக்கமாமில்ல தூக்கம். போ போயி கெணத்தடியில உக்காரு. வாரேன்…” என்றவர் அனைத்தையும் எடுத்து வந்து அடுக்களையில் போட்டுவிட்டு நல்லெண்ணையை வெதுவெதுப்பாய் சூடேற்றி எடுத்து வந்தார். இன்னொரு கையில் சீகைக்காய்.
அதை பார்த்ததுமே கண்மணியின் வயிற்றில் புளியை கரைத்தது. இன்னைக்கு செத்தோம் என்று பீதியுடன் அவரை பார்க்க,
“திமிரு புடுச்ச கழுத உங்கம்மாட்ட போனவாரம் நா உனக்கு எண்ண வச்சு குளிப்பாட்டிட்டேன்னு போய் சொல்லிருக்க. நா கேட்டதுக்கு அவ வச்சி விட்டுட்டான்னு சொல்லிட்ட. புளுகுமூட்ட. அன்னைக்கே வச்சிருந்தா இப்படி சூட்டுல நோவு வச்சிருக்குமா?…”
“ஐயோ பெரிம்மா, இது அதுக்கு வந்த வலி இல்ல. சாப்பிட்டது செரிக்கல. அதான்…”
“ஒடம்பு குளுக்குளுன்னு தலை சூடில்லாம இருந்தா சீரணம் ஆயிருக்கும்ல. ஒன்னத்தையும் கேட்கறது கெடையாது. போ போய் பாவாடையை ஏத்தி கட்டிட்டு வா…” என்றவர் கிணற்றில் இருந்து தண்ணீரை இறைக்க ஆரம்பித்தார்.
இனி பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை சலிப்புடன் முனகியபடி அவர் சொல்லியவற்றை செய்தாள்.
“பெரிம்மா, மெதுவா எண்ணெய் வைங்க…” என்கிற கெஞ்சுதலுக்கு பின்னால் அவளின் அலறல்கள் அவ்விடத்தையே நிறைத்தது.
இதற்கு அம்மாவிடமே வைத்திருந்திருக்கலாம் என்கிற யோசனை நேரம்கெட்ட நேரத்தில் ஞானோதயமாய் பிறக்க அழுதுகொண்டே அமர்ந்திருந்தாள்.
அரைமணிநேரத்திற்கும் மேல் ஆனது கண்மணி குளித்து முடித்து அறைக்குள் வர. மென்று துப்பிய கரும்பு சக்கை போல வந்து படுக்கையில் விழுந்தவளை மீண்டும் அழைத்த சங்கரி சாம்பிராணி கரண்டியுடன் வந்து அமர்ந்தார்.
“ரெண்டு நாளா அந்த ஆஸ்பத்திரி நாத்தத்தோட இப்ப என்னனுதான் படுக்க போன?…”
அவரின் ஒவ்வொரு திட்டிற்கும் காது கொடுத்துக்கொண்டிருந்தவளின் கண்களுக்குள் அப்படி ஒரு தூக்கம். சாம்பிராணி தூபம் போட்டு முடித்து பார்க்க கண்மணி அப்படியே தரையில் படுத்துவிட,
“கொஞ்சமாச்சும் புத்தி இருக்குதா? கண்ட இடத்துல படுத்து தூங்கறது…” என்றபடி ஒரு தலையணையை எடுத்து வந்து அவ தலைக்கு கொடுத்துவிட்டு திரைசீலையை நன்றாக இழுத்துவிட்டு அடுப்படிக்குள் சென்றார்.
ஹாஸ்பிட்டலில் சரியான உறக்கம் இல்லாத காரணத்தினால் கண்மணிக்கு அடித்து போட்டது போல தூக்கம் சுழற்றியது.
காரில் வந்துகொண்டிருந்த கார்த்திக்கின் முகத்தில் அப்படி ஒரு புன்னகை. சரியாக அவன் கார் அந்த இடத்திற்கு வந்ததும் தானே நிற்க மெதுவாய் கீழே இறங்கினான். சுற்றிலும் தோப்பும் துறவுமாய் இருக்க சிலுசிலுவென காற்றடிக்க அந்த இடமே ரம்யமாய் இருந்தது.
பத்து நாட்களுக்கு முன் இங்கே வேலை மாற்றல் கிடைத்ததும் முதலில் மனம் சுணங்கினாலும் தன் ஊருக்கு பக்கத்தில். தினமும் வேலைக்கு சென்று வீட்டுக்கு வந்துவிடலாம், சாப்பாடும் வீட்டில் அம்மாவின் கையில் என்கிற ஒரே காரணத்திற்காய் மட்டுமே இங்கே வர ஆரம்பித்தான். வந்த அன்றே கண்மணியை சந்தித்தும் விட்டான்.
அன்று இரவு நேர வேலை முடிந்து காலை வீட்டிற்கு கிளம்பியவன் தனக்கு முன்னால் ரோட்டில் நடுநாயகமாக சென்றுகொண்டிருந்த சைக்கிளுக்கு ஹாரன் அடித்தான்.
வழிவிடுவதை போல தெரியவில்லை. திமிர் இந்த பொண்ணுக்கு என பார்த்தான்.
முதலில் கூட சீரான வேகத்தில் சென்றுகொண்டிருந்த சைக்கிள் இப்பொழுது ஆமை வேகத்தில் நகர பயங்கர கோவத்துடன் காரை விட்டு கீழே இறங்கி சைக்கிளை வழி மறிக்க,
“யோவ், எவ்வளவு தைரியம் இருந்தா எங்க மணியக்கா சைக்கிளை மடக்குவ?…” சைக்கிளின் முன்னால் ஹேண்டில் பாரில் அமர்ந்திருந்த சிறுவன் கேட்க,
“ஏம்மா எவ்வளவு நேரமா ஹாரன் அடிக்கிறேன். காதுல விழல உனக்கு? அதும் போய்க்கிட்டிருந்த வேகத்த குறைச்சிட்டு மெதுவா போற. வழி விட்டு ஓரமா போகமாட்டியோ?…” என படபடவென பேச சைக்கிளில் இருந்த கண்மணியானவள் யோசனை செய்வதை போல வானத்தை பார்க்க,
“ஏய் இந்தாம்மா, காது கேட்காதா உனக்கு?…” இப்பொழுது சந்தேகமே வந்துவிட்டது கார்த்திக்கிற்கு உண்மையில் அவளுக்கு காது கேட்காதோ என்று.
“இல்ல என்னைய அம்மான்னு கூப்பிட்டியா அதான் உன்ன எப்ப பெத்தேன்னு எனக்கு ஞாபகமே இல்ல. அதான் யோசிக்கறேன்?…” என்றதும் தான் அவள் தன்னை கேலி செய்கிறாள் என்பது புரிய,
“ஏய், என்ன நக்கலா? ஆளு அரை உழக்கு இருந்துட்டு பேச்சை பாரு. சைக்கிளை ரோட்ல ஓரமா ஒட்டாம நடுமத்தியில ஓட்டினா நாங்க எல்லாம் எப்படி போறதாம்?…”
“ஏன் கார் வச்சிருக்கறவனுங்க தான் நடுவுல ஓட்டனுமா? சைக்கிள் நடு ரோட்டுல ஓட்டினா ரோடு ஏத்துக்காதா? இல்ல சைக்கிள் தான் நகராதா?. என்னை என்னமோ அளந்து பார்த்தமாதிரி அரை உழக்குன்னு சொல்ற?…” என சைக்கிளை விட்டு இறங்கி,
“எங்க அளந்து சொல்லு, அரை உழக்கு தான் இருப்பேனான்னு? சொல்லுய்யா…” என முன்னால் நகர கார்த்திக் பின்னால் நகரவேண்டியதானது.
பாவாடை தாவணியில் பார்த்தவுடன் பிடிக்கும் படியான, ரசிக்கும் விதமான ஒரு பெண்ணிற்கு இப்படி வாயையும், வம்பையும் குடுத்து தன்னிடம் சண்டையையும் இழுத்துவிட்ட கடவுளை அந்த நேரம் சபித்தான் கார்த்திக்.
“கொஞ்சம் கூட மரியாதை இல்லாம முன்னபின்ன பார்க்காத ஒருத்தர் முன்னாடி இப்படித்தான் நடந்துப்பியாம்மா…”
அவன் சொல்லியதும் அவனின் முன்னும் பின்னும் போய் பார்த்தவள் முகத்தை சுழித்துக்கொண்டு,
“முன்னாடியும் பின்னாடியும் பார்த்துட்டேன். ஆனா மரியாதை எல்லாம் குடுக்க முடியாது. உன் கார் உனக்கு பவிசுனா என் சைக்கிள் எனக்கு பவிசு. நீ எனக்கு படம் காட்ட பார்த்த. என்கிட்டே செல்லுமா உன் படம்? நான் காட்டினேன் பாரு. இறங்கி வந்து நின்னியா?…”
“அடிப்பாவி, அப்ப வேணும்னு தான் சைக்கிள் வேகத்தை குறைச்சியா?…”
“ஆமா நீ காருக்குள்ள பகுமானமா உக்காந்து திரும்ப திரும்ப மணியடிப்ப. உடனே சரிங்க எஜமான்னு நான் வழி விடனுமாக்கும்? இது என்ன உன் அப்பன் வீட்டு ரோடா?…”
“பின்ன உன் அப்பனோட ரோடா?…” கார்த்திக்கும் விடாமல் கேட்க,
“ஆமா, என் அப்பாரு ரோடுதான் இல்லைன்னுவியா நீ. சொல்லித்தான் பாரேன்…” என்று சரிக்குசரியாய் நிற்க,
“என்ன, என்ன சொல்ற?…”
“ஆமா, இது எங்க தோப்பு. எங்கப்பா தோப்பு. எங்க தோப்புக்கு முன்னால இருக்கறதனால இது என் அப்பாவோட ரோடுதான். புரியுதா?…” என விளக்கம் சொல்ல அவள் பேசும் பொழுது நர்த்தனமாடிய விழிகளை அப்போது தான் கவனித்தவன் மனமோ,
‘நைஸ் ஐஸ்’ என்றது அவனிடம் ஜொள்ளலுடன். தலையை உலுக்கியவன்,
“நல்ல விளக்கம். அதுக்குன்னு வழி விடாம போறது தப்பில்லையா?…” என கேட்க,
“இப்ப நான் தோப்புக்குள்ள போக போறேன். பேசாம கிளம்பிட்டேனா நேரத்துக்கு வீடு போய் சேருவ…”
“இல்லைனா? இல்லைனா என்ன பண்ணிடுவியாம்?…” முழுக்கை சட்டையை பட்டனை விடுத்து மேலே ஏற்றிக்கொண்டு அவன் கேட்க அதை பார்த்து கிண்டலாய் சிரித்தவள்,
“ஒன்னும் இல்லை. இவன்கிட்ட அப்பாவுக்கு தூக்குச்சட்டியை குடுத்துட்டு திரும்பவும் சைக்கிள் எடுப்பேன். இதுக்கடுத்த தோப்பு என் மாமாவோடது. அடுத்து முத்தண்ணே தோப்பு. அதுக்கடுத்து…” என்று அவனை ஓரக்கண்ணில் பார்க்க அவனின் முகத்தில் தோன்றிய பாவத்தில் சிரித்தவள்,
“இப்படியே ஒத்த ஒத்த தோப்பும் என் சொந்தக்காரனுங்க தப்புதான். தோப்புக்கு முன்னாடி ரோடு. அதுவும் என்னோடது மாதிரிதான்…” என்றவள் புருவம் உயர்த்தி சீண்டலாய் பார்க்க அவளை முறைத்தவன் காரை நோக்கி நடக்க ஆரம்பித்து பின் திரும்பி,
“ஏய் ரவுடி, உன்னை இன்னொரு நாள் வச்சிக்கறேன்…” என்று கிண்டலாய் சொல்லி திரும்ப அதுவரை விளையாட்டாய் வார்த்தையாடிக்கொண்டிருந்த கண்மணிக்கு கோபம் வந்துவிட கீழே கிடந்த இளநீர் குடுவையை தூக்கி அவனின் மேல் எறிய தோள் பட்டையில் பலமாய் பட்டு வலியோடு திரும்பி பார்த்தான் கார்த்திக்.
“டேய், ஊருக்கு புதுசுன்னு உன்னை உயிரோட விடறேன். இல்ல சங்க அறுத்துருப்பேன். ராஸ்கல். முழுசா ஊர் போய் சேருடா. ரவுடியாம் ரவுடி…” என திட்டிக்கொண்டே சைக்கிளை தாழ்வான இடத்தில் இறக்கி தோப்புக்குள் நடக்க ஆரம்பித்துவிட்டாள் கண்மணி.

Advertisement