Advertisement

மணியோசை – 18
                கண்மணிக்கு தான் படுத்ததும் கண் மூடியதும் தான் தெரியும். நொடியில் உறங்கியும் போனாள் ஆழ்ந்த உறக்கத்திற்கு.
அரைமணிநேரம் மட்டுமே கடந்திருக்கும். மகாதேவியின் காதருகே எதுவோ ஓடுவதை போல சப்தம் கேட்க எரிச்சலாகி,
“ஏய் சந்திரா, எந்திச்சு அந்த மோட்டாரை ஆஃப் பண்ணுடி…” என சந்திராவை உறக்கத்தினூடே எழுப்பினார்.
“ஏய் எந்திடி. சந்திரா…” என எத்தனை எழுப்பியும் மகள் எழுந்தபாடில்லை. சப்தம் நேரம் ஆக ஆக அதிகமாக கடுப்புடன் எழுந்து அமர்ந்தார்.
“என்ன இம்சை இந்த வீட்ல முத்த முதல்ல தூங்கறேன். நிம்மதியா தூங்க முடியுதா?…” கண்ணை கசக்கிக்கொண்டே மெதுவாய் எழுந்து அமர்ந்தவர் கட்டிலின் பக்கவாட்டில் இருந்த இரவு விளக்கை போட மெல்லிய வெளிச்சத்தில் ஜன்னல் எதுவும் திறந்திருக்கிறதா என பார்த்தார்.
ஏசி அறை. கண்ணாடி ஜன்னல்கள் அனைத்தும் மூடி இருக்க சத்தம் எங்கிருந்து வருகிறது என மேலோட்டமாய் அறையை சுற்றி பார்த்தவருக்கு கண்மணி அவரின் காலுக்கு கீழே படுத்திருப்பது தெரியவில்லை.
மீண்டும் அதே சத்தம். மெல்ல குனிந்து பார்த்தவருக்கு தூக்கிவாரிப்போட்டது. பயத்தில் அலறியேவிட்டார்.
தலை கலைந்து முடிகள் ஏசி காற்றில் அலைபாய கையையும் காலையும் விரித்து வாயை திறந்து குறட்டை விட்டுக்கொண்டு மல்லாந்து படுத்திருந்தவளின் கோலம் அவரை லேசான இருளில் அத்தனை பயமுறுத்தியது.
அதிலும் வந்தவர்கள் ஆசிர்வாதம் செய்கிறேன் பேர்வழியில் கண்மணி கார்த்திக்கின் நெற்றியில் குங்குமம், சந்தனம், விபூதியை அப்பி இருந்தனர். அதுவேறு கலைந்து அலங்கோலமாய் இருக்க பார்த்தவருக்கு மூச்சே நின்றது.
“அடிப்பாவி மகளே, ஒரு நிமிஷம் உயிரே போய்டுச்சுடி. இவள யாரு இங்க வந்து படுக்க சொன்னா?…” என்று கடுப்புடன் கண்மணியை எழுப்ப அவளோ அசைந்தால் தானே?
மகளை திரும்பி பார்த்தார். மகள் நிச்சயம் எழுந்துகொள்ள போவதில்லை என்று அவருக்கு நன்றாய் தெரியும்.
திருமணமாகி இத்தனை வருடங்கள் ஆகியும் குழந்தை என்று ஓன்று உருவாகவே இல்லை என்பதால் அதற்கு மருத்துவ சிகிச்சை எடுத்துகொண்டிருக்கிறாள் சந்திரா.
மாத்திரை மருந்துகளின் உபயத்தில் அவளின் உறக்கம் அத்தனை ஆழமாக இருக்க மகாதேவிக்கு தான் பயமாக இருந்தது.
மருமகள் தான். ஆனாலும் யாருமற்ற அறையில் தான் விழித்திருக்க மருமகள் இந்த கோலத்தில் அதுவும் அசாத்திய சத்தத்தில் குறட்டை வேறு. கொஞ்சநஞ்ச உறக்கமும் பறந்துபோனது.
மெதுவாய் எழுந்து கதவை திறக்க முயன்றவருக்கு அது முடியாமல் போனது.
“இந்த நேரத்துல இது கூட சதி பண்ணுதே? என்ன லாக் இது? ஓபன் ஆகவே மாட்டேன்றது…” என கதவை தட்ட திறப்பதற்கு யாரும் இல்லை.
அசதியிலும் அலுப்பிலும் அடித்துப்போட்டதை போல அனைவரும் உறங்க மகாதேவிக்கு அழுகை வரும் போல ஆனது. கதவில் சாய்ந்துகொண்டு தன் நிலையை எண்ணி புலம்பியவரை மேலும் அச்சப்படுத்தியது கண்மணியின் சிரிப்பு.
உறக்கத்திலேயே கனவில் சிரிப்பதை போல அவளும் சிரித்துவைக்க ஆர்ப்பாட்டமாய் ஒலித்தது அந்த சிரிப்பொலி.
“இன்னைக்கு இவ என் சோலியை முடிக்காம விடமாட்டா போல?…” என்றவர்,
“சிரிக்காதடி பட்டிக்காடு, பட்டிகாட்டான். உன்னால தூக்கம் மட்டுமில்ல என் நிம்மதியும் போச்சு…” என கதவருகே நின்றபடி அவளை வசைபாடினார்.
பிரிக்கப்படாத பொருட்கள் மூட்டை மூட்டைகளாக. இருளில் மெல்லிய விளக்கொளியில் அதன் நிழல்கள் வேறு அவரை பயமுறுத்த அடுத்த குறட்டை சத்தத்தில் தாவி வந்து சந்திராவை கட்டிக்கொண்டு படுத்துவிட்டார்.
ஒவ்வொரு குறட்டைக்கும் அவரின் இதயம் படபடவென அடித்தது. சற்று குறட்டைக்கு ஒய்வு விட்டிருப்பாளாக இருக்கும்.
“அப்பாடா நிறுத்திட்டா…” என்றவர் கண்கள் லேசாய் சொருக சில நிமிடங்கள் தான் உறங்கியிருப்பார் மீண்டும் அதே சத்தம் கேட்க அலறியடித்து எழுந்தார்.
“இன்னைக்கு நான் தூங்கின மாதிரிதான்…” என்ற புலம்பலுடன் சில நிமிடங்கள் உறங்குவதும் பல நிமிடங்கள் விழித்து கிடப்பதுமான ஒரு அவஸ்தையை அனுபவித்தபடி இருந்தவருக்கு அதிகாலை அற்புதமாய் விடிந்தது.
வழக்கமான நேரத்தில் விழிப்பு தட்ட கண்மணி எழுந்தமர்ந்து சோம்பலாய் கைகளை உயர்த்து அலுப்பு நெறித்தாள். முற்றிலும் தலைமுடி அவிழ்ந்து விரிந்திருக்க பார்த்த மகாதேவி முகத்தை பொத்திகொண்டார்.
“எல்லாரும் எந்திக்கட்டும், இவளை வச்சிக்கறேன். இப்பவாச்சும் எழுந்துட்டாளே, நாம தூங்குவோம்…” என உறங்க ஆரம்பித்தார்.
அரைமணி நேரம் கூட உறங்கியிருக்க மாட்டார். அதற்குள் வந்து எழுப்பிவிட்டார் மணிகண்டன்.
“எழுந்து கிளம்பு மகா. நேரமாகிடுச்சு. இன்னும் கொஞ்ச நேரத்துல ட்ராவல்ஸ்ல இருந்து வேன் வந்துடும். அந்நேரம் நாம ரெடியா இருக்க வேண்டாமா?…” என கடிந்துகொள்ள,
“நான் நைட் தூங்கவே இல்ல…” என அவர் ஆரம்பிக்க அதை மணிகண்டன் காதில் வாங்கினால் தானே? சந்திராவை எழுப்பியதும் எழுந்துவிட்டவள் வேகமாய் குளித்துவிட்டு வந்து கிளம்ப வேண்டாவெறுப்பாய் குளிக்க சென்றார்.
வந்தவர் கண்மணியை தேட அவள் அடுப்படியில் பரபரப்பாய் வேலை பார்த்துக்கொண்டிருந்தாள். அதை பார்த்துவிட்டு மணிகண்டனிடம் வந்து,
“என்னமோ என்னைய சொன்னீங்க? இன்னும் உங்க மருமக கிட்சன்ல உருட்டிட்டு இருக்கா. அவளை சொல்ல காணோம்…” என்று புகார் படிக்க காபியோடு வந்துவிட்டாள் சந்திரா.
“நீ நல்லா தூங்கி எழுந்துட்ட. ஆனா கண்மணி தூங்கினதும் லேட். சீக்கிரமும் எழுந்துட்டா. அவ மட்டுமா உன் பேரன் கூடத்தான். அப்பவே எழுந்து வாசல் பெருக்கி கோலம் போட்டு இப்ப சமைக்கவும் செய்யறா….” என்றவர்,
“என்னம்மா குக்கிங் முடிஞ்சதா?…” என்று சந்திராவிடம் கேட்க,
“முடிஞ்சதுப்பா. பேக்கிங் தான் பண்ணிட்டு இருக்காங்க. இட்லி, சாம்பார், கார சட்னி. லஞ்ச்க்கு வெரைட்டி ரைஸ், புளிக்கறி, தொக்கு…”
“சரி, சரி முடிஞ்சதான்னு கேட்டா லிஸ்ட் போடற? கார்த்திக் எங்க?…”
“அருளை கிளப்பிட்டு இருக்கான். அவன் ரெடி. அவரும் ரெடி…” என்று சொல்லும் பொழுதே வாசலில் நாட்டரசனும் கிருஷ்ணனும் வர,
“என்ன சம்பந்தி வாக்கிங்கா?…” என்று கேட்ட மணிகண்டன்,
“சந்திரா போய் மாமாவுக்கும், கிருஷ்ணனுக்கும் காபி எடுத்துட்டு வாம்மா…” என்று சொல்ல,
“நா குடிச்சிட்டேன் சம்பந்தி. காலல எந்திச்சதும் குளிச்சு கெளம்பி வாரதுக்குள்ள மணி காபி போட்டுடுச்சி. குடிச்சிட்டுதேன் நானும் இவனும் பால் வாங்க போனோம்…” என்றவரை சந்திரா பார்க்க,
“இத மணிக்கிட்ட குடுத்திருத்தா…” பால்பாக்கெட்டை நீட்ட வாங்கிக்கொண்டவளை நிறுத்தி,
“சந்திரா நீ காபி கொண்டுவா. என்கூட சேர்ந்து குடிப்பாரு. நீ போம்மா…” என்று அவளை அனுப்பியவர்,
“நான் எழுந்திக்கறதுக்குள்ள வெளில கிளம்பிட்டீங்க. இல்லைனா நானும் வந்துருப்பேன்…”
“அட இருக்கட்டும்ங்க. அசந்து உறங்கிட்டு இருந்தீக. அதான் அரவில்லாம கெளம்பிட்டோம்…” இவர்களை கண்டுகொள்ளாமல் மகாதேவி உம்மென இருக்க,
“நடக்கறதுக்கெல்லாம் போவலங்க. பயணத்துக்கு பால் வேணுமின்னு மணி சொல்லுச்சு. புளாசுக்குல  ஊத்திட்டு போனா சூடா குடிக்கலாமின்னு. அதேன் பாலு பத்தாதுன்னு வாங்கியாற போனேன். இவனும் ஒடனே வந்துட்டான்…”
“அதுசரி, கண்மணி எல்லாமே யோசனையோட தான் செய்றா…” என்று மருமகளை மணிகண்டன் சில்லாகிக்க அதை பொறுக்காத மகாதேவி,
“நல்லா இருக்கு, போற இடமெல்லாம் சோத்துசட்டிய தூக்கிட்டு போறது. போனோமா ஹோட்டல்ல சாப்பிட்டோமான்னு இல்லாம இதென்ன தொல்லை…” என்றவரை ஒற்றை பார்வையில் வாயடைக்க செய்தான் கார்த்திக்.
முதல் நாள் ஆனால் வீட்டில் விசேஷம். கடிந்து சொல்லி பார்ப்பவர்கள் கண்ணுக்கும் பல்லிற்கும்  விருந்தாக விரும்பாமல் பல்லைக்கடித்துக்கொண்டு பொறுமை காத்தான். ஆனா இன்று தாங்கள் மட்டும் என்பதால் பொறுமை பறக்க,
“அவளுக்கு தேவைதான்ம்மா. நான் சொன்னேன். வேண்டாம்னு. கேட்டா தானே? கோவிலுக்கு போறோம் ரெண்டு நாளும் ஹோட்டல்ல சாப்பிட்டா பெரியவங்க உடம்பு கெட்டுடும். அத்தைக்கு ஒத்துக்காது. அங்க வந்து சிரமப்படனும்னு சொல்லி சமைச்சிட்டு இருக்கா. நீங்க அவளை பேசத்தான் செய்வீங்க…”
பட்டென முகத்திலடித்ததை போல பல்லை கடித்துக்கொண்டு அவன் பேசியவிதத்தில் மகாதேவிக்கு முணுக்கென கண்ணீர் வந்துவிட்டது. நாட்டரசனுக்கும் கிருஷ்ணனுக்கும் என்னவோ போல் ஆக,
“நா போயி துணிமணி பைய எடுத்துவைக்கிதேன்…” என்று சங்கடமாய் சொல்லிவிட்டு கிருஷ்ணனை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார்.
“கார்த்திக்…” மணிகண்டன் கண்டிப்புடன் அவனை பார்க்க,
“பின்ன என்னப்பா, அவ என்ன இவங்களுக்கு எதிரியா? எப்ப பார்த்தாலும் அவளை கரிச்சு கொட்டிட்டே இருக்காங்க. அவ என்ன செஞ்சாலும் குற்றம் பார்க்கறாங்க. அதுவும் அவ வீட்டு மனுஷங்க முன்னாலையே சுருக்குன்னு பேசறாங்க…” என்றவன்,
“இன்னைக்கு இந்த ஒரு வார்த்தைக்கே உங்களுக்கு பொறுக்க முடியலை. கண்ணீர் வந்துடுச்சு. அவங்களுக்கும் இப்படித்தானே இருந்திருக்கும். பொண்ணையும் குடுத்துட்டு பேச்சும் வாங்கனும்னு என்னம்மா தலையெழுத்து அவங்களுக்கு?. அவ என்ன அவளுக்கா செய்யறா? உங்களுக்காக தானே செய்யறா. இது கூடவா உங்களுக்கு புரியாது?…”
“உனக்கு தெரியாதுடா நேத்து அவ என்னை தூங்கவே விடலை. எப்படி பயமுறுத்தினா தெரியுமா? நான் நைட் எல்லாம் அந்த சத்தத்துல தொங்கவே இல்லை…” என கண்ணீருடன் அவர் சொல்லிய விதத்தில் அடக்கமாட்டாமல் சிரித்தவன்,
“அம்மா, அம்மா. அவ என்ன வேணும்னா தூங்கவிடலை?…” என்று கேட்டு சிரிக்க,
“ஆமா, வேணும்னே தான். அதுவும் நைட்ல அப்பப்ப பயங்கரமா சிரிக்கவேற செய்யறா…” என்றும் சொல்ல மணிகண்டன் புரியாமல் பார்த்தார்.
அவருக்கு விஷயத்தை சொல்ல அவரும் கார்த்திக்குடன் சேர்ந்து சிரிக்க மகாதேவிக்கு எரிச்சலாகிவிட்டது.
“அவ என்னை பழி வாங்கிட்டான்னு சொல்றேன். ரெண்டு பேரும்  சிரிக்கறீங்க?…”
“மகா, இதெல்லாம் இயற்கையா வரத்து. வேணும்ன்னு செய்யற அளவுக்கு அவ அப்படிப்பட்ட பொண்ணு இல்லை மகா…” மணிகண்டனும் மருமகளுக்கு இயைந்துகொண்டு பேச,
“ஏன் சொல்லமாட்டீங்க? நீங்க தூங்கி பார்த்திருக்கனும் அவ இருந்த ரூம்ல. அப்பா தெரிஞ்சிருக்கும். உங்களுக்கு என் நிலைமை புரிஞ்சிருக்கும்…” என முகத்தை திருப்ப,
“ஏன் நான் தான் தினமும் அவளோட தான தூங்கறேன்? எனக்கென்னம்மா…” என்று வாயை குடுக்க கப்பென பிடித்துக்கொண்டார் மகாதேவி,
“இதை நான் யோசிக்கவே இல்லையே. சொன்னேனே கேட்டியா கார்த்திக். இவ வேண்டாம்னு சொன்னேன்ல. இப்ப பாரு நீ ஒரு நாள் கூட நிம்மதியா தூங்கியிருக்க மாட்டியே?…” என்று புலம்பியவர்,
“உன் வாழ்க்கை இப்படி ஆகிடுச்சே? வேண்டாம் வேண்டாம் தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன். இப்படி ஒரு நாள் கூட நிம்மதியா தூங்காம இருக்கறதுக்கா? எனக்கு தெரியும்டா இவ இப்படித்தான்னு. நீ தான் பிடிவாதமா கல்யாணம் பண்ணினா இவதான்னு சொல்லிட்ட. இன்னைக்கு உன்னோட கஷ்டம் என்னனு எனக்கு புரியுதுடா…”
மகனின் நிலையை கண்டு பரிதாபம் கொள்வதை போல கண்மணியின் மீதான அதிருப்தியை மகனின் மனதில் விடஹிக்க வைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட,
“சொன்னேன் சொன்னேன்னா? இப்ப மட்டும் என்னவாம் கெட்டுப்போச்சு. என்ன பழைய கண்மணியா கல்யாணத்துக்கு முன்ன இருந்த புள்ளையா எங்கப்பாம்மாட்ட அனுப்பிட்டு ஒங்க மவனுக்கு வேற புள்ளய பாத்து கட்டி வச்சிக்கிடுங்களேன். முடியுமா உங்களால?…” என்று எடக்காய் கேட்டால் கண்மணி.
கண்மணி வந்து நிற்பாள் என்று அவர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. திடீரென வந்தவள் இதை சொல்ல மகாதேவியின் முகம் போன போக்கை பார்த்து இது தேவையா என கார்த்திக் பார்க்க மணிகண்டன் மனைவியை முறைத்தார்.
“முடிஞ்சுபோன கண்ணாலத்துக்கு இன்னிக்கு மோளம் அடிச்ச மாதிரில இருக்கு…” என்றவள்,
“மணி ஏழாவ போவுது. வண்டி இன்னு வரல. எப்பத்தேன் கெளம்புதது?…” என கார்த்திக்கை பார்க்க,
“இப்ப கால் பன்றேன்டா…” என்று அவன் மொபைலை எடுக்க மணிகண்டன் உள்ளே சென்றுவிட்டார்.
“எல்லாஞ்ச்சொல்லி சொல்லித்தேன் செய்யோனும். காலங்காத்தால பொறணி பாத்தா வேல ஆன மாரித்தேன்…” என மாகாதேவியை ஓரக்கண்ணில் பார்த்துக்கொண்டே கார்த்திக்கை திட்டிவிட்டு உள்ளே சென்றவளை பதிலுக்கு பேசமுடியாதபடி மணிகண்டனும் தவமும் வேளே வந்தனர்.
“மகா போய் பேக்கை எடுத்துவை. சீக்கிரம். நின்னு வாய் பார்த்துட்டே இரு…” என்றும் சொல்லிவிட மகாதேவியின் கோபம் இன்னும் அதிகமானது.
“வாய் பாத்துட்டு பேசிட்டு நின்னா விட்டுட்டு போய்டுவீங்களோ? ஏன் போங்களேன். யார் வேண்டாம்னா?…” என்றவர் வேகமாய் உள்ளே சென்று மீண்டும் பேக்குடன் வந்து அதே இடத்தில் அமர்ந்துகொண்டார்.
அவரின் வேகத்தையும் கோபத்தையும் பார்த்தவர் திருத்தமுடியாது இவளை என நினைத்து மகளை அழைத்து,
“சந்திரா காலையில இருந்து அவங்க மூணுபேருமா செய்யறாங்க. போய் நீயும் உதவி செய். அந்த திங்க்ஸ் எல்லாத்தையும் எடுத்து இங்க கொண்டுவந்து வை…” என சொல்லி பேரனை கையில் வாங்கிக்கொண்டார்.
அவனோ மகாதேவியிடம் தாவ அதுவரை இருந்த கோபமெல்லாம் பறந்துபோனது அவருக்கு.
“என்னடா செல்லம், பாட்டியை பார்த்ததும் வந்துட்டீங்க. பாட்டியை பிடிக்குமா?…” என்று அவனை கொஞ்சிக்கொண்டே மற்றவற்றை மறந்துவிட்டார்.
“என்னானாலும் கண்மணி கோல்ந்தை மேல உனக்கு எவ்வளவு பாசம் மகா…” மணிகண்டன் சீண்ட,
“இவன் என்னோட பேரன். கார்த்திக் மகன்…” வீம்பாய் சொல்ல,
“ஒங்க மவன் மசக்கையா இருந்ததா எனக்கு யாவவம் இல்லியே அத்தே…” என்ற கண்மணி சாப்பாடு அடைத்திருந்த வாளிகளை கொண்டுவந்து வைக்க ஆரம்பித்தாள். மீண்டும் அவள் உள்ளே சென்றதும்,
“என்ன பேச்சு பேசறா பாத்தீங்களா? கொஞ்சமாச்சும் டீசென்சி தெரியுதா? மாமனாரும், அண்ணனும் நிக்கிறீங்களேன்னு கூட பாக்காம எப்படி பேசிட்டு போறா பாருங்க. காட்டுல வளந்தவட்ட எண்ணத்தை எதிர்பார்க்க முடியும்?…”
மணிகண்டனிடம் சொல்ல தவத்திற்கு அத்தனை கோபம் வந்தது.
“இங்க பாருங்க அத்தை, இதுல நான் தலையிட கூடாது தான். ஆனாலும் சொல்றேன். நீங்க அமைதியா இருந்தாலே போதும். எந்த பிரச்சனையும் இல்லை. கண்மணி நீங்க சொன்னதுக்கு பதில் தான் சொல்லிட்டு போச்சு. அதுக்கு நீங்க பேசற வார்த்தைகள் மட்டும் ரொம்ப நாகரீகமா இருக்கா?…” என்றவன் மணிகண்டனையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு கோபமாய் நகர்ந்துவிட்டான்.
“இன்னும் என்ன வேணும் மகா? மருமகளை பகையா பார்க்கற. இப்ப மருமகனும் கோபப்பட்டுட்டார். எதை சாதிக்க இப்படி பேசிட்டு இருக்க நீ?…”
“இப்பவும் அவளுக்கு சாதகமா தானே எல்லாரும் பேசறீங்க?…” என அதற்கும் மகாதேவி குற்றம் சொல்ல,
“அப்பா வேன் வந்திருச்சு…” என்ற கார்த்திக்,
“கண்மணி…” என சத்தம் குடுக்க,
“இந்தா வந்துட்டேன்….” என்றவள் ஒரு பெரிய பையை தூக்கி வந்து அவனது கையில் கொடுக்க அதன் கனம் தாங்காமல் கீழே போட போனான்.
“என்னடி இது?…” என்று கேட்க,
“அத்தேக்கு வெளியூர் தண்ணி ஒத்துக்காதுன்னு வெண்ணி வச்சு கேனுல ஊத்திருக்கேன்….”
“நான் கேட்டேனா? எனக்கு மினரல் வாட்டர் எங்கயுமே ஒத்துக்கும். தேவையில்லாத வேலை பாக்கவேண்டாம்னு சொல்லி கார்த்திக்…” என்று அவனிடம் சொல்ல,
“இருக்கட்டும், நாமளும் குடிக்கலாம். வழில தண்ணி தவுச்சா எங்கன்னு போயி வாங்குவீக? நாமலா சொமக்க போறோம்? வேனு தான?…” என்று மீண்டும் அவனிடமிருந்து அதை வாங்கி வேனிற்கு கொண்டு சென்று வைத்துவிட்டு வந்தாள்.
“என்னனு இந்த வெய்ட்டை தூக்கின?…” என பேசிக்கொண்டே அவன் உள்ளே செல்ல மாறி மாறி ஒவ்வொன்றாய் எடுத்துக்கொண்டுவந்து வைத்தனர் கண்மணி குடும்பத்தினர்.
“உக்காந்த இடத்தைவிட்டு நகர்ந்திடாத. கிளம்பரப்பவும் இதை அப்படியே பேர்த்தேடுத்துட்டு வந்துடு. அங்கயும் உட்கார வசதியா இருக்கும்…” மணிகண்டன் சொல்ல,
“நானா சமைக்க சொன்னேன்? பேசாம ட்ரெஸ் மட்டும் எடுத்துட்டு போற வழியில சாப்பாட்டை பார்த்துக்கலாம் தானே? எதுக்கு இந்த ஆர்ப்பாட்டம்? இத்தனையும் செஞ்சவங்க இதையும் செய்வாங்க….”
“உன்னை கார்த்திக் திட்டினதுல தப்பே இல்லை மகா. எனக்கு கூட அவன் சம்பந்தி முன்னாடி பேசிட்டானேன்னு கோவம் வந்துச்சு. ஆனா இப்ப உன்னோட திமிருக்கு தப்பே இல்லைன்னு தோணுது…”
“உங்க புள்ளை உங்களை மாதிரி தான இருப்பான்…” என்று மகாதேவியும் விடாமல் பேச அவரின் மடியில் இருந்த அருள்மொழி மகாதேவியின் வாயை தன் கைகளால் பொத்த அதை பார்த்த மணிகண்டனுக்கு அப்படி ஒரு சிரிப்பு.
“உன் பேச்சு உன் பேரனுக்கே பொறுக்கலை பாரு. வாயை மூடுன்னு சொல்லாம சொல்றான்…” என,
“பின்ன அவ பெத்த புள்ள அவ குணம் கொண்டு தான பிறந்திருக்கும். வயித்துல வளரும் போதே சொல்லிகுடுத்திருப்பாளா இருக்கும்…” என சொல்லி பேரனை பார்க்க அவன் அவரின் கோபமுகம் கண்டு உதட்டை பிதுக்க உருகிப்போனவர்,
“இல்லைடா செல்லம், நீ பாட்டி செல்லம்டா…” என்று அவனின் முகவாட்டத்தை பொறுக்காமல் நெஞ்சோடு அணைத்துகொண்டார். அவனும் அவனின் பிஞ்சு கரத்தால் அவரின் கழுத்தை வளைத்துகொண்டான்.
“இது ஒண்ணுக்குத்தான் கட்டுப்படறா”  என அவரை பார்த்தார் மணிகண்டன்.
“மாமா கெளம்பலாம். எல்லா எடுத்து வெச்சாச்சு. சாமி கும்பிட்டுட்டோம்னா வீட்ட பூட்டிட்டு கெளம்பிட்ட வேண்டியதான்…” கண்மணி சொல்ல அவளை பார்த்ததும்,
“ம்மா…” என்று தாவினான் குழந்தை.
“வாடா கண்ணு. போய் சாமி கும்பிடுவோம்…” என அவனை தூக்கி கொஞ்சியவள் உள்ளே செல்ல,
“புள்ளைய கூட வச்சிருக்க விடறாளா பாருங்க?…” என்று அதற்கும் மகாதேவி குறைபட,
“உன்னையெல்லாம் திருத்தவே முடியாது. இப்ப என்ன வேன்ல ஏறினதும் பேரனை உன்கிட்ட குடுக்க சொல்லறேன். நீயே பாபநாசம் வரைக்கும் வச்சிரு. போதுமா?…” என சொல்ல,  
“என்ன நானா? என்னால எப்படி முடியும்?. உங்களுக்கு தெரியாதா என்னால முடியாதுன்னு…” என கேட்க,
“இது உரிமை பேசும் போதே இருந்திருக்கனும். சும்மா சும்மா எதைடா குறை சொல்லுவோம்னு நிக்கிற?…” என்று எரிந்து விழ கோபமாக சென்று வேனில் ஏறி அமர்ந்துகொண்டார்.
“என்னப்பா அம்மா சாமிகும்பிட வரலை?…” என கார்த்திக் கேட்க,
“அவளை விடு. வா நாம கும்பிட்டு கிளம்புவோம்…” என்று மகனை உள்ளே அழைத்து சென்றார் மணிகண்டன்.
மகாதேவியின் அழிச்சாட்டியங்கள் அதனுடன் நிற்கவில்லை.

Advertisement