Advertisement

மணியோசை – 17

        “இந்தா மணி மொத உன் மாமியார போய் பாரு. அந்தம்மா வந்ததுல இருந்து ஒரு வா தண்ணி குடிக்கல. போ போயி அவுகள சாப்புட வர சொல்லுத்தா…” பேச்சி அனுப்பவும் அத்தனை எரிச்சலுடன் வந்தால் கண்மணி.

“இந்தம்மாவுக்கு ஊட்டித்தேன் விடனும்” என முணகிக்கொண்டு,

“சாப்புட வாங்கத்தே. மதியமாவ போவுது பாருங்க…”  என்றவளை திரும்பி பார்த்த மகாதேவி அவளை பார்வையில் எரிக்காத குறை தான்.

“எனக்கு தெரியும், உன் வேலையை பாரு…” பல்லை கடித்துக்கொண்டு அவர் சொல்ல அப்படியே தலையில் நங்கென கொட்டு வைத்தால் என்னவென்று கண்மணியின் கைகள் பரபரத்தது.

“என்ன கண்மணி? என்னாச்சும்மா?…” மகாதேவியின் அருகே அவள் வந்து நின்றதை பார்த்ததும் மணிகண்டனும், கார்த்திக்கும் வேகமாய் வந்துவிட்டனர்.

புதுமனை புகுவிழா நடக்கும் வீட்டில் எதுவும் சலசலப்பு ஆகிவிட கூடாதே. கண்மணி அமைதியாக இருந்தாலும் மகாதேவி ஏதாவது பேசி அவளையும் பேச வைத்துவிடுவாரோ என்ற பயத்தில் தான் வந்து நின்றார்கள்.

கார்த்திக் சொன்னபடி அந்த வீட்டை வாங்கிவிட்டான். மணிகண்டன் மகாதேவியை இதில் தலையிட கூடாது என முடிவாய் சொல்லிவிட அவரால் எதுவும் செய்யமுடியவில்லை.

விசேஷத்திற்கு கார்த்திக்கின் சொந்தபந்தங்கள் எதையும் கண்மணி விடவில்லை. அங்கேயே ஒரு பஸ்ஸை ஏற்பாடு செய்து அனைவரையும் வரவழைத்துவிட்டாள்.

பிடிக்காத நிகழ்வு, அதுவும் பிடிக்காத ஆகவே ஆகாதெனும் மனிதர்கள் மத்தியில். மகாதேவிக்கு தன் கோபத்தை யாரிடம் காட்டவென தெரியாமல் கடுகடுவென இருந்தார்.

இப்போது கண்மணி வந்து நிற்கவும் இன்று ஒரு வழியாக்கிவிட வேண்டும் என்று முறைப்பாய் பார்த்தார்.

“ஒண்ணுமில்ல மாமா, அத்தே இன்னும் சாப்புடல. அதா கூட்டியாற சொல்லி அம்மா சொல்லுச்சு…” என்று சொல்லவும் வேகமாய் சேரில் இருந்து எழுந்தவர்,

“என்ன உங்கம்மா சொல்லி என் மகன் வீட்ல எனக்கு உபசாரம் நடக்கனுமா? இது என் மகன் வீடு, என் வீடு. விருந்தாளியா வந்திருக்கிறது உன் வீட்டு மனுஷங்க. வந்தோமா வந்த வேலையை பார்த்தோமான்னு இருக்க சொல்லு…”

மகாதேவி பட்டென பேசியதும் சுற்றிலும் வேறு யாராவது கேட்டுவிட்டனரா என பதறிவிட்டனர் கார்த்திக்கும், மணிகண்டனும்.

சம்பந்தி வீட்டினரை வைத்துக்கொண்டு மகாதேவியை அதட்ட முடியாமல் மணிகண்டனுக்கு கோபமாய் வந்தது.

“மகா, என்ன பேச்சு இது?…” என்னும் பொழுதே கண்மணி ஆரம்பித்துவிட்டாள்.

“எனக்கு அப்டி தெரியலியே அத்தே. உங்க வீடா, உங்க மவன் வீடா நினைச்சிருந்தா இங்க எல்லாத்துக்கும் முன்னாடியில நின்னிருக்கனும். முன்னாடி நின்னது என் வீட்டு மனுஷக தான். நினச்சு பாருங்க யாரு வீட்டாளுக மாதிரி இருந்தா யாரு விருந்தாளிக மாதிரி இருந்தான்னு. வார்த்தைக்கு என் வீடுன்னா வீடு கூடவே வந்துருமாக்கும்?…”

“இந்தாடி…” என்று கண்மணியின் பேச்சில் மகாதேவி சினந்து பார்க்க,

“அட சும்மா இருங்கத்தே. நீங்க பட்டினியா கெடக்கீகளேன்னு எங்கம்மா சாப்புட சொல்லுச்சு. அதுக்கு உங்க மேல இருக்க பச்சாதாவங்  கூட ஒங்களுக்கு அவுக மேல இல்ல…”

“என்ன?…”

“என்ன என்ன?…”

“ஏய் கண்மணி சும்மா இரு. உள்ள போ…” கார்த்திக் அவளை தடுக்க முயல,

“அட செத்த கம்முன்னு இருங்களேன்…” என அவனை அடக்கியவள்,

“இப்ப என்ன? இந்த வீட்ல சோறு வேணா. சோறு சாப்புடலனா மாத்தர எப்புடி போடுவீக? மாத்தர போடலனா கெறக்கம் வரும். நோவுன்னா ஆஸ்பத்திரி போவனும். குளுக்கோஸ் ஏத்தனும். பொறவு நாளைக்கு பாவநாசம் எப்புடி வருவீக? பேரனுக்கு முடி எறக்கறத எப்புடி பாப்பீக?…”

இப்படி அவள் சொல்லுவாள் என மகாதேவி மட்டுமல்ல மணிகண்டனும் எதிர்பார்க்கவே இல்லை.

“மாமா, அத்தேக்கு வர முடியலனா பரவால்ல. நாங்க போய்ட்டு வரோம். விருந்தாளியா நெனச்சா விருந்தாடிட்டே இருக்கட்டும்…” என்று ஏற்ற இறக்கத்துடன் சொல்லிவிட்டு அவள் சென்றுவிட,

“பார்த்தியா கார்த்திக். நீங்களும் பாத்தேங்களங்க? அவ என்னை கிண்டல் பண்ணிட்டு போறா…”

“சாப்பிட கூப்பிட வந்த பொண்ணை நீ தான் முதல்ல பேசின மகா. முதல்ல உன் தப்பை ஒத்துக்கோ. நீ என்ன பேசினாலும் கேட்டுட்டு போகனும்னு கண்மணிக்கு அவசியம் இல்லை…”

“ஏன் பேசமாட்டீங்க? என்னை பேசனும்னா உங்களுக்கு அவ்வளவு சந்தோஷம். எனை விருந்தாளின்னு சொல்லிட்டு போறா அவ. அதை கேட்க உங்களுக்கு…”

“ஹ்ம்ம் சொல்லு எங்களுக்கு? மகன் வீட்டுக்கு வந்து முகத்தை தூக்கி வச்சிட்டு இருக்கறது நீ. உன்னையே கேட்க எங்களுக்கு துப்பில்லை. நான் எங்க மருமகளை கேட்க…”

என்றும் இல்லாத திருநாளாய் அமைதியாய் பேசினார் மணிகண்டன். அதை பார்த்த கார்த்திக்கிற்கு வருத்தமாய் போனது.

“அப்பா விடுங்க. சாப்பிடனும்னு நினச்சா சாப்பிடட்டும். இல்லைனா இருக்கட்டும். அவங்க பசில இருக்கறதுக்கான பாவம் என்னை சேரட்டும்…”

“டேய் கார்த்திக், என்ன பேச்சு இது? நான் ஏதோ கோவத்துல பேசிட்டேன். இப்ப என்ன சாப்பிடனும். அவ்வளவு தானே. எனக்கு நீ பரிமாறு. சாப்பிட வரேன்…” என சொல்லவும் அவனுக்கும் ஆற்றாமையாக இருந்தது.

“என்னம்மா நீங்க? வந்தவங்களை கவனிக்க வேண்டாமா?…” என்றவன்,

“சரி வாங்க…” என அழைத்து சென்றான்.

“ஏத்தா மணி ஒ அய்த்த வந்தாச்சு. போ எலய போடு…” அவளின் மாமா மாரிமுத்து சொல்ல திரும்பி பார்த்தவள் கார்த்திக்கின் கண்ணசைவில்,

“இருக்கட்டும் மாமா, அவுகதேன் பாக்குதாகல…”

“ஏத்தா சொன்னா கேக்குதியா? போத்தா, பொறவு கோச்சுக்க போவுது…”

“ஐயோ மாமா, நா போனாதேன் கோச்சுக்கும். நீக கண்டுக்காதிக. அவுக பாத்துப்பாக…” என்றவள் வேறு வேலையை கவனிக்க செல்ல,

“எக்கா, என்ன அந்தம்மாவுக்கு எதுவும் சடவா? வந்ததுல இருந்து மூஞ்சியே செரியில்ல. மணியும் பகுமானம் பண்ணுது…” சங்கரியிடம் வர,

“என்னத்த சொல்லய்யா? அந்தம்மாவுக்கு மணிய புடிக்கிறதில்ல. என்னன்னே தெரில. மணிட்ட கேட்டா கண்டுக்காதன்னு சொல்லுதா. மனசுக்கே உருப்படி இல்ல…” என்று புலம்பியவரை பார்த்த மாரிமுத்திற்கு ஏன்தான் கேட்டோமோ என்று சங்கடமாகிவிட்டது.

“செரி, செரி. நல்லநா அதுவுமா கண்ண கசக்காதக்கா. எல்லாஞ்சரியாவும். மணி சூதானமான புள்ள. அவளுக்கு தெரியாததா?…” என தைரியம் சொல்ல,

“என்னவோ மனசு நெறஞ்ச மவராசனாட்டம் மருமவப்புள்ள. முத்துக்கருப்பி அந்தமட்டும் எம்புள்ளைக்கு கண்ண தெறந்துருக்கா…” என்று கசிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டார்.

“பெரிம்மா மத்தியானத்துக்கு விருந்து வந்துரும். அம்மாவ கோவப்படாம இருக்க சொல்லுங்க…” என்று சொல்லி செல்ல,

“இப்ப எதுக்காம் மூஞ்சிய தூக்கி வைக்கிறவ?…” என்று பேச்சியிடம் சங்கரி செல்ல வீட்டுக்கு பின்னால் நாட்டரசனிடம் உர்ரென இருந்தார் பேச்சி.

“நாஞ்சொல்ல சொல்ல கேக்குதாரா? எம்புட்டு சொல்லிருப்பேன். எம்பேச்சுக்கு இங்க மருவாதி உண்டா?…” என மூக்கை சீந்த,

“பேச்சி நா சொல்லுதத கேளுத்தா…” நாட்டரசன் சமாதானமாக சொல்ல,

“இந்தா எங்கோவத்த கெளறாம போய்ரும்…”

“இப்ப என்னத்தா ஒனக்கு? இப்பத்தேன் அந்தம்மா மலையிறங்குச்சு. இப்ப நீயாக்கும்?…”

“நா என்ன அந்தம்மா மாதிரியா வீம்புக்கு நிக்குதேன். சொல்ல சொல்ல கேக்காம இப்புடி பண்ணிபோட்டாரு…”

“பேச்சி உம்மவ வரா…” சங்கரி சொல்ல திரும்பி பார்த்தவர்,

“என்னத்தா சோறு வந்து இறங்கிருச்சா? பரிமாறனுமாக்கும்?…” என்று சேலை முந்தானையை எடுத்து சொருக,

“ஏம்மா இம்புட்டு கோவப்படறிக? அவருதேன் சொன்னாருல வேணாம்னுன்னு.  பொறவும் புடிவாதமா…”

“நா என்ன எனக்கா அள்ளி தட்டிட்டு போறேங்கறேன்…” அதற்கும் பேச்சி சிடுசிடுக்க,

“இப்ப என்ன அடுத்து விசேசமே வராதாக்கும்? நம்ம வீட்டு விசேசத்துல நீகளே செய்யுக…”

“அது எனக்கு தெரியாதாக்கும்? போடி கூறுகெட்டவளே…”

“என்னாச்சு கண்மணி?…” என்று கார்த்திக் வந்ததும் உடனே தன் முகத்தை இயல்பாய் மாற்றிகொண்ட பேச்சி,

“ஒன்னுமில்லங்க  தம்பி, சாப்பாடு வந்தாச்சான்னு கேட்டுட்டு இருந்தே…” என்று சொல்லவும்,

“இன்னும் பத்து நிமிஷத்துல வந்துரும் அத்தை. அங்க யாரையும் காணுமேன்னு இங்க தேடி வந்தேன்…” என்றவன்,

“கண்மணி பெரியப்பா கூப்பிட்டாரு. போய் என்னனு பாரு…” என அனுப்பிவிட்டு அவள் பின்னால் போகவிருந்த மாமியாரை நிறுத்தினான்.

“இங்க பாருங்க அத்தை, நான் ஏற்கனவே சொன்னது தான். விசேஷத்துல எல்லாருமே சந்தோஷமா நிம்மதியா இருக்கனும். அதுக்காக தான் ஹோட்டல்ல சாப்பாடு சொன்னேன். இதுவே நீங்க சொல்ற மாதிரி வீட்ல சமைச்சிருந்தா உங்களால இவ்வளோ ப்ரீயா நின்னு பேச நேரமிருக்குமா?…”

“அதொண்ணுமில்லை தம்பி, பரவாயில்லை…” பேச்சிக்கு என்னவோ போல் ஆனது.

“நாளைக்கு கோவிலுக்கு வேற கிளம்பனும். இன்னைக்கு நீங்க இத்தனை வேலை பார்த்தா நாள் முழுக்க வேலையிலையே போய்டும். நாளைக்கு உங்களால ட்ராவல் பண்ண முடியாம போய்ட்டா…”

“ஐயோ புரியுதுங்க. இருக்கட்டும்…” என்றவர் அதற்கு மேலும் அங்கே நிற்க சங்கடப்பட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டார்.

“கார்த்திக், ரொம்ப நல்லா இருக்குடா. மாமியார் பிரச்சனைகள். உங்கம்மாவும், கண்மணி அம்மாவும் ஆளுக்கொரு பிரச்சனையை தலையில தூக்கிபோட்டிட்டு உங்களை உருட்டிட்டு இருக்காங்க…” என்று தவம் வந்து சொல்ல,

“ஏன் அத்தான் உங்களுக்கு இந்த நல்லெண்ணம்? முடியிறக்கிட்டு வரதுக்குள்ள இன்னும் எத்தனை வரபோகுதோ? எனக்கு ஒண்ணுமே புரியலை…” என புலம்ப,

“இன்னைக்கு ஒரு நாள்லயே இத்தனை  சலிப்பா? இன்னும் பார்க்க வேண்டியது எவ்வளவோ இருக்கே…” என்று சிரிக்க,

“சாபம் குடுக்கற மாதிரி இருக்கு எனக்கு….” கார்த்திக் கிண்டல் செய்ய,

“ஏன்டா உன் மச்சான் இன்னும் உன்கிட்ட முறைச்சிட்டு தன இருக்கானா? கலகலன்னு பேசமாட்டேன்றானே?…” என கிருஷ்ணனை கேட்க,

“மேரேஜ் முன்ன அவர் தங்கச்சியை கரெக்ட் பண்ணிடுவேனோன்னு கோவத்துல பேசலை. இப்ப கரெக்ட் பண்ணிட்டேன்ற மரியாதையில் பேசலை…”

“சூப்பர் போ. கரெக்ட் பண்ணினா மச்சினனுக்கு மரியாதை வரும்னு நீ சொல்லித்தான் எனக்கே தெரியுது…” என்று அதற்கும் தவம் வம்பு செய்ய சந்திரா வந்து அழைத்துவிட்டாள்.

உறவினர்கள் அனைவரும் கிளம்பிவிட வீட்டினர் மட்டுமே எஞ்சி இருந்தனர். வீட்டினர் என்றால் கார்த்திக் குடும்பமும், கண்மணியின் குடும்பமும் மட்டும்.

அதில் அத்தனை கோவமும் வருத்தமும் பேச்சிக்கும், சங்கரிக்கும். நாட்டரசன் எதையும் சொல்ல முடியாமல் வாய் மூடி மௌனியாய் இருந்தார்.

அன்று இரவு உணவிற்கு பின்னர் மற்றவர்கள் வெளியில் நாற்காலியில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க மறுநாள் கிளம்புவதற்கு தேவையான அனைத்தையும் கண்மணி எடுத்துவைத்துக்கொண்டிருக்க பேச்சியும் சங்கரியும் உதவிக்கொண்டிருந்தனர்.

“ஊரு உலகத்துல எங்கையாச்சும் இப்புடி ஒரு முடியிறக்கு செஞ்சிருப்பாவளா? இத ஊருக்குள்ள சொன்னா மூஞ்சியில காரி துப்பிற மாட்டாவுகளா?…” என்று பேச்சி அங்கலாய்க்க கண்மணிக்கு தலை வெடிக்கும் போல வலிக்க ஆரம்பித்தது இதை கேட்டு கேட்டு.

“அம்மா, பொலம்பாதேங்க…” என,

“இங்காரு மணி, அடுத்த மொட்ட நம்ம முத்துக்கருப்பிக்குத்தேன் சொல்லிப்புட்டேன்…”

“மொத இந்த மொட்டைய அடிச்சு முடி மொளைக்கட்டும். ரெண்டாவது அந்த மொட்டை பத்தி பேசுவோம்…”

“கொஞ்சமாச்சும் உறுத்து இருக்காடி உனக்கு. கூறுகெட்டவளே. இத நீ சொல்லனும்டி. உனக்கு நா சொல்லவேண்டியதா இருக்கு…” என்றவர்

“ஆத்தா முத்துக்கருப்பி இந்த புள்ள இப்புடி பொழைக்க தெரியாம கூறுகெட்ட தனமால்ல இருக்கா. நீதேன் காப்பாத்தனும்…” என்று கடவுளிடம் வேண்டுதல் வைக்க,

“இப்பவே ஏம்மா பொலம்புறீக?…” கண்மணிக்கு தூக்கம் கண்களை சுழற்றி அடித்தது.

“மொட்டையடிச்சு காத்து குத்துறதுனா இப்புடியாடி நடக்கும்? ஏ ஒனக்கு தெரியாதா? நாலு மனுச மக்க வந்து அவுகளுக்கு கறிக்கஞ்சி ஆக்கி போடறதுக்கு கூடவா வக்கத்து போய் கெடக்கோம்?…”

பேச்சிக்கு ஆறவே இல்லை. குடும்பத்தின் முதல் வாரிசு. இதற்கு மொட்டையடித்து காதுகுத்தும் வைபவத்திற்கு சொந்தபந்தங்கள் யாருக்கும் சொல்லவில்லை.

கார்த்திக்கின் குலதெய்வம் பாபநாசத்தில் இருக்க அனைவரையும் கூட்டி சென்று கூட்டிக்கொண்டு வருவதற்கு சாத்தியமில்லை என்று சொல்லிவிட்டார் மணிகண்டன்.

சுருங்க சொன்னாலும் ஒன்று தொட்டு ஒன்று எனக்கு ஏன் சொல்லவில்லை என்று பேச்சு எழும்பும். எந்தளவிற்கு தன் பக்கத்தில் சொல்கிறோமோ அதே அளவிற்கு கண்மணி ஊரிலும் சொல்ல வேண்டும்.

கண்மணி சொந்தங்களுக்கு என்றால் அந்த ஊரே சொந்தம் தான். அனைவரையும் சொல்லி அழைத்து செல்வதென்பது முடியாத காரியம். சிலரை மட்டும் என்றாலும் அதுவும் மனசங்கடங்களுக்கு வழிவகுக்கும் என்பதால் யாருக்கும் சொல்லவேண்டாம் என்று முடிவு செய்தனர்.

ஆனால் அதையும் மகாதேவி தான் தான் இந்த முடிவை எடுத்தது என்பதை போல் கண்மணி, பேச்சி, சங்கரி காதுபட பேசி வைக்க பேச்சிக்கு பொடுபொடுவென இருந்தது.

கண்மணிக்கு தெரியும் இது மணிகண்டனின் முடிவு என. அதை பேச்சியிடம் அவள் சொல்லியும் அவருக்கு பொறுக்கவில்லை.

“இந்தம்மாவுக்கு என்னடி நம்ம வலசல் மேல அம்புட்டு கோவம்? ஆரையும் அண்டவிடமாட்டிக்கு…” என்று பொருமி தள்ளிவிட்டார்.

கண்மணி வீட்டில் சிறு விசேஷம் என்றாலும் அது ஊர் திருவிழாவை போல செய்வர். எவரையும் தள்ளிவைத்து செய்ததில்லை.

அதிலும் மாரிமுத்துவிற்கு கூட அழைப்பில்லை எனும் போது பேச்சியால் அமைதி காக்க முடியவில்லை.

“வீடு பால் காச்சறதுக்கும் இதத்தேன் சொன்ன. இப்ப மொட்டைக்கு இந்த சனம் கூட வரல. உம்புருஷனுக்கு தெரியவேணா?…”

“ம்மா, அவர எதாச்சு சொன்னீக…” கண்மணி கண்ணை உருட்டவுமே நாட்டரசனின் காதில் விழுந்துவிட்டதோ என அஞ்சி,

“அவர என்னத்த சொல்ல? எம்பேரனுக்கு சனசந்தி இல்லாம மொட்ட அடிக்கனும்னு இருக்கு. ஒத்த வேன்ல ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தர் பாத்துட்டு சத்தமில்லாம மொட்டையடிச்சுட்டு வரப்போறோம். நா பொலம்பி என்னாவ போவுது…” என்று சடைப்பாய் பேச,

“போய் உறங்குங்க. நாளைக்கு பேசுவோம்…” அவரை அனுப்பி வைத்தவளுக்கும் உள்ளுக்கும் சுணக்கமே.

என்ன வருந்தி என்ன செய்ய? மாட்டேன் என்பவர்களிடம் கட்டாயப்படுத்த கண்மணிக்கு விருப்பமில்லை.  அதிலும் கார்த்திக் சொல்லிவிட்டான் அடுத்த மொட்டை கண்மணி விருப்பப்படி அவளின் குலதெய்வ கோவிலில் என்று.

வாசலில் அமர்ந்திருந்தவர்களை உள்ளே அழைத்து படுக்க சொல்லியவள் அடுப்பில் மீதமிருந்த குழம்பு,கூட்டுகளை சூடு செய்துகொண்டிருந்தாள்.

“ஏய் கிங்கினிமங்கினி, இன்னும் இங்க என்னடி பன்ற?…” என்றதும் வேகமாய் அவன் புறம் திரும்பியவள் அவனை கட்டிக்கொண்டாள்.

“ஹேய் என்னடி இது? உலக அதிசயம் தான் போ…” என்று சிரித்தபடி அவளை அவனும் அணைத்துக்கொள்ள,

“நேத்துல இருந்தே நீறு இத சொல்லி கூப்புடவே இல்லியா, அதேன் ஒரு மாறியா இருந்துச்சு…” என்றவளின் குரல் கரகரப்பாய் இருக்க,

“ஹேய் நீயா இது? கிங்கினிமங்கினி. வீட்ல எல்லாரையும் வச்சுட்டு உன்னை கூப்பிட முடியாதுல. அதான்…”

“ஹ்ம்ம் தெரியும், தெரியும். என்னவோ, சரி விடும். நா வேலைய பாக்க…” என அவனை விட்டு விலக,

“என்னடி பட்டுன்னு விட்டுட்ட?…”

“வேற என்ன பண்ணவாம்? சந்திரா மதினிட்ட ஒம்மவன் உறங்கறான். தூக்கிட்டு வந்து படுக்க வச்சுக்கோங்க. நா பால் ஆத்திட்டு வரேன்…” என்று அனுப்ப குழந்தையை தூக்கி வந்த கார்த்திக் மீண்டும் கண்மணியை  பார்த்துவிட்டு குழந்தையுடன் சென்று படுத்துவிட மெதுவாய் வேலையை முடித்துவிட்டு கையை துடைத்தபடி வந்தாள்.

மூன்று படுக்கை அறைகள் கொண்ட அவ்வீட்டில் ஒன்றில் பேச்சியும் சங்கரியும் படுத்திருக்க கீழே நாட்டரசனும் கிருஷ்ணனும் படுத்துவிட்டனர்.

இன்னொன்றில் சந்திராவும், மகாதேவியும் படுத்திருக்க, மற்றொன்றில் கார்த்திக் குழந்தையுடன் படுத்திருக்க தவமும் உடன் உறங்கி இருந்தான்.

ஹாலில் மணிகண்டன் உறங்கிக்கொண்டிருந்தார். பழைய வீட்டில் இருந்து அனைத்து பொருட்களையும் எடுத்துவந்துவிட்டதால் எதையும் பிரித்து அடுக்காமல் வேறு இரைத்து போட்டு வைத்திருந்தனர்.

அதுவே வீடு நிறைந்திருக்க மகள் புது வீடு பால்காய்ச்சு என்றதும் சீர்வரிசைகளை கொண்டுவந்து அவர்கள் பங்குக்கு நிறைத்திருந்தனர் கண்மணியின் வீட்டினர்.

படுக்க எங்கும் இடமில்லாமல் யோசித்தவள் பாலை பாட்டிலில் அடைத்து கொண்டுவந்து மெதுவாய் கார்த்திக்கை எழுப்பினாள்.

“ஏய் இன்னும் வந்து படுக்கலையா நீ?…” அரை தூக்கத்தில் கண்களை திறக்கமுடியாமல் அவன் கேட்க,

“தூங்கத்தேன் வந்தே. அண்ணே உறங்குதாக…”

“சரி வா, நாம ஹால்ல தூங்குவோம்…”

“ப்ச், அதல்லாம் ஒன்னும் வேணா. மாமா உறங்குதாக அங்கன. இந்தாங்க பாலு. புள்ளைக்கு குடுங்க. அலுப்புல ராவுக்கு தேட மாட்டான். நீங்களே பார்த்துக்குங்க…”

“அப்ப நீ?…”

“அத்தே, மதினி இருக்க ரூமுல கீழ படுக்கிடுதேன். அங்கனதேன் எடமிருக்கு…” என்றதும் மொத்த உறக்கமும் பறிபோனது கார்த்திக்கிற்கு.

அதுவரை கிசுகிசுப்பாக பேசிக்கொண்டிருந்தவன் வேகமாய் எழுந்தமர புரியாமல் பார்த்தவள்,

“இப்ப என்னாத்துக்கு இந்த பதறு பதறுரீறு? புள்ளையும், அண்ணனும் முழிச்சுக்க போறாக…” என்றவளை பார்க்கவும் அப்படி ஒரு புன்னகை அவனுக்கு.

“யோவ்…” அவளுக்கு கோவமே வந்துவிட்டது.

“அட கோச்சுக்காத கிங்கினிமங்கினி. எங்கம்மாவை நினச்சேன். அதான் சிரிப்பு வருது…” என்றவன்,

“இதுவரை நீ என்னலாமோ பேசிருக்க அவங்களை. அதெல்லாம் பெரிய விஷயமே கிடையாதுடி…”

“என்ன?

“அவங்க ரூம்ல போய் தூங்க போறேன்னு சொன்ன பாரு இத விட பெரிய தண்டனை அவங்களுக்கு கெடையவே கெடையாது போ. சரியான பழிக்கு பழி…” என்று வயிற்றை பிடித்துக்கொண்டு சத்தமில்லாமல் சிரித்தவன் தலையில் நங்கென கொட்டியவள்,

“காலையில பேசிக்கறேன்…” என்றுவிட்டு மகாதேவி இருந்த அறைக்குள் சென்றாள்.

உள்ளே வந்து மெதுவாய் அவர்கள் எழுந்துகொண்டுவிடாமல் கதவை சாற்றிவிட்டு கீழே லேசாய் தரையை கூட்டிவிட்டாள்.

பெட்ஷீட்டை விரித்தவள் ஒரு தலையணையை எடுத்துபோட்டு படுத்து மீண்டும் எழுந்து மாமியாரை பார்த்தாள்.

“ஆத்தா முத்துக்கருப்பி இன்னைக்கு ஒரு நா மாத்தரம் என்ன காப்பாத்தி விட்டுடு. எம்புள்ளைக்கு ரெண்டாமொட்ட போடறப்ப பூமுடி குடுக்கேன் ஆத்தா…” என்ற வேண்டுதலுடன் படுத்து கண்களை மூடினாள் கண்மணி.

விதி வலியது. அதிலும் மகாதேவி விதி அதை விட வலியது.

Advertisement