Advertisement

மணியோசை – 13
      மேலும் இரண்டு மாதங்கள் கடக்க மகாதேவி இப்போதெல்லாம் கண்மணியிடம் வைத்துகொள்வதே இல்லை. கண்மணியும் அவரிடம் பேசாமல் இருப்பதும் இல்லை. ஆனால் கேட்டதற்கு பதில் சொல்லிவிடுவார். அந்தளவிற்கு இருந்தாலே போதும் என கண்மணியும், வீட்டினரும் நினைத்தனர்.
ஆனால் மகாதேவியின் மனதில் நீருபூத்த நெருப்பாய் கண்மணி மீதான கோபம் கனன்றுகொண்டே தான் இருந்தது. ஒருநாளாவது அவளை காயப்படுத்திவிட நினைத்தார்.
மகன் வேறு முன்பு போல இல்லாமல் இப்போதெல்லாம் தன்னை ஒரு ஆராய்ச்சி பார்வை பார்ப்பதை போல உணர ஆரம்பித்தவர் அந்த கோபமும் கண்மணி மீதே விழுந்தது.
“என் மவனை முந்தானையில முடிஞ்சுகிட்டா நா மடங்கிடுவேன்னு நினைப்பா அவளுக்கு? இந்த மகாதேவிட்ட உன் வேலையை காட்டறா? விட்டு புடிக்கறேன்…” என சந்திராவிடம் சூளுரைக்க அவள் இவரை எப்படி மாற்றுவது என புரியாமல் அமைதியாக இருந்துவிட்டாள். மகாதேவி நினைத்ததை போல ஒரு நாளும் வந்தது.
அன்று வீட்டில் பூஜை இருக்க காலை கண்மணி எழும் பொழுதே மகாதேவியும் எழுந்து வந்திருந்தார்.
“கண்மணி, இன்னைக்கு பூஜை இருக்கு. அதனால எதையும் சாப்பிடகூடாது. விரதம் இருக்கனும்…” என சொல்ல புரியாமல் பார்த்தவள்,
“என்ன விரதம் அத்த? என்ன செய்யனும்?…”
“இது புருஷனுக்காக அவங்க ஆயுளுக்காக இருக்கிற நோம்பு. கார்த்திக் ஹாஸ்பிடல் கிளம்பட்டும் உனக்கு விளக்கமா சொல்றேன். நீ போய் அவனை அனுப்பிட்டு வா. மறந்திடாத இன்னைக்கு பொம்பளைங்க விரதம் இருக்கனும்…”
“சந்திரா மதினியை காணும்?…” என அவளை கேட்க,
“அவ அவளோட ப்ரென்ட் கல்யாணத்துக்கு கிளம்பிட்டா. நாளைக்கு தான் வருவா. அவங்களே வந்து கூட்டிட்டு போய்ட்டாங்க…”
“போகலன்னு சொன்னாக…” என முணுமுணுத்தபடி வேலையை பார்க்க செல்ல மகாதேவி கண்மணியை நக்கலாக பார்த்தபடி நின்றார்.
கார்த்திக் கிளம்பியதும் கண்மணியோடு பூஜை அறையில் அமர்ந்தவர் அந்த நோன்பை பற்றி சொல்லிக்கொண்டே பூஜை செய்ய கண்மணியும் அதில் ஐக்கியமானாள்.
ஆனால் நேரம் செல்ல செல்ல அவளின் பசி உணர்வு பூஜையில் அமரமுடியாமல் பந்தாடியது.
“என்ன கண்மணி உங்க வீட்ல இந்த வழக்கம் எல்லாம் இல்லையா? ரொம்ப டயர்டா தெரியற?…”
“இல்ல அத்த. எங்க வீட்ல இது கெடையாது. சாமினா எங்க முத்துகருப்பி தான் கும்புடுவோம். வேற எந்த சாமிக்கும் நோன்பு இருந்தது இல்ல…” என சொல்லியபடி மனதை ஒருநிலைபடுத்தி பூஜையில் கவனம் செலுத்தினாள்.
“இன்னும் கொஞ்ச நேரம் தான். கார்த்திக் வந்திடட்டும். அவன் வரவும் அவன்கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு நீ சாப்பிட ஆரம்பிக்கலாம்…” என சொல்லியவர் மணிகண்டனிடம் எப்படி ஆசிர்வாதம் வாங்குவார் என தோன்றாமல் போனது கண்மணிக்கு.
மனம் முழுவதும் கணவனுக்காக என கார்த்திக்கை பற்றியே நினைத்துகொண்டிருக்க, அவனின் நலனே அவளை ஆக்கிரமிக்க  அவளின் பசி அதற்கு பின்னால் சென்றுவிட்டது.
என்று மாலை நேரமே வந்துவிடுபவன் அன்று பார்த்து கார்த்திக் இரவு தாமதமாக வர கண்கள் சொருக களைப்புடன் அமர்ந்திருந்தாள் கண்மணி.
தூரத்திலேயே அவளை அவளின் சோர்வை கண்டவன் வேகமாக வர அவனில் தோளிலேயே சாய்ந்துவிட்டாள்.
“ஹேய் கிங்கிணிமங்கினி. என்னாச்சுடா?…” பதறிப்போய் அவளை தாங்கிக்கொண்டு கேட்க அதுவரை இருந்த தெம்பெல்லாம் காற்றோடு கரைய கண்ணில் மளுக்கென நீர் கோர்த்தது.
“பசிக்குதுய்யா…” என சிறு குழந்தை போல கேட்க,
“வாட்?…” என புரியாமல் பார்த்தவன் அதற்கு மேலும் தாமதிக்காமல் வேகமாய் சென்று கைகளை நன்றாக கழுவிவிட்டு ஒரு தட்டில் சாப்பாடு போட்டுக்கொண்டு வரவும் மகாதேவி தன்னறையில் இருந்து எட்டி பார்த்தார்.
“இவளுக்கு ஊட்டி வேற விடறானா? பட்டிக்காட்டு கழுதைக்கு சேவகம் வேறயாக்கும்…” என நொடித்துக்கொண்டு அதை பார்க்க விரும்பாமல் கதவை அடைத்துக்கொண்டார்.
வந்தவன் முதலில் அவளுக்கு குடிக்க கொஞ்சம் தண்ணீர் கொடுத்துவிட்டு உணவை ஊட்ட ஆரம்பிக்க வேகவேகமாய் உண்டவளுக்கு கண்ணீர் நிறைந்தது விழிகளில். அதை பார்த்தவன் மனம் தாளவே இல்லை.
“ஏன்டா சாப்பிடாம இருந்த? எப்போ இருந்து சாப்பிடலை?…” என்றதும் தான் கண்மணிக்கு ஞாபகத்திற்கு வர வேகமாய் அவனின் காலை தொட்டு வணங்கினாள் கண்மணி.
“ஏய் என்னடி பன்ற?…” என பதற நடந்ததை கண்மணி சொல்லவும் கார்த்திக்கிற்கு அனைத்தும் புரிந்தது. கோபமாய் அவளை பார்த்தவன்,
“உன் புத்திய என்ன புல்லு மேய விட்டியா? அறிவிருக்காடி? விடிஞ்சதுல இருந்து எவளாச்சும் தண்ணி கூட குடிக்காம இருந்திருப்பாளா? எங்கையாவது மயங்கி விழுந்திருந்தா என்னாகிருக்கும்? கூமுட்ட, கூமுட்ட…” என்று கொதிக்க அவனின் கோபத்தை ரசித்தபடி இருந்தவள்,
“திட்டவேணாம்னு சொல்லலை. அதுக்குன்னு ஊட்டாம திட்டினா? பசிக்கும்ல எனக்கு…” என கொஞ்ச அதில் லேசாய் சிரித்தவன்,
“இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லடி கிங்கிணிமங்கினி…” என்று அவளின் தலையில் மென்மையாய் முட்டியவன்,
“என்னன்னு பசி தாங்கின நீ?…” என்ற அதி முக்கிய கேள்வியை கேட்க,
“தெரியலை. நீங்க நல்லா இருக்கனும்னு நினைச்சுட்டே இருந்தேன். ஆனாலும் பசி. அத்த வேற சாப்பிடக்கூடாதுன்னு சொல்லிட்டாங்களா? என்ன பண்ண?…”
“ஏன் உங்க வீட்ல விரதம் இருந்ததில்லையா?…”
“ம்ஹூம், இருந்திருக்கோமே. வெரதம் அன்னைக்கு மூணு வேளையும் வாழை இலையில சாப்பிட்டா வெரதம்னு தான் எங்க வீட்ல சொல்லுவாக. நானும் அதத்தேன் வெரதம்னு நெனச்சேன். சாப்புடாம இருக்கறது வெரதம்னு எனக்கு தெரியாதே?…” பாவம் போல சொல்லியவளின் தன்மையில் பணியாய் உருகினான் கார்த்திக்.
“நீ என் கிங்கிணிமங்கினிடி…” என கொஞ்ச,
“போதும், பாயாசம் ஊத்திட்டு வாங்க. தூக்கம் வருது…” என்றதும் சிரித்துக்கொண்டே எழுந்து சென்றவன் கையை கழுவிவிட்டு பாயாசத்துடன் வந்தவன்  தனக்கும் சேர்த்தே கொண்டுவந்தான்.
“மொதல்ல சாப்புடுங்க. பொறவு இத குடிக்கலாம்…” என சொல்ல,
“உங்க மாரிமுத்து மாமா இன்னைக்கு வடையும், கொழுக்கட்டையும் சாப்பிட கொண்டு வந்துட்டார். எனக்கு  அதுவே போதும். ஃபுல்பில் ஆகிடுச்சு. பாயாசத்தை குடிச்சுட்டு தூங்குவோம்…” என்றதும்,
“என்ன கொழுக்கட்டையும், வடையுமா? நீ மட்டும் மொக்கிட்டியா? அடப்பாவிமனுஷா அத எனக்கு ஏன்யா குடுக்கல?…” என அவனின் சட்டையை பிடிக்க வெடிசிரிப்பு சிரித்தவன்,
“உன்னோட இதே பொழப்பா போச்சுடி எனக்கு. சாப்பாட்டை குடுக்கலைனா என் கழுத்தை கடிச்சுடுவ. அம்மா தாயே கொண்டுவந்திருக்கேன். உஷ்ணபடாத…” என்று எடுத்துவந்து அதை குடுக்க,
“மொதல்லயே குடுத்திருக்கலாம்ல. இப்ப வவுத்துல எடமில்ல எனக்கு…” என சோகமாக முகத்தை வைத்து சொல்ல வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்தான் கார்த்திக்.
“உலகத்துலையே உன்னை மாதிரி கவலைபட நீ மட்டும் தான் கிங்கிணிமங்கினி. நீ சோ ச்வீட் கண்மணி…” என செல்லம் கொஞ்ச வெட்கத்தில் சிரித்தவள்,
“சரி இத நான் கொண்டு போய் நம்ம ரூம்ல வச்சுடுதேன். வரப்ப ராத்திரி பசிக்கறப்ப சாப்புட்டுக்குவேன்…” என்றபடி அந்த தூக்குவாளியை தூக்கிக்கொண்டு அவள் உள்ளே சென்றுவிட அவளையே பார்த்தபடி நின்றவன் மகாதேவியின் அறையையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு உறங்க சென்றான்.
இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட கார்த்திக்கால் முடியவில்லை. மறுநாள் எப்படியும் மகாதேவியிடம் பேசிவிடுவது என முடிவெடுத்தான். அதன் படி அன்றைய தனது வேலையை இரவு நேரத்திற்கு மாற்றினான்.
“நீ இன்னும் ஹாஸ்பிட்டல் கிளம்பலையா கார்த்திக்…” என்றபடி சந்திரா வர,
“இனிமே தான். நீ என்ன கல்யாணத்துக்கு போய்ட்டு இவ்வளவு சீக்கிரம் கிளம்பி வந்துட்ட?…” என கேட்க,
“கொஞ்சம் ஹெல்த் இஷ்யூஸ். அதான்…” என்றவள் கண்மணியை தேட மகாதேவியும் வந்துவிட்டார்.
“என்ன கார்த்திக் இந்நேரம் நீ கிளம்பி இருக்கனுமே?…”
“நைட் ட்யூட்டி கேட்ருக்கேன்ம்மா…” என சொல்லி சாப்பிட ஆரம்பிக்க மகாதேவியும் அவனோடு சேர்ந்தே சாப்பிட்டார். சந்திரா சாப்பிட்டுவிட்டே வந்துவிட்டதால் அவர்களுக்கு பரிமாறினாள்.
“நீ உக்காருக்கா நாம எடுத்து வச்சுப்போம்…”
“எங்கடா கண்மணியை காணும்?…”
“பெரியம்மாவுக்கு உடம்புக்கு முடியலையாம். அதான் கண்மணி டிபன் செஞ்சு எல்லாருக்கும் எடுத்துட்டு போய்ருக்கா. இப்ப வந்துடுவா…” என்றவன்,
“அக்கா நீ இந்த விரதம் எல்லாம் இருந்திருக்கியா? அதாவது உன் புருஷன் ஆயுளுக்காக இருப்பாங்களே அந்த விரதம்?…” என்றதும் சந்திராவிற்கு குழப்பமாக இருக்க மகாதேவி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு மகனை பார்த்தார்.
“நம்ம வீட்ல இந்த வழக்கம் இல்லையே கார்த்திக். புருஷனுக்கு கோவிலுக்கு போவோம், வேண்டிப்போம். இது என்ன புதுசா?…”
“உனக்கு தெரியாதுல, நேத்து நம்ம வீட்ல அந்த பூஜை நடந்திருக்கு. விரதமும் இருந்திருக்காங்க…”
“நிஜமாவாடா? கண்மணி வீட்ல இது வழக்கமா?…” என அப்பாவியாய் சந்திரா கேட்க மகாதேவிக்கு தவிப்பாய் போனது. நேற்று இதை செய்யும் பொழுது கூட ஒன்றும் தோன்றவில்லை. இப்பொழுது என்னவோ போல் இருந்தது.
“ம்ஹூம், கண்மணி வீட்லையும் இந்த வழக்கம் இல்லை. நம்ம வீட்ல தான் இது வழக்கமாமே? அதான் உன்கிட்ட கேட்டேன்…” என்றதுமே சந்திராவிற்கு புரிந்துபோனது இது மகாதேவியின் வேலை என்று.
“முன்னபின்ன தெரியாதவங்க பசின்னு வந்தாலே உருகிப்போய் இரக்கத்துல சாப்பாடு போடறது தான் தாய்மை. பெத்த பிள்ளைங்க பசியை கூட பொறுக்காத அம்மா தன் மகனோட வாழ்க்கையை, சந்தோஷத்தை, அவங்க வம்சத்தை வளமாக்க வந்த மருமகட்ட மட்டும் ஏன் அந்த தாய்மையை காமிக்கறது இல்ல?…”
“கார்த்திக் என்னடா?…” சந்திரா வருத்தமாக கேட்க,
“எவ்வளவு கல் நெஞ்சம் பாரேன் மருமகன்னு வந்தா? உன்னதமான அந்த தாய்மை கூட மாமியாரா மாறிட்டா அந்த குணம் எப்படி குரூரமா மாறிடுது. மருமக பசில தவிக்கிறத பார்த்து சந்தோஷப்படறது எல்லாம் அம்மாவா? சொல்லு?…”
கார்த்திக் கேட்ட ஒவ்வொன்றும் மகாதேவிக்குள் பெரும் வேதனையை உண்டாக்கியது. அந்தஸ்து பார்த்து கண்மணியை ஏற்றுகொள்ள மறுத்தவர் இன்று தன் தவறை மகன் சுட்டிக்காட்டியதும் ஏனோ கலங்கிபோனார். அதிலும் தன் தாய்மையை சொல்லியது அவரை பாதித்தது.
“நேத்து கிறங்கி போய் பசி மயக்கத்துல உட்கார்ந்திருந்தாக்கா.  அவ வீட்ல எப்படி பார்த்து பார்த்து வளர்த்திருப்பாங்க. இங்க வந்து இப்படி ஒரு வேளை சாப்பாட்டுக்கு. ப்ச்…” என்று உணவு மேஜையின் மேல் தன் கோபத்தை காட்டியவன் கண்மணி வருவதை கண்டு முகத்தை மாற்றிகொண்டான்.
“மதினி, இப்பத்தான் வந்தீகளா? சாப்புடுதீகளா?…” என கேட்டுக்கொண்டே சந்திராவிற்கும் ஒரு தட்டு வைக்க,
“வேண்டாம் கண்மணி, இருக்கட்டும். நீ சாப்பிடு முதல்ல…” என சொல்ல,
“இம்புட்டு நேரமா சாப்புடாம இருப்பேன். அப்பவே சாப்ட்டுட்டேன்…” என்றதும் கார்த்திக்கிற்கு சிரிப்பு வந்துவிட்டது.
“இவருக்கு சாப்பாட்ட பத்தி நா பேசினாலே சிப்பாலு வந்துடும் சிப்பாலு….” என அவனை கிண்டல் பேச,
“நீ ஏன் நேத்து நைட் வரை சாப்பிடாம இருந்த கண்மணி? உடம்பு என்னத்துக்காகறது?…”
“நல்லா கேட்டீங்க போங்க. பசில நேத்து நான் என்ன கூத்து பண்ண தெரிஞ்சேன் தெரியுமா? அரை மயக்கத்துல பாயாசத்துல பாலுக்கு பதிலா பால்டாயில கலந்துருப்பேன். நல்ல வேளை முத்துக்கருப்பி காப்பாத்திட்டா….”
கண்மணி மகாதேவியை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே இதை சொல்ல கார்த்திக் பேசியதில் ஏற்கனவே குற்றவுணர்வில் இருந்தவர் இப்பொழுது கண்மணி சொல்லியதில் மூச்சே நின்றுவிட்டது.
“வயிறு காலியா இருந்தா எனக்கு ஒண்ணுமே ஓடாது மதினி. ஏடாகூடமா என்னைத்தையாச்சும் பண்ணிப்புடுவேன். நேத்து பசிக்கு உசுரு பொழச்சதே பெருசு…”  
அவள் சொல்லிய நிமிடம் அங்கிருந்து எழுந்து சென்றார் மகாதேவி. கார்த்திக்கும், சந்திராவும் வீடே அதிர சிரிக்க கண்மணிக்குமே புன்னகை தான்.
“யார்க்கிட்ட, இந்த பயம் எப்பவும் இருக்கனும் மாமியாரே…” என மகாதேவியை பார்த்தாள் கண்மணி.
மகாதேவியை பயம் காட்டதான் அப்படி அவள் சொல்லியது. ஆனாலும் மகாதேவிக்கு தன்னை பிடிக்கவில்லை என்று நினைக்கும் பொழுது கொஞ்சம் வருத்தமும் சேரத்தான் செய்தது.
ஆனால் அதையெல்லாம் வெளிகாட்டிக்கொள்பவளா கண்மணி? அவளுக்கு தெரியும் குடும்பம் என்று வந்தால் இப்படியும் இருக்கும் என்று. இதை விட பிரச்சனையான குடும்பங்களையும் பார்த்து வளர்ந்தவள் தான்.
அதை அனுசரித்து போகும் வித்தை கண்மணி அறிந்தே இருந்தாள். அதனால் மகாதேவியின் செயல்களை அவள் எளிதாக கடந்துசென்றாள்.
கார்த்திக்கும் கண்மணியும் இதை இப்படியே விட்டுவிட்டாலும் மணிகண்டனின் காதிற்கு இங்கு நடந்தது அனைத்தும் சென்றது.
அடுத்து செய்யவேண்டியதை முடிவு செய்த மணிகண்டன் அதை செயலாற்றவும் செய்தார்.

Advertisement