Advertisement

மணியோசை – 12
          விடியற்காலை வழக்கமான நேரத்தில் கண்மணி கண்விழிக்க அவளை அணைத்தவாறு படுத்திருந்தான் கார்த்திக். அவள் அசைந்த சலனத்தில் அவனின் உறக்கமும் கலைய அவளை எழ முடியாதபடி மீண்டும் அணைக்க,
“இந்த வேல தான வேண்டாம்ன்றது. விடுங்க என்ன…” என்று அவனை விட்டு திமிறி எழுந்தவளின் கையை பிடித்தவன்,
“ஏய் கிண்கிணிமங்கினி, இங்க மாடும் இல்ல. உங்கம்மா, பெரியம்மாவும் இல்லை. இப்பவே குளிக்கனும்னு இல்லை. இந்நேரம் இங்க யாரும் கோலம் போடறதும் இல்ல…” என்று அவள் விரல்களுக்கு முத்தமிட்டுக்கொண்டே சொல்ல அங்கமெங்கும் கூச நின்றவள்,
“அய்யோ விடுங்கன்றேன்ல. எதுவும் இல்லனாலும் நா குளிக்கனும்…”
“டைம் இன்னும் அஞ்சு கூட ஆகலைடி…” சலிப்பாய் கார்த்திக்கும் எழுந்து அமர,
“கோலம் போட வேணாமா?…”
“பொன்னி அக்கா வந்து கோலம் போடுவாங்க. அவங்க வர ஆறு மணி ஆகிடும். ப்ச் நீ வா கிங்கிணிமங்கினி…” என அவளை பிடித்து இழுக்க,
“அடப்பாவி மனுஷா? இது வீடா இல்ல வேற எதுவுமா? போயா அங்கிட்டு…” என அவனை ஒரே தள்ளாக தள்ளியவள் தனது உடுப்பை எடுத்துக்கொண்டு குளிக்க சென்றுவிட தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான்.
வேகமாய் குளித்து முடித்து வந்தவள் அவனையும் இழுத்துக்கொண்டு கீழே வந்தாள். எதெது எங்கிருக்கிறது என கேட்டு வாசலை கூட்டி தண்ணீர் தெளிக்க ஆரம்பித்தவள் வாயில் மகாதேவி அரைபட்டுகொண்டிருந்தார்.
“வளந்ததும் சரியில்ல, வளத்ததும் சரியில்ல. விடிஞ்சு கண்ணு முழிச்சா வீடு விளங்குமா?…” என கோலமிட்டு முடிக்க கார்த்திக் இரண்டு காபி கப்புகளுடன் வந்தான்.
அதுவரை இருந்த எரிச்சல் மறைந்து அவனை பார்த்ததும் முகம் புன்னகை பூச அவனருகே வந்து அமர்ந்தாள்.
“நீங்களே போட்டீகளா?…” என்றபடி காபி கப்பை வாங்கிக்கொண்டு கேட்க,
“ஹ்ம்ம் மேடம் வேற காலை காபி பத்தி அவ்வளவு ரசிச்சு சொல்லியிருந்தீங்க. அதான் ப்ரிட்ஜ்ல பால் இருந்தது. நானே எடுத்து போட்டுட்டேன். எப்டி இருக்கு?…” என்று புருவம் உயர்த்த குடித்துகொண்டிருந்தவள்,
“இங்க பக்கத்துல மாடு எதுவும் வளக்கலையா? வாச தெளிக்க சாணி கூட இல்ல. இந்த பால்ல போட்ட காபி சுமாரா இருக்கு. அம்மா வீட்டு பால் எம்புட்டு ருசியா இருக்கும் தெரியுமா?…” என்று அவன் பேசியதை கவனிக்காமல் இவளே ஆரம்பிக்க கார்த்திக் முறைத்தான்.
“இப்ப என்ன தப்பா கேட்டுட்டேன்னு மொறக்கிறீக?…”
“கிங்கிணிமங்கினி உனக்காக நான் பாக்காத வேலையெல்லாம் பார்த்து வச்சா அதப்பத்தி பாராட்டாம மாடு, சாணின்னு பேசிட்டு இருக்க?…”
“இப்ப என்ன பெருசா பண்ணாதாத பண்ணிட்டீக? நானா கேட்டேன் காபி தாங்கன்னு. உண்மைய சொன்னேன். அது தப்பா?…” என காபி கப்பை கீழே வைத்துவிட்டு எழுந்து நின்று கேட்க,
“ஆத்தா முதல்ல உக்காந்து இந்த காபிய குடி. இனி நான் கேட்கவே மாட்டேன். ஊரே தூங்கிட்டு இருக்கு. உன் சத்தத்துல என்னமோன்னு எழுந்து வந்துடாம…” என கார்த்திக் சரணாகதி ஆக அவனின் பாவனையில் சிரித்தவள்,
“சமத்து டாக்டர்…” என அவனின் கன்னம் கிள்ளிவிட்டு உள்ளே சென்றாள். அவள் சென்ற பின் அதே புன்னகையோடு மிச்சம் இருந்த காபியை குடித்தவனுக்கு அந்த காலை பொழுது ரம்யமாக இருந்தது.
“இனி தினமும் நம்ம கிங்கிணி மங்கினிக்கு நாம தான் காபி குடுத்து இப்படி சேர்ந்து உட்கார்ந்து குடிக்கனும். செம பீல் குடுக்குது” என நினைத்துகொண்டான் கார்த்திக்.
அந்த வீட்டில் கண்மணியின்  கை ஒங்க ஆரம்பித்தது. காலையில் நேரத்தில் எழுந்துவிடுபவள் தன் வீட்டில் பேச்சியும் சங்கரியும் எப்படி இருப்பனரோ அதே போல நடந்துகொண்டாள்.
அந்த ஏரியாவில் மாடு எங்கே வைத்து வளர்கின்றனர் என விசாரித்து தினமும் வீட்டிற்கே பாலை கொண்டுவந்து கொடுக்கும் படி பேசிவிட்டாள். சாணம் கரைத்து வாசல் தெளித்தாள். வேலையாள் பொன்னியிடம் இயல்பாய் நட்பு பாராட்டினாள்.
அந்த வீட்டில் கண்மணி கொடுத்த மாற்றம் சந்திராவிடம் கூட பிரதிபலிக்க ஆரம்பித்தது. அவளும் கண்மணியோடே காலை எழுந்து அவளின் ரசனையை பின்பற்ற ஆரம்பித்தாள்.
கார்த்திக் ஹாஸ்பிட்டல் கிளம்பியதும் வீட்டு வேலையை முடித்துக்கொண்டு அவ்வப்போது சந்திராவை அழைத்துகொண்டு அவர்களின் உறவினர்கள் வீடுகளுக்கு சென்று வருவாள்.
வீட்டில் சின்ன சின்னதாய் கண்மணி கொண்டுவரும் மாற்றம் மகாதேவிக்கு பெரும் இடியாய் இருந்தது. கண்மணியின் கை ஓங்கி தன் சலுகை குறைவதை போல நினைக்க ஆரம்பித்தார்.
அதிலும் கண்மணியை அனைவரும் பாராட்ட மகாதேவியால் தாளமுடியவில்லை. மகனிடமும், மணிகண்டனிடமும் எதுவும் சொல்ல முடியாது. சந்திராவிடம் பொருமி தள்ள அவளால் கேட்கமுடியாமலும் தாயை அதட்ட முடியாமலும் அவஸ்தையாய் நிற்பாள்.
கார்த்திக் ஹாஸ்பிடலுக்கு சென்று திரும்பும் நேரம் எல்லாம் கண்மணி வீட்டில் எதையாவது குடுத்தனுப்பிகொண்டே இருந்தனர். அதனால் சம்பந்தகாரர்களையும் குறை சொல்ல முடியாமல் எரிச்சலுற்றார்.
“பாத்தியாடி சந்திரா சோத்த குடுத்து கவுக்க பாக்குதுக அந்த பட்டிக்காட்டு கும்பல்…” என கண்மணியின் காதுபடவே அவ்வப்போது பேசிவைக்க,
“பட்டிக்காட்டு பொண்ணு வேண்டாம்னா எதுக்கு தேடி வந்தீக?. பேசறத பாத்து பேசனும் அத்த. ஒரு நேரம் மாதிரி ஒரு நேரம் நா இருக்கமாட்டேன்…” என ஒரு முறைப்புடன் கடந்துவிட்டாள் கண்மணி.
“இந்த தீனி தின்னா குடும்பம் காலணா மிஞ்சுமா?…” என கேட்க,
“எம்புருசன் சம்பாத்தியம், இதுக்கு மேலையும் திம்பேன். கேக்கறதுனா ஒங்க மவன்ட்ட கேளுங்க…” என்று அவள் ஒரு போடு போட கம்மென்று இருந்தார்.
ஆனால் கண்மணிக்கு அது பொறுக்கவில்லை. அப்படி ஒரு கோபம் வந்தது சாப்பாட்டை பற்றி சொல்லியதும்.
திருமணம் முடிந்து ஒன்றரை மாதங்கள் கடந்து மணிகண்டனும், தவமும் மீண்டும் வெளிநாடு கிளம்பிவிட மகாதேவிக்கு இன்னும் வசதியாய் போனது. முழு நேரமும் வேறு எதையோ பேசுவதை போல பேசி கண்மணியிடம் மூக்குடைப்பும் வாங்கியவண்ணம் தான் இருந்தார். ஆனாலும் அடங்கவில்லை.
அன்று கண்மணியை பார்க்க சங்கரியும், பேச்சியும் வந்திருக்க மதிய உணவு சமைக்க வேண்டிய அவசியமின்றி கண்மணிக்கு பிடித்ததாக சமைத்து எடுத்துவந்துவிட சந்திராவும் அவர்களுடன் பேசிகொண்டிருக்க அவர்கள் இருக்கும் வரை நன்றாக பேசிக்கொண்டு தான் இருந்தார் மகாதேவி.
சங்கரியும், பேச்சியும் சாப்பிட்டுவிட்டு கிளம்ப அவர்களை அனுப்பிவிட்டு வந்த கண்மணி தலை வலிப்பதை போல இருக்க தனக்கு டீ தயாரிக்க சென்றாள்.
“யாருங்கம்மா ஆட்டோல வந்துட்டு போறாங்க?…” என கடைக்கு சென்றிருந்த பொன்னி வந்து கேட்க,
“என்னத்த சொல்ல? இந்த வீட்டு மூதேவிய பாக்க அவ வீட்டு மூதேவிங்க வந்துட்டு போகுதுங்க…” என எள்ளலாக சொல்லிவிட்டு கடக்க பொன்னிக்கு திக்கென்றானது.
“அம்மா, கண்மணி காதுல விழுந்துட போகுது…” என சங்கடத்துடன் சொல்ல,
“எனக்கென்ன பயமா? விழட்டுமே…” என்றபடி சோபாவில் அமர,
“அம்மா போதும் வாயடக்கி பேசுங்க. இவ்வளோ நேரம் நல்லா தானே இருந்தீங்க?…” என சந்திரா வர,
“பின்ன என்னடி, என் மகனுக்கு அவன் படிச்சதுக்கு இப்படி ஒரு பொண்ணை கட்டனும்னு தலையெழுத்தா என்ன? மூதேவிய மூதேவின்னு தான் சொல்லனும்…”
“நா மூதேவின்னா அப்ப நீங்க யாராம்?…” என வந்து நின்றாள் கண்மணி. அவளை பார்த்து ஒரு நொடி திடுக்கிட்டாலும் அதை காட்டிகொள்ளாமல் எழுந்து தன்னறைக்கு செல்ல பார்த்தார் மகாதேவி.
“ப்ச் நில்லுங்கன்றேன்ல. பதில் சொல்லுங்க. நீங்க யாரு?…” என கண்களை உருட்டிக்கொண்டு கேட்க மகாதேவிக்கு நடுக்கம் பிறந்தது. ஆனாலும் இவளிடம் காட்டுவதா என்கிற ஈகோ அவரின் கண்ணை மறைக்க,
“நான் இந்த வீட்டு ஸ்ரீதேவிடி. இந்த வீட்டோட அதிர்ஷ்ட லட்சுமி…” என திமிராய் சொல்ல,
“ஒரு வீட்ல ஸ்ரீதேவியும், மூதேவியும் இருக்க முடியுமா? முடியாதே. இந்த வீட்ல நா மூதேவின்னா நீங்களும் மூதேவி தான். நீங்க ஸ்ரீதேவின்னா நானும் ஸ்ரீதேவி தான். புரியுதா? இனிமே இந்த வார்த்த உங்க வாயில இருந்து வந்தா நா உங்கள அதே வார்த்த சொல்லித்தான் கூப்புடுவேன்…” என்றவள்,
“யாரு யாரப்பாத்து இந்த வார்த்தைய சொல்லுதது? எங்கம்மாவும், பெரியம்மாவும் எனக்கு சாமி மாதிரி. அவுகள பேசனுனா எம்புட்டு தகிரியம் இருக்கனும்? அன்னைக்கு சீர்வரிச வந்து இறங்கினப்ப வாயெல்லாம் பல்லை காட்ட தெரிஞ்சுச்சு. அன்னைக்கு சொல்லிருக்கவேண்டியதான?…”
“கண்மணி அம்மா ஏதோ தெரியாம…” சந்திரா கண்மணியை சமாதானம் செய்ய முயல,
“மதினி நீங்க கம்முன்னு இருங்க…” என சொல்லி,
“இங்காருங்க, உங்க மவன் என்ன புடிச்சு கட்டிகிட்டாரு. புடிக்கிறதுக்கு எதுக்கு படிப்பு, பகட்டான வீடு, பணமும், வசதியும்? மனசுதேன் முக்கியம். என்னவோ எனக்கு பெரிய வாழ்க்க குடுத்துட்ட மாதிரியில்ல அதிசயமா பேசுதீக? இந்த கண்மணி ஒன்னும் கொறஞ்சவ இல்ல…”
“நாங்க ஒன்னும் உம்ம மவன கட்டிக்க வேண்டி விரும்பி தவங்கிடக்கல. இந்த வீட்டு பெரியமனுஷர் தான் எங்க வீட்டு வாசலேறி வந்து பொண்ணு குடுங்கன்னு நின்னாரு. அன்னைக்கு தடுத்துருக்க வேண்டியதான?…”
“நா பத்தாப்பு தான் படிச்சிருக்கேன். இப்ப அதுக்கு என்னவாம்? இது தெரியாமலா உம்மவன் எங்கழுத்துல தாலி கட்டுனாரு? இல்ல உங்கட்ட மறைச்சாரா? என்ன பொண்ணு கேக்க முந்தியே எல்லா வெவரமும் உங்களுக்கு தெரியும் தான? வேண்டாம்னு சொல்லிருக்க வேண்டியதான?…”
“உமக்கு பிடிக்கலைன்றத என்ன கட்டிட்டு வந்து என்னோட உம்மவன் குடும்பம் நடத்துன பின்னால தான் காமிப்பீகளோ? ஏன் இப்ப உம்புள்ள வரட்டும் வெவரத்த இப்பவே பேசி மூதேவி ஸ்ரீதேவி யாருன்னு பைசல் பண்ணிடுவோம். பண்ணட்டுமா?…” என மிரட்டலாய் கேட்க மகாதேவி ஆடியே போனார்.
“இங்காருங்க இந்த கண்மணி வேற மாதிரி. முன்னவிட்டு பின்ன பேசறது சாட ஏசறதுன்னு எங்கிட்ட வச்சுகாதீக. அப்பறம் நல்லா இருக்காது சொல்லிட்டேன். இது என்குடும்பம்னு நெனச்சுதேன் உம்ம சலம்பளுக்கு கம்முன்னு கெடக்கேன்…”
“அதும் எம்புருசன் மொகத்துக்காக போனா போகுதுன்னு விடறேன். இன்னொருக்கா இந்த பேச்சு பேசுனீக இன்னொரு கண்மணிய பாக்கவேண்டியதாகிடும். அடுத்த வீட்டு புள்ளன்னா அம்புட்டு எளக்காரமா? இதே எங்கூருல எவளாச்சும் பேசியிருந்தா வகுந்திருப்பேன். மாமியாராச்சேன்னு பாக்கேன்…”
படபடவென பேசியவள் தன் அறைக்குள் சென்றுவிட பொன்னி வாங்கிவந்த சாமான்களை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றார்.
மகாதேவிக்கு இன்னும் படபடப்பு அடங்கவில்லை. அவருக்கு தெரியவில்லை கண்மணியின் சுபாவமே இப்படித்தான் என்று. ஒளித்து மறைத்து பேசும் குணம் என்றுமே அவளிடம் இல்லை என்று. பேசினால் வெட்டு ஓன்று துண்டு இரண்டு என்பதை போல தான் என புரியாமல் போனது மகாதேவிக்கு. கண்மணி எகிறியதில் அவரின் ரத்த அழுத்தம் உட்சதிற்கு சென்றது.
“பாத்தியாடி சந்திரா உன் தம்பி பொண்டாட்டி பேசினத. என்னவோ அடிக்க வரவ மாதிரி மட்டு மரியாதை இல்லாம ஆணவத்துல பேசிட்டு போறா. இருக்கு அவளுக்கு…” என அப்பொழுதும் வார்த்தையை விட,
“அம்மா போதும். பேசாம நீங்க போய் படுங்க. சும்மா எதையாச்சும் பேசி வாங்கி கட்டிக்காதீங்க…” என சந்திராவும் சத்தம் போட இப்போதைக்கு அமைதியாக இருப்போம் என நினைத்தார் மகாதேவி.
கார்த்திக் மாலை வீட்டிற்கு வந்ததும் கண்மணியை தேட அவளோ வீட்டை சுற்றி பெருக்கிகொண்டிருந்தாள்.
“கண்மணி…”
“அட அதுக்குள்ளே வந்துட்டீக? இன்னைக்கு ஒருத்தரும் ஆஸ்பத்திரிக்கு வரலியோ?…” என கேட்டுகொண்டே தன் வேலையை தொடர,
“என்ன பிரச்சனை வீட்ல?…” அவளை நிறுத்தி கேட்க அவனை கூர்மையாய் பார்த்தவள்,
“உமக்கு யாரு சொன்னா?…”
“பொன்னியக்கா தான். உனக்கு போன் பண்ணினேன். நீ எடுக்கலை. கிட்சன்ல வச்சிட்டு போய்ட்டான்னு சொல்லி நடந்ததை சொன்னாங்க. நீ சொல்லு. நான் அம்மாட்ட கேட்கறேன்…”
“இந்தாருடா, அம்மாட்ட போய் என்ன கேப்பீகளாம்? போமய்யா அங்கிட்டு வேலைய பாத்துக்கிட்டு. மொதல்ல அந்த பொன்னியக்கா வாய அடைக்கனும். வீட்டு வெவகாரத்த ஆருக்கிட்டயும் சொல்லப்படாதுன்னு…”
“ப்ச், அவங்க என்கிட்டே தான சொன்னாங்க. நீ ஒன்னும் மனசுல வச்சுக்காத. நான் பார்த்துக்கறேன்…” என அவளின் கன்னம் பற்ற,
“யோவ் என்ன நினைச்சிட்டு கேக்குதீக? நா கண்மணி. உங்கம்மாலாம் எனக்கொரு விஷயமே இல்ல. இத கூடவா சமாளிக்க முடியாது? பொறவு எனக்கு என்ன மரியாத இருக்கு. இத பாத்துக்க எனக்கு தெரியும். என்ன கேட்கனுமோ அவுகட்ட நா கேட்டுட்டேன்…” என அவனின் வாயடைக்க,
“அம்மா பேசினதுக்கு நான் கேட்கவேண்டாமா?…”
“வேணாங்கறேன். மொதல்ல வீட்டு ஆம்பளையா எல்லாத்துக்கும் தலையாட்ட பழகுங்க. நா புகார் சொன்னா என்கிட்டே மண்டைய ஆட்டுக. உங்கம்மா சொன்னா அவுகட்டையும் சரின்னு போங்க. அதுதேன் புருஷலட்சணம். புரியுதா?…” என்றதற்கு அவனும் தன்னைப்போல தலையசைக்க,
“அது. இப்படியே இருங்க. எனக்கு சப்போர்ட்டா உங்கம்மாட்டையும், அவுகளுக்கு சப்போர்ட்டா என்னட்டையும் வந்து நிக்காதீக. மாமியார் மருமகளுக்குள்ள ஆயிரம் இருக்கும். நாங்க பாத்துப்போம். இப்ப போய் பொங்கறத நிப்பாட்டிட்டு துணி மாத்திட்டு வாங்க. காபி தரேன்…” என்று சொல்லி அவனுக்கு முன்னால் கண்மணி செல்ல,
“இவ என்னை என்ன செய்ய சொல்றா? அம்மா கம்ப்ளைன்ட் பண்ணா கேட்கனும்னு சொல்றா. அவங்கட்ட கொஸ்டின் கேட்காதன்னும் சொல்றா. பைத்தியமாக்கற என்னை…” என குழம்பிப்போய் நின்றான்.
இவனின் கார் சத்தத்தை கேட்டு வெளியில் வந்த மகாதேவி கார்த்திக்கிடம் பேச வர அவனின் பார்வையில் அப்படியே நின்றுவிட்டார். அவரை நெருங்கியவன் ஒரு முறைப்புடன் ஒரு வார்த்தையும் பேசாமல் கடந்துவிட்டான்.
“கார்த்திக்…” என்கிற அவரின் அழைப்பு அவனுக்கு எட்டினாலும் திரும்பவில்லை.
அவனின் இந்த பாராமுகம் கண்மணியின் மேல் வெறுப்பாய் மாறியது மகாதேவி மனதில்.
அந்த நிமிடம் நின்று என்னவென்று கேட்டிருந்தால் கூட மகாதேவிக்கு தன் தவறு தெரிந்திருக்குமோ என்னவோ அவன் கண்டுகொள்ளாமல் சென்றது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மகாதேவிக்கு.

Advertisement