Advertisement

மணியோசை – 11
           கண்மணியின் பார்வையை கண்ட மகாதேவியுனுள் ஏதோ பதட்டம் வந்தது.  இவளிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என நினைத்த மகாதேவி முகத்தை சிரித்தபடி வைத்துக்கொண்டு மற்றவர்களை கவனிக்க ஆரம்பித்தார்.
சங்கரிக்கும் பேச்சிக்கும் மகாதேவியின் கவனிப்பு கொஞ்சம் ஆறுதலாய் இருக்க கட்டிக்கொடுத்துவிட்ட பின் இனி எதையும் நினைக்க கூடாது என நினைத்தனர்.
மதிய விருந்து தடபுடலாய் ஏற்பாடாகி இருக்க அனைவரும் சாப்பிட்டுவிட்டு நான்கு மணியை போல கிளம்பும் பொழுது ஆயிரமாயிரம் புத்திமதிகளை கண்மணிக்கு சொல்லி அங்கிருந்து கிளம்பினார்கள் கண்மணி குடும்பத்தார்.
அனைவரும் சென்ற பின்னர் மகாதேவி சொந்தங்களாவது இருப்பார்கள் என கண்மணி நினைத்திருக்க அடுத்த அரைமணி நேரத்தில் அந்த பெரிய வீடே காலியானது.
இதை எல்லாம் புதிதாய் பார்ப்பதை போல பார்த்தவள் கார்த்திக்கிடம் கேட்கவும் செய்தாள்.
“உங்க சொந்தக்காரவக யாருக்கும் ஒட்டுக்கா இருந்து பழக்கமில்லையோ? கல்யாணத்துக்கும் வந்துட்டு யாரும் சரியா பேசவேல்ல. இங்கயாச்சும் இருப்பாகன்னு பாத்தா அடிச்சு புடிச்சு கிளம்பிட்டாக?…” என்றதற்கு கார்த்திக் அமைதியாக இருக்க,
“உம்ம தான கேக்குதேன். எல்லாருக்குமா வெளியூரு? கிளம்புனவுகள ஒத்த வார்த்த இருந்து நாளைக்கு போன்னு உங்கம்மா சொல்லலையே. வெரட்டுற மாதிரி பாக்குதாக?…” என மீண்டும் கேட்க,
“இல்ல கண்மணி, பாதி பேர் உள்ளூரு தான். ரெண்டு வீடு தள்ளி என்னோட பெரியப்பா வீடு. நம்ம வீட்டுக்கு பின்னால இருக்கற தெருவுல மாமா வீடு, இன்னொரு அண்ணன் வீடு. ஆனா யாரும் தங்கமாட்டாங்க…”
மிகுந்த கவலையோடு அவன் சொல்லியவிதமே கண்மணிக்கு பொறிதட்டியது.
“மூஞ்சில முள்ள கட்டினது மாதிரி பாத்தா யாருக்குத்தேன் இங்க இருக்க மனசிருக்கும்?…” என சட்டென சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டால் கண்மணி.
அவளின் பேச்சில் ஒரு ஷணம் துணுக்குற்றவனுக்கு பின் அவள் சொல்லிய விதத்தில் சிரிப்பு வந்தது.
“இனி நல்லா பொழுது போகும்டா கார்த்திக்…” என்றபடி தவம் வந்து அமர,
“என்ன மாமா சொல்றீங்க?…” என அவனை பார்த்து கார்த்திக் கேட்க,
“நம்ம கண்மணி தங்கச்சி பரிமாற வந்தவங்கள மாடியில நல்லா கவனிச்சிட்டு இருக்கு. எல்லாவனும் கிலி புடிச்சு போய் நிக்கிறானுங்க…” என்றதும் தவத்துடன் வேகமாய் மாடியேறினான் கார்த்திக்.
மேலே மாடி ஹாலில் இருந்த பொருட்களை எல்லாம் அப்புறப்படுத்தி அங்கு தான் பந்தி வைத்திருந்தனர். அதனால் மிஞ்சிய உணவுகள் அனைத்தும் அங்கே இருந்தது.
“உங்க இஷ்டத்துக்கு இருக்கற சாப்பாட்டை எல்லாம் தூக்கிட்டு போனா என்ன அர்த்தம்? இங்க என்ன அம்புட்டும் அனாமத்தாவா கெடக்குது?…” என்று புடவையை தூக்கி சொருகி வரிந்துகட்டிக்கொண்டு அங்கிருந்தவர்களை முறைத்தபடி நின்றாள் கண்மணி.
மணிகண்டன் ஒரு வேலையாக வெளியில் சென்றிருக்க மகாதேவி எப்போதடா உறங்குவோம் என்று பார்த்து அனைவரும் கிளம்பவும் சென்று படுத்துவிட்டார். அங்கே சந்திரா மட்டும் கையை பிசைந்து கொண்டு நின்றிருந்தாள்.
“என்னக்கா என்னாச்சு?…” என்றபடி வந்த கார்த்திக் அப்பொழுது தான் கண்மணியை பார்க்க,
“ஹேய் கண்மணி என்னாச்சு?…” என வர,
“இந்த பசங்க எல்லாரும் மிஞ்சின சாப்பாட்டை யாருக்கும் கேட்காம தூக்கி வச்சிட்டு இருக்காங்க. என்னன்னு கேட்டா எப்பவும் அப்படித்தான்னு சொல்றானுக. இங்க என்ன சாப்பிட ஆளா இல்ல? இல்ல இம்புட்டையும் சும்மா தூக்கி குடுக்கற அளவுக்கு கொட்டிகெடக்கா?…” என கேட்க என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் கார்த்திக் நின்றான்.
“கண்மணி இவ்வளவு சாப்பாட்டையும் வச்சு நாம எப்படி சாப்பிட? அவங்க கொண்டு போகட்டுமே? நம்ம வீட்ல நாம மட்டும் தானே இருக்கோம்?…” சந்திரா சொல்ல,
“ஏன் உங்க மாமா வீடு, அண்ணன் வீடு, பெரியப்பா வீடு, பக்கத்துல இருக்கற தெரிஞ்சவங்க இவங்க எல்லாரையும் சாப்பிட வர சொல்லவேண்டியதானே?…”
“இல்ல அவங்க எல்லாம் வரமாட்டாங்க…”
“நீங்க கூப்புட்டீகளா மதினி? கூப்பிடாம அவுகளா வரமாட்டாகன்னு சொன்னா நல்லாவா இருக்கு?…” கண்மணி கேட்டதும் சந்திராவிற்கு ஒருமாதிரியாக போனது.
“கண்மணி, அம்மாவுக்கு இதெல்லாம் புடிக்காது…”
“ஆனா எனக்கு அதான் புடிக்கும். சொந்தபந்தங்கலோட அண்டி வாழறது தான் நல்ல வாழ்க்க. நாளைக்கு உங்க புள்ளைக்கும், என் புள்ளைக்கும் யாரும் வேணாமா? என்னால அப்படி இருக்க முடியாது…” என்றவள் அங்கிருந்த ஆட்களை பார்த்து,
“இதை எல்லாம் நான் சொல்ற பாத்திரத்துக்கு மாத்துங்க…” என்று சொல்லி சந்திராவை அழைத்துக்கொண்டு அடுக்களைக்கு சென்றாள்.
வீட்டில் உள்ள சற்று பெரிய பாத்திரங்களை எடுத்து உணவுகளை மாற்ற சொல்லி சந்திராவிடம் கொடுத்துவிட்டு அனைவருக்கும் டீ போட்டு எடுத்து வந்தாள்.
வேலை ஆட்களுக்கும் சேர்த்தே அவள் கொண்டுவந்து கொடுக்க அவர்களுக்கும் மகிழ்ச்சி. இப்பொழுது தான் அந்த காய் காய்ந்தாள், உடனே உபசரிக்கிறாளே என சந்திராவும் தவமும் பார்த்திருக்க சர்வீஸ் ஆட்களுக்கு தனியாக அவர்கள் சாப்பிட உணவை கொடுத்துவிட்டு வீட்டிற்கு வைத்துகொண்டாள்.
அவர்கள் கிளம்பியதும் சந்திராவை அழைத்துகொண்டு அவளின் பெரியப்பா வீட்டிற்கு கிளம்பினாள் கண்மணி. உடன் கார்த்திக்கும், தவமும்.
“இன்னைக்கு பெரிய பூகம்பம் இருக்குடா மாப்ள…” என தவம் பயம் காட்ட கார்த்திக் சிரித்தான்.
“எப்படிடா இம்புட்டு துக்கத்திலும் உனக்கு சிரிப்பு வருது?…” என கேட்க,
“அதெல்லாம் உங்களுக்கு புரியாது மாமா. பார்த்து தெரிஞ்சுப்பீங்க…” என கண்ணடிக்க தவம் முழித்தான்.
கார்த்திக்கின் பெரியப்பா வீட்டில் இவர்கள் யாரையுமே அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஒரு கணம் திகைத்து பின் சந்தோஷமாய் வரவேற்றனர்.
அவர்களுக்காக கொண்டு வந்திருந்த சாப்பாட்டை கண்மணி கொடுக்க அதை வாங்கவே தயங்கினார்கள் அவர்கள். பின் கார்த்திக்கும் சொல்ல பின்பு வாங்கிக்கொண்டனர்.
கண்மணியின் சுபாவமும் ஒளிவுமறைவில்லா பேச்சும் அவர்களுக்கு அத்தனை பிடித்தம். கார்த்திக் என்றைக்குமே அவர்களை தள்ளி பார்த்ததில்லை. ஆனால் சந்திராவுக்கு மகாதேவிமேல் பயம்.
அதனாலேயே அதிகம் அவர்களுடன் ஒட்டமாட்டாள். ஆனால் இன்று அனைவரோடும் கலகலப்பாய் பேச பயம் அகன்று அவளும் இணைந்துகொண்டாள் சந்தோஷமாய்.
இப்படியாக கண்மணி கார்த்திக்கின் உறவினர்களுடன் உரிமையுடன் உறவு பாராட்ட இவர்களை காணாது மகாதேவி வீட்டு வேலையாளிடம் எங்கே என கேட்க அவளும் விவரம் சொல்ல எரிமைலையாய் வெடிக்க காத்திருந்தார் அவர்.
அனைவரின் வீட்டிற்கும் சென்றுவிட்டு நால்வரும் வர மகாதேவி வாசலிலேயே சாய்வு நாற்காலியில் கோபத்துடன் அமர்ந்திருந்தார். அவரை பார்த்ததும் சந்திரா முகம் வாடிவிட கண்மணி மகாதேவியை நேருக்கு நேர் பார்த்தாள்.
“எங்க போய்ட்டு வரீங்க எல்லாரும்?…” கோபமாய் தான் கேட்டார், அதிலும் கொஞ்சம் கவனமும் இருந்தது. கார்த்திக் இருந்தான் அல்லவா.
“மாமா, பெரியப்பா, அண்ணன் இவங்க எல்லார் வீட்டுக்கும் போய்ட்டு அவங்களுக்கு சாப்பாடு குடுத்துட்டு வரோம்மா…” கார்த்திக் தான் பேசிக்கொண்டே உள்ளே சென்றான். அவனின் பின்னேயே கண்மணி செல்ல சந்திரா ஓட்டமும் நடையுமாய் கார்த்திக்கோடு சென்றாள்.
“இதென்ன புது பழக்கம் கார்த்திக்? அதுவும் நைட் டைம்ல?…” மகாதேவி கண்மணியை பார்க்க,
“நான்தேன் அத்த போகனும்னு சொன்னேன். சாப்பாடு நெறைய இருக்கு. அவுக எல்லாம் கெளம்பி போய்ட்டாக. பக்கம் தானே? போய் குடுத்துட்டு வருவோம்னு கூப்புட்டேன். ஏன் உங்க தம்பி வீட்டுக்கும், தங்கச்சி மகன் வீட்டுக்கும் தான போனோம். கேட்டா சந்தோசப்படுவீகன்னு பாத்தா கோவப்படுறீக?. இதெல்லாம் நீங்க சொல்லி நாங்க செஞ்சிருக்கனும்…” என சொல்ல மகாதேவி பல்லை கடித்தார்.
கண்மணி தைரியமாய் முன்னே வந்து நின்று கேட்க சந்திராவின் கண்கள் பெரிதாய் விரிந்தது. அவள் தவத்தை பார்க்க தவமோ இதைதான் கார்த்திக் சொன்னனா என நினைத்து சுவாரஸியமாய் நடப்பதை பார்க்க ஆரம்பித்தான்.
“இங்க பாரு கண்மணி, நீ இன்னைக்கு தான் வந்திருக்க. உனக்கு இந்த வீட்டு பழக்கவழக்கம் எதுவும் தெரியாது. உனக்கு நான் மெதுவா எல்லாத்தையும் சொல்லித்தரேன்…” மகாதேவி கோபத்தை அடக்கியபடி பேச,
“நா ஒன்னும் தப்பு பண்ணலியே அத்த எனக்கு சொல்லிதர. அப்புடி செஞ்சிருந்தா எம்புருஷன் வேண்டாம்னு சொல்லிருப்பாரு தான? அவருக்கு சொல்லாம செய்யல. அதுவும் உங்க வீட்டு இல்ல நம்ம வீட்டு மனுசகளுக்குத்தேன் கொண்டு போனேன்…” என விடாப்பிடியாய் பேச,
“இவ என்ன இவ்வளவு தைரியமா பேசறா. கிராமத்து பொண்ணு. வாயில்லா பூச்சின்னு பார்த்தா நமக்கே புத்தி சொல்றாளே?”  என பார்த்தார் மகாதேவி. அதற்குள் மணிகண்டன் வந்துவிட,
“இங்க பார்த்தீங்களா உங்க மருமக பண்ணியிருக்கற காரியத்த? ஒருநாளும் இல்லாத திருநாளா நம்ம வீட்டு சாப்பாட்ட கொண்டு போய் குடுத்துட்டு வந்திருக்கா. இந்த வீட்டு பெரியமனுஷங்க நம்மக்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல…” என்று அவரிடம் புகார் படிக்க,
“எங்கிட்ட சொல்லிட்டு தான் போனாங்க. நான் தான் சரின்னேன். இப்ப என்ன அதுக்கு? சாயங்கால நேரம்னு கூட பார்க்காம தூங்கினது நீ. அசதில தூங்கற உன்னை எழுப்ப வேண்டாம்னு கண்மணி தான் சொல்லிருக்கா…” என்று சொல்ல மகாதேவிக்கு தன் முகத்தை எங்குகொண்டு வைப்பதென்று தெரியவில்லை.
“அப்பா நாளைக்கு மாமா வீட்ல விருந்துக்கு கூப்பிட்டு இருக்காங்க…” என கார்த்திக் சொல்ல,
“விருந்து வைக்க பாவம் அவன் என்ன வச்சிருக்கான்? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் கார்த்திக். உனக்கு அவங்க சாப்பாடு ஒத்துக்காதுப்பா…” என்று பசப்பலாய் சொல்ல,
“அங்க என்ன இருக்கோ அதை சாப்பிட்டு வரோம் அத்த. கூப்புட்டதுக்கு நாமளும் மரியாத குடுக்கனுமில்ல. சரிதானே மாமா?…”
கண்மணி மணிகண்டனிடம் வர அவளின் பேச்சை சாதுர்யத்தை ரசித்த மணிகண்டன்,
“கண்டிப்பா கண்மணி. எல்லாருமே போய்ட்டு வாங்க. எனக்கு சந்தோசம் தான். இப்போ நாம சாப்பிடலாம்…” என அந்த பேச்சிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து அவர் செல்ல,
“நீங்க வாங்க மதினி நாம சாப்பாட்டை எடுத்து வப்போம்…” என்று சந்திராவையும் அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள் கண்மணி.
மகாதேவிக்கு பற்றிக்கொண்டு வந்தது. தன் கோபத்தை மகளிடம் கூட காட்டமுடியாமல் போனதை நினைத்து குமைந்து கொண்டு நின்றார்.
“கண்மணி வந்தன்னைக்கே என்னை அவமானப்படுத்திட்ட இல்ல. உனக்கு இருக்குடி” என வஞ்சம் வைத்தவர் கண்மணியை காயப்படுத்தவென காத்திருந்தார்.
அனைவரும் உணவு உண்டுமுடித்து உறங்க சென்றுவிட கண்மணியும் சந்திராவுமாய் அடுப்படியை ஒதுங்க வைத்து விளக்குவதற்கான பாத்திரங்களை எடுத்து போட்டனர்.
“சரி கண்மணி, கார்த்திக் வெய்ட் பண்ணுவான். நீ போய் தூங்கு…” என அனுப்ப,
“நல்ல கதையா இருக்குதே? பாத்தரத்த தேய்க்காம தூங்கறதா?…”
“காலைல வேலைக்கு வர பொன்னி தேய்ச்சிடுவாங்க. எப்பவும் இப்படித்தான்…”
“அது சரி பின்ன மகாலட்சுமி எங்கிட்டுருந்து வருமாம்?…”
“என்ன சொல்லுற கண்மணி?…” சந்திரா புரியாமல் கேட்க,
“எங்கம்மா சொல்லும், ராவுக்கு எச்சில போட்டு வச்சா அடுப்புல இருக்கற அன்னபூரணிக்கு ஆகாதாம். மகாலட்சுமி வராதாம். அடுப்படி சுத்தமா இருந்தா தான் வீட்டுக்கு நல்லதாம். எச்சில் இல்லாம பாத்துக்கனும்னு சொல்லும். எம்புட்டு சாமமானாலும் தேய்க்காம தூங்காது எங்கம்மா….” என விளக்கம் கொடுக்க,
“எங்கம்மா இதெல்லாம் சொல்லலை கண்மணி…” என சந்திரா சிரிக்க அதற்குள் கண்மணி விளக்க ஆரம்பித்திருந்தாள்.
“ரொம்ப எல்லாம் இல்லைங்க மதினி. கறி, மீனு வச்சு பரிமாறின பாத்திரம்தேன். இலைல சாப்பிட்டதால தட்டு கூட இல்ல. நானே பாத்துக்கறேன்…” என கண்மணி சொல்லியும் சந்திராவும் அவளுடன் இணைந்துகொண்டாள்.
இருவருமாய் வேலையை முடித்துவிட்டு உறங்க செல்ல கார்த்திக் லேப்டாப்பில் தன் திருமணத்தில் எடுத்துக்கொண்ட போட்டோக்களை பார்த்துகொண்டிருந்தான்.
“இன்னும் தூங்கலையா?…” என்றபடி கண்மணி வர,
“இல்ல கிண்கிணி மங்கினி. கொஞ்சம் வேலை இருக்கு…” என திரும்பி பார்க்காமலே சொல்ல,
“எனக்கு தூக்கம் வருதே? தூங்கட்டா?…” என கண்மணி கேட்டுகொண்டே படுத்தும் விட அவளை திரும்பி பார்த்தவன்,
“தூங்கேன், யார் வேண்டாம்னு சொன்னா?…” என்று சிரிக்க,
“அப்புறம் எழுப்புனேன், எந்திக்கலன்னு பாட்டு பாட கூடாது…” கட் அன்ட் ரைட்டாக சொல்ல வாய்விட்டு சிரித்தவன்,
“இல்ல எழுப்பமாட்டேன். பாடமாட்டேன். இப்ப நீ தூங்கு…” என்றவனை நம்பாத பார்வை பார்த்தவள் கண்மூடியதும் உறங்கியும்விட்டாள்.
அவளையே பார்த்திருந்த கார்த்திக்கின் முகத்தில் அப்படி ஒரு புன்னகை. எழுந்து வந்து அவளருகில் அமர்ந்தவன் கண்மணியின் கன்னகதுப்புகளை வருடிக்கொண்டே,
“வாயாடி தூங்கற நேரம் தவிர இந்த வாய் மூடறதே இல்ல. என்னோட சந்தோஷம் உனக்கு அவ்வளவு முக்கியமா கிண்கிணி மங்கினி. எத்தனை தடவை கேட்கற தூங்கவான்னு? இன்னைக்கு தானே இங்க வந்திருக்க. இன்னைக்கு ஒரு நாள் உனக்கு ரெஸ்ட். இப்ப இந்த வீட்ல இருக்கறவங்கள ஓரளவுக்கு ஜட்ஜ் பண்ணியிருப்ப. இனி உன்னோட மனநிலை அதற்கு ஏத்த மாதிரி நடந்துக்க முடியும். அதுக்காக தான் உனக்கு இந்த டைம்…” என்றவன் சிறிது நேரத்தில் காதில் பஞ்சை எடுத்து அடைத்துக்கொண்டு லேப்டாப்பில் அமர்ந்தான்.
பஞ்சை தாண்டி காதுக்குள் ரீங்காரமிட்டது அவளின் குறட்டை ஒலி. கேட்டவனின் முகத்தில் மலர்ந்தது குறுநகை.

Advertisement