Advertisement

மணியோசை – 10
       திணற திணற ஒருவனை கதரவைக்க முடியுமானால் அது சாப்பாடு போட்டுத்தான் என்பதை போல அவன் நிமிர்ந்து பார்க்கும் பாத்திரங்களில் இருந்து எல்லாம் எடுத்து வைத்தனர்.
“அடப்பாவிங்களா? ஒரு மாசத்துக்கு சாப்பிடவேண்டியத்தை ஒரே நேரத்துல என் வயித்துக்குள்ள தள்ளுறேங்களே? நீங்கலாம் நல்லா வருவீங்கடா?” என புலம்பிக்கொண்டே எங்கே எதையாவது பார்த்து அதை மீண்டும் கொண்டுவந்து வைத்துவிடுவார்களோ என அஞ்சி நிமிராமல் உண்டான்.
“மாப்புள்ளக்கு ஏதோ சடவா இருக்கா? நிமிராம சாப்பிடுறாரு. டேய் நல்லா அவரை கவனிடா. யத்தா பேச்சி முட்டைய கல்லுல ஊத்தி எடுத்துட்டு வாத்தா…” என்றொரு பெருசு சலம்பலை கூட்ட உண்ட உணவு கண்களின் வழி வெளியே வந்துவிடும் போல இருந்தது கார்த்திக்கிற்கு.
எழுந்து ஓடலாம் என்றால் அதற்கு கூட முடியாத அளவிற்கு மூச்சு முட்டியது. கண்மணியை பார்க்க அவள் அங்கே அரட்டையில் வெகு சுவாரசியமாக இருந்தாள்.
மீண்டும் தட்டில் முட்டை ஆம்லேட் போன்று மூன்று வெரைட்டியாய் கொண்டு வர,
“உங்களுக்கு எது புடிக்கும்னு தெரியாதுல, அதான் வெங்காயம் போட்டு, பாதி திருப்பாதது. பொறவு கலக்கி எல்லாம் கொண்டாந்துட்டா போல. உங்க சவுகரியம் சொல்லுக தம்பி. ரெண்டு முட்ட ஊத்த சொல்லிடுவோம்…” என மாரிமுத்து சொல்ல இழுத்து பிடித்து எழுந்துவிட்டான் கார்த்திக்.
அனைவரின் முகமும் பதறி விட அவனுக்கே ஒரு மாதிரியாக போனது.
“இல்ல எனக்கு இவ்வளவு போதும்ங்க. இதுக்கு மேல சாப்பிட முடியாது. ப்ளீஸ். தப்பா நினைக்காதீங்க…”  என்றதும் தான்,
“நல்ல வேல தம்பி. என்னமோன்னு பதறிட்டோம்ல…” என்ற படி தன்னருகில் அமர்ந்திருந்த பெரியவர் சொல்ல அவரிடம் புன்னகைத்துவிட்டு எங்கே கை கழுவுவது என அவன் தேட,
“யத்தா மணி, ஒம்புருஷனுக்கு கை கழுவ கூட்டிட்டு போத்தா…” சங்கரி கண்மணியை அனுப்ப அவனை அழைத்துக்கொண்டு பின்னால் சென்றவள்,
“என்னங்க அதுக்குள்ளே வெரசா எந்திச்சுட்டீங்க? சரியா சாப்புடலையோ?…”
“ரொம்ப கவலைதான் கிங்கிணி மங்கினி. எனக்கும் சேர்த்து நீ நல்லா சாப்புடு…”
“அதெல்லாம் நீங்க சொல்லவே வேணா. நானே நல்லா சாப்புடுவேன்…”
“ஆமா, உங்க வீட்ல மத்யானம் சமைக்க மாட்டாங்களா? சேர்த்தே காலையிலையே செஞ்சிட்டாங்களோ?…”
“இல்லையே, மத்தியானத்துக்கு சமைக்க ஆரம்புச்சுட்டாக. வாங்க காட்டறேன்…”  என்றவள் தன் வீட்டின் பின்னால் இருந்த ஒரு கதவை திறக்க அங்கே அதற்கு எதிரில் இருந்த காலி இடத்தில் பந்தல் போடப்பட்டு சமையல் வேலைகள் நடந்துகொண்டிருந்தது.
“எதுக்கு இம்புட்டு பேருக்கு சாப்பாடு? விருந்தா?…”
“ச்சே ச்சே இது விருந்து இல்ல. நம்மள நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போறன்னைக்குத்தேன் விருந்து. இது கல்யாணத்துக்கு வந்த சொந்தக்காரங்களையும் உங்களையும் கவனிக்குறது…”
“இது? கவனிப்பு? நல்லா கவனிச்சீங்க போங்க…” என்று அவளின் தோளில் கை போட அதில் இருந்து நழுவியவள்,
“எத்தன மனுஷக இருக்காக. தொடறீங்க…” என்று என்னவோ பெரிய குற்றம் அவன் இழைத்துவிட்டான் என்பதை போல பதறினாள் கண்மணி.
“இதென்ன கொடுமையா இருக்கு? உங்க வீட்ல என்னை கவனிச்ச மாதிரி எனக்கும் உன்னை இப்போ கவனிக்கனும்னு தோணுது…”
“நல்லா இருக்கு உங்க கவனிப்பு. மொதல்ல ஆம்பளையா லட்சணமா முற்றத்துல போய் உக்காருங்க. அங்கனதேன் ஆம்பளைங்க பேசிட்டு இருப்பாங்க…” என சொல்ல,
“ஹ்ம்ம்…” என்றபடி புன்னகையோடு அங்கே செல்லவும் அங்கிருந்த அனைவரும் இவனை சூழ்ந்துகொண்டனர். பொதுவான பேச்சில் ஆரம்பித்து தனக்கு உடலுக்கு என்ன இருக்கிறது என்ன செய்வது என்பது வரை பேசி அவனை ஒரு வழியாக்கினார்கள்.
பதில் சொல்ல முடியாமல் இருந்தாலும் அவர்களை அவன் ரசிக்கவே செய்தான்.
இந்த கவனிப்பு, பேச்சு வழக்கு என்று அனைத்துமே புதுமையாக உணர்ந்தான் கார்த்திக்.
மகாதேவி எப்பொழுதும் ஒருவித ஆளுமையுடன் தான் அனைவரிடமும் நடந்துகொள்வார். அதனாலேயே உறவினர்கள், சுற்றத்தார் என அனைவரும் அந்தளவிற்கு ஒட்டுதலுடன் இருப்பதில்லை.
ஒருவரின் வசதியை பொருத்து மகாதேவியின் கவனிப்பும் புன்னகையும் இருக்கும். ஆனால் மணிகண்டன் வீட்டில் இருந்தால் யாராக இருந்தாலும் ஒரே மாதிரி தான் நடந்துகொள்வார்.
மணிகண்டனும் கார்த்திக்கும், சந்திராவும் மகாதேவி போல் இல்லை. அனைவரிடமும் கலகலப்பாய் பேசும் தன்மை உடையவர்கள். இப்பொழுது கண்மணியின் குடும்ப சூழல் அவனுக்கு அத்தனை பிடித்தது. இப்படிப்பட்ட இடத்திலிருந்து வரும் கண்மணிக்கு தன் வீட்டில் இதே சந்தோஷமும் நிம்மதியும் கிடைக்குமா என சஞ்சலம் கொண்டான்.
கார்த்திக்கிற்கு சட்டென தன் வீட்டு சூழல் ஞாபகத்திற்கு வர தூரத்தில் பெண்களுடன் அமர்ந்து சாப்பிட்டுகொண்டிருந்த கண்மணியை பார்த்தான். பார்த்தவன் முகத்தில் இருந்த சஞ்சலம் வந்து முறுவல் வந்து ஒட்டிகொண்டது.
ஒரு நிமிடம் கூட வாயை மூடாமல் அருகில் இருந்த பெண்ணிடம் சலசலவென பேசிக்கொண்டே சாப்பாட்டையும் ஒரு கை பார்த்துக்கொண்டிருந்த மனைவியை காண காண அவனின் கவலை எல்லாம் பனிபோல் கரைந்துபோனது.
“இவளால தான் என் குடும்பத்துக்கு ஒரு குதூகலத்தை கொண்டுவர முடியும்”என நினைத்தான்.
“மாப்புள்ள தம்பி பொஞ்சாதியோட தனியா இருக்கனும்னு நெனக்கிதிகளோ?…” என காதின் அருகே மீசை முடி உராய ஒரு குரல் கிசுகிசுப்பாய் கேட்க அந்த குறுகுறுப்பில் படக்கென திரும்பியவன் அந்த பெரியவரை பார்த்ததும் சிரித்துவிட்டான்.
“ஏன் தாத்தா?…” என கேட்க,
“வச்ச கண்ணு வாங்காம பாக்குதீகளே, அதேன் கேட்டேன்…” என்றவரின் குரல் மாரிமுத்திற்கு எட்ட அவர் சங்கரியின் காதில் போட சாப்பிட்டு வந்த கண்மணியிடம்,
“யத்தா மணி, தம்பியை கூட்டிட்டு கோவிலுக்கு போய் விளக்கேத்திட்டு வாத்தா…” என கார்த்திக்கை காண்பித்து சொல்ல தலையசைத்தவள் பேச்சியிடம் சொல்லிவிட்டு கார்த்திக்கிடம் வந்தாள்.
“கோவிலுக்கு போய்ட்டு வர சொன்னாக பெரிம்மா. வாங்க…” என சத்தமே வராமல் முணுமுணுப்பாய் அவனை அழைக்க அவன் தாத்தாவை பார்த்து கண்ணடித்துவிட்டு எழுந்து அவளுடன் வெளியே வந்தவன்,
“அதிசயம்டா கிங்கினிமங்கிணி. உனக்கு இப்படியெல்லாம் பேச தெரியுமா?…” என கேலி பேச,
“பின்ன? நம்ம வீட்டுக்கு வந்துருக்காக. அவுக முன்ன சத்தமா பேசுவாகளா?…” என்றபடி அவனுடன் இணைந்தே நடந்து வந்தாள். சாமி கும்பிட்டுவிட்டு பிரகாரம் சுற்றிவிட்டு அமர்ந்ததும்,
“உங்க வீட்ல என்னை மாப்பிள்ளைன்னு சொன்னதும் உனக்கு என்ன தோனுச்சு கண்மணி?…” என கேட்க,
“ஒன்னும் தோணலையே. ஏன்?…” அவளின் பதிலில்,
“என்ன ஒண்ணுமே தோணலையா? நான் எப்படி உன்னை பொண்ணுகேட்டு வந்தேன்னு கூடவா உனக்கு தோணலை?…”
“நீங்க நான் என்ன பதில் சொல்லனும்னு நினைக்கிதீக? நீங்க படிச்ச படிப்புக்கு என்னை கட்டனும்னு அவசியம் இல்லைதான். ஆனாலும் தேடிவந்து கேட்டதுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். என்னை புடிச்சிருக்கலாம். இல்ல மாமாவுக்கு எங்க குடும்பத்த புடிச்சிருக்கலாம்…”
“எதுவா இருந்தாலும் யாரா இருந்தாலும் எங்க பதில் இதுதான். வீட்ல யார பார்த்து கழுத்த நீட்ட சொல்லுதாகளோ அவுகளுக்குத்தேன் கழுத்த நீட்டுவோம். இதுல எந்த கனவும் கெடையாது. எனக்குன்னு இல்ல நெறைய வீடுகள்ல இதுதேன். இங்க பிடிக்குதா பிடிக்கலையான்னு கேள்வியே வராது…”
“கல்யாணம் பண்ண நாங்க யாரும் கனவு காண மாட்டோம். கட்டிக்கிட்டதுக்கு பின்னால கனவு காணறதும், கண்ண கசக்கறதும் அவவளுக்கு புருசன் அமையிறத பொறுத்து. நா இனி கனவு காணறது உம்ம கைலதேன் இருக்கு…”
“எப்படியாப்பட்ட வாழ்க்க அமைஞ்சாலும் அத ஏத்துக்கிட்டு அது போக்குல வாழனும்னு சொல்லி வளக்கபட்டவாக நாங்க. எங்களுக்கு இது ஒன்னும் கஷ்டமில்ல. பெத்து வளத்து ஆளாக்கினவகளுக்கு ஒருத்தன் கையில புடிச்சுகொடுக்க தெரியாதா என்ன?…” வெகு இலகுவாக இருந்தது அவளின் பேச்சு.
கண்மணி சொல்லவும் இதை கேட்டிருக்க கூடாதோ என தான் தோன்றியது கார்த்திக்கிற்கு. கண்மணியின் ஊருக்கும், தன் ஊருக்கும் பெரிதாய் ஒன்றும் தூரமில்லை. பதினைந்து கிலோமீட்டர் தூரமே.
ஆனால் இன்றும் இந்த கிராமத்தில் திருமணத்திற்கு சம்மதமா என பெண்ணிடம் கேட்கபடாமல் இருக்கிறதே என ஆச்சர்யம் கொண்டான். தன் அக்காவின் திருமணத்தில் அனைத்தும் அவளின் இஷ்டப்படி ஒவ்வொன்றும் கேட்டு கேட்டு தான் செய்தனர்.
இதோ தன் திருமணம், விரும்பியவளை வீட்டில் சொல்லி மணம் முடித்திருக்கிறேன்.
“ஒருவேளை உங்க வீட்ல சொல்லாம உன்கிட்ட நான் ப்ரப்போஸ் பண்ணியிருந்தா என்ன பண்ணியிருப்ப?…” தெரிந்துகொள்ளவே இதை கேட்டான் கார்த்திக்.
“உசுரு பொழச்சீங்க. அப்படி மட்டும் வந்து நின்னா இந்த கண்மணியோட இன்னொரு மொகத்த பாத்துருப்பீங்க…” என சொல்ல,
“அதுசரி, எல்லாமே மெரட்டல் தானோ?…” என்றவன்,
“ஓகே, யாரும் கேட்கலை. ஆனா எனக்கு தெரிஞ்சுக்கனும். இப்ப இந்த நிமிஷம் என்னை உனக்கு புடிச்சிருக்கா?…” அவளின் விழிகளுக்குள் எதையோ தேடியபடி அவன் கேட்க வெட்கத்துடன் தலையசைத்தாள் கண்மணி.
“யாஹூ…” என ஆர்பாட்டமாய் கத்தியவன் அவளை அணைக்க முற்பட,
“இந்தா இந்த ரவுசு தான வேணாங்கறது. கோவில்ல வச்சு…” என்று முறைக்க கன்னத்தில் போட்டுகொண்டவன்,
“அங்க பாரு அது அன்னைக்கு நீ கூட்டிட்டு வந்த பொண்ணு தான?…” என கேட்க,
“யாரு?…” என திரும்பி பார்த்தவள் தூரத்தில் குருவம்மாவும் உடன் இரண்டு பெண்களும் ஒரு ஆணும் நின்றிருக்க,
“ஆமா, அவதேன்…” கண்மணி எழுந்து அவர்களை நோக்கி செல்ல கார்த்திக்கும் சென்றான்.
“என்ன இங்கன நிக்கிதீக?…” கண்மணி கேட்க,
“ரெண்டு பேரும் தனியா போய்ருக்கீகனு அத்த சொல்லி அனுப்புச்சு. அதேன் கூட்டிட்டு போகலாம்னு வந்தோம்…” என்றதும் அவர்களுடனே கண்மணியும், கார்த்திக்கும் நடந்தனர்.
கண்மணி வீட்டிற்கு வந்து நான்கு நாட்கள் கழிந்து விட்டது கார்த்திக்கிற்கு. கண்மணி மூலம் அவன் அறிந்துகொள்ளும் விஷயங்கள் அனைத்தும் அவளின் ரசனைகளை சொல்லியது. தினம் தினம் புதிதாய் தெரிந்தாள் கண்மணி.
ஏழாம் நாள் கண்மணியை அழைத்து செல்ல வருவதாக மகாதேவி மூலம் மணிகண்டன் தகவல் சொல்ல அதற்கு முதல் நாள் கோவிலில் பூஜைக்கு ஏற்பாடு செய்துவிட்டார் சங்கரி.
அதற்கு கார்த்திக்கின் குடும்பத்தையும் அழைத்து விட அவர்களும் கோவிலுக்கு வந்துவிடுவதாய் சொல்லவும் மறுநாள் அனைவரும் கோவிலுக்கு சென்றனர்.
வேண்டியபடி சங்கரி மொட்டைபோட்டு கொள்ள எதற்கு என அறிந்த கார்த்திக்கிற்கு சங்கரியின் மேல் மரியாதை பெருகியது. அதிலும் ஓரகத்திகள் இருவரும் இன்றுவரை ஒற்றுமையாக ஒருவரை ஒருவர் அரவணைத்து செல்வதை பார்க்கும் பொழுது அத்தனை பெருமையாய் கூட இருந்தது.
ஊருக்கே அன்று விருந்து வைத்து பூஜை சிறப்பாய் நடந்து முடிய மணிகண்டன் கிளம்பிவிட்டார் மறுநாள் அங்கே வீட்டில் பெண்ணை விட வருபவர்களுக்கு விருந்து தயார் செய்ய ஏற்பாடு செய்யவேண்டும் என்று.
மகாதேவி வெறும் தலையசைப்புடன் விடைபெற பேச்சிக்கும், சங்கரிக்கும் சுருக்கென்று இருந்தது. கண்மணி கூட இதை கவனித்துவிட்டாள். அனால் காட்டிக்கொள்ளவில்லை.
மகாதேவிக்கு கண்மணியின் குடும்பத்தினர் தங்கள் வீட்டிற்கு வருவது பிடிக்கவில்லை. அவர்கள் என்ன செய்முறை செய்துவிட போகிறார்கள் என்கிற இளக்காரம் வேறு. அதனால் தன் வீட்டில் யாரும் அறியாமல் தன் பிடித்தமின்மையை காட்டிவிட்டார் மகாதேவி.
ஆனால் மணிகண்டனோ அத்தனை மரியாதையுடன் விடைபெற்று சென்றார் அங்கிருந்து.
“என்னக்கா இந்தம்மா மூஞ்சில சொரத்தே இல்லையே? ஆத்தா முத்துகருப்பி எம்பொண்ணு…” என கலக்கமாய் சங்கரியை பார்க்க,
“இந்தா, இப்ப என்னத்துக்கு இடிஞ்சுபோற? நம்ம பொண்ணு சமாளிச்சுப்பா. அந்தம்மா மூஞ்சில என்ன இருந்தா என்ன? குடும்பம் என்ன அதுகூடவா நடத்த போறா நம்ம மணி? மாமியாருன்னு இருந்த அப்படித்தேன். குடும்பம்னா ஆயிரம் இருக்கும். எல்லாமே சுளுவா அமஞ்சிருமா?…”
“எல்லா என்னாலதேன். அன்னைக்கே நீ சொன்ன? அச்சானியமா பேசாதன்னு. எம்வாயில வந்து விழுந்து எம்புள்ள தலையில விடிஞ்சிருச்சே?…” என புலம்ப,
“அட கூறுகெட்டவளே? மொத இந்த புலப்பத்த நிப்பாட்டிட்டு உறங்கு. நாளைக்கு மாப்புள்ள வீட்டுக்கு போவோம்னும்ல…” என சமாதானம் செய்து அவரை உறங்க வைத்த சங்கரி பூஜையறைக்கு மெதுவாய் சென்றார்.
சிறு மஞ்சள் துணியில் காசு வைத்து முடிச்சிட்டு கடவுளின் பாதத்தில் வைத்தவர்,
“எம்பொண்ணுக்கு எந்த சங்கடமும் வராம நீ தா ஆத்தா தொணையா இருக்கனும். வருஷா வருஷம் திருவிழாவுல மொட்டை அடிச்சு முடி காணிக்க குடுக்குதேன்…” என வேண்டிக்கொண்டு நெற்றி நிறைய விபூதியை பூசிக்கொண்டு வந்து படுத்தவர் உதடுகள் மந்திரத்தை உச்சரித்தன.
மறுநாள் பரபரப்பாக சீர்வரிசைகளுடன் அனைவரும் கிளம்பி தயாராய் இருக்க சந்திராவும், தவமும் இன்னும் சில உறவுகளுடன் அவர்களை அழைத்துக்கொண்டு செல்ல வந்துவிட்டனர்.
கார்த்திக்கின் வீட்டு வாசலிலேயே இவர்களின் வண்டி வந்து நிற்கும் ஓசையில் மணிகண்டனுடன் மகாதேவியும் வந்து நிற்க காரில் இருந்து இறங்கினர் புது பெண்ணும், புது மாப்பிள்ளையும்.
அவர்களுக்கு ஆலம் சுற்றப்பட்டு உள்ளே வரவேற்க அவர்கள் செல்வதற்குள் பின்னாலேயே கண்மணியின் சீர்வரிசை வண்டிகள் வந்து நின்றது.
கண்மணி குடும்பத்தினர் வந்திறங்கியதும் மகாதேவியின் கண்களுக்குள் வந்து சென்ற எள்ளலை சரியாக கண்டுகொண்டாள் கண்மணி.
காதலை தானே கண்டறிய தெரியாது. ஆனால் தன் ஊருக்குள்ளேயே எத்தனை எத்தனை மகாதேவியை பார்த்திருப்பாள்? கச்சிதமாக பிடித்துவிட்டாள் அவரின் பார்வையின் பொருளை.
சீர்வரிசைகள் இறங்க இறங்க மகாதேவியின் கண்கள் பெரிதாகிக்கொண்டே போனது. அவரின் வாயெல்லாம் பல்லாக இருந்தாலும் கிராமத்தார்கள் எப்படி இத்தனை செய்தனர் என்று யோசித்தாலும் மகாதேவி அவர்களை பொருட்களை வைத்துதான் எடைபோட்டார்.
ஆனாலும் கிராமத்து மனிதர்கள் என்கிற இளக்காரம் அவரை விட்டு போகவில்லை.
அனைத்தும் பொருளும் உள்ளே எடுத்து சென்று வைக்க அனைவரையும் இப்பொழுது நன்றாகவே வரவேற்றார்.
“உள்ள வா கண்மணி…” என மருமகளை அவர் அழைக்க அழுத்தமாய் கண்மணி பார்த்த பார்வையில் மகாதேவிக்குள் எதுவோ பதறியது.

Advertisement