Advertisement

மணியோசை – 1

         விடிந்தும் விடியாத கருக்கல் நேரத்தில் காளை மாடுகளுடனும் ஏர் கலப்பைகளுடனும் சிலர் கிளம்பிவிட்டிருக்க அந்த தெருவே பரபரப்பாக இருந்தது.

அலுப்புடன் எழுந்து வெளியே வந்த குருவம்மா எடுத்துவைத்திருந்த சாணியை வாளி நீரில் கரைத்து வாசலுக்கு தெளிக்க ஆரம்பித்தாள். ஏற்கனவே மாமியாரிடம் வாங்கிய வசவு அவளின் காதை புகையாக்கிகொண்டிருக்க அணையாத அனலுடன் வேலையை பார்த்துக்கொண்டிருந்தாள்.

“ஏன்டி குருவு, உனக்கு இப்பத்தான் விடிஞ்சிருக்காக்கும். சோறாக்கி வடிக்க வேண்டிய வேளையில வாச தெளிக்கரவ?…” என பக்கத்துவீட்டு பெண் கேட்க,

“ம்க்கும் ஒரு நான் செத்த தல சாச்சுட்டேன். ஏற்கனவே என் மாமியார்க்காரி ஏசறா. இப்ப நீ வேற ஊதிவிடுவ போல…” என தோளில் இடித்து கூறிவிட்டு கோலமிட ஆரம்பிக்க,

“வாவரசி வாசத்தெளிச்சு கோலம்போடற நேரத்த பாரேன். ஊர் சிரிக்கத்தான மெனக்கெடறா பாதகத்தி. வீடான வீட்ல…”  என வசைபாடிக்கொண்டிருந்த மரிக்கொழுந்து பேச்சை நிறுத்திவிட்டு,

“இந்தாத்தா பாண்டி, எங்குட்டு அரக்கப்பரக்க ஓடற?…” என்று வாயில் இருந்த வெற்றிலை சாறை துப்பிவிட்டு கேட்க,

“அத்தே விஷயம் தெரியாதா? நம்ம பேச்சி மதினி மவளை ஆஸ்பத்திரியில சேர்த்துருக்காவ. அதான் ஒரு எட்டு போய் பார்த்துட்டு வரால்ம்னு தான் விசுக்குன்னு கிளம்பினேன்…”

“என்னது பேச்சி மவளையா? என்னடி சொல்லுத?…” என்றபடி முந்தானையை எடுத்து உதறி மீண்டு இடுப்பில் சொருகிக்கொண்டு வேகமாய் பாண்டியம்மாளை நெருங்கினார்.

“அட ஆமா அயித்த, நேத்து ராவுக்கு அந்த புள்ளையோட ஆட்டோவுல போனாக. ஆனா அவ அப்பாரை தான கண்டே. வேற யாரோன்னு நினைச்சேனே? அவளையா சேர்த்திருக்கு?…” என்று அதுவரை மாமியாருடன் இருந்த பிணக்கை மறந்து பாடுபேச,

“என்னடி இவ கூறுகெட்டவ அந்நேரத்துக்கே என்னை எழுப்பி விட்டுருந்தா போற வழியில என்னன்னு கேட்டிருப்பேன்ல. விவரமத்த கழுத. கழுத…” என மருமகளை திட்டிவிட்டு,

“என்னவாம்? என்ன சேதிக்கு ஆஸ்ப்பத்திரி போயிருக்காக? அதும் ராவுல யாருக்கும் தெரியாம பெருக்காக. சும்மா சொல்லுத்தா. ஆருக்கிட்டயும் சொல்லமாட்டேன்…” கிசுகிசுப்பாய் கேட்க,

“நா என்னத்த கண்டே. ஏதோ வவுத்து நோவுன்னு சொன்னாக. எதுவா இருந்தா என்ன? ஒரு எட்டு போய் பார்த்துப்போட்டு வந்துருவோம். அப்பறம் எம்மவள பாக்க எவ வந்தான்னு பேச்சி மதினி ஆஞ்சுபுடுவா. அடுத்து அவசரம்னு அங்க போய் நிக்க முடியாதபடி வசுபுடுவா…” என பாண்டி கிளம்ப,

“அட இருடி இவ ஒருத்தி. நானும் வரேன். கெரகம் புடிச்சவ கைமாத்துக்கு காசுன்னு போய் நின்னா வச்சுக்கிட்டே கண்ணுல காட்டமாட்டா…” என்ற மரிக்கொழுந்து அங்கே குளுதாடியில் இருந்த தண்ணீரை மொண்டு வாயை அலம்பிவிட்டு முகத்தையும் கழுவி முந்தானை சேலையில் துடைத்துவிட்டு,

“இந்தா குருவு, போய் புள்ளைகள எழுப்பி காபியை குடு. வரக்காப்பிதேன் போட்டிருக்கேன். உலைல அரிசிய போட்டாச்சு. அடி பத்திக்காம வடிச்சுடு. குழம்பையும் வச்சு இறக்கிட்டு தண்ணி பிடிக்க குடத்தை அலசி வச்சிடு. னா ஒரு எட்டு போய்ட்டு விரசா வந்திடறேன்…” என சொல்லிவிட்டு பாண்டியுடன் அவர் நடக்க கடுகடுவென்ற முகத்தோடு,

“கெழவிக்கு எகத்தாளத்த பார்த்தியாக்கா. நேக்கா என்கிட்டே அம்புட்டையும் தள்ளிட்டு போறதா? விரசா வருதாமே விரசா? முழு விஷயமும் இது காதுக்கு அம்புடாம இது வந்துடுமாக்கும்…” என திட்டிக்கொண்டே மீதி கோலத்தை போட்டுவிட்டு வேலையை பார்க்க சென்றாள் குருவம்மா.

அரசு மருத்துவமனை. மிக பெரியதும் இல்லாமல் சிறியதும் இல்லாமல் நடுத்தரமான வசதியுடன் இருந்தது. இவர்களை போல ஏகப்பட்டோர் ஊர்மக்கள் அங்கே சிலர் இருந்தனர்.

பலர் வைத்தியத்திற்கு என வந்திருக்க சில பேச்சியின் மகளை குசலம் விசாரிக்க வந்திருந்தனர்.

“ஏத்தா பேச்சி, இப்பத்தேன் பாண்டி சேதி சொன்னா. என்னாச்சு என் மருமவளுக்கு? எதுக்கு ராத்திரியில கொண்டாதீக?…” என மரிக்கொழுந்து கேட்க பேச்சியானவரின் முகம் தகதகவென எரிந்தது.

“இந்தா, என்ன கேட்ட? கொண்டாந்தீகளா? எம்புள்ள என்ன உசுருக்கா தவிச்சுச்சுன்னு கொண்டாந்தீகன்னு கேட்ப. வாய வெட்டி அடுப்பாக்கிடுவேன் பார்த்துக்க. காலங்காத்தால வெள்ளிக்கெழம அதுவுமா வாழவேண்டிய புள்ளைய கொண்டாந்தீகன்னு பொசுக்குன்னு சொல்லிட்ட. மருவாதி கெட்டுடும்…”

வரிந்து கட்ட ஊரையே வார்த்தையால் பந்தாடும் மரிக்கொழுந்து கப்சிப்பென வாயை மூடிக்கொண்டு நின்றார்.

“அட பேச்சி, வாய் தவறி சொல்லிருக்கும். விடேன்…” நாட்டரசன் மனைவியை சமாதானம் செய்ய,

“இந்தாரும் உம்ம தொங்கச்சி பாசத்தை வெளில வச்சு பிழியும். என்கிட்டே வேண்டாம்…” என்று எகிற,

“நீ வா ஆத்தா அவ ஏற்கனவே மகளுக்கு நோவுன்னு வெசனத்துல இருக்கா. அந்த நர்சம்மா வேற கிறுக்காக்கி விட்டுருச்சு. அந்த கோவத்துல தான் அப்படி பேசிட்டா…” என சமாதானம் செய்ய மரிக்கொழுந்துவின் முகம் மலர்ந்துவிட்டது.

நர்ஸ் கிறுக்காக்கி விட்டது என்ற சொல்லில் அந்த நர்ஸ் ஆகப்பட்ட பெண்ணிற்கு உள்ளுக்குள் கொலை வெறியே கிளம்பியது.

“இந்த இடத்துல இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா எனக்கு கிறுக்கு புடிச்சுடும். ஏன்யா உங்க ஊரா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமாய்யா?…” என்று புலம்பியபடி பேச்சியை பார்த்தாள் அடுத்து என்ன சொல்ல போகிறாரோ என்று.

“சேதி கேட்டதும் பதறியடுச்சு ஓடியாரேன் அண்ணே. பச்ச தண்ணி பல்லுல படலை இன்னும்…” என்று மரிக்கொழுந்து கண்ணை கசக்க,

“அட கூறுகெட்டவளே, வா குடிக்க எதாச்சும் வாங்கித்தாரேன்…” என்று அழைத்துக்கொண்டு ஆஸ்பத்திரி அருகில் உள்ள டீக்கடையில் இரண்டு உளுந்து வடையும் டீயும் வாங்கிக்கொடுத்தவர்,

“இன்னும் ரெண்டு வட வேணாலும் வாங்கி சாப்புடு. சாப்ட்டுட்டு  மொள்ளமா உள்ள வா. நா உள்ளார போறேன்…” என்று அவர் கடைக்காரரிடம் தன் கணக்கில் குறித்துக்கொள்ள சொல்லி செல்ல ஆனந்தமாய் மரிக்கொழுந்து வேட்டையை ஆரம்பித்தார்.

“இப்ப கடைசியா என்னதான் சொல்லுத?…” என பேச்சி கண்களை உறுத்தி தன் அவிழ்ந்த முடியை கொண்டையிட்டு மிரட்டலாய் பார்க்க அவரின் நெற்றியில் இருந்த பெரிய பொட்டு அவரை வதம் செய்ய வந்த காளி அவதாரமாய் கட்டியது.

“அதான் சொன்னேன்லம்மா. இதெல்லாம் குடுக்க கூடாதுன்னு. உங்க மகளுக்குத்தான் சேராதும்மா…” பரிதாபமாய் சொல்ல,

“விடியக்கருக்குல புள்ளை வெறும் வவுத்தொடவா இருக்கும். பசிக்கும்ல, ஏதோ கொஞ்சூண்டு சப்பிட்டும்னு கொண்டாந்தா பட்டினி கிடக்க சொல்லுதியே? கூறு வேண்டாமா?…” பேச்சியின் அக்காவான சங்கரி சொல்ல,

“அதான் இளநீர், கஞ்சி எல்லாம் குடுக்க சொன்னேன்ல…” என்றவளின் பார்வை விரிந்தது இதையா கொஞ்சம் என்று சொல்கின்றனர் என.

அங்கே கட்டிலில் கண்மணி அமர்ந்திருக்க அவளின் முன்னால் நாட்டுகோழி சூப்பு, எலும்பு குழம்பு, ஈரல் பிரட்டல், இவற்றுக்கு தொட்டுக்கொள்ள இட்லி, தோசை, இடியாப்பம் என சில இருந்தது.

ஆம், தொட்டுக்கொள்வதற்கு தான் இட்லியும், இடியாப்பமும்.

“கண்மணி நீ சாப்புடுத்தே…” என பேச்சி சொல்ல அவள் வேகமாய் நாட்டுக்கோழி சூப்பு வைத்திருந்த தூக்குவாளியை தூக்கி குடித்துவிட்டு,

“என்னம்மா காரமே இல்லாம சப்புன்னு இருக்கு. எனக்கு சுள்ளுன்னு சாப்பிடனும் போல இருக்கு…” என்று சிணுங்கிக்கொண்டு சூப்பை காலி செய்ய,

“இத இப்ப சாப்புடு. மதியத்துக்கு அயிரைமீனு குழம்பு அம்மியில அறைச்சுவச்சு கொண்டாறேன். சுள்ளுன்னு இருக்கும். வாய்க்கு உரைப்பா…” சங்கரி சொல்ல,

“என்னம்மா நீங்க? அந்த பொண்ணு ஆகாத போகாத எதையோ சாப்பிட்டுட்டு தான் ஃபுட் பாய்சன்னு உடம்பு குணமாகனும்னு வந்துட்டு சரியாகறதுக்குள்ள இப்படி திரும்பவும் ஆகாததை எல்லாம் குடுத்தா வயிறு என்னத்துக்காவறது?. நாங்க எப்படி ட்ரீட்மென்ட் குடுக்க?…”

“அடி என் சக்களத்தி, ஆகாததை குடுக்கோமா? வீட்ல வக்கனையா, சுத்தபத்தமா, வாய்க்கு ருசியா, உரப்பு, சுணப்பா பார்த்து நாங்க சமைச்சார உனக்கு ஆகாத போகாதது மாதிரி தெரியுதா?

“என்னது உரைப்பா? காரமே குடுக்க கூடாதும்மா. நீங்க என்னன்னா இவ்வளவையும் குடுக்கேன்னு சொல்றீங்க? உடம்பு தாங்குமா?…” நர்ஸ் கவலைப்பட,

“இம்புட்டா? வளர்ற பிள்ளை மேல கண்ணா வைக்கிற? விளங்குவியா நீ? உன் கண்ணை நோண்டி அடுப்புல போட?…” என்று கிளம்பிவிட்டார் பேச்சி.

பேச்சி கண்மணியை எத்தனை வேண்டுமானாலும் திட்டுவார். ஆனால் நாட்டரசனை கூட ஒரு சொல் சொல்லவிடமாட்டார். அந்தளவிற்கு மகளின் மேல் கொள்ளை பிரியம் கொண்டிருந்தார்.

விட்டா உண்மையிலேயே கண்ணை நோண்டிவிடுவாரோ என்கிற பயத்துடன் அங்கிருந்து நகர்ந்துவிட்ட அந்த நர்ஸ் இன்னொரு நர்ஸிடம் சென்று,

“கவர்மன்ட் ஹாஸ்பிட்டல்னா எல்லாருக்கும் பயம். யாரும் சரியா கவனிக்க மாட்டாங்க, கேட்டா பதில் கூட சொல்லமாட்டாங்கன்னு. ஆனா இந்த ஊர பார்த்து இந்த ஹாஸ்பிட்டலே பயப்படனும் போல. முதல்ல நான் இங்க இருந்து ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு ஓடிடனும்…” என புலம்ப,

“ஹேய் ட்யூட்டி டாக்டர் வந்தாச்சு…” என சொல்ல இருவரும் அட்டென்ஷனில் நின்று அவனை பார்த்து புன்னகைத்தனர்.

“குட்மார்னிங் டாக்டர்…” என சொல்லவும் பதிலுக்கு முகமெல்லாம் புன்னகையுடன்,

“குட்மார்னிங். என்ன ரெண்டு பேரும் டென்ஷனா இருக்கிற மாதிரி இருக்கு?…” கேட்டான் கார்த்திக்.

“அது வந்து டாக்டர்…” என தயங்க,

“அட சொல்லுங்க, என்ன விஷயம்?…” என கேட்டுவிட்டு  அன்றைய கேஸ் ஷீட்டை எடுத்து பார்வையை ஓட்டியபடி நிற்க புதிதாய் வந்து ஒரு பத்து நாள் கூட ஆகவில்லை. இவனிடம் எப்படி சொல்வது என்று யோசித்துக்கொண்டிருந்தனர்.

“நேத்து நைட் புதுசா ஒரு பொண்ணு அட்மிட் ஆகிருக்காங்கள்ள. இப்ப அவங்களுக்கு எப்படி இருக்குன்னு செக்கப் பண்ணுனீங்களா?…” என அவனே விஷயத்திற்கு வந்துவிட இருவரும் திருதிருவென விழித்தனர்.

“என்ன இது? கேட்டதுக்கு பதில் சொல்லலாமா நிக்கிறது?…” என மிதியாக பேசியவன் இப்பொழுது கோபமாக கேட்டான்.

வந்ததிலிருந்து அவன் கோபப்பட்டு பார்த்திராத இருவருக்கும் பயம் பிடித்தது. இவன் நட்பாக பழகுவதற்கு இனிமையானவன் என்று நினைத்தால் பார்வையிலேயே மிரட்டுகிறானே என மிரண்டனர்.

“பார்க்க தான் போனேன் ஸார். ஆனா அங்க…” என்று விரலை நீட்டியவள் நடந்ததை சொல்ல அவனுக்கு இன்னமும் கோபம் அதிகமானது.

“வாட் நான்சென்ஸ்? ஃபுட் பாய்சன் ஆகிருக்கு. இப்ப போய் தலைவாழை விருந்து வச்சா வேடிக்கை பார்த்துட்டா இருப்பீங்க? கொண்டு வந்தா தூக்கி வீசி எறியவேண்டியது தானே?…”

கார்த்திக் என்னவோ கேட்டுவிட்டான் தான். ஆனால் நர்ஸ் கண்ணுக்குள் தான் பாத்திரத்தை தூக்கி எரிவதை போல தெரியவில்லை. பேச்சி தன்னையே தூக்கி வெளியில் வீசுவதை போலத்தான் தோன்றியது.

“அம்மாடியோவ்…” என கன்னத்தில் கை வைத்து அலற அதை பார்த்தவன்,

“யூஸ்லெஸ், என் கூட வாங்க…” என கோபத்துடன் ஸ்டெதஸ்கோப்பை கழுத்தில் போட்டுக்கொண்டு விடுவிடுவென வேகமாய் நடந்தான்.

“என்க வந்து நாட்டாமை பன்றாங்க. இன்னைக்கு இருக்கட்டும்…” என்ற முணுமுணுப்புடன் பொதுபிரிவிற்கு சென்று பார்க்க அங்கே கண்மணி இருந்த கட்டிலை விட காலியாக இருந்த சில கட்டிலில் அவளின் சொந்தபந்தங்கள் அமர்ந்திருந்தனர்.

“ஹலோ யார் நீங்கல்லாம்? எதுக்கு இப்படி கூட்டம் போட்டு பேஷன்ட்ஸ டிஸ்டர்ப் செய்யறீங்க? வெளில பொங்க எல்லாரும்…” என கத்த பேச்சியின் பின்னால் இருந்து கண்மணி எட்டிப்பார்க்க அப்போதுதான் அவனும் அவளை பார்த்தான்.

“ஆத்தீ இவனா?…” என முணங்க,

“என்னது என் பொண்ணை இங்க தனியா விட்டுட்டு நாங்க வெளில போகனுமா?…” என்று பேச்சி தன் அவதாரத்தை எடுக்க பார்க்க அவரை பார்த்த கார்த்திக்,

“ஆமாங்கம்மா, இலளினா இங்க இருக்கிறவங்களுக்கு இன்பெக்ஷன் ஆகிடும். அதாவது ஏதாவது தொத்திக்கும். அப்பறம் அவங்களும் இங்க ஹாஸ்பிட்டளுக்கும் வீட்டுக்குமா நடக்கனும்…” என்றதுமே ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க,

“ஏன் இவ்வளவு சாப்பாடு? அதும் காலையிலேயே?…” கார்த்திக் பேச்சியிடம் கேட்டுக்கொண்டே வந்து கண்மணியின் கையை பிடித்து நாடி துடிப்பை பார்த்து,

“நாக்கை வெளில நீட்டும்மா…” என விஷமமாய் பார்த்து சொல்ல கண்மணி பல்லை கடித்தாள்.

கார்த்திக்கின் பேச்சில் ஏனோ அதிகம் பேசாது அமைதியான பேச்சி,

“புள்ளைக்கு சாப்பிடத்தான் கொண்டாந்தோம் டாக்டரு. பசியா இருக்கும்ல…” என சொல்ல,

“குடுங்க தாராளமா. ஆனா பாருங்க. இதை எல்லாம் குடுத்தா சீக்கிரம் சரியாகாது. இன்னும் ஒரு வாரம் பத்துநாள் இருக்க வேண்டியதாகிடும். இங்க வச்சு பார்த்துக்க எங்களுக்கு ஒண்ணுமில்லை. உங்க பொண்ணுக்கு தான் கஷ்டம்…” என?

“ஏன் ஏன் குடுக்க கூடாது?…” இப்பொழுது பேச்சி குரலில் காரம் ஏறியது.

“நேத்து உங்க பொண்ணு வயித்து வலியால ரொம்ப துடிச்சாங்கலாமே?…”

“ஆமாங்க தம்பி. பொண்ணு புழுவா துடிச்சுட்டா. மனசே ஆறலை…” சங்கரி சொல்லி கண்ணீரை துடைக்க கார்த்திக்கின் இதழ்களில் அடக்கப்பட்ட புன்னகை.

“பின்ன வயித்துல புன்னு இருக்கறப்ப காரமா சாப்பிட்டா புண்ணு ஆறிடுமா? இன்னும் அதிகமாக தானே செய்யும்? அதான் சொல்றேன். இங்க இருக்கிற வரை நாங்க சொல்றதை குடுங்க. குனமாகிட்டு வீட்டுக்கு போனதும் நீங்க ஆசைப்பட்டது, உங்க பொண்ணு ஆசைப்பட்டது எல்லாம் சமைச்சு குடுங்க. யாரும் தடுக்கமாட்டாங்க…”

அவர்களுக்கு புரியும் படி மிக அமைதியாக தெளிவாக சொன்னதும் ஏற்றுக்கொள்ளும் படி தான் தோன்றியது பேச்சிக்கு.

“சரி நீங்க சொல்ற மாதிரியே செய்யறோம். அதுக்குன்னு எல்லாரும் கிளம்பிட்டா என் பொண்ணுக்கு எப்படி பொழுது போவும்? பாடு பேச நாலாளு இருந்தாத்தானே அவளுக்கும் சுளுவா இருக்கும்…” என சொல்ல அங்கிருந்தவர்களை திரும்பி பார்த்தவனின் இதழ்களில் கேலிப்புன்னகை.

அதை கண்டுகொண்ட கண்மணியின் முகமோ அத்தனை கடுமையாக மாறியது. அவனை நன்றாக முறைத்தாள்.

“எல்லாரும்னா எல்லாரையும் சொல்லலை. உங்க பொண்ணு கூட ரெண்டு பேர் இருங்க போதும். இதுவும் உங்க ஊர்  தானே?…” என்றவனின் கிண்டல் பேச்சில்,

“அம்மா, அதெல்லாம் எனக்கொண்ணும் பயமில்லை. நான் இருந்துப்பேன். நீங்க சீக்கிரம் என்னைய வீட்டுக்கு கூட்டி போக என்ன செய்யனுமோ செய்யுங்க…”

எரிச்சலாய் அவன் முகம் பார்த்து இவள் மொழிய அதை கண்டுகொண்டவனின் விழிகள் சிரிப்பில் பளபளத்தது.

“வச்சிக்கறேன்டா உன்னைய…” என சத்தமில்லாமல் சொல்ல,

“வச்சிக்க, வச்சிக்க…” என விஷமமாய் அவனும் அவளை போல வாயசைத்தான்.

“சரி, சரி, அல்லாரும் கெளம்புவோம். அதான் அந்த புள்ளையே சொல்லிருச்சுல. எதுக்கு நம்மால அவுகளுக்கு செரமம்?…” என ஒரு பெருசு சொல்லிக்கொண்டே அங்கிருந்து நகர மற்றவர்களும் களைந்து சென்றனர்.

சங்கரியும், பேச்சியும் மட்டும் கண்மணியுடன் இருக்க நாட்டரசன் வெளியில் சென்று அமர்ந்துகொண்டார். அதை பார்த்த பேச்சி,

“இந்த மனுஷன் காட்டுக்கு போவாம இங்க என்ன உக்காந்துட்டாரு?…” என்றபடி அவரை பார்க்க செல்ல,

“இருடி, இந்த தூக்கு சட்டிகளை எல்லாம் வீட்டுக்கு குடுத்து விட்ருவோம்…” என அதை தூக்கிக்கொண்டு சங்கரியும் சென்றுவிட்டார்.

கார்த்திக் வந்த வேகத்தில் அனைவரையும் துவம்சம் பண்ணிவிடுவான் என்று நினைத்தால் இங்கு இத்தனை தன்மையாக பேசுகிறானே? என நர்ஸ் இருவரும் வாய் திறந்து பார்த்திருக்க அவர்களை பார்த்து புருவம் உயர்த்தியவன்,

“இவங்களுக்கு இப்ப போடவேண்டிய இன்ஜெக்ஷன், டேப்லட்ஸ் எடுத்துட்டு வாங்க…” என்று அனுப்ப நொடியில் ஓடிப்போய் எடுத்து வந்தனர்.

“நான் பார்த்துக்கறேன். யூ கேன் கோ…” என்று அவர்களை அனுப்பிவிட்டு கண்மணியின் புறம் திரும்ப அவனை முறைத்தவள்,

“என்ன என்னைய இங்கயே இருக்க வச்சு பழி தீர்த்துக்கற  ப்ளானா? என்கிட்டே வாங்கின அடி மறந்துருச்சா? உன் திட்டமெல்லாம் என்கிட்டே செல்லுபடி ஆகாது. எனக்கு உடம்பு மட்டும் சரியாகட்டும் உனக்கு இருக்குடா…” என சூளுரைக்க,

“கண்மணி. உன் பேர் தெரிஞ்சிடுச்சு பார்த்தியா?…” என்று கேலி பேச,

“டேய்…” அவனின் கழுத்தை நெறிப்பதை போல கையை கொண்டுபோக அதை தட்டியவன் ஊசியை போட்டுவிட்டு அவளை பார்க்க அதன் சுருக்கென்ற வழியில் விழியில் நீர் கோர்த்தது கண்மணிக்கு.

அதை பார்த்தவனின் இதயம் தடம்புரண்டது.

“வலிக்குதா?…” மென்மையாக கேட்க,

“கொஞ்சமாச்சும் கூறு இருக்கறவன் கேட்கற கேள்வியா இது? ஊசி குத்தினா வலிக்காம என்ன பண்ணும்? மாத்தரை எத்தன வேணா குடு. போட்டுக்குவேன். ஆனா ஊசி தான்…” என்று கையை நீவிவிட,

“அதான் நீ சாப்பிடறதை பார்த்தேனே? உனக்கு டேப்லட்ஸ் அத்தனை குடுத்து கட்டுபடி ஆகாதும்மா…” என கேலியாக ச்ல்லியவன் அங்கிருந்து கிளம்பி பின் மீண்டும் அவளின் அருகில் வந்து,

“கண்மணியை விட கிங்கிணிமங்கினி தான் எனக்கு பிடிச்சிருக்கு…” என சிரிப்புடன் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டான்.

“இவன?…” என்று பல்லைகடித்துக்கொண்டு பார்த்தாள் கண்மணி.

தொடரும்…

Advertisement