Advertisement

மணியோசை – 15
            “ஏய் கிங்கிணிமங்கினி உன்னை எப்ப கிளம்ப சொன்னா இன்னும் என்னடி பண்ணிட்டு இருக்க? நான் ஹாஸ்பிட்டல்ல இருந்து கிளம்பறப்பவே சொல்லிருந்தேன்ல இவனை கிளப்பிட்டு நீயும் கிளம்பி ரெடியா இருன்னு…” என்று கார்த்திக் வெடுவெடுக்க,
“ஏன் பேசமாட்டீரு? உம்ம புள்ள படுத்தற பாட்டுல எனக்குத்தான் தாவு தீந்துபோவுது. போம்மைய்யா. அம்புட்டு வெசனம்னா நீரே கிளப்பும். நா போய் சேலைய மாத்திட்டு வரேன்…”
என்றும் போல அவனை வாயடைக்க செய்துவிட்டு கண்மணி பெட்ரூமினுள் சென்று கதவடைத்துகொள்ள வழக்கம் போல மனைவியின் பேச்சில் வாய்பிளந்து நின்றவனின் காலை சுரண்டினான் அவன் அருமை மகன்.
அருள்மொழி. ஆம் மிக மிக ஆசையாக கார்த்திக் வைத்த பெயர் இது. இதை வைப்பதற்குள் அவன் பட்ட பாடு இன்று நினைத்தாலும் ரத்தக்கண்ணீர் தான் அவனுக்கு.
“ஒண்ணு உங்க குலதெய்வ பேரை வைங்க. இல்ல மணி அவ குலதெய்வ பேரை வைக்கட்டும். ரெண்டுமில்லாம புதுசா ஒரு பேர வச்சா சாமிகுத்தம் ஆகிப்போடும் மாப்பிள்ள. இந்தாத்தா மணி அவருக்கு புரியுமாட்டம் எடுத்து சொல்லுத்தா…”
பேச்சியும், சங்கரியும் கார்த்திக்கின் இரு புறமும் காவல் தெய்வங்களாய் கையில் வீச்சரிவாள் இல்லாத குறையாய் விரைப்புடன் நிற்க அதன் பின்னான நாட்களில் உறக்கத்தில் பாதிநாள் அவனுக்கு காளி அவதாரமெடுத்த மாமியார்களாய் அவனின் கனவில் வலம் வந்து அவன் அடித்துபிடித்து பதறி எழுந்ததெல்லாம் தனி கதை.
“என்னைய முழு நேரமும் அலார்ட்லையே வச்சிருக்குதுங்களே இந்த குடும்பம்…” என கண்மணியிடம் புலம்பி தீர்ப்பான்.
“இல்லைனாலும் உம்ம கைய்யில புடிக்க முடிக்குமாக்கும்?…”  என்று வெட்டிக்கொண்டு போவாள் கண்மணி.
“இங்க பாருங்க அத்தை, இது அவன் பிறந்த நேரப்படி ஜாதகம் கணிச்சு ஜோஸியர் சொல்லித்தான் முடிவு பண்ணிருக்கோம். அவனுக்கு ஒரு குத்தமும் வராது. சாமியும் கோவிச்சுக்காது…” இதை லேசாய் சிரிப்புடன் சொல்லிவிட்டான். அவ்வளவு தான். உடனே சங்கரி பதறிக்கொண்டு,
“என்ன மாப்பிள்ள அந்த ஆத்தா முத்துகருப்பியவே பழிச்சுப்புட்டீகளே? ஐயோ நா என்னத்த செய்யட்டும்?. துடியா நிப்பாளே எங்காத்தா?…”
ஆயிரம் வேண்டுதலுடன் வேகமாய் சுத்தமான ஒரு வெள்ளை துணியை கிழித்து அதை மஞ்சளில் நனைத்து பூஜை அறைக்கு சென்று  காசை வைத்து முடிந்து சாமி படத்தின் முன் வைத்து கும்பிட்டார்.
கார்த்திக்கிற்கோ ஒன்றுமே புரியவில்லை. கண்மணியை பார்க்க அவளும் குழந்தையை மடியில் கிடத்தி அமர்ந்தவாக்கில் பூஜையறையை பார்த்து கும்பிட்டு இவனை முறைத்தாள்.
“என்ன பழிச்சேன்? எப்ப? நான் என்ன பண்ணேன்னு இப்படி செய்யறாங்க? தப்பா ஏதும் பேசிட்டோமோ?.” என உண்மையில் பயந்து போனான்.
“ஏய் கிங்கினிமங்கினி என்னடி இது?…” அவளிடம் முறையிட,
“சாமி பத்தி பேசறப்ப பாத்து பேசப்படாதா? போச்சு…” என அவள் வேறு கிளப்பிவிட மாமியார்கள் வருவதற்குள் எழுந்து ஓடிவிடுவோமா என்று நினைக்க அதற்குள் வந்து அவனுக்கு அரண் கட்டினார்கள்.    
அவர்களை நிமிர்ந்து பார்த்தவன் அவர்கள் இருவரும் பேச ஆரம்பிக்கும் முன் தானே வாயை திறந்துவிட்டான்.
“இங்க பாருங்க அத்தை, ரெண்டு பேரையும் தான். நான் ஜோசியர்ட்ட ஏற்கனவே?…”
“பெரிய மெத்தபடிச்ச மேதாவி சோசியரு. அவன் எவன்னு காமிங்க மாப்பிள்ள. உங்கள ஏமாத்திருக்கான்…” என சங்கரி சொல்ல,
“உங்க ஊர்ல ஜோசியமே பார்க்கமாட்டீங்களா அத்தை?…” அவன் சந்தேகம் கேட்க,
“ஏன் பாக்காம? பொருத்தம் பாத்துத்தேன் கலியாணமெல்லாம். எங்க கூரவீட்டு சோசியருட்டத்தேன் பாப்பம். புள்ளைக்கெல்லா குலசாமி பேரதேன் வப்பம்…” பேச்சி சொல்ல,
“ம்க்கும், ரெண்டு பேர் குலதெய்வத்தோட பேர் வச்சா எப்படி இருக்கும்?…” என முனுமுனுத்தவன்,
“இங்க பாருங்கத்தை, உங்க ஊர்ல எப்படியோ, ஆனா நாங்க எல்லாத்துக்குமே ஜாதகம் பார்த்து அவுங்க கணிச்சு தரதை வச்சு தான் எல்லாம் செய்வோம். என் பையனோட பேர் நான் முடிவு பண்ணிட்டேன். இந்த பேர்தான் அவனுக்கு ராசி…” என சொல்லிவிட்டு இதற்கு மேல் இருந்தால் இன்னும் பேசுவாரோ என பயந்தே வெளியில் கிளம்பி போனான்.
அதற்கு மேல் மருமகனிடம் வாதாட முடியாமல் நாட்டரசனிடம் முறையிட அவரோ இருவரையும் தாளித்துவிட்டார். அதிலும் பேச்சியை வறுத்துவிட்டார்.
“அறிவுகெட்ட சென்மமாத்தா நீயி? மருமவன்ட்ட போய் வாயாடியிருக்குத? ஒரு மருவாதி வேணா? அவரு உசரமென்ன? படிப்பென்ன? ஒரு தராதரம் தெரியவேணா?…” என வசைபாட பேச்சிக்கு கண்ணீரே வந்துவிட்டது.
என்றைக்கும் நாட்டரசனை இவர் தான் அரட்டி இருக்கிறார். நாட்டரசன் ஒரு சுடுசொல் சொல்லியதில்லை. கோபமென்றாலும் கூட அதை பேச்சியிடம் காட்டியதில்லை. இன்று அப்படி ஒரு கோபத்தை அவரிடமிருந்து பேச்சியும், சங்கரியும் எதிர்பார்க்கவே இல்லை.
“இல்ல, சாமிக்குத்தம் ஆகிடும்னுதேன்…” சங்கரி இழுக்க,
“ஏன் அவருக்கு சாமி இல்லியா? இல்ல காலநேரம் தெரியாதா? மவளை குடுத்துருக்கோம்னு உறுத்து இருக்குதா? கோவத்துல அவரு எதாச்சும் பேசிப்போட்டா ஆருக்கு மருவாதி கம்மி. நம்ம மவ இங்கன நிம்மதியா கஞ்சிகுடிக்க முடியுமா?. இதுக்குத்தேன் அம்புட்டு அவதியா கிளம்புனீயளோ ?…”
அவர் சொல்லிவிட்டு கோபத்துடன்  வெளியே கிளம்பிவிட கார்த்திக் வரும் வரையிலும் பேச்சியின் அழுகை ஓய்ந்தபாடில்லை. கண்மணி சமாதானம் செய்தும் மூலையில் முடங்கியவர் அங்கிருந்து எழுந்துகொள்ளவே இல்லை.
அவன் மாலை வந்த பின்பு வேகமாய் எழுந்து வர அவனின் பின்னாலேயே நாட்டரசனும் வந்துவிட்டார். வந்ததிலிருந்து அவர்களை முறைக்க அவர்களோ கார்த்திக்கிடம்,
“மன்னுச்சிக்கிடுங்கய்யா. நா என்னவோ கூறுகெட்டத்தனமா பேசிப்புட்டேன். நீக நெனச்ச பேர புள்ளைக்கு வையுங்க…” என சொல்ல,
“என்னாச்சு அத்தை?…” ஒன்றும் புரியாமல் கார்த்திக் கேட்க,
“அத்தயும் மூக்க சீந்திக்கிட்டே கேட்பியோ?…” என்று நாட்டரசன் எகிற,
“மாமா, என்ன இது? ஏன் கோவப்படறீங்க? அவங்களே அழுதுட்டு இருக்காங்க. நீங்க இன்னும் மிரட்டறீங்க?…”
“உங்களுக்கு தெரியாது மாப்பிள்ள. இவ செஞ்சுவச்ச காரியத்துக்கு. ஒரு மட்டுமருவாதி வேணா?…” என மீசையை முறுக்க அதை பார்த்த கார்த்திக்,
“அய்யனாரே தான். சாஃப்ட்டான ஆளுன்னு நினச்சா மொத்த ஊரையும் தூக்கி சாப்பிட்ட ஆளுன்னு இப்பத்தான புரியுது. பால் வடியுற முகம்னு நம்பி பக்கத்துல பச்சபிள்ளையாட்டம் உட்கார்ந்துட்டியேடா கார்த்தி…” என முழிக்க,
“நீங்க கைகால் கழுவிட்டு வாங்க. யத்தா மணி, போய் சோறு எடுத்துவை…” என்று சொல்லி தோளில் கிடந்த துண்டை எடுத்து சகோதரிகள் இருவரையும் ஒரு முறை முறைத்து துண்டை உதறி மீண்டும் போட்டுகொண்டார்.
அன்று இரவு சுத்தமாய் தூக்கம் பறிபோனது கார்த்திக்கிற்கு. கண்மணியை ஒரு வழி ஆக்கிவிட்டான்.
“ஏன் கிங்கினிமங்கினி உங்க குடும்பத்துல பேர் வைக்க இத்தனை போராட்டமா இருக்கே? உங்களுக்கு மட்டும் எப்படி இந்த பேர் வச்சாங்க?…” என கேட்க அவனை முறைத்தவள்,
“அத தெரிஞ்சு என்ன பண்ண போறீக? பேசாம உறங்குங்க…” என திரும்பிக்கொள்ள,
“யோசிச்சு பாரு, புள்ளைக்கு முத்துக்கருப்பன்னு பேர் வச்சு கருப்பா கருப்பான்னா?…” என்னவோ பெயரையே வைத்துவிட்டதை போல அவன் பேச,
“இந்த பேர் உமக்கு நொட்டையா தெரியுதோ? சாமி பேரு…” என மிரட்டலாய் பார்க்க அதை புறம் தள்ளியவனின் மனக்கண்ணில் காலை மாமியார்கள் இருவரும் காசு முடிந்துவைத்தது வலம் வர சிரிப்பு தான் வந்தது.
“நல்லவேளை உனக்கு முத்துக்கருப்பின்னு வைக்கலை. அந்த அளவுக்கு நான் க்ரேட் எஸ்கேப்…” என்று சிரித்தபடி அவளின் இடுப்பில் கை போட்டு இழுக்க,
“இந்தா ஒன்னும் கிடையாது. கம்முனு படுங்க…” கண்மணி பட்டென தட்டிவிட,
“ஏன்? ஏன்? ஏன்?…”
“என்னாத்துக்கு இத்தன ஏன்? அம்மா வேண்டிருக்குது. பதினாறு நாளுக்கு சுத்தபத்தமா இருந்து கோவிலுக்கு வரதா. அதுக்குத்தேன் காசு முடிஞ்சது…”
“என் வாழ்க்கையை முடிக்காம விடமாட்டீங்களா ஆன்ட்டி ஆண்ட்டீஸ்?….” என்று பல்லை கடிக்கத்தான் முடிந்தது அவனால்.
“இதெல்லாம் அநியாயம்டி கிங்கினிமங்கினி…” என புலம்ப அவனின் புலம்பல் எதுவும் அவளின் காதுக்குள் விழுந்தால் தானே?
“தூங்கிட்டியா? அடிப்பாவி…” என தலையணை மீது தன் ஆற்றாமை காட்டியவன்,
“இப்படின்னு தெரிஞ்சிருந்தா மாமனார் எகிறும் போதே இன்னும் எகிறட்டும்னு நல்லா விசிறி விட்டுருப்பேனே? பதினாறு நாள். பதினாறு நாள்டா கார்த்தி…” என்ற புலம்பலுடன் அன்றைய உறக்கம் தொலைத்தான் கார்த்திக்.
அதன் பின் அவர்களை பார்க்கும் போதெல்லாம் காதில் புகைவிடாத குறை தான்.  உள்ளுக்குள் குமுறினாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் அவன் கஷ்டப்பட அவர்களோ நுறு அறிவுரைகளுடன் இரண்டே நாளில் கிளம்பினார்கள்.
கிளம்பி விட்ட சந்தோஷம் கூட அவனுக்கு வாய்க்கவில்லை. கண்மணி அத்தனை கறாராக இருந்தாள். அருகில் உட்கார கூட விடவில்லை. அதில் அவன் இன்னும் அதிகமாய் அவளை சீண்ட,
“பேசாம இருந்தீகன்னா பதினாறே நாளு. இல்லனா இன்னொரு பதினாறு நாளு…” என அசராம அவனுக்கு திருப்பியடிக்க,
“அவுங்களுக்கு பயம்னா அவுங்க வேண்டிக்க வேண்டியது தானடி. எதுக்கு நமக்கு வேண்டுதல் வைக்கிறாங்க. இதுதான் லாஸ்ட் சொல்லிட்டேன். இனி பூஜை, விரதம்னு இருந்த…” என கார்த்திக் பொங்கிக்கொண்டு இருந்தான்.
இப்பொழுது நினைத்தாலும் அப்படி ஒரு புன்னகை அவனுக்கு. நாளுக்கு நாள் சுவாரஸியம் குன்றாமல் குறையாமல் வாழ்க்கை செல்ல கண்மணி குடும்பத்தினர் செய்யும் அலம்பல்களை பொறுத்துகொள்வான்.
அவர்கள் தங்கள் மீதான பாசத்தில் தானே தங்களிடம் இப்படி நடந்துகொள்கின்றனர் அந்த வெள்ளந்தி மனிதர்கள் என்று இவனுக்கும் தெரியும். ஆனாலும் சில நேரங்களில் அவனின் பொறுமை கூட எருமை மீது ஏறிவிடும்.
“இன்னும் என்னதான் கண்மணி பன்ற?…” என அதட்டல் போட இங்கே இவனின் கோபத்திலும் அதட்டலிலும் மகன் அழுதுவிட்டான்.
“போச்சுடா, உனக்கு உங்கம்மாவ ஒரு வார்த்த சொல்லிட கூடாதே?…” என்று அங்கலாய்க்க,
“சேல மாத்தறதுக்குள்ள என்ன அவரம்ங்கறேன்? உம்ம மாதிரியா பேண்ட போட்டுக்கிட்டு வாரதுக்கு…” என எரிச்சலுடன் வந்தவள்,
“புள்ளைக்கு பவுடர போட்டுவிட சொன்னா சுண்ணாம்பு அடிச்சு வச்சிருக்கீக?…” என்று திட்ட அதை டீலில் விட்டவன்,
“ஏன் நீயும் போடேன். நான் என்ன வேண்டாம்னா சொல்றேன். மார்டன் ட்ரெஸ் போடலாம் கிங்கினிமங்கினி…” அவள் காதில் ஆடிக்கொண்டிருந்த ஜிமிக்கியை நீவிக்கொண்டே உல்லாசமாய் கேட்க,
“எங்கம்மா என்ன குழில எறக்கவா? போம்மைய்யா…” என அவனின் கன்னத்தில் இடித்தவள்,
“போய் புள்ளையோட அட்டையை எடுத்தாருங்க…”
“அதக்கூட இன்னும் எடுத்துவைக்கலையா நீ?…” என்று முறைத்துக்கொண்டே சென்றவன் பீரோவில் இருந்த வேக்சினேஷன் கார்டை எடுத்துக்கொண்டு வந்து,
“ஒம்பது மாசம் ஓடினதே தெரியல…” என சொல்ல அவனை பார்த்துக்கொண்டே தன்னையும் கண்ணாடியில் சரிபார்த்துக்கொண்டாள்.
“போலாம்…” என்றவள் வீட்டை பூட்டி சாவியை எலெக்ட்ரிக் பாக்ஸ் அருகே மறைவாக வைத்துவிட்டு வர,
“நான் எத்தனை தடவை சொல்றது கண்மணி, சாவியை இப்படி வைக்காதன்னு. கேட்கறதே இல்லை…”
“ப்ச், பெரிம்மா காய் வாங்க போயிருக்கு. நாம வரவரைக்கும் அது எங்க இருக்குமாம்?…”
“அதுக்கு தான் இன்னொரு கீயை அவங்கட்ட குடுத்திருன்னு சொன்னேன்ல…”
“நா மாட்டேன்னா சொன்னேன். அவுகதேன் வேணாம்னாக. இத்துனூண்டா இருக்கு. கீழ கீழ போட்டுட்டா என்னத்துக்குன்னுதேன் வேணாம்ன்காக…”
“கடவுளே…” என அவன் தலையில் அடித்துக்கொண்டு காரை கிளப்ப அவனை கண்டுகொள்ளாமல் குழந்தைக்கு விளையாட்டு காட்ட ஆரம்பித்தாள் கண்மணி.
அன்று தடுப்பூசி போட போனவர்கள் அப்படியே குழந்தைக்கு தேவையான பொருட்கள் சிலதையும் வாங்கிவிட்டு வீட்டுக்கு வர மகாதேவி நடுநாயகமாக அமர்ந்திருந்தார்.
சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி இத்தனை அவசரமாக ஏன் இவர் வரவேண்டும் என அவன் யோசித்துக்கொண்டே உள்ளே வர,
“வாங்க அத்த, எப்ப வந்தீக? நல்லா இருக்கீகளா? எதாச்சும் குடிக்க எடுத்தாறேன். வெயிலு வாட்டுது பாருங்க…” என்றபடி உள்ளே செல்ல,
“வாங்கம்மா, நல்லா இருக்கீங்களா?…” என கேட்டுவிட்டு,
“கண்மணி…”   என அழைக்க அவனிடம் வந்தவள் அவனின் முறைப்பில்,
“அத்தைய பாக்கவும் மறந்திட்டேன்….” என்று அசடுவழிந்துவிட்டு,
“இருங்கத்தே போய் கை, கால் கழுவிட்டு வாரேன்…” என  சொல்லி உள்ளே செல்ல மகனின் தோளில் உறங்கிப்போயிருந்த பேரனை வாங்கி மடியில் வைத்துக்கொண்டார்.
அவனும் பொதுவாக பேசிக்கொண்டிருக்க கண்மணி வந்துவிட அவளை பார்த்துவிட்டு,
“இருங்கம்மா நானும் போய் ப்ரேஷ் ஆகிட்டு வரேன்…” என்று உள்ளே சென்றுவிட்டான்.
“இந்தா மணி, உன் மாமியாருக்கு மோரு கடஞ்சேன், நீயே கொண்டு போய் குடு. வந்ததுல இருந்து ஒண்ணுமே குடிக்கல. பேசல…” என்றவர் கொடுத்த தம்ளரை வாங்கிக்கொண்டுவந்து மகாதேவியிடம் கொடுக்க மறுபேச்சின்றி வாங்கி குடித்தார் அவர்.
“இன்னைக்கு தடுப்பூசி போட போனோம். புள்ள அழுதழுது சுருண்டுட்டான்…” அவர்தம் பேச்சுகொடுக்க,
“ஹ்ம்ம், ஊசி போட்ட இடம் வீங்கிடாம பார்த்துக்க…” வாயை திறந்தார்.
“சொர்க்கவாசதேன்…” சங்கரி உள்ளே இருந்து பார்த்து நொடிக்க,
“சந்திரா மதினி வரலியா அத்த? கூட்டியாந்திருக்கலாமில்ல…”
“இல்லம்மா, நான் திடீர்ன்னு தான் கிளம்பினேன்…”
“கேட்டதற்கு மட்டும் பதில் சொல்பவரிடம் இதற்கு மேலும் வலிய சென்று பேச கண்மணிக்கும் என்னவோ போலிருந்தது. வீட்டிற்கு வந்தவரிடம் முறைக்க கூடாதே என்று தான் அவள் இருக்கிறாள்.
ஆனால் அந்த இடத்திலும் மகாதேவி தன் கர்வத்திலிருந்து இறங்கிவராமல் பிடிவாதமாய் இருக்க கண்மணியும் வந்தவரிடம் முகம் காட்டாமல் உபசரித்தாகிவிட்டது. இதற்கு மேல் என்ன செய்வது என்று அமைதியாக இருந்தாள்.
“இந்தா பிடி, இவனை நல்லா படுக்க வை. நல்லா தூங்கி எழுந்துக்கட்டும்…” என்று அவளிடம் கொடுக்க கை மாற்றலில் சிணுங்கிய மகனை தட்டிகொடுத்து அங்கிருந்து நகர கார்த்திக்கும் வந்து அமர்ந்தான்.
“வாங்கம்மா, சாப்பிடலாம்…”
“இல்லப்பா, ஒரு முக்கியமான விஷயம் பேசனும்…”
“பேசலாம்.மா. முதல்ல சாப்பிடுவோம்…” என்று அழுத்தமாய் அவன் சொல்லிவிட மறுத்து பேச நினைத்தாலும் மகனுக்காக வந்தார்.
“அத்தை, அம்மாவுக்கு இடுப்பு வலி இருக்கு. இப்பலாம் கீழே உட்கார முடியுறதில்ல. அதனால டேபிள்ள வச்சிடுங்க…” என்றதும் கண்மணியும் வந்துவிட கார்த்திக்கும், மகாதேவியும் பேசிக்கொண்டே சாப்பிட்டனர்.
இருவரும் சாப்பிட்டு முடிக்கவும் அனைத்தையும் சுத்தம் செய்த கண்மணி சங்கரியுடன் சாப்பிட கீழே அமர்ந்துவிட கார்த்திக் மகாதேவியுடன் ஹாலில் அமர்ந்தான்.
“சொல்லுங்கம்மா, ஒரு போன் கூட பண்ணாம கிளம்பி வந்திருக்கீங்க?…” என கேட்கும் போதே அவர் பார்த்த பார்வையில் பெரிதாய் ஏதோ வரபோகிறது என்று நினைத்தான் கார்த்திக்.
அதே போல பெரிதாய் தான் வந்தது.

Advertisement