Advertisement

மணியோசை – 14
                மணிகண்டன் வெளிநாட்டில் இருந்தபடியே அவருக்கு வேண்டிய ஆட்களின் மூலமாக கார்த்திக்கிற்கு வேலை மாற்றுதலை ஏற்பாடு செய்ய இது கார்த்திக்கிற்கே தெரியாது. ஆனால் கண்மணி ஆடிவிட்டாள்.
“மூட்டபூச்சிக்கு பயந்து வீட்ட கொழுத்துவாகளா? நல்ல கதையா இருக்கே?…” என கண்மணி இவனிடம் வெடிக்க கார்த்திக் நிலை தான் பரிதாபம்.
“நான் இதுக்கு காரணமில்லடி. எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்ல…”
“சம்பந்தமில்லாமையா அன்னைக்கு உங்கம்மா கூட சண்ட போட்டப்ப என்கிட்டே கேட்டீரு மாத்துதல் வாங்கிட்டு போய்டுவோமான்னு?.அன்னைக்கே எனக்கு தோணாம போச்சு…”  என விடாமல் அவனை வறுத்தெடுக்க கார்த்திக் தான் அவளை சமாளிப்பதற்குள் படாதபாடு பட்டுபோனான்.
மகாதேவி கூட மகனிடம் தனியாக வந்து தன்மையாக பேசிப்பார்த்தார்.
“அம்மா இப்பலாம் எதுவும் பேசறதில்லையே கார்த்திக். இப்ப ஏன்ப்பா உண்டாகி இருக்கற பொண்ணையும் சேர்த்து அலைய வச்சிட்டு. நான் தான் பிரச்சனைன்னா இனி நான் எதுவுமே பேசலை. அதுக்குன்னு இப்படி கிளம்பிடாதப்பா…” என கேட்க அதுவும் கெஞ்சலில்லாத கெஞ்சலாய் கேட்க,
“அம்மா, நான் என்ன புதுசாவா ட்ரான்ஸ்பர் கிடைச்சு போறேன். ஏற்கனவே வெளியூர்ல தான வேலை பார்த்தேன். இப்பவும் அப்படி நினைச்சுக்கோங்க. உங்கமேல கோவப்பட்டு போறதா நீங்க ஏன் நினைக்கறீங்க?…”
கார்த்திக் போகவேண்டும் என நினைத்தது என்னவோ உண்மை தான். ஆனால் கண்மணி குடுத்த குடுப்பில் அப்படி ஓர் எண்ணம் தனக்கு தோன்றவே இல்லை என்னும் அளவிற்கு அதை மறந்துவிட்டிருந்தான்.
என்னதான் மகாதேவி இப்பொழுதெல்லாம் கண்மணியை  பேசவில்லை என்றாலும் அவளை பார்த்தவுடன் ஒரு ஒதுக்கமும், முகசுழிப்பும் அவரிடம் வந்து ஒட்டிக்கொள்ளும். அது அனைவரும் அறிந்திருந்த ஒன்று தான்.
சந்திராவின் மூலம் கூட மகாதேவி கேட்டுப்பார்த்தார். ஆனால் கண்மணியிடம் சென்று இதை பற்றி பேச அவர் விரும்பவில்லை. அவளிடம் சென்று நிற்பதா என்கிற எண்ணம் அவருக்கு. மணிகண்டன் போன் செய்து ஒரு அதட்டல் போட்டதும் அதையும் நிறுத்திவிட்டு கம்மென இருந்துகொண்டார். மகன் செல்வதை அமைதியாக வேடிக்கை பார்க்க மட்டுமே அவரால் முடிந்தது.
————————————————————
திருப்பூர் நகரத்தில் அந்த மருத்துவமனையில் முகத்தை கடுகடுவென வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான் கார்த்திக்.
“இப்ப கோபப்பட்டு என்ன யூஸ் கார்த்திக்? நான் போன செக்கப்லையே சொன்னேன். ஃபூட் கண்ட்ரோல் ரொம்ப முக்கியம்னு. ஏன் கேட்கறதே இல்ல நீங்க? இன்னும் ஒன் மந்த் தான் இருக்கு டெலிவரிக்கு. ஒரு டாக்டரா இருந்துட்டு இவ்வளவு கேர்லெஸ் கூடாது கார்த்திக்…” என்றதும் கண்மணியை பார்வையில் பஸ்பமாக்கினான் கார்த்திக்.
“கண்மணியை முறைச்சு ஒரு பிரயோஜனமும் இல்லை. நீங்க தான் அவங்களுக்கு புரிய வைக்கனும். ப்ளட்ல சுகர் லெவல் அதிகமா இருக்குமோன்னு டவுட்டா இருக்கு. நீங்க நாளைக்கு கண்மணியை கூட்டிட்டு திரும்ப வாங்க. அதையும் டெஸ்ட் பண்ணிடுவோம். காலையில சாப்பிடாம வரனும். இந்த டெஸ்ட் எடுத்த பின்னால நான் குடுக்கற மெனு தான் கண்மணிக்கு…”
டாக்டர் நர்மதா சொல்ல சொல்ல தலையை ஆட்டிவிட்டு இறுக்கமான முகத்துடன் அங்கிருந்து கிளம்பினான் கார்த்திக். உடன் கண்மணியும்.
“கோவமா இருக்கீகளா?…” என கண்மணி மெதுவாய் கேட்க திரும்பி பார்த்து முறைத்தவன் பதில் பேசாமல் கார் ஓட்டுவதில் கவனமானான். வீட்டிற்கு வந்ததும் வாசலிலேயே நின்றிருந்த சங்கரியை பார்த்துவிட்டு உள்ளே சென்று அமர்ந்துவிட்டான்.
“என்னடி மணி? டாக்டரு என்ன சொன்னாக? உம்புருசன் கோவமா போறாரே?…” என கிசுகிசுப்பாய் கேட்க,
“வழக்கம்போலத்தேன் பெரிம்மா. வெய்ட் ரொம்ப கூடிட்டேனாம். சும்மா உறங்காத, நட, சாப்பாட்ட கொறன்னு சொல்லி திட்டுது. இவரு என்கிட்டே எகிறுறாரு…” பாவமாய் சொல்ல,
“நல்லா படிச்சாளுக டாக்டருக்கு. புள்ளத்தாச்சி புள்ளைய உங்காம உறங்காம இருக்க சொல்லுதாளே வெளங்குவாளா? வயித்துக்கு முழுங்கினா தான பிரசவம் சுளுவா இருக்கும். வலிய தாங்க தெம்பு வேணா? வந்துட்டாளுக…” என்று சங்கரி நீட்டிமுழக்க கார்த்திக் வந்து நின்றான் அவரின் முன்பு.
கப்சிப்பென வாயை மூடியவர் அமைதியாக உள்ளே சென்றுவிட கண்மணியை பார்த்து,
“அடங்கமாட்டியா கிங்கிணிமங்கினி. எப்ப பாத்தாலும் எதையாவது இழுத்துவச்சு எனக்கு பாட்டுவாங்கி குடுக்கறதே பொழப்பா போச்சு உனக்கு…” என கோபத்தில் ஆரம்பித்து புலம்பலில் நிறுத்த குபீரென சிரித்துவிட்டாள் கண்மணி.
“குலுங்காதடி, நீ குலுங்கி சிரிக்கிறது எனக்கு பகீருன்னு இருக்குது. நார்மலா உன்னோட ப்ரக்னேன்சி டைம்ல இவ்வளவு வெய்ட் உனக்கு இருக்க கூடாதுன்னு தான சொல்றாங்க. அதும் நம்ம குழந்தையோட நன்மைக்கு தான?…” என இவளுக்கு சொல்லிகொண்டிருக்க அடுப்படி ஜன்னல் வழியாக,
“அந்த காலத்துல புள்ளத்தாச்சிங்க சாப்புடாததா? குண்டாகாமையா இருந்தோம். அந்த காலத்துல வசதி இல்லாதப்பவே கொறையில்லாம பெத்துக்கிட்டாக. இப்ப இதுக்குன்னு படிச்சுட்டு வந்து கடவுளே அவுக மாதிரியில சலும்புறாக….” என சங்கரி போனில் பேச்சியிடம் ஒப்பித்துகொன்டிருக்க அவரின் கணீர் குரல் வாசலை தாண்டி தெருவுக்கே கேட்டது.
“நாங்கலாம் அந்த காலத்துல…” என மீண்டும் சங்கரி ஆரம்பிக்க தலையில் அடித்துக்கொண்ட கார்த்திக்,
“முடியலடி. உன் பெரியம்மாவை முதல்ல இந்த அந்த காலத்துல புராணத்தை ஸ்டாப் பண்ண சொல்லு…” என கடுப்புடன் சொல்லிவிட்டு உள்ளே செல்ல அதற்கும் கண்மணியிடம் சிரிப்பு தான்.
அதற்குள் கிருஷ்ணன் இரண்டு மூன்று பைகளுடன் வந்தவன் வாசலில் இருந்த கண்மணியை பார்த்துவிட்டு,
“இரு மணி, இத பெரிம்மாட்ட குடுத்துட்டு வரேன்…” என்று உள்ளே சென்றவன்,
“பெரிம்மா இதுல ரத்தம் இருக்கு. பொரியல் பண்ணிடுங்க. ஈரல வறுத்துருங்க. குடல பிரட்டல் பண்ணிடுங்க. மெளகா சேக்காம குறுமிளகு சேர்த்து செய்யுங்க. அப்பத்தான் மணிக்கு ருசியா இருக்கும். எலும்பு வாங்கிட்டேன். ரெண்டு நாளா மாப்பிள்ள பேசறப்ப கனகனனு இருக்கு. அவருக்கு சூப்பு வைச்சிடுங்க. கறிய என்ன செய்யனும்னு கேட்டுடுங்க மணிகிட்ட. மீனு இங்க வாங்கவேண்டாம்னு அம்மா சொல்லுச்சி. நாளைக்கு அப்பா கொண்டுவரேன்னு சொல்லிட்டாரு…”
கிருஷ்ணன் பட்டியல் போட போட இங்கு கார்த்திக்கிற்கு இதயத்துடிப்பு அதிகமாகியது.
“குடும்பமாடா நீங்க? ஒரு மனுஷன் என்ன சொல்லுறேன்னே கேட்காம மில்ட்டரி ஹோட்டல் ரேஞ்சுல லிஸ்ட் போட்டுட்டு இருக்கானுங்க. ஐயோ கடவுளே…” என புலம்ப,
“கூப்பிட்டீங்களா?…” என்று வந்து நின்றாள் கண்மணி.
“மேடம் குறுமிளகு போடாம குடல் சாப்பிடமாட்டீங்களோ? எனக்கு இப்படி ஒரு டிஷ் வீட்ல செய்வாங்கன்னே உன்ன கட்டுன பின்னாடி தான்டி தெரியும். முடியலடி. விட்டா என்னை கால புடிச்சு கதறவிட்ருவீங்க போல. பாவம்டி என் பிள்ளை…” என புலம்ப,
“இப்ப என்னத்துக்கு இந்த பொலம்பல் உங்களுக்கு?…” என்றவளை அழைத்து கண்ணாடி முன்பு நிறுத்தினான்.
“பாருடி கிங்கிணிமங்கினி. எவ்வளவு குண்டாகிட்டன்னு…”
“நா என்ன வேணுமின்னா குண்டானேன்? எனக்கே தெரியல. அதுவா சத்து போட்டுட்டே இருக்குது. பசிக்குது. சாப்பிடாம எப்படி இருக்கவாம்?…”
“உன்ன யாரு சாப்பிடாம இருக்க சொன்னா? நான் குடுக்கறத சாப்பிட்டு. எவ்வளவு வேணும்னாலும் நான் சொல்ற மாதிரி சாப்பிடு…”
“அதெல்லாம் சுள்ளுன்னு சொனப்பா இல்ல…” முகத்தை தூக்கி வைக்க,
“கன்னத்துல போட்டேனா சுள்ளுன்னு விழும் பார்த்துக்க…” என்றதும் அவனின் இதழ்களை நெருங்கி தன் கன்னத்தை வாகாய் காண்பிக்க நொடியில் அவனின் கோபம் எங்கோ பறந்தது.
“படுத்துறடி, ஆனாலும் இது பிடிக்குது…” என அவளை அணைக்க அதில் அடங்கவில்லை அவள்.
“பாரு பாரு, உன்ன கட்டிகூட பிடிக்க முடியல. குண்டம்மா, குண்டம்மா…” என்று மீண்டும் எகிற ஆரம்பிக்க,
“அதெல்லாம் கொழந்த பொறந்ததும் வெய்ட் கொறஞ்சுடும். நீறு ஒன்னும் வெசனப்பட வேணா…”
“லூஸு, இதுக்கு யாரு கவலைப்படறா? உனக்கு டெலிவரி ஈஸியா இருந்தா மட்டும் போதுமா? பிறக்கிற குழந்தை ஆரோக்கியமா பிறக்கனும்ல…” என்றவன் மறுநாள் எதற்கு செல்கிறோம் என்று விளக்கம் சொல்ல சொல்ல கேட்டுகொண்டவள் அமைதியாய் இருக்க,
“ஏற்கனவே உங்கம்மா என் மேல கோபமா இருக்காங்க கண்மணி. இப்ப ஏதாவது சின்ன ப்ராப்ளம்னா கூட அதோட ரிப்ளேக்ஷன் எப்படி இருக்கும்னு சொல்ல முடியாது. உன்னோட ஹெல்த், குழந்தையோட ஹெல்த் சம்பந்தப்பட்டது. இதுல இனியும் கேர்லஸா இருக்கமுடியாதுடா. புரிஞ்சுப்ப தானே?…”
அவன் குரலில் இறைஞ்சுதல் தெரிய பதறியவள் தன் கைகளால் அவனின் வாயை அடைத்தாள்.
“இப்ப என்னத்துக்கு கெஞ்சுதீரு. விடுங்க. அம்மா கோவமெல்லாம் எம்புட்டு நாளைக்கு. இன்னும் பத்து நாளுல வந்து நிக்கும் பாருங்க…” என அவனை சமாதானம் செய்தாள்.
பேச்சிக்கு கண்மணியை வளைகாப்பு போட்டுவிட்டு ஒரே வாரத்தில் கார்த்திக் திருப்பூர் அழைத்து சென்றுவிட்ட கோபம். தலைபிரசவம் தாய் வீட்டில் தான் என பேச்சியும் நாட்டரசனும் எவ்வளவோ சொல்லியும் கார்த்திக் கேட்கவே இல்லை.
கண்மணியை விட்டு இருக்கமுடியாது என்பது காரணமாக இருந்தாலும் அந்த ஊரில் உள்ள வசதிவாய்ப்பு இன்னொரு காரணம் கூட. அதன் பொருட்டே விடாப்பிடியாய் பேச்சியிடம் வாக்குவாதம் செய்து கண்மணியை அழைத்துவந்துவிட்டான்.
மனது கேட்காது சங்கரி அவர்களுடன் கிளம்பிவிட கிருஷ்ணன் தான் வாரம் ஒருமுறை திருப்பூர் வந்து செல்வான். வரும்போதெல்லாம் அவனின் கைகொள்ளாமல் எதையாவது கொடுத்தனுப்பிக்கொண்டே தான் இருப்பார் பேச்சி.
அதுவே கார்த்திக்கை அதிகம் எரிச்சலாக்கியது. கண்மணியின் உடல்நிலை குறித்து ஒரு மருத்துவனாய் அவன் சொல்ல அனுபவத்தில் தாங்கள் கண்டதை பேச்சியும் சங்கரியும் சொல்ல அவ்வப்போது முட்டிக்கொண்டது.
கண்மணிக்காக அமைதியாக போனான் கார்த்திக். அதற்கென அவர்கள் மேல் கோபம் எல்லாம் இல்லை. அன்பில்லாமலும் இல்லை. அவர்கள் மேல் அந்தளவிற்கு மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தான். அதற்காக கண்மணியின் விஷயத்தில் அவன் இறங்கி போவதாக இல்லை.
ஒரு வழியாக கண்மணி தான் விஷயத்தை விளக்கி அவர்களுக்கு புரியவைத்தாள். கண்மணியின் டெலிவரிக்கு பத்து நாட்கள் முன்பே பேச்சியும் திருப்பூர் வந்துவிட தன் தாயையும் அழைத்தான் கார்த்திக்.
மகாதேவி முதலில் வேண்டாம் என சொன்னாலும் பின் மனமில்லாமல் கிளம்பிவிட்டார் சந்திரவோடு. வந்தவரை எந்தவித வெறுப்புமின்றி இன்முகமாகவே வரவேற்றாள் கண்மணி.
இருவரும் ஒட்டிக்கொள்ளவும் இல்லை, வெட்டிக்கொள்ளவும் இல்லை. என்னவென்றால் என்ன என்னும் அளவிலேயே நின்றுகொண்டனர்.
மகாதேவிக்கு இதற்கு மேலும் மகனை கஷ்டபடுத்த மனமில்லை. பிடிக்காத மருமகளானாலும் மகனுக்காக என நினைத்துகொண்டார். ஏனோ கண்மணி மீதும் அவர்கள் குடும்பத்தின் மீதும் விழுந்த அபிப்ராயத்தை அவரே நினைத்தாலும் மாற்றிக்கொள்ள முடியாதளவிற்கு பதிந்துபோய் இருந்தது.
அதிகம் ஈஷிக்கொள்ளாமல் தன்னுடைய நிலையில் தெளிவாய் இருந்தார் மகாதேவி. அதை கண்மணி மட்டுமல்ல மற்றவர்களும் உணர்ந்தே இருந்தனர். கார்த்திக்கிடம் கண்மணி தான் மகாதேவிக்காக பேசினாள் அவரின் இயல்பிலேயே விட்டுவிடும் படி.
அதிகளவிற்கு அழுத்தம் கொடுக்க கொடுக்க யாராகினும் திமிறிக்கொண்டு அதை மீறவே பார்ப்பார் என்பது கண்மணியின் எண்ணம். அதனாலேயே மகாதேவியை அவரின் போக்கிலேயே விட்டுவிட்டாள்.
ஒரு நல்ல நாளில் நல்ல நேரத்தில் கார்த்திக்கின் மகன் சிசேரியன் மூலம் அவ்வுலகில் தன் கால்த்தடத்தை மிக அழுத்தமாக பதித்தான்.
ஆம், கண்மணியின் அதிகபட்ச எடையும் அவளின் உடல்நிலையும் சுகபிரசவத்திற்கு வழிவகுக்காததால் சிசேரியன் செய்யவேண்டிய சூழல் உருவாகியது.
அதற்குமே சங்கரியும், பேச்சியும் புலம்பி தீர்த்துவிட்டனர். அவர்களை சமாளிக்க முடியாமல் கார்த்திக் தான் விழி பிதுங்கினான். அதுக்கொரு நேர்த்திகடன்  வைத்தனர் அவர்களின் ஆஸ்தான முத்துக்கருப்பிக்கு. ஏதோ தெய்வகுற்றம் ஆகிவிட்டதென தவித்துபோயினர்.
மகாதேவிக்கோ கார்த்திக்கின் மகன் அப்படியே தன்னை கொண்டு பிறந்திருப்பதை கண்டு அத்தனை பெருமை. தனக்கு பிடித்தவர்களிடம் அதை சொல்லி சொல்லி மாய்ந்துபோனார். மணிகண்டனும், தவமும் அடுத்த விடுமுறைக்கு வந்துவிடுவதாக சொல்லி வாழ்த்தினார்கள்.
கண்மணி, கார்த்திக்கின் குழந்தையை பார்க்கவென கார்த்திக்கின் உறவினர்கள் வேன் பிடித்து வந்துவிட்டு சென்றனர்.
மகாதேவிக்கு கடுத்துக்கொண்டு வந்தாலும் ஒதுங்கிக்கொண்டார். இனி எதையும் மீண்டும் தன் கட்டுக்குள் நிறுத்த முடியாது. ஆனால் இதில் கலந்துகொள்ளாமல் இருக்கமுடியுமே? அவரால் சட்டென யாரையும் ஏற்கமுடியவில்லை. அதை விரும்பவும் இல்லை. நான் இப்படித்தான். இனியும் இப்படித்தான் என இருந்துகொண்டார்.
ஒரு மாதம் வரை அங்கேயே இருந்துவிட்டு பின் கண்மணியை அழைத்துக்கொண்டு கண்மணி ஊருக்கே சென்றுவிட கார்த்திக் தான் தவித்துபோனான். இனி பேச்சியிடம் தன் பேச்சு எடுபடாது என புரிந்து முணுமுணுப்புடன் அனுப்பிவைத்தான்.
அவளில்லாத அவ்வீடு அவனுக்கு சலிப்பை தர எப்போதடா மீண்டும் கண்மணியை அழைத்து வருவோம் என்னும் அளவிற்கு பித்தாய் இருந்தான். இந்தளவிற்கு அவள் தன்னுடன் கலந்திருப்பதை எண்ணி அவனுக்கே வியப்பு.
“ஏய் கிங்கிணி மங்கினி, உன் குறட்டை சத்தம் இல்லாம சத்தியமா தூங்க முடியலடி. வந்துடேன் ப்ளீஸ்…” என எவருமறியாமல் கெஞ்ச கண்மணிக்குமே அவனின் குரலில் தெரிந்த தவிப்பு இங்கே இவளை உருக்கியது.
கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் சென்றுவிட அந்த சடங்கு, இந்த சம்பிரதாயம் என அவனை அலைக்கழித்து ஏழாம் மாதம் தான் கண்மணியை திருப்பூருக்கே அழைத்துவர முடிந்தது. உடன் சங்கரியும் இலவச இணைப்பாக வந்துவிட கார்த்திக்கிற்கு இன்னும் வசதியானது.
“என்னன்னு என்னை விட்டுட்டு இருந்தடி கிங்கிணிமங்கினி? என்னை தேடவே இல்லையா நீ?…” என அவளிடம் மயங்கிக்கொண்டே கேட்க அவனின் மயக்கம் அவளையும் தொற்ற பதிலின்றி வெறும் ஹ்ம்ம் என்று மட்டுமே பதிலளிக்க அவளின் முகம் நிமிர்த்தியவன்,
“பேசுடி, உன்னோட சலசலப்பு இல்லாம, இந்த ஆலய மணி இல்லாம இந்த கார்த்திக் ரொம்பவே தவிச்சுட்டேன், இளைச்சுட்டேன். பேசுடி. இன்னைக்கு முழுக்க பேசிட்டே இரு. நான் கேட்டுட்டே இருக்கனும். உன்னோட பேச்சும் குறட்டையும் என் காதுக்குள்ள ஒலிச்சுட்டே இருக்கனும்…” என பைத்தியம் போல பிதற்ற அவனின் முகத்தையும் தலையையும் ஆராய்ச்சியாய் பார்த்தாள் கண்மணி.
“என்ன கிங்கிணி மங்கினி?…”
“இல்ல, நா போனப்ப நல்லாத்தான இருந்தீக? இப்ப எதுக்கு இம்புட்டு உளறலு?. மண்டையில ஏதும் அடிகிடி பட்டுருச்சோன்னு பாக்கறேன்…” என்றவளின் நக்கலில் அவளின் கன்னத்தை கிள்ள அதன் பின் பேசிய அனைத்துமே கண்மணி மட்டுமே.
மகனை மடியில் வைத்து கொஞ்சிக்கொண்டு கண்மணியின் பேச்சை கார்த்திக் கேட்டான், கேட்டான் கேட்டுக்கொண்டே இருந்தான்.  கண்மணியின் ஊரில் நடந்த அனைத்தையும் கேட்டுகொண்டே உறக்கத்திற்கும் சென்றான்.
இனிமையான நினைவுகளுடன் மனதிற்கு பிடித்தவர்களின் அருகாமையில்  ஆழ்ந்த உறக்கம். வெகு நாட்களுக்கு பின்னான கண்மணியின் அணைப்பிலான  நிறைவான உறக்கம்.
அவன் அசந்து உறங்கியதும் அவனின் நெற்றியில் மெலிதாய் இதழ் ஒற்றியவள் குழந்தையை தொட்டிலில் கிடத்திவிட்டு கார்த்திக்கின் அணைப்பிற்குள் சுருண்டுகொண்டு சுகமாய் உறங்கிபோனாள்.
நல்ல உறக்கத்தில் மெலிதான குறட்டை சத்தம். அடித்துபிடித்து எழுந்தவன் ஓசை வித்தியாசமாய் இருக்க,
“கிங்கிணிமங்கினி குறட்டை இம்புட்டு சாப்ட்டா இருக்காதே?…” என சொல்லிக்கொண்டே திரும்பி பார்க்க குறட்டை சத்தம் வந்ததோ மகனின் தொட்டிலில் இருந்து.
“அட நான் பெத்த மகனே,  இது குறட்டை பேமிலி” என திகைத்தவனின் முகத்தில் அப்படி ஒரு புன்னகை. மனைவியின் முகத்தையும் மகனையும் பார்த்தவனுக்கு சந்தோஷத்தில் அவனின் சிரிப்பு பெரிதானது.
இவனின் கண்ணின் மணியான மணியோசையும் அந்த மணி பெற்ற சின்னஞ்சிறு கனி ஓசையும் கார்த்திக்கின் வாழ்வில் என்றும் நீக்கமற நிறைந்திருக்கும் என்ற நிறைவுடன் நாம்.
சுபம்

Advertisement