Advertisement

நட்சத்திர விழிகள் 3

வீட்டின் முன்பாக கார் நின்றதும் மேளச்சத்தம் முழங்கவும் சரியாக இருந்தது. கண்ணை திறந்து பார்த்தவள் மிரண்டு பின்வாங்கினாள்.

“ஐயோ எவ்வளோ பேர் இருக்காங்க?….” என்றெண்ணியபடி உதயாவை  பார்த்தவள் அவனது இறங்கு என்ற கட்டளையை ஏற்று இறங்க முற்பட்டவளது கால்கள் அவளுக்கு ஒத்துழைக்க மறுத்தது.

காரின் மறுபுறம் வந்தவன் கைபிடித்து “ம்ம், இறங்கு!…” என்றான் மீண்டும்.

தள்ளாடியபடி இறங்கியவளுக்கு பயத்தில் நாக்கு வறண்டு பூமி தட்டாமலை சுற்றியது.

கையை பிடிக்கவுமே அவளுக்கு நடுக்கம் அதிகமாகியதை உணர்ந்தவன், “ஆத்தீ இவ இங்க வச்சு மயக்கம் ஏதும் போட்டு மானத்தை வாங்கிருவாளோ?” என்று பயந்து அவள் தோளை பிடித்து ஒரு உலுக்கு உலுக்கினான்.

மிரள மிரள விழித்தபடி நோக்கியவளை, “மரியாதையா நடந்து வா, இல்லைனா உனக்கு தலைசுத்தி மயக்கம் வருதுன்னு சொல்லி எல்லோர் முன்னாலையும் அப்டியே தூக்கிட்டு போய்டுவேன். எப்படி வசதி நடந்து வரயா? இல்லை தூக்கிட்டு வரணுமா?…” என்று மிரட்டினான்.

அந்த மிரட்டலுக்கு பலன் இருந்தது. எங்க செய்தாலும் செய்துடுவானோ என்றஞ்சி முகத்தில் ஒரு வண்டி தண்ணீரை கொட்டியது போல தெளிய நின்றாள் அதுவும் அவன் சொன்னதால் உண்டான பயத்தினாலே.

அவளுக்கென்ன தெரியும் எங்கே தான் மிரட்டியதும் அதற்கே நந்தினி மயக்கம் போட்டு வைத்து தன்னை தூக்க வைத்துவிடுவாளோ அனைவரின் முன்னிலையிலும் தான் தூக்கவேண்டிவந்திருமோ என்று தன் பக்தியை பகவானுக்கு பகடையாக்கினான்.

அப்படி ஏதும் நடக்காமல் இருக்க அனைத்து கடவுள்களுக்கும்  அரைநொடியில் அவசரமாக அழைப்பு விடுத்தான் அவனுக்கு துணையிருக்க.

அவனது அவசர வேண்டலுக்கு அசுர பலம் போல. கடவுள்களால் அவனின் கருணை மனு கச்சிதமான கையாளப்பட்டது.

வாசலில் நாச்சி குறும்பாக இவனின் பாவனைகளை பார்த்தபடியே இருப்பதை கண்டு “ஐயோ!…” அலறியது மனம்.

“சிக்கிட்டேனே!…” என்று நொந்தேவிட்டான்.

அனைவரும், “பொண்ணு மகாலட்சுமி போல இருக்குதுய்யா!….” என்று சில்லாகித்தபடி அவர்களுக்குள் உரையாடிகொண்டனர்.

கூட்டத்தினரை தள்ளிக்கொண்டு ஆரத்தித்தட்டோடு வந்தவள், “அண்ணி கொஞ்சம் நிமிர்ந்துதான் பாருங்களேன். அப்புறம் ஆரத்தி எடுத்தது நான் தான்னு உங்களுக்கு தெரியாமலேயே போய்டும்!….” என்றாள் சிநேகிதத்துடன்.

“என் தங்கச்சி, பேரு கெளரி!…” என்றான்.

அச்சிறுபெண்ணை லேசாக நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் தலையை குனிந்து கொண்டவளை கண்டு அனைவருமே கொல்லென சிரித்துவிட்டனர்.

“போதும்,போதும் சிரிச்சது. ஏற்கனவே புள்ள பயந்து கிடக்குது. இப்டி சிரிச்சா அது இன்னமும் பயந்துக்கும். முதல்ல உள்ளே வரவிடுங்க, அப்புறமா மத்ததை பேசலாம். வேலை வேற தலைக்குமேல கிடைக்குதுல!…” என்று அவர்களை திசை மாற்றிவிட்டு நந்தினியை காப்பாற்றியவர் நாச்சியே.

நன்றியோடு பார்த்த உதயாவை நோக்கி, “வா ராசா உனக்கு தனியா இருக்கு!…” என பார்வையிலேயே அவனுக்கு கிலியை உண்டாக்கிவிட்டே உள்ளே செல்ல ஆயத்தமானார்.

“நாச்சி பார்வையே சரியில்லையே? உஷாருடா உதயா, சிக்கினா சிக்கன்  பிரியாணிதான்!…” என தனக்குதானே சொல்லிகொண்டு நந்தினியோடு தனது வீட்டிற்குள் ஒன்றாக நுழைய விழைந்தவனை கண்டு,

“ஏப்பா பிரபா பொண்டாட்டி கையை பிடிச்சு கூட்டிட்டு போவியா இப்டியா போவ?…” என்று வினவி வைக்கவும் நந்தினியின் கையோடு தன் கையை கோர்த்தபடி,

“இதுக்கே முடியலையே. எப்டி சமாளிக்க போறேன்? கடவுளே இன்னும் என்னென்ன இருக்குமோ? நீதான் காப்பாத்தனும்….” மீண்டும் கடவுளை தொந்தரவு செய்ய,

அதுவோ, “உனக்கு வேற வேலையில்லை!…” என வெறியாகி தெறித்து ஓடியது இவனது திசையின் எதிர்பக்கமாக.

கைப்பிடித்து மனையாளோடு தனது இல்லத்திற்குள் அவளது புக்ககத்துக்குள் நுழையும் போது ஏற்பட்ட மெலிதான அதிர்வும் அந்த அதிர்வு உண்டாக்கிய உணர்வும் என்னதென்று வகைப்படுத்தமுடியாமல் இப்போது எதையும் சிந்திக்க நேரமில்லை என சாக்கிட்டு புறந்தள்ளினான்.

வீட்டினுள் வந்ததும், “எதுக்கு இவ்வளோ ஆர்ப்பாட்டம் பண்ணி வச்சிருக்காங்க?..” என்று கடுப்போடு இவன் இருக்க,

“ம்க்கும், பொண்டாட்டியை கூட்டிட்டு வந்தா மட்டும் போதாது ராசா, புள்ள இந்த முழி முழிக்குதே, அதுக்கு எல்லோரையும் உறவுமுறையை சொல்லி தெரியபடுத்தனும்னு தோணுதா உனக்கு?…” என்று நீட்டி முழக்கியபடி நந்தினியின் அருகில் வந்த நாச்சி,

“ஆத்தா உன் பேரு என்ன?..”  என்றார் வாஞ்சையாக.

“மித்ரநந்தினி!…”

மிடறு விழுங்கிய படி தொண்டையில் சிக்கிகொண்ட வார்த்தைகளை ஒவ்வொன்றாக தோண்டி எடுத்து கேள்விக்கு விடை சொன்னாள்.

“இது சரிபடாது, ஒரு கேள்விக்கே பதில் சொல்ல இப்படி பயந்து சாகுறா? இவ இப்படி இருந்தா இதுங்ககிட்ட பொழச்ச மாதிரிதான்!…”  என்று பெருமூச்சு விட்டான்.

“நாந்தேன் உன் புருஷனுக்கு பாட்டி. என் பேரு நாச்சியாண்டாள். உன் மாமனார பெத்தவ!…” என்றார்.

அவரது காலில் விழுந்து ஆசி வாங்கிகொண்டவளை அணைத்து, “என்ற ஆத்தா, நல்லா இரு தாயி!..” என்றார் மனமார.

“இது என்னோட பிள்ளை, உன்ற மாமனாரு. பேரு கிருஷ்ணமூர்த்தி!..” எனவும் அவரது காலிலும் விழுந்து எழுந்தாள்.

“நல்லாயிருமா!…” என்றபடி சாந்தமான புன்னைகையுடன்.

“இது தான் உன் அத்தை, என் மருமவ, பேரு பாக்கியலட்சுமி. இவ கிடைக்க நாங்க பாக்கியம் செய்திருக்கணும். நீயும் தான் ஆத்தா!…” என்றார்.

அவரது காலிலும் விழபோகையில் நந்தினியை நிறுத்தி நெற்றியில் முத்தமிட்டு, “இருக்கட்டும்மா, நீ நல்லா இருப்படா ராசாத்தி, வா வந்து முதல்ல விளக்கேத்து!…” என்று அழைத்துசென்றார் பாக்கியலட்சுமி நிறைந்த புன்னகையோடும் மனம் கொள்ளா பூரிப்போடும். 

ஆகமொத்தம் உதயாவை யாருமே கண்டுகொள்வதாய் தெரியவில்லை.

அவனுக்கு நடந்த சம்பவத்தில் நந்தினியை தான்தான் அழைத்துவந்தோமா என்ற சந்தேகமே வந்து அவனை மேலும் புகைய வைத்தது.

“என்னங்கடா நடக்குது இங்க?…” இப்டி தன்னை எல்லோரும் தனியா விட்டுட்டு போயிட்டாங்களே என்று புலம்பிய படி,

“எல்லாம் கிழவியால!…” என சபித்ததுவிட்டு பூஜையறைக்குள் சென்றவர்களை பின்பற்றி தானும் சென்று அவசரமாக நந்தினியின் அருகில் நின்றுகொண்டான்.

நாச்சிக்கும் கெளரிக்கும் இவனின் முகத்தை பார்த்து மர்மான சிரிப்பொன்றை  இருவரும் பரிமாறிகொண்டனர்.

பூஜையறைக்குள் சென்று விளக்கை ஏற்றி முடித்து கண்களை மூடி பிராத்தித்து கொண்டிருந்தாள் நந்தினி.

கும்பிட்டு முடித்ததும் கெளரி குங்குமச்சிமிழை நீட்டி, “அண்ணா இதை அண்ணிக்கு வகிட்டில் வைங்க!…” என்றாள்.

சுற்றி இருந்தவர்களை கவனத்தில் கொண்டு குங்குமம் இட சென்றவனை நிறுத்தி கேலி பெண்ணொருத்தி, “என்னங்கத்தான் கல்யாணமானா இப்டியா வைப்பாங்க?கழுத்தை சுத்தி கையை கொண்டுபோய் நெத்தியில வைங்க!…”என்றாள்.

நந்தினிக்கு பதட்டத்தை பட்டா போட்டதுபோல வியர்க்க ஆரம்பிக்க, உதயாவோ “போச்சுடா இவங்க பண்ற அலம்பலுக்கு இவளை தூக்கிட்டுத்தான் போகணும் போலையே?, ஆவுனா வியர்க்க வேற ஆரம்பிச்சிடுது இவளுக்கு, எந்த நேரம் பொசுக்குன்னு விளுந்து வைப்பாளோ?….” என்று கருவியபடியே அசையாமல் இருக்க,

நாச்சி, “ராசா உன் கல்யாணத்தைதான் யாரும் பார்க்கலை. இதையாச்சும் பார்க்கட்டுமே!…” எனவும் அவர் மேல் கொலைவெறியான முகத்தை காட்டிகொள்ளாமல் இருக்க பெரும் பிரயத்தனப்பட்டு கொண்டே வகிட்டில் குங்குமத்தை இடவும் உடனடியாக அவன் புறந்தள்ளிய உணர்வு நாலுகால் பாய்ச்சலில் வந்து அடைக்கலமானது.

“அடடா அதே பீலிங்க்ஸூ, ஏன் இப்டி வருது?..” என்று இதமான மனதை ஆராய்ச்சியில் ஈடுபடுத்த முனைய,

உறவுப்பெண் ஒருத்தியோடு மாடியறைக்கு நந்தினியை அழைத்து சென்றார் பாக்கியலட்சுமி. சலசலத்துகொண்டிருந்தவர்களை நோக்கி,

“சரி சரி போய் வரவேற்புக்கு தயாராகுங்க. இன்னும் ஒருமணிநேரமே இருக்கு!…” கணீர் குரலில் விரட்டினார் நாச்சி. அனைவரும் கலையவும்,

முதலில் வரவேற்பு என்றதும் திகைத்து வாயடைத்து நின்றவன் கெளரி தோளை தொட்டு அசைக்கவும் சுயஉணர்வு பெற்று  “என்னாதூஊஊஊஊ?????…” என்றலறினான் உச்சபட்ச அதிர்ச்சியில்.

“அண்ணே இது என்ன லேட் ரியாக்ஷன்?…” என்றாள் நக்கலாக.

“நீ கொஞ்சம் பேசாம இரு!…” அவளை கடிந்து விட்டு நாச்சி பக்கம் பார்வையை திருப்பவும் நழுவபோன நாச்சியை பிடித்து நிறுத்தி,

“என்ன கிழவி இதெல்லாம்?…” 

“என்னைய்யா ராசா உனக்கு தெரியாதா?…” என்றார் நாச்சி சாவகாசமாக.

“கிழவி உன்னை கொல்லபோறேன் பாரு?…”

“ஏன்? நான் என்ன பண்ணினேன்?..”

“என்ன பண்ணலை நீ?…”

“கல்யாணத்தை பார்க்க முடியலைன்னு வரவேற்பு வைச்சாவது ஜோடியா பார்க்கலாம்னு இந்த வயசான கிழவி ஆசைப்பட்டது ஒரு குத்தமா?…” என மூக்கை சீந்தியபடி ஒப்பாரி வைத்து ஊரை கூட்ட தயாரானதை பார்த்து பதறியே விட்டான் உதய்.

“ஏன் கிழவி இப்டி கத்தி கூப்பாடு போடுற?…” என்றான் சுற்றிமுற்றி பார்த்தபடி.

“அப்படிதான் சொல்லுவேன்!…” என்று அதோடு விடாமல்,

“கெளரி நீ போய் எல்லோரையும் வரச்சொல்லு, இன்னைக்கு ரெண்டுல  ஒன்னு நான் பார்க்கணும், பார்த்தே ஆகணும்!…”

“என்ன நினச்சிட்டு இருக்கான், நான் தூக்கி வளர்த்த பையன், என் பேரன்னு இறுமாப்பா இருந்தேனே?…”

“இதை கேட்க யாருமே இல்லையா? ஏய்யா கண்ணு இங்க வந்து உன்ற புள்ள பண்ற அழிச்சாட்டியத்தை என்னான்னு கேளேன்?…” என்றார் முகாரி பாடியபடி.

“நானா? நானா அழிச்சாட்டியம் பண்றேன்?அப்போ இது பண்றதுக்கு பேர் என்னவாம்? கிழவி வாய்கூசாம எப்படி பிராடு விடுது பாரு கெளரி?…” என்றான் அழமாட்டாத குறையாய்.

கெளரிக்கு பாவமாக இருந்தது அண்ணனை காண, ஆனாலும் என்ன செய்ய? அண்ணனுக்கு சப்போர்ட் பண்ணி பேசினா கிழவி குதறிடும். பேசாம ஜகா வாங்கிடவேண்டிதான் என என்னும் போதே,

“இந்தா கெளரி என்ன யோசனையில நிக்கிறவ?…”

அதிர்ந்து சமாளித்தபடி, “ஒன்னுமில்லையே பாட்டி சொல்லு என்ன செய்யனும்?…” பம்மியபடி வினவ,

“இவன்கிட்ட கேளு என்ன முடிவுன்னு?…” என்றார் கறாராக.

“இனி நான் எங்க முடிவெடுக்க? அதான் எல்லாம் ஏற்பாடும் பண்ணிட்டேல அப்புறம் என்னவாம்? வரவேற்புக்கு வரேன்!…” என்றான் கடுகடுவென முகத்தை வைத்துகொண்டு.

“இந்தா பாரு, இப்டி ஒன்னும் நீ சலிச்சுக்கிட்டு வரவேற்புல நிக்கவேண்டாம், சந்தோஷமா வரணும்னா வா!…” என்றார் விறைப்பாக.

“வேற யாருக்கோ வரவேற்புக்கு வேடிக்கை பார்க்க அழைக்கிறதுபோல இல்ல இது கூப்பிடுது? மாப்பிள்ளை நான்தானே? என்ற முக்கியமான சந்தேகம் வந்து ஒட்டிக்கொண்டது உதயாவிற்கு.

“என்ன யோசிக்கிற?…”என்றார் நாச்சி அதட்டலான குரலில் கூறியவர் வேகமாக முந்தானையை எடுத்து மீண்டும் ஒரு முகாரிக்கு மூக்கின் அருகே கொண்டுசெல்லவும் மனதிற்குள்ளேயே கதறினான். 

தலையெழுத்து எதுக்கெல்லாம் மிரட்டுது பாரு, உன்னை அப்றமா கவனிச்சுக்கறேன் என்று கருவியபடி உதடை இழுத்துவைத்து,

“ஹி ஹி ஹி  நான் சந்தோஷமா தான் நாச்சி சம்மதிச்சேன்!…” என்றான்.

“என் ராசா!…” வழித்து நெட்டிமுறித்து. 

“கெளரி நீ போய் உன் அண்ணனுக்கு அந்த புதுத்துணியை எடுத்தாந்து அவன் கைல குடு!…” என அதிகாரமாக.

“போய்யா போய் உடுத்திக்கிட்டு வெரசா வா!…”  எனவும்,

கிழவி சாமர்த்தியத்தை எண்ணி கோவத்தை பிடித்துவைக்க முடியாமல் சிரித்துக்கொண்டே கன்னத்தை கிள்ளியபடி,

“கிழவி நீ இருக்கியே? சரியான எமகாதகி, என்ன பேச்சு பேசற, உன்னை சமாளிக்கவே முடியாது!…..” என ஐஸ் மழை பொழிந்தவனிடம்,

“பின்ன? உன் கிட்ட வேற எப்டி பேச? போய்யா சந்தோஷமா தயாராகி வா, எல்லோருமே காத்திருப்பாங்கள்ள?…” என்றனுப்பிவைத்தார்.

மீண்டும் பூஜை அறைக்குள் சென்று, “ஆத்தா மகமாயி, என்ற குழந்தைகள் ரெண்டுபேரையும் நூறு இல்ல இல்ல ஆயிரம் வருஷம் சந்தோஷமா வாழ வைக்கணும் தாயி!…” என்ற வேண்டுதலை கோரிக்கையாக வைத்துவிட்டு வெளியேறி தானும் புறப்பட தயாரானார்.

தயாராவதற்கு முன்பு நந்தினியை தேடியவன் கௌரியிடம் கேட்டு அவளிருந்த அறைக்குள் நுழைந்தான்.

ஆள் அரவமற்று வெறுமையாக இருந்த பார்த்தவன் கிளம்ப எத்தனிக்கையில் குளியலறயிலிருந்து வெளிவந்த நந்தினியை கண்டவன் மூச்சுவிடவும் மறந்தான். வரும்போதிருந்த அலங்காரம் அனைத்தையும் களைந்து எந்தவிதமான ஒப்பனையும் இன்றி முகத்தை பளிச்சென நின்றிருந்தவளின் வசீகரத்தில் அவன் மனம் லயித்துவிட்டது.

அதுவும் ஒரு கணமே. தன்னை சுதாரித்துகொண்டவன், “நந்தினி உனக்கு வரவேற்புக்கு ட்ரெஸ்?….” என அதற்குமேல் பேசமுடியாமல் தடுமாறினான்.

“கெளரி கொண்டுவந்து குடுத்தாங்க இதோ இருக்கு பாருங்க?….” என கட்டிலில் வீற்றிருந்த புடவையையும் நகைகளையும் காட்டினாள். அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் நின்றிருந்தவளை கண்டவன்,

“இன்னும் ரெண்டு வார்த்தை பேசினா வாயில இருக்கிற முத்து உதிர்ந்திருமாக்கும்….” என முனங்கிவிட்டு ஏதாவது பேசுவாளா என எதிர்பார்த்தான். அவளோ வாயை திறக்காமல் அவனின் செய்கைகளை புரியாமல் பார்த்தாள்.

“ஏன் இப்டி பார்க்கா? அதுசரி உதயா கல்யாணமான அன்னைக்கே நீ பொண்டாட்டிகிட்ட லூஸுன்னு பேர்வாங்க போற. இதுக்குமேல நின்னா சரியா வராது….” என எண்ணியவன், “சரி நீ தயாராகு, நானும் போய் கிளம்பறேன்….”என்று உரைத்துவிட்டு மனமே இல்லாமல் கிளம்பினான்.

தன் அறைக்குள் நுழைந்தவனிடமிருந்து எகிறி குதித்த மனசாட்சி அவன் முன் வந்து சுற்றுமுற்றும் நமக்கு ஆப்பைத்தான் தேடுதுவென அமைதியாக நின்றான்.

“கார்ல வரும்போது ஒரு மவராசனுக்கு அந்த பொண்ணை பார்க்கும் போது வெறும் இரக்கம் மட்டுமே தோணுச்சாம். அதான் எத்தனை சென்டிமீட்டர் இறக்கம்னு கேட்டுட்டு போலாம்னு தேடுறேன். அந்த மானஸ்தன கண்டேபிடிக்க முடியலை…” என்றது படுகேவலமாக பார்த்துக்கொண்டே.

“இப்போ யோசிக்க டைம் இல்லை. உன்ன வெளில விட்டது தப்பு…” என்று தப்பிக்க பார்த்த இழுத்து பிடித்து மனதிற்குள் கட்டிவைத்து புறப்பட தயாரானான்.

கீழே பாக்கியத்திடம் பேசிகொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தியின் கவலை அப்பிய முகத்தை கண்ட நாச்சி,

”என்ன கண்ணு? ஏன் இப்டி கலங்கி நிக்கிற?…” என்றார்.

“தனத்துக்கு போன் பண்ணினேன்மா….”என்று தயங்கி தயங்கி சொன்னதுதான் தாமதம் என்ன நடந்திருக்குமென தெளிவாக புரிந்துகொண்டார்.

“அவ விசேஷத்துக்கு வரலைன்னு சொல்லியிருப்பா, இதென்ன புதுசாய்யா?…” என்று சமாதானபடுத்தும் குரலில் சொல்லவும்,

“பிரபாக்காக வருவான்னு நினச்சேன், என் பிள்ளைக்கு என்னோட ஆசிர்வாதம் எப்போவும் உண்டுன்னு சொல்லிட்டாம்மா, நான் என்ன செய்ய?…” என துயரமான குரலில் கூறினார்.

மகனின் வேதனையை பொறுக்கமாட்டாது யோசனையில் ஆழ்ந்தவர் நிமிடத்தில் அதற்கு ஒரு வழிகண்டுபிடித்தார் நாச்சி.

“இப்போ என்ன அவ தானே ஊருக்குள்ள வரமாட்டேன்னு வீம்புல இருக்கா, விசேஷம் எல்லாம் முடியவும் புள்ளைகள அனுப்பி நேர்ல போய் ஆசிர்வாதம் வாங்கிக்க சொல்லலாம், உனக்கு இப்போ திருப்தி தானே?…” எனவும் அப்போதும் முழுமையாக தெளிவடையாத முகத்துடன்,

“பிரசாத்……” என இழுத்தார்.

அவரது எண்ணம் புரிந்தவராக, “அதை தனம் பாத்துக்குவா, நீ விசனபடாத, வந்தவங்களை கவனி, ஏற்கனவே உன் சீமந்தபுத்திரன் ஆட்டமா ஆடிருக்கான், உன் முகத்தை வேற பார்த்தான் அவ்வளோதான். நல்ல காரியம் நடக்கும் போது சில சங்கடங்கள் வரத்தான் செய்யும். அதுக்காக இப்டியா நொடிஞ்சு போவ?…. போ கண்ணு….” என்று கிருஷ்ணமூர்த்தியை அனுப்பியவர் மருமகளின் புறம் திரும்பி,

“பாக்கியம் நீ போய் புறப்படு. நம்ம வீட்டுல நடக்குற முத காரியம் இது. அது நல்லபடியா சந்தோஷமா நடக்கணும் தாயி. போம்மா, நம்ம வீட்டுக்கு மகாலட்சுமி வந்த நேரம் எல்லாமே நல்லதாவே நடக்கும் பாரேன்!….” எனவும்,

“சரிங்கத்தை, நான் போய் ஆகவேண்டியதை கவனிக்கிறேன்….” என்று பரபரப்பானார்.

மாப்பிள்ளையாக அட்டகாசமாக தயாராகி வந்தவனின் விழிகளில் விழுந்தது நந்தினியின் பிம்பம்.

அவளை நெருங்க கழுத்து கொள்ளாமல் நகைகளை சுமந்தவாறு அவஸ்தையாக நெளிந்துகொண்டிருந்தாள்.

அவளது முகத்தில் தெரிந்த அசாதாரணநிலையை கண்டு என்னவென பார்வையிலேயே வினவினான்.

கழுத்தை நோக்கி, “பாரு இதை, சுமக்க முடியலை,காப்பாத்தேன்?…” என்று இறைஞ்சிய பார்வை சிரிப்பை வரவழைத்தாலும் அடக்கிக்கொண்டு அவளை முழுமையாக பார்த்தவனின் கண்களில் கடுமை குடியேற,

“நாச்சி……….” உச்சஸ்தானியில் குரல் எழுப்பியபடி

இதுக்கெல்லாம் அசந்தால் நாச்சி கெத்து என்னாவது?

“என்னைய்யா ராசா?” என்றபடி வந்தார் ஆடி அசைந்துகொண்டு.

“என்ன இது?” என்றான் நந்தினியை காண்பித்து.

“ஹா ஹா ஹா ஹா ஏன்யா அதுக்குள்ளே மறந்துபோச்சா? உன் பொண்டாட்டி!……”என்றார் ஈஈஈ என இளித்தபடி.

“அவ என் பொண்டாட்டின்னு எனக்கே சொல்லி தரவேண்டாம், எதுக்கு இப்டி மொத்த நகையவும் அவ மேல அள்ளி போட்ருக்க?…” என வெடுவெடுத்தவன்,

“வீட்ல நகையை வைக்க இடமில்லாம இவ மேல பூட்டினா போல இருக்கு….” என்றான்.

“பின்ன வரவேற்புக்கு நகை போடாமலா கூட்டிட்டு போய் நிப்பாட்ட?” – நாச்சி

“நகை எதுக்காக போடுவாங்க கிழவி? ஒரு நெக்லஸ், ஒரு ஆரமும் போதாதா?…..”

“கல்யாண பொண்ணுக்கு நகைகள் தான் அம்சத்தை குடுக்கும் அதான் போட்ருக்கு, இதுல என்னை குத்தம் சொல்லுற?…” என்றவர் நந்தினியிடம்,

“ஏன் தாயி நான் உனக்கு நகைபோட்டு பார்க்க ஆசை படறேன் அது ஒரு தப்பா? உன் புருஷன் ரொம்பத்தான் ஆடுறான், அவன் கிட்ட நீயே சொல்லு….” எனவும் நந்தினிக்கு சங்கடமாகி விட்டது.

அவளது மனமோ, “வந்தன்னைக்கே வாய்க்கா தகறாரா?…” என்று இதை எப்படி சமாளிக்க குழம்பிப்போய் உதயாவை பார்க்க அவனோ கண்களை மூட்டி திறந்து அவளை அமைதியாக இருக்க செய்தவன் நாச்சி புறம் திரும்பி,

“நாச்சி, நகை அழகுக்காக போடறதா? இல்லை பகட்டுக்காக போடறதா?” என்றான் பொறுமை இல்லாத குரலில்.

“அழகுக்குத்தேன், பாரு என்ற பேத்தி எம்பூட்டு அழகா சாமி சிலையாட்டம் இருக்குன்னு…”என்றார் நந்தினியை ரசித்து அவளது முகத்தை தடவி நெட்டி முறித்தபடி.

“நாச்சி இதை பார்த்தா அழகா தெரியலை பயங்கரமா இருக்கு அவளை பாரேன் சுமக்க முடியாம இப்போவே கிறங்கிட்டா, இப்டியே மேடைக்கு கூட்டிட்டு போறதுக்குள்ள ஒடிஞ்சு விளுந்திருவா, அப்புறம் ரிஷப்ஷன் நடந்தா போலதான்?……”என்றான்.

நாச்சியோ, “நம்மை இப்டி மடக்குறானே? இதுக்கு என்ன சொல்வது?..” என  அவனை முறைத்தபடியே கோவமாக அங்கிருந்து அகல போக இழுத்து பிடித்து நிறுத்தி,

“நாச்சி, கொஞ்சம் சொல்றதை கேளேன்!….”

“என் பொண்டாட்டி அழகா இருக்கணும்னா நான் சொல்றதை செய்!..”

“பகட்டா பார்க்கறவங்க கண்ணுக்கு காட்சிபொருளா இருக்கணும்னு நினச்சா இப்படியே நீயே கூட்டிட்டு வா. நான் கீழ போறேன்!…” என்று கிளம்பியே விட்டான்.

தீவிரமான யோசனைக்கு ஆளான நாச்சிக்கு கெளரி துணை வந்தாள். தான் பார்த்துகொள்வதாகவும் அளவான நகைகளோட இருந்தால் தான் அழகு எனவும் பொறுமையாக விளக்கி சொல்லி சமாதான படுத்திவிட்டு தேவையில்லாத அதிகபடியான நகைகளை தவிர்த்துவிட்டு வரவேற்பிற்கு செல்ல கிளம்பினர் அனைவரும்.

குடும்பம் மொத்தமும் குதூகலமாக செல்ல அதை காண காண ஒரே ஒருவரது மனம் முழுவது கொதிக்கும் அனலை அள்ளி கொட்டிகொண்டிருந்தது.

நல்லவர்கள் வாழும் உலகத்தில் நயவஞ்சகர்களின் நாட்டாமை தனம் தான் ஓங்கியுள்ளது.  தோற்றத்தை வைத்து அவர்களை இனம்கண்டுகொள்ள இயலாமல் தான் அவர்களின் சூழ்ச்சிக்கு இரையாகி போகிறனர். பொழுதுபோக்கிற்காகவும் வீண் வம்புக்காகவும் மனித வேட்டையாடும் நயவஞ்சக நரிகள்.

நல்லவர்களாக பிறந்தாலும் அப்படியே வாழவேண்டுமே!. மொத்த வாழ்நாளின் முக்கால்வாசியை அமிர்தமாக கழித்தவரின் மனதில் மீதி வாழ்க்கையை விஷமாக மாற்ற அவர் மனதில் நஞ்சை ஊற்ற அது வேரூன்றி விருட்சமாக தொடங்கியுள்ளது, குடும்பத்தில் கொலுவீற்றிருக்கும் சந்தோஷத்தை குலைக்க.

அவர்??????????

———————————————————-

அந்த மண்டபத்தின் வாயிலில் அழகான தோரணங்களுடன் கூடிய அமைப்பு அழகுக்கு அழகு சேர்ப்பதாய் இருந்தது.

உறவினர்கள் அனைவரும் வந்த வண்ணமாக இருந்தனர். அனைவரையும் உபசரித்து அமரவைத்துகொண்டிருந்தனர் கிருஷ்ணமூர்த்தியின் அங்காளி பங்காளிகள்.

காலையிலேயே மதியின் மதியால் உதயாவின் திருமண தகவல் தெரிந்ததும் அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்த அனைவருக்கும் தகவல் தெரிவித்தாகிவிட்டது. அருகில் இருந்தவர்கள் உடனே புறப்பட்டு வந்துவிட்டனர்.

சொந்தபந்தம் முழுமையும் கூடுமிடத்தில் சந்தோஷத்திற்கு குறைவேது?

ஆட்டமும் பாட்டமும் அமர்க்களமாகவும், ஆராவாரமாகவும் இருந்தது.

ஊரில் அனைவரும் உறவினர்களாக நண்பர்களாக இருந்தமையால் அவர்கள் வீட்டு நிகழ்ச்சி போல அனைவருமே பங்குபோட்டு வேலைகளை பகிர்ந்துகொண்டனர்.

வரவேற்புக்கு பொண்ணும் மாப்பிள்ளையும் வருவதற்கு முன்னமே மாப்பிள்ளை பற்றி சில தகவல்கள்:

உதய் பிரபாகரன் குறிஞ்சியூர் கிருஷ்ணமூர்த்தி பாக்கியலட்சுமியின் செல்ல  புதல்வன். ஊரிலேயே மதிப்பும் மரியாதையும் மிக்க செல்வாக்கான நாச்சியார் குடும்பத்தை சேர்ந்தவன். அவர்களின் குடும்பத்தை அவ்வாறே அடையாளமிட்டு சொல்லுவர். சென்னையில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேஷன் டெக்னாலஜியில் படிப்பை முடித்துகொண்டு படிப்பறிவோடு, வடிவமைப்பு தொழில் நுட்பம் சார்ந்த விஷயங்களில் படைப்பாற்றல் அதிகம் இருப்பதால்  சொந்தமாகவும் சின்னதாகவும் ரெயின்போ என்ற பெயரில் கார்மெண்ட்ஸ் வைத்து நடத்த ஆரம்பித்திருக்கிறான்.

ஊரில் விவசாய நிலபுலங்கள் தோப்புகள், பருத்திக்காடு என அனைத்தையும் தனக்கு பின் தனது மகன் தான் கவனித்துக் கொள்ள வேண்டுமென்றாலும் படிப்பில் அவன் தேர்ந்தெடுத்த துறை அவருக்கும் மிக பிடித்தமானதாகவும் இருந்தது எல்லையில்லா மகிழ்ச்சி.

படிப்பை முடித்து வந்தவனது எண்ணமெல்லாம் பருத்திகாட்டை பற்றியே இருந்தது. வெறும் ஏற்றுமதி மட்டுமே செய்துகொண்டிருந்த எண்ணத்தை மாற்றி தன் படிப்பிற்கும் திறமைக்கும் தீனி போட கார்மெண்ட்ஸ் நடத்தினால் என்ன என்ற எண்ணம் முளைவிட தொடங்கியதும் அதை பற்றிய வேலைகளில் இறங்கி நண்பனின் துணையோடு.

முதலில் சறுக்கினாலும் லேசான தடுமாற்றத்தோடு மீண்டும் தெளிந்து இப்போது நஷ்டமில்லாமல் ஓரளவு லாபத்தில் நடத்தி கொண்டிருக்கிறான். அத்தோடு தந்தைக்கு துணையாகவும்.

ஆடைகள் வடிவமைப்பதில் ஆர்வம் மிகுந்தவனாதலால் இவனது நிறுவனம் இப்போதுதான் வெளி உலகை சென்றடைய துவங்கி உள்ளது.

Advertisement